தமிழ்நாடு அரசு மக்களவை பொதுத் தேர்தல் 2024 மற்றும் விளவன்கோடு சட்டமன்ற இடைத் தேர்தல் வருகின்ற 19.04.2024 அன்று நடைபெறுவதை முன்னிட்டு அன்றைய தினம் அனைத்து வகை பணியாளர்களுக்கும் சம்பளத்துடன் கூடிய விடுமுறை வழங்க வேண்டும் என உத்தரவிட்டுள்ளது.அதன் அடிப்படையில் சென்னை, தலைமைத் தேர்தல் அலுவலர் மற்றும் சென்னை, தொழிலாளர் ஆணையர் டாக்டர் அதுல் ஆனந்த், I A S., அவர்களால், தொழில் நிறுவனங்கள், தகவல் தொழில்நுட்ப நிறுவனங்கள் உள்ளிட்ட அனைத்து கடைகள் மற்றும் வர்த்தக நிறுவனங்கள், உணவு நிறுவனங்கள், தொழிற்சாலைகள், தோட்ட நிறுவனங்கள், மோட்டார் போக்குவரத்து நிறுவனங்கள் பீடி மற்றும் சுருட்டு நிறுவனங்கள் உட்பட அனைத்து பொதுத்துறை மற்றும் தனியார் நிறுவனங்களில் பணிபுரியும் தினக்கூலி, தற்காலிக, ஒப்பந்த தொழிலாளர்கள் உள்ளிட்ட அனைத்து பணியாளர்கள் மற்றும் தொழிலாளர்களுக்கும், வாக்களிக்கும் பொருட்டு வாக்கு பதிவு நாளான 19.04.2024 (வெள்ளிக் கிழமை) அன்று ஊதியத்துடன் கூடிய விடுப்பு வழங்கப்பட வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது..மேலும் கர்நாடக அரசு மக்களவை பொதுத் தேர்தலானது 26.04.2024 மற்றும் 07.05.2024 ஆகிய 2 நாட்கள் நடைபெறுவதால் கர்நாடக மாநிலத்தை சேர்ந்த அனைத்து வகை பணியாளர்களுக்கும் வாக்களிக்கும் பொருட்டு சம்பளத்துடன் கூடிய விடுமுறை வழங்க வேண்டும் என உத்தரவிடப்பட்டுள்ளது.இது தொடர்பாக, விருதுநகர் மாவட்டத்தில் உள்ள வர்த்தகர் சங்கங்;களுக்கும் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் அதன் தொடர்ச்சியாக விருதுநகர் மாவட்டத்தில், தேர்தல் தினமான 19.04.2024 அன்று மேற்படி தொழிலாளர்களுக்கு ஊதியத்துடன் கூடிய விடுப்பு வழங்காதது தொடர்பான புகார்களை தெரிவிப்பதற்கு ஏதுவாக விருதுநகர் மாவட்ட தொழிலாளர் உதவி ஆணையர் (அமலாக்கம்) தலைமையில், அவரது ஆட்சி எல்கைக்குட்பட்ட பகுதிகளுக்கான தேர்தல் கட்டுப்பாட்டு அறை விருதுநகர், மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் உள்ள விருதுநகர், தொழிலாளர் உதவி ஆணையர் (அமலாக்கம்) அலுவலகத்தில் ஏற்படுத்தப்பட்டுள்ளது.தொழிலாளர்களுக்கு தேர்தல் தினத்தன்று ஊதியத்துடன் கூடிய விடுமுறை அளிக்கப்படாதது தொடர்பான புகார்களை விருதுநகர் தொழிலாளர் உதவி ஆணையர் (அமலாக்கம்) அலுவலக தொலைபேசி எண்- 04562 - 252 130, District Nodal Officer / தொழிலாளர் உதவி ஆணையர்(அமலாக்கம்) விருதுநகர், 9445398763, 9865254003, உறுப்பினர் - தொழிலாளர் துணை ஆய்வாளர், விருதுநகர்- 8939862505, உறுப்பினர் - முத்திரை ஆய்வாளர், விருதுநகர்- 9159443377 ஆகிய தொலைபேசி எண்களில் தெரிவிக்கலாம் என விருதுநகர் தொழிலாளர் உதவி ஆணையர் (அமலாக்கம்) திருமதி.சீ.மைவிழிச்செல்வி அவர்கள் தெரிவித்துள்ளார்.
