25 YEARS OF EXCELLENCE

சமீபத்திய நிகழ்வுகள்:
வைப்பாறு, வைகை ஆறுகள் புத்துயிர் பெற மேற்கு தொடர்ச்சி மலையை பாதுகாக்க வேண்டும் >> இயந்திரம் மூலம் நெல் நடவு பணியை நாடும் விவசாயிகள். >> (நவ. 6) முதல் ராஜபாளையத்தில் புத்தக கண்காட்சி >> அய்யனார் கோவில் நீர்வீழ்ச்சியில் குளிப்பதற்கு தடை. ஒத்துழைக்காத பொதுமக்கள். யாருக்கு நஷ்டம்?. >> எ.கா .த .தர்மராஜா பெண்கள் கல்லூரியில் ரோட்ராக்ட் கிளப் துவக்க விழா >> 227 படுக்கைகளுடன் இராஜபாளையம் அரசு ஆஸ்பத்திரி  தரம் உயர்வு >> இராஜபாளையம் கேசா டிமிர் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியில் கலை அறிவியல் கண்காட்சி நடைபெற்றது. >> வேர்ல்டு விஷன் இந்தியா தொண்டு நிறுவனத்தினர் இலவச சைக்கிள் வழங்கினார்கள். >> பலத்த மழையினால் ராஜபாளைய விவசாயிகள் மகிழ்ச்சி  >> இராஜபாளையம் எ.கா.த. தர்மராஜா பெண்கள் கல்லூரியில் நடந்த மதுரை பல்கலை மண்டலங்களுக்கு இடையேயான வாலிபால் போட்டி, >>


செய்தி மக்கள் தொடர்பு அலுவலகம் விருதுநகர் மாவட்டம்

Aug 19, 2024

மூன்றாவது புத்தக திருவிழாவை முன்னிட்டு மாநில அளவிலான வினாடி வினா போட்டி

விருதுநகர் மாவட்டம், அரசு மருத்துவக்கல்லூரி கலையரங்கத்தில், மூன்றாவது புத்தகத் திருவிழாவை முன்னிட்டு, தமிழ்நாட்டை சேர்ந்த போட்டித் தேர்வுக்கு தயாராகும் மாணவர்களுக்கான சிறப்பு வினாடி வினா போட்டியினை மாவட்ட ஆட்சித்தலைவர் முனைவர் வீ.ப.ஜெயசீலன்., I A S., அவர்கள் (18.08.2024) துவக்கி வைத்தார்.பல்வேறு மாவட்டங்களில் இருந்து போட்டித்தேர்விற்கு தயாராகி கொண்டிருக்கும் கல்லூரி மாணவர்கள், இளைஞர்கள் என சுமார் 234 குழுக்கள் கலந்து கொண்டனர்.வினாடிவினா போட்டி மூன்று நிலைகளாக நடத்தப்படுகிறது. முதல் நிலை எழுத்து தேர்வாக அமையும். இத்தேர்வில் 50 வினாக்கள் தமிழில் கொள்குறி வகையில் கேட்கப்படும்.போட்டியில் மாணவர்கள் மூன்று பேர் கொண்ட அணிகளாக கலந்து கொள்ள வேண்டும். முதலில் நடைபெறும் எழுத்து தேர்வில் அதிக மதிப்பெண்கள் பெறும்  12 அணிகள் அரையிறுதிக்குத் தேர்வு செய்யப்படும். அரையிறுதி நான்கு சுற்றுகளாக நடத்தப்படும்.அரையிறுதியில் இருந்து சிறப்பாக செயல்படும் ஆறு அணிகள் இறுதி நிலைக்குத் தேர்வு செய்யப்படும்.  இறுதி நிலை ஆறு சுற்றுகளாக, நடத்தப்பட்டு அதில் வெற்றி பெறும் அணிகளுக்கு முதல் மூன்று பரிசுகள் வழங்கப்படும்.மேலும், போட்டித் தேர்வுக்கு தயார் செய்வது என்பது ஒரு அரசு பணியை பெறுவதற்கான ஒரு நல்ல முயற்சி. இன்றைய சூழ்நிலையில் போட்டி தேர்வுகளுக்கு தயார் செய்து அரசு பணியை  பெறுவதற்கான போட்டி அதிகமாக இருக்கிறது. நிறைய நன்கு படித்த  பட்டதாரிகள், நல்ல கல்வி பின்புலம் இருப்பவர்கள்  என அனைத்து தரப்பினரும் மற்ற வாய்ப்புகள் இருந்தாலும் போட்டி தேர்வுகளுக்கு என்று நிறைய நபர்கள் படிப்பது என்பது உண்மையிலே நல்ல செய்தி.இதில் மிக முக்கியமானது விரிவான அறிவு இருக்கக்கூடிய ஒரு மனித வளம் உருவாகி கொண்டு இருக்கிறது. தமிழ்நாட்டில் மட்டும் தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வு வாரியத்தால் நடத்தப்படும் போட்டித் தேர்வுகள் மூலம் ஆண்டுக்கு ஏறத்தாழ 15 ஆயிரம்   பணியிடங்களுக்கான தேர்வுகள் நடைபெறுகின்றன. அதற்கு அடுத்தபடியாக இந்திய அளவில் யூ.பி.எஸ்.சி, எஸ்.எஸ்.சி, ரயில்வே, வங்கி உள்ளிட்ட பல்வேறு அமைப்புகளில் ஆண்டுக்கு சுமார் 3 முதல் 4 இலட்சம்  பணியிடங்களுக்கு போட்டித் தேர்வுகள் நடத்தப்படுகின்றன.இதில் தமிழ்நாட்டில் இருந்து இந்தப் போட்டிகளுக்கு தயார் செய்யக்கூடிய மாணவர்கள் எண்ணிக்கை குறைவு.  தற்போது டி.என்.பி.எஸ்.சியில் இருக்கக்கூடிய கணிதம், திறனறிவு போன்ற பாடத்திட்டங்களோடு ஆங்கில அறிவும் கேள்விகளுக்கும்  முயற்சி செய்தோம் என்றால்  தமிழ்நாட்டு மாணவர்களுக்கு இந்திய அளவில் இருக்கக்கூடிய பணியிடங்களுக்கு  மிகப்பெரிய வாய்ப்பு இருக்கிறது. இது குறித்த விழிப்புணர்வு மாணவர்கள் மத்தியில் இருக்க வேண்டும். அடுத்து போட்டி தேர்வுகளில் வெற்றி வாய்ப்பு சதவீதம் குறைவுதான். கடந்த முறை நடைபெற்ற குரூப் 4 தேர்வுக்கு ஏறத்தாழ 20 இலட்சம் மாணவர்கள் தேர்வு எழுத விண்ணப்பித்து, தேர்வு எழுதுபவர்களின் எண்ணிக்கை 15 இலட்சமாக இருந்தது. அதில் மிகவும் முனைப்போடு படிக்கக்கூடிய மாணவர்கள் எண்ணிக்கை  20 விழுக்காடாக சுமார் 3 இலட்சம் போட்டியாளர்கள் மிக தீவிரமாக முயற்சி செய்கிறார்கள். சிறிய அளவிலான மதிப்பெண்கள் வித்தியாசத்தில்  வெற்றி வாய்ப்பு கிடைக்காதவர்கள் உள்ளனர். இதில் வெற்றி பெற்றவர்களின் பண்புகளை சற்று ஆராய்ந்து பார்த்தால் அவர்கள் முழுமையாக அதில் ஈடுபாட்டோடு அவர்களுக்கு கிடைக்க கூடிய சிறிய சிறிய நேரங்களை கூட அந்த போட்டி தேர்வுக்காக தயார் செய்து கொண்டு இருப்பார்கள்.தொடர்ச்சியாக பயிற்சிகளை மேற்கொள்ளும் போது தான் போட்டித் தேர்வுகளில் உள்ள  வினாக்களில் ஏற்படும் சிறு தவறுகளை தவிர்த்து மதிப்பெண்களை அதிகரிக்கலாம்.  இந்த போட்டித் தேர்வுக்கு தயார் செய்து ஒருவேளை வெற்றி பெற முடியாமல் போனால் கூட, இந்த தேர்விற்கு தயார் செய்யும் போது நீங்கள் பெற்ற அறிவும், நீங்கள் கற்ற உலக அறிவும், நீங்கள் வாசிக்கக்கூடிய அன்றாட நிகழ்வுகள் குறித்த அறிவும் உங்களுக்கு வாழ்நாள் முழுவதும் உதவி செய்யும்.நாளை நீங்கள் உங்களது குடும்பம், குழந்தைகளை நல்லபடியாக வளர்ப்பதற்கும், நல்ல குடிமகனாக உருவாக்குவதற்கும் அவர்கள் சிறந்து விளங்குவதற்கும் அற்புதமான உங்களுடைய அறிவு நூற்றுக்கு நூறு வேலை செய்யும். பணியிடங்களில் அது குறித்து அறிவு இருக்க வேண்டும். அதனை முழு ஈடுபாட்டோடு கூடுதலாக உழைக்கும் போது, அது எந்த துறையாக இருந்தாலும் அதில் இருந்து வெற்றி அடைய முடியும்.  அரசு, தனியார் பணிகளோ அல்லது சுய தொழிலோ நீங்கள் செய்யும் போது இந்த இரண்டும் தான் மிக  முக்கியம். அந்த இரண்டையும் நிச்சயமாக போட்டி தேர்வு தயார் செய்கின்ற போது, அந்த காலகட்டம் அதற்குரிய வலிமையை வளர்க்கும். தோல்வியை எதிர்கொள்ளக்கூடிய மனப்பான்மை, தோல்வி என்பது தற்காலிகமானது என்ற புரிதலும் போட்டி தேர்வுக்கு தயார் செய்யக்கூடிய மாணவர்களை தவிர வேறு எவருக்கும் அதிகமாக இருப்பதற்கு வாய்ப்பே இல்லை. எனவே தமிழ்நாட்டில் இலட்சக்கணக்கான இளைஞர்கள் போட்டி தேர்விற்கு தயார் செய்கிறார்கள். அவர்களெல்லாம் தமிழ்நாட்டினுடைய அறிவில் சிறந்த மனித வளத்தின் மிகப்பெரிய அடையாளங்கள். அப்படிப்பட்ட மாணவர்களுக்கு,  இந்த  வினாடி வினா என்பது அறிவுச் சார்ந்த நிகழ்ச்சி.  இதன் மூலமாக நீங்கள் நிறைய கற்றுக் கொள்ள முடியும்.இந்த வினாடி வினா நிகழ்ச்சிக்கு வழங்கப்பட்டுள்ள சங்க இலக்கியமும் திருக்குறளும் என்ற தலைப்பு, நம்முடைய மொழி சார்ந்து, நம்முடைய இலக்கியம் சார்ந்து இருக்கக்கூடிய புரிதலை நம்முடைய படித்த இளைஞர்களுக்கு ஏற்படுத்தும். நாளை இதில் இருக்கக்கூடிய பலர் அடுத்தடுத்த ஆண்டுகளில்  வரக்கூடிய போட்டி தேர்வுகளில் வெற்றி பெற்று அரசு அலுவலகங்களில் வருகின்ற போது, நீங்கள் செலுத்தக்கூடிய அந்த அதிகநேர பணிகளில் தமிழ் இலக்கியத்தின் உடைய தன்மையும், இலக்கிய மனத்தோடும் நீங்கள் செய்கின்ற போது நிச்சயமாக தமிழ் இலக்கியத்தினுடைய பெருமை இன்னும் பரவும். அதற்குத்தான் இந்த நிகழ்ச்சி நடத்தப்படுகிறது என மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் தெரிவித்தார்.வினாடி வினா போட்டியில் வெற்றி பெறுபவர்களுக்கு முதல் பரிசாக ரூ.1 இலட்சமும், இரண்டாம் பரிசாக ரூ.75 ஆயிரமும், மூன்றாம் பரிசாக ரூ.50 ஆயிரமும் வழங்கப்படும்.இந்த வினாடி வினா நிகழ்ச்சியினை இணை இயக்குநர், தமிழ்நாடு பாடநூல் மற்றும் கல்வியியல் பணிகள் கழகம் மரு.சங்கர சரவணன் அவர்கள் தொகுத்து வழங்கினார்.

