விருதுநகர் மாவட்ட ஆட்சியர் அலுவலகக் கூட்டரங்கில், (24.03.2025) மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை சார்பாக 2023-24 ஆம் ஆண்டில் தமிழகத்திலேயே அதிகப்படியான குடும்ப நல அறுவை சிகிச்சை செய்தமைக்காக மாநில அளவில் முதல் மற்றும் இரண்டாமிடம் பெற்றமைக்காக விருதுகள் பெற்ற மருத்துவ அலுவலர்கள் மாவட்ட ஆட்சித்தலைவர் முனைவர் வீ.ப.ஜெயசீலன்,I A S, அவர்களிடம் பெற்ற விருதினை காண்பித்து வாழ்த்துப் பெற்றனர்.அதன்படி, தமிழ்நாட்டிலுள்ள அரசு மருத்துவமனைகளில் 2023-24 ஆம் ஆண்டில் நடைபெற்ற குடும்பநல அறுவை சிகிச்சைகளில் 4129 குடும்ப நல அறுவை சிகிச்சைகள் செய்து மாநிலத்திலேயே விருதுநகர் மாவட்டம் முதலிடம் பெற்றுள்ளது.மேலும், 2023-24 ஆம் ஆண்டில் மாநில அளவில் ஆரம்ப சுகாதார நிலையங்களில் நடைபெற்ற குடும்ப நல அறுவை சிகிச்சைகளில் 354 பெண்களுக்கான குடும்ப நல அறுவை சிகிச்சைகள் செய்து, விருதுநகர் மாவட்டம், கன்னிசேரிபுதூர் ஆரம்ப சுகாதார நிலையம் இரண்டாமிடம் பெற்றுள்ளது.அதன்படி, முதலிடத்திற்கான விருதினை பெற்ற இணை இயக்குநர் (மருத்துவப்பணிகள்) மரு.பாபுஜி அவர்களும், இரண்டாமிடத்திற்கான விருதினை பெற்ற கன்னிச்சேரிபுதூர் வட்டார மருத்துவ அலுவலர் மரு.ஆரோக்கிய ரூபன்ராஜ் அவர்களும், மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்களிடம் பெற்ற விருதினை காண்பித்து வாழ்த்துப் பெற்றனர்.இந்நிகழ்வில் துணை இயக்குநர்(குடும்ப நலம்) மரு.விமலா அவர்கள், விருதுநகர் மாவட்ட சுகாதார அலுவலர் மரு.யசோதாமணி, துணை இயக்குநர்(காசம்) மரு.கே.ராஜன், துணை இயக்குநர்(தொழுநோய்) மரு.மணிகண்டன், மருத்துவ அலுவலர்கள், அரசு அலுவலர்கள் பலர் உடனிருந்தனர்.
விருதுநகர் மாவட்டம், திருவில்லிபுத்தூர் ஸ்ரீ சுந்தரேஸ்வரி கல்வியில் கல்லூரியில் மல்லி வள நாட்டுக் கலை இலக்கியப் பெருவிழா போட்டியினை மாவட்ட ஆட்சித்தலைவர் முனைவர் வீ.ப.ஜெயசீலன், I A S,அவர்கள் (21.03.2025) துவக்கி வைத்து உரையாற்றினார்.நீங்கள் அனைவரும் ஒரு பத்து வருடம் கழித்து அதாவது 2035- ல் இந்த திறமை இருக்கிறவர்கள் அந்த திறமையை அவர்களே மறந்து விடுவார்கள். நிறைய திறமைசாலிகள் திறமையை மறந்து விட்டு வேற வேற பணியில் இருப்பார்கள். ஏனென்றால், அவர்கள் வாழ்க்கையில் அடுத்தடுத்த கட்டத்தில்; நகர்ந்து செல்லும் பொழுது இது செய்வதற்குரிய சூழல்கள் அமையாது. இன்றைக்கு முதல் பரிசு வாங்க கூடியவர்கள் தான் எப்போதும் முதல் பரிசு வாங்குவார்கள் என்று பார்த்தால் நிச்சயமாக இல்லை. இன்றைக்கு சாதாரணமாக இருக்கிறார்கள் நாளைக்கு திறமையானவர்களாக மாற முடியும். பாரதியாரின் புகழ்மிக்க கவிதை இரண்டாவது பரிசுக்கு தேர்வு செய்யப்பட்டிருந்தது. பாரதியார் மறைந்து 100 வருடங்களுக்கும் மேலாகவும் பாரதியாரை புகழ்ந்து பேசுகிறோம். பாரதியருடைய கவிதைகள் இன்றைக்கும் மனிதர்களுக்கு ஒளி விளக்காக இருக்கின்றது.ஆனால் முதல் பரிசு பெற்ற கவிதை யார் எழுதியது, என்ன கவிதை என்று கூட யாருக்கும் தெரியாது. அது ஆய்வாளர்களுக்கு கூட தெரியாது. இதிலிருந்து நாம் கற்றுக் கொள்வது பாடங்கள் என்னவென்றால், மனிதர்கள் ஒவ்வொருவருக்குமே ஒரு திறமை இருக்கிறது. இந்த பூமியில் பிறந்த ஒவ்வொரு உயிரினத்திற்கும் ஒரு திறமை இருக்கிறது. ஒவ்வொரு உயிர், ஒவ்வொரு இனம் எதுவாக இருந்தாலும் பறவை இனமாக இருந்தாலும், விலங்கினமாக இருந்தாலும், மனித இனமாக இருந்தாலும், ஒவ்வொரு உயிருக்கும் தனிப்பட்ட ஒரு பண்பும், திறனும் இருக்கிறது. அது மற்றவர்களுக்கு ஒருபோதும் இருக்காது. ஒளவையாரின் தனிப்பாடலில் கூறும் பொழுது, தூக்காணாங்குருவி, அரக்கு பூச்சி இவையெல்லாம் உருவாக்கக்கூடிய பொருட்களை மனிதர்களால் ஒருபோதும் செய்ய இயலாது.அதனால் நாம் மிகப் பெரிய திறமையானவர்கள், திறமை இல்லை என்று இரண்டையும் இணைத்து ஒருவர் பெரிதாக யோசிக்கவே கூடாது.வான் குருவியின் கூடு வல்லரக்குத் தொல்கறையான்தேன்சிலம்பி யாவருக்கும் செய்யரிதால் – யாம் பெரிதும்வல்லோமே என்று வலிமை சொல் வேண்டாங்காண்எல்லார்க்கும் ஒவ்வான்று எளிது.