விருதுநகர் மாவட்டம் திருவில்லிபுத்தூர் பேருந்து நிலையம் அருகில் (15.04.2024) மக்களவை தேர்தல் 2024 முன்னிட்டு, நேர்மையான மற்றும் 100 சதவிகிதம் வாக்குப்பதிவு வலியுறுத்தி சங்கரா கண் மருத்துவமனை பணியாளர்கள் கலந்து கொண்ட விழிப்புணர்வு கையெழுத்து இயக்கத்தினை மாவட்ட தேர்தல் நடத்தும் அலுவலர் / மாவட்ட ஆட்சித்தலைவர் முனைவர் வீ.ப.ஜெயசீலன்,I A S., அவர்கள் துவக்கி வைத்தார்.மக்களவை பொதுத்தேர்தல் 2024 வருகின்ற ஏப்ரல் 19ஆம் தேதி நடைபெற உள்ளதை முன்னிட்டு, விருதுநகர் மாவட்டத்தில் 18 வயது நிரம்பிய வாக்காளர்கள், அனைவரும் 100 சதவிகிதம் வாக்களிப்பதன் அவசியம் குறித்து எடுத்துக் கூறும் வகையில் மாவட்டத்திலுள்ள ஊரகம், நகர்புறம், பேரூராட்சிகள், மாநகராட்சி உள்ளிட்ட அனைத்து பகுதிகளிலும் பல்வேறு தேர்தல் விழிப்புணர்வு பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.18 வயது நிரம்பிய வாக்காளர் பட்டியலில் பெயருள்ள அனைவரும் 100 சதவீதம் தவறாமல் நேர்மையாக வாக்களிக்க வேண்டும். உலகத்தினுடைய மிகப்பெரிய ஜனநாயகத் திருவிழாவாக இந்திய பாராளுமன்றம் தேர்தல் நடைபெறுகிறது. உலக ஜனநாயக நாடுகளில் ஏறத்தாழ 96 கோடி வாக்காளர்களைக் கொண்ட மிகப்பெரிய நாடு இந்தியா தான்.எனவே அந்த 96 கோடி மக்களும் வாக்களிக்க வருவதும் நேர்மையாக வாக்களிப்பதும் ஜனநாயகத்தின் உடைய மிக அடிப்படையான ஒரு செயல். அதில் அனைவரும் ஈடுபடுத்திக் கொண்டு இந்த தேர்தலை வெற்றிகரமாகவும் நியாயமாகவும் நடைபெறுவதற்கு ஒத்துழைப்பு வழங்க வேண்டும்.மேலும், கிருஷ்ணன்கோவில் சங்கரா மருத்துவமனை சார்பில் மக்களவை பொதுத்தேர்தல் 2024 ஏப்ரல்-19 அன்று தவறாமல் வாக்களிப்பதை விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில், கண் பரிசோதனை செய்வோர் தேர்தலில் வாக்களித்திருந்தால் அவர்களுக்கு 19.04.2024 மற்றும் 20.04.2024 ஆகிய நாட்களில் 50 சதவிகிதம் கட்டண சலுகை வழங்குவதாக அறிவித்துள்ளது பாராட்டுக்குறியது என தெரிவித்தார்.இந்த ஜனநாயக திருவிழாவில் 18 வயது நிரம்பிய அனைத்து வாக்காளர்களும், வாக்களிப்பதன் மூலம் தங்களது பங்களிப்பை வழங்கி மாவட்டத்தில் 100 சதவிகிதம் வாக்குப்பதிவு இலக்கை அடைய ஒத்துழைப்பு நல்க வேண்டும் என மாவட்ட தேர்தல் நடத்தும் அலுவலர்/மாவட்ட ஆட்சியர் அவர்கள் தெரிவித்துள்ளார்.
விருதுநகர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் (15.04.2024 மக்களவை தேர்தல் 2024 முன்னிட்டு விருதுநகர் பாராளுமன்ற தொகுதிக்குட்பட்ட சட்டமன்ற தொகுதிகளில் பணியாற்ற உள்ள தேர்தல் நுண் பார்வையாளர்களுக்கு கணினி மென்பொருள் மூலம் சீரற்ற முறையில் சட்டமன்றத் தொகுதி வாரியாக பணி ஒதுக்கீடு செய்யும் நிகழ்வு தேர்தல் பொதுப்பார்வையாளர் திரு. நீலம் நம்தேவ் எக்கா,I A S., அவர்கள் தலைமையில், மாவட்ட தேர்தல் அலுவலர் / மாவட்ட ஆட்சித்தலைவர் முனைவர் வீ.ப.ஜெயசீலன் I A S., அவர்கள் முன்னிலையில் நடைபெற்றது.