Aug 19, 2024

விருதுநகர் வட்டத்தில் "உங்களைத் தேடி உங்கள் ஊரில்" என்ற முகாம்

மாவட்ட ஆட்சியர் மற்றும் மாவட்ட அளவிலான அலுவலர்கள் மக்களை தேடிச்சென்று குறைகளைக் கேட்டறியவும், பல்வேறு துறைகளின் மூலம் செயல்படுத்தப்படும் திட்டங்கள், செயல்பாடுகளை விரைவுபடுத்தவும் மற்றும் வழங்கப்படும் சேவைகளின் தரத்தை மேம்படுத்தவும், மக்களை நாடி மக்கள் குறைகளைக் கேட்டு, உடனுக்குடன் தீர்வு காண அரசு இயந்திரம் களத்திற்கே சென்று ஆய்வு செய்திட ‘உங்களைத் தேடி உங்கள் ஊரில்” என்ற புதிய திட்டம் தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களால் அறிவிக்கப்பட்டுள்ளது.அதன்படி, விருதுநகர் மாவட்டம், விருதுநகர் வட்டத்தில் “உங்களைத் தேடி உங்கள் ஊரில்” என்ற புதிய திட்டம் முகாமானது (21.08.2024) அன்று காலை 09.00 மணி முதல் மறுநாள் 22.08.2024 அன்று காலை 09.00 மணி வரை நடைபெறவுள்ளது. மேலும் 21.08.2024 அன்று காலை 09.00 மணி முதல் மாலை 04.30 மணி வரை மாவட்ட ஆட்சியர் மற்றும் மாவட்ட அளவிலான அனைத்து மாவட்ட நிலை அலுவலர்களும் அலுவலர்கள் கள ஆய்வில் ஈடுபட்டு, விருதுநகர் வட்டத்தில் உள்ள மக்களின் குறைகளைக் கேட்டறிந்து அரசின் அனைத்து நலத்திட்டங்களும், அரசு அலுவலகங்களும் மற்றும்  சேவைகளும், தங்கு தடையின்றி  சென்று அடைவதை ஆய்வு செய்ய உள்ளனர். அதன் ஒரு பகுதியாக, (21.08.2024) மாலை 04.30 மணி முதல் 06.00 மணி வரை விருதுநகர் வட்டாட்சியர் அலுவலகத்தில் வைத்து மக்களை சந்தித்து குறைகள் கேட்பதும், மாலை 06.00 மணி முதல் முதல்நிலை அலுவலர்களுடன் திட்டப்பணிகள் குறித்து ஆய்வு செய்து இரவில் தங்கி பணியாற்றவும் உள்ளனர்.  மேலும், அன்றைய தினம் நடைபெறும் முகாமில் பொது மக்களிடமிருந்து கோரிக்கை மனுக்கள் பெறவும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளன. எனவே, விருதுநகர் வட்டத்தில் உள்ள பொதுமக்கள் தங்களது பகுதிகளில் உள்ள குறைகளை மாவட்ட ஆட்சியர் அவர்களிடம் நேரில் தெரிவித்து, அரசின் திட்டங்கள் அனைத்தும் தங்கள் பகுதிக்கு முழுமையாக கிடைத்திட இந்த அரிய வாய்ப்பினை பயன்படுத்திக் கொள்ளுமாறு மாவட்ட ஆட்சித்தலைவர் முனைவர் வீ.ப.ஜெயசீலன்.I A S., அவர்கள் தெரிவித்துள்ளார்கள்.