அதனால் ஒவ்வொருவருக்கும் ஏதேனும் ஒரு திறமை அதிகமாக இருக்கிறது. இந்த திறமையினால் என்ன நடக்கும் என்றால், திறமை என்று ஒருவருக்கு இயல்பாக, தான் இருக்கும் என்பது இல்லை என்று தான் புள்ளி விவரங்களும் வெற்றியாளர்களின் உடைய வாழ்க்கையும் குறிப்பிடுகிறது.2024 -ஆம் நடைபெற்ற ஒலிம்பிக் போட்டியில், ஈட்டி எறிதிலில் தங்கப்பதக்கத்தை வென்ற நீரஜ் சோப்ரா என்ற விளையாட்டு வீரர் அவர் மிகப்பெரிய திறமைசாலி. உலக அளவில் பல்வேறு நாடுகளில் முதலிடத்தை வென்றவர். இயல்பாகவே மிகுந்த திறமைசாலி. ஆனால் 10 ஆண்டுகளுக்கு முன்பாக அவர் ஈட்டி எறிதலில் சாதாரணமாக தான் விளையாடினார். இந்த மாற்றம் எங்கிருந்து வந்தது என்று பார்த்தால் இயல்பாக வந்து வந்துவிட்டதா என்றால் இல்லை. மற்றவர்கள் செய்யாததை அவர் செய்திருக்கிறார் . அதாவது பத்து ஆண்டு காலம் இதற்காக உழைத்திருக்கிறார்.எனவே திறமை என்று இயல்பாக ஒருவருக்கு ஒருபோதும் வருவதில்லை எந்த ஒன்றின் மீது ஆர்வத்தை ஏற்படுத்தி, அதன் மீது தொடர்ச்சியாக உழைப்பையும், கவனத்தையும், நேரத்தையும், செலவழிக்கின்றோமோ அதில் நமக்கு தேவையான ஆற்றல் வருகிறது. அந்த ஆற்றல் தான் திறமை என்று கூறப்படுகிறது. இது போன்ற நிகழ்ச்சிகளை நோக்கமும் இது தான்.எனவே, ஒரு தொடர்ச்சியாக செயல்பாடுகள், தொடர்ச்சியாக உழைப்பின் மூலமாகத்தான் வெற்றி வருகின்றது தவிர, ஒருபோதும் சுலபமாக வருவதில்லை. யூ-டியூப், இன்ஸ்டாகிராம் மூலம் இளைஞர்கள் மன மகிழ்ச்சி அடைகிறார்கள். அதில் அவர்களின் கவனமும் சிதறுகிறது. ஆனால், எந்த ஒன்று நம் கவனத்தை சிதறடைக்கிறது என்பதை நாம் கட்டுப்படுத்த முடியும். நாம் ஒரு வீடியோ பார்க்கும் போது எந்த அளவு மனமகிழ்ச்சி அடைகிறோமோ, நாம் ஒரு வீடியோவை பார்க்கின்ற பொழுது எந்த ஒரு மன மகிழ்ச்சி அடைகின்றோமோ இந்த அழகான கவிதையோ ஒரு சின்ன வீடியோ நமக்கு நிச்சயமாக கொடுக்கிறது.நான் ஒரு நிகழ்வை பார்க்கும் பொழுது மிகவும் மகிழ்ச்சியாக இருக்க வேண்டும் என்று உடலில் ஏற்படுகின்ற மாற்றம் டொபோமைன் மூளையில் ஒரு ஹார்மோன்கள் சுரக்கும் அந்த ஹார்மோன்களால் மனதுக்கு மகிழ்ச்சி ஏற்படுத்தும்.நமக்கு தேவையான மகிழ்ச்சியை, நமக்கு தேவையான சந்தோஷத்தை இது போன்ற கலை இலக்கியங்கள் தான் உறுதி செய்கின்றனர். இன்றைக்கு இளைஞர்களுக்கு குறிப்பாக கல்லூரி மாணவர்களிடம் போதைப்பொருட்கள் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும். ஒரு போதை பொருள் தரக்கூடிய இன்பத்தை அல்லது தற்காலிக மகிழ்ச்சியை இதுபோன்ற கலை இலக்கியங்கள் முழுவதுமாக தருகின்றன.அக்காலை பொழுதினிலே முக்காலை ஊன்றி மூவிரண்டுபோகையிலே ஐந்து தலை நாகமொன்று ஆழ்ந்து கடித்ததுவே”.. என்றுவைத்தியரிடம் புலவர் கூறினார்.அதற்கு அந்த காலை பொழுதில் கைத்தடி ஊன்றிக்கொண்டு ஆற்றுக்கு நான் செல்லும்போது ஐந்து முட்களைக் கொண்ட நெருஞ்சி முள் ஒன்று குத்தி விட்டது. என்றும் அதற்கு வைத்தியர்”பத்துரதன் புத்திரனின் மித்திரனின் சத்துருவின் பத்தினியின் கால் வாங்கி தேய்!” ..புலவர் தன் காலை தரையில் தேய்த்தார் முள் உதிர்ந்து விழுந்தது. என்பது தான் மருந்து என்று கூறினார்.இதை தான் இலக்கியம் என்று கூறுகிறார்கள். எப்பொழுதுமே நண்பரைப் போல், ஒரு வழிகாட்டி போல், நல்ல ஆசிரியரைப் போல் நாம் எந்த ஒன்றையும் நிரந்தரமாக நம்ப முடியாது. அதனால் எப்பொழுதும் நம்புவதுக்குரிய ஒரு நண்பனாய், நம்புவதற்குரிய ஒரு ஆசிரியராய், நம்புவதற்குரிய வழிகாட்டியாய் நாம் தெரிந்து கொள்ள வேண்டியது நம் வாசிக்கும் அல்லது நாம் பெரும் அனுபவங்கள் தான். வாழ்க்கைக்கான பாடங்களை எப்பொழுது கற்றுக் கொள்கிறார்கள் என்றால், அவர்கள் தொடர்ச்சியான வாசிப்பின் மூலமாகவும், தொடர்ச்சியான கேள்விச் செல்வம் மூலமாகவும் தான் பெற்றுக் கொள்கிறார்கள். எப்பொழுதும் யாராலும் கூற முடியாத அறிவுரையை இலக்கியங்கள் மட்டும் தான் கூறுகிறது.இதுபோன்று இலக்கியங்களை வாசிக்கும் பொழுது தான் நமது மனதுக்கு தேவையான மகிழ்ச்சி கிடைக்கிறது. மேலும், இது கலை இலக்கியங்களை அடுத்த பத்தாண்டுகள் கழித்து பார்த்தால் இன்றைய உங்களுடைய நிலைமை தொடர் செயல்பாடுகள் மூலமாக இன்னும் பல மடங்கு பெருக வேண்டும் என மாவட்ட ஆட்சித்தலைவர்அவர்கள் தெரிவித்தார்.பின்னர், மல்லி வள நாட்டுக் கலை இலக்கியப் பெருவிழா போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுகள் மற்றும் பாராட்டுச்சான்றிதழ்களை மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் வழங்கினார்.இந்நிகழ்ச்சியில், திருவில்லிபுத்தூர் ஸ்ரீ சுந்தரேஸ்வரி கல்வியில் கல்லூரி முதல்வர், பேராசிரியர்கள், மாணவ, மாணவியர்கள் மற்றும் அரசு அலுவலர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.
