25 YEARS OF EXCELLENCE

சமீபத்திய நிகழ்வுகள்:
தொடர்பு எல்லைக்கு வெளியே அடுக்குமாடி குடியிருப்பு வாசிகள்; அலைபேசி சிக்னல் இன்றி அவதி. >> வயல் தின விழா. >> ராஜபாளையம் தொழிலாளர் சங்கம் சார்பில், சமூக நலத்துறை அமைச்சர் ஜெகதீஸ்வரிக்கு பாராட்டு விழா >> ராஜபாளையம் செண்பகத் தோப்பு ரோடு கன்னிமார் கோயில் கும்பாபிஷேகம் . >> பூஜ்யஸ்ரீ ஓங்காராநந்த மஹாஸ்வாமிகள் அநுக்ரஹத்துடன் ஆதிகுரு ஸ்ரீப்ரஜ்ஞா தக்ஷிணாமூர்த்தி வித்யாபீட வர்ஷாபிஷேக விழா. >> திருமங்கலம் - ராஜபாளையம் இடையேயான புதிய 4 வழிச்சாலையில், நத்தம்பட்டி சுங்கச்சாவடி நேற்று முதல் பயன்பாட்டுக்கு வந்தது. >> தமிழ்நாடு கலை இலக்கியப் பெருமன்றம்" இராசபாளையம் ரஜினி பெத்துராஜா படைப்புலகம். >> மாம்பழங்களின் வரத்து அதிகரித்து உள்ளது, ராஜபாளையம் பகுதிகளில் ….. >> ராஜபாளையம்-தென்காசி சாலையில் அமைந்துள்ள புதுப்பாளையம் பெரிய மாரியம்மன் கோவிலில் பூக்குழி திருவிழா. >> ராஜபாளையம் காந்தி கலை மன்றத்தில் புத்தக கண்காட்சி . >>


செய்தி மக்கள் தொடர்பு அலுவலகம் விருதுநகர் மாவட்டம்

Feb 27, 2026

சிவகாசி - விருதுநகர் சாலையினையும், அழகாபுரி - விருதுநகர் சாலையினையும் இரு வழிச்சாலையிலிருந்து நான்கு வழிச்சாலையாக மேம்படுத்தும் பணிகளுக்கு அமைச்சர் பெருமக்கள் அடிக்கல் நாட்டி பணிகளை தொடங்கி வைத்தனர்.