Aug 19, 2024

விருதுநகர் புதிய பேருந்து நிலையம் வருகின்ற 21.08.2024 முதல் முழுமையாக செயல்படத் துவங்கும் என மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் தகவல்.

விருதுநகரில் புதிய பேருந்து நிலையத்தினை  முழுமையான பயன்பாட்டிற்கு கொண்டுவரும் வண்ணம், மாவட்ட ஆட்சியர் அவர்களின் அறிவுறுத்தலின்படி, அது குறித்த கலந்தாய்வுக் கூட்டம் 27.07.2024 அன்று விருதுநகர் மாவட்ட கூடுதல் நிருவாக நடுவர் மற்றும் மாவட்ட வருவாய் அலுவலர் அவர்களின் தலைமையில் நடைபெற்றது. அக்கூட்டத்தில் கலந்தாலோசனை செய்யப்பட்டதன் படி விருதுநகரில் இருந்து பிற ஊர்களுக்கு  இயக்கப்படும் நகர, புறநகர பேருந்துகள், மற்றும் பிற ஊர்களில் இருந்து விருதுநகர் வழியாக இயக்கப்படும் நகர மற்றும் புறநகர பேருந்துகள் கீழ்க்கண்டவாறு பழைய பேருந்து நிலையம் மற்றும் புதிய பேருந்து நிலையங்களில் இருந்து மற்றும் அவ்வழியாக இயக்கிடவும் புதிய பேருந்து நிலையத்தினை  21.08.2024 முதல் முழுமையான பயன்பாட்டிற்கு கொண்டுவரவும் தீர்மானிக்கப்பட்டுள்ளது.விருதுநகர் புதிய பேருந்து நிலையத்திலிருந்து புறப்படும் மற்றும் மார்க்கமாக செல்லும் பேருந்துகள் விவரம்:-1. கோவில்பட்டி  - (புறநகர்)2. திருநெல்வேலி  - (புறநகர்)3. மதுரை - (புறநகர்)4. கள்ளிக்குடி- (நகர்)5. திருவில்லிபுத்தூர், இராஜபாளையம்-(புறநகர்)6. தென்காசி, இராஜபாளையம் முதல் இராமேஸ்வரம் மார்க்கம்.விருதுநகர்  பழைய பேருந்து நிலையத்திலிருந்து புறப்படும் மற்றும் மார்க்கமாக செல்லும் பேருந்துகள் விவரம்:-1. சிவகாசி- (நகர்)2. காரியாபட்டி - (நகர், புறநகர்)3. வடமலைக்குறிச்சி.4. திருமங்கலம் - (நகர்)5. பேரையூர்6.  அருப்புக்கோட்டைபுதிய பேருந்து நிலையத்தில் இருந்து,வழியாக இயக்கப்படும் பேருந்துகளை முழுமையான ஆய்வு செய்து  கண்காணிக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது.அதன்படி, NH-44   உள்ள கணபதி மில் சந்திப்பு பகுதியில் காவல் கட்டுபாட்டு அறையில் தொடர்ச்சியாக போதுமான காவலர்கள் பணியில் அமர்த்தவும், அரசு/தனியார் பேருந்து உரிமையாளர் சங்கம் சார்பாக புதிய பேருந்து நிலையத்தில் தலா ஒரு டைம் கீப்பர் பணி அமர்த்தப்பட்டு காலநேர பதிவேட்டினை முறையாக பராமரிக்கும் பொருட்டு பணியமர்த்தவும்,மோட்டார் வாகன ஆய்வாளர்கள் பதிவேடுகளை அவ்வப்போது ஆய்வு செய்து புதிய பேருந்து நிலையத்திற்குள் வராமல் சென்ற பேருந்துகளின் மீது நடவடிக்கை எடுக்கவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.மேலும் NH-44  உள்ள கணபதி மில் சந்திப்பு பகுதியில் போதிய வெளிச்சம் ஏற்படுத்திட  தற்காலிகமாக விருதுநகர் நகராட்சி மூலமாக  Focus Light   அமைத்திடவும், புதிய பேருந்து நிலையத்திலிருந்து எம்.ஜி.ஆர் சாலைக்கு திரும்பும் வலது புறம் வளைவு பகுதி மற்றும் எம்.ஜி.ஆர் சாலை வழியாக புதிய பேருந்து நிலையத்திற்கு செல்லும் இடது புறம் வளைவு பகுதியினை  அகலப்படுத்த  நடவடிக்கை மேற்கொள்ளப்பட அறிவுறுத்தப்பட்டுள்ளது. இதன் மூலம், புதிய பேருந்து நிலையத்தினுள் பேருந்துகள் செல்வதில்லை என பல்வேறு தரப்பினர் விடுத்த கோரிக்கைள் பரிசீலனையில் எடுத்துக் கொள்ளப்பட்டு முழுமையான அளவில் புதிய பேருந்து நிலையம் செயல்பட நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது.  மேலும் இதன் காரணமாக விருதுநகர் நகருக்குள் போக்குவரத்து நெரிசல் இல்லாத அளவிற்கு புதிய மற்றும் பழைய பேருந்து நிலையங்கள் வழியாக இயக்கப்படும் பேருந்துகள் வந்து செல்லும் வழித்தடங்கள் வரையறுக்கப்பட்டு, அதன்படி நடைமுறைப்படுத்தப்படவுள்ளது. எனவே, திட்டமிட்ட படி புதிய பேருந்து நிலையம் வருகின்ற   21.08.2024 முதல் முழுமையாக செயல்படத் துவங்கும் என மாவட்ட ஆட்சித்தலைவர் முனைவர் வீ.ப.ஜெயசீலன் , I A S, அவர்கள் தெரிவித்துள்ளார். 

