விருதுநகர் மாவட்டம், நரிக்குடி ஊராட்சி ஒன்றியம், குறையறவாசித்தான் ஊராட்சி ஒன்றியத் தொடக்கப்பள்ளியில் (26.03.2025) மாவட்ட ஆட்சித்தலைவர் முனைவர் வீ.ப.ஜெயசீலன், I A S, அவர்கள் நேரில் சென்று பார்வையிட்டு, மாணவர்களுக்கு தயாரிக்கப்படும் மதிய உணவுகளின் தரம் குறித்து ஆய்வு செய்தார்.விருதுநகர் மாவட்டம், நரிக்குடி ஊராட்சி ஒன்றியம், குறையறவாசித்தான் ஊராட்சி ஒன்றியத் தொடக்கப்பள்ளியில் (26.03.2025) மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் நேரில் சென்று பார்வையிட்டு, ஆசிரியர்கள் மற்றும் மாணவர்களிடம் கலந்துரையாடி, மாணவர்களின் கல்வித்தரம், வாசிப்புத்திறன், எழுத்துத்திறன், பள்ளிகளுக்கு அரசு மூலம் செயல்படுத்தப்படும் திட்டங்கள் உள்ளிட்டவை முறையாக சென்றடைகிறதா என்பது குறித்து ஆய்வு செய்தார்.
விருதுநகர் மாவட்டம், திருச்சுழி அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரி வளாகத்தில் தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதாரம் இயக்கம் சார்பில், மகளிர் சுய உதவிக்குழுவின் மூலம் அமைக்கப்பட்டுள்ள விருமதி உணவகம் மற்றும் பல்பொருள் அங்காடியினை மாவட்ட ஆட்சித்தலைவர் முனைவர் வீ.ப.ஜெயசீலன்,I A S, அவர்கள் (26.03.2025) திறந்து வைத்தார்.பின்னர், தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதாரம் இயக்கம் சார்பில், 12 சுய உதவிக்குழுக்களுக்கு ரூ.13 இலட்சம் சமூக முதலீட்டு நிதிக்கான கடனுதவிகளை மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் வழங்கினார்.இந்நிகழ்ச்சியில், திட்ட இயக்குநர்(தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்கம்) திரு.ஜார்ஜ் ஆண்டனி மைக்கேல், மகளிர் சுய உதவிக்குழு பெண்கள் மற்றும் அரசு அலுவலர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.
விருதுநகர் மாவட்டம், நரிக்குடி ஊராட்சி ஒன்றியம், நல்லுக்குறிச்சி கிராமத்தில், தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்கம், மாவட்ட இயக்க மேலாண்மை அலகு சார்பில், ஆடு வளர்ப்பு தொகுப்பு 2024-2025 கீழ், ஊராட்சி அளவிலான கூட்டமைப்பில் உள்ள மகளிர் சுய உதவிக்குழுக்களை சேர்ந்த தீவனம் உற்பத்தி செய்வதற்கான நிலமுள்ள 20 பெண்களுக்கு தலா 10 ஆடுகள் வீதம் என மொத்தம் ரூ.14 இலட்சம் மதிப்பில் 200 ஆடுகளை மாவட்ட ஆட்சித்தலைவர் முனைவர் வீ.ப.ஜெயசீலன்,I A S., அவர்கள் வழங்கினார்.பின்னர், தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்கம் சார்பில், மகளிர் சுய உதவிக்குழுக்களுக்கு அமுத சுரபி நிதியின் கீழ், ரூ.36.40 இலட்சம் மதிப்பிலான கடனுதவிகளை மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் வழங்கினார்.தமிழ்நாடு அரசினுடைய மகளிர் மேம்பாட்டு திட்;டத்தில் ஒரு பகுதியாக இருக்கக்கூடிய தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்கத்தின் மூலமாக கிராமப்புறங்களில் இருக்கக்கூடிய பெண்கள் ஏதேனும் ஒரு வகையில் ஒரு தன்னார்வலர்களாக, ஒரு சுய தொழிலை செய்ய வேண்டும். அதன் மூலமாக அவர்களுடைய வாழ்க்கை தரம் உயர வேண்டும் என்பதற்காக பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. அதுவும் குறிப்பாக நமது மாவட்டத்தில் ஏறத்தாழ ஒரு லட்சத்து பத்தாயிரம் பெண்கள் மகளிர்; சுய உதவி குழுக்களில் உறுப்பினர்களாக இருக்கிறார்கள். இந்த மகளிர் சுய உதவிக்குழுவில் உள்ள உறுப்பினர்களும் பல்வேறு தொழில்களை செய்வதற்கு, தங்களுடைய தேவைகளுக்கென்று சுயதொழில், கூட்டமைப்புகள், வங்கிகள் மூலமாக நமது மாவட்டத்தில் ஒட்டு மொத்தமாக ஒரு ஆண்டிற்கு சுமார் ஆயிரம் கோடி ரூபாயினை வங்கிக் கடன்களாக பெறுகிறார்கள்.