25 YEARS OF EXCELLENCE

சமீபத்திய நிகழ்வுகள்:
ராஜபாளையம் தொழிலாளர் சங்கம் சார்பில், சமூக நலத்துறை அமைச்சர் ஜெகதீஸ்வரிக்கு பாராட்டு விழா >> ராஜபாளையம் செண்பகத் தோப்பு ரோடு கன்னிமார் கோயில் கும்பாபிஷேகம் . >> பூஜ்யஸ்ரீ ஓங்காராநந்த மஹாஸ்வாமிகள் அநுக்ரஹத்துடன் ஆதிகுரு ஸ்ரீப்ரஜ்ஞா தக்ஷிணாமூர்த்தி வித்யாபீட வர்ஷாபிஷேக விழா. >> திருமங்கலம் - ராஜபாளையம் இடையேயான புதிய 4 வழிச்சாலையில், நத்தம்பட்டி சுங்கச்சாவடி நேற்று முதல் பயன்பாட்டுக்கு வந்தது. >> தமிழ்நாடு கலை இலக்கியப் பெருமன்றம்" இராசபாளையம் ரஜினி பெத்துராஜா படைப்புலகம். >> மாம்பழங்களின் வரத்து அதிகரித்து உள்ளது, ராஜபாளையம் பகுதிகளில் ….. >> ராஜபாளையம்-தென்காசி சாலையில் அமைந்துள்ள புதுப்பாளையம் பெரிய மாரியம்மன் கோவிலில் பூக்குழி திருவிழா. >> ராஜபாளையம் காந்தி கலை மன்றத்தில் புத்தக கண்காட்சி . >> ராஜபாளையம் 6-வது மைல் தேக்கத்தில், வெயிலின் தாக்கத்தால் நீர்மட்டம் குறைந்து 8 அடி மட்டும்தான் தண்ணீர் உள்ளது. >> சித்திரை மாதம்,தமிழ்ப்புத்தாண்டை முன்னிட்டு விருதுநகர் மாவட்டத்தில் உள்ள கோயில்களில்  திரளான மக்கள் சுவாமி தரிசனம் செய்தனர். >>


செய்தி மக்கள் தொடர்பு அலுவலகம் விருதுநகர் மாவட்டம்

Mar 14, 2025

நில உடமைகளை பதிவு செய்து தனித்துவ அடையாள எண் பெறும் விவசாயிகள் மட்டுமே பிரதம மந்திரி விவசாயிகளின் கௌரவ நிதி உதவி தொகை பெறலாம்

விருதுநகர் மாவட்டத்தில் விவசாயிகளின் நில உடமைகளை சரிபார்த்தல் மற்றும் விவசாயிகளுக்கு அடையாள எண்  உருவாக்குதல்   பணிகள்  நடைபெற்று வருகிறது.வேளாண்மை உழவர் நலத்துறை பணியாளர்கள் மூலம் விவசாயிகளின் நில உடமைகளை சரிபார்த்து விவசாயிகளுக்கு அடையாள எண் உருவாக்குதல்  பணிகள் நடைபெற்று வருகிறது.  இல்லம் தேடி கல்வி தன்னார்வலர்கள், சமுதாய வளபயிற்றுனர்கள் (CRP)  ஆகியோரும் இணைந்து இப்பணியினை மேற்கொண்டு வருகின்றனர். விருதுநகர் மாவட்டத்தில் மொத்தம் 51,681 பயனாளிகள் பிரதம மந்திரியின் விவசாயிகள் கௌரவ  நிதி தொகையினை பெற்று வருகின்றனர். ஆனால் 22,258 விவசாயிகள் மட்டுமே தனித்துவ அடையாள எண் பெற பதிவு செய்துள்ளனர்.விருதுநகர் மாவட்ட விவசாயிகள் தங்களின் சொந்த கிராமங்களை விட்டு வேறு இடத்தில் வசித்தாலும் அருகில் உள்ள அனைத்து  இ-சேவை மையங்களில் தங்களின் நில உடமைகளை இலவசமாக பதிவு செய்து பயன்பெறலாம்.  தங்களுடைய பட்டா, ஆதார் அட்டை மற்றும் அலைபேசி எண் கொண்டு சென்று பதிவு செய்யக் கேட்டுக் கொள்ளப்படுகிறது. இவ்வாறு பதிவு செய்யப்பட்டு அடையாள எண் பெறும் விவசாயிகளுக்கு மட்டுமே மத்திய, மாநில அரசுகளின் மானிய திட்டங்களை ஒற்றை சாளர முறையில் பயன்படுத்த முடியும்.மீதம் உள்ள 29,423 விவசாயிகள் வருகிற மார்ச்-31-ம் தேதிக்குள் தங்களின் நில உடமைகளை பதிவு செய்து அடையாள எண் பெற்று பயனடைய வேண்டும் என மாவட்ட ஆட்சித்தலைவர் முனைவர் வீ.ப.ஜெயசீலன்,I A S., அவர்கள் தெரிவித்துள்ளார்.

Mar 14, 2025

பிரதம மந்திரி இன்டர்ன்ஷிப் திட்டம் மற்றும் வேலைவாய்ப்பு பயிற்சி மற்றும் நான் முதல்வன் பினிஸிங் ஸ்கூல் திட்டத்தின் கீழ் தொழிலக பயிற்சியுடன் கூடிய வேலைவாய்ப்பு சேர்க்கைக்கு விண்ணப்பிக்க 31.03.2025-அன்று வரை காலநீட்டிப்பு செய்யப்பட்டுள்ளது

