மக்கள் தொடர்பு திட்ட முகாம் 12.08.2026 அன்று இராஜபாளையம் வட்டம், புதுப்பாளையம் வருவாய் கிராமத்தில் மாவட்ட ஆட்சித்தலைவர் மரு.என்.ஓ.சுகபுத்ரா I A S., அவர்கள் தலைமையில் நடைபெறவுள்ளது.ஒவ்வொரு மாதமும் 2-ஆவது புதன்கிழமை மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் தலைமையில் மக்கள் தொடர்பு திட்ட முகாம் நடைபெற்று வருகிறது. அதனடிப்படையில், வருகின்ற 12.08.2026 அன்று இராஜபாளையம் வட்டம், புதுப்பாளையம் வருவாய் கிராமத்தில் உள்ள கலையரங்கத்தில் மக்கள் தொடர்பு திட்ட முகாம் நடைபெற உள்ளது. இம்முகாமில் பல்வேறு துறைசார்ந்த அரங்குகள் அமைக்கப்பட்டு பொது மக்களுக்கு அரசின் திட்டங்கள் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தப்படவுள்ளன. பொதுமக்கள் மனுக்கள் வழங்கி தீர்வு பெறலாம். ஏற்கனவே, பெறப்பட்ட மனுவின் மீது தீர்வு காணப்பட்டு, தகுதியுள்ள மனுதாரர்களுக்கு அரசின் நலத்திட்ட உதவிகள் வழங்கப்படவுள்ளது.
பொருளியல் மற்றும் புள்ளியியல் துறையின் மூலம் 81-ஆவது தேசிய மாதிரி பொதுமக்களின் இடம்பெயர்வு ஆய்வு (Migration survey), அகில இந்திய கடன் மற்றும் முதலீட்டு ஆய்வு, குடும்பங்களின் நிலம்,கால்நடை உடைமை மற்றும் கிராமப்புற வேளாண்குடும்பங்களின் நிலை குறித்த மதிப்பீடு ஆய்வானது 3 நிலைகளாக மேற்கொள்ளப்படவுள்ளது. இந்த ஆய்வில், குடும்ப உறுப்பினர்களின் விவரங்கள், கல்வி, வேலைவாய்ப்பு, இடம் பெயரலுக்கான காரணங்கள், கடன் மற்றும் முதலீட்டு விவரங்கள், வரவு, செலவு விவரங்கள், நிலம் மற்றும் கால்நடை தகவல், வேளாண் நடவடிக்கைகள் உள்ளிட்ட சமூக மற்றும் பொருளாதார தகவல்கள் சேகரிக்கப்படவுள்ளது. இடம் பெயர்வு குறித்து பாம்பாட்டி, துலுக்கன்குறிச்சி, தெற்கு வெங்காநல்லூர், திருச்சுழி, ஆயர் தர்மம், மேல கல்லான்குளம், சம்மந்தபுரம், தாயில்பட்டி, தொப்பலாக்கரை, வடபட்டி, பூலாங்கல், மாரனேரி, சொக்கம்பட்டி, குரன்டி, செவல்பட்டி, மேலராஜகுலராமன் (பகுதி), குறிஞ்சாகுளம், முத்தனேந்தல் ஆகிய 18 கிராம ஊராட்சிகளிலும், சிவகாசி(3 மாதிரிகள்), திருத்தங்கல், அருப்புக்கோட்டை, வத்திராயிருப்பு, திருவில்லிபுத்தூர் (2 மாதிரிகள்), சம்மசிகாபுரம், எஸ்.