ஆனால், அவர்கள் வாங்கிய கடனை சரியாக முதலீடு செய்து கொண்டிருக்கிறார்களா என்று பார்த்தால், அவர்கள் பணத்தை அடிப்படைத் தேவைகளுக்கு அதாவது சமுதாயத்தில், பொருளாதாரத்தில், எதிர்பாராத குடும்ப செலவுகளுக்கென்று தான் செலவிடுகிறார்கள். ஆனால், இதனுடைய முக்கியமான நோக்கம் என்னவென்றால், பெண்களுக்கான உண்மையான வலிமை என்ன, பெண்களுக்கான உண்மையான சுதந்திரம் என்ன, பெண்களுக்கான உண்மையான விடுதலை என்ன என்று பார்த்தால், பெண்களுக்கான உண்மையான வலிமையும், விடுதலையும் அவர்களுடைய பொருளாதார வலிமை தான். அதாவது பெண்களின் கையில் பணம் இருக்க வேண்டும். அவர்களுடைய தேவைகளை பூர்த்தி செய்யக்கூடிய அளவிற்கு அதிகாரம் இருக்க வேண்டும் என்பது தான்.பெண்கள் பொருளாதாரத்தில் தன்னிறைவு பெற்றார்கள் என்றால், குடும்பத்தில், சமுதாயத்தில் அவர்களினுடைய பங்கு என்பது முழுமையாக அங்கீகரிக்கப்படுகிறது. அதனால் தான் பெண்கள் தொழில் தொடங்குபவர்களாக, தொழில் முனைவோர்களாக வர வேண்டும்.மேலும், இன்றைக்கு சந்தையில் ஆடுகளுக்கான தேவை மிகப்பெரிய அளவில் இருக்கிறது. நீங்கள் அனைவரும் இன்றைக்கு ஒரு 10 ஆடுகள் வாங்கி, அதில் நீங்கள் ஒரு வருடம் உங்களினுடைய முழுமையான உழைப்பினை செலுத்துகிறீர்கள் என்றால் நிச்சயாக ஒரு ஆண்டில் 10 ஆடுகள் 30 ஆடுகளாக பெருகக்கூடிய வாய்ப்புகள் இருக்கிறது. மேலும், ஒரு ஆண்டுகள் பராமரித்தால் நீங்கள் அனைவரும் ஒரு ஆட்டுப்பண்ணையின் உடைய முதலாளியாக மாறக்கூடிய வாய்ப்புகள் கூட இருக்கிறது. எனவே, இதற்கு நீங்கள் ஒரு இரண்டு ஆண்டுக்காலம் ஆடுகளை சரியாக பராமரித்து உங்களினுடைய உழைப்பை செலுத்தினீர்கள் என்றால் இரண்டு ஆண்டு காலத்தில் உங்களின் உடைய குடும்பம் பொருளாதாரம் முன்னேறக்கூடிய அளவிற்கு வருமானத்தை தொடர்ச்சியாக பெற முடியும்.எனவே, எந்த ஒரு வெள்ளமும் சிறிய துளியில் இருந்து தான் ஆரம்பிக்கிறது, எந்த ஒரு பெரிய கடலும் மழையில் இருந்து விழக்கூடிய ஒரு துளியில் இருந்து தான் வருகிறது என்பது போல, இவற்றையெல்லாம் தொடர்ச்சியாக முழுமையாக முயற்சி செய்தால் நிச்சயமாக மிக பெரிய வாய்ப்பை பெற முடியும்.நமக்கு இருக்கக்கூடிய வாய்ப்புகள், உரிமைகள், நமக்காக அரசு செயல்படுத்தக்கூடிய திட்டங்கள் இவற்றையெல்லாம் தெரிந்துக்கொண்டு, அவற்றின் உடைய பயன்களை பெறக்கூடியவர்களாக நாம் அனைவரும் இருக்க வேண்டும்.எனவே, இது போன்ற விழிப்புணர்வுகளை பெற்று, கல்வி வாய்ப்புகளை பெற்று, பொருளாதார வாய்ப்புகளை பெற்று, வாழ்க்கையில் எவ்வளவு உரிமைகள் இருந்தாலும் பொருளாதார வலிமை தான் மிகவும் முக்கியம் எனவும், பெண்கள் அனைவரும் தொழில்களில் வெற்றி பெற்று பெரிய தொழில் முனைவோர்களாக முன்னேற வேண்டுமெனவும் மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் தெரிவித்தார்.இந்நிகழ்ச்சியில், திட்ட இயக்குநர் (தமிழ்நாடு மாநில ஊரகஃநகர்ப்புற வாழ்வாதார இயக்கம்)திரு.ஜே.ஜார்ஜ் மைக்கேல், உதவி திட்ட அலுவலர்கள், மகளிர் சுய உதவிக்குழுக்களை சேர்ந்த பெண்கள் மற்றும் அரசு அலுவலர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.
