25 YEARS OF EXCELLENCE

சமீபத்திய நிகழ்வுகள்:
வெயில் தாக்கம்: ராஜபாளையத்தில் இளநீர் விலை கிடுகிடு உயர்வு. >> சிருங்கேரி ஸ்ரீ சாரதா பீடம், ஜகத்குரு ஸ்ரீ ஸ்ரீ விதுசேகரபாரதீ ஸ்வாமிகள் அவர்களின் வர்தந்தி பூஜை. >> இராஜபாளையம் மூத்தோர் நலச்சங்கம் மற்றும் மாண்புமிகு P.S. குமாரசாமி ராஜா நூற்றாண்டு திருமண மண்டபம் இணைந்து பெருமையுடன் கொண்டாடிய “சுதந்திர தினவிழா”. >> ராஜபாளையம் ரோட்டரி சங்கம், காவேரி மருத்துவமனை–திருநெல்வேலி இணைந்து நடத்திய இலவச இருதயப் பரிசோதனை முகாம். >> இராஜபாளையம் ரோட்டரி சங்கம் நாற்று இலக்கிய அமைப்பு இணைந்து வழங்கும் யானைகள் தின விழா கொண்டாட்டம் - 2026 >> ஆகஸ்ட் - 12 ,யானைகள் தின விழா முன்னிட்டு ,மாணவர்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்த ஒவியப் போட்டிகள். >> ஆடிப்பெருக்கு சிறப்பு வழிபாடு. >> தொடர்பு எல்லைக்கு வெளியே அடுக்குமாடி குடியிருப்பு வாசிகள்; அலைபேசி சிக்னல் இன்றி அவதி. >> வயல் தின விழா. >> ராஜபாளையம் தொழிலாளர் சங்கம் சார்பில், சமூக நலத்துறை அமைச்சர் ஜெகதீஸ்வரிக்கு பாராட்டு விழா >>


செய்தி மக்கள் தொடர்பு அலுவலகம் விருதுநகர் மாவட்டம்

Sep 10, 2025

இராஜபாளையம் ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட பல்வேறு பகுதிகளில் நடைபெற்று வரும் வளர்ச்சி திட்டப் பணிகள் குறித்து மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் ஆய்வு மேற்கொண்டார்.

விருதுநகர் மாவட்டம், இராஜபாளையம் ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட பல்வேறு பகுதிகளில் நடைபெற்று வரும் வளர்ச்சி திட்டப் பணிகள் குறித்து மாவட்ட ஆட்சித்தலைவர் மரு.என்.ஓ.சுகபுத்ரா,I A S., அவர்கள்(09.09.2025)நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.விருதுநகர் மாவட்டத்தில், தமிழ்நாடு அரசின் மூலம் பல்வேறு துறைகள் சார்ந்த திட்டப்பணிகள், சேவைகள், நலத்திட்டங்கள் உள்ளிட்டவை செயல்படுத்தப்பட்டு, அப்பணிகள் முறையாகவும், அரசு விதிமுறைகள் மற்றும் வழிமுறைகளை பின்பற்றி நடைபெறுகிறதா என்பது குறித்து மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள், அரசு உயர் அலுவலர்கள் உள்ளிட்டோர் தொடர்ச்சியாக ஆய்வு மேற்கொண்டு உறுதி செய்து வருகின்றனர்.அதன்படி, இராஜபாளையம் ஊராட்சி ஒன்றியம் சுந்தரநாச்சியார்புரம் ஊராட்சியில் மகாத்மா காந்தி தேசிய வேலை உறுதி திட்டத்தின் கீழ் ரூ.11.09 இலட்சம் மதிப்பில் புதிய குளம் அமைக்கும் பணிகள் நடைபெற்று வருவதை மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.மேலும், இராஜபாளையம் ஊராட்சி ஒன்றியம், முத்துசாமிபுரம் ஊராட்சியில், அனைத்து கிராம அண்ணா மறுமலர்ச்சி திட்டத்தின் கீழ், ரூ.13.30 இலட்சம் மதிப்பில் புதிதாக அமைக்கப்பட்டு வரும் தார் சாலை பணிகளின் தரம் குறித்து மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.பின்னர், திருவில்லிபுத்தூரில் உள்ள ஆவின் நிலையத்தினை மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் நேரில் சென்று பார்வையிட்டு, குளிரூட்டும் நிலையம், பால் மற்றும் பால் உற்பத்தி பொருட்கள் தயாரிக்கும் பணிகள் குறித்தும், அதன் செயல்பாடுகள் குறித்தும், ஆய்வு மேற்கொண்டார்.இந்த ஆய்வில், வட்டாட்சியர், வட்டார வளர்ச்சி அலுவலர்கள், பொறியாளர்கள், உதவிப் பொறியாளர்கள், அரசு அலுவலர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