விருதுநகர் மாவட்டம், மல்லாங்கிணறு இராஜாமணி திருமண மண்டபத்தில் (23.03.2025) சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை சார்பில், மாவட்ட ஆட்சித்தலைவர் முனைவர் வீ.ப.ஜெயசீலன்,I A S., அவர்கள் தலைமையில், சிவகாசி மாநகராட்சி மேயர் திருமதி சங்கீதா இன்பம் அவர்கள் முன்னிலையில்நடைபெற்ற விழாவில், காரியாபட்டி, திருச்சுழி, நரிக்குடி, விருதுநகர் மற்றும் சிவகாசி ஆகிய ஊராட்சி ஒன்றியங்களைச் சேர்ந்த 104 ஏழை, எளிய பெண்களுக்கு ரூ.63.29 இலட்சம் மதிப்பில் தலா 8 கிராம் தங்க நாணயங்கள், ரூ.42 இலட்சம் மதிப்பில் திருமண நிதியுதவிகள் மற்றும் 75 பயனாளிகளுக்கு தலா ரூ.7500- வீதம் மொத்தம் ரூ.5.63 இலட்சம் மதிப்பில் தையல் இயந்திரங்கள் என ஆக மொத்தம் ரூ.1.12 கோடி மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை நிதி, சுற்றுச்சூழல் மற்றும் காலநிலை மாற்றத்துறை அமைச்சர் திரு.தங்கம் தென்னரசு அவர்கள் வழங்கினார். தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் பொறுப்பேற்றுக் கொண்டிருக்கின்ற இந்த நான்காண்டு காலத்தில், தமிழ்நாடு அனைத்து துறைகளிலும் மிகப்பெரிய மாற்றத்தை, வளர்ச்சியை பெற்று இருக்கக் கூடிய மாநிலமாக மாறி இருக்கிறது. அந்த மாற்றம் என்பது பொருளாதார காரணமாக மட்டுமல்லாமல், சமூக நலனில் அக்கறை கொண்ட அரசாக இருக்கின்றது.தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் ஆட்சி பொறுப்பை ஏற்ற காலகட்டத்தில் இருந்து மகளிர்கள் இலவச பயணம் செய்வதற்கு பேருந்தில் கட்டணம் இல்லா பயணம் செய்ய அறிவிக்கப்பட்டு, தமிழ்நாடு முழுவதும் பல கோடி பெண்கள். தொடர்ச்சியாக பயன் அடைந்து வருகிறார்கள். இதன் மூலம் ஒவ்வொரு பெண்ணும் ஒரு ஆண்டில் ரூ.888 சேமிக்கிறார்கள். ஒரு ஆய்வை எடுத்து பார்க்கும் பொழுது இந்த சேமிப்பு எதற்காக உபயோகப்படுத்துகிறார்கள் என்றால் வீட்டில் மருந்து வாங்குவதற்கும், குழந்தைகளின் படிப்பு செலவுக்கு அது பயன்படுகிறது.மகளிர் உரிமை தொகை மூலம் வழங்கும் ஆயிரம் ரூபாய் என்பது அவர்களுடைய குடும்பத்தில் அன்றாடம் முக்கிய செலவுகளை செய்யும் போது அந்த தொகை அவர்களுக்கு கை கொடுக்கின்றது. இது இந்தியாவில் எந்த மாநிலத்திலும் இல்லை. அந்த அளவிற்கு பெண்கள் திறமை பெற்று இருக்கிறார்கள்.இந்த முறை நிதிநிலை அறிக்கையில் பெண்களை அடுத்த கட்டத்திற்கு உயர்த்த வேண்டும் என்பதற்காக அடுத்த வரக்கூடிய ஓர் ஆண்டு காலத்தில் ஒரு இலட்சம் மகளிர்களை தொழில் முனைவோராக மாற்றுவதற்கான திட்டத்தை அறிவித்திருக்கின்றோம்.ஒரு காலத்தில் படிப்பு, ஓட்டுரிமை, சொத்துரிமை பெண்களுக்கு மறுக்கப்பட்ட நிலையில்இன்று பல்வேறு துறைகளில் பெண்கள் சாதனை படைத்து வருகிறார்கள்.டாக்டர் கலைஞர் அவர்கள் முதலமைச்சராக இருந்த போது, பெண்களுக்கான சம சொத்துரிமை வழங்கும் வகையில்சட்டமாக்கி அது இன்று வரை நீடித்துக் கொண்டிருக்கிறது. தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களும் ஒரு சொத்தை எழுத வேண்டும் என்றால் அந்த சொத்தை பெண்கள் பெயரில் இருந்தால் பதிவு கட்டணத்தில் ஒரு சதவீதம் குறைப்பதற்கான திட்டத்தையும் அறிவித்துள்ளார். இதற்கு காரணம் பெண்கள் பெயரில் சொத்து வரவேண்டும், பொருளாதாரத்தில் வளம்பெற வேண்டும் என்பதற்காக. பெண்கள் கல்வி பயில்வதற்காக பல்வேறு திட்டங்களை முத்தமிழறிஞர் கலைஞர் அவர்கள் செயல்படுத்தினார்கள். அவர்கள் வழியில், பெண்களுக்காக செயல்படுத்தப்படும் திட்டங்களை அவர்களுக்கு வழங்கப்படும் நலத்திட்டம் என்றோ, கடமை என்றோ பாராமல், அது அவர்களின் உரிமை என்ற நோக்கில் செயல்படுத்துபவர்தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள். அதனால் தான் சமூக நலத்துறை என்றிருந்த துறையை சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை என மாற்றினார். மேலும், இல்லத்தரசிகளான மகளிர்கள் வீட்டில் செய்யக்கூடிய பணிகளுக்கு, அர்ப்பணிப்புகளுக்கு வழங்கப்படும் ரூ.1000- த்தினை கலைஞரின் உரிமைத்தொகை என அறிவித்தார். சமூகத்தில் பிறப்பு அடிப்படையிலான இனப்பாகுபாட்டினை களைந்து சமநிலையை உருவாக்கிடவும், தாய், தந்தையர்கள் இல்லாத ஆதரவற்ற பெண்களுக்கு பொருளாதார வகையில் திருமணத்திற்கு உதவிட தாலிக்கு தங்கம் வழங்கிடும் பொருட்டும், கணவரை இழந்த விதவைகளுக்கு புதுவாழ்வு அளித்திட விதவை மறுமணம் திருமண நிதியதவி வழங்கிடும் வகையிலும் செயல்படுத்தப்பட்டு வருகிறது.அதன்படி, பள்ளிப் படிப்பை முடித்த பெண்களுக்கு நிதியுதவி தொகையாக ரூ.25,000/- மற்றும் பட்டபடிப்பு பயின்ற பெண்களுக்கு ரூ.50,000/- நிதியுதவியுடன் 8 கிராம் தங்க நாணயமும், வழங்கப்படுகிறது.அதன்படி இன்று காரியாபட்டி, திருச்சுழி, நரிக்குடி, விருதுநகர் மற்றும் சிவகாசி ஆகிய ஊராட்சி ஒன்றியங்களைச் சேர்ந்த 104 ஏழை, எளிய பெண்களுக்கு ரூ.63.29 இலட்சம் மதிப்பில் தலா 8 கிராம் தங்க நாணயங்கள் மற்றும் ரூ.42 இலட்சம் மதிப்பில் திருமண நிதியுதவிகள் என மொத்தம் ரூ.1.05 கோடி மதிப்பிலான நலத்திட்ட உதவிகளும்,சுயதொழில் செய்து, தங்களது பொருளாதாரத்தை மேம்படுத்திக் கொள்ளும் வகையில் 75 பயனாளிகளுக்கு ரூ.5.63 இலட்சம் மதிப்பில் தையல் இயந்திரங்கள் என ஆக மொத்தம் ரூ.1.12 கோடி மதிப்பிலான பல்வேறு நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டுள்ளன.இதுபோன்று பொருளாதாரத்தில், சமூகத்தில், வேலைவாய்ப்பில் பெண்கள் சுதந்திர உணர்வோடு அவர்களுக்கான இடத்தை அவர்கள் பெற வேண்டும் என்கின்ற உணர்வோடு தான் நம்முடைய அரசு பல திட்டங்களை எல்லாம் தீட்டி வருகிறது என அமைச்சர் அவர்கள் தெரிவித்தார்.
