2- ஆவது “திருக்குறள் மாணவர் மாநாடு-2025" நிறைவு விழா நிகழ்ச்சி
விருதுநகர் மாவட்ட அரசு மருத்துவக்கல்லூரி கலையரங்கத்தில், (01.02.2025) தமிழ்நாடு முழுவதிலிருந்தும் தமிழ்மொழி இலக்கியத் திறனறித் தேர்வில் வெற்றியடைந்த சுமார் 1000 மாணவர்கள் பங்குபெற்ற மாநில அளவிலான 2- ஆவது திருக்குறள் மாணவர் மாநாடு - 2025 நிறைவு விழா நிகழ்ச்சி மாவட்ட ஆட்சித்தலைவர் முனைவர் வீ.ப.ஜெயசீலன், I A S., அவர்கள் தலைமையில் நடைபெற்றது.
இந்த மாநாட்டில் கலந்து கொண்டுள்ள மாணவர்களுக்கு தமிழ் இலக்கியங்கள், திருக்குறளை ஏன் கற்க வேண்டும். அது எந்த வகையில் பயன்படும் என்ற மிகச் சிறப்பான கேள்வு எழும். பதினோராம் வகுப்பு முடித்துவிட்டு 12-ம் வகுப்பில் தேர்ச்சி அடைந்து சிறந்த மதிப்பெண்களை பெற்று, தமிழ்நாட்டினுடைய தலைசிறந்த கல்லூரிகளிலும், கல்வி நிறுவனங்களிலும் சேர்வதற்கு பெரும்பாலும் ஆர்வத்தோடு இருப்பீர்கள்.
ஓங்கலிடை வந்து உயர்ந்தோர் தொழவிளங்கி
ஏங்கொலிநீர் ஞாலத்(து) இருளகற்றும் – ஆங்கவற்றுள்
மின்னோர் தனியாழி வெங்கதிரொன்(று) ஏனையது
தன்னேர் இலாத தமிழ்!
என்ற பாடலினுடைய மையப் பொருள் உலகின் இருளை அகற்றுவதற்கு இரண்டு பொருள்களால் முடியும். ஒன்று உதிக்கும் சூரியன். சூரிய வெளிச்சத்தில் உலகின் உடைய இருள் போகும். அதே போல் இந்த உலகின் உடைய இருளை அகற்றுவதற்கு தமிழும் இருக்கிறது என்று தண்டியலங்காரம் குறிப்பிடுகிறது.உலகில் எவையெல்லாம் காலம் காலமாக மனிதர்களுடைய அறியாமையிலோ அல்லது சுயநலத்திலோ மனிதர்களுக்கு கிடைக்காமல் போகிறதோ, அதை தத்துவங்கள் விட்டு நிரப்பும். அதற்குத்தான் இலக்கியங்கள் உலகெங்கும் பிறந்திருக்கின்றன.
மனிதர்களுடைய வாழ்வியலுக்கு தத்துவங்களும், அறக்கருத்துக்களும் மிக மிக அவசியம். அந்த தத்துவங்களை அறக்கருத்துக்களை அதனுடைய பயனை இரண்டாக வகுக்க முடியும். இதை தமிழ் இலக்கியத்தில் திருக்குறளில் மட்டுமல்ல உலகின் செம்மார்ந்த இலக்கியங்களிலும், தத்துவ நூல்களிலும் இந்த இரண்டு பகுப்பை பார்க்க முடியும்.ஒன்று சமூகத்திற்கு என்ன தருகிறது. இன்னொன்று தனிமனித முன்னேற்றத்திற்கு என்ன தருகிறது. தனி மனிதன் முன்னேறியதற்கு பிறகு அவன் வழியாக இந்த சமூகம் முன்னேறும். இந்த சமூகத்தை எல்லோரும் முன்னேற்றுவார்களா என்று பார்த்தால் நிச்சயமாக இல்லை.அதைக்கான விடையை திருக்குறளில் இருந்து எடுக்க முடியும். இந்த சமூகத்தின் போக்கை தீர்மானிக்கக் கூடியவர்கள் அடுத்தடுத்த தலைமுறைகளில் ஒரு சில மனிதர்கள் மட்டுமே இருக்கிறார்கள். இதை நமது இலக்கியங்கள் மட்டுமல்ல சாக்ரடீஸ் போன்ற அரசியல் தத்துவங்கள் ஞானிகளும் குறிப்பிடுகிறார்கள்.
மருத்துவ துறையில் அதனுடைய போக்கை அடுத்த அரை நூறு ஆண்டுகளுக்கு தீர்மானிக்க கூடியவர்களும், பொறியியல் துறையினுடைய அடுத்தடுத்த கண்டுபிடிப்புகளால் அதனுடைய போக்கை தீர்மானிக்க போவதும், அற இலக்கியங்களால் சமூகத்தினுடைய போக்கை தீர்மானிப்பவர்களும் ஒரு சில மனிதர்கள் தான். அப்படிப்பட்ட மனிதர்களை தேர்ந்தெடுத்து இந்த தனி மனித முன்னேற்ற வாழ்வியல் தத்துவங்களை இலக்கியத்தின் வழியாக அவர்களுக்கு அறிமுகப்படுத்த வேண்டும் என்ற மைய நோக்கத்தில் தான் நீங்கள் இலக்கியம் படிக்க வேண்டும் என்பதை உங்களுக்கு உணர்த்துவதற்காக தான் இரண்டாவது திருக்குறள் மாணவர் மாநாடு நடத்தப்பட்டது.
இந்நிகழ்ச்சியில் திட்ட இயக்குநர்(மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை) மரு.தண்டபாணி, மாவட்ட வழங்கல் அலுவலர் திருமதி அனிதா உட்பட அரசு அலுவலர்கள், அனைத்து மாவட்டங்களைச் சேர்ந்த தமிழ்த் திறனறித் தேர்வு- 2024- ல் வெற்றி பெற்ற மாணவர்களில், சிறந்த மற்றும் ஆர்வமுள்ள சுமார் 1000- க்கு மேற்பட்ட மாணவர்கள் மற்றும் 200-க்கும் மேற்பட்ட ஆசிரியர்கள், தமிழ் அறிஞர்கள், பொதுமக்கள் கலந்து கொண்டனர்.
0
Leave a Reply