விருதுநகர் மாவட்டம், விருதுநகரில் (26.02.2026) நெடுஞ்சாலைகள் மற்றும் சிறு துறைமுகங்கள் துறை சார்பில்,  ரூ.96 கோடி மதிப்பில் சிவகாசி - விருதுநகர் சாலையினையும், ரூ.85 கோடி மதிப்பில் அழகாபுரி - விருதுநகர் சாலையினையும் இரு வழிச்சாலையிலிருந்து நான்கு வழிச்சாலையாக மொத்தம் ரூ.181 கோடி மதிப்பீட்டில் மேம்படுத்தும் பணிகளுக்கு மாவட்ட வருவாய் அலுவலர் திருமதி ரா.ஆனந்தி அவர்கள் தலைமையில், விருதுநகர் சட்டமன்ற உறுப்பினர் திரு.ஏ.ஆர்.ஆர்.சீனிவாசன் அவர்கள்,  சிவகாசி சட்டமன்ற உறுப்பினர் திரு.ஜி.அசோகன் அவர்கள் மற்றும்  சிவகாசி மாநகராட்சி மேயர் திருமதி சங்கீதா இன்பம் அவர்கள் ஆகியோர் முன்னிலையில்,  வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத்துறை அமைச்சர் திரு.கே.கே.எஸ்.எஸ்.ஆர்.இராமச்சந்திரன் அவர்கள் மற்றும்  நிதி, சுற்றுச்சூழல் மற்றும் காலநிலை மாற்றத்துறை அமைச்சர் திரு.தங்கம் தென்னரசு அவர்கள் ஆகியோர் அடிக்கல் நாட்டி பணிகளை தொடங்கி வைத்தனர். தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் சாலை வசதிகளை மேம்படுத்துவதற்காவும், விரிவுபடுத்துவதற்காவும், சாலை பாதுகாப்பினை உறுதிபடுத்துவதற்கும் பல்வேறு திட்டங்களை உருவாக்கி செயல்படுத்தி வருகிறார்கள்.விருதுநகர் மாவட்டத்தில் உள்ள மாநில நெடுஞ்சாலையான திருவில்லிபுத்தூர் -சிவகாசி - விருதுநகர் - அருப்புக்கோட்டை- திருச்சுழி-நரிக்குடி- பாத்திப்பனூர் சாலை மிக முக்கியமான மற்றும் நீளமான சாலையாகும். இச்சாலையானது சுமார் 103 கிமீ விருதுநகர் மாவட்டத்திலும், 6 கி.மீ இராமநாதபுரம் மாவட்டத்திலும் உள்ளது.இந்த சாலையானது தென்காசி, இராஜபாளையம், திருவில்லிபுத்தூர், சிவகாசி ஆகிய நகரங்களிலிருந்து மக்கள் ராமேஸ்வரம் செல்வதற்கு மிகவும் முக்கியமான சாலையாகும்.          விருதுநகர் மாவட்டத்தில் உள்ள இந்த மாநில நெடுஞ்சாலையான திருவில்லிபுத்தூர் - சிவகாசி - விருதுநகர் - அருப்புக்கோட்டை- திருச்சுழி - நரிக்குடி -பாத்திப்பனூர் சாலையில் 103 கி.மீ நீளத்தில் முதன் முதலாக ஆணைக்குட்டத்திலிருந்து ஆமத்தூர் வரை 5 கிமீ நீளத்திற்கு ரூ.30 கோடி மதிப்பிலும், ஆமத்தூரிலிருந்து விருதுநகர் வரை ரூ.66 கோடி மதிப்பில் 9 கிமீ நீளத்திற்கு நான்கு வழிச்சாலையாக அகலப்படுத்துவதற்கு இன்று அடிக்கல் நாட்டப்பட்டுள்ளது. இரண்டவதாக, வத்றாப்பிலிருந்து அழகாபுரி வழியாக விருதுநகர் வரை உள்ள மாநில நெடுஞ்சாலையான வத்றாப் - மகாராஜபுரம்- அழகாபுரி - விருதுநகர் சாலையில் அழகாபுரியில் உள்ள நான்கு வழிச்சாலையையும், விருதுநகரில் உள்ள நான்கு வழிச்சாலையையும் இணைக்கும் பொருட்டு, அழகாபுரி - விருதுநகர் இடையே உள்ள 20 கிமீ நீளமுள்ள சாலையை தற்போது விருதுநகரிலிருந்து எரிச்சநத்தம் அருகில் உள்ள சமத்துவபுரம் வரை 12.60 கி.மீ நீளத்திற்கு நான்கு வழிச்சாலையாக அமைப்பதற்கு இன்று அடிக்கல் நாட்டப்பட்டுள்ளது.   இச்சாலைகள் நான்கு வழிச்சாலையாக அகலப்படுத்தும் பட்சத்தில் போக்குவரத்து நெரிசல் குறைவதோடு பயண நேரம் குறையும் என தெரிவித்தார். தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களுடைய மகத்தான ஆட்சியில் மிகச் சிறப்பான திட்டங்களில் ஒன்றாக விருதுநகர் மாவட்டத்தின் உடைய தலைநகராக இருக்கக்கூடிய விருதுநகரையும் மாவட்டத்தினுடைய முக்கிய தொழில் கேந்திரமாக இருக்கக்கூடிய சிவகாசியையும் மாநில நெடுஞ்சாலையாக இருக்கக்கூடிய இந்த சாலையை நான்கு வழிச்சாலையாக தரம் உயர்த்தக்கூடிய சிறப்பான பணிக்கும்,     அதுபோல மதுரையில் இருந்து கொச்சி வரை செல்லக்கூடிய தேசிய நெடுஞ்சாலைகளில் இருந்து விருதுநகரை இணைக்க கூடிய வகையில் அழகாபுரியிலிருந்து எரிச்சநத்தம், செங்குன்றாபுரம் வழியாக விருதுநகரை இணைக்கக்கூடிய சாலையையும் நான்கு வழி சாலையாக அகலப்படுத்தக்கூடிய சிறப்பான பணிக்கும் இன்று அடிக்கல் நாட்டப்பட்டுள்ளது.இந்தப் பணிகள் எவ்வளவு முக்கியத்துவம் வாய்ந்தது என்பது, அனைவரும் அறிந்ததே. விருதுநகரையும் சிவகாசியையும் இணைக்கக்கூடிய சாலையை முதற்கட்டமாக சிவகாசியில் இருந்து ஆமத்தூர் வரை ஒரு பகுதியாகவும், ஆமத்தூரில் இருந்து விருதுநகரை இணைக்கக் கூடிய சாலையை மறு பகுதியாகவும் என இந்த இரண்டு பணிகளும் ஏறத்தாழ ரூ.96 கோடி மதிப்பீட்டில் மிகச் சிறப்பான வகையிலே இந்த இருவழிச் சாலையானது நான்கு வழிச்சாலையாக அகலப்படுத்தப்பட இருக்கின்றது.அதுபோல அழகாபுரியிலிருந்து விருதுநகரை இணைக்கக் கூடிய சாலை ஏறத்தாழ ரூ.85 கோடி மதிப்பீட்டில் மணிகள் பணிகள் மேற்கொள்ளப்பட இருக்கின்றன.சிவகாசி மாநகரத்தில் சுற்றுவட்ட சாலைப்பணிகளில் ஒரு பகுதி முடிவுற்று மற்றொரு பகுதி பணிகள் தொடங்கியிருக்கிறது. அதுபோல சிவகாசி சாட்சியாபுரம் ரயில்வே மேம்பாலம் முடிவு பெற்று மக்கள் பயன்பாட்டிற்கு கொண்டு வரப்பட்டுள்ளது. தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் ஆட்சியில் நீண்ட காலமாக மக்கள் எதிர்பார்த்துக் கொண்டிருக்கக் கூடிய கோரிக்கையான திருத்தங்கள் மேம்பாலம் கட்டுவதற்கு அனுமதி வழங்கப்பட்டு, அந்த பணிகளும் துவக்கப்பட்டுள்ளது.எனவே நம்முடைய  தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் அரசு உட்கட்டமைப்பு வசதிகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கிறது. திட்டங்களை அறிவிப்பதோடு மட்டுமல்லாமல், அறிவிக்கப்பட்டிருக்கக் கூடிய திட்டங்களுக்கு நிதி ஒதுக்கீடுகள் முறையாக செய்யப்பட்டு அந்தப் பணிகளும் துவக்கி வைக்கப்பட்டு இருக்கக்கூடிய காட்சியை நாம் காண்கின்றோம்.எனவே  முதலமைச்சர் அவர்களுடைய தலைமையிலான இந்த அரசுக்கு மாவட்ட மக்கள் என்றும் உறுதுணையாக இருக்க வேண்டும் என தெரிவித்தார்.இந்நிகழ்ச்சியில், நெடுஞ்சாலைத்துறை கோட்டப்பொறியாளர் (விருதுநகர்) திருமதி பாக்கியலெட்சுமி, நெடுஞ்சாலைத்துறை பொறியாளர்கள், உள்ளாட்சி பிரதிநிதிகள் மற்றும் அரசு அலுவலர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

Feb 25, 2026

விவசாயிகள் மற்றும் தொழில் முனைவோர்களுக்கான சிறுதானியங்கள் மதிப்பு கூட்டுதல் மற்றும் சந்தைப்படுத்துதல் குறித்த பணிமனை கருத்தரங்கு நிகழ்ச்சி.