கொடிக்குளம், சித்துராஜபுரம், கூரைக்குண்டு, இராஜபாளையம், விருதுநகர், மம்சாபுரம் (2 மாதிரிகள்) ஆகிய 16 நகர்ப்புற பகுதிகளில் தகவல்கள் சேகரிக்கப்படவுள்ளன.அகில இந்திய கடன் மற்றும் முதலீட்டு ஆய்வு மற்றும் குடும்பங்களின் நிலம், கால்நடை உடைமை மற்றும் கிராமப்புற வேளாண் குடும்பங்களின் நிலை குறித்து மானங்காத்தான், நல்லூர், மீசலூர், புதுக்கோட்டை, சம்மந்தபுரம், சொக்கனாதபுத்தூர், தில்லாகுளம், காளையார்குறிச்சி, பெரியகொள்ளபட்டி, அப்பனாயக்கன்பட்டி, தெற்கு வேங்கநல்லூர், திருச்சுழி, ஆலங்குளம், ஆதிகுளம் ஆகிய 14 கிராமப்புற மாதிரிகளிலும், சுந்தரபாண்டியம், திருத்தங்கல், சேத்தூர், மம்சாபுரம், இராஜபாளையம், விருதுநகர், எஸ்.கொடிகுளம், கூரைக்குண்டு, வாடி, காரியாபட்டி, விஸ்வநத்தம், காரியாபட்டி ஆகிய 12 நகர்புற மாதிரிகளிலும் ஆய்வு நடத்தப்பட உள்ளது.ஆய்விற்காக அலுவலர்கள் பொதுமக்களின் இல்லங்களுக்கு வரும் பொழுது உண்மையான புள்ளி விவரங்களை அளித்திட வேண்டும். மக்களால் தெரிவிக்கப்படும் புள்ளி விவரங்கள் பாதுகாக்கப்படும். இதன் மூலம் சேகரிக்கப்படும் தகவல்களின் மூலம் மத்திய, மாநில அரசுகளால் திட்டங்கள் சிறப்பான முறையில் செயல்படுத்த உதவும். இப்பணிக்கு பொதுமக்கள் ஒத்துழைப்பு வழங்கிட வேண்டும் என மாவட்ட ஆட்சித்தலைவர் மரு.என்.ஓ.சுகபுத்ரா I A S., அவர்கள் தெரிவித்தார்.
12-ஆவது தேசிய கைத்தறி தின விழாவினை முன்னிட்டு விருதுநகர் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்ட அரங்கில் மாவட்ட ஆட்சித் தலைவர் மரு.என்.ஓ.சுகபுத்ரா .I A S.,அவர்கள், சிறப்பு பகுதி மேம்பாட்டு திட்டத்தின் (SADP) திட்ட இயக்குநர் செல்வி.சங்கீதா. I A S., ,அவர்கள் முன்னிலையில் (07.08.2026) சிறப்பு கைத்தறி கண்காட்சியினை துவக்கி வைத்து 20 நெசவாளர்களுக்கு ரூ.11.57 லட்சம் மதிப்பீட்டிலான நலத்திட்ட உதவிகளை வழங்கினார் . இந்தியாவின் கைத்தறி தொழிலை முன்னிலைப்படுத்தும் விதமாகவும், நாடு முழுவதும் நெசவுத் தொழிலில் ஈடுபட்டு வரும் கைத்தறி தொழிலாளர்களை கௌரவப்படுத்துவதற்காகவும், அவர்களின் வாழ்வாதார மேம்பாட்டிற்காகவும் 1905 ஆம் ஆண்டு ஆகஸ்ட் 7ஆம் நாள் தொடங்கப்பட்ட சுதேசி இயக்கத்தினை நினைவு கூறும் வகையிலும் ஒவ்வொரு ஆண்டும் ஆகஸ்ட் 7ஆம் தேதி தேசிய கைத்தறி தினமாக கொண்டாடப்பட்டு வருகிறது.