விருதுநகர் பழைய பேருந்து நிலையத்தில் தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகம், விருதுநகர் மண்டலத்தில் புதியதாக பெறப்பட்ட 13 புதிய பேருந்துகளின் சேவையினை மாவட்ட ஆட்சித்தலைவர் முனைவர் வீ.ப.ஜெயசீலன்,I A S, அவர்கள் தலைமையில், விருதுநகர் சட்டமன்ற உறுப்பினர் திரு.ஏ.ஆர்.ஆர்.சீனிவாசன் அவர்கள், சிவகாசி சட்டமன்ற உறுப்பினர் திரு.ஜி.அசோகன் அவர்கள், சாத்தூர் சட்டமன்ற உறுப்பினர் திரு.ஏ.ஆர்.ஆர்.ரகுராமன் அவர்கள் மற்றும் சிவகாசி மாநகராட்சி மேயர் திருமதி சங்கீதா இன்பம் அவர்கள்ஆகியோர்முன்னிலையில்,வருவாய்மற்றும்பேரிடர்மேலாண்மைத்துறைஅமைச்சர்திரு.கே.கே.எஸ்.எஸ்.ஆர்.ராமச்சந்திரன் அவர்கள் மற்றும் நிதி, சுற்றுச்சூழல் மற்றும் காலநிலை மாற்றத்துறை அமைச்சர் திரு.தங்கம் தென்னரசு அவர்கள் ஆகியோர் (23.03.2025) பொதுமக்களின் பயன்பாட்டிற்கு துவக்கி வைத்தார்கள்.தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் அரசு பேருந்துகளின் பராமரிப்பினை மேம்படுத்திடவும், பேருந்து வழித்தடங்களை மறுஆய்வு செய்து பொதுமக்கள் பயன்பெறும் வகையில் பேருந்து சேவை மற்றும் வசதியினை மேம்படுத்திடவும், போக்குவரத்து கழகங்களுக்கு புதிய பேருந்துகளை ஒதுக்கீடு செய்யவும், கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்தவும், போக்குவரத்து கழகங்களின் நிதி நிலை செயல்பாட்டு திறன்களை மேம்படுத்தவும் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறார்.தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகம் மதுரை கோட்டத்தின் கீழ் மதுரை, திண்டுக்கல் மற்றும் விருதுநகர் ஆகிய இடங்களில் மண்டல அலுவலகங்கள் செயல்பட்டு நகர், புறநகர் மற்றும் மலைப்பகுதிகளில் பேருந்து சேவை வழங்கப்பட்டு வருகின்றது. விருதுநகர் மண்டலத்தில் 9 பணிமனைகளில் உள்ள மொத்தம் உள்ள பேருந்துகளின் எண்ணிக்கை 462 மற்றும் வறையறுக்கப்பட்ட சேவைகளின் எண்ணிக்கை 418 ஆகும். இக்கழகத்தில் உள்ள மொத்த பணியாளர்களின் எண்ணிக்கை 2430 ஆகும். இக்கழகம் சாதாரணப் பேருந்து, விரைவுப்பேருந்து மற்றும் குளிர்சாதனப் பேருந்துகளை இயக்கி வருகின்றது. மேலும் நாளொன்றுக்கு நிர்ணிக்கப்பட்ட இயக்க தூரம் 1.95 லட்சம் கிலோ மீட்டர் ஆகும். இதனால் மாதத்திற்கு 58.50 இலட்சம் கிலோமீட்டர் இயக்கம் செய்ய நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. நாளொன்றுக்கு சுமார் 2.01 இலட்சம் பயணிகளும், மாதம் ஒன்றுக்கு 60.30 இலட்சம் பயணிகளும் பயன்படும் வகையில் வழித்தட சேவைகள் இம்மண்டலம் மூலம் இயக்கப்பட்டு வருகிறது. தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களால் 07.05.2021 அன்று மகளிருக்காக விடியல் பயணத்திட்டம் மூலம் நகரப்பேருந்துகளில் கட்டணமில்லா பயண சலுகை வழங்கப்பட்டது. இத்திட்டத்தின் மூலம் விருதுநகர் மாவட்டத்தில் தினந்தோறும் சுமார் 1.42 இலட்சம் பெண்கள் மற்றும் விருதுநகர் மண்டலம் முழுவதும் இதுவரை சுமார் 15.55 கோடி பெண்கள் பயனடைந்துள்ளனர். இதன் மூலம் மாதம் ஒன்றிற்கு மகளிருக்கு சுமார் 1000 ரூபாய் வரை சேமிப்பு ஏற்பட்டு பொருளாதாரம் மேம்படுகிறது. 1000 நபர்களுக்கு மேல் மக்கள் தொகையைக் கொண்ட அனைத்து கிராமங்களுக்கும் இக்கழகம் பேருந்து சேவையினை தொடர்ந்து செய்து வருகிறது. தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் வழிகாட்டுதலின்படி, தமிழ்நாடு அரசுப்போக்குவரத்துக்கழகம் மதுரை கோட்டத்தின் கீழ் இயங்கி வரும் விருதுநகர் மண்டலத்திற்கு இதுவரை ரூ.42.43 கோடி மதிப்பில் 83 புதிய பேருந்துகள் இயக்கப்பட்டுள்ளன. அதனைத்தொடர்ந்து இன்று ரூ.6.50 கோடி மதிப்பில் 13 புதிய பேருந்துகள் வழங்கப்பட்டு சேவைகள் தொடங்கி வைக்கப் பட்டுள்ளன.அதன்படி விருதுநகர்- காரியாபட்டி, விருதுநகர்- அருப்புக்கோட்டை, சாத்தூர்-கோட்டூர், அருப்புக்கோட்டை- நாகலாபுரம், அருப்புக்கோட்டை- இருக்கன்குடி, சிவகாசி- சாத்தூர், திருவில்லிபுத்தூர்- சிவகாசி, திருவில்லிபுத்தூர்- இலந்தைகுளம், ராஜபாளையம்- ஆலங்குளம் சிமெண்ட்ஸ், இராஜபாளையம்- இனாம்கோவில்பட்டி, காரியாபட்டி-விருதுநகர், காரியாபட்டி-நரிக்குடி, கான்சாபுரம்- வத்திராயிருப்பு- திருவில்லிபுத்தூர் ஆகிய 13 வழித்தடங்களுக்கு புதிய பேருந்துகளின் சேவைகள் தொடங்கி வைக்கப்பட்டுள்ளன. தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் வழிகாட்டுதலின் படி தமிழ்நாடு அரசு போக்குவரத்துக்கழகம் விருதுநகர் மண்டலத்தில் இதுநாள் வரை இயக்கப்பட்டு வந்த 176 மகளிர் கட்டணமில்லா பேருந்துகளுடன் 46 நகரப்பேருந்துகள் கூடுதல் செய்து 01.04.2025 முதல் 222 மகளிர் கட்டணமில்லா பேருந்துகள் இயக்கப்பட உள்ளன என தெரிவித்தனர்.இந்நிகழ்ச்சியில், தமிழ்நாடு அரசு போக்குவரத்துக்கழக மதுரை கோட்ட மேலாண்மை இயக்குநர் திரு.ஆர் சிங்காரவேலு,விருதுநகர் மண்டல பொது மேலாளர் திரு.எஸ்.துரைச்சாமி, உதவி இயக்குநர் (செய்தி மக்கள் தொடர்புத்துறை) திரு.ச.தங்கவேல், விருதுநகர் நகர்மன்ற தலைவர் திரு.மாதவன், உள்ளாட்சி பிரதிநிதிகள், போக்குவரத்துக்கழக அலுவலர்கள், பணியாளர்கள், தொழிற்சங்கப் பிரதிநிதிகள், அரசு அலுவலர்கள் மற்றும் பொதுமக்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.
