அமெரிக்காவில் வசிக்கும் இந்தியர்களில் 40% பேர் அந்நாட்டை விட்டு வெளியேறத் திட்டமிட்டுள்ளதாக சமீபத்திய ஆய்வு தெரிவிக்கிறது. டிரம்ப் நிர்வாகத்தின் கொள்கைகள், அரசியல் சூழல் மற்றும் அதிகரித்து வரும் வாழ்க்கைச் செலவு ஆகியவை இந்த முடிவுக்கு முக்கிய காரணங்களாகக் கூறப்பட்டுள்ளன.
சிங்கப்பூரில் இணையத்தில் பரவும் போலிச் செய்திகள் மற்றும் தவறான தகவல்களை கட்டுப்படுத்த செயற்கை நுண்ணறிவு (AI) உள்ளிட்ட நவீன தொழில்நுட்பங்களை பயன்படுத்த அரசு திட்டமிட்டுள்ளது. இதை பிரதமர் லாரன்ஸ் வோங் அறிவித்தார். அண்மையில் இந்திய சமூகத்தை குறிவைத்து பரவிய 14 தவறான இணையப் பதிவுகள் நீக்கப்பட்டதாகவும் அவர் தெரிவித்தார்.
அமெரிக்காவின் கலிபோர்னியா மாநிலம், லிவர்மோர் நகரில் உள்ள தீயணைப்பு நிலையத்தில் பொருத்தப்பட்டுள்ள 'சென்டினியல் லைட்' (Centennial Light) என்ற மின்விளக்கு, 1901 முதல் இடையறாது எரிந்து வருகிறது. 123 ஆண்டுகளுக்கும் மேலாக செயல்பட்டு வரும் இந்த விளக்கு, உலகின் மிக நீண்ட காலம் எரியும் மின்விளக்காக கின்னஸ் உலக சாதனைப் புத்தகத்தில் இடம்பெற்றுள்ளது. ஷெல்பி எலக்ட்ரிக் நிறுவனம் தயாரித்த இந்த விளக்கு, தற்போது சுமார் 4 வாட் வெளிச்சம் மட்டுமே அளித்தாலும், அதன் நீடித்த செயல்திறன் உலகையே வியக்க வைத்துள்ளது.
வெனிசுலாவின் கரீபியன் கடற்கரை அருகே உள்ள மோரோன் பகுதியில் அடுத்தடுத்து இரண்டு சக்திவாய்ந்த நிலநடுக்கங்கள் பதிவாகின. முதலில் 7.1 மற்றும் 7.2 ரிக்டர் அளவில் அதிர்வு ஏற்பட்டதாக தெரிவிக்கப்பட்ட நிலையில், ஒரு நிமிட இடைவெளியில் 7.5 ரிக்டர் அளவிலான மற்றொரு நிலநடுக்கம் ஏற்பட்டது. கடந்த நூற்றாண்டில் அந்நாட்டை தாக்கிய மிகப் பெரிய நிலநடுக்கங்களில் இதுவும் ஒன்றாகக் கருதப்படுகிறது.
அமெரிக்காவின் கலிபோர்னியா மாகாணம், புதிதாகப் பிறக்கும் குழந்தைகளின் பெற்றோருக்கு இலவச டயப்பர்கள் வழங்கும் திட்டத்தை அறிமுகப்படுத்தியுள்ளது.இந்தத் திட்டத்தின் கீழ், மருத்துவமனையில் இருந்து வீடு திரும்பும் ஒவ்வொரு குடும்பத்திற்கும் சுமார் 400 டயப்பர்கள் அடங்கிய தொகுப்பு இலவசமாக வழங்கப்படுகிறது. குழந்தை பராமரிப்பின் ஆரம்பச் செலவைக் குறைத்து, குறிப்பாக நடுத்தர மற்றும் குறைந்த வருமானம் கொண்ட குடும்பங்களுக்கு உதவும் வகையில் இந்தத் திட்டம் செயல்படுத்தப்பட்டுள்ளது.