Sep 10, 2025

உங்களுடன் ஸ்டாலின் முகாம் நடைபெற்று வருவதை மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் நேரில் சென்று பார்வையிட்டார்.

விருதுநகர் மாவட்டம், இராஜபாளையம் வட்டம், வடக்கு மலையடிபட்டியில் (09.09.2025) நடைபெற்ற “உங்களுடன் ஸ்டாலின்” முகாமில் இராஜபாளையம் சட்டமன்ற உறுப்பினர் திரு.எஸ்.தங்கப்பாண்டியன் அவர்கள் முன்னிலையில் மாவட்ட ஆட்சித்தலைவர் மரு.என்.ஓ.சுகபுத்ரா,I A S., அவர்கள் நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு செய்தனர்.அதனை தொடர்ந்து, விருதுநகர் மாவட்டம்,  ஆமத்தூாில் நடைபெற்ற உங்களுடன் ஸ்டாலின் முகாமினையும் மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் நோில் சென்று பார்வையிட்டு ஆய்வு செய்தார்.உங்களுடன் ஸ்டாலின் முகாமானது மாவட்டத்தில் 15.07.2025 முதல் நடைபெற்று வருகிறது. உங்களுடன் ஸ்டாலின் திட்டத்தின் கீழ் விருதுநகர் மாவட்டத்தில் மொத்தம் 349 சிறப்பு முகாம்கள் நடைபெற உள்ளது.இம்முகாம்கள் கிராமப்பகுதியான 11 ஊராட்சி ஒன்றிய பகுதியில் 229 முகாம்களும், நகரப் பகுதிகளான சிவகாசி மாநகராட்சி, 5 நகராட்சிகள் மற்றும் 9 பேரூராட்சி பகுதிகளில் 120 முகாம்கள் என மொத்தம் 349 முகாம்கள் நடைபெற உள்ளது. இம்முகாம்களில் நகரப்பகுதிகளில் 13 துறைகள் மூலம் 43 சேவைகளும் ஊரகப்பகுதிகளில் 15 துறைகள் மூலம் 46 சேவைகளும் அளிக்கப்படுகிறது.அந்த வகையில் (09.09.2025) இராஜபாளையம் நகராட்சி, வடக்கு மலையடிப்பட்டி, விருதுநகர் வட்டம், ஆமத்தூர், சாத்தூர் வட்டம், முள்ளிச்செவல், வெம்பக்கோட்டை வட்டம், வெம்பக்கோட்டை, சிவகாசி (மாநகராட்சி) மாலையம்மன் திருமணமஹால், சுந்தரப்பாண்டியம் (பேரூராட்சி) சாலியர் சமுதாய திருமண மண்டபம் ஆகிய இடங்களில் முகாம்கள் நடைபெற்றன.அதன்படி,இராஜபாளைம் வட்டம், வடக்கு மலையடிப்பட்டி மற்றும் விருதுநகர் வட்டம் ஆமத்தூர் ஆகிய  நடைபெற்ற உங்களுடன் ஸ்டாலின் என்ற சிறப்பு முகாமினை மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் பார்வையிட்டு, பொதுமக்களிடம் கோரிக்கைகளை கேட்டறிந்து, மனுக்கள் பதிவேற்றம் செய்வது, கலைஞர் மகளிர் உரிமைத்தொகை விண்ணப்பங்கள் பெறுவதற்கான சிறப்பு பிரிவுகள் உள்ளிட்டவைகளை ஆய்வு செய்து, அலுவலர்களுக்கு உரிய அறிவுரை மற்றும் ஆலோசனைகளை வழங்கினார்.இம்முகாமில், குடும்ப அட்டை வேண்டி விண்ணப்பித்த பயனாளிகளுக்கு குடும்ப அட்டை நகலினையும், பட்டா வேண்டி மனு அளித்து, தீர்வு பெற்றவர்களுக்கு பட்டா உத்தரவுகளையும், மின் இணைப்பில் பெயர் மாற்றம் வேண்டி விண்ணப்பித்த மனுதாரரின் மனுவை உடனடியாக பரிசீலனை செய்து மின் இணைப்பு பெயர் மாற்றம் செய்த நகலினையும் மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் வழங்கினார்.இந்த “உங்களுடன் ஸ்டாலின்” முகாமில் பெறப்படும் மனுக்களுக்கு 45-நாட்களுக்குள் உரிய தீர்வு காணப்படும். எனவே, விருதுநகர் மாவட்டத்தில் உள்ள அனைத்து பொதுமக்கள் உங்கள் வீட்டின் அருகிலுள்ள  முகாம்களுக்கு சென்று மனுவை அளித்து  தங் களின் குறைகளுக்கு தீர்வு காண இந்த வாய்ப்பினை பயன்படுத்தி கொள்ள வேண்டும் என மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் தெரிவித்தார்.இந்த முகாமில், சீர்மரபினர் நல வாரியத் துணைத்தலைவர் திரு.இராசா அருண்மொழி, இராஜபாளையம் நகர்மன்றத் தலைவர் திருமதி பவித்ரா ஷ்யாம், வட்டாட்சியர், வட்டார வளர்ச்சி அலுவலர்கள் மற்றும் அரசு அலுவலர்கள், பொதுமக்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