விருதுநகர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் (23.03.2025) மாற்றுத்திறனாளிகள் நலத்துறை சார்பில் நடைபெற்ற நிகழ்ச்சியில்மாவட்ட ஆட்சித்தலைவர் முனைவர் வீ.ப.ஜெயசீலன்,I A S, அவர்கள் தலைமையில், விருதுநகர் சட்டமன்ற உறுப்பினர் திரு.ஏ.ஆர்.ஆர்.சீனிவாசன் அவர்கள், சிவகாசி சட்டமன்ற உறுப்பினர் திரு.ஜி.அசோகன் அவர்கள், சாத்தூர் சட்டமன்ற உறுப்பினர் திரு.ஏ.ஆர்.ஆர்.ரகுராமன் அவர்கள் மற்றும் சிவகாசி மாநகராட்சி மேயர் திருமதி சங்கீதா இன்பம் அவர்கள் ஆகியோர் முன்னிலையில்,67 மாற்றுத்திறனாளிகளுக்கு தலா ரூ.1,01,800- வீதம் மொத்தம் ரூ.68.21 இலட்சம் மதிப்பிலான இணைப்பு சக்கரம் பொருத்தப்பட்ட மோட்டார் இருசக்கர வாகனங்களை நிதி, சுற்றுச்சூழல் மற்றும் காலநிலை மாற்றத்துறை அமைச்சர் திரு.தங்கம் தென்னரசு அவர்கள் வழங்கினார்.முதலமைச்சர் அவர்கள் தலைமையில் செயல்படும் தமிழக அரசு மாற்றுத்திறனாளிகளின் வாழ்க்கை முன்னேற்றத்திற்காக அறிவிக்கும் திட்டங்களின் மூலம் அவர்களது வாழ்வில் புது நம்பிக்கை ஏற்பட்டுள்ளது. இதனால் மாற்றுத்திறனாளிகள் சமுதாயத்தில் உயர்ந்த நிலையையும், சமூக பாதுகாப்பையும் பெற்று வாழ்ந்து வருகிறார்கள்.மேலும், மாற்றுத்திறனாளிகள் நலனில் பெரிதும் அக்கறை கொண்டு, அவர்கள் முன்னேற்றத்திற்கு தனியாக துறையை உருவாக்கி, நலத்திட்டங்களை செயல்படுத்தி வருகிறது.மாற்றுத்திறனாளிகள் நலனில் பெரிதும் அக்கறை கொண்டு, அவர்கள் முன்னேற்றத்திற்கு தனியாக துறையை உருவாக்கி, நலத்திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. அதன்படி, மாற்றுத்திறனாளிகளுக்கு இலவச பேருந்து பயண சலுகை, ரயிலில் பயண சலுகை, இணைப்பு சக்கரங்கள் பொருத்தப்பட்ட பெட்ரோல் ஸ்கூட்டர், மாற்றுத் திறனாளிகளுக்கான உதவி உபகரணங்கள், திருமண நிதி உதவி, கல்வி உதவி தொகை, பராமரிப்பு உதவித்தொகை, சுய தொழில் புரிவதற்கான கடனுதவி, வேலையில் முன்னுரிமை உள்ளிட்ட பல்வேறு நலத்திட்ட உதவிகளையும், மாற்றுத்திறனாளிகளின் நலனுக்காக சிறப்பான முறையில் சேவை புரிந்தவர்களை ஊக்கப்படுத்தும் விதமாக மாநில அளவிலான விருதுகளையும்தமிழ்நாடு முதலமைச்சர் அவருடைய வழிகாட்டலில் தமிழக அரசு வழங்கி வருகிறது.அதனடிப்படையில், 67 மாற்றுத்திறனாளிகளுக்கு தலா ரூ.1,01,800- வீதம் மொத்தம் ரூ.68.21 இலட்சம் மதிப்பிலான இணைப்பு சக்கரம் பொருத்தப்பட்ட மோட்டார் இருசக்கர வாகனங்கள் வழங்கப்பட்டுள்ளன.சமுதாய வளர்ச்சி என்பது ஒருசாரார் மட்டும் வளர்ச்சி அடைவதாக இருக்கக்கூடாது. சமச்சீரான ஒருங்கிணைந்த வளர்ச்சியாக இருக்க வேண்டும் எனவும், மாற்றுத்திறனாளிகள் முன்னேற்றத்திற்கு இது போன்ற தொடர்ச்சியான திட்டங்களை தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் தலைமையிலான அரசு தொடர்ந்து செயல்படுத்தும் என தெரிவித்தார்.இவ்விழாவில் மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலர் திரு.சீனிவாசன், விருதுநகர் நகர்மன்றத்தலைவர் திரு.ஆர்.மாதவன்உட்பட அரசு அலுவலர்கள், உள்ளாட்சி பிரதிநிதிகள், மாற்றுத்திறனாளிகள் பலர் கலந்து கொண்டனர்.
விருதுநகர் மாவட்டம், திருவில்லிபுத்தூர், கிருஷ்ணன்கோவில் லிங்கா குளோபல் பள்ளியில் இன்று(21.03.2025) மாவட்ட நிர்வாகம் மற்றும் கரிசல் இலக்கிய கழகம் இணைந்து நடத்திய பள்ளி மாணவர்களுக்கான குழந்தைகள் இலக்கியத்; திருவிழாவின் நிறைவு விழா நிகழ்ச்சியில் மதுரை நாடாளுமன்ற உறுப்பினர்(சாகித்திய அகாடமி விருதாளர்) எழுத்தாளர் திரு.சு.வெங்கடேசன் அவர்கள் காணொளி காட்சி வாயிலாக சிறப்புரையாற்றினார்.விருதுநகர் மாவட்ட நிர்வாகம் மற்றும் கரிசல் இலக்கியக் கழகம் இணைந்து குழந்தைகள் இலக்கிய திருவிழாவை நடத்துவதில் உண்மையிலேயே ஒரு பெருமையான செயல். ஒரு மிக முக்கியமான செயல். அந்த செயலுக்காக எனது வாழ்த்துக்களை முதலில் தெரிவித்துக் கொள்கின்றேன்.குழந்தைகள் இலக்கியத்தை பற்றி பேசுவது, குழந்தைகள் இலக்கியத்தினுடைய தேவைகளை பற்றி நாம் உரையாடல் தொடர்ந்து நிகழ்த்த வேண்டிய அவசியம் இருக்கிறது. உலகம் முழுவதும் இருக்கின்ற நவீன ஆய்வுகள், குறிப்பாக மானுடவியல் ஆய்வுகள் தொடங்கி, மனோ தத்துவவியல் ஆய்வுகள் வரை சொல்லுகிற மிக முக்கியமான உண்மை, ஒரு மனிதனுடைய நீண்ட வாழ்வு ஒரு 90 ஆண்டு, 80 ஆண்டுகால நீண்ட வாழ்வில், எது மிகப்பெரிய தாக்கத்தை உருவாக்குகிறது அல்லது அந்த வாழ்விற்கு எந்த பகுதி அடிப்படையாக இருக்கிறது என்ற கேள்வியை எழுப்பினால், எப்படி ஒரு கரிசல் நிலம் அல்லது செம்மண் நிலம் அல்லது வயல்வெளி அல்லது கரம்பை மண் பகுதி என்று ஒவ்வொரு நிலப்பகுதியிலும், ஒவ்வொரு வகையான செடி, கொடிகள், தாவரங்கள், பயிர்கள் விளையும். அதேபோலத்தான் குழந்தை பருவம் என்பது அந்த பருவத்தில் ஒரு மனிதனுடைய மனநிலை, குழந்தையினுடைய மனதிலே உருவாகின்ற சித்திரம், கனவுகள் தாக்கங்கள், இவையெல்லாம் அவர்களுடைய வாழ்க்கை முழுவதும் ஒரு பெரும் தாக்கத்தை உருவாக்குகிறது என்று சொல்கிறார்கள்.