விருதுநகர் மாவட்டம், இராஜபாளையம் வட்டார வளர்ச்சி அலுவலகத்தில் (15.04.2024) தமிழ்நாடு காலநிலை மாற்ற இயக்கம் மற்றும் திருவில்லிபுத்தூர் மேகமலை புலிகள் காப்பகம் இணைந்து ஏற்பாடு செய்த அரசு பள்ளி மாணவர்களுக்கான காலநிலை கல்வி அறிவு மற்றும் கோடைகால இயற்கை பாதுகாப்பு விழிப்புணர்வு முகாம்-2024 யினை துணை இயக்குநர் (திருவில்லிபுத்தூர் மேகமலை புலிகள் காப்பகம்) திரு.ப.தேவராஜ்.இ.வ.ப., அவர்கள் முன்னிலையில், மாவட்ட தேர்தல் நடத்தும் அலுவலர்/மாவட்ட ஆட்சித்தலைவர் முனைவர் வீ.ப.ஜெயசீலன், I A S., அவர்கள் துவக்கி வைத்து, அரசு பள்ளி மாணவர்களுக்கு கற்றல் உபகரணங்களை வழங்கினார்.காலநிலை மற்றும் சுற்றுச்சூழல் பிரச்சனை தற்போது ஒரு பெரிய பிரச்சினையாக இருக்கிறது. தற்போது பயிலும் மாணவர்கள் சமூகத்தில் பெரியவர்களாக ஒரு முக்கியமான பொறுப்பில் இருக்கும் போது, இன்னும் ஒரு 50 ஆண்டுகளில் மிகப்பெரிய பிரச்சினையாக இருக்க போகின்றது.இயற்கை சமநிலையோடு இருந்ததை, வனவிலங்குகளை வேட்டையாடுதல், மரங்களை அழித்தல், சுற்றுச்சூழல் குறித்த விழிப்புணர்வு இல்லாமல் இருப்பது, கார்பன் டை ஆக்சைடு உருவாக்கக்கூடிய செயல்களை வெவ்வேறு வழிகளில் மேற்கொள்வது இது போன்ற காரணங்களால், பூமி பந்து வெப்பமயமாகிறது. அதன் காரணமாக அதிகப்படியான திடீர் மழை, கடும் வறட்சி, நன்மை செய்யும் பூச்சிகளின் எண்ணிக்கை குறைந்து, தீமை செய்யும் பூச்சிகளின் எண்ணிக்கை பெருகுதல், உணவுச் சங்கிலியில் பாதிப்பு உள்ளிட்ட பாதிப்புகள் ஏற்படுகின்றன.சமுதாயத்தில் எதிர்காலத்தில் ஒரு முக்கிய பொறுப்பிலும், முக்கியமான தலைவராகவும், பெரிய நிறுவனத்தில் நீங்கள் செயலாற்ற போகிறீர்கள். இது குறித்து இப்போதே உங்களுக்கு அதனுடைய உணர்வு வந்தால் தான், நாளை நீங்கள் சமுதாயத்தில் பெரிய விழிப்புணர்வை ஏற்படுத்த முடியும் என்பதற்காக இந்த நிகழ்ச்சி ஏற்படுத்தப்படுகிறது.இந்த ஒருநாள் பயிற்சியில் வனப் பகுதியில் உள்ள தாவரங்கள், பூச்சிகள், பறவைகள், விலங்குகள் நமது சுற்றுச்சூழலில் செலுத்தக்கூடிய ஆதிக்கம் என்னென்ன சுற்றுச்சூழலினுடைய செல்வாக்கு என்ன என்பதை எல்லாம் நீங்கள் நேரடியாக தெரிந்து கொள்வீர்கள்.அது மட்டும் இல்லாமல் நீங்கள் வாழ்நாள் முழுவதும் ஒரு சுற்றுச்சூழல் ஆர்வலராக இருக்க வேண்டும் என்பதற்காகத்தான் இந்த நிகழ்ச்சி நடைபெறுகிறது. இந்த பயிற்சி வகுப்பில் பயிலக்கூடியவற்றை நீங்கள் வாழ்நாளில் என்றும் நினைவில் வைத்து செயல்பட வேண்டும் என தெரிவித்தார்.
