விருதுநகர் மாவட்டம், திருவில்லிபுத்தூர் வட்டம் மற்றும் நகரில் அமைந்துள்ள ஸ்ரீ அருள்மிகு நாச்சியார் (ஆண்டாள்) திருக்கோவில் 108 வைணவத் திருத்தலங்களில் பிரச்சித்தி பெற்ற பிரார்த்தனை திருத்தலமாகும். இத்திருக்கோயிலில் ஆடிப்பூரத் திருவிழா மிகவும் பிரசித்தி பெற்ற திருவிழாவாகும். இத்திருவிழா 06.08.2026 முதல் 14.08.2026 வரை நடைபெறுகிறது. 14.08.2026 (வெள்ளிக்கிழமை) அன்று திருத்தேரோட்டம் நடைபெறவுள்ளது.அதனை முன்னிட்டு விருதுநகர் மாவட்ட ஆட்சியர் அவர்களின் உத்தரவின் பேரில் 14.08.2026 (வெள்ளிக்கிழமை) அன்று விருதுநகர் மாவட்டம் முழுமைக்கும் உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்படுகிறது. அதனை ஈடுசெய்யும் விதமாக ஆகஸ்ட் மாதத்தின் 5 வது சனிக்கிழமை (29.08.2026) அன்று பணி நாளாக அறிவிக்கப்பட்டுள்ளது என மாவட்ட ஆட்சித்தலைவர் மரு.என்.ஓ.சுகபுத்ரா,I A S., அவர்கள் தெரிவித்துள்ளார்.
விருதுநகர் மாவட்டம், தாணிப்பாறையில் சதுரகிரி சுந்தரமகாலிங்கம் திருக்கோவில் ஆடி அமாவாசை திருவிழாவினை முன்னிட்டு மேற்கொள்ளப்பட்டு வரும் முன்னேற்பாடு பணிகளை மாவட்ட ஆட்சித்தலைவர் மரு.என்.ஓ.சுகபுத்ரா,I A S., அவர்கள் (05.08.2026) பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.அருள்மிகு சதுரகிரி சுந்தரமகாலிங்கம் திருக்கோவில் ஆடி அமாவாசை திருவிழாவை முன்னிட்டு, ஏராளமான பக்தர்கள் வந்து பங்கேற்பார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.எனவே, பக்தர்களுக்கு தேவையான அனைத்து முன்னேற்பாடுகளும் தயாராக இருக்க வேண்டும் எனவும், பொதுமக்கள் மற்றும் வயதானவர்களுக்கு தேவையான மருத்துவ உதவிகளை உடனுக்குடன் வழங்க சுகாதாரத் துறையின் மூலம் மருத்துவர்கள் மற்றும் மருத்துவப் பணியாளர்களுடன் கூடிய மருத்துவக் குழுக்கள் மற்றும் ஆம்புலன்ஸ் வாகனங்கள் எவ்வித இடையூறுமின்றி செல்வதற்கு ஏற்றவாறு பாதைகளை அமைத்திட வேண்டும். திருவிழாவிற்கு வருகின்ற பொதுமக்கள் மற்றும் பக்தர்களுக்கு தேவையான குடிநீர் வசதிகளை தேவையான இடங்களில் ஏற்படுத்தி வைக்க வேண்டும். பொதுமக்களுக்கு தேவையான கழிப்பிட வசதிகளும், தற்காலிக கழிப்பிட வசதிகளையும் அமைத்திட வேண்டும். பொதுமக்களின் கூட்ட நெரிசலை கட்டுப்படுத்தி, ஒழுங்குபடுத்தி தரிசனம் செய்திட காவல் துறை நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும். மேலும், தற்காலிக கடைகள் மற்றும் அன்னதானம் மூலம் பொதுமக்களுக்கு வழங்கும் உணவு வகைகள் உணவு