விருதுநகர் மாவட்டத்தில் மழையின் அளவு குறைவாக காணப்படுவதால் வறண்டு காணப்படுகிறது. அதனால் பொருளாதாரத்திலும் பின்தங்கி காணப்படுகிறது.எனவே, மழை பொழிகின்ற பொழுது நிலத்தில் வழிந்தோடுகின்ற மழைநீரை வீடுகளில் உள்ள மழைநீர் சேகரிப்பு தொட்டிகள் அல்லது பண்ணைக்குட்டைகளில் மழைநீரை சேகரித்து வைப்பதன் மூலம் நிலத்தடி நீரின் அளவு உயர்வதற்கு பயன்படுகிறது. இதன் மூலம் சேமிக்கப்படும் மழைநீர்கள் பயிர்கள் நீரில்லாமல் வறட்சியால் வாடும் நிலை ஏற்படும் பொழுது பயிர்களுக்கு தக்க நேரத்தில் உயிர் நீர் பாசனம் மற்றும் துணை பாசனம் அளித்து பயிர்கள் காக்கப்பட்டு உரிய மகசூல் பெற வழி வகை செய்வதற்கு இந்த பண்ணைக்குட்டைகள் பயன்படுகின்றன. விருதுநகர் மாவட்டத்திற்கு தேசிய பேரிடர் தணிப்பு நிதியின் கீழ் வறட்சி பாதிப்பு குறைப்பிற்கான ஊக்குவிப்பு உதவி திட்டத்தின் கீழ் 2026-27 ஆம் ஆண்டிற்கு 40 எண்கள் பண்ணைக்குட்டைகள் ரூ.56.00 இலட்சம் மதிப்பீட்டில் அமைக்கப்பட உள்ளது. எனவே, இத்திட்டத்தின் கீழ் பயன்பெற விருதுநகர் வட்டாரம் வளையபட்டி, இ.குமாரலிங்கபுரம் கிராமத்தில் உள்ள விவசாயிகளும், அருப்புக்கோட்டை வட்டாரம் கோபாலபுரம், டி.கொப்புசித்தம்பட்டி கிராமத்தில் உள்ள விவசாயிகளும், காரியாபட்டி வட்டாரம் பாம்பாட்டி, அழகியநல்லூர் கிராமத்தில் உள்ள விவசாயிகளும், திருச்சுழி வட்டாரம் மயிலி, கீழ்குடி, வடக்குநத்தம் கிராமத்தில் உள்ள விவசாயிகளும், நரிக்குடி வட்டாரம் நத்தைக்குளம், சொட்டமுறி, ஆணைக்குளம், அகத்தாக்குளம் கிராமத்தில் உள்ள விவசாயிகளும், திருவில்லிப்புத்தூர் வட்டாரம் கீழராஜகுலராமன், அயன்நாச்சியார்கோவில் கிராமத்தில் உள்ள விவசாயிகளும், வத்ராப் வட்டாரம் குன்னூர், சுந்தரபாண்டியம் கிராமத்தில் உள்ள விவசாயிகளும், இராஜபாளையம் வட்டாரம் கோபாலபுரம், குறிச்சியார்பட்டி கிராமத்தில் உள்ள விவசாயிகளும், வெம்பக்கோட்டை வட்டாரம் வெம்பக்கோட்டை, சுப்பிரமணியபுரம் கிராமத்தில் உள்ள விவசாயிகளும், சாத்தூர் வட்டாரம் போத்திரெட்டியபட்டி, பெத்துரெட்டியபட்டி கிராமத்தில் உள்ள விவசாயிகளும், சிவகாசி வட்டாரம் வெள்ளுர், எரிச்சநத்தம் ஆகிய கிராமங்களில் ஆர்வம் உள்ள அனைத்து விவசாயிகளும் தங்களுடைய நில ஆவணங்களுடன் கீழ்க்கண்ட அலுவலகத்தினையோ அல்லது வட்டார பொறியாளர்களையோ தொடர்பு கொண்டு விண்ணப்பத்தினை அளிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது. மேலும் விபரங்களுக்கு விருதுநகர், காரியாபட்டி, அருப்புக்கோட்டை, திருச்சுழி மற்றும் நரிக்குடி வட்டார விவசாயிகள் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் உள்ள வேளாண்மைப் பொறியியல் துறை, உதவி செயற் பொறியாளர் (வே.பொ) அலுவலகத்தையும் (9786390851), திருவில்லிப்புத்தூர், இராஜபாளையம், வத்திராயிருப்பு, சிவகாசி, வெம்பக்கோட்டை மற்றும் சாத்தூர் வட்டார விவசாயிகள் திருவில்லிபுத்தூர், வேளாண்மைப் பொறியியல் துறை, உதவி செயற்பொறியாளர்(வே.பொ) அலுவலகத்தையும் (9080084339) தொடர்பு கொள்ளலாம் என மாவட்ட ஆட்சித்தலைவர் மரு.என்.ஓ.சுகபுத்ரா I A S ., அவர்கள் தெரிவித்துள்ளார்.