விருதுநகர் மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் மக்களவை தேர்தல் 2024 முன்னிட்டு, என் வாக்கு விற்பனைக்கு அல்ல மற்றும் 100%வாக்குபதிவை வலியுறுத்தியும், 6 தமிழ் ஆசிரியர்கள் மாவட்டம் முழுவதும் செல்லும் தேர்தல் விழிப்புணர்வு மிதிவண்டி பயணத்தினை மாவட்ட தேர்தல் நடத்தும் அலுவலர்/ மாவட்ட ஆட்சித் தலைவர் முனைவர் வீ.ப.ஜெயசீலன், I A S., அவர்கள்(14.04.2024) கொடியசைத்து தொடங்கி வைத்தார்.விருதுநகர் மாவட்டத்தில் மக்களவை தேர்தல் 2024 முன்னிட்டு வாக்காளர்களிடையே தவறாமல் வாக்களிப்பதன் அவசியத்தை எடுத்துக் கூறும் வகையிலும், பணம் பரிசுப் பொருட்கள் பெற்று வாக்களிக்க கூடாது என்பதை வலியுறுத்தியும் பல்வேறு விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் தொடர்ச்சியாக நடத்தப்பட்டு வருகின்றன.அதன் ஒரு பகுதியாக ஆறு தமிழ் ஆசிரியர்கள் கலந்து கொண்டு மாவட்டம் முழுவதும் சுமார் 230 கிலோமீட்டர் மிதிவண்டியில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு விழிப்புணர்வு ஏற்படுத்தும் தேர்தல் விழிப்புணர்வு மிதிவண்டி பயணம் துவக்கி வைக்கப்பட்டுள்ளது.இந்த மிதிவண்டி தேர்தல் விழிப்புணர்வு பயணத்தின் முதல் நாளில் விருதுநகர், காரியாபட்டி, திருச்சுழி, நரிக்குடி, அருப்புக்கோட்டை ஆகிய பகுதிகளுக்கும்,இரண்டாம் நாளில் அருப்புக்கோட்டையில் இருந்து சாத்தூர், வெம்பக்கோட்டை, சிவகாசி ஆகிய பகுதிகளுக்கும்,மூன்றாம் நாளில் சிவகாசியில் இருந்து திருவில்லிபுத்தூர், இராஜபாளையம் ஜவஹர் மைதானம் வரை மாவட்டம் முழுவதும் 230 கிமீ சுற்றுப்பயணம் மேற்கொண்டு என் வாக்கு விற்பனைக்கு அல்ல, 100 சதவிகிதம் வாக்களிப்போம் என்பதை வலியுறுத்தி விழிப்புணர்வு ஏற்படுத்த உள்ளனர் என மாவட்ட தேர்தல் நடத்தும் அலுவலர் /மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் தெரிவித்தார்.