இந்த நாளில் கைத்தறி தொழிலின் முக்கியத்துவம், தனித்தன்மை, நாட்டின் சமூக பொருளாதார வளர்ச்சியில் கைத்தறி துறையின் பங்களிப்பு மற்றும் கைத்தறி தொழிலில் ஈடுபடும் தொழிலாளர்களை ஊக்கப்படுத்துதல் தொடர்பாக விழிப்புணர்வு நிகழ்ச்சிகளும் நடத்தப்பட்டு வருகிறது. கைத்தறி தொழிலில் ஈடுபட்டு வரும் தொழிலாளர்களின் நலனை பாதுகாத்திடவும், அவர்களின் குடும்ப சூழ்நிலையை மேம்படுத்திடவும் சேமிப்பு மட்டும் பாதுகாப்பு திட்டத்தின் கீழ் அரசு பங்களிப்புடன் சேமிப்பு திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. அதன் அடிப்படையில் 10 நெசவாளர்களுக்கு ரூ.6,57,369/- மதிப்பீட்டிலான நலத்திட்ட உதவிகளும், புதிய தொழில் முனைவோர்களை ஊக்கப்படுத்திடும் வகையில் முத்ரா திட்டத்தின் கீழ் 10 நெசவாளர்களுக்கு தலா 50,000 வீதம் 5 லட்சத்திற்கான நிதி உதவியும் வழங்கப்படுகிறது.கைத்தறி தொழிலில் ஈடுபட்டு ஓய்வு பெற்ற நெசவாளர்களின் குடும்பத்தினை பாதுகாத்திடும் வகையில் குடும்ப ஓய்வூதிய திட்டம் செயல்படுத்தப்படுகிறது. அதன் அடிப்படையில் 5 பயனாளிகளுக்கு ஓய்வூதியத்திற்கான ஆணை இன்று (07.08.2026) வழங்கப்பட்டது. நெசவாளர்களின் சுகாதாரத்தினை மேம்படுத்தும் வகையில் இன்று சிறப்பு மருத்துவ முகாம் நடத்திட முன்னேற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டு, அருப்புக்கோட்டையில் சிறப்பு மருத்துவ முகாம் நடைபெற்றது. மருத்துவ முகாமில் நெசவாளர்களுக்கான பொது மருத்துவம், மகளிர் மருத்துவம், பல் மருத்துவம், கண், எலும்பு மற்றும் மூட்டு, ரத்த சர்க்கரை அளவு பரிசோதனை மற்றும் இசிசி பரிசோதனைகளும் மேற்கொள்ளப்படுகிறது. இதன் மூலம் அப்பகுதியில் உள்ள ஏராளமான நெசவாளர்கள் பயன்பெறுவார்கள். பொதுமக்கள், அரசு அலுவலர்கள், மாணவ, மாணவிகள் என அனைவரும் நெசவாளர்களின் தொழில்களைப் பாதுகாத்திடவும், அவர்களின் வாழ்க்கை தரத்தினை முன்னேற்றிடவும் கைத்தறி துணிகளை வாங்கி பயன்படுத்த வேண்டும் என மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் தெரிவித்தார்.இந்நிகழ்ச்சியில் மாவட்ட ஆட்சித்தலைவரின் நேர்முக உதவியாளர் (பொது) திருமதி பிரிதௌஸ் பாத்திமா, கைத்தறித்துறை உதவி இயக்குநர் திரு.பழனி குமார், கைத்தறி அலுவலர் திரு.வி.விஸ்வேஸ்வரன் உட்பட பலர் கலந்து கொண்டனர் .