விருதுநகர் மாவட்டம், விருதுநகர் ஜெய் ரெசிடென்சியில்  (24.02.2026) சென்னை அண்ணா நிர்வாக பணியாளர் கல்லூரி,  விருதுநகர் வேளாண்மை விற்பனை மற்றும் வேளாண் வணிகத்துறை, சேலம் தமிழ்நாடு மாநில வேளாண்மை விற்பனை வாரிய பயிற்சி மையம் சார்பில் நடைபெற்ற சிறுதானிய இயக்கம் - விவசாயிகள் மற்றும் தொழில் முனைவோர்களுக்கான சிறுதானியங்கள் மதிப்பு கூட்டுதல் மற்றும் சந்தைப்படுத்துதல் குறித்த பணிமனை கருத்தரங்கு நிகழ்ச்சியினை மாவட்ட ஆட்சித்தலைவர் மரு.என்.ஓ.சுகபுத்ரா,I A S., அவர்கள் குத்துவிளக்குயேற்றி தொடங்கி வைத்தார்.சிறுதானியங்கள், காலநிலை மாற்றத்திற்கேற்ற பயிராக உலகளவில் அங்கீகரிப்பட்டுள்ளது. இச்சிறுதானியங்கள் இரசாயன உரங்கள் இன்றி, இயற்கை முறையில் விளைவிக்கப்படுவதால் ஏற்றுமதிக்கு உகந்த பயராகவும் உள்ளது.இந்தியாவிலிருந்து சிறுதானியங்கள் பல்வேறு நாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்படுகின்றன. அதிக ஊட்டச்சத்து  காரணமாக, சந்தைகளில் இவற்றின் தேவை பெரிதும் அதிகரித்து வருகின்றது. சிறுதானிய உற்பத்தி மற்றும் மதிப்புக் கூட்டுதலில் முன்னோடி மாவட்டமாக  விருதுநகர் மாவட்டம் திகழ்கிறது.விவசாயிகள் மற்றும் தொழில் முனைவோர்களுக்கான சிறுதானியங்கள் மதிப்பு கூட்டுதல் மற்றும் சந்தைப்படுத்துதல் குறித்த கருத்தரங்கு இன்று நடைபெறுகிறது. சிறுதானிய பயிரிடும் பரப்பளவை அதிகரித்தல், மதிப்புக் கூட்டு மற்றும் தொழில் முனைவோர் உருவாக்கம், விற்பனை மற்றும் சந்தை இணைப்பு ஆகியவை இந்த கருத்தரங்கின் நோக்கமாகும்.மேலும், விவசாயிகள் மற்றும் தொழில் முனைவோர்கள் மூலம் மதிப்பு கூட்டப்பட்ட சிறுதானிய பொருட்கள் காட்சிப்படுத்தப்பட்டு, செயல்விளக்கம் விவசாயிகளுக்கு அளிக்கப்படுகிறது. மேலும், அரசின் திட்டங்கள் மற்றும் மானியங்கள் குறித்தும், தொழில்நுட்பங்கள், இயற்கை முறை உற்பத்தி சான்றிதழ், ஏற்றுமதி வாய்ப்புகள் குறித்தும் எடுத்துரைக்கப்படவுள்ளன.எனவே, விவசாயிகள், வணிகர்கள்  வணிகம் செய்வது, மதிப்பிக்கூட்டல், வங்கி கடனுதவிகள், ஏற்றுமதி வாய்ப்புகள் உள்ளிட்டவைகளை நன்கு அறிந்து கொண்டு பயன் பெற  வேண்டும் என மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் தெரிவித்தார்.இந்நிகழ்ச்சியில் கோவிலாங்குளம் வேளாண் அறிவியல் நிலைய பண்ணை மேலாளர் திரு.ஜீவா அவர்கள் காலநிலை மாற்றங்களுக்கு ஏற்ப சிறு தானியங்கள் ரகங்கள் தேர்வு, உற்பத்தி தொழில்நுட்பங்கள், பயிர் மேலாண்மை, அறுவடை மற்றும் அறுவடைக்குப் பிந்தைய தொழில்நுட்பங்கள் குறித்து எடுத்துரைத்தார்.மேலும், கோவிலாங்குளம் வேளாண்மை அறிவியல் நிலைய உணவு அறிவியல் துறை இணை பேராசிரியர் டாக்டர்.நல்லகுறும்பன் அவர்கள் சிறுதானியங்களின் ஊட்டச்சத்து மதிப்பு மற்றும் ஆரோக்கிய நன்மைகள் குறித்தும்,மதுரை சமுதாய அறிவியல் கல்லூரி உணவு அறிவியல் துறை பேராசிரியர் டாக்டர் கலைச்செல்வன் அவர்கள் சிறுதானியங்களுக்கான பதப்படுத்துதல் தொழில்நுட்பம் மற்றும் மதிப்புக்கூட்டப்பட்ட பொருட்கள் தயாரிப்பு குறித்தும்,விருதுநகர் மாவட்ட திட்ட மேலாளர் (தமிழ்நாடு தொழில் முனைவோர் மேம்பாடு மற்றும் புத்தாக்க நிறுவனம்) திரு.பிலிப் மில்டன் அவர்கள் சிறுதானியங்களுக்கான வணிகம் மற்றும் ஏற்றுமதி வாய்ப்புகள், பேக்கிங், லேபிளின் தொழில்நுட்பங்கள், FSSAI உரிமம் பெறுதல் மற்றும் ஆன்லைன் யுக்திகள் குறித்தும் எடுத்துரைத்தனர்.இந்நிகழ்வில் துணை ஆட்சியர்(அண்ணா நிர்வாகப் பணியாளர் கல்லூரி, மதுரை) திரு.எம்.ரெங்கசாமி, வேளாண்மை இணை இயக்குநர் திரு.பா.மோகனதாஸ் சௌமியன், துணை இயக்குநர்(வேளாண் வணிகம்) திருமதி செல்வி, மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (வேளாண்மை) திருமதி அ.அம்சவேணி, தொழில் முனைவோர்கள், தொழில்நுட்ப வல்லுநர்கள் மற்றும் 200-க்கும் மேற்பட்ட விவசாயிகள் கலந்து கொண்டனர்.

Feb 25, 2026

தேர்தல் மண்டல அலுவலர்கள் மற்றும் காவலர்களுக்கான தேர்தல் பணிகள் குறித்து பயிற்சி வகுப்பு .