பாதுகாப்பு உரிமம் பெற்று உரிய பாதுகாப்பு நெறிமுறைகளை பின்பற்றி வழங்கப்படுகிறதா என ஆய்வாளர்கள் சுழற்சி முறையில் கண்காணித்து அதனை உறுதி செய்திட வேண்டும். வனத்துறையின் மூலம் சுற்றுச்சூழலை மாசுபடுத்தாத வண்ணம் பொதுமக்களுக்கு விழிப்புணர்வு அறிவிப்புகள் வழங்க வேண்டும். பக்தர்கள் வனவிலங்குகள் மற்றும் சுற்றுச்சூழலை கருத்தில் கொண்டு நெகிழி (Plastic) பைகளைப் பயன்படுத்துவதை தவிர்த்து அதற்குப் பதிலாக மஞ்சப்பை அல்லது மக்கும் காகித பைகளைப் பொதுமக்கள் பயன்படுத்திட வேண்டும். தாணிப்பாறை அடிவாரத்தில் சேரும் குப்பைகளை உடனுக்குடன் அகற்றுவதற்கு தேவையான துப்புரவு பணியாளர்கள் பணியாற்றிட இருக்க வேண்டும். பொதுமக்கள் தங்களுக்குத் தேவையான சேவைகளை பெறுவதற்கு ஏதுவாக அறிவிப்பு பலகைகள் ஆங்காங்கே வைக்கப்பட வேண்டும். சதுரகிரிக்கு செல்லும் பக்தர்களின் வசதிக்கேற்ப மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து சிறப்பு பேருந்துகள் இயக்க தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகம் மூலம் நடவடிக்கையும், வெளியூர் பேருந்துகள், தனிநபர்களுக்கு சொந்தமான வாகனங்கள் போன்ற அனைத்து வாகனங்களையும் நிறுத்துவதற்கு வசதியாக தற்காலிக வாகன நிறுத்தங்களும், தேவையான இடங்களில் CCTV-கள் பொருத்தப்பட்டு கண்காணிப்பாளர்களால் கண்காணிக்கப்பட வேண்டும்.எனவே தொடர்புடைய அரசு துறைகள் ஒருங்கிணைந்து செயல்பட்டு அனைத்து பணிகளையும் திருவிழாவிற்கு முன்னதாக முடிக்க வேண்டும் எனவும், சதுரகிரிக்கு செல்லும் பக்தர்கள் மாவட்ட நிர்வாகத்தின் அறிவுரைகளை பின்பற்றி பாதுகாப்பான முறையில் வனப்பகுதிக்குள் சென்று சாமி தரிசனம் செய்து மாவட்ட நிர்வாகத்திற்கு ஒத்துழைப்பு தர வேண்டும் என மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் தெரிவித்தார்.இந்த ஆய்வின் போது, மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.கௌதம் கோயல்,இ.கா.ப., திட்ட இயக்குநர் (மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை) திருமதி வானதி, சிவகாசி சார் ஆட்சியர் திரு.முகமது இர்பான்,I A S., வட்டாட்சியர், வட்டார வளர்ச்சி அலுவலர்கள் உட்பட அரசு அலுவலர்கள் பலர் கலந்து கொண்டனர்.
விருதுநகர் மாவட்டம் வெம்பக்கோட்டை ஊராட்சி ஒன்றியத்துக்கு உட்பட்ட கோட்டைப்பட்டி ஊராட்சியில் (05.08.2026) செய்தி மக்கள் தொடர்பு துறையின் சார்பாக வைக்கப்பட்ட தமிழக அரசின் சாதனைகள் விளக்க புகைப்பட கண்காட்சிகளை பொதுமக்கள் பார்வையிட்டனர்.