தமிழ்நாடு முதலமைச்சர் திரு.ச.ஜோசப் விஜய் அவர்கள், சென்னை மாநிலக் கல்லூரியில் "போதைப் பொருட்கள் இல்லாத தமிழ்நாடு" மாநிலம் தழுவிய போதைபொருள் எதிர்ப்பு பெருந்திரள் உறுதிமொழி ஏற்பு நிகழ்வினை காணொலி காட்சி வாயிலாக தொடங்கி வைத்தார்.அதன் தொடர்ச்சியாக விருதுநகர் மாவட்டம், விருதுநகர் செந்தில் குமார நாடார் கல்லூரியில் மாவட்ட ஆட்சித்தலைவர் மரு.என்.ஓ.சுகபுத்ரா,I A S., அவர்கள் தலைமையில் (11.08.2026) மாணவ, மாணவியர்கள் விழிப்புணர்வு உறுதிமொழியினை ஏற்றுக் கொண்டனர்.அதன்படி, போதைப்பழக்கத்தால் ஏற்படும் தீய விளைவுகளை நான் முழுமையாக அறிவேன். நான் போதைப் பழக்கத்திற்கு ஆளாகமாட்டேன். மேலும் எனது குடும்பத்தினரையும், நண்பர்களையும் போதைப் பழக்கத்திற்கு ஆளாகாமல் தடுத்து அவர்களுக்கு அறிவுரைகளை வழங்குவேன். போதைப் பழக்கத்திற்குள்ளானவர்களை மீட்டெடுத்து அவர்களை நல்வழிப்படுத்த எனது பங்களிப்பை முழுமையாகத் தருவேன். போதைப்பொருட்களின் உற்பத்தி, நுகர்வு, பயன்பாடு ஆகியவற்றிற்கு எதிரான தடுப்பு நடவடிக்கைகளின் மூலம் போதைப் பொருட்களை தமிழ்நாட்டில் வேரறுக்க அரசுக்குத் துணை நிற்பேன். மாநிலத்தின் வளர்ச்சிக்கும் மக்களின் நல்வாழ்;விற்கும் நான் அர்ப்பணிப்புடன் பங்காற்றுவேன் என்று உளமார கூறுகின்றேன் என்ற உறுதிமொழியினை அனைவரும் எடுத்துக்கொண்டனர்.பின்னர், மாவட்டத்தில் 2025-2026 ஆம் ஆண்டு சிறந்த போதைப்பொருள் எதிர்ப்பு குழுக்களாக செயல்பட்டு கல்லூரி அளவில் முதல் மூன்று இடங்கள் பிடித்த விருதுநகர் வே.வெ.வன்னிய பெருமாள் மகளிர் கல்லூரி, சிவகாசி அய்யநாடார் ஜானகி அம்மாள் கல்லூரி மற்றும் சிவகாசி காளீஸ்வரி கல்லூரி,பள்ளி அளவில் முதல் மூன்று இடங்கள் பிடித்த விருதுநகர் சரஸ்வதி அம்மாள் லயன்ஸ் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி, தோணுகால் அரசு உயர்நிலைப்பள்ளி மற்றும் இராஜபாளையம் பி.ஏ.சி.எம் மேல்நிலைப்பள்ளி ஆகிய பள்ளி, கல்லூரிகளுக்கு ரூ.15 ஆயிரம், ரூ.10 ஆயிரம் மற்றும் ரூ.5 ஆயிரம் பரிசுத்தொகைக்கான காசோலைகள் மற்றும் பாராட்டுச் சான்றிதழ்களையும்,பள்ளிகள் அளவில் நாட்டு நலப்பணித் திட்டம் (National Service Scheme) மற்றும் தேசிய மாணவர் படை(NCC) உள்ளடக்கிய சிறந்த தன்னார்வலர்கள் குழுக்களாக செயல்பட்டு, முதலிடம் பிடித்த செம்பட்டி அரசு மேல்நிலைப்பள்ளி மற்றும் இராஜபாளையம் ந.அ.