Sep 10, 2025

விருதுநகர் மாவட்டம் பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கான திட்டங்கள் மற்றும் சட்டங்கள் குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சியினை மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் தொடங்கி வைத்தார்.

விருதுநகர் மாவட்டம், இராஜபாளையம் ஏ.கே.டி.ஆர் பெண்கள் கல்லூரியில், சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை கீழ் செயல்படும் மாவட்ட மகளிர் அதிகார மையம் மூலம் பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கான திட்டங்கள் மற்றும் சட்டங்கள் குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சியினை மாவட்ட ஆட்சித்தலைவர்  மரு.என்.ஓ.சுகபுத்ரா,I A S, அவர்கள் (09.09.2025) தொடங்கி வைத்து உரையாற்றினார்.பெண் குழந்தைகளுக்கு நிறைய விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும். பெண் குழந்தைகளுக்கான வாய்ப்புகள் இன்று அதிகமாக கிடைக்கிறது. உங்களுடைய கல்வி வாய்ப்புகளாக இருக்கட்டும், வேலை வாய்ப்புகளாக இருக்கட்டும் மிகப்பெரிய அளவில் இருக்கிறது. அவற்றையெல்லாம் பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எடுத்துச் சொல்ல வேண்டும். அவர்களுக்கென்று அதிகமான சட்ட வாய்ப்புகள் இருக்கிறது.தமிழ்நாடு அரசின் மூலம் குழந்தைகளுக்கான காலை உணவுத்திட்டம், பள்ளி, கல்லூரி பயில்வதற்கான திட்டங்கள் மற்றும் சலுகைகள், பெண்கள் உயர்கல்வியை ஊக்குவிக்க புதுமைப் பெண் திட்டம் போன்ற பல்வேறு திட்டங்கள் செயல்படுத்தப்படுகின்றன.அந்த வகையில் பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கான திட்டங்கள் மற்றும் சட்டங்கள் குறித்து விழிப்புணர்வுடன் கூடிய அறிவுரை வழங்குதே இந்த நிகழ்ச்சியின் முக்கிய நோக்கமாகும் என தெரிவித்தார்.இந்நிகழ்ச்சியில், மாவட்ட சமூக நல அலுவலர் திருமதி திலகம், கல்லூரி முதல்வர், கல்லூரி மாணவிகள் உட்பட அரசு அலுவலர்கள் பலர் கலந்து கொண்டனர்.

