தமிழ்நாடு அரசின் திருமண உதவித்தொகையுடன் திருமாங்கல்யத்திற்கு தங்கம் வழங்கும் திட்டம் மூலம் 234 ஏழை, எளிய பெண்கள் ரூ.2.38 கோடி மதிப்பிலான நலத்திட்டங்கள் பெற்று பயனடைந்துள்ளனர்.
தமிழ்நாடு அரசின் சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை மூலம் பெண்கள், குழந்தைகள், நலிவுற்றோர், ஏழைகள், மூத்தகுடிமக்கள், திருநங்கைகள் போன்றோரின் நல்வாழ்வை உறுதி செய்து வந்துள்ளது. பல்வேறு சமூக நலத்திட்டங்கள் மூலம், குடும்ப நலம், ஊட்டச்சத்து நிலை, கல்வி, பாதுகாப்பு மற்றும் வளர்ச்சி ஆகியவற்றை மேம்படுத்துவதுடன் அவர்களுக்கு பல வாய்ப்புகளும் வசதிகளும் அளித்து, கண்ணியமான வாழ்க்கை வாழவும் வழிவகுத்துள்ளது.தமிழ்நாட்டின் பல்வேறு பகுதிகளில் வாழும் மக்களின் வாழ்க்கை முறைக்கு ஏற்றார் போல் சமூக சீர்திருத்தத் திட்டங்களை அறிமுகப்படுத்தி பல சமூக தீமைகளைக் களைந்து சமூகத்தில் நலிந்த பிரிவினரின் நலனை பாதுகாத்து, அரசின் நிதியை, தேவைக்கேற்ப அனைத்து தரப்பு மக்களும் பயன்பெறும் வகையில், நலத் திட்டங்களை வகுத்து, இவற்றின் மூலம் ஒரு நலமான வளமான மற்றும் நிலையான மனித ஆற்றல் மிக்க சமுதாயம் விரைவாக உருவாகி, வாழ்க்கையை சுமூகமாக வாழ இத்துறை வழிவகை செய்து வருகிறது.குடும்பச் செலவைச் சரிக்கட்ட ஆணும் பெண்ணும் சம்பாதிக்க வேண்டியுள்ள இக்காலகட்டத்தில் பெண்கள் தங்கள் கல்விஅறிவை வளர்த்து உயர்கல்வி பெற்று நல்ல வேலை தேடிக்கொள்ளும் வகையில் அரசு எண்ணில்லா வாய்ப்புகளை ஏற்படுத்தியும் நிதி உதவித் திட்டங்களை அமல்படுத்தியும் வருகின்றது.
தமிழ்நாடு அரசு அறிவித்து செயல்படுத்தி வரும் அனைத்து சிறப்பு திட்டங்களும், பெண்களுக்கு அதிகாரம் அளித்து, சமூகத்தில் மதிப்புமிகு நிலைக்கு அவர்களை உயர்த்துவதையே தலையாய குறிக்கோளாகக் கொண்டுள்ளது. அரசின் முன்னணி திட்டங்களான புதுமைப்பெண் திட்டம், முதலமைச்சரின் பெண் குழந்தை பாதுகாப்புத் திட்டம், பெண்கள் உயர்கல்வி பயில பெற்றோரை ஊக்குவிக்கும் வகையில் உயர்த்தப்பட்ட திருமண உதவித்தொகையுடன் திருமாங்கல்யம் செய்ய தங்கம் வழங்கும் திட்டம், சிறப்புமிகு சேவை செய்த பெண்களை கவுரவித்து ஊக்குவிக்கும் வகையில் அவ்வையார் விருது வழங்கும் திட்டம், 13 வகை கலவை சாதம் வழங்கும் சுவைமிகு சத்துணவுத் திட்டம், பள்ளிக்குழந்தைகளுக்கு 4 இணை சீருடைகள் வழங்கும் திட்டம், பெண்களையும், குழந்தைகளையும் பாலியல் வன்முறையிலிருந்து பாதுகாக்கும் பலமுனை நடவடிக்கைகள் ஆகியவை பெண்கள் மற்றும் குழந்தைகளைக் காத்து முன்னேற்றமடையச் செய்வனவாகும்.
தமிழக அரசின் திருமண உதவித் திட்டம் என்பது, பொருளாதார அளவில் நலிவுற்ற, ஏழை விதவை தாய்மார்களின் மகள்களுக்கு திருமணத்தினை நடத்திட போதிய வசதி இல்லாமல் ஏற்படும் சிரமத்ததை தவிர்த்திக்கும் வகையிலும், சமூகத்தில் பிறப்பு அடிப்படையிலான இனப்பாகுபாட்டினை களைந்து சமநிலையை உருவாக்கிடவும், தாய், தந்தையர்கள் இல்லாத ஆதரவற்ற பெண்களுக்கு பொருளாதார வகையில் திருமணத்திற்கு உதவிட தாலிக்கு தங்கம் வழங்கிடும் பொருட்டும், கணவரை இழந்த விதவைகளுக்கு புதுவாழ்வு அளித்திட விதவை மறுமணம் திருமண நிதியதவி வழங்கிடும் வகையிலும் செயல்படுத்தப்பட்டு வருகிறது.அதன்படி, பள்ளிப் படிப்பை முடித்த பெண்களுக்கு நிதியுதவி தொகையாக ரூ.25,000/- மற்றும் பட்டபடிப்பு பயின்ற பெண்களுக்கு ரூ.50,000/- நிதியுதவியுடன் 8 கிராம் தங்க நாணயமும், வழங்கப்படுகிறது.
அதன்படி, விருதுநகர் மாவட்டத்தில் டாக்டர் தர்மாம்பாள் அம்மையார் நினைவு விதவை மறுமண உதவித் திட்டம், ஈ.வெ.ரா. மணியம்மையார் நினைவு ஏழை விதவைகளின் மகள்களுக்கான திருமண உதவித் திட்டம், அன்னை தெரசா நினைவு ஆதரவற்ற பெண்களுக்கான திருமண உதவித் திட்டம், டாக்டர் முத்துலட்சுமி ரெட்டி நினைவு கலப்புத் திருமண உதவித் திட்டம் ஆகிய திட்டங்கள் மூலம் 2024-2025 ஆம் ஆண்டில், காரியாபட்டி, திருச்சுழி, நரிக்குடி, விருதுநகர், சிவகாசி, அருப்புக்கோட்டை, சாத்தூர், வெம்பக்கோட்டை, திருவில்லிபுத்தூர், வத்திராயிருப்பு மற்றும் இராஜபாளையம் ஆகிய ஊராட்சி ஒன்றியங்களைச் சேர்ந்த 234 ஏழை, எளிய பெண்கள் ரூ.1.42 கோடி மதிப்பிலான தலா 8 கிராம் தங்க நாணயங்கள், ரூ.95.75 இலட்சம் மதிப்பில் திருமண நிதியுதவிகள் என மொத்தம் ரூ.2.38 கோடி மதிப்பிலான நலத்திட்டங்கள் பெற்று பயனடைந்துள்ளனர். இந்த திட்டம் மூலம் பயன்பெற்ற பயனாளிகள் தமிழ்நாடு அரசுக்கு நன்றிகளை தெரிவித்து வருகின்றனர்.
0
Leave a Reply