விருதுநகர் மாவட்டம், நரிக்குடி ஊராட்சி ஒன்றியம், நாலூர் ஊராட்சியில் (26.03.2025) தமிழ்நாடு ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சிகள் துறை, தமிழ்நாடு மகளிர் மேம்பாட்டு நிறுவனம் மற்றும் தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்கம் இணைந்து நடத்தும் “கிராம இயற்கை சந்தை”-யினை மாவட்ட ஆட்சித்தலைவர் முனைவர் வீ.ப.ஜெயசீலன்,I A S, அவர்கள் துவக்கி வைத்தார்.விருதுநகர் மாவட்டத்தில், நாலூர் ஊராட்சியில், இயங்காமல் இருந்த சந்தை மற்றும் கடைகள் மீண்டும் புதுப்பிக்கப்பட்டு இந்த பகுதியினுடைய மகளிர் சுயஉதவி குழுக்களுக்கள் மூலம் பல்வேறு கடைகளாக தொழிலை செய்யக்கூடிய இடங்களாகவும், காய்கறிகள் உள்ளிட்ட பல்வேறு உணவுப் பொருட்களை விற்கக்கூடிய இடங்களாக மாற்றி இந்த சந்தை இன்று தொடங்கி வைக்கப்பட்டுள்ளது.இந்த பகுதியில் திறந்த வெளியில் சந்தை என்பது இல்லை. இந்த சந்தையினை பொருட்களை வாங்கக்கூடிய, பல்வேறு பொருட்கள் கிடைக்கக்கூடிய ஒரு இடமாக மாற்றினால் நிச்சயமாக லாபம் தரக்கூடிய இடமாக மாறும். மகளிர் சுயஉதவிக் குழுக்களில் உள்ள பெண்கள்; குழுவாக சேர்ந்து, செயல்படுவதன் முக்கியத்துவம் என்னவென்றால் ஒரு செயலை தனியாக செயல்படுத்துவது கடினம். அதுவே ஒரு குழுவாக சேர்ந்த செயல்படும் பொழுதுதான் வலிமை பெறுகிறது.குறிப்பாக குழுவாக செயல்படுவதன் மூலம் பொருளாதார வாய்ப்புகள் கிடைக்கின்றன. பெண்களுக்கான முழுமையான விடுதலை, சுதந்திரம், வலிமை என்பது அவர்களுக்கான பொருளாதாரம் தான்.பெண்களுக்கான பொருளாதாரா வலிமை எப்போது நிறைவடைகிறது என்றால் கையில் பணம் இருக்கும் பொழுது, நல்ல வேலைக்கு சென்று சம்பாதிக்கும் போது, நல்ல தொழிலை செய்து வியாபாரத்தில் இலாபம் சம்பாதிக்கும் பொழுது, அவர்கள் சுய தொழில் மூலம் வருமானம் பெறும் பொழுதுதான் பொருளாதாரம் வலிமையாகும்.அந்த வகையில் பெண்களுக்கான பொருளாதார வலிமையை உருவாக்குவதற்காக, தமிழ்நாடு அரசு பல்வேறு திட்டங்களை சிறப்பாக செயல்படுத்தி வருகிறது.அரசின் மூலம் செயல்படுத்தப்பட்டு வரும் திட்டங்களை பெற்று, பொறுமையுடனும் தொடர்ச்சியான செயல்பாடுகளுடனும் இருந்தால் நிச்சயமாக கிராமப்பகுதியில் இருக்கக்கூடிய பெண்கள் மகளிர் சுய உதவிக்குழுக்களைச் சேர்ந்த பெண்கள் எல்லாம் மிகப்பெரிய பொருளாதார வலிமையை அடைய முடியும்.பெண்களுக்கான சுய உதவிக்குழுக்களுக்கு அரசால் மானியம் வழங்கப்படுகிறது. அதன் மூலம் பெண்கள் 10 இலட்சம் முதல் 20 இலட்சம் வரை சுய உதவி குழுக்கள் கடன்களை பெற்று சரியான முறையில் சுய தொழில்களை செய்து வருமானம் ஈட்டக்கூடிய தன்னம்பிக்கை மிக்கவர்களாக சமுதாயத்தில் உருவாகி வருகின்றனர்.எனவே இது போன்ற அரசினுடைய திட்டங்கள் மற்றும் அரசு வழங்கும் கடனுதவிகளை பெற்று முறையாக செயல்படுத்தி பெண்கள் தங்களுக்கான பொருளாதார வலிமையை உயர்த்திக்கொள்ள வேண்டும்.இந்த பகுதியில் சந்தையை பயன்படுத்தி இன்னும் ஒரு ஆண்டுகாலத்திற்குள் மகளிர் சுய உதவிக்குழு உறுப்பினர்கள் பொருளாதாரத்தில் வலிமை பெற்றவர்களாக ஆக வேண்டும் என மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் தெரிவித்துள்ளார்.இந்நிகழ்ச்சியில், திட்ட இயக்குநர் (தமிழ்நாடு ஊரக வாழ்வாதார இயக்கம்) திரு.ஜே.ஜார்ஜ் மைக்கேல், உதவித் திட்ட அலுவலர்கள், மகளிர் சுய உதவிக்குழுக்களைச் சேர்ந்த பெண்கள், அரசு அலுவலர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.
தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் சார்பில், விருதுநகர் மாவட்ட விளையாட்டு அரங்கில் இயங்கி வரும் நீச்சல் குளத்தில் தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தால் நியமிக்கப்பட்ட தலைசிறந்த நீச்சல் பயிற்றுநர்களை கொண்டு நீச்சல் பழக பயிற்சி வகுப்புகள் இளைஞர்கள் மற்றும் பொது மக்கள் அனைவருக்கும் (இருபாலருக்கும்) நடத்தப்பட உள்ளது.நீச்சல் பழக 12 நாட்கள் பயிற்சி அளிக்கப்படும், பயிற்சி முடிந்த உடன் பயிற்சி சான்றிதழ் வழங்கப்படும். ஆகையால் இளைஞர்கள் மற்றும் பொது மக்கள் அனைவரும் இதனை பயன்படுத்தி கொண்டு அடிப்படை நீச்சல் பழகி கொள்ள இதன் மூலம் அறிவுறுத்தப்படுகிறது.விருதுநகர் மாவட்டத்தின் அனைத்து பள்ளிஃகல்லூரி, மாணவ/மாணவியர்கள், பொதுமக்கள் மற்றும் அரசு ஊழியர்கள் என அனைவரும் பயிற்சி வகுப்பில் சேர்ந்து பயனடையலாம்.மேலும், பயிற்சி வகுப்பு நடைபெறும் நாட்கள் முதல் தொகுப்பு - 01.04.2025 முதல் 13.04.2025, இரண்டாம் தொகுப்பு- 15.04.2025 முதல் 27.04.2025, முன்றாம் தொகுப்பு- 29.04.2025 முதல் 11.05.2025, நான்காம் தொகுப்பு- 13.05.2025 முதல் 25.05.2025 மற்றும் ஐந்தாம் தொகுப்பு- 27.05.2025 முதல் 08.06.2025 ஆம் தேதி வரை வகுப்புகள் நடைபெறும். இது தொடர்பான விவரங்களை பெற -97513-93412 என்ற நீச்சல் பயிற்றுநர் அவர்களின் தொலைபேசி எண்ணை தொடர்பு கொள்ளலாம் என மாவட்ட ஆட்சித்தலைவர் முனைவர் வீ.ப.ஜெயசீலன்,I A S, அவர்கள் தெரிவித்துள்ளார்.
விருதுநகர் மாவட்ட ஆட்சியர் அலுவலகக் கூட்டரங்கில் (25.03.2025) அன்று வேளாண்மைத்துறை சார்பாக மகளிர் சுய உதவிக்குழுக்கள் மற்றும் கிராம ஊராட்சிகளின் பங்கேற்புடன் கூடிய ஒருங்கிணைந்த பண்ணையம் அமைத்தல் தொடர்பான ஆய்வுக்கூட்டம் மாவட்ட ஆட்சித்தலைவர் முனைவர் வீ.ப.ஜெயசீலன்,I A S., அவர்கள் தலைமையில் நடைபெற்றது. திருச்சி மாவட்டத்தில் 13 வட்டாரங்களில் 14 இடங்களில் ஒருங்கிணைந்த பண்ணையம் திருச்சி மாவட்ட ஆட்சியர் அவர்களின் அறிவுறுத்தலின் பேரில் மேற்கொள்ளப்பட்டது. ஒரு கிராமம், ஒரு பண்ணையம், ஒரு இலட்சம், ஒரு மாதம் என திருச்சி மாவட்டத்தில் செயல்படுத்தியது போல் ஒருங்கிணைந்த பண்ணையத் திட்டத்தினை விருதுநகர் மாவட்டத்திலும் செயல்படுத்திட மாவட்ட ஆட்சியர் அவர்களால் அறிவுறுத்தப்பட்டது.வேளாண்மை துணை இயக்குநர், மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (விவ), விருதுநகர் அவர்களால் 22.03.2025 அன்று திருச்சியில் நேரடி கள ஆய்வு மேற்கொள்ளப்பட்ட புகைப்படங்கள் மற்றும் தொழில்நுட்பங்கள் குறித்து அனைவருக்கும் விரிவாக எடுத்துரைக்கப்பட்டது. இரண்டு வட்டாரங்களில் மகளிர் சுய உதவிக்குழுக்கள் மற்றும் கிராம ஊராட்சிகளின் பங்கேற்புடன் ஒருங்கிணைந்த பண்ணையம் திட்டத்திற்கான புறம்போக்கு நிலத்தினை தேர்வு செய்திடவும், சாலை வசதி மற்றும் நீர்பாசன வசதி உள்ள இடங்களாக தேர்வு செய்திடவும் உதவி இயக்குநர் (ஊராட்சிகள்) அவர்களை மாவட்ட ஆட்சியர் அவர்கள் அறிவுறுத்தினார்கள்.விருதுநகர் மாவட்டத்தில் இரண்டு எண்ணம் ஒருங்கிணைந்த பண்ணையம் விவசாயிகளின் பங்குத் தொகையுடன் அமைக்க உள்ளதாக மாவட்ட ஆட்சியர் அவர்களால் தெரிவிக்கப்பட்டது. மேலும், 2.5 ஏக்கர் பரப்பளவு பட்டா நிலம் மற்றும் தண்ணீர் வசதி உள்ள விவசாயிகள் பல்வேறு துறைகளுடன் ஒருங்கிணைந்து விவசாயிகளின் பங்குத் தொகையுடன் பயன்பெறலாம் என மாவட்ட ஆட்சியர் அவர்களால் தெரிவிக்கப்பட்டது.இக்கூட்டத்தில், திட்ட இயக்குநர் (தமிழ்நாடு மாநில ஊரக/நகர்ப்புற வாழ்வாதார இயக்கம்)திரு.ஜே.ஜார்ஜ் மைக்கேல், மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் திருமதி நாச்சியார் அம்மாள், உதவி இயக்குநர் (ஊராட்சிகள்) திரு.அரவிந்த், வேளாண்மைத்துறை அலுவலர்கள் மற்றும் அரசு அலுவலர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.