Aug 19, 2024

வேளாண்மை உட்கட்டமைப்பு நிதியின் கீழ் நபார்டு வங்கி உதவியுடன் கொள்முதல் செய்யப்பட்ட சரக்கு வாகனத்தை நியாய விலைக்கடை நகர்வுப் பணிக்காக மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் கொடியசைத்து துவக்கி வைத்தார்

விருதுநகர் மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் (16.08.2024) இராஜபாளையம் வட்டத்தில் உள்ள சம்மந்தபுரம் தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கத்திற்கு வேளாண்மை உட்கட்டமைப்பு நிதியின் கீழ் நபார்டு வங்கி உதவியுடன் ரூ.9.60 இலட்சம் மதிப்பில் கொள்முதல் செய்யப்பட்ட சரக்கு வாகனத்தை நியாய விலைக்கடை நகர்வுப் பணிக்காக மாவட்ட ஆட்சித்தலைவர் முனைவர் வீ.ப.ஜெயசீலன், I A S., அவர்கள் கொடியசைத்து துவக்கி வைத்தார்.

Aug 17, 2024

பாதம் பாதுகாப்போம் திட்டத்தின் கீழ் நீரிழிவு நோய் பாத பாதிப்புகளை கண்டறிதல் மற்றும் கால் இழப்புகளை தடுக்கும் மருத்துவ அறுவை இடையீட்டுகள் குறித்து ஆரம்ப சுகாதார நிலைய அலுவலர்களுக்கான சிறப்பு பயிற்சி வகுப்பு

விருதுநகர் மாவட்ட அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் (16.08.2024) மருத்துவம் மற்றும் நல்வாழ்வுத்துறை சார்பில் பாதம் பாதுகாப்போம் திட்டத்தின் கீழ் நீரிழிவு நோய் பாத பாதிப்புகளை கண்டறிதல் மற்றும் கால் இழப்புகளை தடுக்கும் மருத்துவ அறுவை இடையீட்டுகள் குறித்து ஆரம்ப சுகாதார நிலைய அலுவலர்களுக்கான சிறப்பு பயிற்சி வகுப்பினை மாவட்ட ஆட்சித்தலைவர் முனைவர் வீ.ப.ஜெயசீலன், I A S., அவர்கள் குத்துவிளக்கேற்றி துவக்கி வைத்தார்.இந்த பயிற்சி வகுப்பில் சர்க்கரை நோயினால் ஏற்படும் பாத புண் வர காரணங்கள், பாதப்புண் தடுப்பு முறைகள், சிகிச்சை முறைகள், தொடர் கவனிப்பு முறைகள் குறித்து அறுவைச் சிகிச்சைத்துறை மருத்துவர்களால் எடுத்துரைக்கப்பட்டது.தமிழ்நாடு அரசு மருத்துவம் மற்றும் நல்வாழ்வுத்துறை சார்பில் பல்வேறு சிறப்புமிக்க திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. அந்த வகையில் சர்க்கரை நோயால் ஏற்படும் பாத பாதிப்புகளை தொடக்க நிலையிலேயே கண்டறிந்து கால் இழப்புகளை தடுப்பதற்கு ஒருங்கிணைந்த பாதம் பாதுகாப்போம் திட்டம் ரூ.26.62 கோடி செலவில் மாநிலம் முழுவதும் செயல்படுத்தப்படும் என தமிழக அரசால் அறிவிக்கப்பட்டது.அந்த அறிவிப்புக்கு ஏற்ப மக்களைத் தேடி மருத்துவம் திட்டத்தின்படி, மருத்துவர்கள், மருத்துவப் பணியாளர்களுக்கு பயிற்றுவிக்கும் அரங்கம் தொடங்கப்பட்டு, பயிற்சி அளிக்கப்பட்டது. தொடர்ந்து, பாத பாதிப்புகளை கண்டறியும் பரிசோதனை மையங்கள் தமிழகத்திலுள்ள ஆரம்ப சுகாதார நிலையங்களிலும் அமைக்கப்படவுள்ளன. மேலும், அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைகளில் பாத அறுவை சிகிச்சை சேவைகள் வழங்கப்படவுள்ளது.அதன்படி, விருதுநகர் மாவட்டத்தில், நீரிழிவு நோய் பாத பாதிப்புகளை கண்டறிதல் மற்றும் கால் இழப்புகளை தடுக்கும் மருத்துவ அறுவை இடையீட்டுகள் குறித்து ஆரம்ப சுகாதார நிலைய அலுவலர்களுக்கான சிறப்பு பயிற்சி வகுப்பு இன்று தொடங்கி வைக்கப்பட்டு, 2 நாட்கள் நடைபெறவுள்ளது. தொடர்ந்து நீரிழிவு நோய் பாதிப்பில் உள்ளவர்களுக்கு காலில் புண் ஏற்படும் வாய்ப்பு மிக அதிகம். அதனால் அவர்களுக்கு புண் வரும்பட்சத்தில் எவ்வாறு பரிசோதனை செய்து கண்டறிய வேண்டும் என இந்த பயிலரங்கத்தில் கற்று கொடுக்கப்படுகிறது. அதன் மூலம் தேவையான நேரத்தில் சரியான சிகிச்சை அளிக்க முடிகிறது.உலகம் முழுவதும் நீரிழிவு நோயால் பாதிக்கப்பட்ட 10 சதவீதம் பேருக்கு பாத நோய் பாதிப்பு இருக்கிறது என புள்ளி விவரங்கள் தெரிவிக்கின்றன. நீரிழிவு நோய் என்பது தவிர்க்க முடியாத சில பாதிப்புகள் ஏற்படுத்தக்கூடிய நோயாக உள்ளது. பாதத்தைக் கண்டு கொள்ளாமல் இருந்தால் பாதத்தை இழக்கும் நிலைமை சமுதாயத்தில் ஏற்படும். எந்த நோயாக இருந்தாலும் ஆரம்ப நிலையில் கண்டறிய வேண்டும் என மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் தெரிவித்தார்.