விருதுநகர் மாவட்டம் திருவில்லிபுத்தூர் வட்டார பகுதிகளில் சிறப்பு பகுதி மேம்பாட்டு திட்டத்தின் கீழ் நடைபெற்றுள்ள பணிகளை மாவட்ட ஆட்சித்தலைவர் மரு.என்.ஓ.சுகபுத்ரா .I A S., அவர்கள் தலைமையில், சிறப்புப் பகுதி மேம்பாட்டுத் திட்ட இயக்குநர் செல்வி கே.சங்கீதா .I A S., அவர்கள் (07.08.2026) ஆய்வு செய்தார். தமிழ்நாடு அரசு சிறப்பு பகுதி மேம்பாட்டுத் திட்டம் (Special Area Development Programme) மேற்கு தொடர்ச்சி மலை திட்டப்பகுதிகளான உதகமண்டலம், கோயம்புத்தூர், ஈரோடு, திருப்பூர், திண்டுக்கல், மதுரை, தேனி, விருதுநகர், திருநெல்வேலி, தென்காசி, கன்னியாகுமரி உள்ளிட்ட மாவட்டங்களின் செயல்படுத்தப்படுகிறது.இத்திட்டத்தின் மூலம் மலைப்பாங்கான மற்றும் குறிப்பிட்ட பின்தங்கிய பகுதிகளில் மண் அரிப்பைத் தடுத்தல் மற்றும் நீர் வளத்தைப் பெருக்குதல், முழுமையான நீர் மேலாண்மை மற்றும் பாதுகாப்புப் பணிகள், மலைப் பகுதிகள் மற்றும் சுற்றுச்சூழல் முக்கியத்துவம் வாய்ந்த இடங்களின் பாதுகாப்பிற்கு முன்னுரிமை அளித்தல் மற்றும் பொதுமக்களின் வாழ்விட மேம்பாட்டிற்கான சமுதாயக் கூடங்கள், அங்கன்வாடி மையங்கள் மற்றும் பிற பொதுக் கட்டிடங்கள் கட்டுதல் உள்ளிட்ட பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.விருதுநகர் மாவட்டத்தில் இராஜபாளையம், திருவில்லிபுத்தூர் மற்றும் வத்திராயிருப்பு வட்டாரப் பகுதிகளில் சிறப்பு பகுதி மேம்பாட்டு திட்டம் 2023- 24 இன் கீழ் ரூ.1.51 கோடியில் 3 பணிகள் முடிக்கப்பட்டுள்ளன. மேலும், சிறப்பு பகுதி மேம்பாட்டு திட்டம் 2024- 25 இன் கீழ் ஒதுக்கீடு செய்யப்பட்ட ரூ.7.22 கோடி மதிப்பிலான 34 பணிகளில் 29 பணிகளும், 2025- 26 இன் கீழ் ஒதுக்கீடு செய்யப்பட்ட ரூ.2.65 கோடி மதிப்பிலான 3 பணிகளில் 2 பணிகளும் முடிக்கப்பட்டுள்ளன.ஆக மொத்தம் ஒதுக்கீடு செய்யப்பட்ட ரூ.11.38 கோடி மதிப்பிலான 40 திட்டப்பணிகளில், ரூ.8.16 கோடி மதிப்பிலான 34 திட்டப்பணிகள் முடிக்கப்பட்டுள்ளன. மீதமுள்ள பணிகள் விரைந்து முடித்திட நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.அதன்படி, சிறப்பு பகுதி மேம்பாட்டு திட்டத்தின் கீழ் திருவில்லிபுத்தூர் வட்டார பகுதி விழுப்பனூர் ஊராட்சியில் ரூ.37.83 இலட்சம் மதிப்பில் கட்டப்பட்டுள்ள தடுப்பணைகள், அத்திக்குளம்-செங்குளம் கிராமத்தில் ரூ.20 இலட்சம் மதிப்பில் கட்டப்பட்டுள்ள அங்கன்வாடி மையம் ஆகியவை ஆய்வு செய்யப்பட்டது என தெரிவித்தார்.இந்த ஆய்வின் போது, பணிகள் அரசின் விதிமுறைகளுக்கு உட்பட்டு தரமான முறையில் மேற்கொள்ளப்படுகிறதா என்பது குறித்தும், பணிகள் அனைத்தும் நிர்ணயிக்கப்பட்ட காலக்கெடுவிற்குள் தரத்துடன் நிறைவு செய்யப்பட வேண்டும் எனவும், பொதுமக்களின் தேவைகளை கருத்தில் கொண்டு, திட்டத்தின் முழுப் பயனும் மக்களுக்கு கிடைக்கும் வகையில் பணிகளை விரைந்து முடித்திட வேண்டும் எனவும் அறிவுறுத்தினார்.இந்த ஆய்வின் போது, திட்ட இயக்குநர்(மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை) திருமதி வானதி, வேளாண்மை பொறியியல் துறை செயற்பொறியாளர்(சிறப்பு பகுதி மேம்பாட்டு திட்டம், மதுரை) திரு.ரமேஷ்குமார், திருவில்லிபுத்தூர் வட்டாட்சியர் திரு.அருளானந்தம், தொடர்புடைய அரசுத்துறை அலுவலர்கள், பொறியாளர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.