விருதுநகர் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் (24.02.2026) சட்டமன்றத்தேர்தல்-2026 முன்னிட்டு, மாவட்டத்தில் மண்டல அலுவலர்களாக நியமனம் செய்யப்பட்டுள்ள அலுவலர்கள் மற்றும் மண்டல காவலர்களுக்கு தேர்தல் பணிகள் குறித்து பயிற்சி வகுப்பு மாவட்ட தேர்தல் அலுவலர்/மாவட்ட ஆட்சித்தலைவர் மரு.என்.ஓ.சுகபுத்ரா,I A S., அவர்கள் தலைமையில் நடைபெற்றது.இந்த பயிற்சி வகுப்பில் மண்டல அலுவலர்கள் மேற்கொள்ள வேண்டிய உடனடி பணிகள், வாக்குச்சாவடி பணிகள், தேர்தல் தொடர்பாக  வாக்காளர் விழிப்புணர்வு பணிகள், மின்னணு வாக்குப்பதிவு இயந்திரம் மற்றும் வாக்காளர் சரிபார்ப்பு காகித தணிக்கை இயந்திரங்கள் கையாளுதல், வாக்குச்சாவடி அலுவலர்கள் மேற்கொள்ள வேண்டிய பணிகள், வாக்குப்பதிவு முடிவுற்றதும் செய்ய வேண்டிய பணிகள், தேர்தல் பணிகளில் உள்ள முக்கியமான படிவங்கள் மற்றும் சான்றிதழ்களை கையாளுதல் உள்ளிட்டவை குறித்து பயிற்சியளிக்கப்பட்டது.இந்நிகழ்ச்சியில், மாவட்ட வருவாய் அலுவலர் திருமதி ரா.ஆனந்தி, மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர்(பொது) திருமதி பிர்தௌஸ் பாத்திமா, சிவகாசி சார் ஆட்சியர் திரு.முகமது இர்பான்,I A S ., அனைத்து மண்டல அலுவலர்கள் மற்றும் காவலர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

Feb 25, 2026

நலம் காக்கும் ஸ்டாலின் திட்டத்தின் கீழ்,மாவட்டத்தின் இலக்கான 36 முகாம்கள் சிறப்பாக பூர்த்தி செய்யப்பட்டுள்ளன மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் தகவல்.

  விருதுநகர் மாவட்டம், வெம்பக்கோட்டை வட்டம், கல்லமநாயக்கன்பட்டி எஸ்.எம்.எஸ். கல்லூரியில் (24.02.2026) நலம் காக்கும் ஸ்டாலின் திட்டத்தின் கீழ், 36 ஆவது பல்நோக்கு சிறப்பு மருத்துவ முகாமினை மாவட்ட ஆட்சித்தலைவர் மரு.என்.ஓ.சுகபுத்ரா,I A S ., அவர்கள் பார்வையிட்டார்.பின்னர், மாவட்டத்தின் இலக்கான 36 முகாம்களை பூர்த்தி செய்து சிறப்பாக பணியாற்றிய அலுவலர்களை பாராட்டி, மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் கேடயங்களை வழங்கினார்.தமிழ்நாடு அரசு சாமானிய மக்களும் தரமான மருத்துவ சேவைகளை பெற வேண்டும் என்பதற்காக மக்களைத் தேடி மருத்துவம், இன்னுயிர் காப்போம் நம்மை காக்கும் 48, வருமுன் காப்போம், இதயம் காப்போம், நடப்போம் நலம் பெறுவோம் போன்ற பல்வேறு  திட்டங்களை செயல்படுத்தி வருகிறது.இந்த வரிசையில் தமிழ்நாடு அரசு மற்றொரு மருத்துவ சேவை சார்ந்த திட்டமான நலம் காக்கும் ஸ்டாலின் திட்டத்தினை அறிமுகப்படுத்தி செயல்படுத்தி வருகிறது. மாநிலம் முழுவதும் 1,256 நலம் காக்கும் ஸ்டாலின் திட்ட மருத்துவ முகாம்களை நடத்தி, அனைத்து வயதினருக்கும், குறிப்பாக ஏழை எளிய மக்களுக்கும் அதிநவீன பரிசோதனை சாதனங்கள் மூலம் நோய்களை கண்டறிந்து, நோய் கண்டறியப்பட்டவர்களுக்கு உடனடியாக இலவச சிகிச்சை அளித்து அவர்களின் ஆரோக்கியத்தையும், உயிரையும் காப்பாற்றுவதே நலம் காக்கும் ஸ்டாலின் மருத்துவ திட்டத்தின் முக்கிய நோக்கமாகும்.பொதுவாக தனியார் மருத்துவமனையில் முழு உடல் பரிசோதனைகள் செய்ய ரூ.15,000 வரை செலவாகிறது. ஆனால், நலம் காக்கும் ஸ்டாலின் திட்ட மருத்துவ முகாமில் மக்களை தேடிச் சென்று அனைத்து பரிசோதனைகளும் இலவசமாக செய்யப்படுகிறது. அதுமட்டுமல்லாமல், நோய் கண்டறியப்பட்டால், அதற்கான சிகிச்சைகளும், மருந்துகளும் கூட இலவசமாகவே வழங்கப்படுகின்றன.இதனால், கட்டணம் செலுத்தி மருத்துவம் பார்க்க வசதி இல்லாத ஏழை, எளிய மக்கள் பெரியளவில் பயனடைந்து வருகின்றனர். போக்குவரத்து வசதி அதிகம் இல்லாத இடங்களிலும் முகாம்கள் நடத்தப்படுகின்றன. ஒவ்வொரு முகாமின் போது பொதுமக்கள் எளிதாக புரிந்துக் கொள்ளும் வகையில் மருத்துவ ஆலோசனைகள் வழங்கப்படுகின்றன. இம்முகாமில் உயர் இரத்த அழுத்தம், எக்கோ, எக்ஸ்ரே, நீரழிவுநோய் கண்டறிதல்,மார்பக புற்றுநோய், வாய் புற்றுநோய் பரிசோதனை, மின் இதய வரைபடம், அல்ட்ரா சவுண்ட் ஸ்கேன்,கருப்பை வாய் பரிசோதனை, காச நோய் மற்றும் தொழு நோய், சிறுநீரக நோய் பரிசோதனை, உள்ளிட்ட 24 வகையான இரத்த பரிசோதனைகளும் மற்றும் பொது மருத்துவம், மகளிர் மருத்துவம், நரம்பியல் மருத்துவம், கண் மருத்துவம், இயன்முறை மருத்துவம், நீரழிவு நோய் மருத்துவம், பொது அறுவை சிகிச்சை, குழந்தை மருத்துவம், தோல் மருத்துவம், காது மூக்கு தொண்டை மருத்துவம், கதிரியக்கவியல் மருத்துவம், சித்தா மருத்துவம், எலும்பு மருத்துவம், இருதய மருத்துவம், பல் மருத்துவம், நரம்பியல் மருத்துவம், ஆயுர்வேத  மருத்துவம் போன்ற இலவச சிறப்பு மருத்துவ சிகிச்சைகளும் வழங்கப்பட்டு வருகிறது.மேலும், இம்முகாமில்  குறிப்பிட்டுள்ள பரிசோதனைகள் மட்டும் இன்றி முதலமைச்சரின் விரிவான மருத்துவ காப்பீட்டுத் திட்டத்தின்கீழ் பதிவு செய்தல், மாற்று திறனாளிகளுக்கான அரசு அடையாள அட்டை வழங்குதல், அமைப்பு சாரா தொழிலாளர்களுக்கான தொழிலாளர் நல வாரியத்தின் உறுப்பினர் அடையாள அட்டை வழங்குதல் மற்றும் வருவாய்துறையினர் மூலமாக வருமானச் சான்றிதழ் வழங்கவும் ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது.அந்த வகையில் விருதுநகர்மாவட்டத்தில்மட்டும்36பல்நோக்குசிறப்புமருத்துவமுகாம்கள்இலக்குநிர்ணயிக்கப்பட்டது.மாவட்டத்தில் இதுவரை 35 முகாம்கள் நடத்தப்பட்டுள்ளது. தற்போது 36 ஆவது முறையாக வெம்பக்கோட்டை வட்டம், கல்லமநாயக்கன்பட்டி எஸ்.எம்.எஸ். கல்லூரியில் நடைபெற்ற பல்நோக்கு சிறப்பு மருத்துவ முகாமினை மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் பார்வையிட்டார்.மேலும் இந்த சிறப்பு மருத்துவ முகாமில், தூய்மைப் பணியாளர்களுக்கு நல வாரியத்தின் உறுப்பினர் அடையாள அட்டைகளையும் மற்றும் கர்ப்பிணி பெண்களுக்கு ஊட்டச்சத்து பெட்டகங்களையும் மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் வழங்கினார்.இந்த நலம் காக்கும் ஸ்டாலின் சிறப்பு மருத்துவ முகாம் மூலம் இருப்பிடத்திற்கு அருகிலேயே நடத்தப்பட்ட முகாம் மூலம் பரிசோதனை செய்து முடிவுகளை பெற்று, உடனடியாக தீர்வுகளையும், மாற்றுத்திறனாளி, தொழிலாளர் நல வாரிய அடையாள அட்டை, முதலமைச்சரின் காப்பீடு அட்டைகளையும் வழங்கிய மாவட்ட நிர்வாகத்திற்கும், தமிழ்நாடு அரசுக்கும் இம்முகாம் மூலம் பயன்பெற்றவர்கள் நன்றிகளை தெரிவித்துக் கொண்டனர்.இந்நிகழ்வில், விருதுநகர் மாவட்ட மருத்துவக் கல்லூரி முதல்வர் மரு.ஜெய்சிங், விருதுநகர் மாவட்ட சுகாதார அலுவலர் மரு.யசோதாமணி, சிவகாசி மாவட்ட சுகாதார அலுவலர் மரு.ஜெகவீரபாண்டியன், மருத்துவத்துறை அலுவலர்கள், வட்டாட்சியர், மருத்துவர்கள், செவிலியர்கள், அரசு அலுவலர்கள் மற்றும் பொதுமக்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