Aug 17, 2024

"Coffee With Collector” என்ற 97-வது கலந்துரையாடல் நிகழ்ச்சி

விருதுநகர் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில்  (16.08.2024) சிவகாசி கல்வி மாவட்டத்தை சேர்ந்த நான்கு அரசு பள்ளிகளில்  11 மற்றும் 12-ஆம் வகுப்பிலிருந்து சிறந்து விளங்கக்கூடிய 40 பள்ளி மாணவர்களுடனான "Coffee With Collector”   என்ற 97- வது கலந்துரையாடல் நிகழ்ச்சியில் மாவட்ட ஆட்சித்தலைவர் முனைவர் வீ.ப.ஜெயசீலன்,I A S., அவர்கள் மாணவர்களுடன் கலந்துரையாடி, கல்லூரிகள் தேர்வு, உயர்கல்வி மற்றும் வேலைவாய்ப்பு குறித்த உரிய வழிகாட்டுதல் வழங்கினார்.விருதுநகர் மாவட்டத்தில் பள்ளிகளில் பயிலும் மாணவர்களில் கல்வி, பொது அறிவு, விளையாட்டு, ஓவியம், இசை உள்ளிட்ட பல்வேறு திறன் அடிப்படையில் மாணாக்கர்களின் திறன்களை கண்டறிந்து, மாணவ, மாணவியர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டு பிரதி வாரம் ஒருமுறை அவர்களை மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் நேரில் அழைத்து  கலந்துரையாடும் நிகழ்ச்சி தொடங்கப்பட்டு, இன்று 97-வது முறையாக கலந்துரையாடல் நிகழ்ச்சி நடைபெற்றது.இந்த நிகழ்ச்சியின் முக்கிய நோக்கம், மாணவர்களுடைய உயர்ந்த இலட்சியம், அவர்களுடைய உயர்கல்வி பயில்வதற்கு வழிகாட்டுதல், போட்டி தேர்வுகளை எதிர்கொள்ளுதல், தோல்வியை எவ்வாறு எதிர்கொள்வது, அவர்களுக்கு கல்வி, வேலைவாய்ப்பு உள்ளிட்ட பல்வேறு பிரிவுகளில் அவர்களுடைய சந்தேகங்களை அகற்றி, அவர்கள் வாழ்க்கையில் எங்கு பிறந்தோம், நாம் அரசு பள்ளியில் பயின்றோம், நமக்கு வசதி இல்லை, நமக்கு பின்புலம் இல்லை என்பதெல்லாம், வாழ்க்கையில் ஒரு உயர்ந்த இடத்தை அடைவதற்கு ஒரு தடை இல்லை என்பதை புரிய வைத்து, தன்னம்பிக்கை, விடாமுயற்சி, கடின உழைப்புடன் தொடர்ந்து உழைத்தால்  நாம் எதையும் சாதிக்க முடியும் என்பதை உணர்த்தும் வகையில் சரியான வழிகாட்டுதல் வழங்குவதே இந்த நிகழ்ச்சியின் முக்கிய நோக்கமாகும்.இந்த கலந்துரையாடல் நிகழ்ச்சியில் கலந்து கொண்ட பள்ளி மாணவ, மாணவிகளிடம், அவர்களுடைய இலட்சியம், அவர்களுக்கு எந்த துறையில் ஆர்வம், அவர்கள் உயர்கல்வி பயில விரும்பும் கல்லூரி மற்றும் இடம் உள்ளிட்டவை குறித்து கேட்டறிந்தார்.பள்ளி கல்லூரி படிப்பு என்பது ஒருவரின் வாழ்க்கையில் ஒருமுறை மட்டுமே கிடைக்கும். எனவே பள்ளி மற்றும் கல்லூரி படிப்பின் மூலம் வாழ்க்கைக்கான பல அனுபவங்களை கற்றுக் கொள்ளலாம். அனுபவங்களில் இருந்து கிடைக்கும் கல்விதான் சிறந்த கல்வியாகும்.பன்னிரண்டாம் வகுப்பு பள்ளி படிப்பை முடித்தவுடன் கல்லூரி படிப்பில் சேருவதற்காக அனைத்து கல்லூரிகளிலும் தவறாமல் விண்ணப்பம் செய்ய வேண்டும். கடந்தாண்டு எந்த கல்லூரியில் எவ்வளவு கட் ஆப் மதிப்பெண் அடிப்படையில் மாணவர் சேர்க்கை நடைபெற்றது போன்ற தகவல்களை தெரிந்துகொள்ள வேண்டும். ஒவ்வொருவரும் தங்களது தனித் திறமைகளை வளர்த்துக்கொள்ள வேண்டும்.பன்னிரெண்டாம் வகுப்பில் எடுக்க கூடிய மதிப்பெண்களை பயன்படுத்தி நமக்கான நல்ல வாயப்புகளை உருவாக்கி கொள்ள வேண்டும். உயர்கல்வி எங்கு பயின்றாலும், இந்தியாவில் சிறந்த கல்லூரியை தேர்ந்தெடுத்து படிக்க வேண்டும். வெற்றிக்கு  தேவையான  விஷயங்களை தொடர்ந்து ஆர்வத்துடன், கவனசிதறல் இல்லாமல், தொடர்ந்து விடா முயற்சியுடனும், கடினமாக உழைத்தால் எளிதாக வெற்றி பெறலாம்.மேலும், ஒவ்வொருவருக்கும் என்று தனித்திறமைகள் உள்ளன. அத்திறமைகளை அனைவரும் வளர்த்து கொண்டு வாழ்வில் முன்னேற வேண்டும் என மாவட்ட ஆட்சித்தலைவர்  அவர்கள் தெரிவித்தார்.

Aug 17, 2024

விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம்

விருதுநகர் மாவட்ட ஆட்சியர் அலுவலக வளர்ச்சி மன்ற கூட்டரங்கில்  (16.08.2024) விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் மாவட்ட ஆட்சித்தலைவர்  முனைவர் வீ.ப. ஜெயசீலன், I A S,அவர்கள் தலைமையில் நடைபெற்றது.இக்கூட்டத்தில், மாவட்ட விவசாயிகள் கலந்து கொண்டு தங்களது குறைகளை மாவட்ட ஆட்சியர் அவர்களிடம் தெரிவித்துக் கொண்டனர். மாவட்ட ஆட்சியர் அவர்கள் விவசாயிகளின் கோரிக்கைகளைக் கேட்டறிந்து உரிய விளக்கம் அளித்து தொடர் நடவடிக்கை எடுக்க தொடர்புடைய அலுவலர்களுக்கு அறிவுறுத்தினார்கள்.கடந்த விவசாயிகள் குறை தீர்க்கும் நாள் கூட்டத்தில் விவசாயிகளால் வழங்கப்பட்ட மனு மீது எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் குறித்து வேளாண்மை துணை இயக்குநர் / மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (விவ) அவர்களால் எடுத்துரைக்கப்பட்டது.மேலும், வத்திராயிருப்பு மாநில தோட்டக்கலை வளர்ச்சி திட்டத்தின் கீழ் ரூ.3200/- மானியத்தில் மல்லிகை செடிகளையும்,  வத்திராயிருப்பு பனை மேம்பாட்டு இயக்கத்தின் கீழ் ரூ.1500/- மானியத்தில் பனங்கன்றுகளையும், புடலை, வெண்டை, சீனி அவரை, பீர்க்கு, அவரை, தட்டைப்பயறு விதைகள் அடங்கிய ஆடி பட்ட விதை தொகுப்புகளையும் மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் விவசாயிக்கு வழங்கப்பட்டது.பின்னர், கண்மாய்கள் மற்றும் ஓடை ஆக்கிரமிப்புகளை அகற்றுவதற்கு அப்பகுதிக்குரிய வட்டார வளர்ச்சி அலுவலர் மற்றும் வட்டாட்சியர் இணைந்து துரித நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும், சீமைக் கருவேல மரங்களை அரசு ஆணையின்படி அகற்றிட நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும்  சீமை கருவேல மரங்களை அகற்றினால் மட்டுமே வனவிலங்குகளால் ஏற்படும் பயிர் சேதத்தினை தடுக்க முடியும் என தெரிவித்தார்.மேலும், வனவிலங்குகளால் பயிர்சேதம் ஏற்படும் பட்சத்தில் வனத்துறையினர் முன்னுரிமை அடிப்படையில் கள ஆய்வு செய்து இழப்பீடு விவசாயிகளுக்கு உடனடியாக வழங்கிடவும், துணை இயக்குநர், திருவில்லிபுத்தூர் மேகமலை புலிகள் காப்பகம், கண்காணிப்புப் பொறியாளர், தமிழ்நாடு மின்சார வாரியத்துடன் இணைந்து அட்டவணை அடிப்படையில் கள ஆய்வுசெய்து அறிக்கை சமர்ப்பிக்குமாறு அறிவுறுத்தப்பட்டது.இக்கூட்டத்தில் மாவட்ட வருவாய் அலுவலர் திரு.இரா.ராஜேந்திரன், மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (விவசாயம்) திருமதி நாச்சியார் அம்மாள், வேளாண்மை இணை இயக்குநர் திருமதி க.விஜயா, துணை இயக்குநர் (மேகமலை புலிகள் காப்பகம்) திரு.ப.தேவராஜ், விவசாயிகள், பொதுமக்கள் மற்றும் அரசு அலுவலர்கள்; உட்பட பலர் கலந்து கொண்டனர். 