தமிழ்நாட்டில் உள்ள நியாயவிலைக் கடைகளில் e-KYC பதிவு மேற்கொள்ளாத அனைத்து குடும்ப அட்டை பயனாளிகளுக்கும் 08.08.2026 மற்றும் 09.08.2026 ஆகிய நாட்களில் அனைத்து நியாயவிலைக் கடைகளிலும் விற்பனை முனைய இயந்திரம் மூலமாக விரல் ரேகை / கண் கருவிழி சரிபார்ப்பின் மூலம் e-KYC பதிவு மேற்கொள்ள தமிழ்நாடு அரசால் அறிவுறுத்தப்பட்டுள்ளது.அதன்படி, விருதுநகர் மாவட்டத்தில் e-KYC பதிவினை 100% நிறைவு செய்யும் பொருட்டு அனைத்து நியாயலிலைக் கடைகளிலும் சிறப்பு முகாம் நடைபெறவுள்ளது.எனவே, e-KYC பதிவு மேற்கொள்ளாத குடும்ப அட்டைதாரர்கள் அனைவரும் அருகில் உள்ள நியாயவிலைக் கடைகளுக்கு 08.08.2026 அல்லது 09.08.2026 அன்று நேரில் சென்று e-KYC பதிவு செய்யமாறு கேட்டுக் கொள்ளப்படுகின்றனர். மேலும் குடும்ப அட்டையில் உள்ள உறுப்பினர்களில் e-KYC பதிவு செய்யாத எவரேனும் பணிநிமித்தமாக தமிழ்நாட்டின் வேறு பகுதிகளில் தற்காலிகமாக வசிப்பவர்கள் எனில், அவர்களும் தற்போது வசிக்கும் பகுதிக்கு அருகில் உள்ள நியாயவிலைக் கடகளுக்கு தமது குடும்ப அட்டை விபரத்துடன் சென்று e-KYC பதிவு செய்யலாம்.எனவே, e- KYC பதிவு செய்யாமல் உள்ள குடும்ப அட்டை உறுப்பினர்கள் அனைவரும் e-KYC சிறப்பு முகாமில் அவசியம் e-KYC பதிவு மேற்கொண்டு விருதுநகர் மாவட்டத்தில் e-KYC பதிவு செய்யும் பணி 100% நிறைவு பெற்றிடுவதற்கு ஒத்துழைப்பு தர வேண்டும் என மாவட்ட ஆட்சித்தலைவர் மரு.என்.ஓ.சுகபுத்ரா,I A S., அவர்கள் தெரிவித்துள்ளார்.
இந்திய அரசின் சார்பில் ஒவ்வொரு ஆண்டும் ஜீவன் ரக்ஷா பதக் விருதானது வழங்கப்பட்டு வருகின்றது. இவ்விருதானது நீரில் மூழ்கியவரை காப்பாற்றுதல், விபத்துகள், தீ விபத்துகள், மின்சார விபத்துகள், நிலச்சரிவுகள், விலங்குகள் தாக்குதல் மற்றும் சுரங்கங்களில் நடைபெறும் மீட்புப் பணிகள் போன்ற சம்பவங்களில் ஒருவரின் உயிரைக் காப்பாற்றும் மனிதநேயமிக்க செயல்களுக்காக வழங்கப்படுகின்றது.இவ்விருதானது பின்வரும் மூன்று பிரிவுகளில் வழங்கப்படுகிறது. சர்வோத்தம் ஜீவன் ரக்ஷா பதக் - மீட்பவரின் உயிருக்கு மிகப் பெரிய ஆபத்து நிலவும் சூழ்நிலைகளில், உயிரைக் காப்பாற்றுவதில் காட்டிய அசாத்திய தைரியத்திற்காக வழங்கப்படும் விருதாகும். உத்தம் ஜீவன் ரக்ஷா பதக் - உயிருக்கு மிகுந்த ஆபத்து நிலவும் சூழ்நிலைகளில், உயிரைக் காப்பாற்றுவதில் காட்டும் துணிச்சல் மற்றும் உடனடிச் செயலுக்காக வழங்கப்படும் விருதாகும். ஜீவன் ரக்ஷா பதக் - மீட்பவருக்குக் கடுமையான உடல் காயம் ஏற்பட்ட சூழ்நிலைகளில், உயிரைக் காப்பாற்றுவதில் காட்டும் துணிச்சல் மற்றும் உடனடிச் செயலுக்காக ஜீவன் ரக்ஷா பதக் வழங்கப்படுகிறது.எனவே, விருதுநகர் மாவட்டத்தினைச் சார்ந்த தகுதி வாய்ந்த நபர்கள் 2026 ஆம் ஆண்டிற்கான ஜீவன் ரக்ஷா பதக் விருதிற்கு விண்ணப்பிக்கலாம். இவ்விருதிற்கு அனைவரும் விண்ணப்பிக்கலாம். மேலும், இராணுவம், காவல் துறை மற்றும் தீயணைப்பு துறையில் பணியாற்றி உயிர்காக்கும் வீர தீர செயல் புரிந்தவர்களும் இவ்விருதிற்கு விண்ணப்பிக்கலாம். இவ்விருதானது 01.10.2024க்கு பின் மீட்பு பணியில் ஈடுபட்டவர்களுக்கு மட்டுமே வழங்கப்படும்.இவ்விருதிற்கான விண்ணப்ப படிவத்தினை https://www.awards.gov.in என்ற இணையதளம் மூலம் பதிவிறக்கம் செய்து, பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்ப படிவத்தினை தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம், விருதுநகர் மாவட்ட விளையாட்டரங்கத்தில் 14.08.2026 அன்று மாலை 5.00 மணிக்குள் சமர்பித்திட வேண்டும்.மேலும் விபரங்களுக்கு 04562-225947 அல்லது 7824009970 என்ற தொலைபேசி எண்ணில் தொடர்பு கொள்ளலாம் என மாவட்ட ஆட்சித்தலைவர் மரு.என்.ஓ.சுகபுத்ரா,I A S ., அவர்கள் தெரிவித்துள்ளார்.