Feb 25, 2026

பொதுமக்கள் தங்களது வாக்குச்சாவடி மையங்களை அறிந்து கொள்ளும் பொருட்டு அந்தந்த சட்டமன்றத் தொகுதிகளில் “Know Your Booth” விழிப்புணர்வு மேற்கொள்ளப்பட்டுள்ளது என மாவட்ட ஆட்சியர் அவர்கள் தகவல்.

இந்திய தேர்தல் ஆணையத்தின் உத்தரவின்படி, விருதுநகர் மாவட்டத்தில் உள்ள 7 சட்டப்பேரவைத் தொகுதிகளிலும் 1,200 வாக்காளர்களுக்கு மேல் உள்ள  வாக்குச்சாவடிகளை பிரித்து புதிய வாக்குச்சாவடிகள் உருவாக்கப்பட்டுள்ளன.அதன்படி, 1901 ஆக இருந்த வாக்குச்சாவடிகளின் எண்ணிக்கை, தற்போது 98 வாக்குச்சாவடிகள் அதிகரித்து மொத்தம் 1999 வாக்குச்சாவடிகளாக உயர்ந்துள்ளது. அதில் 88 வாக்குச்சாவடி மையங்கள் ஏற்கனவே உள்ள அமைவிடத்திலும், 10 வாக்குச்சாவடிகள் புதிய அமைவிடங்களிலும் உள்ளன.எனவே, இந்த கூடுதல் வாக்குச்சாவடி மையங்களை பொதுமக்கள் அறிந்து கொள்ளவும், தங்களுக்கான வாக்குச்சாவடி மையத்தை தெரிந்து கொள்ளவும் அந்தந்த சட்டமன்றத் தொகுதிகளில் “Know Your Booth” என்ற தலைப்பில் விழிப்புணர்வு மேற்கொள்ளப்பட்டுள்ளது என மாவட்ட ஆட்சியர் / மாவட்ட தேர்தல் அலுவலர் மரு.என்.ஓ.சுகபுத்ரா,I A S., அவர்கள் தெரிவித்துள்ளார்.

Feb 24, 2026

வாக்காளர்  பட்டியல் சிறப்பு  தீவிரத் திருத்தம்-2026.