பிரதம மந்திரி இன்டர்ன்ஷிப் திட்டத்தின்கீழ்; வேலைவாய்ப்பு பயிற்சி  (PM INTERNSHIP)  வழங்கும் திட்டத்தின்வாயிலான நடப்பாண்டில் தமிழ்நாட்டில் ஏறத்தாழ 14889 நபர்களுக்கு முன்னனி தொழிற்நிறுவனங்களின் வேலைவாய்ப்பு உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன்படி விருதுநகர் மாவட்டத்தில் இத்திட்டத்தில் சேர்வதற்கு தேவையான கல்வி தகுதியுடைய 10-ம் வகுப்பு, 12-ம் வகுப்பு, தொழிற்கல்வி, பட்டயப்பொறியாளர், இளங்கலை கலை, அறிவியல், வணிகவியல், கணினி பயன்பாடு, வணிக நிர்வாகம் மற்றும் பார்மஸி பட்டம் முடித்த வேலைவாய்ப்பற்ற இளைஞர்களுக்காக பயிற்சி அளிக்கும் பொருட்டு இணையதளத்தில் பதிவு செய்திடும் பணி நடைபெற்று வருகிறது.  இத்திட்டத்தின்கீழ் பயிற்சி பெற 21 முதல் 24 வயதிற்குள் இருக்க வேண்டும். பயிற்சிக்காலத்தில்12மாதங்களுக்குஉதவித்தொகையாக மாதத்திற்கு ரூ.5000- வீதம் வழங்கப்படும்.மேலும், பயிற்சிக்காலத்தில் ஒருமுறை மட்டும் மானியமாக ரூ.6000 வழங்கப்படும். இத்திட்டத்தில் பயிற்சி பெற விரும்புவர்கள் கல்விச்சான்றிதழ்கள், ஆதார் அட்டை மற்றும் ஆதார் அட்டையுடன் இணைக்கப்பட்ட கைபேசியுடன் வரவேண்டும் என கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். மேலும், ஏற்கனவே தேசிய தொழிற்பழகுநர் திட்டத்தில் தொழிற் பழகுநர் பயிற்சி பெற்றிருக்க கூடாது. மேலும் முழுநேர பணிசெய்பவராகவோ, முழுநேரக் கல்வி கற்பவராக இருக்ககூடாது. இத்திட்டத்தில்  விண்ணப்பிக்க 31.03.2025 அன்று கடைசி நாளாகும்.விருதுநகர் மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலக தொழில்நெறிவழிகாட்டுமையம் மற்றும் விருதுநகர், சூலக்கரை அரசினர் தொழிற் பயிற்சி நிலைய வளாகத்தில் அமைந்துள்ள மாவட்ட திறன் பயிற்சி அலுவலகத்தில் தற்போது இதற்காக இணையவழி பதிவுகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.மேற்கண்ட பயிற்சியில் சேர விருப்பமுள்ளவர்கள் அரசு வேலை நாட்களில் காலை10.00 மணி முதல் மாலை 5.00 மணி வரை மேற்க்கண்ட கல்விச்சான்றிதழ்களுடன் நேரில் வந்து பதிவு செய்யலாம். மேலும் தகவலுக்கு (04562 -294755) என்ற  தொலைபேசி எண்ணில் தொடர்பு கொள்ளலாம். மேலும் இத்திட்டத்தில் நேரடியாக விண்ணப்பிக்க விரும்புவோர் https://pminternship.mcg.gov.in/ என்ற வலைதளத்தையும் பயன்படுத்திக்கொள்ளலாம்.மேலும், நான் முதல்வன் பினிஸிங் ஸ்கூல் (NMFS) என்னும் வேலைவாய்ப்புடன் கூடிய பயிற்சித்திட்டத்தில் இணைந்து பயிற்சி பெற விரும்புவோர் 16 வயது முதல் 45 வரை உள்ளவர்கள் அதற்கென பிரத்யேகமாக உருவாக்கப்பட்டுள்ள இணையதள முகவரியில் https://candidate.tnskill.tn.gov.in இல் விண்ணப்பிக்கலாம். மேற்கண்ட இருதிட்டங்களிலும் விண்ணப்பிக்க விரும்புவோர் மேற்காணும் வலைதளங்களில் நேரடியாகவும் விண்ணப்பிக்கலாம் என மாவட்ட ஆட்சித்தலைவர் முனைவர் வீ.ப.ஜெயசீலன்,I A S,, அவர்கள் தெரிவித்துள்ளார்.

Mar 14, 2025

தமிழ்நாடு காலநிலை மாற்றம் மற்றும் மாவட்ட காலநிலை மாற்ற இயக்கம் சார்பில் காலநிலை மாற்றத்தில் ஊடகவியலாளர்களின் பங்கு என்ற தலைப்பில் திறன் மேம்பாட்டு பயிற்சிப் பட்டறை மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் தலைமையில் நடைபெற்றது.

