பசுமை தமிழ்நாடு இயக்க தினத்தை முன்னிட்டு மரக்கன்றுகள் நடும் பணிகளை மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் தொடங்கி வைத்தார்.
விருதுநகர் மாவட்டம், விருதுநகர் எஸ்.எப்.எஸ்.மெட்ரிகுலேசன் பள்ளியில் (24.09.2025) பசுமை இயக்க தினத்தை முன்னிட்டு, தமிழ்நாடு வனத்துறை சார்பில், விருதுநகர் சமூக வனக்கோட்டம் மூலம் மரக்கன்றுகள் நடும் பணிகளை துணை இயக்குநர்(திருவில்லிபுத்தூர் மேகமலை புலிகள் காப்பகம்) மரு.இரா.முருகன்,இ.வ.ப., அவர்கள் முன்னிலையில், மாவட்ட ஆட்சித்தலைவர் மரு.என்.ஓ.சுகபுத்ரா, I A S, அவர்கள் மரக்கன்றுகளை நட்டு வைத்து தொடங்கி வைத்தார்.
தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள், தமிழ்நாட்டில் தற்பொழுதுள்ள காடுகள் மற்றும் மரங்களின் புவியியல் பரப்பை 23.8% லிருந்து 33% -ஆக அதிகரிக்கும் பொருட்டு, தமிழ்நாடு பசுமை இயக்கம் என்ற மாபெரும் திட்டத்தினை, 24.09.2022 அன்று தொடங்கி வைத்தார். அதனடிப்படையில், ஒவ்வொரு ஆண்டும் செப்டம்பர்-24 ஆம் தேதியினை பசுமை இயக்க தினமாக கடைபிடிக்கப்பட்டு வருகிறது.
பல்லுயிர் பெருக்கத்தை மேம்படுத்துதல், வன உற்பத்தித்திறனை மேம்படுத்துதல், மாநில மற்றும் தேசிய நெடுஞ்சாலைகளில் சாலையோரங்களில் மரக்கன்றுகளை நடவு செய்தல், விவசாய நிலங்களில் மரங்கள் வளர்ப்தை ஊக்குவித்தல், கல்வி நிறுவனங்கள், கோவில்கள், மைதானங்கள், புனித ஸ்தலங்கள், தொழிற்சாலை நிறுவனங்கள், கண்மாய் பகுதிகள் மற்றும் உள்ளுர் சமூகங்களை மேம்படுத்தும் பொருட்டு வேலை வாய்ப்புகள் வழங்குதல் போன்றவற்றில் இத்திட்டம் கவனம் செலுத்துகிறது. அதே நேரத்தில் விவசாயிகளின் வருவாயினை அதிகரிக்கவும் வழிவகைகள் செய்து வருகிறது.
அதன்படி, 2025-ஆம் ஆண்டிற்கான பசுமை இயக்க தினத்தை முன்னிட்டு, இந்தாண்டிற்கான கருப்பொருளாக “நாவல் மரத்தை கொண்டாடுவோம்” என்ற தலைப்பின் கீழ் நாவல் மரங்கள் (சிசிஜியம் குமினி) தேர்வு செய்யப்பட்டு சுமார் 50 நாவல் மரக்கன்றுகள் விருதுநகர் எஸ்.எப்.எஸ்.மெட்ரிகுலேசன் பள்ளியில் நடும் பணிகளை மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் தொடங்கி வைத்தார்.மேலும், மதுரை – தூத்துக்குடி தேசிய நெடுஞ்சாலையில் சுமார் 1000 வகையான மரக்கன்றுகள் இன்று நடப்பட்டுள்ளன.இந்தாண்டில் வேளாண்துறை, வனத்துறை, தோட்டக்கலைத்துறை மற்றும் ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சி உள்ளிட்ட துறைகளின் சார்பில், விருதுநகர் மாவட்டத்தில் மட்டும் சுமார் 20 இலட்சம் மரக்கன்றுகள் நட இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
எனவே இந்த நிகழ்ச்சி என்பது ஒரு அடையாளமான நிகழ்ச்சி. இதுபோன்று நிறைய பெருமளவு மரக்கன்றுகள் நடுவற்கு அனைவரும் முயற்சிகள் மேற்கொள்ள வேண்டும் என தெரிவித்தார்.மேலும், பள்ளி மாணவ/மாணவியர்களுக்கு “நாவல் மரத்தை கொண்டாடுவோம்” என்ற தலைப்பின் கீழ் வினாடி-வினா போட்டிகள் நடத்தப்பட்டு பரிசுகள் வழங்கப்பட்டன.இந்நிகழ்ச்சியில், விருதுநகர் நகர்மன்ற தலைவர் திரு.ஆர்.மாதவன், மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர்(விவசாயம்) திருமதி அ.அம்சவேணி, வட்டாட்சியர், விருதுநகர் சமூக வனக் கோட்ட அலுவலர்கள், ஆலமரம் தொண்டு நிறுவனத்தினர் மற்றும் முக்கிய பிரதிநிதிகள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.
0
Leave a Reply