Aug 17, 2024

வடகிழக்கு பருவமழை மழைக்காலங்களில் மேற்கொள்ள வேண்டிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து அனைத்துத்துறை அலுவலர்களுடனான ஆலோசனைக்கூட்டம்

விருதுநகர் மாவட்ட ஆட்சியர் அலுவலக வளர்ச்சி மன்றக் கூட்டரங்கில் (16.08.2024) வடகிழக்கு பருவ மழைக்காலங்களில் மேற்கொள்ள வேண்டிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்தும், வெள்ளம், மற்றும் இயற்கை சீற்றங்களில் இருந்து பொதுமக்களை மீட்க எடுக்கப்படும் நடவடிக்கைகள் குறித்தும், அனைத்துத்துறை அலுவலர்களுடனான ஆலோசனைக்கூட்டம் மாவட்ட ஆட்சித்தலைவர் முனைவர் வீ.ப.ஜெயசீலன், I A S,அவர்கள் தலைமையில் நடைபெற்றது.01.10.2024 முதல் 31.12.2024 வரையிலான வடகிழக்கு பருவமழை காலங்களில் வெள்ளத்தால் ஏற்படும் பாதிப்புகளிலிருந்து, பொதுமக்களை பாதுகாப்பதற்கும், அனைத்து துறை அலுவலர்களும், ஒருங்கிணைந்து செயலாற்றப்பட வேண்டும்.  அதனடிப்படையில் காவல் துறை சார்பில் பருவமழை காலங்களில் வெள்ளத்தால் ஏற்படும் பாதிப்புகளிலிருந்து, மீட்புப்பணி மேற்கொள்ள தகுதி வாய்ந்த காவலர் மற்றும் உதவி காவல் ஆய்வாளர் நிலையிலான ஒரு குழுவினை அமைக்கவும், மேலும் தீயணைப்பு மற்றும் மீட்புப் பணித்துறையின் மூலம் மாவட்ட மற்றும் வட்ட அளவில் வெள்ளத்தால் பாதிப்பு ஏற்படக்கூடிய பகுதிகள் மற்றும் பொதுமக்கள் அதிகம் கூடும் இடங்களில் விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் மாதிரி ஒத்திகை நடத்திடவும் ஏற்பாடு செய்யப்பட வேண்டும். மேலும், பொதுப்பணித்துறையின் மூலம் தங்கள் கட்டுப்பாட்டில் உள்ள அனைத்து நீர்நிலைகளையும் ஆய்வு செய்து, வெள்ளத்தால் பாதிக்கக்கூடிய பகுதிகளில் தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும். மேலும், அரசு கட்டிடங்கள் அனைத்தையும் ஆய்வு செய்து, பலவீனமான கட்டிடங்களை கண்டறிந்து, அவற்றை சீர் செய்திடவேண்டும். நெடுஞ்சாலைத்துறை சார்பில் தங்களின் கட்டுப்பாட்டில் உள்ள பாலங்கள் மற்றும் சாலைகளை ஆய்வு செய்து, பலவீனமாக உள்ளவற்றை சீர் செய்திடவும், உணவுப்பொருள் வழங்கல் துறையின் மூலம் அத்தியாவசிய உணவுப்பொருட்களை தேவையான அளவு முன்கூட்டியே இருப்பு வைத்து விநியோகிக்க தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ளவும், மேலும் ஊரக வளர்ச்சித் துறையின் மூலம் தங்கள் கட்டுப்பாட்டில் உள்ள பலவீனமான நீர்நிலைகளின் கரைகள் மற்றும் மதகுகளை சரிசெய்திடவும், வடகிழக்கு பருவமழை காலங்களில் கிராமங்களில் வெள்ள பாதிப்புகள் ஏற்படும் போது மக்களை காப்பாற்றிட ஊராட்சி செயலருக்கு தக்க வழிமுறைகளை கடைபிடிக்க வேண்டும்.  மேலும், சுகாதாரத் துறையின் மூலம் மழைக்காலங்களில் தொற்றுநோய் பரவாமல் தடுத்திட தேவையான நடவடிக்கைகள் மேற்கொள்ள வேண்டும்.  வேளாண் துறை மூலம் வெள்ளக் காலங்களில் வேளாண் பயிர்கள், தோட்டப் பயிர்கள் மற்றும் இதரப் பயிர்களில் ஏற்படும் பாதிப்புகள் குறித்த விவரங்களை உடனுக்குடன் கண்டறிந்து அறிக்கை அனுப்பிடவும்,  மேலும் நகராட்சி மற்றும் பேரூராட்சிகளின் சார்பில் தங்கள் கட்டுப்பாட்டில் உள்ள கழிவுநீர் வாய்க்கால்களில் மழை நீர் தங்குதடையின்றி செல்ல வழிகள் ஏற்படுத்தவும், தாழ்வான குடியிருப்பு பகுதிகளில் மழை நீர் தேங்காமல் வெளியேற்றிட மாற்று வழிகளை ஏற்பாடு செய்திடவும், மீட்புப் பணிகளுக்கான இயந்திரங்களை தயார் நிலையில் வைத்திட தேவையான நடவடிக்கைகள் மேற்கொள்ள வேண்டும்.  எனவே, அனைத்துத்துறை அலுவலர்களும், வடகிழக்குப் பருவமழை காலங்களில் ஒருங்கிணைந்து பணியாற்றி பொதுமக்களை இடர்பாடுகளிலிருந்து காப்பாற்றிட வேண்டும் என மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் தொடர்புடைய  அலுவலர்களுக்கு அறிவுறுத்தினார்.அதுமட்டும்மல்லாமல், பொதுமக்கள் அனைவரும் வடகிழக்கு பருவமழை தொடர்பான செய்திகள் மற்றும் எச்சரிக்கைகளை உடனுக்குடன்  அறிந்து கொள்ளும் பொருட்டு TNSMART -  மொபைல் செயலியை பதிவிறக்கம் செய்து  பயன்படுத்தவும், மேலும், பொதுமக்கள் அனைவரும் மழை வெள்ள காலங்களில் தங்களின் தேவைகளுக்கும், புகார் தெரிவிப்பதற்கும் 1077 என்ற கட்டணமில்லா தொலைபேசியில் தொடர்புகொண்டு, தங்களது கோரிக்கைகளை தெரிவிக்கலாம். இடி மின்னல் முன்னெச்சரிக்கை அறிவிப்புகளை “DAMIN”  மொபைல் செயலியை பதிவிறக்கம் செய்வதன் மூலம் அறிந்து கொள்ளலாம். மின்தடை, சேதமடைந்த மின்கம்பங்கள் மற்றும் அறுந்து கிடக்கும் மின் வயர்கள் தொடர்பான புகார்களுக்கு 9498794987 என்ற தொலைபேசி எண்களை தொடர்பு கொண்டு புகார் அளித்தால் உடனடியாக நடவடிக்கை எடுக்கப்படும் என மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் தெரிவித்தார்.