எனவே தான் குழந்தைப் பருவத்தில் சிறுவர்களாக இருக்கின்ற பொழுது படிக்கின்ற புத்தகம், பார்க்கின்ற நண்பர்கள், பழகுகின்ற நண்பர்கள், பார்க்கின்ற மனிதர்கள், அந்த காலத்தில் அவர்களுக்கு உருவாகிற கதாநாயக பிம்பங்கள் இவையெல்லாம் மிக மிக முக்கியமானது. அந்த வகையில் தான் குழந்தை இலக்கியம் என்பது மொத்த மானுடவியல்; வாழ்விற்கு மிக அடிப்படையான இலக்கியமாக இருக்கிறது. குழந்தை இலக்கியங்கள் எவ்வளவு அதிகமாக இருக்கிறதோ அவ்வளவு அதிகமாக சமூகத்தில் நல்ல விளைவுகளை உருவாக்குவதற்கான முயற்சி நடக்கிறது என்று அர்த்தம்.நமது ஊர்களில் சிறார்களுக்காக மட்டுமே இருக்கின்ற நூலகங்கள் என்று பார்த்தால் மிகக் குறைவு. சிறுவர்களுக்கான புத்தகங்கள் என்று பார்த்தால் அதைவிட குறைவு. அது சமீப காலத்தில் ஏற்பட்டிருக்கின்ற விழிப்புணர்ச்சியில் இருந்து மிக அதிகமாக அது வளர்ந்து கொண்டிருக்கிறது. பெரிய இலக்கியங்களை படைத்து விடலாம். சிறுவர்களுக்கு இலக்கியம் படைக்கின்ற பொழுதுதான் அதனுடைய கடினம் தெரியும். நான் 2011-12 ஆம் ஆண்டு காவல் கோட்டம் எழுதி முடித்த பிறகு, அன்றைக்கு தமிழக அரசு புதிய பாடத்திட்டத்தை உருவாக்குகின்ற பொழுது, ஏழாம் வகுப்பு குழந்தைகளுக்கு பெரியாரைப் பற்றி பாடம் எழுதுகின்ற பணியில் என்னை ஈடுபடுத்தினார்கள். ஏழாம் வகுப்பு குழந்தையினுடைய, அவர்களுக்கு புழக்கமான சொல், அவர்களுக்கு படிப்பதை போன்று ஒரு சிறிய வாக்கிய அமைப்பில் பெரியாரைப் பற்றி இரண்டு பக்கம் ஒரு பாடத்தை எழுதுவதற்கு நான் பட்டப்பாடு சொல்ல முடியாதது. 1000 பக்கம் காவல் கோட்டம் எழுதியதற்கு பின்பு தான் இங்கே வந்தேன். என் குழந்தை அப்பொழுது சரியாக ஏழாம் வகுப்பு படித்துக் கொண்டிருந்தாள். அவளிடம் ஒரு பக்கத்தை நான் எழுதிவிட்டு படித்துப் பார் என்று சொல்லுவேன். எனக்கு புரியவில்லை என்று சொல்லுவாள். ஏறக்குறைய 10 முறை என்னை என் மகள் திருத்தி இருக்கிறார். எனக்கு புரிகின்ற மாதிரி, புரிகிற வாக்கியத்தில் எழுதுங்கள் என்று சொல்லுவாள்.இந்த இரண்டு நாட்கள்(20.03.2025 மற்றும் 21.03.2025) நடைபெற்ற நிகழ்ச்சியில் குழந்தைகள் இலக்கியத் திருவிழாவில்; சிறுவர்களுக்கான கதைகள், பொம்மலாட்டம், மன நல பயற்சிகள், சிறுவர் திரைப்படங்கள், மேஜிக், போன்ற நிகழ்ச்சிகளும், ஆசிரியர்கள் மற்றும் பெற்றோர்களுக்கான விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் குழுவிவாதம், குழந்தைகளின் வாசிக்கும் பழக்கம், கலகல வகுப்பறை, மாணவர்களுக்கு இலக்கியம் கற்பித்தல் போன்ற பல்வேறு அமர்வுகளும் இந்த நிகழ்ச்சியில் இடம் பெற்றன.மேலும், ஆசிரியர்கள் ஃ பெற்றோர்களுக்காக அமைக்கப்பட்ட அரங்கில் மனநல மருத்துவர், பேராசிரியர் துணைத்தலைவர் டாக்டர் எம்.ஜி.ஆர்.கல்வி மற்றும் ஆராய்ச்சி நிறுவனம், சென்னை மரு.சிவபாலன் அவர்கள் மற்றும் மனநல மருத்துவர் மற்றும் எழுத்தாளர் மரு.மந்திரிகுமார் அவர்கள் ஆகியோர் கலந்து கொண்ட குழுவிவாத நிகழ்ச்சியும், குழந்தைகளின் வாசிக்கும் பழக்கம் என்ற தலைப்பில் சாகித்ய பால புரஸ்கார் விருதாளர், பள்ளிக் கல்வித்துறையின் சிறார் ஆசிரியர் இதழின் பொறுப்பாசிரியர் திரு.பாலபாரதி அவர்களின் சிறப்புரையும், கலகல வகுப்பறை என்ற தலைப்பில் திரு.ரெ.சிவா அவர்களின் சிறப்புரையும், மாணவர்களுக்கு இலக்கியம் கற்பித்தல் அமர்வில் சாகித்ய அகாடமி விருதாளர் எழுத்தாளர் திரு.உதயசங்கர் அவர்கள் மற்றும் எழுத்தாளர் திரு.ச.தமிழ்ச்செல்வன் அவர்கள் ஆகியோரின் சிறப்புரையும் நடைபெற்றது.மேலும், ஆசிரியர்கள் / பெற்றோர்களுக்காக அமைக்கப்பட்ட அரங்கில் குழந்தைகளுக்கான உரிமைகள் என்ற தலைப்பில், இயக்குநர், தோழமை, சென்னை திரு.அ.தேவநேயன் அவர்கள், இயக்குநர்(குழந்தைகள் உரிமை மற்றும் மேம்பாட்டு மையம்) திருமதி ஸ்டெகானா ஜென்ஸி அவர்கள் மற்றும் இயக்குநர்(வளர்ச்சி, கல்வி மற்றும் செயல்பாடுக்கான நிறுவனம்) திரு.ம.ஆண்ரூ ஜேசுராஜ் அவர்கள் ஆகியோரின் சிறப்புரைகளும், குழந்தை ஆரோக்கியம் மற்றும் ஊட்டச்சத்து என்ற தலைப்பில், பொது நல மருத்துவர், மருத்துவ எழுத்தாளர், தேசிய அறிவியில் விருது பெற்றவர், இராஜபாளையம் மரு.கு.கணேசன் அவர்கள் மற்றும் குழந்தைகள் மன நல மருத்துவர் மரு.விது.பிரபா அவர்கள் ஆகியோரின் சிறப்புரைகளும், இணை இயக்குநர், தமிழ்நாடு பாடநூல் மற்றும் கல்வியியல் பணிகள் கழகம், டாக்டர் சங்கர சரவணன் அவர்களின் வினாடி வினா நிகழ்ச்சியும், திரு.தயா அவர்களின் மேஜிக் நிகழ்ச்சியும் நடைபெற்றது.இந்நிகழ்ச்சியில், பள்ளி மாணவர்கள், ஆசிரியர்கள், பெற்றோர்கள் உட்பட 1000-க்கும் மேற்பட்டவர்கள் கலந்து கொண்டு பயன்பெற்றனர்.