அன்னப்பராஜா நினைவு பள்ளி, இரண்டாமிடம் பிடித்த குல்லூர்சந்தை ஸ்ரீவீரப்பா வித்யாலயா மேல்நிலைப்பள்ளி மற்றும் சாத்தூர் எஸ்.எச்.என்.எட்வர்டு மேல்நிலைப்பள்ளி, மூன்றாமிடம் பிடித்த மல்லாங்கிணர் அரசு மேல்நிலைப்பள்ளி மற்றும் முத்துராமலிங்கபுரம் அரசு மேல்நிலைப்பள்ளி ஆகிய பள்ளிகளுக்கு தலா ரூ.7,500/-, ரூ.5000/- மற்றும் ரூ.2500/- பரிசுத்தொகைக்கான காசோலைகள் மற்றும் பாராட்டுச் சான்றிதழ்களையும்,என ஆக மொத்தம் 9 பள்ளிகள் மற்றும் 3 கல்லூரிகளுக்கு ரூ.90,000/- மதிப்பிலான பரிசுத்தொகைகள் மற்றும் பாராட்டுச் சான்றிதழ்களை மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் வழங்கினார்.இந்நிகழ்ச்சியில், காவல் கண்காணிப்பாளர் திரு.கௌதம் கோயல் இ.கா.ப., உதவி ஆணையர்(கலால்) திரு.சு.சோமசுந்தர சீனிவாசன், மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலர் திருமதி இல.மீனாட்சி, கல்லூரி முதல்வர், பேராசிரியர்கள், மாணவ, மாணவியர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.
மதுரை மாவட்டம், பேரையூர் வட்டம், சாப்டூர் கிராமம், சதுரகிரி அருள்மிகு சுந்தரமகாலிங்கசுவாமி திருக்கோவிலில் அமைந்துள்ள சதுரகிரி மலை ஒதுக்கப்பட்ட வனத்தில் நேற்று 10.08.2026 காட்டுத் தீ ஏற்பட்டது. அதனை வனத்துறையினர் கட்டுப்படுத்த நடவடிக்கை மேற்கொண்ட நிலையில், 11.08.2026 சதுரகிரி அருள்மிகு சுந்தரமகாலிங்கசுவாமி திருக்கோவிலுக்கு அனுமதி இல்லை என பத்திரிக்கைச் செய்தி வெளியிடப்பட்டது. அதனைத் தொடர்ந்து 11.08.2026 காட்டுத் தீ முழுமையாக கட்டுப்படுத்தப்பட்டு விட்டதாக வனத்துறையினரிடமிருந்து தகவல் வரப்பெற்றதால் சதுரகிரி அருள்மிகு சுந்தரமகாலிங்கசுவாமி திருக்கோவிலுக்கு நாளை 12.08.2026 தாணிப்பாறை வழியாக மட்டும் செல்வதற்கு அனுமதி வழங்கி இன்று 11.08.2026 பத்திரிக்கைச் செய்தி வெளியிடப்பட்டிருந்தது. இந்நிலையில் இன்று 11.08.2026 இரவு சுமார் 07.00 மணியளவில் காட்டுத் தீ மீண்டும் பரவியுள்ளதாக விருதுநகர் மற்றும் மதுரை மாவட்ட கண்காணிப்பாளர்களிடமிருந்து தகவல் வரப்பெற்றது. மேலும் காட்டுத்தீயை கட்டுப்படுத்த வனத்துறை மற்றும் காவல்துறையினர் உரிய நடவடிக்கைகள் எடுத்து வருவதாகவும், நிலைமையை தொடர்ந்து கண்காணித்து வருவதாகவும், பொதுமக்கள் மற்றும் பக்தர்களின் உயிர் மற்றும் பாதுகாப்பு நலன் கருதி நாளை 12.08.2026 அருள்மிகு சுந்தரமகாலிங்கசுவாமி திருக்கோவிலுக்கு செல்வதற்கு