விண்வெளியில் சூரிய மின் நிலையம் அமைத்து, வயர்லெஸ் முறையில் பூமிக்கு மின்சாரம் அனுப்பும் 'Sun Chasing' திட்டத்தில் சீனா முக்கிய முன்னேற்றம் கண்டுள்ளது.75 மீட்டர் உயர கோபுரம் மற்றும் சிறப்பு குவிமாடக் கண்ணாடி மூலம் சூரிய ஒளியை சேகரித்து, அதை மைக்ரோவேவ் அலைகளாக மாற்றி 100 மீட்டர் தூரத்திற்கு வயர்லெஸ் முறையில் மின்சாரம் அனுப்பும் தரைவழிச் சோதனை வெற்றிகரமாக நடைபெற்றுள்ளது.
அமெரிக்காவின் டெக்சாஸ் மாநிலத்தில் இந்தியர்களை குறிவைத்து சிலர் இனவெறி முழக்கங்களை எழுப்பிய வீடியோ சமூக வலைதளங்களில் பரவி வருகிறது. இந்தியர்களை நாட்டை விட்டு வெளியேறுமாறு கூறியதுடன், இந்திய தேசியக் கொடியை அவமதித்த சம்பவமும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.இந்தச் சம்பவத்துக்கு கண்டனம் தெரிவித்த அமெரிக்க எம்.பி. ராஜா கிருஷ்ணமூர்த்தி, "அமெரிக்காவில் எந்த சமூகத்தினருக்கும் எதிரான வெறுப்புக்கும் இடமில்லை. இந்தியர்களுக்கு எதிரான இதுபோன்ற செயல்கள் ஏற்றுக்கொள்ள முடியாதவை" என்று தெரிவித்துள்ளார்.
சுற்றுச்சூழல் நட்பு போக்குவரத்தில் முன்னணி நாடாக திகழும் நெதர்லாந்து, "சைக்கிள்களின் நாடு" என்ற பெருமையை பெற்றுள்ளது. அந்நாட்டில் சுமார் 99 சதவீத மக்கள் சைக்கிளைப் பயன்படுத்துகின்றனர். மனிதர்களின் எண்ணிக்கையை விட சைக்கிள்களின் எண்ணிக்கையே அதிகமாக இருப்பதும் குறிப்பிடத்தக்கது. பிரதமர் முதல் அமைச்சர்கள் வரை பலரும் அன்றாட பயணத்திற்கு சைக்கிளையே பயன்படுத்துவது, எளிமை மற்றும் பசுமை வாழ்க்கை முறைக்கு சிறந்த எடுத்துக்காட்டாகக் கருதப்படுகிறது.
மருத்துவத் துறையில் புதிய முன்னேற்றமாக, மனித உடலின் திசுக்களுடன் வேகமாக இணையும் திறன் கொண்ட புதிய வகை மருத்துவ இம்ப்ளான்ட்டை சீனா அறிமுகப்படுத்தியுள்ளது. உலகிலேயே முதன்முறையாக உருவாக்கப்பட்டுள்ள இந்த தொழில்நுட்பம், எலும்பு மற்றும் உறுப்பு அறுவை சிகிச்சைகளில் பக்கவிளைவுகளை குறைத்து, சிகிச்சை முறையில் புதிய மாற்றத்தை ஏற்படுத்தும் என மருத்துவ நிபுணர்கள் கருதுகின்றனர்.
சீனாவில் வசிக்கும் வயதான பெண்மணி ஒருவர், சுமார் ரூ.4 கோடி மதிப்புள்ள சொகுசு காரில் வந்து வீடுகளில் பாத்திரம் கழுவும் வேலையைச் செய்வது சமூக வலைதளங்களில் கவனத்தை ஈர்த்துள்ளது."நான் வசதியான குடும்பத்தைச் சேர்ந்தவள். வீட்டில் சும்மா இருப்பதை விரும்பவில்லை. சுறுசுறுப்பாகவும், பயனுள்ள வகையிலும் நேரத்தை செலவிடவே இந்த வேலையை விருப்பத்துடன் செய்கிறேன்," என்று அவர் தெரிவித்துள்ளார். பணம் மட்டுமல்ல, மனநிறைவும் வாழ்க்கையின் முக்கிய அங்கம் என்பதை இந்த சம்பவம் எடுத்துக்காட்டுவதாக பலரும் கருத்து தெரிவித்து வருகின்றனர்.