விருதுநகர் ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட பல்வேறு பகுதிகளில் நடைபெற்று வரும் வளர்ச்சி பணிகள் குறித்து மாவட்ட ஆட்சித்தலைவர் முனைவர் வீ.ப.ஜெயசீலன், I A S, , அவர்கள் (25.03.2025) நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு செய்து, அரசின் மூலம் செயல்படுத்தப்பட்டு வரும் பல்வேறு அரசு திட்டப்பணிகள் மற்றும் நலத்திட்டங்களின் பயன்கள், கருத்துக்கள் குறித்து பயனாளிகளிடம் கலந்துரையாடினார்.அதன்படி, விருதுநகர் ஊராட்சி ஒன்றியம் புல்லலக்கோட்டை ஊராட்சி, கலைஞர் கனவு இல்லம் திட்டத்தின் கீழ், ரூ.3.54 இலட்சம் மானியத்தில் புதிய வீடு கட்டப்பட்டுள்ளதை மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் பார்வையிட்டு, இத்திட்டத்தின் மூலம் பயன்பெற்ற பயனாளியிடம் கலந்துரையாடி அவர்களின் கருத்துக்களை கேட்டறிந்தார்.புல்லலக்கோட்டை ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளியில் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதி திட்டத்தின் கீழ், ரூ.50 ஆயிரம் மதிப்பில் புதிதாக அமைக்கப்பட்டுள்ள விளையாட்டு மைதானத்தை நேரில் சென்று பார்வையிட்டு, பள்ளியில் அடிப்படை வசதிகள், பள்ளி குழந்தைகளுக்கு கல்வி கற்பிக்கப்பட்டு வரும் முறைகள், குழந்தைகளின் வாசிப்புத்திறன், எழுத்தறிவு குறித்து ஆசிரியர் மற்றும் மாணவர்களிடம் கேட்டறிந்து ஆய்வு செய்தார்.புல்லக்கோட்டை ஊராட்சியில் பிரதம மந்திரி குடியிருப்பு திட்டத்தின் கீழ் ரூ.2.81 இலட்சம் மதிப்பில் மானியத்தில் குடியிருப்பு வீடுகள் கட்டப்பட்டு வருவதையும்,சிவஞானபுரம் ஊராட்சியில் லட்சுமி நகரில் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதி திட்டத்தின் கீழ், ரூ.16.55 இலட்சம் மதிப்பில் புதிதாக அங்கன்வாடி மையம் கட்டப்பட்டு வருவதையும்,செங்குன்றாபுரம் ஊராட்சியில், மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதி திட்டத்தின் கீழ், ரூ.1.68 இலட்சம் மதிப்பில் கண்மாய் தூர்வாரப்பட்டு புணரமைக்கப்பட்டு வரும் பணிகளையும்,எல்லிங்க நாயக்கன்பட்டி ஊராட்சியில், மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதி திட்டத்தின் கீழ் ரூ.50 ஆயிரம் மதிப்பில் பேட்மிட்டன் மற்றும் வாலிபால் விளையாட்டு மைதானம் அமைக்கப்பட்டுள்ளதையும்,சந்திரகிரிபுரம் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில், பள்ளி உட்கட்டமைப்பு மேம்பாட்டு நிதியின் கீழ் புதிய கட்டடம் கட்டப்பட்டுள்ளதையும் மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் நேரில் சென்று பார்வையிட்டு பணிகளின் தரம் குறித்து ஆய்வு செய்தார்.இந்த ஆய்வின் போது, அரசின் மூலம் அந்தந்த ஊராட்சிகளில் செயல்படுத்தப்பட்டு வரும் பல்வேறு திட்ட பணிகள் மற்றும் நலத்திட்டங்கள் முறையாக மக்களை சென்றடைகிறதா என பொதுமக்கள் மற்றும் பயனாளிகளிடம் கலந்துரையாடி, அவர்களின் கருத்துக்களை மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் கேட்டறிந்தார்.மேலும் நடைபெற்று வரும் பணிகளை விரைவாகவும், தரமானதாகவும் முடித்து பொதுமக்களின் பயன்பாட்டிற்கு கொண்டு வர சம்மந்தப்பட்ட அரசு அலுவலர்களுக்கு அறிவுத்தினார்.இந்த ஆய்வின் போது, வட்டார வளர்ச்சி அலுவலர்கள், உதவி செயற்பொறியாளர்கள் மற்றும் அரசு அலுவலர்கள் உட்பட பலர் உடன் இருந்தனர்.