விருதுநகர் மாவட்ட ஆட்சியர் அலுவலகக் கூட்டரங்கில் (21.03.2025) போக்குவரத்துத்துறை சார்பில், மாவட்டத்தில் சிற்றுந்து புதிய வழித்தடத்திற்கு அனுமதி வழங்குவது குறித்த செயல்முறை ஆணையினை மாவட்ட ஆட்சித்தலைவர் முனைவர் வீ.ப.ஜெயசீலன், I A S, அவர்கள் வாகன உரிமையாளர்களுக்கு வழங்கினார்.விருதுநகர் மாவட்டத்தில், மினி பேருந்துக்கான புதிய விரிவான திட்டம் 2024, மோட்டார் வாகன சட்டம் 1988 ன் கீழ் G.O.MS. NO.33, நாள் 23.01.2025-ன் படி அரசாணை பிறப்பிக்கப்பட்டு பொதுமக்களின் நலன் கருதி அதிக குடும்பங்களைக் கொண்ட கிராமங்கள்,குக்கிராமங்கள் , குடியிருப்புகளில் உள்ள மக்களுக்கு போதுமான பொருளாதார மற்றும் ஒழுங்கான ஒருங்கிணைந்த சாலை போக்குவரத்து சேவையை அரசு வழங்குவதற்காகவும் 100 அல்லது அதற்கு மேற்பட்ட குடும்பங்களின் மக்கள் தொகை மற்றும் போதுமான பேருந்து சேவைகள் வழங்கப்பட்டுள்ள அருகில் உள்ள பேருந்து நிலையம் அல்லது அருகிலுள்ள நகரத்தை அடைய எந்த வழியும் இணைக்கப்படாமல் இருப்பதை உறுதி செய்யும் நோக்கிலும் தமிழக அரசால் மேற்படி அரசாணை வெளியிடப்பட்டுள்ளது.இந்த புதிய விரிவான திட்டம் 2024 வெளியீடு உடனடியாக அமலுக்கு கொண்டு வரும் நோக்கில் விருதுநகர் வட்டாரப்போக்குவரத்து அதிகாரி / மாவட்ட ஆட்சியர் அவர்களால் இதுவரை மூன்று அரசிதழ்கள் வெளியிடப்பட்டன. 56 புதிய வழித்தடங்கள் கண்டுபிடிக்கப்பட்டு அரசிதழில் விளம்பரப்படுத்தப்பட்டு 28.02.2025 க்குள் விண்ணப்பம் பெற கடைசி நாளாக அறிவிப்பு செய்யப்பட்டது.மாவட்ட அளவில் 14 புதிய வழித்தடத்திற்கு 16 விண்ணப்பம் வரப்பெற்று இந்த 16 விண்ணப்பத்திற்கும் 04.03.2025 அன்று வட்டாரப்போக்குவரத்து அதிகாரி , மாவட்ட ஆட்சியர் அவர்களால் செயல்முறை ஆணை வழங்கப்பட்டது.மீதமுள்ள வழித்தடங்களுக்கு மீண்டும் அறிவிப்பு செய்யப்பட்டு 20.03.2025 அன்று விண்ணப்பங்கள் பெற கடைசி தேதியாக தெரிவிக்கப்பட்டது. மாவட்ட அளவில் 3 விண்ணப்பங்கள் பெறப்பட்டது. இந்த மூன்று விண்ணப்பத்திற்கும் வட்டாரப்போக்குவரத்து அதிகாரி / மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்களால் 21.03-2025 செயல்முறை ஆணை வழங்கப்பட்டது.
விருதுநகர் மாவட்டம் ஆட்சியர் அலுவலகத்தில் (21.03.2025) விருதுநகர் மாவட்ட மத்தியக்கூட்டுறவு வங்கி சார்பில் நடைபெற்ற நிகழ்ச்சியில், 19 மகளிர் சுய உதவிக்குழுக்களுக்கு ரூ.1.55 கோடி மதிப்பிலான கடனுதவிகளையும், நெசவாளர் கூட்டுறவு சங்கங்களை சேர்ந்த 50 நெசவாளர்களுக்கு தலா ரூ.50 ஆயிரம் வீதம் ரூ.25 இலட்சம் மதிப்பிலான முத்ரா கடனுதவிகளையும் என மொத்தம் ரூ.1.80 கோடி மதிப்பிலான கடனுதவிகளை மாவட்ட ஆட்சித்தலைவர் முனைவர் வீ.ப.ஜெயசீலன்,I A S, அவர்கள் வழங்கினார்.மத்திய கூட்டுறவு வங்கி மூலமாக மகளிர்சுய உதவிக்குழுக்கள், மாற்றுத்திறனாளிகள், சிறு வணிகர்கள், மகளிர் தொழில் முனைவோர்கள், பணிபுரியும் மகளிர், மத்திய கால கடன், முத்ரா கடன், பண்ணை சாரா கடன், சம்பள கடன், வீட்டு வசதி கடன், முதலீட்டுக் கடன், குறு சிறு நடுத்தர தொழில் கடன் என சமுதாயத்தில் அனைத்து பிரிவினரும் பயன்பெறும் வகையில் இந்த கடன் திட்டம் வடிவமைக்கப்பட்டு செயல்படுத்தப்பட்டு வருகிறது.அதன்படி, விருதுநகர் மாவட்டத்தில், குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில்களான பேனா நிப், தீப்பெட்டி, திண்பண்டங்கள், பட்டாசு, பருத்தி சார்ந்த தொழில்களும், விவசாயம் சார்ந்த பொருட்களினுடைய வர்த்தகமும் சிறப்பாக நடைபெற்று வருகிறது.விருதுநகர் மாவட்டம் குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில்கள் மற்றும் வணிகங்கள், செய்தவற்கு உகந்த பகுதியாக இருக்கிறது. இங்கு நிறைய படித்த இளைஞர்கள், வேலைக்கான ஆட்கள் இருக்கக்கூடிய சூழலுடன் தமிழ்நாட்டிலேயே பெரிய அளவில் தொழில் புரியக்கூடிய மாவட்டமாக இருக்கிறது. மாவட்டத்தில் தொழில்களுக்கான மூலப் பொருட்களும், வர்த்தகம் செய்வதற்கான நிறைய வாய்ப்புகளும் இருக்கிறது. அதையெல்லாம் நன்கு பயன்படுத்திக் கொண்டு அனைவரும் சிறந்த தொழில் முனைவராக முன்னேறி சிறந்த பொருளாதாரத்தை பெற வேண்டும் என்று மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் தெரிவித்தார்.இந்நிகழ்ச்சியில், கூட்டுறவு சங்கங்களின் மண்டல இணைப்பதிவாளர் திரு.பா.செந்தில்குமார், துணைப்பதிவாளர்கள் திரு.குருசாமி, திரு.அந்தோணி மரிய டயர்ஸ், திரு. வீரபாண்டி, உதவி இயக்குநர்(கைத்தறி) திரு.வெங்கடேசலு, வங்கி பொது மேலாளர் திரு.சங்கரநாராயணன், அரசு அலுவலர்கள், கூட்டுறவு சங்க உறுப்பினர்கள், பயனாளிகள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.