விருதுநகர் மாவட்ட ஆட்சியர் அலுவலகக் கூட்டரங்கில் (23.02.2026) இந்திய தேர்தல் ஆணையத்தின் வழிகாட்டுதல்களின் அடிப்படையில், 01.01.2026 - ஆம் தேதியை தகுதி நாளாகக் கொண்டு, வாக்காளர்  பட்டியல் சிறப்பு  தீவிரத் திருத்தம்-2026- மேற்கொள்ளப்பட்டு, இறுதி வாக்காளர் பட்டியலை அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சி  பிரதிநிதிகள் முன்னிலையில், மாவட்ட தேர்தல் அலுவலர்/ மாவட்ட ஆட்சித்தலைவர் மரு.என்.ஓ.சுகபுத்ரா,I A S., அவர்கள் வெளியிட்டார்.இறுதி வாக்காளர் பட்டியலின்படி மாவட்டத்தில் மொத்த  வாக்காளர்கள் 14,97,417 உள்ளனர். இதில் ஆண் வாக்காளர்கள் 7,28,539, பெண் வாக்காளர்கள் 7,68,632, இதர வாக்காளர்கள் 246 ஆக மொத்தம் 14,97,417 வாக்காளர்கள் உள்ளனர்.19.12.2025 அன்று வெளியிடப்பட்ட வரைவு வாக்காளர் பட்டியல் வெளியீட்டிற்குப் பிறகு தற்பொழுது 70,030 வாக்காளர்கள் புதிதாக சேர்க்கப்பட்டுள்ளனர். இடம் பெயர்ந்த, இறந்த வாக்காளர்கள் மற்றும் இரட்டைப்பதிவுகள் ஆக மொத்தம் 9,134 வாக்காளர்கள் நீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.  எனவே, மொத்தம் 60,896 வாக்காளர்கள்கடந்தவரைவுபட்டியலைவிடகூடுதலாகஇடம்பெற்றுள்ளனர்.அதன்படி, 202-இராஜபாளையம் சட்டமன்றத் தொகுதியில் 1,03,236 ஆண்களும், 1,08,951 பெண்களும், 33 இதர பிரிவினரும் என மொத்தம் 2,12,220 வாக்காளர்களும், 203-ஸ்ரீவில்லிபுத்தூர் சட்டமன்றத் தொகுதியில் 1,08,109 ஆண்களும், 1,14,218 பெண்களும், 40 இதர பிரிவினரும் என மொத்தம் 2,22,367 வாக்காளர்களும், 204-சாத்தூர் சட்டமன்றத் தொகுதியில்  1,10,693 ஆண்களும், 1,17,207 பெண்களும், 63 இதர பிரிவினரும் என மொத்தம் 2,27,963 வாக்காளர்களும், 205-சிவகாசி சட்டமன்றத் தொகுதியில் 1,09,420 ஆண்களும், 1,16,013 பெண்களும், 28 இதர பிரிவினரும் என மொத்தம் 2,25,461 வாக்காளர்களும்,206-விருதுநகர் சட்டமன்றத் தொகுதியில் 96,436 ஆண்களும், 1,02,141 பெண்களும், 39 இதர பிரிவினரும் என மொத்தம் 1,98,616 வாக்காளர்களும், 207-அருப்புக்கோட்டை சட்டமன்றத் தொகுதியில் 1,00,000 ஆண்களும், 1,06,468 பெண்களும், 29 இதர பிரிவினரும் என மொத்தம் 2,06,497 வாக்காளர்களும், 208-திருச்சுழி சட்டமன்றத் தொகுதியில் 1,00,645 ஆண்களும், 1,036,34 பெண்களும், 14 இதர பிரிவினரும் என மொத்தம் 2,04,293 வாக்காளர்களும், என ஆக மொத்தம் விருதுநகர் மாவட்டத்தில் 7,28,539 ஆண்களும், 7,68,632 பெண்களும், 246 இதர பிரிவினரும் என ஆக மொத்தம் 14,97,417 வாக்காளர்கள் பட்டியலில் இடம் பெற்றுள்ளனர்.மேலும், சிறப்பு தீவிர திருத்தப் பணிகள், 2026-ன் போது வாய்ப்பினை தவறவிட்டோர் மற்றும் 01.01.2026 அன்று 18 வயதினை பூர்த்தி செய்து வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க, திருத்தம், மற்றும் நீக்கம் செய்ய விழையும் அனைவரும் 24.02.2026 முதல் இணைய வழியிலும், உரிய படிவங்களை பூர்த்தி செய்து வாக்குச்சாவடி நிலை அலுவலர்கள் மற்றும் வட்ட, கோட்ட, நகராட்சி, மாநகராட்சி மற்றும் மாவட்ட ஆட்சியர் அலுவலகங்களிலும் வழங்கலாம் என மாவட்ட தேர்தல் அலுவலர்/ மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் தெரிவித்துள்ளார்.

Feb 24, 2026

மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம்.