மத்திய அரசின் தொழிலாளர் மற்றும் வேலைவாய்ப்பு அமைச்சகம், சுற்றுலா மற்றும் அதனுடன் தொடர்புடைய துறைகளில் பணிபுரியும் தகுதியுடைய அமைப்புசாரா தொழிலாளர்களுக்கு பிரதம மந்திரி ஷ்ரம் யோகி மாந்தன் (Pradhan MantriShram Yogi Maandhan – PM-SYM) என்ற ஓய்வூதியத்திட்டத்தை செயல்படுத்தி வருகிறது. இத்திட்டத்தின் மூலம் அவர்களின் சமூகப்பாதுகாப்பும், பொருளாதார நிலைத்தன்மையும் உறுதி செய்யப்படுகிறது.பிரதம மந்திரி ஷ்ரம் யோகி மாந்தன் (Pradhan MantriShram Yogi Maandhan – PM-SYM) திட்டம் என்பது 18 முதல் 40 வயது வரையிலான அமைப்புசாரா தொழிலாளர்களுக்கான இந்திய அரசின் பங்களிப்பு அடிப்படையிலான ஓய்வூதியத்திட்டமாகும். இத்திட்டத்தில் மேற்கண்ட தகுதியுடைய பயனாளிகள் மாதந்தோறும் நிர்ணயிக்கப்பட்ட தொகையை முறையாக செலுத்தி வந்தால், இந்திய அரசும் அதே அளவு இணைப்பங்களிப்பை வழங்கும். இதன் மூலம், 60 வயதை அடைந்த பின்னர் மாதந்தோறும் ரூ.3,000/- உறுதியான ஓய்வூதியம் பெறும் வசதி வழங்கப்படுகிறது.சுற்றுலா வழிகாட்டிகள்(Tourist Guides), சுற்றுலா ஒருங்கிணைப்பாளர்கள் (Facilitators), சுற்றுலா வாகனஓட்டுநர்கள் (Tourist Transport Operators) மற்றும் போக்குவரத்து சேவை வழங்குநர்கள், விடுதி மற்றும் விருந்தோம்பல்துறை பணியாளர்கள் (Hospitality Workers), துப்புரவுப் பணியாளர்கள் (House Keeping Staffs), கைவினைக் கலைஞர்கள் (Artisans), தெருவோர வியாபாரிகள் (Street Vendors), உணவக மற்றும் உணவுச் சேவை வழங்குநர்கள் (Hotel Workers). மேலும் சுற்றுலாத்துறையுடன் தொடர்புடைய பிறசேவை வழங்குநர்கள் ஆகியோர் இத்திட்டத்தின் கீழ் பயனடையத் தகுதியுடையவர்களாவர்.எனவே, விருதுநகர் மாவட்டத்திலுள்ள சுற்றுலா சங்கங்கள், விடுதி உரிமையாளர்கள், பயண முகவர்கள், சுற்றுலா ஏற்பாட்டாளர்கள் மற்றும் சுற்றுலாத்துறையுடன் தொடர்புடைய அனைத்து பங்குதாரர்களும், இத்திட்டம் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்திடவும், தகுதியுடைய தொழிலாளர்கள் பதிவு செய்வதற்கு தேவையான ஒத்துழைப்பை வழங்கிடவும்,தகுதியுடைய அனைத்து தொழிலாளர்களும் தங்களது ஆதார் அட்டை, சேமிப்பு வங்கி கணக்குப் புத்தகம் (Bank Passbook) மற்றும் கைப்பேசி எண்ணுடன், அருகிலுள்ள பொது சேவை மையத்தை (Common Service Centre - CSC) அணுகி, இத்திட்டத்தில் பதிவு செய்து பயன் பெறலாம்.மேலும், விபரங்களுக்கு சுற்றுலா அலுவலர், சுற்றுலா அலுவலகம், அறை எண்.522, 5-வது தளம், புதிய மாவட்ட ஆட்சியரகம், அல்லது 7397715688 என்ற கைபேசி எண்ணிலோ தொடர்பு கொள்ளலாம் என மாவட்ட ஆட்சித்தலைவர் மரு.என்.ஓ.சுகபுத்ரா .I A S., அவர்கள் தெரிவித்துள்ளார்.