Aug 16, 2024

அருப்புக்கோட்டை வட்டம், பாலவநத்தம் கிராமத்தில் கிராம சபைக் கூட்டம்

விருதுநகர் மாவட்டம், அருப்புக்கோட்டை வட்டம், பாலவநத்தம் கிராமத்தில்  (15.08.2024) 78-வது சுந்திரதினத்தை முன்னிட்டு, கிராமசபைக் கூட்டம் மாவட்ட ஆட்சித்தலைவர்   முனைவர் வீ.ப.ஜெயசீலன்,  I A S,அவர்கள் தலைமையில் நடைபெற்றது.இக்கூட்டத்தில், தூய்மைப் பணியாளர்களுக்கு மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் பொன்னாடை அணிவித்து கௌரவித்தார்.இந்த கிராம சபைக் கூட்டத்தில், 01.04.2024 முதல் 31.07.2024 வரையிலான கிராம ஊராட்சி நிர்வாகம் மற்றும் பொது நிதி செலவினம் குறித்து விவாதிக்கப்பட்டது. கிராம ஊராட்சியின் தணிக்கை குறித்து விவாதிக்கப்பட்டது. மேலும், தூய்மையான குடிநீர் விநியோகத்தினை உறுதி செய்வது, இணையவழி வரி செலுத்தும் சேவை, இணையவழி மனைப்பிரிவு மற்றும் கட்டட அனுமதி வழங்குதல் குறித்தும் விவாதிக்கப்பட்டது. சுய சான்றின் அடிப்படையில் குடியிருப்பு கட்டடங்களுக்கு உடனடி பதிவின் மூலம் அனுமதி வழங்குதல், தமிழ்நாடு எளிமைப்படுத்தப்பட்ட ஊராட்சி கணக்கு (TN PASS) , தமிழ்நாடு உயிரிப் பல்வகைமை வாரியம்-உயிரிப் பல்வகைமை மேலாண்மை குழு குறித்தும், மகாத்மாகாந்தி தேசிய ஊரக வேலை உறுதித் திட்டம்;, தூய்மைபாரத இயக்கம்(ஊரகம்) சுகாதாரம், ஜல் ஜீவன் இயக்கம் ஆகியன குறித்தும் விரிவாக விவாதிக்கப்பட்டது.இந்த கிராம சபைக் கூட்டத்தில், மேலும் பொதுசுகாதாரம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை, கால்நடைதுறை, வேளாண்மைத்துறை உள்ளிட்ட பல்வேறு அரசுத்துறைகளை சார்ந்த அரசு அலுவலர்கள் தங்கள் துறைகளின் மூலம் செயல்படுத்தப்படும் திட்டங்களை பொதுமக்கள் அறிந்து தெரிந்து கொள்ளும் விதமாக விரிவாக எடுத்துரைத்தனர்.அரசு என்பது எல்லா மக்களையும் சமமாக பார்த்து அவர்களுக்கு தேவையான அடிப்படை வசதிகளை செய்து தரும் ஒரு அமைப்பாகும். இந்த கிராம சபையின் மிக முக்கிய நோக்கம் என்னவென்றால், ஜனநாயக நாட்டில், கிராமத்தில்; ஊராட்சி தலைவர்கள், மாவட்டத்தில் மாவட்ட ஆட்சியர்கள், அரசுத் துறை அலுவலர்கள், மக்கள் பிரதிநிதிகள், உள்ளாட்சி பிரதிநிதிகள் ஆகியோர்கள் இருப்பார்கள். நாங்கள் எல்லாம் மக்களின் பணியாளர்கள். எங்களுக்கு கிடைக்கப்பெற்ற அதிகாரம் உங்களிடம் இருந்து பெறப்பட்டது. உண்மையான அதிகாரம் மக்களிடம் தான் உள்ளது. அதனடிப்படையில் இந்த கிராமசபை கூட்டத்தின் வாயிலாக இந்த கிராமத்தின் வளர்ச்சிக்கு தேவையான பணிகள் அரசு மூலம் என்னென்ன வளர்ச்சி பணிகள் முடிக்கப்பட்டுள்ளது, என்னென்ன பணிகள் நடைபெற்று வருகிறது. இன்னும் என்னென்ன தேவைகள் உள்ளது என்பது கிராம மக்கள் வாயிலாக அறிந்து அதை செயல்படுத்துவது தான் இதன் நோக்கம்.தற்போது ஒவ்வொரு கிராமத்திலும் கலைஞர் கனவு இல்லம் என்ற திட்டத்தின் மூலமாக அனைவருக்கும் வீடு வழங்கக்கூடிய திட்டத்தை தமிழ்நாடு அரசு செயல்படுத்தி வருகிறது.  கிராமசபை கூட்டத்தில் பட்டா இருந்தும் வீடு இல்லாதவர்களுக்கு வீடு கட்டிக்கொடுக்கும் திட்டத்தின் மூலம் பயன்பெறும் வகையில் பயனாளிகள் தேர்வு செய்து முன்னுரிமை அடிப்படையில் வீடு கட்டி தரவும் நடவடிக்கை எடுக்கப்படும்.அதுமட்டுமல்லாமல், கிராமத்தில் திறந்தவெளியில் மலம் கழிப்பது தவிர்த்தல், குப்பைகளை தரம் பிரித்தல், சுற்றுச்சூழல் பாதுகாத்தல் மற்றும் நீர்நிலைகளை பாதுகாத்தல் போன்ற கடமைகளை செய்து நாம் உறுதுணையாக இருக்க வேண்டும்.எனவே, நாம் நம்முடைய உரிமைகளை நாம் கேட்கின்ற அதே நேரத்தில் நாம் ஒரு குடிமகனாக குடிமகளாக இவ்வளவு கடமைகள் இருக்கிறது என்பதை பற்றியும் புரிந்து கொள்வதற்கு தான் இந்த கிராமசபைக்கூட்டம் நடத்தப்படுகிறது என மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் தெரிவித்தார்.