தமிழ்நாடு முதலமைச்சர் திரு. ச.ஜோசப் விஜய் அவர்கள் (04.08.2026) தலைமைச் செயலகத்தில் இருந்து காணொலி காட்சியின் வாயிலாக விருதுநகர் மாவட்டம், சிவகாசி அரசு மருத்துவமனையில் ரூ.32.65 கோடி மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள ஒருங்கிணைந்த தீவிர சிகிச்சை பிரிவு மற்றும் தாய் சேய் நலப்பிரிவு கட்டடத்தினை திறந்து வைத்தார். அதனைத் தொடர்ந்து தொழில் ,முதலீட்டு ஊக்குவிப்பு மற்றும் வர்த்தகத் துறை அமைச்சர் செல்வி ச.கீர்த்தனா அவர்கள், மாவட்ட ஆட்சித்தலைவர் மரு.என்.ஓ.சுகபுத்ரா,I A S., அவர்கள் தலைமையில் அவசர சிகிச்சை பிரிவு கட்டடத்தினை பொதுமக்களின் பயன்பாட்டிற்கு குத்து விளக்கு ஏற்றி தொடங்கி வைத்தார்.தமிழ்நாடு முதலமைச்சர் ச.ஜோசப் விஜய் அவர்கள் தமிழக மக்களின் ஆரோக்கியத்திற்கும், சுகாதார மேம்பாட்டிற்கும் பல்வேறு உட்கட்டமைப்பு வசதியினை மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வு துறை மூலம் மேற்கொள்ள உத்தரவிட்டுள்ளார்.அதனடிப்படையில் சிவகாசி பகுதி பொதுமக்கள் உயர்தரமான மருத்துவ சேவையினை எவ்வித பொருளாதார செலவுமின்றி உள்ளூரிலேயே தரமான உயர்தர சிகிச்சையினை பெற்று கொள்ளும் வகையில் தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களால் இந்த கட்டிடம் காணொலிகாட்சியின் வாயிலாக (04.08.2026) திறந்து வைக்கப்பட்டுள்ளது.சிவகாசி அரசு மருத்துவமனை தற்போது 140 படுக்கைகள் வசதிகளுடன் செயல்பட்டு வருகிறது. சராசரியாக நாள் ஒன்றுக்கு 550 வெளி நோயாளிகள், 140 உள் நோயாளிகள், மாதம் ஒன்றுக்கு 120 பிரசவங்கள், 24,509 ஆய்வக பரிசோதனைகள், 161 பெரிய அறுவை சிகிச்சைகள் மற்றும் 318 சிறிய அறுவை சிகிச்சைகள் மற்றும் நடைபெற்று வருகிறது.மேலும் இம்மருத்துவமனையில் விபத்து மற்றும் அவசர சிகிச்சைப் பிரிவு (TAEI), திறன்மிகு தீக்காய சிகிச்சைப் பிரிவு மற்றும் பச்சிளங்குழந்தைகளுக்கான சிறப்பு சிகிச்சைப் பிரிவுகள் சிறப்பாக செயல்பட்டு வருகிறது.சிவகாசி அரசு மருத்துவமனையை தரம் உயர்த்துவதற்காக அரசாணை எண்.53 மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை நாள்:01.03.2024-ன் படி ரூ. 23.75 கோடி மதிப்பில் PM-ABHIM திட்டத்தின் கீழ் 50 படுக்கைகள் கொண்ட Critical Care Block NHM மூலம் 8.7958 கோடி மதிப்பீட்டில் மகப்பேறு மற்றும் குழந்தைகள் நலப்பிரிவு (Maternal Child Health Wing) இரண்டும் ஒருங்கிணைந்து ரூ.32.54 கோடி மதிப்பீட்டில் ஒரே கட்டிடமாக தரைத்தளம் மற்றம் 6 தளங்களுடன் தீவிர சிகிச்சைப்பிரிவு & மகப்பேறு மற்றும் குழந்தைகள் நலப்பிரிவு (CRITICAL CARE BLOCK & MATERNAL CHILD HEALTH WING) கட்டப்பட்டுள்ளது.