சட்டமன்றத் தேர்தலில் பயன்படுத்தப்பட்ட VVPAT - வாக்குப்பதிவு இயந்திரத்தில் மீதமுள்ள paper roll - களை அகற்றும் பணிக்காக மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் வைக்கப்பட்டுள்ள பாதுகாப்பு கிட்டங்கியினை அங்கீகரிக்கப்பட்ட அனைத்து கட்சி பிரமுகர்கள் முன்னிலையில் மாவட்ட தேர்தல் அலுவலர்/ மாவட்ட ஆட்சித்தலைவர் மரு.என்.ஓ.சுகபுத்ரா, I A S, அவர்கள் (06.08.2026) திறந்து வைத்தார்.தமிழக சட்டமன்ற பொதுத் தேர்தல் -2026-இல், விருதுநகர் மாவட்டத்திற்குட்பட்ட இராஜபாளையம், திருவில்லிபுத்தூர், சாத்தூர், சிவகாசி, விருதுநகர், அருப்புக்கோட்டை, திருச்சுழி ஆகிய 7 தொகுதிகளில் நடைபெற்றது.அதன்படி, இராஜபாளையம் சட்டமன்ற தொகுதியில் பயன்படுத்தப்பட்ட 269 விவிபேட் இயந்திரங்களும், திருவில்லிபுத்தூர் சட்டமன்ற தொகுதியில் பயன்படுத்தப்பட்ட 308 விவிபேட் இயந்திரங்களும், சாத்தூர் சட்டமன்ற தொகுதியில் பயன்படுத்தப்பட்ட 291 விவிபேட் இயந்திரங்களும், சிவகாசி சட்டமன்ற தொகுதியில் பயன்படுத்தப்பட்ட 290 விவிபேட் இயந்திரங்களும், விருதுநகர் சட்டமன்ற தொகுதியில் பயன்படுத்தப்பட்ட 281 விவிபேட் இயந்திரங்களும், அருப்புக்கோட்டை சட்டமன்ற தொகுதியில் பயன்படுத்தப்பட்ட 270 விவிபேட் இயந்திரங்களும், திருச்சுழி சட்டமன்ற தொகுதியில் பயன்படுத்தப்பட்ட 292 விவிபேட் இயந்திரங்கள் என மொத்தம் 2,001 விவிபேட் இயந்திரங்களில் உள்ள வெப்ப உணர் காகித சுருள்களை (VVPAT Paper Roll-Thermal Paper) அகற்றும் பணிகள் இன்று (06.08.2026) முதல் தொடங்கி 7 நாட்கள் நடைபெறவுள்ளது.மேலும், பழுதடைந்த 308 மின்னனு வாக்குப்பதிவு இயந்திரங்களை பெங்களுரூ, பெல் நிறுவனத்திற்கு அனுப்பிவைப்பதற்கான பணிகளும் தொடங்கி வைக்கப்பட்டுள்ளது என மாவட்ட தேர்தல் அலுவலர்/ மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் தெரிவித்தார்.
விருதுநகர் மாவட்டத்தில் சிவகாசி, அருப்புக்கோட்டை மற்றும் சாத்தூர் வருவாய் கோட்டங்களில் 18.08.2026 அன்று முற்பகல் 11.00 மணி அளவில் கோட்ட அளவிலான விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் உதவி ஆட்சியர் சிவகாசி, வருவாய் கோட்டாட்சியர் அருப்புக்கோட்டை மற்றும் சாத்தூர் அவர்களின் தலைமையில் கோட்டாட்சியர் அலுவலகத்தில் நடைபெற உள்ளது.கோட்ட அளவிலான கூட்டத்தில் விவசாய பெருமக்கள் கலந்து கொள்வதுடன், விவசாயம் மற்றும் தனி நபர் தொடர்பான மனுக்களை வருவாய் கோட்டாட்சியர்களிடம் நேரடியாக அளித்து தீர்வு காணவும், வட்டார அளவிலான விவசாயம் மற்றும் விவசாயம் சாராத மனுக்களுக்கு விரைந்து தீர்வு காணப்பட்டு, அந்த மனு மீதான நடவடிக்கை விபரத்தினை மனுதாரருக்கு தெரிவித்திடவும் அனைத்து துறை அலுவலர்களை மாவட்ட ஆட்சித்தலைவர் மரு.என்.ஓ.சுகபுத்ரா, I A S.,அவர்கள் அறிவுறுத்தியுள்ளார்.