Sep 10, 2025

வேளாண்மை உழவர் நலத்துறை சார்பில் மத்திய அரசு திட்டங்களின் செயல்பாடுகள் குறித்து ஒன்றிய அரசின் குழுவினர் ஆய்வு மேற்கொண்டனர்.

விருதுநகர் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் (08.09.2025) வேளாண்மை உழவர் நலத்துறை சார்பில் மத்திய அரசு திட்டங்களின் செயல்பாடுகள் குறித்து மாவட்ட ஆட்சித்தலைவர் மரு.என்.ஓ.சுகபுத்ரா,I A S., அவர்கள் தலைமையில் நடைபெற்ற ஆய்வுக் கூட்டத்தில், ஒன்றிய அரசின் இணை செயலாளர்(பயிர்கள்) திருமதி இனித்தா அவர்கள் மற்றும் கூடுதல் ஆணையர்(தோட்டக்கலைத்துறை) முனைவர் என்.கே.பட்லா அவர்கள் ஆகியோர் அடங்கிய குழுவினர் ஆய்வு மேற்கொண்டனர்.இக்கூட்டத்தில், 2024-2025 நிதியாண்டில் செயல்படுத்தப்பட்ட மத்திய திட்டங்கள் குறித்து விரிவாக கலந்து ஆலோசிக்கப்பட்டது. மத்திய திட்டங்கள் செயல்படுத்துவதில் உள்ள இடர்பாடுகள் குறித்தும், பயிர் சாகுபடி பரப்பினை அதிகப்படுத்துவதற்கும், உற்பத்தி மற்றும் உற்பத்தி திறனை அதிகப்படுத்துவது குறித்தும் கலந்து ஆலோசிக்கப்பட்டது.இக்கூட்டத்தில்,இணைஇயக்குநர்(தரக்கட்டுப்பாடு)முனைவர்சுபாஷ்குமார்,கூடுதல்இயக்குநர்கள்திரு.ராம்பிரசாத்(தோட்டக்கலைத்துறை), திரு.சங்கர் சுப்பிரமணியம்(வேளாண்மைத்துறை), மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (விவசாயம்) திருமதி அம்சவேணி, வேளாண்மை இணை இயக்குநர்(பொ) திருமதி சுமதி, கூட்டுறவு சங்கங்களின் மண்டல இணைப்பதிவாளர் திரு.பா.செந்தில்குமார் தோட்டக்கலைத்துறை துணை இயக்குநர் திருமதி சுபாவாசுகி, வேளாண்மை பொறியியல் துறை செயற்பொறியாளர் திருமதி இந்திரா உட்பட அரசு அலுவலர்கள் பலர் கலந்து கொண்டனர்.

Sep 10, 2025

இமானுவேல் சேகரன் அவர்களின் நினைவு தினமான 11.09.2025 அன்று, பரமக்குடி வழித்தடங்களில் உள்ள டாஸ்மாக் மதுபான கடைகள் மற்றும் அதனுடன் இணைந்த மதுக்கூடங்கள், விற்பனை ஏதும் செய்யக்கூடாது என மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் உத்தரவு.