விருதுநகர் மாவட்ட ஆட்சியர் அலுவலகக் கூட்டரங்கில்  (14.03.2025) அன்றுவிருதுநகர் மாவட்ட காலநிலை மாற்ற இயக்கம் மற்றும் திருவில்லிபுத்தூர் மேகமலை புலிகள் காப்பகம் இணைந்து நடத்தும் காலநிலை மாற்றத்தில்  ஊடகவியலாளர்களின் பங்கு என்ற தலைப்பில்  திறன் மேம்பாட்டு பயிற்சிக்கான பட்டறை மாவட்ட ஆட்சித்தலைவர் முனைவர் வீ.ப.ஜெயசீலன் I A S, அவர்கள் தலைமையில் நடைபெற்றது.குறிப்பாக மனிதர்களுக்கு தீங்கு விளைவிக்கக் கூடிய காற்று மாசு எந்த அளவிற்கு இருக்கிறது என்று பார்த்தால், சுவாசிப்பதற்கு தகுந்த அளவீடுகளில் மிகவும் குறைவாக இருக்கிறது. சமீப காலமாக காற்று மாசுப்பாட்டின் காரணமாக நுரையீரல் சார்ந்த பிரச்சினைகள் ஏற்படுகிறது. குறிப்பாக பெரிய நகரங்களில் திடக்கழிவு மேலாண்மை முறையாக செய்யாமல் பிளாஸ்டிக் உள்ளிட்ட கழிவுகளை எரிப்பதால் காற்றில் ஏற்படக்கூடி மாசுக்களின் காரணமாக நீண்ட காலத்தில் நுரையீரல் சார்ந்த ஆஸ்துமா நோய் ஏற்பட்டவர்களுக்கு மிகுந்த பாதிப்பை ஏற்படுத்துகிறது. இதற்கு முக்கியமான காரணம் சுற்றுச்சூழல் பிரச்சினைகள் தான்.       நீர்நிலைகள் பிளாஸ்டிக் கழிவுகளால் மாசடைகிறது. நமக்கு இருக்கக்கூடிய முக்கிய பொறுப்புகலில் முக்கியமானது பிளாஸ்டிக் பொருட்களை குறைப்பது. குறிப்பாக ஒருமுறை பயன்படுத்தக்கூடிய நெகிழியின் பயன்பாட்டை குறைக்க முடியுமா என்றால் கண்டிப்பாக முடியும். சுற்றுச்சூழல் பருவநிலை மாற்றத்தை பார்த்தோம் என்றால் தனிநபரின் உடல் நலனில் பிரச்சினை, சமூகத்தின் உடைய சுற்றுப்புற சுகாதாரத்திற்கு பிரச்சினை, கண்ணுக்கு தெரியாத நாம் நேரடியாக பார்க்க முடியாத  நம் உணவு உற்பத்தியிலும் பிரச்சினை என்று அனைத்திலும் சுற்றுச்சூழல் மற்றும் பருவநிலைத் தாக்கத்தின் பிரச்சினை அதிகமாகி கொண்டே இருக்கிறது. உலகம் ழுழுவதும் சுற்றுச்சூழல் பற்றி விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகின்றனர். ஓவ்வொரு வீடுகளிலும் மக்கும் குப்பை மற்றும் மக்காத குப்பை என்று குப்பைகளை தனித்தனியாக பிரித்து வழங்க வேண்டும். இதற்கு  பொதுமக்களின் ஒத்துழைப்பு மிகவும் முக்கியமானதாகும்.எனவே, ஒரு நிர்வாக அமைப்புகளோ, அரசு இயந்திரங்களோ மட்டுமே சுற்றுசூழல் தொடர்புடைய பருவ நிலை மாற்றங்கள் தொடர்பாக ஏற்படக் கூடியஅடிப்படை பிரச்சனைகளுக்கும், பாதிப்புகளுக்கும் தீர்வு காண இயலாது.  அனைவரும் ஒன்றிணைந்து  செயல்பட வேண்டும். அனைத்து தரப்பு மக்களும் இணைந்தால் மட்டுமே சுற்றுச்சூழல் மற்றும் பருவநிலை மாற்றத்திற்கான பாதிப்புகளை தடுக்க முடியும்.மேலும், பொதுமக்கள் நடைமுறை வாழ்க்கையில் பிளாஸ்டிக்கை தவிர்த்து, வீட்டு உபயோக பொருட்களை பயன்படுத்த வேண்டும். நவீன தொழிநுட்ப பயன்பாடுகளை அதிகம் குறைத்து நெகிழிகளை தவிர்க்க வேண்டும். அதற்காக அரசு பல திட்டங்களை நடைமுறைபடுத்தி வருகிறது. தமிழ்நாடு அரசின் உடைய பசுமை இயக்கத்தின் மூலமாக மஞ்சப்பை விழிப்புணர்வை ஏற்படுத்தினார்கள்.  எனவே, பொதுமக்களுக்கு பிளாஸ்டிக் குறித்த விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும். எந்த ஒரு சுற்றுச்சூழல் பிரச்சினையும் நமக்கு இருக்கக்கூடிய பல பிரச்சினைகளில் ஒரு பிரச்சினை என்று கருதாமல், இதற்கு முக்கியத்துவம் தந்து  செயல்பட்டால் தான் அடுத்த  தலைமுறையினரை பாதுகாக்க முடியும். இது குறிப்பாக நேரடியாக மக்களை பாதிக்க துவங்கி விட்டது. தனிநபரின் உடல் நலனை, நம் உணவு உற்பத்தியை, நம்முடைய சுற்றுச்சூழலை, நீர்நிலைகள் மற்றும் கழிவுநீர் மேலாண்மையை பாதிக்கிறது.இவ்வாறு நேரடியாக மனிதனை பாதிக்க தொடங்கி விட்டது.  சூற்றுச்சூழல் மற்றும் கால நிலை மாற்றப் பிரச்சினைகளை அனைவரும் புரிந்து கொள்ள வேண்டும். குறிப்பாக பத்திரிக்கைககள் மற்றும் ஊடகத்தில் பணிபுரிபவர்கள் இது குறித்து நன்கு புரிந்து கொண்டால் தான் அறிவுப்பூர்வமான பிரச்சனைகளை மக்களுக்கு எடுத்து சொல்ல முடியும். அது குறித்து பிரச்சனைகளை கவனமாக கையாளமுடியும் என்பதற்காக இந்த நிகழ்ச்சி ஏற்பாடு செய்யப்பட்டு இருக்கிறது என மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் தெரிவித்தார்.பின்னர், மரு.கிருபா நந்தினி  அவர்கள் சமூக வலைதளத்தில் பறவைகள் என்ற தலைப்பிலும்,திரு.சித்தரவேல்  அவர்கள், முனைவர் ஜெயபிரகாஷ் தர்மராஜ்  அவர்கள் மற்றும் மரு.ஜெயகுமரன் அவர்கள் ஆகியோர்கள் காலநிலை மாற்றத்தில் ஊடகவியலாளரின் பங்கு என்ற தலைப்பிலும்,திரு.முத்துக்கிருஷ்ணன் அவர்கள் காலநிலை மாற்றம் பற்றி பத்திரிகை அணுகுமுறைகள் என்ற தலைப்பிலும் உரையாற்றினார்கள் இந்நிகழ்ச்சியில் திருவில்லிபுத்தூர் மேகமலை புலிகள் காப்பகம் துணை இயக்குநர் திரு.ப.தேவராஜ்,இ.வ.ப.,அவர்கள், பத்திரிகையாளர்கள் மற்றும் அரசு அலுவலர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

Mar 13, 2025

வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத்துறை அமைச்சர் அவர்கள் சாத்தூர், அருப்புக்கோட்டை மற்றும் வெம்பக்கோட்டை ஆகிய வட்டாரங்களில் செயல்படுத்தப்பட்டு வரும் வளர்ச்சித் திட்டப் பணிகள் குறித்து ஆய்வு.