பொதுமக்கள் மற்றும் பக்தர்களை அனுமதிக்க வேண்டாம் எனவும் காவல்துறை மூலம் தெரிவிக்கப்பட்டுள்ளது. தற்போது நிலவும் காட்டுத்தீயினால் பொதுமக்கள் மற்றும் பக்தர்களின் உயிர் மற்றும் பாதுகாப்பிற்கு ஏற்படக்கூடிய அபாயத்தை கருத்தில் கொண்டு, இயல்பு நிலைமை திரும்பும் வரை நாளை 12.08.2026 சதுரகிரி அருள்மிகு சுந்தரமகாலிங்கசுவாமி திருக்கோவிலுக்கு பொதுமக்கள் மற்றும் பக்தர்கள் செல்வதற்கு அனுமதி இல்லை என விருதுநகர் மாவட்ட ஆட்சித்தலைவரால் தெரிவிக்கப்பட்டுள்ளது. நிலைமை தொடர்ந்து கண்காணிக்கப்பட்டு வருகிறது. நிலைமை சீரான பிறகு பொதுமக்கள் மற்றும் பக்தர்களுக்கு சதுரகிரி அருள்மிகு சுந்தரமகாலிங்கசுவாமி திருக்கோவிலுக்கு செல்வதற்கு அனுமதி குறித்து அறிவிக்கப்படும் எனவும் விருதுநகர் மாவட்ட ஆட்சித்தலைவரால் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சதுரகிரி அருள்மிகு சுந்தரமகாலிங்கம் திருக்கோவிலில் நடைபெற்று வரும் ஆடி அமாவாசை திருவிழாவை முன்னிட்டு, ஸ்ரீவில்லிபுத்தூர் வனக்கோட்டத்திற்கு உட்பட்ட தாணிப்பாறை பீட் மலைப்பகுதியில் 10.08.2026 அன்று காட்டுத்தீ பரவியது. தற்போது அந்தத் தீ முழுவதும் அணைக்கப்பட்டுவிட்டது என வனத்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. எனவே 12.08.2026 மற்றும் 13.08.2026 ஆகிய இரண்டு நாட்கள் ஆடி அமாவாசை திருவிழாவினை முன்னிட்டு, பொதுமக்கள் மற்றும் பக்தர்களுக்கு சதுரகிரி அருள்மிகு சுந்தரமகாலிங்கசுவாமி திருக்கோயில் செல்வதற்கு தாணிப்பாறை பாதை வழியாக மட்டுமே அனுமதி அளிக்கப்பட்டுள்ளது என மாவட்ட ஆட்சித்தலைவர் மரு.என்.ஓ.சுகபுத்ரா I A S.,அவர்கள் உத்தரவிட்டுள்ளார்.
விருதுநகர் மாவட்டத்தில் ஆகஸ்ட் -2026 மாதத்திற்கான விவசாயிகள் குறை தீர்க்கும் நாள் கூட்டம் 21.08.2026 அன்று காலை 11.00 மணியளவில், விருதுநகர் புதிய மாவட்ட ஆட்சியர் அலுவலக மக்கள் கூட்ட அரங்கில் நடைபெறவுள்ளது. எனவே, விவசாய பெருமக்கள் கலந்து கொள்வதுடன் மட்டுமல்லாமல் விவசாயம் தொடர்பான பொதுவான கோரிக்கைகளை மட்டும் மனு மூலம் அளிக்கவும், விவசாயிகள் வட்டாரத்திற்கு இருவர் வாரியாக பொதுவான கோரிக்கைகளை மட்டும் விவாதிக்கவும், சிறந்த முறையில் விவசாயிகள் குறை தீர்க்கும் நாள் கூட்டத்தினை நடத்திட முழு ஒத்துழைப்பு தர வேண்டும் என மாவட்ட ஆட்சித்தலைவர் மரு.என்.ஓ.சுகபுத்ரா, I A S.,அவர்கள் தெரிவித்துள்ளார்.