விருதுநகர் மாவட்டத்திற்கு உட்பட்ட 450 கிராம ஊராட்சிகளில் உலக தண்ணீர் தினமான 23.03.2025 - அன்று நடைபெற இருந்த கிராம சபைக் கூட்டம் - கலைஞர் கனவு இல்ல திட்டங்களின் பயனாளிகள் தேர்வு மற்றும் திட்ட பணிகளை இறுதி செய்தல் மற்றும் நிர்வாக காரணங்களுக்காக ஒத்திவைக்கப்பட்டது - மேற்படி ஓத்திவைக்கப்பட்ட கிராம சபைக் கூட்டமானது 29.03.2025 - அன்று நடத்த தெரிவிக்கப்பட்டுள்ளது. அதனடிப்படையில் இக்கூட்டத்தில் கீழ்க்காணும் கூட்டப் பொருள்கள் குறித்து விவாதிக்கப்பட உள்ளது.1. உலக தண்ணீர் தினத்தின் சுருப்பொருளினைப் பற்றி விவாதித்தல்• வான்தரும் மழைநீரினை சேகரித்தல்.• சிக்கனமாக தண்ணீரைப் பயன்படுத்துதல்.• உடைந்த குழாய்களை சரி செய்து நீர் வீணாகாமல் பாதுகாத்தல்.• மறுசுழற்சிக்கு உட்படுத்துதல்.• நிலத்தடி நீரை செறியூட்டுதல்.• நீரின் தூய்மையை பாதுகாத்தல் மற்றும் நீர் மாசுக்கட்டுப்பட்டைத் தடுத்தல்.• மரம் வளர்த்தலை ஊக்குவித்தல்,வீட்டுக்கொரு மரம் வளர்த்தல்.• நீர்நிலைகளில் ஆக்கிரமிப்பை அகற்றி புனரமைத்தல்.• நீhநிலைகளின் தண்ணீர் சேகரமாக உரிய கால்வாய்களை தூர்வாரி புனரமைத்தல்.• நீரின் முக்கியத்துவத்தை குழந்தைகளிடம் எடுத்துக் கூறுதல். 2. கிராம ஊராட்சி நிர்வாகம் மற்றும் பொது நிதி செலவினம் குறித்து விவாதித்தல். (01.04.2024 முதல்28.02.2025 வரை) 3. கிராம ஊராட்சியின் தணிக்கை அறிக்கை குறித்து விவாதித்தல். 4. சுத்தமான குடிநீர் விநியோகத்தினை உறுதி செய்வது குறித்து விவாதித்தல். சுத்தமான குடிநீர் விநியோகத்தினை உறுதி செய்தல்,மேல் நிலை நீர் தேக்கத் தொட்டி, தரைமட்ட நீர் தேக்கத் தொட்டி மாதம் இருமுறை சுத்தம் செய்தல; (பிரிதி மாதம் 5 - ம் தேதி மற்றும் 20 - ம் தேதி).• தினமும் தகுந்த அளவு குடிளோரின் கலந்து குடிநீர் விநியோகத்தினை உறுதி செய்தல்.• இதர பொருட்கள் குறித்து விவாதித்தல்.எனவே, 29.03.2025 அன்று நடைபெறவுள்ள கிராம சபை கூட்டத்தில் பொது மக்கள் அனைவரும் தவறாது கலந்து கொண்டு பயனடைய வேண்டுமென மாவட்ட ஆட்சித்தலைவர் முனைவர் வீ.ப.ஜெயசீலன்,I A S, அவர்கள் தெரிவித்துள்ளார்.
விருதுநகர் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் (20.03.2025) வெம்பக்கோட்டை, கல்லமநாயக்கர்பட்டி எஸ். எம். எஸ் கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் பயின்று வரும் 60 மாணவ, மாணவியர்களுடன் நடைபெற்ற ‘Coffee With Collector” என்ற 158- வது கலந்துரையாடல் நிகழ்ச்சியில் மாவட்ட ஆட்சித்தலைவர் முனைவர் வீ.ப.ஜெயசீலன்,I A S., அவர்கள் மாணவர்களுடன் கலந்துரையாடி, கல்லூரிகள் தேர்வு, உயர்கல்வி, வேலைவாய்ப்பு மற்றும் சுற்றுச்சூழலின் முக்கியத்துவம் குறித்த உரிய வழிகாட்டுதல் வழங்கினார்.விருதுநகர் மாவட்டத்தில் பள்ளி மற்றும் கல்லூரியில் பயிலும் மாணவ / மாணவியர்களுடன் கல்வி, பொது அறிவு, விளையாட்டு, ஓவியம், இசை உள்ளிட்ட பல்வேறு திறன் அடிப்படையில் மாணாக்கர்களின் திறன்களை கண்டறிந்து, மாணவ, மாணவியர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டு பிரதி வாரம் ஒருமுறை அவர்களை மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் நேரில் அழைத்து கலந்துரையாடும் நிகழ்ச்சி தொடங்கப்பட்டு, இன்று 158 -வது முறையாக கலந்துரையாடல் நிகழ்ச்சி நடைபெற்றது.இந்த நிகழ்ச்சியின் முக்கிய நோக்கம், பள்ளி மற்றும் கல்லூரியில் பயிலும் மாணவர்களுடைய உயர்ந்த இலட்சியம், அவர்களுடைய உயர்கல்வி பயில்வதற்கு வழிகாட்டுதல், போட்டி தேர்வுகளை எதிர்கொள்ளுதல், தோல்வியை எவ்வாறு எதிர்கொள்வது, அவர்களுக்கு கல்வி, வேலைவாய்ப்பு உள்ளிட்ட பல்வேறு பிரிவுகளில் அவர்களுடைய சந்தேகங்களை அகற்றி, அவர்கள் வாழ்க்கையில் எங்கு பிறந்தோம், நாம் அரசு பள்ளியில் பயின்றோம், நமக்கு வசதி இல்லை, நமக்கு பின்புலம் இல்லை என்பதெல்லாம், வாழ்க்கையில் ஒரு உயர்ந்த இடத்தை அடைவதற்கு ஒரு தடை இல்லை என்பதை புரிய வைத்து, தன்னம்பிக்கை, விடாமுயற்சி, கடின உழைப்புடன் தொடர்ந்து உழைத்தால் நாம் எதையும் சாதிக்க முடியும் என்பதை உணர்த்தும் வகையில் சரியான வழிகாட்டுதல் வழங்குவதே இந்த நிகழ்ச்சியின் முக்கிய நோக்கமாகும்.பள்ளி, கல்லூரி படிப்பு என்பது ஒருவரின் வாழ்க்கையில் ஒருமுறை மட்டுமே கிடைக்கும். எனவே பள்ளி மற்றும் கல்லூரி படிப்பின் மூலம் வாழ்க்கைக்கான பல அனுபவங்களை கற்றுக் கொள்ளலாம். அனுபவங்களில் இருந்து கிடைக்கும் கல்விதான் சிறந்த கல்வியாகும்.தமிழ் ஆர்வத்தை வளர்த்தல், சிறுகதை படைத்தல், படைப்பிலங்கியங்கள், தமிழ் அறிஞர்கள் குறித்தும் கல்லூரி மாணவிகளிடம் மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் கலந்துரையாடினார்.கல்லூரி படிப்பில் சேர்வதற்கு விருப்பத்தின் அடிப்படையில் மட்டும் முடிவு எடுத்தல் கூடாது. அனைவருக்கும் இலட்சியம் உண்டு. இலட்சியத்தை அடைவதற்கு தொடர்ந்து விடா முயற்சி செய்ய வேண்டும். நிலையான தொடர்ச்சியான சிறிய முயற்சிகள் பெரிய மாற்றங்களை ஏற்படுத்துகிறது.மேலும், ஒவ்வொருவருக்கும் என்று தனித்திறமைகள் உள்ளன. அத்திறமைகளை அனைவரும் வளர்த்து கொண்டு வாழ்வில் முன்னேற வேண்டும் என மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் தெரிவித்தார்.இந்த சந்திப்பில் கல்லூரியில் பயிலும் மாணவியர்கள்; உற்சாகத்துடன் கலந்து கொண்டு, இந்த நிகழ்ச்சி மூலம் எங்களுக்கு ஒரு புத்துணர்வு, ஊக்கம் அளிப்பதாகவும், மாவட்ட ஆட்சியர் போன்று தாங்களும் சாதிக்க வேண்டும் என்ற எண்ணம் உருவாகி உள்ளதாகவும், எங்களுடைய கேள்விகள் மற்றும் சந்தேகங்களுக்கு மாவட்ட ஆட்சியர் தெளிவான விடை கொடுத்ததாகவும், நாங்களும் மாவட்ட ஆட்சியர் போன்று சாதித்து காட்டுவோம் என்றும், இந்த நிகழ்ச்சி ஏற்பாடு செய்ததற்கு மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்களுக்கு மாணவர்கள் தங்களது நன்றிகளை தெரிவித்துக்கொண்டனர்.