விருதுநகர் மாவட்டம், சாத்தூர் வெங்கடேஸ்வரா மஹாலில் (13.03.2025)  மாவட்ட ஆட்சித்தலைவர் முனைவர் வீ.ப.ஜெயசீலன், I A S.,  அவர்கள் தலைமையில், சாத்தூர் சட்டமன்ற உறுப்பினர் திரு.ஏ.ஆர்.ஆர்.ரகுராமன் அவர்கள் முன்னிலையில்,  வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத்துறை அமைச்சர் திரு.கே.கே.எஸ்.எஸ்.ஆர்.ராமச்சந்திரன் அவர்கள், சாத்தூர், அருப்புக்கோட்டை மற்றும் வெம்பக்கோட்டை ஆகிய வட்டாரங்களில் செயல்படுத்தப்பட்டு வரும் வளர்ச்சித் திட்டப் பணிகள் குறித்து ஆய்வு மேற்கொண்டார்.அதன்படி, பொதுப்பணித்துறை, தமிழ்நாடு மின்சார வாரியம், நெடுஞ்சாலைத்துறை, தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரியம் மூலம் மாவட்டத்தில் செயல்படுத்தப்பட்டு வரும் நகராட்சிகளுக்கான கூட்டுக் குடிநீர் திட்டம், கிராம குடியிருப்புகளுக்கான கூட்டு குடிநீர் திட்டம், பாதாள சாக்கடை திட்டம், ஒருங்கிணைந்த குழந்தை வளர்ச்சிப் பணிகள், நீர்வளத்துறை, சுகாதாரத்துறை, பள்ளிக் கல்வித்துறை, மதிய உணவு திட்டம், வேளாண்மைத்துறை, கால்நடை பராமரிப்புத்துறை, நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை, 15 வது பொது நிதி குழு மானியத்தின் கீழ் செயல்படுத்தப்பட்டு வரும் பணிகள், மாநில நகர உட்கட்டமைப்பு மேம்பாட்டு நிதி, கலைஞர் நகர்ப்புற மேம்பாட்டு திட்டம், மாநில நிதி கழகம், கலைஞரின் கனவு இல்லம், ஊரக வீடுகள் சீரமைப்பு திட்டம், இலங்கை தமிழர் மறுவாழ்வு முகாம்களில் உள்ள தமிழர்களுக்கான நலத்திட்டங்கள், பிரதம மந்திரி குடியிருப்பு வீடுகள் திட்டம்,  அனைத்து கிராம அண்ணா மறுமலர்ச்சித் திட்டம், பொது நூலகத்துறை, சட்டமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு நிதி, பாராளுமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு நிதி, நமக்கு நாமே திட்டம், நபார்டு நிதி, மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதித் திட்டம், தூய்மை பாரத இயக்கம், அனைத்து வீடுகளுக்கான குடிநீர் இணைப்பு வழங்கும் உயிர் நீர் இயக்கம், நெடுஞ்சாலை சாலை மற்றும் சிறு பாலங்கள், முதலமைச்சரின் கிராம சாலை மேம்பாட்டு திட்டம், பொது நிதி, கனிமவள நிதி உட்பட பல்வேறு திட்டங்கள் மற்றும் நிதிகளின் மூலம் செயல்படுத்தப்பட்டுள்ள பணிகள் மற்றும் மேற்கொள்ளப்படவுள்ள பணிகள், இலக்கு நிர்ணயம் செய்யப்பட்ட பணிகள், முடிவுற்ற பணிகள், நிலுவையில் உள்ள பணிகள் குறித்தும் ஆய்வு மேற்கொண்டு, நிலுவையில் உள்ள பணிகள் மற்றும் நடைபெற்று வரும் பணிகளை தரமாக விரைந்து முடித்து பொதுமக்கள் பயன்பாட்டிற்கு கொண்டு வர வேண்டும் என தொடர்புடைய அரசு அலுவலர்களை  வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத்துறை அமைச்சர்  அவர்கள் அறிவுறுத்தினார்.மேலும், பல்வேறு துறைகளுக்கு ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ள பணிகள், நிலுவையிலுள்ள பணிகள், முடிவுற்ற பணிகள், நடைபெற்று வரும் பணிகளை விரைந்தும், தரமானதாகவும் உரிய காலத்திற்குள் செய்து முடித்து பொது மக்களின் பயன்பாட்டிற்கு கொண்டு வர வேண்டும் என தொடர்புடைய அரசு அலுவலர்களை அறிவுறுத்தினார். தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களின் தலைமையிலான அரசு கடந்த நான்கு ஆண்டுகளில் அரசின் அனைத்து திட்டங்களும் சாமானிய மக்களுக்கும் கிடைக்க வேண்டும் என்ற நோக்கில் செயல்பட்டு வருகிறது. விருதுநகர் மாவட்டத்தில் மேற்கொள்ள வேண்டிய பணிகள், பிரத்யேக திட்டங்கள் உள்ளிட்டவைகள் குறித்து தொடர்ச்சியாக அரசின் கவனத்திற்கு கொண்டு சென்று நிறைவேற்றப்பட்டு வருகிறது.ஊராட்சி ஒன்றியங்களில் மக்கள் பிரதிநிதிகள் இல்லாததால் அரசு அதிகாரிகள் மக்களிடமிருந்து பெறப்படும் கோரிக்கைகளை உடனுக்குடன் நிறைவேற்றிட வேண்டும். குடிநீர் விநியோகம் தொடர்பாக உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். குப்பைகளை அகற்றுதல், தெரு விளக்குகள் அமைத்தல் கோரிக்கைகள் தொடர்பாக உடனடியாக நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்.கலைஞர் கனவு இல்லம் திட்டத்தின் கீழ் மாவட்டத்தில் மேற்கொள்ளப்பட்டு வரும் பணிகளை தொடர்ந்து கண்காணிக்க வேண்டும். தகுதியான பயனாளிகளை கண்டறிந்து அவர்களுக்கென அரசு நலத்திட்டங்களை கொண்டு சேர்க்க வேண்டும். சாலை மேம்பாட்டு பணிகளை உரிய நேரத்தில் முடிக்க வேண்டும். அருப்புக்கோட்டை மற்றும் இராஜபாளையம் அரசு மருத்துவமனை கூடுதல் கட்டடங்கள் திட்டப் பணிகளை முடித்து பொதுமக்களின் பயன்பாட்டிற்கு மிக விரைவில் கொண்டுவர வேண்டும்.ஊரக வளர்ச்சித் துறை சார்பில் மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி அமைத்து தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரியத்துடன் இணைந்து, தண்ணீர் வழங்காமல் உள்ள கிராமங்களில் சம்மந்தப்பட்ட துறைகளை ஒருங்கிணைத்து குடிநீர் விநியோகம் செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும்.மேலும், மாவட்டத்தில் செயல்படுத்தப்பட்டு வரும் திட்டங்களில் நிர்வாக சிக்கல் இருக்கும்பட்சத்தில் அதனை மாவட்ட நிர்வாகத்திற்கு கொண்டு சென்று நிவர்த்தி செய்வதற்கான முயற்சிகளைசெய்யவேண்டும்எனதெரிவித்தார்.இந்நிகழ்ச்சியில் அனைத்துத்துறை அரசு அலுவலர்கள், உள்ளாட்சி பிரதிநிதிகள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

Mar 13, 2025

இக்குழந்தைகளை பற்றிய விவரங்கள் மற்றும் பெற்றோர் அல்லது உறவினர்கள் பற்றிய தகவல்கள் தெரிந்தால், இவ்வறிவிப்பு வெளியான 21 நாட்களுக்குள் மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலகிற்கு தகவல் தெரிவிக்கலாம்.