மாவட்ட ஆட்சியர் மற்றும் மாவட்ட அளவிலான அலுவலர்கள் மக்களை தேடிச்சென்று குறைகளைக் கேட்டறியவும், பல்வேறு துறைகளின் மூலம் செயல்படுத்தப்படும் திட்டங்கள், செயல்பாடுகளை விரைவுபடுத்தவும் மற்றும் வழங்கப்படும் சேவைகளின் தரத்தை மேம்படுத்தவும், மக்களை நாடி மக்கள் குறைகளைக் கேட்டு, உடனுக்குடன் தீர்வு காண அரசு இயந்திரம் களத்திற்கே சென்று ஆய்வு செய்திட ‘உங்களைத் தேடி உங்கள் ஊரில்” என்ற புதிய திட்டம் தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களால் அறிவிக்கப்பட்டுள்ளது.அதன்படி, விருதுநகர் மாவட்டம், திருவில்லிபுத்தூர் வட்டத்தில் “உங்களைத் தேடி உங்கள் ஊரில்” என்ற புதிய திட்டம் முகாமானது 19.08.2026 அன்று காலை 09.00 மணி முதல் மறுநாள் 20.08.2026 அன்று காலை 09.00 மணி வரை நடைபெறவுள்ளது.19.08.2026 அன்று காலை 09.00 மணி முதல் மாலை 04.30 மணி வரை மாவட்ட ஆட்சியர் மற்றும் மாவட்ட அளவிலான அனைத்து மாவட்ட நிலை அலுவலர்களும் கள ஆய்வில் ஈடுபட்டு, திருவில்லிபுத்தூர் வட்டத்தில் உள்ள மக்களின் குறைகளைக் கேட்டறிந்து அரசின் அனைத்து நலத்திட்டங்களும், சேவைகளும் தங்கு தடையின்றி சென்றடைவதை ஆய்வு செய்ய உள்ளனர்.அதன் ஒரு பகுதியாக, 19.08.2026 மாலை 03.00 மணி முதல் 04.00 மணி வரை திருவில்லிபுத்தூர், நகராட்சி ஆணையாளர் அலுவலகத்தில் உள்ள நகர் மன்ற கூட்டரங்கில் வைத்து மக்களை சந்தித்து குறைகள் கேட்பதும், மாலை 04.00 மணி முதல் முதல்நிலை அலுவலர்களுடன் திட்டப்பணிகள் குறித்து ஆய்வு செய்து இரவில் தங்கி பணியாற்றவும் உள்ளனர். எனவே, திருவில்லிபுத்தூர் வட்டத்தில் உள்ள பொதுமக்கள் தங்களது பகுதிகளில் உள்ள குறைகளை அரசு அலுவலர்களிடம் நேரில் தெரிவித்து, அரசின் திட்டங்கள் அனைத்தும் தங்கள் பகுதிக்கு முழுமையாக கிடைத்திட வழிவகை செய்யும் இந்த அரிய வாய்ப்பினை பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என மாவட்ட ஆட்சித்தலைவர் மரு.என்.ஓ.சுகபுத்ரா,I A S., அவர்கள் தெரிவித்துள்ளார்.