விருதுநகர் மாவட்ட விளையாட்டு அரங்க மைதானத்தில், மக்களவை பொதுத்தேர்தல்-2024 முன்னிட்டு, தேர்தல் விழிப்புணர்வு தொடர்பாக 18 வயது நிரம்பிய இளம் வீரர், வீராங்கனைகள் கலந்து கொண்ட மாவட்ட அளவிலான மாபெரும் கபாடி போட்டியில் வெற்றி பெற்ற அணிகளுக்கு மாவட்ட தேர்தல் நடத்தும் அலுவலர்/மாவட்ட ஆட்சித்தலைவர் முனைவர் வீ.ப.ஜெயசீலன், I A S., அவர்கள் (14.04.2024) பரிசுகளை வழங்கினார்.அதன்படி, இந்த மாவட்ட அளவிலான ஆண்கள் கபாடி போட்டியில் வெற்றி பெற்ற மம்சாபுரம் ஆசை நினைவு அணிக்கு முதல் பரிசாக ரூ.1,00,000 க்கான காசோலையினையும்,கிருஷ்ணாபுரம் சிவந்தி இன் தாமரை அணிக்கு இரண்டாம் பரிசாக ரூ.50,000 க்கான காசோலையினையும்,தோணுகால் மாரியம்மன் நினைவு அணி மற்றும் சிவந்திப்பட்டி GFC & SPR அணி ஆகிய இரு அணிகளுக்கு மூன்றாம் பரிசாக ரூ.25,000 க்கான காசோலையினையும்,மாவட்ட அளவிலான பெண்கள் கபாடி போட்டியில் வெற்றி பெற்ற பெண்கள் பிரிவில் திருவில்லிபுத்தூர், மங்காபுரம் ஸ்போர்ஸ் கிளப் அணிக்கு முதல் பரிசாக ரூ.1,00,000 க்கான காசோலையினையும்,மீனாட்சிபுரம் RC ஸ்போர்ஸ் கிளப் (A) அணிக்கு இரண்டாம் பரிசாக ரூ.50,000 க்கான காசோலையினையும்,விருதுநகர் தங்கசாமி நகராட்சி பெண்கள் மேல்நிலைப்பள்ளி அணி மற்றும் மீனாட்சிபுரம் RC ஸ்போர்ஸ் கிளப்(B) அணி ஆகிய இரு அணிகளுக்கு மூன்றாம் பரிசாக ரூ.25,000 க்கான காசோலையினையும் மாவட்ட தேர்தல் நடத்தும் அலுவலர்/மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் வழங்கினார்.மக்களவை பொதுத் தேர்தல் 2024 முன்னிட்டு, விருதுநகர் மாவட்டத்தில் தேர்தல் பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையிலும், அனைத்து தரப்பு வாக்களர்களும், 100 சதவீதம் வாக்களிப்பதை வலியுறுத்தும் வகையிலும், பல்வேறு விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் தொடர்ச்சியாக நடத்தப்பட்டு வருகின்றன. குறிப்பாக மாவட்டத்தில் உள்ள முதல் முறை மற்றும் இளம் தலைமுறை வாக்காளர்கள் முழுமையாகவும், பணம், பரிசுப் பொருட்கள் பெறாமல் நேர்மையாகவும் வாக்களிக்க வேண்டும் என்பதை வலியுத்தும் வகையில் பல்வேறு விழிப்புணர்வு நிகழ்வுகள் நடத்தப்பட்டு வருகின்றன.அதன் ஒரு பகுதியாக 11 வட்டாரத்தில் ஆண்களுக்கான வட்டார அளவிலான கபாடி போட்டிகள் நடத்தப்பட்டு, தலா இரண்டு அணிகள் வீதம் மொத்தம் 22 ஆண்கள் அணிகளும், 18 வயதிற்கு மேற்பட்ட பெண்களுக்கான நேரடி மாவட்ட அளவிலான போட்டியில் 20-க்கும் மேற்பட்ட பெண்கள் அணிகளும் கலந்து கொண்டு பங்குபெறும் தேர்தல் விழிப்புணர்வு தொடர்பாக மாவட்ட அளவிலான கபாடி போட்டி நடத்தப்பட்டது.ஒவ்வொரு விளையாட்டிற்கும் தனித்தனியாக விதிமுறைகள் உள்ளன. அதை கடைப்பிடிப்பதோடு, விளையாட்டில் ஈடுபடும் தனிமனிதனுக்கான பழக்க வழக்கங்களில் ஒழுங்குகளையும் கடைபிடிக்க வேண்டியுள்ளது. அதனை கடைப்பிடித்தால் தான் சிறப்பான வெற்றிகளை பெற முடியும். போதைப்பொருட்களில் கிடைக்கக்கூடிய மகிழ்ச்சியை விட இது போன்ற விளையாட்டுக்கள் அதிக மகிழ்ச்சியை தருகிறது. இது போன்ற நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வதன் மூலம் இளைஞர்கள் மற்றவர்களுக்கு ஒரு எடுத்துக்காட்டாக இருக்க வேண்டும்.மேலும், இந்த மக்களவை பொதுத்தேர்தலில் வாக்களிப்பதன் அவசியத்தை தங்களது பெற்றோர்கள் தாங்கள் வசிக்கும் இடங்களில் உள்ளவர்களிடம் எடுத்துக்கூறி, தகுதியான நேர்மையான நபர்களுக்கு வாக்களிக்க தூண்டுகோலாக இருந்து ஒரு வலுவான ஜனநாயகம் உருவாவதற்கு ஒத்துழைப்பு நல்க வேண்டும் என மாவட்ட தேர்தல் நடத்தும் அலுவலர்/ மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் தெரிவித்தார்.