சிறுவன் இப்ராஹிம் (16) கேரளா மாநிலம், மலப்புரம் குழந்தைகள் நலக்குழுவில் முன்னிலைப்படுத்தப்பட்டார். கேரளா மாநிலம், மலப்புரம் மாவட்டத்தில் கோவிட் பெருந்தொற்றினால் தந்தை இறந்து விட்டநிலையில் தாயார் எங்கு இருக்கிறார் என்று தெரியாத நிலையில் இருந்த சிறுவன். இப்ராஹிம் (16) என்பவரை கேரளா மாநிலம், மலப்புரம் மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலகின் மூலமாக தற்காலிக வளர்ப்பு பராமரிப்பு திட்டத்தின் மூலம் தகுதியான குடும்பத்தில் இணைத்துள்ளனர். சிறுமி. பத்ரா பேபி (17) அவருடைய தாயார் கேரளா மாநிலத்தில் இருந்து வரும் நிலையில், தந்தை தமிழ்நாட்டை சேர்ந்தவர் என்றும், அவர் சிறுமியை கவனித்து கொள்வதற்கு தயாராக இல்லை என்று தாயார் தெரிவித்துள்ளார் என்பதால் சிறுமி பத்ரா பேபி (17) என்பவரை கேரளா மாநிலம், மலப்புரம் மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலகின் மூலமாக தற்காலிக வளர்ப்பு பராமரிப்பு திட்டத்தில் இணைக்கப்பட்டுள்ளார்.இக்குழந்தைகளை பற்றிய விவரங்கள் மற்றும் பெற்றோர் அல்லது உறவினர்கள் பற்றிய தகவல்கள் தெரிந்தால், இவ்வறிவிப்பு வெளியான 21 நாட்களுக்குள் மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலகிற்கு தகவல் தெரிவிக்கலாம். மேலும், குழந்தையை உரிமை கோரி எவரும் தொடர்பு கொள்ளாத நிலையில், கேரளா மாநிலம், மலப்புரம் குழந்தைகள் நலக்குழுவினால் குழந்தைகளுக்கு சட்டப்படி தத்து கொடுப்பதற்கு தடையில்லா சான்று வழங்கப்படும்.  மேலும் விவரங்களுக்கு, மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலர், மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலகு, 2/830-5. வ.உ.சி. நகர், சூலக்கரைமேடு, விருதுநகர் - 626003. தொலைபேசி -  04562 - 293946 என்ற முகவரியை தொடர்பு கொள்ளலாம் என மாவட்ட ஆட்சித்தலைவர் முனைவர் வீ.ப.ஜெயசீலன்,   I A S, அவர்கள் தெரிவித்துள்ளார்.

Mar 13, 2025

விருதுநகர் மாவட்டம் தேசிய சுகாதார திட்டத்தில் மாவட்ட சுகாதார சங்கம் மூலம் முற்றிலும் தற்காலிக ஒப்பந்த அடிப்படையில் பணியாளர்கள் நிரப்பப்பட உள்ளது.

விருதுநகர் மாவட்டம் தேசிய சுகாதார திட்டத்தில் மாவட்ட சுகாதார சங்கம் மூலம் முற்றிலும் தற்காலிக ஒப்பந்த அடிப்படையில்  2 மருத்துவ அலுவலர்கள், 2 செவிலியர்கள், 2 சுகாதார ஆய்வாளர்கள், 2 மருத்துவமனை பணியாளர்கள்  நிரப்பப்பட உள்ளது.இப்பணியிடங்களை நிரப்புவதற்கு தேவையான தகுதிகள் இனசுழற்சி ஒதுக்கீடு மற்றும் விண்ணப்பப்படிவம் ஆகியவை குறித்த விவரத்தினை இம்மாவட்டத்தின் http://virudhunagar.nic.in என்ற இணையதளத்தில் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். மேலும் நிரப்பப்பட்ட விண்ணப்பங்களை மாவட்ட நலவாழ்வு சங்கம், மாவட்ட சுகாதார அலுவலகத்தில் நேரிலோ அல்லது தபால் வழியாகவோ 24.03.2025 பிற்பகல் 5.45 மணி வரை சமர்பிக்கலாம் என மாவட்ட ஆட்சித்தலைவர் முனைவர் வீ.ப.ஜெயசீலன்,I A S, அவர்கள் தெரிவித்துள்ளார்.

Mar 12, 2025

சுதந்திர போராட்ட வீரர்கள் குறைதீர்க்கும் கூட்டம் 19.03.2025 அன்று நடைபெற உள்ளது என மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் தகவல்.

விருதுநகர் மாவட்டத்தில் சுதந்திர போராட்ட வீரர்கள் குறைதீர்க்கும் கூட்டம்  மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் தலைமையில் புதிய மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்ட அரங்கில் 19.03.2025 அன்று பிற்பகல் 4.30 மணி அளவில் நடைபெற உள்ளது. இக்கூட்டத்தில் விருதுநகர் மாவட்ட மத்திய மாநில சுதந்திர போராட்ட தியாகிகளின் வாரிசுகள் அனைவரும் கலந்து கொண்டு ஓய்வூதிய பலன்கள் குறித்து தங்கள் குறைகளையும், ஆலோசனைகளையும் நேரில் தெரிவிக்கலாம் என  மாவட்ட ஆட்சித்தலைவர் முனைவர் வீ.ப.ஜெயசீலன்,I A S, அவர்கள்  தெரிவித்துள்ளார்.