விருதுநகர் மாவட்ட சட்டம் மற்றும் ஒழுங்கினை பராமரிக்கும் பொருட்டு இமானுவேல் சேகரன் நினைவு தினமான 11.09.2025 அன்று இராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடிக்கு அஞ்சலி செலுத்தும் தினத்தன்று இணைப்பில் கண்ட, டாஸ்மாக் மதுபான கடைகள் மற்றும் அதனுடன் இணைந்த மதுக்கூடங்கள், எப்.எல்-1, எப்.எல்-2, மற்றும் எப்.எல்-3 உரிமஸ்தலங்கள் ஆகியவற்றில் உள்ள மதுக்கூடங்கள் மதுபான விற்பனை ஏதும் செய்யக்கூடாது.2003-ம் ஆண்டைய தமிழ்நாடு மதுபான சில்லறை விற்பனை விதிகளின் விதி 12 துணை விதி (1) The Tamil Nadu Liquor (Licence and Permit)  Rules, 1981-ன்படி 11.09.2025 அன்று ஒரு நாள் மட்டும் தற்காலிகமாக மூடுவதற்கு மாவட்ட ஆட்சியர் அவர்களால் உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.  மேற்படி உத்தரவினை மீறி செயல்படும் டாஸ்மாக் நிறுவனப் பணியாளர்கள் எப்.எல்-1, எப்.எல்-2, மற்றும் எப்.எல்-3  மதுபான ஸ்தலங்களின்  உரிமதாரர்களின் மீது 1) The Tamil Nadu Liquor (Licence and Permit)  Rules, 1981-ன்படி நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என மாவட்ட ஆட்சித்தலைவர் மரு.என்.ஓ.சுகபுத்ரா,I A S,. அவர்கள் தெரிவித்துள்ளார்.

Sep 09, 2025

நான் முதல்வன் திட்டத்தின் கீழ் அரசுப் பள்ளி மாணவர்களுக்கான கல்லூரிப் பயணம்- 2025 செல்லும் பேருந்துகளை மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் வழியனுப்பி வைத்தார்.

விருதுநகர் மாவட்டம், விருதுநகர் தங்கம்மாள் பெரியசாமி நகராட்சி பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் (08.09.2025) பள்ளிக்கல்வித்துறை சார்பில், நான் முதல்வன் திட்டத்தின் கீழ் அருகிலுள்ள உயர்கல்வி நிறுவனங்களுக்குச் சென்று பார்வையிடும் அரசுப் பள்ளி மாணவர்களுக்கான கல்லூரிப் பயணம்- 2025 செல்லும் பேருந்தினை மாவட்ட ஆட்சித்தலைவர் மரு.என்.ஓ.சுகபுத்ரா, I A S, அவர்கள் கொடியசைத்து வழியனுப்பி வைத்தார்.தமிழ்நாடு அரசின் வழிகாட்டுதல்படி, விருதுநகர் மாவட்டத்தில் ‘நான் முதல்வன்’ திட்டத்தின் கீழ் பள்ளி மாணவர்கள் உயர் கல்வி பயில்வதற்கான வழிகாட்டல் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.அந்த வகையில், தற்போது 12 ஆம் வகுப்பு பயிலும் மாணவர்கள், தேர்ச்சிபெற்று அடுத்த கல்வியாண்டில் 100 சதவீதம் கல்லூரிகளில் சேர்ந்து படிப்பதை ஊக்குவிப்பதற்காக களப்பயணம் அழைத்துச் செல்ல ஏற்பாடு செய்யப்பட்டு, முதல் கட்டமாக விருதுநகர் மாவட்டத்தில் உள்ள 11 ஊராட்சி ஒன்றியங்களில் 41 அரசுப்பள்ளிகளில் பயிலும் 2,287 மாணவ, மாணவிகள் அவரவர்கள் பள்ளிகளுக்கு அருகே உள்ள கல்லூரிகளுக்கு அழைத்துச் சென்று உயர்கல்வி குறித்த விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.அதன்படி,  விருதுநகர் தங்கம்மாள் பெரியசாமி நகராட்சி பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் இருந்து 43 மாணவிகளுடன் களப்பயணம் சென்ற பேருந்தினை மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் கொடியசைத்து வழியனுப்பி வைத்தார்.இந்த பயணத்தின் போது, கல்லூரிகளில் உள்ள பாடப் பிரிவுகள், அடிப்படை கட்டமைப்புகள், வசதிகள், படித்து முடிக்கும் போது கிடைக்கும் வேலைவாய்ப்புகள் குறித்து மாணவர்களுக்கு எடுத்துரைக்கப்பட்டது.இந்த பயணம் எங்களுக்கு ஒரு ஆர்வத்தையும், உயர்கல்வி குறித்த புரிதலையும் அளித்ததோடு, உயர்கல்வியில் என்னென்ன வாய்ப்புகள் உள்ளன என்பது குறித்தும் அறிந்து கொண்டோம். இதன் மூலம் உயர்கல்விக்கு நாங்கள் முன்கூட்டியே எங்களை தயார் செய்வதற்கு ஒரு வாய்ப்பாக அமைகிறது எனவும், இதற்காக தமிழ்நாடு அரசுக்கும், மாவட்ட நிர்வாகத்திற்கும் நன்றியை பள்ளி மாணவர்கள் தெரிவித்துக் கொண்டனர்.பின்னர், விருதுநகர் தங்கம்மாள் பெரியசாமி நகராட்சி பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் கற்றல், கற்பித்தல் செயல்பாடுகள் குறித்தும், மாணவிகளுடன் கலந்துரையாடி கற்றல் திறன் குறித்தும் மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் ஆய்வு மேற்கொண்டார்.இந்நிகழ்வின் போது, மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் திரு.மதன்குமார், பள்ளி ஆசிரியர்கள், மாணவர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