விருதுநகர் மாவட்டம், திருவில்லிபுத்தூர் வட்டம் மற்றும் நகரில் அமைந்துள்ள ஸ்ரீ அருள்மிகு நாச்சியார் (ஆண்டாள்) திருக்கோவில் 108 வைணவத் திருத்தலங்களில் பிரச்சித்தி பெற்ற பிரார்த்தனை திருத்தலமாகும். இத்திருக்கோயிலில் ஆடிப்பூரத் திருவிழா மிகவும் பிரசித்தி பெற்ற திருவிழாவாகும். இத்திருவிழா 06.08.2026 முதல் 14.08.2026 வரை நடைபெறுகிறது. 14.08.2026 (வெள்ளிக்கிழமை) அன்று திருத்தேரோட்டம் நடைபெறவுள்ளது.அதனை முன்னிட்டு விருதுநகர் மாவட்ட ஆட்சியர் அவர்களின் உத்தரவின் பேரில் 14.08.2026 (வெள்ளிக்கிழமை) அன்று விருதுநகர் மாவட்டம் முழுமைக்கும் உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்படுகிறது. அதனை ஈடுசெய்யும் விதமாக ஆகஸ்ட் மாதத்தின் 5 வது சனிக்கிழமை (29.08.2026) அன்று பணி நாளாக அறிவிக்கப்பட்டுள்ளது என மாவட்ட ஆட்சித்தலைவர் மரு.என்.ஓ.சுகபுத்ரா,I A S., அவர்கள் தெரிவித்துள்ளார்.
விருதுநகர் மாவட்டம், தாணிப்பாறையில் சதுரகிரி சுந்தரமகாலிங்கம் திருக்கோவில் ஆடி அமாவாசை திருவிழாவினை முன்னிட்டு மேற்கொள்ளப்பட்டு வரும் முன்னேற்பாடு பணிகளை மாவட்ட ஆட்சித்தலைவர் மரு.என்.ஓ.சுகபுத்ரா,I A S., அவர்கள் (05.08.2026) பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.அருள்மிகு சதுரகிரி சுந்தரமகாலிங்கம் திருக்கோவில் ஆடி அமாவாசை திருவிழாவை முன்னிட்டு, ஏராளமான பக்தர்கள் வந்து பங்கேற்பார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.எனவே, பக்தர்களுக்கு தேவையான அனைத்து முன்னேற்பாடுகளும் தயாராக இருக்க வேண்டும் எனவும், பொதுமக்கள் மற்றும் வயதானவர்களுக்கு தேவையான மருத்துவ உதவிகளை உடனுக்குடன் வழங்க சுகாதாரத் துறையின் மூலம் மருத்துவர்கள் மற்றும் மருத்துவப் பணியாளர்களுடன் கூடிய மருத்துவக் குழுக்கள் மற்றும் ஆம்புலன்ஸ் வாகனங்கள் எவ்வித இடையூறுமின்றி செல்வதற்கு ஏற்றவாறு பாதைகளை அமைத்திட வேண்டும். திருவிழாவிற்கு வருகின்ற பொதுமக்கள் மற்றும் பக்தர்களுக்கு தேவையான குடிநீர் வசதிகளை தேவையான இடங்களில் ஏற்படுத்தி வைக்க வேண்டும். பொதுமக்களுக்கு தேவையான கழிப்பிட வசதிகளும், தற்காலிக கழிப்பிட வசதிகளையும் அமைத்திட வேண்டும். பொதுமக்களின் கூட்ட நெரிசலை கட்டுப்படுத்தி, ஒழுங்குபடுத்தி தரிசனம் செய்திட காவல் துறை நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும். மேலும், தற்காலிக கடைகள் மற்றும் அன்னதானம் மூலம் பொதுமக்களுக்கு வழங்கும் உணவு வகைகள் உணவு