Mar 12, 2025

"Coffee With Collector” என்ற 154-வது கலந்துரையாடல் நிகழ்ச்சி

விருதுநகர் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில்(12.03.2025) சிவகாசி AAA பொறியியல் கல்லூரியில் பயிலும் 60 மாணவர்களுடன் நடைபெற்ற "Coffee With Collector” என்ற 154 ஆவது கலந்துரையாடல் நிகழ்ச்சியில், மாவட்ட ஆட்சித்தலைவர் முனைவர் வீ.ப.ஜெயசீலன் , I A S., அவர்கள் மாணவர்களுடன் கலந்துரையாடி, கல்லூரிகள் தேர்வு, உயர்கல்வி, வேலைவாய்ப்பு மற்றும் சுற்றுச்சூழலின் முக்கியத்துவம்  குறித்த உரிய வழிகாட்டுதல் வழங்கினார்.விருதுநகர் மாவட்டத்தில் பள்ளி மற்றும் கல்லூரியில் பயிலும் மாணவ / மாணவியர்களுடன் கல்வி, பொது அறிவு, விளையாட்டு, ஓவியம், இசை உள்ளிட்ட பல்வேறு திறன் அடிப்படையில் மாணாக்கர்களின் திறன்களை கண்டறிந்து, மாணவ, மாணவியர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டு பிரதி வாரம் ஒருமுறை அவர்களை மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் நேரில் அழைத்து கலந்துரையாடும் நிகழ்ச்சி தொடங்கப்பட்டு, இன்று 154-வது முறையாக கலந்துரையாடல் நிகழ்ச்சி நடைபெற்றது.இந்த நிகழ்ச்சியின் முக்கிய நோக்கம், பள்ளி மற்றும் கல்லூரியில் பயிலும் மாணவர்களுடைய உயர்ந்த இலட்சியம், அவர்களுடைய உயர்கல்வி பயில்வதற்கு வழிகாட்டுதல், போட்டி தேர்வுகளை எதிர்கொள்ளுதல், தோல்வியை எவ்வாறு எதிர்கொள்வது, அவர்களுக்கு கல்வி, வேலைவாய்ப்பு உள்ளிட்ட பல்வேறு பிரிவுகளில் அவர்களுடைய சந்தேகங்களை அகற்றி, அவர்கள் வாழ்க்கையில் எங்கு பிறந்தோம், நாம் அரசு பள்ளியில் பயின்றோம், நமக்கு வசதி இல்லை, நமக்கு பின்புலம் இல்லை என்பதெல்லாம், வாழ்க்கையில் ஒரு உயர்ந்த இடத்தை அடைவதற்கு ஒரு தடை இல்லை என்பதை புரிய வைத்து, தன்னம்பிக்கை, விடாமுயற்சி, கடின உழைப்புடன் தொடர்ந்து உழைத்தால் நாம் எதையும் சாதிக்க முடியும் என்பதை உணர்த்தும் வகையில் சரியான வழிகாட்டுதல் வழங்குவதே இந்த நிகழ்ச்சியின் முக்கிய நோக்கமாகும்.பள்ளி, கல்லூரி படிப்பு என்பது ஒருவரின் வாழ்க்கையில் ஒருமுறை மட்டுமே கிடைக்கும். எனவே பள்ளி மற்றும் கல்லூரி படிப்பின் மூலம் வாழ்க்கைக்கான பல அனுபவங்களை கற்றுக் கொள்ளலாம். அனுபவங்களில் இருந்து கிடைக்கும் கல்விதான் சிறந்த கல்வியாகும்.தமிழ் ஆர்வத்தை வளர்த்தல், சிறுகதை படைத்தல், படைப்பிலங்கியங்கள், தமிழ் அறிஞர்கள் குறித்தும் கல்லூரி மாணவர்களுடன் மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் கலந்துரையாடினார்.கல்லூரி படிப்பில் சேர்வதற்கு விருப்பத்தின் அடிப்படையில் மட்டும் முடிவு எடுத்தல் கூடாது. அனைவருக்கும் இலட்சியம் உண்டு. இலட்சியத்தை அடைவதற்கு தொடர்ந்து விடா முயற்சி செய்ய வேண்டும். நிலையான தொடர்ச்சியான சிறிய முயற்சிகள் பெரிய மாற்றங்களை ஏற்படுத்துகிறது.மேலும், ஒவ்வொருவருக்கும் என்று தனித்திறமைகள் உள்ளன. அத்திறமைகளை அனைவரும் வளர்த்து கொண்டு வாழ்வில் முன்னேற வேண்டும் என மாவட்ட ஆட்சித்தலைவர்அவர்கள் தெரிவித்தார்.இந்த சந்திப்பில் கல்லூரியில் பயிலும் மாணவர்கள் உற்சாகத்துடன் கலந்து கொண்டு, இந்த நிகழ்ச்சி மூலம் எங்களுக்கு ஒரு புத்துணர்வு, ஊக்கம் அளிப்பதாகவும், மாவட்ட ஆட்சியர் போன்று தாங்களும் சாதிக்க வேண்டும் என்ற எண்ணம் உருவாகி உள்ளதாகவும், எங்களுடைய கேள்விகள் மற்றும் சந்தேகங்களுக்கு மாவட்ட ஆட்சியர் தெளிவான விடை கொடுத்ததாகவும், நாங்களும் மாவட்ட ஆட்சியர் போன்று சாதித்து காட்டுவோம் என்றும், இந்த நிகழ்ச்சி ஏற்பாடு செய்ததற்கு மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்களுக்கு மாணவர்கள் தங்களது நன்றிகளை தெரிவித்துக்கொண்டனர்.    

Mar 12, 2025

ரூ.4.49 கோடி மதிப்பில் கட்டப்பட்டுள்ள அருப்புக்கோட்டை வட்டாட்சியர் அலுவலக புதிய கட்டடத்தினை வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத்துறை அமைச்சர் அவர்கள் பொதுமக்களின் பயன்பாட்டிற்காக துவக்கி வைத்தார்.