விருதுநகர் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் மக்கள் குறைதீர்க்கும்  நாள் கூட்டம் மாவட்ட ஆட்சியர் மரு.என்.ஓ.சுகபுத்ரா,I A S., அவர்கள் தலைமையில் (23.02.2026) நடைபெற்றது.இக்கூட்டத்தில், இலவச வீட்டுமனைப்பட்டா மற்றும் பட்டா மாறுதல், குடும்ப அட்டை, வேலை வாய்ப்பு, விபத்து நிவாரணம், மாற்றுத்திறனாளிகள், நலிந்தோர் நல உதவித்திட்டம் மற்றும் விதவை உதவித்தொகை, திருமண உதவித்தொகை, முதியோர் உதவித்தொகை உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் தொடர்பாக மனுக்கள் பெறப்பட்டது.மேலும், மாற்றுத்திறனாளிகள் மற்றும் மூத்தகுடிமக்களுக்காக அமைக்கப்பட்டுள்ள சிறப்பு அமருமிடத்திற்குச் சென்று, மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் கோரிக்கை மனுக்களை பெற்றுக் கொண்டார்.இம்மனுக்களை மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் சம்மந்தப்பட்டதுறை அலுவலர்களிடம் ஒப்படைத்து உரிய நடவடிக்கை எடுக்குமாறு உத்தரவிட்டார்கள்.மேலும் முதலமைச்சர் தனிப்பிரிவு மனுக்கள் மீது தனிக்கவனம் செலுத்தி நடவடிக்கை எடுக்குமாறு மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் அறிவுறுத்தினார்கள்.இக்கூட்டத்தில், நாராணபுரம் கிராமத்தில், வெடிபொருள்கள் தொழிற்சாலையில் ஏற்பட்ட வெடிவிபத்தில் காயமடைந்த 1 நபருக்கும், வெம்பக்கோட்டை வட்டம், கங்கர்செவல் கிராமத்தில், வெடிபொருள்கள் தொழிற்சாலையில் ஏற்பட்ட வெடிவிபத்தில் காயமடைந்த 5 நபர்களுக்கும் தலா ரூ.50 ஆயிரம் வீதம் ஆக மொத்தம் 6 நபர்களுக்கு ரூ.3 இலட்சத்திற்கான காசோலைகளை மாவட்ட ஆட்சியர் அவர்கள் வழங்கினார்.  மேலும், குடும்ப அட்டை வேண்டி விண்ணப்பித்த 6-நபர்களுக்கு மாவட்ட வழங்கல் மற்றும் நுகர்வோர் பாதுகாப்புத்துறை மூலம் மின்னணு குடும்ப அட்டைகளை மாவட்ட ஆட்சியர் அவர்கள் வழங்கினார். தொடர்ந்து, ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறையின் கீழ் 16 நபர்களுக்கு புதிரை வண்ணார் நல வாரிய அட்டைகளையும் மாவட்ட ஆட்சியர் அவர்கள் வழங்கினார். இக்கூட்டத்தில், மாவட்ட வருவாய் அலுவலர் திருமதி ஆனந்தி, அரசு அலுவலர்கள் மற்றும் பொதுமக்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

Feb 23, 2026

மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களின் செயல்பாடு குறித்த விழிப்புணர்வு வாகனப் பணிகளை மாவட்ட ஆட்சித்தலைவர் நேரில் ஆய்வு.

விருதுநகர் மாவட்டம், சிவகாசி சட்டமன்றத் தொகுதிக்குட்பட்ட கட்டசின்னம்பட்டி கிராமத்தில், வாக்காளர்களுக்கு மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களின் (EVM) செயல்பாடு குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்துவதற்காக ஏற்பாடு செய்யப்பட்டுள்ள நடமாடும் செயல்முறை வாகனப் பணிகளை மாவட்ட தேர்தல் அலுவலர் மற்றும் மாவட்ட ஆட்சித்தலைவர் மரு. என்.ஓ. சுகபுத்ரா, I A S., அவர்கள் (21.02.2026) நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.இந்திய தேர்தல் ஆணையத்தின் உத்தரவின்படி, நடைபெறவுள்ள தேர்தலை முன்னிட்டு வாக்காளர்களிடையே மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் (EVM) மற்றும் வாக்காளர் சரிபார்க்கும் காகிதத் தணிக்கைச் சோதனை (VVPAT) இயந்திரங்கள் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன.இதன் ஒரு பகுதியாக, விருதுநகர் மாவட்டம் சிவகாசி சட்டமன்றத் தொகுதிக்குட்பட்ட கட்டசின்னம்பட்டி கிராமத்தில்  (21.02.2026) நடைபெற்ற நடமாடும் விழிப்புணர்வு வாகனப் பணிகளை மாவட்ட தேர்தல் அலுவலர் மற்றும் மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு செய்தார். விழிப்புணர்வு வாகனத்தில் வைக்கப்பட்டிருந்த மின்னணு வாக்குப்பதிவு இயந்திரத்தில் பொதுமக்கள் எவ்வாறு வாக்களிப்பது என்பது குறித்தும், தாங்கள் அளித்த வாக்கு சரியான வேட்பாளருக்குப் பதிவாகியுள்ளதா என்பதை VVPAT இயந்திரத்தின் மூலம் எவ்வாறு உறுதி செய்வது என்பது குறித்தும் செயல்முறை விளக்கம் அளிக்கப்பட்டது.இந்த ஆய்வின் போது, அங்கிருந்த பொதுமக்களிடம் பேசிய மாவட்ட ஆட்சித்தலைவர், தேர்தல் நடைமுறையில் எவ்வித அச்சமும் இன்றி அனைவரும் பங்கேற்க வேண்டும் என்றும், வாக்குப்பதிவு இயந்திரங்களின் பாதுகாப்பு மற்றும் நம்பகத்தன்மை குறித்து முழு நம்பிக்கை கொள்ளலாம் என்றும் அறிவுறுத்தினார். கிராமப்புறங்களில் உள்ள அனைத்து வாக்காளர்களுக்கும், குறிப்பாக முதியவர்கள் மற்றும் முதல்முறை வாக்காளர்களுக்கு இந்த விழிப்புணர்வு சென்றடைவதை உறுதி செய்யுமாறு தொடர்புடைய அலுவலர்களுக்கு உத்தரவிட்டார்.மாவட்டத்தில் உள்ள அனைத்து சட்டமன்றத் தொகுதிகளிலும் இத்தகைய நடமாடும் வாகனங்கள் மூலம் தொடர்ந்து விழிப்புணர்வு ஏற்படுத்தப்படும் என மாவட்ட ஆட்சியர் தெரிவித்தார்.வாக்குப்பதிவின் முக்கியத்துவம் மற்றும் தேர்தல் ஆணையத்தின் புதிய வசதிகள் குறித்த விழிப்புணர்வு துண்டுப் பிரசுரங்கள் பொதுமக்களுக்கு விநியோகிக்கப்பட்டன.இந்த ஆய்வின் போது, சிவகாசி வருவாய் கோட்டாட்சியர் திரு.முகமது இர்பான், I A S., வட்டாட்சியர் திரு.இலட்சம், தேர்தல் பிரிவு அலுவலர்கள் மற்றும் உள்ளாட்சி அமைப்புகளின் பிரதிநிதிகள் உடனிருந்தனர்.

Feb 23, 2026

மக்களைத் தேடிச் சென்று 36 குடும்பங்களுக்கு அவர்கள் இல்லத்திலேயே பட்டா வழங்கிய மாவட்ட ஆட்சியர்.