மேலும், அந்த கட்டிடத்தில் தரை தளத்தில் விபத்து மற்றும் அவசர சிகிச்சைப் பிரிவு (TAEI), அவசர அறுவை அரங்கு, நுண்கதிர் பிரிவு (Hyperbaric Oxygen Therapy for Burns) மற்றும் இரத்த சுத்திகரிப்பு மையம் (Hemodialysis), முதல் தளத்தில் பிரசவ வெளிநோயாளிகள் பிரிவு, அல்ட்ரா சவுண்ட் ஸ்கேன், குடும்ப தல மையம் மற்றும் பிரசவ அறை (LDR Complex). HDU மற்றும் பிரசவ முன்கவனிப்பு பிரிவு (Antenatal Ward), இரண்டாவது தளத்தில் பிரசவ Twin அறுவை அரங்கம், தீவிர சிகிச்சைப்பிரிவு, அறுவை சிகிச்சைக்குப் பின் கவனிப்பு பிரிவு, மூன்றாம் தளத்தில் பொது அறுவை அரங்கம், எலும்புபிரிவு அறுவை அரங்கம், ஆண்கள் அறுவை சிகிச்சைக்குப் பின் கவனிப்புபிரிவு, நான்காம் தளத்தில் பிரசவத்திற்கு பின் கவனிப்பு பிரிவு (Postnatal Ward), மற்றும் Level -1, Level II, Level-III வசதியுடன் கூடிய பச்சிளங்குழந்தைகள் சிறப்பு சிகிச்சைப்பிரிவு, ஐந்தாம் தளத்தில் பெண்கள் சிகிச்சைப்பிரிவு, இயன்முறை சிகிச்சைப்பிரிவு மற்றும் தீவிர சிகிச்சைப்பிரிவு, ஆறாம் தளத்தில் ஆண்கள் சிகிச்சைப்பிரிவு மற்றும் குழந்தைகள் நலப்பிரிவுகள் உள்ளிட்ட வசதிகள் சிறப்பாக அமையப்பெற்றுள்ளது. மேலும், இக்கட்டிடத்தில் Police Outpost Central Oxygen, CCTV, LAN Connection Fire Fighting Equipments, Lift வசதி ஏற்படுத்தப்பட்டுள்ளது.இப்புதிய மருத்துவ கட்டிடத்தில் அதி தீவிர சிகிச்சை பிரிவில் (Critical Care Block) 50 படுக்கை வசதிகள், மகப்பேறு மற்றும் குழந்தைகள் நல பிரிவில் (Maternal Child Health Wing) 100 படுக்கை வசதிகள் ஏற்படுத்தப்பட்டுள்ளதன் அடிப்படையில் 150 படுக்கைகள் அதிகரித்து 290 படுக்கை வசதிகள் கொண்ட புதிய கூடுதல் கட்டிடம் பொதுமக்கள் பயன்பாட்டிற்கு கொண்டுவரப் பட்டுள்ளது.இதனை பொதுமக்கள் அனைவரும் நல்ல முறையில் பயன்படுத்தி தங்களது ஆரோக்கியத்தினையும், சுகாதாரத்தினையும் மேம்படுத்திக் கொள்ள வேண்டுன் என தொழில், முதலீட்டு ஊக்குவிப்பு மற்றும் வர்த்தகத்துறை அமைச்சர் செல்வி ச.கீர்த்தனா அவர்கள் தெரிவித்துள்ளார்.இந்நிகழ்ச்சியில் இணை இயக்குநர் (மருத்துவம் மற்றும் மக்கள் நல பணிகள்) திரு.செந்தில்குமார், சிவகாசி சார் ஆட்சியர் திரு.முகமது இர்பான்,I A S , துணை இயக்குநர் (மருத்துவமனை மருத்துவ அலுவலர்) திரு.அய்யனார், அரசு அலுவலர்கள், மருத்துவ பணியாளர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.