தமிழ்நாடு அரசின் சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை மூலம் பெண்கள், குழந்தைகள், நலிவுற்றோர், ஏழைகள், மூத்தகுடிமக்கள், திருநங்கைகள் போன்றோரின் நல்வாழ்வை உறுதி செய்து வந்துள்ளது. பல்வேறு சமூக நலத்திட்டங்கள் மூலம், குடும்ப நலம், ஊட்டச்சத்து நிலை, கல்வி, பாதுகாப்பு மற்றும் வளர்ச்சி ஆகியவற்றை மேம்படுத்துவதுடன் அவர்களுக்கு பல வாய்ப்புகளும் வசதிகளும் அளித்து, கண்ணியமான வாழ்க்கை வாழவும் வழிவகுத்துள்ளது.தமிழ்நாட்டின் பல்வேறு பகுதிகளில் வாழும் மக்களின் வாழ்க்கை முறைக்கு ஏற்றார் போல் சமூக சீர்திருத்தத் திட்டங்களை அறிமுகப்படுத்தி பல சமூக தீமைகளைக் களைந்து சமூகத்தில் நலிந்த பிரிவினரின் நலனை பாதுகாத்து, அரசின் நிதியை, தேவைக்கேற்ப அனைத்து தரப்பு மக்களும் பயன்பெறும் வகையில், நலத் திட்டங்களை வகுத்து, இவற்றின் மூலம் ஒரு நலமான வளமான மற்றும் நிலையான மனித ஆற்றல் மிக்க சமுதாயம் விரைவாக உருவாகி, வாழ்க்கையை சுமூகமாக வாழ இத்துறை வழிவகை செய்து வருகிறது.குடும்பச் செலவைச் சரிக்கட்ட ஆணும் பெண்ணும் சம்பாதிக்க வேண்டியுள்ள இக்காலகட்டத்தில் பெண்கள் தங்கள் கல்விஅறிவை வளர்த்து உயர்கல்வி பெற்று நல்ல வேலை தேடிக்கொள்ளும் வகையில் அரசு எண்ணில்லா வாய்ப்புகளை ஏற்படுத்தியும் நிதி உதவித் திட்டங்களை அமல்படுத்தியும் வருகின்றது.தமிழ்நாடு அரசு அறிவித்து செயல்படுத்தி வரும் அனைத்து சிறப்பு திட்டங்களும், பெண்களுக்கு அதிகாரம் அளித்து, சமூகத்தில் மதிப்புமிகு நிலைக்கு அவர்களை உயர்த்துவதையே தலையாய குறிக்கோளாகக் கொண்டுள்ளது. அரசின் முன்னணி திட்டங்களான புதுமைப்பெண் திட்டம், முதலமைச்சரின் பெண் குழந்தை பாதுகாப்புத் திட்டம், பெண்கள் உயர்கல்வி பயில பெற்றோரை ஊக்குவிக்கும் வகையில் உயர்த்தப்பட்ட திருமண உதவித்தொகையுடன் திருமாங்கல்யம் செய்ய தங்கம் வழங்கும் திட்டம், சிறப்புமிகு சேவை செய்த பெண்களை கவுரவித்து ஊக்குவிக்கும் வகையில் அவ்வையார் விருது வழங்கும் திட்டம், 13 வகை கலவை சாதம் வழங்கும் சுவைமிகு சத்துணவுத் திட்டம், பள்ளிக்குழந்தைகளுக்கு 4 இணை சீருடைகள் வழங்கும் திட்டம், பெண்களையும், குழந்தைகளையும் பாலியல் வன்முறையிலிருந்து பாதுகாக்கும் பலமுனை நடவடிக்கைகள் ஆகியவை பெண்கள் மற்றும் குழந்தைகளைக் காத்து முன்னேற்றமடையச் செய்வனவாகும்.தமிழக அரசின் திருமண உதவித் திட்டம் என்பது, பொருளாதார அளவில் நலிவுற்ற, ஏழை விதவை தாய்மார்களின் மகள்களுக்கு திருமணத்தினை நடத்திட போதிய வசதி இல்லாமல் ஏற்படும் சிரமத்ததை தவிர்த்திக்கும் வகையிலும், சமூகத்தில் பிறப்பு அடிப்படையிலான இனப்பாகுபாட்டினை களைந்து சமநிலையை உருவாக்கிடவும், தாய், தந்தையர்கள் இல்லாத ஆதரவற்ற பெண்களுக்கு பொருளாதார வகையில் திருமணத்திற்கு உதவிட தாலிக்கு தங்கம் வழங்கிடும் பொருட்டும், கணவரை இழந்த விதவைகளுக்கு புதுவாழ்வு அளித்திட விதவை மறுமணம் திருமண நிதியதவி வழங்கிடும் வகையிலும் செயல்படுத்தப்பட்டு வருகிறது.அதன்படி, பள்ளிப் படிப்பை முடித்த பெண்களுக்கு நிதியுதவி தொகையாக ரூ.25,000/- மற்றும் பட்டபடிப்பு பயின்ற பெண்களுக்கு ரூ.50,000/- நிதியுதவியுடன் 8 கிராம் தங்க நாணயமும், வழங்கப்படுகிறது.அதன்படி, விருதுநகர் மாவட்டத்தில் டாக்டர் தர்மாம்பாள் அம்மையார் நினைவு விதவை மறுமண உதவித் திட்டம், ஈ.வெ.ரா. மணியம்மையார் நினைவு ஏழை விதவைகளின் மகள்களுக்கான திருமண உதவித் திட்டம், அன்னை தெரசா நினைவு ஆதரவற்ற பெண்களுக்கான திருமண உதவித் திட்டம், டாக்டர் முத்துலட்சுமி ரெட்டி நினைவு கலப்புத் திருமண உதவித் திட்டம் ஆகிய திட்டங்கள் மூலம் 2024-2025 ஆம் ஆண்டில், காரியாபட்டி, திருச்சுழி, நரிக்குடி, விருதுநகர், சிவகாசி, அருப்புக்கோட்டை, சாத்தூர், வெம்பக்கோட்டை, திருவில்லிபுத்தூர், வத்திராயிருப்பு மற்றும் இராஜபாளையம் ஆகிய ஊராட்சி ஒன்றியங்களைச் சேர்ந்த 234 ஏழை, எளிய பெண்கள் ரூ.1.42 கோடி மதிப்பிலான தலா 8 கிராம் தங்க நாணயங்கள், ரூ.95.75 இலட்சம் மதிப்பில் திருமண நிதியுதவிகள் என மொத்தம் ரூ.2.38 கோடி மதிப்பிலான நலத்திட்டங்கள் பெற்று பயனடைந்துள்ளனர். இந்த திட்டம் மூலம் பயன்பெற்ற பயனாளிகள் தமிழ்நாடு அரசுக்கு நன்றிகளை தெரிவித்து வருகின்றனர்.