விருதுநகர் மாவட்டம், அருப்புக்கோட்டை வட்டம் சூலக்கரை அரசு மேல்நிலைப் பள்ளியில் "தேசிய குடற்புழு நீக்க நாள்" முன்னிட்டு மாவட்ட ஆட்சித்தலைவர் மரு.என்.ஓ.சுகபுத்ரா I A S., அவர்கள் (10.08.2026) குடற்புழு நீக்க மாத்திரைகளை மாணவர்களுக்கு வழங்கினார்.பின்னர், "தேசிய குடற்புழு நீக்க நாள்" முன்னிட்டு விழிப்புணர்வு உறுதிமொழியினை மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் தலைமையில் அனைவரும் ஏற்றுக் கொண்டனர்.தமிழக அரசின் மக்கள் நல்வாழ்வு மற்றும் குடும்ப நலத்துறையின் சார்பாக குழந்தைகளுக்கு குடற்புழு நீக்கும் திட்டத்தின்கீழ் "தேசிய குடற்புழு நீக்க நாள்" இன்று(10.08.2026) அனுசரிக்கப்படுகிறது. இத்திட்டத்தின் கீழ் மாவட்டத்தில் 1 வயது முதல் 19 வயது வரை உள்ள சுமார் 5,78,289 குழந்தைகள் மற்றும் 20 முதல் 30 வயது வரை உள்ள 1,33,116 பெண்களுக்கும் என மொத்தம் 7,11,405 நபர்களுக்கு குடற்புழு நீக்க மாத்திரைகள் வழங்கப்படுகிறது. குடற்புழு நீக்க மாத்திரைகள் வழங்கும் முகாமானது 292 கிராம சுகாதார செவிலியர்கள், 1504 அங்கன்வாடி பணியாளர்கள் மற்றும் 3280 பள்ளி ஆசிரியர்கள் மூலம் நடத்தப்படுகிறது. மேலும் இம்முகாமில் 11 நடமாடும் மருத்துவக் குழுக்கள், 22 ராஷ்ட்ரிய பால் ஸ்வஸ்திய காரியகரம் (Rashtriya Bal Swasthya Karyakram - RBSK) குழுக்களும் மற்றும் 11 வட்டார மருத்துவ அலுவலர்கள் மற்றும் இரண்டாம் நிலை அலுவலர்கள் இம்முகாமில் பார்வையாளராக ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். சுகாதார வசதிகள் குறைவாக உள்ள இடங்களில் மண்மூலம் குடற்புழு ஒட்டுண்ணிகளால் குடற்புழு தொற்று பரவுவதால், குழந்தைகளின் வளர்ச்சியிலும் மற்றும் உடல்நலனிலும் குறைபாட்டை ஏற்படுத்துகிறது. இதனால் அவர்களுக்கு இரத்தசோகை ஏற்படுகிறது. இதனால் குழந்தைகளுக்கு ஊட்டச்சத்துக் குறைபாடு ஏற்படுகிறது. எனவே. திறந்தவெளி கழிப்பிடத்தை பயன்படுத்தாமலும் நமது சுற்றுப்புறத்தை தூய்மையாக வைத்துக் கொள்வதனாலும் இரத்தசோகை வராமல் தடுக்க முடியும்.மேலும், இம்மாத்திரைகளை தவறாமல் உட்கொள்ளுமாறும் மற்றும் இதனை மருத்துவர்களும், பள்ளி ஆசிரியர்களும் உறுதி செய்ய வேண்டும் எனவும், மேலும் விடுபட்ட சிறுவர், சிறுமியர்கள் மற்றும் பெண்களுக்கு வரும் 17.08.2026 அன்று குடற்புழு நீக்க மாத்திரை வழங்கப்படும் எனவும் மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் தெரிவித்தார்.இந்நிகழ்வில், மாவட்ட சுகாதார அலுவலர்(விருதுநகர்) மரு.வே.யசோதாமணி, மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் திரு.கு.அரவிந்தன், மருத்துவ அலுவலர்கள், தலைமையாசிரியர், பள்ளி ஆசிரியர்கள் மற்றும் மாணவ, மாணவியர்கள் கலந்து கொண்டனர்.