விருதுநகர் மாவட்ட விளையாட்டு அரங்கில்(14.04.2024) 100 சதவீதம் வாக்குபதிவை வலியுறுத்தி, மாவட்டம் முழுவதும் பொதுமக்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில், நடமாடும் மாதிரி வாக்குபதிவு மையத்தை மாவட்ட தேர்தல் நடத்தும் அலுவலர்/மாவட்ட ஆட்சித்தலைவர் முனைவர் வீ.ப.ஜெயசீலன், I A S., அவர்கள் கொடியசைத்து தொடங்கி வைத்தார்.இந்திய தேர்தல் ஆணையத்தின் அறிவுறுத்தலின்படி, விருதுநகர் மாவட்டத்தில், மாவட்ட நிர்வாகம் மூலம் 18 வயது நிரம்பிய முதல் மற்றும் இளம் தலைமுறை, மாற்றுத்திறனளிகள், முதியோர்கள் என அனைத்து தரப்பினரிடையே வாக்களிப்பதன் அவசியம் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையிலும், நடைபெறவுள்ள மக்களவை தேர்தலில் 100 சதவீதம் வாக்குப்பதிவினை எய்திடும் வகையிலும், என் வாக்கு விற்பனைக்கு அல்ல என்பதை வலியுறுத்தியும் பல்வேறு விழிப்புணர்வு பணிகள் மேற்கொள்ப்பட்டு வருகிறது.அதனடிப்படையில், விருதுநகர் மாவட்டத்தில் உள்ள 7 சட்டமன்றத் தொகுதிகளுக்கும் நேரடியாகச் சென்று வாக்காளர் விழிப்புணர்வு மற்றும் வாக்குப் பதிவு சேவைப் பணிகளை மேற்கொள்ள நடமாடும் (பேருந்து) மாதிரி வாக்கு பதிவு மையம் தொடங்கி வைக்கப்பட்டள்ளது.இந்த நடமாடும் பேருந்தில், 100 சதவீதம் வாக்களிக்க வேண்டும், என் வாக்கு விற்பனைக்கு அல்ல, வாக்களிப்புக்கு பணம் பெறக் கூடாது போன்ற விழிப்புணர்வு விளம்பரங்களும், இலவச வாக்காளர் உதவி எண்கள், தேர்தல் தொடர்பான புகார்களைத் தெரிவிக்க தொடர்பு எண்கள், வாக்களராக பதிவு செய்து கொள்ளும் வழிமுறைகள் உள்ளிட்ட பல்வேறு அம்சங்கள் இடம் பெற்றுள்ளன.மேலும் மாதிரி வாக்குப் பதிவு மின்னணு இயந்திரமும் அமைக்கப்பட்டு, வாக்களிப்பு பயிற்சியும் வழங்கப்படும் விதத்தில் ஏற்பாடுகள் இந்த பேருந்தில் செய்யப்பட்டுள்ளன.இந்த பேருந்து மாவட்டத்தில் கடந்த தேர்தலில் குறைந்தளவு வாக்குபதிவு நடைபெற்ற பகுதிகள், பொதுமக்கள் அதிகம் கூடும் இடங்கள், இளம் வாக்காளர்கள் உள்ள கல்லூரிகள், பேருந்து நிலையங்கள் உட்பட மாவட்டத்தில் உள்ள அனைத்து பகுதிகளுக்கும் சென்று விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட உள்ளது. எனவே 18 வயது பூர்;த்தி அடைந்த அனைவரும் தவறாமல் வாக்களிக்க வேண்டும், சாதி, மதம், பரிசுப்பொருட்கள், பணத்துக்கு ஆட்படாமல் நேர்மையாக வாக்களிக்க வேண்டும என்றும், இந்த நடமாடும் மாதிரி வாக்குபதிவு பேருந்தினை வாக்காளர்கள் பயன்படுத்தி கொள்ள வேண்டும் என மாவட்ட தேர்தல் நடத்தும் அலுவலர்/மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் தெரிவித்தார்.