 விருதுநகர் மாவட்டம், விருதுநகர் வட்டம் கோட்டநத்தம் ஊராட்சியில் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை சார்பில், வீடுகள் கட்டி குடியிருப்பதற்கான உத்தரவுகள் பெற்ற, 36 பயனாளிகளுக்கு வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத் துறை சார்பில், இணையவழி பட்டாக்களை மாவட்ட ஆட்சித்தலைவர் மரு.என்.ஓ.சுகபுத்ரா,I A S., அவர்கள்  (21.02.2026) நேரில் சென்று வழங்கினார்.சொந்தமாக வீடு இல்லாமல், ஆட்சேபனை இல்லாத அரசுப் புறம்போக்கு நிலங்களில் வசித்து வரும் ஏழை எளிய மக்களுக்கு நில உரிமை வழங்கும் நோக்கில் தமிழ்நாடு அரசின் "இலவச வீட்டு மனை பட்டா வழங்கும் திட்டம்" என்ற உன்னதமான திட்டத்தை செயல்பட்டு வருகிறது. இது ஏழை எளிய மக்களின் வாழ்க்கையில் நிலையான தன்மையையும், பாதுகாப்பையும் உறுதி செய்கிறது.தமிழ்நாட்டில் இருக்கக்கூடிய அனைத்து மாவட்டங்களிலும் அதிகமான பட்டாக்களை வழங்கிய மாவட்டங்களில் ஒன்றாக நமது மாவட்டம் திகழ்கிறது.அந்த வகையில்கோட்டநத்தம் கிராமத்தைச் சேர்ந்த 36 குடும்பங்கள், தாங்கள் குடியிருக்கும் இடத்திற்கு பட்டா வேண்டி விடுத்த கோரிக்கையை மாவட்ட நிர்வாகம் துரிதமாகப் பரிசீலித்து, வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத் துறை மூலம் இதற்கான இணையவழி பட்டாக்கள் (Online Patta) தயார் செய்யப்பட்டன.அதனடிப்படையில், கோட்டநத்தம் பகுதியில் குடியிருந்து வரும் அப்பகுதி மக்களின் கோரிக்கைகளை பரிசீலனை செய்து வருவாய்த்துறையின் மூலம், 36 குடும்பங்களுக்கு இணையவழி பட்டாக்களை மாவட்ட ஆட்சித்தலைவர் மரு.என்.ஓ.சுகபுத்ரா,I A S., அவர்கள் அவர்களின் இல்லங்களுக்கு நேரில் சென்று வழங்கினார். தங்கள் இடத்திற்கான முறையான அரசு அங்கீகாரம் (பட்டா) கிடைத்ததன் மூலம் தங்களின் நீண்ட காலக் கனவு நனவாகியுள்ளதாக மக்கள் மகிழ்ச்சி தெரிவித்தனர்.இதற்காகத் தமிழ்நாடு அரசுக்கும், மாவட்ட நிர்வாகத்திற்கும் அவர்கள் மனமார்ந்த நன்றிகளைத் தெரிவித்துக்கொண்டனர்.இந்நிகழ்வின் போது, விருதுநகர் வருவாய் வட்டாட்சியர் திரு.ராஜ்குமார் மற்றும் அரசு அலுவலர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

Feb 23, 2026

சிவகாசி சட்டமன்றத் தொகுதி கட்டசின்னம்பட்டி கிராமத்தில் புதிய வாக்குச்சாவடி மையங்களை மாவட்ட ஆட்சித்தலைவர் நேரில் ஆய்வு செய்தார்.

விருதுநகர் மாவட்டம், சிவகாசி சட்டமன்றத் தொகுதிக்குட்பட்ட கட்டசின்னம்பட்டி கிராமத்தில் 1,200-க்கும் மேற்பட்ட வாக்காளர்களைக் கொண்ட வாக்குச்சாவடிகளைப் பிரித்து, புதிதாக ஏற்படுத்தப்பட்டுள்ள வாக்குச்சாவடி மையங்களை மாவட்ட தேர்தல் அலுவலர் , மாவட்ட ஆட்சித்தலைவர் மரு.என்.ஓ.சுகபுத்ரா, I A S., அவர்கள்  (21.02.2026) நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு செய்தார்.இந்தியத் தேர்தல் ஆணையத்தின் அறிவுறுத்தலின்படி, வாக்காளர்கள் சிரமமின்றி வாக்களிப்பதை உறுதி செய்யும் நோக்கில், அதிகப்படியான வாக்காளர்களைக் கொண்ட வாக்குச்சாவடிகள் மறுசீரமைப்பு செய்யப்பட்டு வருகின்றன. அந்த வகையில், கட்டசின்னம்பட்டி கிராமத்தில் ஒரே வாக்குச்சாவடியில் 1,200-க்கும் அதிகமான வாக்காளர்கள் இருந்ததைக் கருத்தில் கொண்டு, அதனைப் பிரித்து புதிய வாக்குச்சாவடி மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன.இன்று நடைபெற்ற இந்த ஆய்வின் போது, புதிய வாக்குச்சாவடிகளில் வாக்காளர்களுக்குத் தேவையான குடிநீர் வசதி, மின்சாரம், கழிப்பறை வசதி மற்றும் மாற்றுத்திறனாளிகளுக்கான சாய்வுதள வசதி உள்ளிட்ட அடிப்படை வசதிகள் முறையாக இருக்கின்றனவா என்பது குறித்து மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் விரிவாக ஆய்வு செய்தார்.வாக்குச்சாவடி மறுசீரமைப்புப் பணிகளை விரைந்து முடித்து, இறுதி வாக்காளர் பட்டியல் வெளியீட்டிற்குத் தயாராக இருக்குமாறு தொடர்புடைய அலுவலர்களுக்கு அவர் அறிவுறுத்தினார். இறுதி வாக்காளர் பட்டியல் வரும் பிப்ரவரி 23-ஆம் தேதி வெளியிடப்பட உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.இந்த ஆய்வின் போது, சிவகாசி வட்டாட்சியர் மற்றும் தேர்தல் பிரிவு அரசு அலுவலர்கள் உட்பட பலர் உடனிருந்தனர்.

1 2 ... 32 33 34 35 36 37 38 ... 141 142

AD's



More News