விருதுநகர் மாவட்ட ஆட்சியர் அலுவலகக் கூட்டரங்கில் (10.08.2026) நடைபெற்ற மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் ரூ.4.62 இலட்சம் மதிப்பீட்டிலான நலத்திட்ட உதவிகளை மாவட்ட ஆட்சித்தலைவர் மரு.என்.ஓ.சுகபுத்ரா I A S ., அவர்கள் வழங்கினார்.இக்கூட்டத்தில், பொதுமக்கள் மற்றும் மாற்றுத்திறனாளிகளிடமிருந்து இலவச வீட்டுமனைப்பட்டா, பட்டா மாறுதல், புதிய குடும்ப அட்டை, வேலைவாய்ப்பு, விபத்து நிவாரணம், மாற்றுத்திறனாளிகள் மற்றும் நலிந்தோர் நல உதவித்திட்டங்கள், விதவை உதவித்தொகை, திருமண உதவித்தொகை மற்றும் முதியோர் உதவித்தொகை உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் குறித்தான மனுக்கள் பெறப்பட்டன.மேலும், மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் மாற்றுத்திறனாளிகள் மற்றும் மூத்த குடிமக்களுக்காக அமைக்கப்பட்டுள்ள சிறப்பு அமருமிடத்திற்கு நேரடியாகச் சென்று, அவர்களின் கோரிக்கை மனுக்களைப் பெற்று பரிசீலித்தார். பொதுமக்களிடமிருந்து பெறப்பட்ட இம்மனுக்கள் அனைத்தையும் சம்பந்தப்பட்ட துறை அலுவலர்களிடம் ஒப்படைத்து, அவற்றின் மீது உரிய மற்றும் விரைவான நடவடிக்கை எடுக்கவும், முதலமைச்சரின் தனிப்பிரிவு மனுக்கள் மீது கூடுதல் கவனம் செலுத்தி விரைந்து தீர்வு காணவேண்டும் என உத்தரவிட்டார்.தொடர்ந்து, பொதுமக்களிடமிருந்து 641 மனுக்கள் பெறப்பட்டன. இம்மனுக்கள் சம்மந்தப்பட்ட துறை அலுவலர்களிடம் உரிய நடவடிக்கை எடுக்க ஒப்படைக்கப்பட்டது.இக்கூட்டத்தில், ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறை சார்பில் பணியின் போது உயிர்நீந்தவரின் வாரிசுதாரருக்கு கருணை அடிப்படையிலான பணி நியமன ஆணையினை வழங்கினார்மேலும், இக்கூட்டத்தில், மாற்றுத்திறனாளிகள் நலத்துறை சார்பில் 3 மாற்றுத்திறனாளிகளுக்கு ரூ.4.38 இலட்சம் மதிப்பிலான நவீன செயற்கை கால்களையும், 1 மாற்றுத்திறானிகளின் உபயோகத்திற்காக ரூ.24,000/- மதிப்பீட்டிலான நான்கு சக்கர நாற்காலிகள் என மொத்தம் ரூ.4.62 இலட்சம் மதிப்பீட்டிலான நலத்திட்ட உதவிகளை மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் வழங்கினார்.அதனைத் தொடர்ந்து, மாவட்ட ஆட்சித்தலைவர் பொதுமக்கள் எவ்வித சிரமமுமின்றி சேவைகளைப் பெறுவதை உறுதி செய்யுமாறு சம்பந்தப்பட்ட அலுவலர்களுக்கு அறிவுறுத்தினார்.இக்கூட்டத்தில், மாவட்ட வருவாய் அலுவலர் திருமதி ரா.ஆனந்தி, மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (பொது) திருமதி பிர்தௌஸ் பாத்திமா,ஆதி திராவிடர் நலத்துறை அலுவலர் திருமதி சாந்தி, பிற்படுத்தப்பட்டோர் மற்றும் மிகவும் பிற்படுத்தப்பட்டோர் நல அலுவலர் திரு.தேவசகாயம், மாவட்ட வழங்கல் அலுவலர் திரு.அமர்நாத், அரசுத் துறை அலுவலர்கள் மற்றும் பொதுமக்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.
விருதுநகர் மாவட்டம், மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில்(10.08.2026) வங்கிகளுக்கான கடன் திட்ட அறிக்கையினை மாவட்ட ஆட்சித்தலைவர் மரு.என்.ஓ.சுகபுத்ரா, I A S.,அவர்கள் வெளியிட்டார்.மாவட்டத்தின் முன்னோடி வங்கியான இந்தியன் ஓவர்சீஸ் வங்கி மற்றும் மாவட்ட வங்கிகள் ஒருங்கிணைப்புக் குழு சார்பாக விருதுநகர் மாவட்டத்தின் 2026-27 ஆண்டுக்கான கடன் திட்ட அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது. இதில், வங்கிகள் மூலமாக ரூ. 