Sep 09, 2025

விருதுநகர் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம்

விருதுநகர் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் மக்கள் குறைதீர்க்கும்  நாள் கூட்டம் மாவட்ட ஆட்சித்தலைவர் மரு.என்.ஓ.சுகபுத்ரா,I A S, அவர்கள் தலைமையில்  (08.09.2025) நடைபெற்றது.இக்கூட்டத்தில், இலவச வீட்டுமனைப்பட்டா மற்றும் பட்டா மாறுதல், குடும்ப அட்டை, வேலை வாய்ப்பு, விபத்து நிவாரணம், மாற்றுத்திறனாளிகள், நலிந்தோர் நலத்திட்டம் மற்றும் விதவை உதவித்தொகை, திருமண உதவித்தொகை, முதியோர் உதவித்தொகை உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் தொடர்பாக மனுக்கள் பெறப்பட்டது. மேலும், மாற்றுத்திறனாளிகள் மற்றும் மூத்தகுடி மக்களுக்காக அமைக்கப்பட்டுள்ள சிறப்பு அமருமிடத்திற்குச் சென்று, மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் கோரிக்கை மனுக்களை பெற்றுக் கொண்டார்.இம்மனுக்களை மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் சம்மந்தப்பட்ட துறை அலுவலர்களிடம் ஒப்படைத்து உரிய நடவடிக்கை எடுக்குமாறு உத்தரவிட்டார்கள். மேலும் முதலமைச்சர் தனிப்பிரிவு மனுக்கள் மீது தனிக்கவனம் செலுத்தி நடவடிக்கை எடுக்குமாறு மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் தொடர்புடைய அலுவலர்களை அறிவுறுத்தினார்கள்.  இக்கூட்டத்தில், மாவட்ட வருவாய் அலுவலர் திரு.இரா.ராஜேந்திரன், தனித்துணை ஆட்சியர் (சமூக பாதுகாப்பு திட்டம்) திரு.காளிமுத்து, மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (பொது) திருமதி பிரதௌஸ் பாத்திமா, அரசு அலுவலர்கள் மற்றும் பொதுமக்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.         