விருதுநகர் மாவட்டம், அருப்புக்கோட்டை வட்டாட்சியர் அலுவலக வளாகத்தில் (12.03.2025) ரூ.4.49 கோடி மதிப்பில் கட்டப்பட்டுள்ள அருப்புக்கோட்டை வட்டாட்சியர் அலுவலக புதிய கட்டடத்தினை மாவட்ட ஆட்சித்தலைவர் முனைவர் வீ.ப.ஜெயசீலன்,I A S., அவர்கள் தலைமையில்,  வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத்துறை அமைச்சர் திரு.கே.கே.எஸ்.எஸ்.ஆர்.ராமச்சந்திரன் அவர்கள் பொதுமக்களின் பயன்பாட்டிற்காக குத்துவிளக்கேற்றி துவக்கி வைத்தார்.பின்னர், வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத்துறை சார்பில், 23 பயனாளிகளுக்கு ரூ.22.54 இலட்சம் மதிப்பிலான ஆதிதிராவிட நத்தம் நிலங்களில் வழங்கப்படும் வீட்டுமனை ஒப்படைக்கான இணையவழி பட்டாக்களை  வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத்துறை அமைச்சர் அவர்கள் வழங்கினார்.தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள், தமிழகத்தில் அரசின் திட்டங்கள் பொதுமக்களுக்கு எளிதிலும், விரைவாகவும் சென்றடைய வேண்டும் என்ற நோக்கில் பல்வேறு நிர்வாக கட்டமைப்புகளை ஏற்படுத்துதற்கு பல்வேறு திட்டங்கைள வகுத்து செயல்படுத்தி வருகிறார்கள்.அதனடிப்படையில், விருதுநகர் மாவட்;டத்தில் உள்ள அனைத்து நகராட்சி, பேரூராட்சி மற்றும் ஊரகப்பகுதிகளில் பல்வேறு மேம்பாட்டு நிதித்திட்டங்களின் கீழ் பல்வேறு வளர்ச்சித்திட்டப்பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. மேலும், மக்களின் அடிப்படைத் தேவைகளை பூர்த்தி செய்வதிலும் தமிழக அரசு அதிகமான நிதிகளை ஒதுக்கீடு செய்து பல்வேறு திட்டப் பணிகளை செயல்படுத்தி வருகிறது.அதுமட்டுமல்லாமல், பொதுமக்கள் அரசின் நலத்திட்ட உதவிகளை எளிதாக பெற்று பயன்பெற ஏதுவாகவும், அரசு அலுவலர்கள் சிரமமின்றி பணிபுரிய வசதியாகவும் பல்வேறு நிதித்திட்டங்களின் கீழ் நிதிகளை ஒதுக்கீடு செய்து, பல்வேறு துறைகளுக்கு நவீன வசதிகளுடன் கூடிய அரசு அலுவலகக் கட்டிடங்கள் கட்டப்பட்டு வருகிறது.அதன்படி, இன்று ரூ.4.49 கோடி மதிப்பில் அருப்புக்கோட்டை வட்டாட்சியர் அலுவலக புதிய கட்டடம் பொதுமக்களின் பயன்பாட்டிற்கு இன்று துவக்கி வைக்கப்பட்டது.மேலும், இந்த புதிய கட்டடம் தரைத்தளம் 6921.19 சதுரடி பரப்பளவிலும்,  முதல்தளம் 6232.30 சதுரடி பரப்பளவிலும் என  வட்டாட்சியர் அலுவலக அறை, ஆதிதிராவிடர் நலத்துறை அலுவலர் அறை, கணிப்பொறி அறை, அலுவலக அறை, விசாரணை அறை, கூட்ட அரங்கம், பதிவுகள் வைப்பறை, ரசீது மற்றும் தபால் அனுப்பும் அறை, அலுவலர், பொதுமக்கள், மாற்றுத்திறனாளிகளுக்கான கழிப்பறை, மாற்றுத்திறனாளிகள் வசதிக்காக சாய்வுதளம், ஆழ்துழை கிணறு அமைத்து தண்ணீர் வசதி செய்தல் உள்ளிட்ட பல்வேறு வசதிகளுடன் அமைக்கப்பட்டுள்ளது என மாண்புமிகு வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத்துறை அமைச்சர் அவர்கள் தெரிவித்தார்.இந்நிகழ்ச்சியில், பொதுப்பணித்துறை செயற்பொறியாளர் திரு.செந்தூர், அருப்புக்கோட்டை கோட்டாட்சியர் திரு.வள்ளிக்கண்ணு, அருப்புக்கோட்டை வருவாய் வட்டாட்சியர் திரு.செந்தில்வேல், உள்ளாட்சி பிரதிநிதிகள், அரசு அலுவலர்கள் மற்றும் பொதுமக்கள் பலர் கலந்து கொண்டனர்.

Mar 12, 2025

130 ஏழை, எளிய பெண்களுக்கு ரூ.1.33 கோடி மதிப்பிலான திருமாங்கல்யத்திற்கான தங்க நாணயங்கள் மற்றும் திருமண நிதியுதவிகளை வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத்துறை அமைச்சர் அவர்கள் வழங்கினார்.