37,959.06 கோடி கடன் 2026-27 ஆண்டில் வழங்க இலக்கு நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. மேலும், மாவட்டத்தின் முன்னோடி வங்கியான இந்தியன் ஓவர்சீஸ் வங்கி, நபார்ட் வங்கியுடன் இணைந்து இந்த கடன் திட்ட அறிக்கையை வடிவமைத்துள்ளது. மத்திய, மாநில அரசுகளின் பல்வேறு திட்டங்களை அடிப்படையாக கொண்டு, பல்வேறு துறைகளில் வங்கிகள் கடன் வழங்கிட இத்திட்ட அறிக்கையில் வழி வகைகள் செய்யப்பட்டுள்ளன.கடன் திட்ட அறிக்கையில் முன்னுரிமை கடன்காளான வேளாண்மைக்கடனாக ரூ.16,648 கோடியும், சிறு, குறு, நடுத்தர தொழில் நிறுவனக் கடனாக ரூ.7,850 கோடியும், ஏற்றுமதி தொழில் சார்ந்த கடனாக ரூ.7.0 கோடியும், கல்வி கடனாக ரூ.41.0 கோடியும், வீடுகளுக்கான கடனாக ரூ.319.0 கோடியும், சமூக கட்டமைப்பிற்கான கடனாக ரூ.4.0 கோடியும், புதுப்பிக்கத்தக்க ஆற்றல் கடனாக ரூ.5.0 கோடியும் மற்றும் இதர கடனாக ரூ.482.0 கோடியும் என ஆக மொத்தம் ரூ.25,356 கோடியும் என நிர்ணயிக்கப்பட்டுள்ளது. பிற கடன்களான நகைக்கடன், தனிநபர் கடன், வாகனக் கடன் போன்றவற்றிற்கு ரூ.12,603 கோடியும் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.ஆக மொத்தம் 2026-27 ஆம் ஆண்டிற்கான வங்கிகள் மூலமாக ரூ.37,959.06 கோடி கடன் வழங்கிட திட்டமிடப்பட்டுள்ளது. கடந்த 2025-26 ஆம் ஆண்டில் ரூ.32,19 கோடி நிர்ணயிக்பட்டது. அதனை விட இவ்வாண்டு 18.54% கூடுதலாகும். வங்கிகள் பொதுமக்களின் தேவைகளையும், வளர்ச்சியினையும் கருத்தில் கொண்டு கடனுதவி வழங்கிட வேண்டும் என மாவட்ட ஆட்சித்தலைவர் தெரிவித்தார்.இந்நிகழ்ச்சியில், மாவட்ட வருவாய் அலுவலர் திருமதி ரா.ஆனந்தி, மாவட்ட முன்னோடி வங்கி மேலாளர் திரு.பாலசுப்பிரமணியன், மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் திருமதி பிர்தௌஸ் பாத்திமா, மாவட்ட வழங்கல் அலுவலர் திரு.அமர்நாத், உட்பட பலர் கலந்து கொண்டனர்.
விருதுநகர் மாவட்டத்தில், டாஸ்மாக் மதுபான சில்லறை விற்பனைக் கடைகள் (F.L -1), F.L -2 ஆகிய மதுபான உரிம ஸ்தலங்களை 2003ம் ஆண்டைய தமிழ்நாடு மதுபான சில்லறை விற்பனை விதிகளின் விதி 12 துணை விதி (1) The Tamil Nadu Liquor (Licence and Permit) Rules, 1981-ன்படி சுந்தர மகாலிங்கம் திருக்கோவில், ஆடி அமாவாசை திருவிழா நடைபெறுவதை முன்னிட்டு, 11.08.2026 மற்றும் 12.08.2026 ஆகிய இரண்டு தினங்களில் வத்திராயிருப்பில் உள்ள மதுபானக் கடை எண் 11872, மகாராஜாபுரம் கடை எண் 12022, வத்திராயிருப்பு ஹர்சினி ரெக்ரேசன் கிளப் மற்றும் ஜெயம் ரெக்ரேசன் கிளப், மகாராஜாபுரம் குயின் ரெக்ரேசன் கிளப் மற்றும் கூமாபட்டியில் உள்ள அயோத்தி ரெக்ரேசன் கிளப் ஆகிய 6 அரசு மதுபான கடைகள் மற்றும் ரெக்ரேசன் கிளப் ஆகிய கடைகளை தற்காலிகமாக மூடுவதற்கு மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் உத்தவிட்டுள்ளார்.மேலும், உத்தரவினை மீறி செயல்படும் டாஸ்மாக் நிறுவனப் பணியாளர்கள், (F.L -1), F.L -2 ஆகிய மதுபான உரிம ஸ்தலங்களின் உரிமதாரர்களின் மீது The Tamil Nadu Liquor (Licence and Permit) Rules, 1981-ன்படி நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என மாவட்ட ஆட்சித்தலைவர் மரு.என்.ஓ.சுகபுத்ரா,I A S., அவர்கள் உத்தவிட்டுள்ளார்.