Aug 16, 2024

‘Coffee With Collector” என்ற 96-வது கலந்துரையாடல் நிகழ்ச்சி

விருதுநகர் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில்  (14.08.2024) சிவகாசி கல்வி மாவட்டத்தை சேர்ந்த இரண்டு தனியார் மெட்ரிக் பள்ளியை சேர்ந்த 11 மற்றும் 12-ஆம் வகுப்பிலிருந்து சிறந்து விளங்கக்கூடிய 40 பள்ளி மாணவர்களுடனான ‘Coffee With Collector”  என்ற 96- வது கலந்துரையாடல் நிகழ்ச்சியில் மாவட்ட ஆட்சித்தலைவர்  முனைவர் வீ.ப.ஜெயசீலன்,I A S., அவர்கள் மாணவர்களுடன் கலந்துரையாடி, கல்லூரிகள் தேர்வு, உயர்கல்வி மற்றும் வேலைவாய்ப்பு குறித்த உரிய வழிகாட்டுதல் வழங்கினார்.விருதுநகர் மாவட்டத்தில் பள்ளிகளில் பயிலும் மாணவர்களில் கல்வி, பொது அறிவு, விளையாட்டு, ஓவியம், இசை உள்ளிட்ட பல்வேறு திறன் அடிப்படையில் மாணாக்கர்களின் திறன்களை கண்டறிந்து, மாணவ, மாணவியர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டு பிரதி வாரம் ஒருமுறை அவர்களை மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் நேரில் அழைத்து  கலந்துரையாடும் நிகழ்ச்சி தொடங்கப்பட்டு, இன்று 96-வது முறையாக கலந்துரையாடல் நிகழ்ச்சி நடைபெற்றது.இந்த நிகழ்ச்சியின் முக்கிய நோக்கம், மாணவர்களுடைய உயர்ந்த இலட்சியம், அவர்களுடைய உயர்கல்வி பயில்வதற்கு வழிகாட்டுதல், போட்டி தேர்வுகளை எதிர்கொள்ளுதல், தோல்வியை எவ்வாறு எதிர்கொள்வது, அவர்களுக்கு கல்வி, வேலைவாய்ப்பு உள்ளிட்ட பல்வேறு பிரிவுகளில் அவர்களுடைய சந்தேகங்களை அகற்றி, அவர்கள் வாழ்க்கையில் எங்கு பிறந்தோம், நாம் அரசு பள்ளியில் பயின்றோம், நமக்கு வசதி இல்லை, நமக்கு பின்புலம் இல்லை என்பதெல்லாம், வாழ்க்கையில் ஒரு உயர்ந்த இடத்தை அடைவதற்கு ஒரு தடை இல்லை என்பதை புரிய வைத்து, தன்னம்பிக்கை, விடாமுயற்சி, கடின உழைப்புடன் தொடர்ந்து உழைத்தால்  நாம் எதையும் சாதிக்க முடியும் என்பதை உணர்த்தும் வகையில் சரியான வழிகாட்டுதல் வழங்குவதே இந்த நிகழ்ச்சியின் முக்கிய நோக்கமாகும்.இந்த கலந்துரையாடல் நிகழ்ச்சியில் கலந்து கொண்ட பள்ளி மாணவ, மாணவிகளிடம், அவர்களுடைய இலட்சியம், அவர்களுக்கு எந்த துறையில் ஆர்வம், அவர்கள் உயர்கல்வி பயில விரும்பும் கல்லூரி மற்றும் இடம் உள்ளிட்டவை குறித்து கேட்டறிந்தார்.பள்ளி கல்லூரி படிப்பு என்பது ஒருவரின் வாழ்க்கையில் ஒருமுறை மட்டுமே கிடைக்கும். எனவே பள்ளி மற்றும் கல்லூரி படிப்பின் மூலம் வாழ்க்கைக்கான பல அனுபவங்களை கற்றுக் கொள்ளலாம். அனுபவங்களில் இருந்து கிடைக்கும் கல்விதான் சிறந்த கல்வியாகும்.மருத்துவம், பொறியியல் படிப்புகளுக்கு அனைத்து நுழைவு தேர்வுகளை பற்றி தெரிந்துகொள்ள வேண்டும். எந்த கல்லூரியில் எந்த படிப்பு சேரவேண்டும் என்பதை முடிவு செய்து விடா முயற்சியுடன் படிக்க வேண்டும். மருத்துவ படிப்பு சேர விரும்பும் மாணவர்கள் நுழைவு தேர்வை மனதில் வைத்து படிக்க வேண்டும். மேலும் நீட் தேர்வில் ஒவ்வொரு சரியான பதிலுக்கும் மதிப்பெண்களை வழங்குகிறது. அதே நேரத்தில், ஒவ்வொரு தவறான பதிலுக்கும் மதிப்பெண் கழிக்கப்படுகிறது. இதனை  மாணவர்கள் கவனத்தில் கொள்ள வேண்டும்.12-ஆம் வகுப்பு பள்ளி படிப்பை முடித்தவுடன் கல்லூரி படிப்பில் சேருவதற்காக அனைத்து கல்லூரிகளிலும் தவறாமல் விண்ணப்பம் செய்ய வேண்டும். கடந்தாண்டு எந்த கல்லூரியில் எவ்வளவு கட் ஆப் மதிப்பெண் அடிப்படையில் மாணவர் சேர்க்கை நடைபெற்றது போன்ற தகவல்களை தெரிந்துகொள்ள வேண்டும். ஒவ்வொருவரும் தங்களது தனித் திறமைகளை வளர்த்துக்கொள்ள வேண்டும்.12-ஆம்வகுப்பில் எடுக்க கூடிய மதிப்பெண்களை பயன்படுத்தி நமக்கான நல்ல வாய்ப்புகளை உருவாக்கி கொள்ள வேண்டும். உயர்கல்வி எங்கு பயின்றாலும், இந்தியாவில் சிறந்த கல்லூரியை தேர்ந்தெடுத்து படிக்க வேண்டும். வெற்றிக்கு  தேவையான  விஷயங்களை தொடர்ந்து ஆர்வத்துடன், கவனசிதறல் இல்லாமல், தொடர்ந்து விடா முயற்சியுடனும், கடினமாக உழைத்தால் எளிதாக வெற்றி பெறலாம்.கல்லூரி படிப்பில் சேர்வதற்கு விருப்பத்தின் அடிப்படையில் மட்டும் முடிவு எடுத்தல் கூடாது. அனைவருக்கும் இலட்சியம் உண்டு. இலட்சியத்தை அடைவதற்கு தொடர்ந்து விடா முயற்சி செய்ய வேண்டும். நிலையான தொடர்ச்சியான சிறிய முயற்சிகள் பெரிய மாற்றங்களை ஏற்படுத்துகிறது.மேலும், ஒவ்வொருவருக்கும் என்று தனித்திறமைகள் உள்ளன. அத்திறமைகளை அனைவரும் வளர்த்து கொண்டு வாழ்வில் முன்னேற வேண்டும் என மாவட்ட ஆட்சித்தலைவர்  அவர்கள் தெரிவித்தார்.

1 2 ... 33 34 35 36 37 38 39 ... 74 75

AD's



More News