விருதுநகர் மாவட்டத்திற்கு உட்பட்ட 450 கிராம ஊராட்சிகளில் 15.08.2026 சுதந்திர தினத்தன்று சிறப்பு கிராம சபைக் கூட்டம் நடைபெறவுள்ளது.இக்கூட்டத்தில் கிராம ஊராட்சி நிர்வாகம் மற்றும் பொது நிதி செலவினம் குறித்தும் (01.04.2026 முதல் 31.07.2026 வரை), தூய்மையான குடிநீர் விநியோகத்தினை உறுதி செய்வது குறித்தும், மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதித்திட்டம், அனைத்து கிராம அண்ணா மறுமலர்ச்சி திட்டம்-II, சிறு பாசன ஏரிகள் புதுப்பித்தல் குறித்த விபரம், ஜல் ஜீவன் திட்டம், தூய்மை பாரத இயக்க (ஊரகம்) திட்டம், மற்றும் இதர பொருட்கள் குறித்து விவாதிக்கப்படவுள்ளன.எனவே, 15.08.2026 அன்று நடைபெறவுள்ள கிராமசபைக் கூட்டத்தில் பொதுமக்கள் அனைவரும் தவறாது கலந்து கொண்டு கிராம வளர்ச்சிக்கு பயனுள்ள கருத்துகளை தெரிவிக்க வேண்டும் என மாவட்ட ஆட்சித்தலைவர் மரு.என்.ஓ.சுகபுத்ரா,I A S., அவர்கள் தெரிவித்துள்ளார்.
மாவட்ட ஆட்சித் தலைவர் மரு.என்.ஓ.சுகபுத்ரா,I A S., அவர்களது தலைமையில் மாவட்ட உணவு பாதுகாப்புத் துறையின் வழிகாட்டுதல் குழு கூட்டம் (04.08.2026) நடைபெற்றது.உணவு வணிகர்கள் பின்பற்ற வேண்டிய நெறிமுறைகள் மற்றும் அவர்கள் தொழிலை மேம்படுத்துவதற்கான சட்டப்பூர்வ வசதிகள் போன்றவை குறித்தும், உணவு பாதுகாப்பு மற்றும் தரங்கள் சட்டத்தில் அவர்களுக்கு உள்ள சலுகைகளும் எடுத்துரைக்கப்பட்டது. உணவு பாதுகாப்பு ஆணையர் அவர்களால் அங்கீகரிக்கப்பட்ட அபராத தொகையில் தெருவோர வியாபாரிகளுக்கு 50% சலுகை அளிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. விருதுநகர் மாவட்ட ஆட்சியரகத்தில் உள்ள உணவகங்கள் அங்கீகரிக்கப்பட்ட மூன்றாம் தரப்பு தணிக்கை நிறுவனங்களால் தணிக்கை செய்யப்பட்டு, இந்திய உணவு பாதுகாப்பு மற்றும் தரங்கள் ஆணையரகத்தின் தலைமை செயல் அலுவலரால் ஒப்புதல் அளிக்கப்பட்ட விதிகளின் படி சரியான உணவு வளாகம் (Eat Right Campus) என்ற சான்றிதழ் பெறப்பட்டுள்ளது.அனைத்து உணவு வணிகர்களும் உணவுப் பாதுகாப்பு தர நிர்ணயச் சட்டத்தின் கீழ் பதிவு/உரிமம் பெற்றிருத்தல் வேண்டும். தடை செய்யப்பட்ட புகையிலை, குட்கா, பான்மசாலா விற்பனை கூடாது. உணவுகளை பொட்டலமிட நெகிழி (Plastic) பயன்படுத்தக் கூடாது. காலாவதியான உணவுபொருட்களையோ, குளிர்பானங்களையோ விற்பனை செய்யக் கூடாது. தெருவோரக் கடைகள் மற்றும் தள்ளுவண்டி உணவகங்கள் உட்பட அனைவரும் சுத்தமான, சுகாதாரமான உணவுகளை விற்பனை செய்யவேண்டும் மற்றும் தரமான உணவுப் பொருட்களைக் கொண்டு உணவு தயாரிக்கவேண்டும். உணவு எண்ணெயினை ஒருமுறைக்கு மேல் பயன்படுத்தக் கூடாது. பயன்படுத்தப்பட்ட எண்ணெய்யை RUCO அங்கீகரிக்கப்பட்ட சேகரிப்பாளர்களிடம் மட்டுமே ஒப்படைக்கவேண்டும். இறைச்சி மற்றும் மீன் கடைகளில் கெட்டுப்போன நாள்பட்ட இறைச்சி மற்றும் மீன்கள் விற்பனைசெய்யக் கூடாது.மேற்படி அறிவிப்பில் விதி மீறல்கள் இருக்கும் பட்சத்தில் அபராதத்துடன் கூடிய துறை ரீதியான நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.எனவே, வணிகர்கள் பொதுமக்களின் உடல் நலனை கருத்தில் கொண்டு உணவு பாதுகாப்பு விதிமுறைகளின் படி உணவு தயாரித்து விற்பனை செய்திட வேண்டும் என மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் தெரிவித்தார்.கூட்டத்தினை மாவட்ட உணவு பாதுகாப்பு நியமன அலுவலர் மரு.ச.மாரியப்பன் அவர்கள் ஒருங்கிணைத்திருந்தார். அந்தக் கூட்டத்தில் உணவு வணிக சங்கப் பிரதிநிதிகள், நுகர்வோர் சங்கப் பிரதிநிதிகள், பல்வேறு அரசுத் துறையின் அலுவலர்கள், உணவு பாதுகாப்பு அலுவலர்கள் ஆகியோர் கலந்து கொண்டனர்.