விருதுநகர் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் மாவட்ட ஆட்சித்தலைவர் முனைவர் வீ.ப.ஜெயசீலன், I A S, அவர்கள் தலைமையில் (24.03.2025) நடைபெற்றது.இக்கூட்டத்தில், இலவச வீட்டுமனைப்பட்டா மற்றும் பட்டா மாறுதல், குடும்ப அட்டை, வேலை வாய்ப்பு, விபத்து நிவாரணம், மாற்றுத்திறனாளிகள், நலிந்தோர் நலத்திட்டம் மற்றும் விதவை உதவித்தொகை, திருமண உதவித்தொகை, முதியோர் உதவித்தொகை உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் தொடர்பாக மனுக்கள் பெறப்பட்டது.மேலும், மாற்றுத்திறனாளிகள் மற்றும் மூத்தகுடி மக்களுக்காக அமைக்கப்பட்டுள்ள சிறப்பு அமருமிடத்திற்குச் சென்று, மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் கோரிக்கை மனுக்களை பெற்றுக் கொண்டார். இம்மனுக்களை மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் சம்மந்தப்பட்ட துறை அலுவலர்களிடம் ஒப்படைத்து உரிய நடவடிக்கை எடுக்குமாறு உத்தரவிட்டார்கள். மேலும் முதலமைச்சர் தனிப்பிரிவு மனுக்கள் மீது தனிக்கவனம் செலுத்தி நடவடிக்கை எடுக்குமாறு மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் தொடர்புடைய அலுவலர்களை அறிவுறுத்தினார்கள். இக்கூட்டத்தில், மாவட்ட சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை சார்பில் 75 கைபெண்களுக்கு தலா ரூ.7500- வீதம் மொத்தம் ரூ.5.63 இலட்சம் மதிப்பிலான தையல் இயந்திரங்களையும்,தமிழ்நாடு மெர்க்கண்டைல் வங்கியின் கார்ப்பரேட் நிறுவனங்களின் சமூக நலனுக்கான பங்களிப்பு(ஊளுசு) நிதியின் கீழ் மாவட்டத்தில் உள்ள தொடக்க பால் உற்பத்தியாளர்கள் கூட்டுறவு சங்கங்களின் உட்கட்டமைப்புகளை வலுப்படுத்தும் நோக்கில் 43 தொடக்க பால் உற்பத்தியாளர்கள் கூட்டுறவு சங்கங்களுக்கு ரூ.2.58 இலட்சம் மதிப்பிலான 50 அலுமினிய பால் கேன்களையும் மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் வழங்கினார்.இக்கூட்டத்தில், மாவட்ட வருவாய் அலுவலர் திரு.இரா.ராஜேந்திரன், துணைப்பதிவாளர்(பால்வளம்) திரு.கி.சம்பத், மாவட்ட சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை அலுவலர் திருமதி ஷீலா சுந்தரி, தமிழ்நாடு மெர்க்கண்டைல் வங்கியின் தூத்துக்குடி மண்டல மேலாளர் திரு.கௌதமன், விருதுநகர் கிளை மேலாளர் திரு.கணேஷ்பாபு உட்பட அரசு அலுவலர்கள் மற்றும் பொதுமக்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.