விருதுநகர் மாவட்ட ஆட்சியர் அலுவலகக் கூட்டரங்கில் (12.03.2025) சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை மூலம் ஏழைப் பெண்களுக்கு திருமண நிதி உதவியுடன் திருமாங்கல்யத்திற்கு தங்கம் வழங்கும் நிகழ்ச்சியில் மாவட்ட ஆட்சித்தலைவர்  முனைவர் வீ.ப.ஜெயசீலன்,I A S., அவர்கள் தலைமையில், விருதுநகர் சட்டமன்ற உறுப்பினர் திரு.ஏ.ஆர்.ஆர்.சீனிவாசன் அவர்கள் முன்னிலையில், அருப்புக்கோட்டை, சாத்தூர்,வெம்பக்கோட்டை,திருவில்லிபுத்தூர், வத்திராயிருப்பு மற்றும் இராஜபாளையம் ஆகிய ஊராட்சி ஒன்றியங்களைச் சேர்ந்த 130 ஏழை, எளிய பெண்களுக்கு ரூ.79.12 இலட்சம் மதிப்பில் தங்க நாணயங்கள் மற்றும்  ரூ.53.75 இலட்சம் மதிப்பில் திருமண நிதியுதவிகள் என மொத்தம் ரூ.1.33 கோடி மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத்துறை அமைச்சர் திரு.கே.கே.எஸ்.எஸ்.ஆர்.ராமச்சந்திரன் அவர்கள் வழங்கினார்.மக்களால் அமைக்கப்பட்ட   தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களின் வழியில் செயல்படும் தமிழக அரசு, மக்கள் நலன் காக்கும் அரசாக, செயல்பட்டு வருகிறது. பல்வேறு தரப்பட்ட மக்களின் வாழ்வாதாரத்திற்கு தேவையான திட்டங்களை தீட்டி, செயல்படுத்தி வருகிறது.பெண்கள் கல்வி கற்பதை ஊக்குவிக்கும் வகையில் பல்வேறு திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகின்றன. அந்த வகையில் பெண்கள் ஆண்களுக்கு நிகராக பல்வேறு துறைகளில் பணியாற்றி வருகிறார்கள்.போதிய பணவசதி இல்லாத காரணத்தால் ஏழை பெண்களின் திருமணம் தடைபட்டு விடக்கூடாது என்பதற்காக திருமண நிதியுதவி திட்டம் கொண்டு வரப்பட்டு சிறப்பாக செயல்படுத்தப்பட்டு வருகிறது.திருமண உதவித் திட்டம் என்பது, பொருளாதார அளவில் நலிவுற்ற, ஏழை விதவை தாய்மார்களின் மகள்களுக்கு திருமணத்தினை நடத்திட போதிய வசதி இல்லாமல் ஏற்படும் சிரமத்ததை தவிர்த்திக்கும் வகையிலும், சமூகத்தில் பிறப்பு அடிப்படையிலான இனப்பாகுபாட்டினை களைந்து சமநிலையை உருவாக்கிடவும், தாய், தந்தையர்கள் இல்லாத ஆதரவற்ற பெண்களுக்கு பொருளாதார வகையில் திருமணத்திற்கு உதவிட தாலிக்கு தங்கம் வழங்கிடும் பொருட்டும், கணவரை இழந்த விதவைகளுக்கு புதுவாழ்வு அளித்திட  விதவை மறுமணம் திருமண நிதியதவி வழங்கிடும் வகையிலும் செயல்படுத்தப்பட்டு வருகிறது.அதன்படி, பள்ளிப் படிப்பை முடித்த பெண்களுக்கு நிதியுதவி தொகையாக ரூ.25,000/- மற்றும் பட்டபடிப்பு பயின்ற பெண்களுக்கு ரூ.50,000/- நிதியுதவியுடன் திருமாங்கல்யத்திற்கான தங்க நாணயமும் வழங்கப்படுகிறது.அதன்படி, 2024-2025 ஆம் ஆண்டில், அருப்புக்கோட்டை, சாத்தூர், வெம்பக்கோட்டை, திருவில்லிபுத்தூர், வத்திராயிருப்பு மற்றும் இராஜபாளையம் ஆகிய ஒன்றியங்களைச் சேர்ந்த 130 ஏழை, எளிய பெண்களுக்கு ரூ.79.12 இலட்சம் மதிப்பில் தங்க நாணயங்கள் மற்றும்  ரூ.53.75 இலட்சம் மதிப்பில் திருமண நிதியுதவிகள் என மொத்தம் ரூ.1.33 கோடி மதிப்பிலான  நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டுள்ளன.அதுமட்டுமல்ல பெண்களுக்கான அனைத்து நலத்திட்டங்களையும் செய்யக்கூடிய அரசாக இந்த  தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் தலைமையிலான அரசு செயல்படுகிறது.அதற்கு காரணம் பெண்கள் முன்னேறினால் சமுதாய முன்னேறும். சாதாரணமாக ஒரு வீட்டில் பெண் கல்வி கற்றிருந்தால் அந்த குடும்பமே படித்து விடும். கல்வி அறிவு மட்டுமல்ல நாகரீகமும் சேர்ந்து வளரும்.இந்த சமுதாயத்தில் பாதிக்கு மேலான  வேலைகளை பெண்கள்தான் செய்கிறார்கள்.ஆண்களை விட அதிகமாக வீட்டில் உள்ள அனைத்து வேலைகளையும் செய்யும் பெண்களுக்கு அங்கீகாரம் அளிக்க வேண்டும் என்பதற்காக தான் மகளிர் உரிமைத் தொகை திட்டம் மூலம் மாதந்தோறும் ரூ.1000/- வழங்கப்படுகிறது.அதுபோல,அரசு பள்ளியில் படித்து உயர் கல்விக்கு செல்லும் ஆண் மற்றும் பெண் குழந்தைகளுக்கு மாதந்தோறும் ஆயிரம் ரூபாய் வழங்கப்படுகிறது. விடியல் பயணம் மூலம் மகளிர்களுக்கு இலவச பயணம்,மகளிர் சுய உதவி குழுக்களுக்கு எந்தவித பிணையும் இல்லாமல் கடனுதவிகள் வழங்கப்படுகிறது.முதலமைச்சரின் காலை உணவு திட்டம் மூலம் 1 முதல் 5 வரை படிக்கும் குழந்தைகளுக்கு காலை உணவுகள் வழங்கப்படுகிறது.இதனால்,மாணவ, மாணவிகள் பசியின்றி பள்ளிக்கு வருவதோடு,தாய்மார்களின் பணிச்சுமையும் குறைகிறது.இதுபோன்ற எண்ணற்ற பெண்கள் முன்னேற்றத்திற்கான திட்டங்களை செயல்படுத்தும்  தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களின் தலைமையிலான அரசுக்கு பெண்கள் என்றும் உறுதுணையாகவும் ஆதரவாகவும் இருக்க வேண்டும் என தெரிவித்தார்.தமிழ்நாடு அரசு சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை சார்பில் பெண்களின் நலனுக்காக பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. அனைத்து திட்டங்களையும் பெண்கள் நன்கு பயன்படுத்திக்கொண்டு, குறிப்பாக பொருளாதாரத்தில் மிகப்பெரிய வலிமை அடைய வேண்டும் என்பதற்காக தான் இந்த நிகழ்ச்சி  என மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் தெரிவித்தார்.முன்னதாக, மாற்றுத்திறனாளிகள் நலத்துறையின் சார்பில், 161 மாற்றுத்திறனாளிகளுக்கு தலா ரூ.1,01,800ஃ வீதம் மொத்தம் ரூ.1.64 கோடி மதிப்பிலான இணைப்பு சக்கரம் பொருத்தப்பட்ட மோட்டார் இருசக்கர வாகனங்களையும்,15 மாற்றுத்திறனாளி பெண்களுக்கு திருமாங்கல்யத்திற்கான தங்கத்தினையும்  வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத்துறை அமைச்சர் அவர்கள் வழங்கினார்.இந்நிகழ்ச்சியில், விருதுநகர் நகர்மன்ற தலைவர் திரு.மாதவன், மாவட்ட சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை அலுவலர்  திருமதி ஷீலா சுந்தரி, மாற்றுத்திறனாளிகள் நலத்துறை அலுவலர் திரு.சீனிவாசன், சமூகநலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை கண்காணிப்பாளர் திருமதி யுவஸ்ரீ மற்றும் உள்ளாட்சி பிரதிநிதிகள், அரசு அலுவலர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

1 2 ... 121 122 123 124 125 126 127 ... 138 139

AD's



More News