விருதுநகர் மாவட்ட அரசு தொழிற்பயிற்சி நிலையங்களான விருதுநகர், அருப்புக்கோட்டை, சாத்தூர் மற்றும் திருச்சுழியில் 2026-ம் ஆண்டிற்கான ஓராண்டு, ஈராண்டு தொழிற்பிரிவுகளில் பயிற்சியாளர்களின் நேரடிச்சேர்க்கை 31.07.2026 முடிய நடைபெற்றது. இச்சேர்க்கையில் பூர்த்தி செய்யப்பட்ட இடங்கள் போக காலியாகவுள்ள தொழிற்பிரிவுகளில் இன ஒதுக்கீடு மற்றும் 10ம் வகுப்பு தேர்ச்சி பெற்றுள்ள மதிப்பெண்களின் தரவரிசை அடிப்படையில் 14.08.2026 முடிய உரிய அசல் கல்விச்சான்றுகளை வழங்கி, நேரடிச்சேர்க்கையில் மாணவ, மாணவிகள் அதிகளவில் சேர்ந்து தொழிற்கல்வியினை பயின்று வேலை வாய்ப்பினை பெற்று பயன்பெறலாம்.மேலும் இப்பயிற்சியில் ஓராண்டு தொழிற்பிரிவுக்கான கட்டணம் ரூ.185/-ம் மற்றும் ஈராண்டு தொழிற்பிரிவுக்கான கட்டணம் ரூ.195/-ம் நேரிடையாக செலுத்தப்பட வேண்டும். இந்நிலையத்தில் பயிற்சி பெறும் தகுதியுள்ள அனைத்து பயிற்சியாளர்களுக்கும் விலையில்லா மடிக்கணினி, விலையில்லா மிதிவண்டி, கட்டணமில்லா பேருந்து பயணச் சலுகை, மாதாந்திர கல்வி உதவித் தொகை ரூ.750/- (வருகைக்கு ஏற்ப), சீருடை 2 செட் (தையல்கூலியுடன்) , மூடு காலணி 1 செட், பாடப்புத்தகங்கள், வரைபட கருவிகள் மற்றும் பயிற்சியாளர் அடையாள அட்டை, இவற்றுடன் 6ம் வகுப்பு முதல் 10 ம் வகுப்பு முடிய அரசு பள்ளியில் பயின்று உயர்கல்வி பெறும் ஆண், பெண் பயிற்சியாளர்களுக்கு தமிழ்புதல்வன், புதுமைப்பெண் திட்டத்தின் மூலம் மாதந்தோறும் ரூ.1000/- உதவித்தொகை பெற்று வழங்கப்படும். இவ்வாய்ப்பினை 10ம் வகுப்பு தேர்ச்சி பெற்ற மற்றும் அதற்கு மேல் கல்வித்தகுதியுடைய 11, 12, பட்டய, பட்டப்படிப்புகளில் தேர்ச்சி பெற்ற, தேர்ச்சி பெறாத, இடைநின்ற மாணவ, மாணவியர் தொழிற்கல்வியினை பயின்று நல்ல ஊதியத்துடன் வேலை வாய்ப்பினை மத்திய/மாநில/ தனியார் அரசு தொழிற் நிறுவனங்களில் வேலைவாய்ப்பினைப் பெற வளாகத் தேர்வு மூலம் தெரிவு செய்திட நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது என மாவட்ட ஆட்சித்தலைவர் மரு.என்.ஓ.சுகபுத்ரா,I A S., அவர்கள் தெரிவித்துள்ளார்.