Sep 09, 2025

செய்தி மக்கள் தொடர்புத்துறையின் சார்பாக வைக்கப்பட்டுள்ள தமிழக அரசின் சாதனை விளக்க புகைப்படக் கண்காட்சி.

விருதுநகர் மாவட்டம் வெம்பக்கோட்டை ஊராட்சி ஒன்றியம் பேர்நாயக்கன்பட்டி ஊராட்சியில்  (08.09.2025) செய்தி மக்கள் தொடர்புத்துறையின் சார்பாக வைக்கப்பட்டுள்ள தமிழக அரசின் சாதனை விளக்க புகைப்படக் கண்காட்சியினை பொதுமக்கள் பார்வையிட்டனர்.

Sep 09, 2025

மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தின், தன்னார்வ பயிலும் வட்டம் வாயிலாக மாநில அளவிலான மாதிரி தேர்வுகள் 13.09.2025 மற்றும் 20.09.2025 ஆகிய நாட்களில் இந்து நாடார் செந்திகுமார் நாடார் கல்லூரியில் நடைபெற உள்ளது.

தமிழ்நாடு அரசுப்பணியாளர் தேர்வாணையத்தால் 645 காலிபணியிடங்களுக்கு  அறிவிக்கப்பட்டுள்ள ஒருங்கிணைந்த குடிமை பணிகள் தேர்வு தொகுதி - II/IIA  (குரூப் II/IIA) தேர்வு வரும் 28.09.2025 அன்று நடைபெற உள்ளது.இத்தேர்வுக்கு விண்ணப்பித்துள்ள விருதுநகர் மாவட்ட தேர்வர்கள் பயன்பெறும் பொருட்டு விருதுநகர் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தின், தன்னார்வ பயிலும் வட்டம் வாயிலாக மாநில அளவிலான மாதிரி தேர்வுகள் 13.09.2025, 20.09.2025 ஆகிய நாட்களில் விருதுநகர் இந்து நாடார் செந்திகுமார நாடார் கல்லூரியில் நடைபெற உள்ளது.  இந்த மாதிரித் தேர்வில் கலந்துகொள்ள விருப்பம் உடையவர்கள் நேரடியாக மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தில் பதிவு செய்து கொள்ளலாம் அல்லது ஆன்லைன் வாயிலாக https://forms.gle/Hh95p3dpncM6artk7 என்ற GOOGLE   FORM -ஐ பூர்த்தி செய்து , தேர்வு நடைபெறும் நாட்களில் காலை 10  மணிக்கு விருதுநகர் இந்து நாடார் செந்திகுமார நாடார் கல்லூரிக்கு நேரில் வருகை புரிந்து மாதிரித் தேர்வினை எழுதி பயன்பெறுமாறு  கேட்டுக்கொள்ளப்படுகிறது.  மேலும், இது தொடர்பான விபரங்களுக்கு விருதுநகர் மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலக மின்னஞ்சல் முகவரியான studycirclevnr@gmail.com அல்லது நேரிலோ தொடர்பு கொள்ளலாம் என மாவட்ட ஆட்சித்தலைவர் மரு.என்.ஓ.சுகபுத்ரா,I A S., அவர்கள் தெரிவித்துள்ளார்.

Sep 09, 2025

ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின இளைஞர்களுக்கு ட்ரோன் தயாரிப்பு, கூட்டமைப்பு ,சோதனை மற்றும் பறக்கும் தொழில்நுட்ப பயிற்சி என பல்வேறு பயிற்சி வகுப்புகள் நடைபெறவுள்ளது .