விருதுநகர் மாவட்ட ஆட்சியர் அலுவலகக் கூட்டரங்கில் (24.03.2025) உலக காசநோய் தினத்தை முன்னிட்டு, காசநோய் விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் மாவட்ட ஆட்சித்தலைவர் முனைவர் வீ.ப.ஜெயசீலன்,I A S, அவர்கள் தலைமையில் நடைபெற்றது.காசநோயை ஒழிக்கும் முயற்சிகளைத் தீவிரப்படுத்தவும், சுகாதாரம், சமூகம் மற்றும் பொருளாதாரத்தில் காசநோய் ஏற்படுத்தும் விளைவுகளைப் பற்றிய பொது மக்களின் விழிப்புணர்வை அதிகரிக்கவும் ஒவ்வொரு ஆண்டும் மார்ச் 24-ஆம் தேதி உலகக் காசநோய் தினம் கடைபிடிக்கப்படுகிறது.காசநோய் என்பது ஒரு தொற்றக்கூடிய நுரையீரல் சார்ந்த பிரச்சனை. இந்தியாவில் 40, 50 ஆண்டுகளுக்கு முன்பாக காசநோய் என்பது மிகவும் தீவிரமான ஒரு நோயாகவும், அதிக எண்ணிக்கையிலான உயிரிழப்பை ஏற்படுத்தக்கூடிய நோயாகவும் இருந்தது. இன்றைக்கும் 1 இலட்சத்திற்கு 200- க்கும் மேலாக நோயாளிகள் இருக்ககூடிய விகிதம் இருக்கிறது. எனவே நமது மக்கள் தொகைக்கேற்ப, நோய் தாக்கத்திற்கு உள்ளானவர்கள் எத்தனை சதவீதம் என்ற எண்ணிக்கையின் அடிப்படையில் அவர்களை கண்டறிய வேண்டியது மிக முக்கியமான ஒன்றாக உள்ளது.ஏனென்றால், நோய் தாக்கம் உள்ளவர்களை ஆரம்ப நிலையில் கண்டறிந்து, அவர்களுக்கு அடுத்த கட்ட சிகிச்சைகள் வழங்குவதன் மூலம் தான் அவர்களிடமிருந்து அந்த நோய் மற்றவர்களுக்கு பரவக்கூடிய சங்கிலியை குறைக்க முடியும். எனவே இதில் மிக முக்கியமாக ஒவ்வொரு ஆரம்ப சுகாதார நிலையங்களிலும் அங்கு வரக்கூடிய நோய் தொற்றுக்கு ஆளாக வாய்ப்பு இருக்கக்கூடியவர்களை சரியாக கணித்து, அவர்களை பரிசோதனை செய்து பரிசோதனைகள் முடிவின் அடிப்படையில் தாக்கம் இருக்கக்கூடியவர்களுக்கு முறையான சிகிச்சை செய்வது மிக அவசியம்.மாவட்டத்தில், தொடர்ச்சியான காநோய் பரிசோதனையின் மூலம், விவரங்களை சேகரித்து, முறையாக நோய் குறித்து ஆய்வு செய்யும் பணிகள் முறையாக நடைபெற்று கொண்டிருக்கிறது.ஆரம்ப சுகாதார நிலையங்களில் வரக்கூடிய நோயாளிகளுக்கு, இது குறித்த விழிப்புணர்வோடு, பரிசோதனைகளை அதிகப்படுத்தினால் மட்டுமே காசநோயினுடைய தாக்கத்தை சமூகத்தில் குறைக்க முடியும். எனவே காசநோய் ஒழிப்பு திட்டம் என்பது இந்திய அளவில் முக்கியமான ஒன்றாகும்.இதனை முற்றிலும் அறவே ஒழிக்க வேண்டுமென்றால், ஆங்காங்கே இருக்கக்கூடிய நோயாளிகளை சரியாக கண்டறிந்து அவர்களுக்கு முறையான மருத்துவ சிகிச்சைகளை அளிப்பது மட்டும் தான் இதற்கான தீர்வு. இது குறித்து அனைத்து மருத்துவ பணியாளர்களும் மிகுந்த விழிப்புணர்வோடு செயல்பட வேண்டும் என மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் தெரிவித்தார்.இந்நிகழ்ச்சியில், சிறப்பாக செயல்பட்டு வரும் அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளுக்கு கேடயங்களை மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் வழங்கினார்.இந்நிகழ்ச்சியில், மாவட்டத்தில் அதிக அளவில் காசநோயாளிகளை கண்டுபிடித்து மாவட்ட காசநோய் மையத்திற்கு தெரிவித்த 5 தனியார் மருத்துவர்களுக்கு கேடயங்களையும், காசநோயாளிகளுக்கு ஊட்டசத்து வழங்கிய நன்கொடையாளர்களுக்கு கேடயங்களையும், காசநோய் விழிப்புணர்வு குறித்து நடைபெற்ற பல்வேறு போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவிகளுக்கு பரிசுகளையும் மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் வழங்கினார்.அதனைத்தொடர்ந்து, உலக காசநோய் தின உறுதிமொழியினை மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் தலைமையில் அனைவரும் எடுத்துக்கொண்டனர்.முன்னதாக, விருதுநகர் தேசப்பந்து மைதானத்தில், உலக காசநோய் தினத்தை முன்னிட்டு, விழிப்புணர்வு மாராத்தான் போட்டியினை மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் துவக்கி வைத்தார். இந்த மாரத்தான் போட்டியில் சுகாதார ஆய்வாளர்கள் மற்றும் காசநோய் பணியாளர்கள் கலந்து கொண்டு, நகரின் முக்கிய வீதிகள் வழியாக மாவட்ட ஆட்சியர் அலுவலகம் வரை சென்று விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.இந்த மாரத்தான் போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கு பாராட்டு சான்றிதழ்களை மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் வழங்கினார்.இந்நிகழ்ச்சியில், இணை இயக்குநர் (மருத்துவப்பணிகள்) மரு.பாபுஜி, மாவட்ட சுகாதார அலுவலர்கள் மரு.யசோதாமணி(விருதுநகர்), மரு.குணசேகரன்(சிவகாசி), துணை இயக்குநர்(காசம்) மரு.கே.ராஜன், துணை இயக்குநர் (குடும்ப நலம்) மரு.விமலா, துணை இயக்குநர்(தொழுநோய்) மரு.மணிகண்டன், மருத்துவர்கள், மாணவ, மாணவிகள், பணியாளர்கள், பொதுமக்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.