விருதுநகர்கே.வி.எஸ் பள்ளியில் (13.04.2024) மக்களவை பொதுத்தேர்தல்-2024 முன்னிட்டு, வாக்குச்சாவடி அலுவலர்களுக்கு மின்னணுவாக்கு இயந்திரங்கள் பயன்பாடு தொடர்பாக நடைபெற்ற இரண்டாம் கட்ட மறு பயிற்சி வகுப்பை மாவட்ட தேர்தல் நடத்தும் அலுவலர் /மாவட்ட ஆட்சித்தலைவர் முனைவர் வீ.,ப.ஜெயசீலன்,I A S, அவர்கள் நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
விருதுநகர் மாவட்டத்தில் மக்களவை தேர்தல் 2024 நடைபெறுவதையொட்டி, இந்தியத் தேர்தல் ஆணையத்தின் அறிவுறுத்தலின்படி, பல்வேறு நடைமுறைகள் கடைப்பிடிக்கப்பட்டு வருகின்றன. அதனடிப்படையில் அச்சு ஊடகங்கள், உள்ளுர் கேபிள் தொலைக்காட்சி, வானொலி, சமூக வலைத்தளங்கள் ஆகியவற்றின் வாயிலாக அரசியல் கட்சியினர், வேட்பாளர்கள், அவர்தம் முகவர்களால் வாக்கு சேகரிக்க செய்யப்படும் விளம்பரங்களுக்கு முறையான அனுமதி வழங்கிடவும், விளம்பரங்களைக் கண்காணித்து வேட்பாளர்களின் தேர்தல் செலவினக் கணக்கில் சேர்த்திடவும் மாவட்ட அளவில் ஊடகச் சான்றளிப்பு மற்றும் கண்காணிப்புக் குழு அமைக்கப்பட்டு செயல்பட்டு வருகின்றது.இந்திய தேர்தல் ஆணையத்தின் விதிமுறைகளின் படி, வாக்குப் பதிவிற்கு முந்தைய நாளான 18.04.2024 அன்றும், வாக்குப் பதிவு நாளான 19.04.2024 அன்றும், அச்சு ஊடகங்களில் (தினசரி அச்சு ஊடகங்களில்) தேர்தல் சம்மந்தமான விளம்பரங்கள் வெளியிட விரும்பும் வேட்பாளர்கள், அரசியல் கட்சியினர் மற்றும் அவர்தம் முகவர்கள் இரண்டு நாட்களுக்கு (48 மணி நேரம்) முன்னதாக மாவட்ட அளவில் அமைக்கப்பட்டுள்ள ஊடகச் சான்றளிப்பு மற்றும் கண்காணிப்புக் குழுவின் முறையான முன்அனுமதியினை பெற்ற பின்னர் வெளியிட வேண்டும்.மேலும், அச்சு ஊடக நிறுவனங்கள் ஊடகச் சான்றளிப்பு மற்றும் கண்காணிப்புக் குழுவின் அனுமதி சான்றிதழ்(Pre certification) இருப்பதை உறுதி செய்து கொண்டு அச்சான்றிதழ் அனுமதி எண்ணை விளம்பரத்தில் வெளியிட வேண்டும்.மேற்கண்ட இரண்டு நாட்களில்(18.04.2024 மற்றும் 19.04.2024) அச்சு ஊடகங்களில் விளம்பரம் வெளியிட விரும்புவோர் இரண்டு நாட்களுக்கு (48 மணி நேரம்) முன்னதாக மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் செயல்படும், ஊடகச் சான்றளிப்பு மற்றும் கண்காணிப்புக் குழுவிடம் (MCMC) விண்ணப்பித்து முன் அனுமதி சான்றிதழை பெற்றுக் கொள்ளலாம். விளம்பரங்களை வெளியிடும் அச்சு ஊடக நிறுவனங்களும் இந்த நடைமுறையினைத் தவறாமல் கடைபிடிக்க வேண்டும்.18.04.2024 அன்று தேர்தல் சம்மந்தமான விளம்பரங்கள் வெளியிட விரும்பும் வேட்பாளர்கள், அரசியல் கட்சியினர் மற்றும் அவர்தம் முகவர்கள் 16.04.2024 அன்று மாலை 07.00 மணிக்குள்ளும், 19.04.2024 அன்று தேர்தல் சம்மந்தமான விளம்பரங்கள் வெளியிட விரும்புவோர் 17.04.2024 அன்று மாலை 07.00 மணிக்குள்ளும் விண்ணப்பம் செய்ய வேண்டும்.மேற்கண்ட இந்திய தேர்தல் ஆணையத்தின் விதிமுறைகளின்படி, அனைத்து வேட்பாளர்கள், அரசியல் கட்சியினர் மற்றும் அவர்தம் முகவர்கள் கடைப்பிடிக்க வேண்டும் என்றும் இதனைக் கடைப்பிடிக்காதவர்கள் மீது உரிய விதிமுறைகளின்படி நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என்றும் மாவட்ட தேர்தல் அலுவலர், மாவட்ட ஆட்சித்தலைவர் முனைவர் வீ.ப.ஜெயசீலன், I A S., அவர்கள் தெரிவித்துள்ளார்கள்.