விருதுநகர் மாவட்ட ஆட்சியர் அலுவலகக் கூட்டரங்கில் (03.08.2026) நடைபெற்ற மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் ரூ.28.69 இலட்சம் மதிப்பீட்டிலான நலத்திட்ட உதவிகளை மாவட்ட ஆட்சித்தலைவர் மரு.என்.ஓ.சுகபுத்ரா .I A S ., அவர்கள் வழங்கினார்.இக்கூட்டத்தில், பொதுமக்கள் மற்றும் மாற்றுத்திறனாளிகளிடமிருந்து இலவச வீட்டுமனைப்பட்டா, பட்டா மாறுதல், புதிய குடும்ப அட்டை, வேலைவாய்ப்பு, விபத்து நிவாரணம், மாற்றுத்திறனாளிகள் மற்றும் நலிந்தோர் நல உதவித்திட்டங்கள், விதவை உதவித்தொகை, திருமண உதவித்தொகை மற்றும் முதியோர் உதவித்தொகை உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் குறித்தான மனுக்கள் பெறப்பட்டன.மேலும், மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் மாற்றுத்திறனாளிகள் மற்றும் மூத்த குடிமக்களுக்காக அமைக்கப்பட்டுள்ள சிறப்பு அமருமிடத்திற்கு நேரடியாகச் சென்று, அவர்களின் கோரிக்கை மனுக்களைப் பெற்று பரிசீலித்தார். பொதுமக்களிடமிருந்து பெறப்பட்ட இம்மனுக்கள் அனைத்தையும் சம்பந்தப்பட்ட துறை அலுவலர்களிடம் ஒப்படைத்து, அவற்றின் மீது உரிய மற்றும் விரைவான நடவடிக்கை எடுக்கவும், முதலமைச்சரின் தனிப்பிரிவு மனுக்கள் மீது கூடுதல் கவனம் செலுத்தி விரைந்து தீர்வு காணவேண்டும் என உத்தரவிட்டார்.இக்கூட்டத்தில், பல்வேறு விபத்துக்களில் தாய், தந்தை இருவரில் எவரேனும் ஒருவரை இழந்த 35 மாணவர்களுக்கு தலா ரூ.75,000/- வீதம் மொத்தம் ரூ.26.25 இலட்சம் மதிப்பிலான வைப்பு பத்திரங்களையும், சத்துணவு திட்டத்தில் பணிபுரிந்து பணியின் போது மரணம் அடைந்தவர்களின் வாரிசுதாரர்களுக்கு 2 பயனாளிக்கு சத்துணவு அமைப்பாளர் பணி ஆணையினையும், 1 பயனாளிக்கு சமையாலளர் பணி ஆணையினையும், 2 பயளானிகளுக்கு சமையல் உதவியாளர் பணிக்கான ஆணை என மொத்தம் 5 பயனாளிகளுக்கு கருணை அடிப்படையிலான பணி நியமன ஆணையினையும் வழங்கினார். மேலும், இக்கூட்டத்தில், மாற்றுத்திறனாளிகள் நலத்துறை சார்பில் 4 மாற்றுத்திறனாளிகளுக்கு மொத்தம் ரூ.2.44 இலட்சம் மதிப்பிலான நவீன செயற்கை கால்களை மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் வழங்கினார்.தொடர்ந்து, பொதுமக்களிடமிருந்து 462 மனுக்கள் பெறப்பட்டன. இம்மனுக்கள் சம்மந்தப்பட்ட துறை அலுவலர்களிடம் உரிய நடவடிக்கை எடுக்க ஒப்படைக்கப்பட்டது.அதனைத் தொடர்ந்து, மாவட்ட ஆட்சித்தலைவர் பொதுமக்கள் எவ்வித சிரமமுமின்றி சேவைகளைப் பெறுவதை உறுதி செய்யுமாறு சம்பந்தப்பட்ட அலுவலர்களுக்கு அறிவுறுத்தினார்.இக்கூட்டத்தில், மாவட்ட வருவாய் அலுவலர் திருமதி ரா.ஆனந்தி, தனித்துணை ஆட்சியர் (சமூக பாதுகாப்புத் திட்டம்) திருமதி கு.மோகனா, அரசுத் துறை அலுவலர்கள் மற்றும் பொதுமக்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.