தமிழ்நாடு ஆதிதிராவிடர் வீட்டுவசதி  மற்றும்  மேம்பாட்டுக்கழகம் (தாட்கோ) ஆதிதிராவிடர் மற்றும்  பழங்குடியினர்  சார்ந்தவர்களுக்கு,  ட்ரோன் தயாரிப்பு, கூட்டமைப்பு , சோதனை  மற்றும் பறக்கும்  தொழில் நுட்ப   பயிற்சி  (Drone Manufacturing Assembly Test& Flying), எம்பெடெட் சென்சார்   சோதனை  பயிற்சி  (Embedded Sensor Testing Program), பிரிண்டெட்  சர்க்யூட்போர்டு  வடிவமைப்பு  பயிற்சி  (PCB Designing Program), பொறியியல்  பட்டதாரிகளுக்கான  வேலைவாய்ப்பு பயிற்சி திட்டம் (Core Tech Placement program) அளிக்கப்படவுள்ளது .  தாட்கோவின் முன்னெடுப்பாக சென்னையில் உள்ள முன்னணி தொழில்நுட்ப பயிற்சி நிறுவனத்துடன் இணைந்து ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின இளைஞர்களுக்கு,  ட்ரோன் தயாரிப்பு, கூட்டமைப்பு , சோதனை மற்றும் பறக்கும் தொழில்நுட்ப பயிற்சி (Drone Manufacturing Assembly Test& Flying), எம்பெடெட் சென்சார் சோதனை பயிற்சி (Embedded Sensor Testing Program),  பிரிண்டெட் சர்க்யூட் போர்டு வடிவமைப்பு பயிற்சி திட்டம்(PCB Designing Program), பொறியியல்  பட்டதாரிகளுக்கான  வேலைவாய்ப்பு பயிற்சி திட்டம் (Core Tech Placement program ) போன்ற   பயிற்சிகள்  அளிக்கப்பட உள்ளது.  இதற்கான  தகுதிகள் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் இனத்தை சார்ந்தவராக இருக்க வேண்டும். ட்ரோன் தயாரிப்பு, கூட்டமைப்பு ,சோதனை மற்றும் பறக்கும் தொழில்நுட்பபயிற்சி  (Drone Manufacturing Assembly Test& Flying ) சம்பந்தப்பட்ட பயிற்சிக்கு  ஏதெனும் ஒரு  பட்டப்படிப்பு  முடித்தவராகவும், 18 முதல் 35 வயது நிரம்பியவராகவும்  இருத்தல் வேண்டும். எம்பெடெட் சென்சார் சோதனை பயிற்சி(Embedded Sensor Testing Program),  பிரிண்டெட் சர்க்யூட்போர்டு வடிவமைப்பு பயிற்சி திட்டம்(PCB Designing Program) மற்றும் பொறியியல்  பட்டதாரிகளுக்கான வேலைவாய்ப்பு பயிற்சி திட்டம்(Core Tech Placement program) போன்ற  பயிற்சிகளுக்கு 18 முதல் 35 வயது நிரம்பியவராகவும், ஏதேனும்  ஒரு  இளநிலை பொறியியல் பட்டப்படிப்பு அல்லது ஏதேனும் ஒரு பொறியியல் பட்டயப்படிப்பில் (Diploma)தேர்ச்சி  பெற்றவராக  இருத்தல் வேண்டும்.மேற் கூறிய பயிற்சிகளுக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதார்களின் குடும்ப ஆண்டு வருமானம்ரூ.3.00 இலட்சத்திற்குள் இருக்கவேண்டும். தகுதியுள்ள இளைஞர்கள் இப்பயிற்சியில் சேருவதற்கு  தாட்கோ  இணையதளத்தின்  மூலம் www.tahdco.comபதிவு செய்து விண்ணப்பிக்கலாம்.     மேலும் தங்கும் விடுதி மற்றும் உணவு உட்பட செலவினம் தாட்கோ மூலமாக வழங்கப்படும். தகுதியுடைய விண்ணப்பதாரர்கள் பதிவுசெய்து இவ்வாய்ப்பினை பயன்படுத்திக் கொள்ளலாம் என மாவட்ட ஆட்சித்தலைவர் .மரு.என்.ஓ.சுகபுத்ரா,I A S., அவர்கள் தெரிவித்துள்ளார்.

1 2 ... 76 77 78 79 80 81 82 ... 140 141

AD's



More News