விருதுநகர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில்(12.04.2024) மக்களவைத் பொதுத் தேர்தல்- 2024 யை முன்னிட்டு, வாக்காளர் அனைவரும் 100 சதவீதம் வாக்களிப்பதை வலியுறுத்தி, “வாக்களிப்பது ஒவ்வொருவரின் கடமை” என்ற தலைப்பின் கீழ் நடைபெற்ற இருசக்கர வாகன விழிப்புணர்வு பேரணியை மாவட்ட தேர்தல் நடத்தும் அலுவலர்/ மாவட்ட ஆட்சித்தலைவர் முனைவர் வீ.ப.ஜெயசீலன், I A S., அவர்கள் கொடியசைத்து தொடங்கி வைத்தார்.மக்களவைத் பொதுத் தேர்தல்- 2024 தமிழகத்தில் ஏப்ரல்-19 நடைபெறயுள்ளதையொட்டி 18 வயது நிரம்பிய முதல், இளம் தலைமுறை வாக்காளர்கள், மூத்த வாக்காளர்கள், திருநங்கை, பெண்கள், மாற்றுத்திறனாளிகள் என அனைத்து தரப்பு வாக்காளர்களும் தவறாமல் வாக்களித்து 100 சதவீத இலக்கை அடையும் வகையில், பல்வேறு தேர்தல் விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் மாவட்டத்தில் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.அதன்படி, 100 சதவீதம் வாக்களிப்பதை வலியுறுத்தி, வட்டார போக்குவரத்து அலுவலர்கள்,ஓட்டுநர் பயிற்சி பள்ளியை சார்ந்த உரிமையாளர்கள், பயிற்சி அளிப்பவர்கள், புதிய வாகன விற்பனை முகவர்கள், பொதுமக்கள், கல்லூரி மாணவர்கள் கலந்து கொண்ட இருசக்கர வாகன விழிப்புணர்வு பேரணியில் “வாக்களிப்பது ஒவ்வொருவரின் கடமை” என்ற தலைப்பின் கீழ் நடைபெற்ற தேர்தல் விழிப்புணர்வு பேரணி மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் துவக்கி வைக்கப்பட்டுள்ளது.இந்த பேரணியில் சுமார் 250-க்கும் மேற்பட்ட வட்டார போக்குவரத்து அலுவலர்கள்,ஓட்டுநர் பயிற்சி பள்ளியை சார்ந்த உரிமையாளர்கள், பயிற்சி அளிப்பவர்கள், புதிய வாகன விற்பனை முகவர்கள், பொதுமக்கள் மற்றும் மாணவர்கள் கலந்து கொண்டு இரண்டு சக்கர மோட்டார் வாகனத்தில் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் இருந்து புதிய பேருந்து நிலையம், நகராட்சி அலுவலகம், மீனாம்பிகை பங்களா, பழைய பேருந்து நிலையம் வரை சென்று வாக்களிப்பதன் அவசியம் குறித்து, வாக்களிப்பது நமது உரிமை, கையூட்டு பெறாமல் வாக்களிக்க வேண்டும். நம்மை ஆள்பவரை நாமே தீர்மானிக்க வேண்டும். ஜனநாயக கடமையை நாம் ஆற்ற வேண்டும் என்ற வாக்காளர் விழிப்புணர்வு வாசகங்கள் அடங்கிய பதாதைகளை ஏந்தி சென்று, பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.இந்த மக்களவை பொதுத்தேர்தலில் அனைவரும் தவறாமல் நேர்மையாகவும் நியாயமாகவும் வாக்களித்து ஜனநாயக கடமையை நிறைவேற்ற வேண்டுமென மாவட்ட தேர்தல் நடத்தும் அலுவலர் தெரிவித்தார்.