பாதுகாப்பு உரிமம் பெற்று உரிய பாதுகாப்பு நெறிமுறைகளை பின்பற்றி வழங்கப்படுகிறதா என ஆய்வாளர்கள் சுழற்சி முறையில் கண்காணித்து அதனை உறுதி செய்திட வேண்டும். வனத்துறையின் மூலம் சுற்றுச்சூழலை மாசுபடுத்தாத வண்ணம் பொதுமக்களுக்கு விழிப்புணர்வு அறிவிப்புகள் வழங்க வேண்டும். பக்தர்கள் வனவிலங்குகள் மற்றும் சுற்றுச்சூழலை கருத்தில் கொண்டு நெகிழி (Plastic) பைகளைப் பயன்படுத்துவதை தவிர்த்து அதற்குப் பதிலாக மஞ்சப்பை அல்லது மக்கும் காகித பைகளைப் பொதுமக்கள் பயன்படுத்திட வேண்டும். தாணிப்பாறை அடிவாரத்தில் சேரும் குப்பைகளை உடனுக்குடன் அகற்றுவதற்கு தேவையான துப்புரவு பணியாளர்கள் பணியாற்றிட இருக்க வேண்டும். பொதுமக்கள் தங்களுக்குத் தேவையான சேவைகளை பெறுவதற்கு ஏதுவாக அறிவிப்பு பலகைகள் ஆங்காங்கே வைக்கப்பட வேண்டும். சதுரகிரிக்கு செல்லும் பக்தர்களின் வசதிக்கேற்ப மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து சிறப்பு பேருந்துகள் இயக்க தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகம் மூலம் நடவடிக்கையும், வெளியூர் பேருந்துகள், தனிநபர்களுக்கு சொந்தமான வாகனங்கள் போன்ற அனைத்து வாகனங்களையும் நிறுத்துவதற்கு வசதியாக தற்காலிக வாகன நிறுத்தங்களும், தேவையான இடங்களில் CCTV-கள் பொருத்தப்பட்டு கண்காணிப்பாளர்களால் கண்காணிக்கப்பட வேண்டும்.எனவே தொடர்புடைய அரசு துறைகள் ஒருங்கிணைந்து செயல்பட்டு அனைத்து பணிகளையும் திருவிழாவிற்கு முன்னதாக முடிக்க வேண்டும் எனவும், சதுரகிரிக்கு செல்லும் பக்தர்கள் மாவட்ட நிர்வாகத்தின் அறிவுரைகளை பின்பற்றி பாதுகாப்பான முறையில் வனப்பகுதிக்குள் சென்று சாமி தரிசனம் செய்து மாவட்ட நிர்வாகத்திற்கு ஒத்துழைப்பு தர வேண்டும் என மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் தெரிவித்தார்.இந்த ஆய்வின் போது, மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.கௌதம் கோயல்,இ.கா.ப., திட்ட இயக்குநர் (மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை) திருமதி வானதி, சிவகாசி சார் ஆட்சியர் திரு.முகமது இர்பான்,I A S., வட்டாட்சியர், வட்டார வளர்ச்சி அலுவலர்கள் உட்பட அரசு அலுவலர்கள் பலர் கலந்து கொண்டனர்.
விருதுநகர் மாவட்டம் வெம்பக்கோட்டை ஊராட்சி ஒன்றியத்துக்கு உட்பட்ட கோட்டைப்பட்டி ஊராட்சியில் (05.08.2026) செய்தி மக்கள் தொடர்பு துறையின் சார்பாக வைக்கப்பட்ட தமிழக அரசின் சாதனைகள் விளக்க புகைப்பட கண்காட்சிகளை பொதுமக்கள் பார்வையிட்டனர்.