விருதுநகர் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் (14.08.2024) பள்ளி கல்வித்துறை சார்பில், 12-ம் வகுப்பில் தேர்ச்சி சதவீதம் குறைந்த பள்ளிகளின் தலைமை ஆசிரியர்களுக்கான ஆய்வுக் கூட்டம் மாவட்ட ஆட்சித்தலைவர் முனைவர் வீ.ப.ஜெயசீலன்,I A S., அவர்கள் தலைமையில் நடைபெற்றது.
விருதுநகர் மாவட்ட ஆட்சியர் அலுவலகக் கூட்டரங்கில், மாநில திட்டக்குழுவின் சார்பில், வளமிகு வட்டார வளர்ச்சி திட்டத்தை செயல்படுத்தப்படுவது தொடர்பான விருதுநகர் மற்றும் இராமநாதபுரம் மாவட்டத்தை சேர்ந்த மாவட்ட அளவிலான அலுவலர்களுக்கான கலந்தாய்வு கூட்டத்தினை மாவட்ட ஆட்சித்தலைவர் முனைவர் வீ.ப.ஜெயசீலன்.,I A S., அவர்கள் (14.08.2024) துவக்கி வைத்தார்.2023-2024 -ம் ஆண்டின் நிதிநிலை அறிக்கை கூட்டத்தொடரில் நிதி மற்றும் மனித வள மேலாண்மைத்துறை அமைச்சர் அவர்களால் பின்தங்கிய வட்டாரங்களை முன்னேற்றும் பொருட்டு வளமிகு வட்டார வளர்ச்சித் திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டது.தாழ்த்தப்பட்ட மற்றும் பழங்குடியின மக்கள் தொகை, விவசாய தொழிலாளர்கள், அரசு பள்ளி மாணவர்கள் சதவீதம் 10-ஆம் வகுப்பு தேர்ச்சி சதவீதம், மகப்பேறு இறப்பு விகிதம், குழந்தை இறப்பு விகிதம், குடிசை வீடுகளில் குடியிருப்பு விகிதம், குடிநீர் குழாய் இணைப்பு இல்லாத வீடுகள் விகிதம் மற்றும் மண் சாலைகள் விகிதம் அடிப்படையில் தமிழகத்தில் 50 வட்டாரங்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளது.விருதுநகர் மாவட்டத்தில் திருச்சுழி, நரிக்குடி மற்றும் இராமநாதபுரம் மாவட்டத்தில் திருவாடனை, முதுகுளத்தூர் ஆகிய வட்டாரங்கள் வளமிகு வட்டார வளர்ச்சித் திட்டத்தின் கீழ் தேர்வு செய்யப்பட்டுள்ளன.தமிழ்நாட்டில் ஏறக்குறைய 450 வட்டாரங்கள் உள்ளன. அதில் நமது மாவட்டத்தில் 11 வட்டாரங்கள் உள்ளன. பொதுவாக வளர்ச்சி குறியீடுகளை பற்றி பேசும்பொழுது, ஒரு குறிப்பிட்ட நிலப் பகுதியில் இருக்கக்கூடிய மக்களிடையே இருக்கும் வேறுபாடு ஆகும்.மாநில அளவிலான வோறுபாடுகள், மாவட்ட அளவிலான வேறுபாடுகள் இருப்பதை போல, மாவட்டத்திற்குள் வட்டார அளவிலான வேறுபாடுகளை நிவர்த்தி செய்திடும் பொருட்டு வளமிகு வட்டார வளர்ச்சித் திட்டம் செயல்படுத்தப்படவுள்ளது எனவும்,விருதுநகர் மாவட்டத்தில் திருச்சுழி, நரிக்குடி மற்றும் இராமநாதபுரம் மாவட்டத்தில் திருவாடனை, முதுகுளத்தூர் ஆகிய வட்டாரங்களில், வயதுகேற்ற உயரம் மற்றும் எடை குறைவாக உள்ள குழந்தைகளை கண்டறிந்து அதற்கான காரணங்களை நிவர்த்தி செய்ய நடவடிக்கை மேற்கொள்ளப்பட வேண்டும்.மேலும், மழைப்பொழி குறைவாக உள்ள பகுதியாக மேற்கண்ட வட்டாரங்கள் இருப்பதால், மழை நீரினை சேமித்திட தேவையான நடவடிக்கை மேற்கொள்ளப்பட வேண்டும் எனவும், 2023-24 ஆம் ஆண்டினை அடிப்படை ஆண்டாக கொண்டு சேகரிக்கப்பட்ட புள்ளி விவரங்களை மாவட்ட இலக்கு மற்றும் மாநில இலக்குகளை விட அதிகமாக அடைந்திட அனைத்து துறை அலுவலர்களும் பணிபுரிய வேண்டும்.இரண்டு பகுதியிலும் உள்ள அரசு அலுவலர்கள் அனைவரும் அடிப்படை பகுதியில் உள்ள மக்களின் வாழ்க்கைத் தரத்தை உயர்த்துவதற்கு அவர்களுக்கு வளர்ச்சி சார்ந்த குறியீடுகளை மேம்படுத்துவதற்கு என்ன பணிகள் எல்லாம் செய்ய வேண்டும் என்பது குறித்தும், தரவுகளின் அடிப்படையில் நிர்வாக செயல்பாடுகள் எந்த அளவிற்கு உள்ளது என்பது குறித்தும் தெரிந்து கொள்ள வேண்டும்.பின்னர், பெறப்பட்ட தரவுகள் அடிப்படையில் தரவுகள் சார்ந்த வழிகாட்டு நெறிமுறைகளை நிர்வாக செயல்பாடுகளை மேம்படுத்தும் பொருட்டு நடைபெறும் இக்கூட்டத்தினை அனைத்து துறை அலுவலர்களும் பயன்படுத்திக் கொண்டு, அர்பணிப்பு உணர்வோடு செயல்பட வேண்டும் என மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் தெரிவித்தார்.இந்நிகழ்ச்சியில், திட்ட இயக்குநர் மரு.தண்டபாணி, சென்னை மாநில திட்டக்குழு முழு நேர உறுப்பினர் மருத்துவர் ஜெ.அமலோர்பவநாதன், மதுரை காமராஜர் பல்கலைகழக பேராசிரியர் திரு.எஸ்.புஷ்பராஜ், ஆலோசகர் திரு.சரவணக்குமார், துணை ஆலோசகர் திரு.குமரன், மாநில திட்டக்குழு அலுவலர்கள் மற்றும் அரசு அலுவலர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.
கேராளா மாநிலத்தில் உள்ள வயநாடு மாவட்டத்தில் நிலச்சரிவுகள் ஏற்பட்டு அப்பகுதியில் அனைத்து இடங்களில் கனமழை ஏற்பட்டு வெள்ளப்பெருக்கால் வீடுகளை இழந்து நிவாரண முகாம்களில் தங்கி இருக்கும் குடும்பங்களுக்கு, கேரளா மாநில முதல்வர் நிவாரணத் தொகைக்கு மதுரை வேளாண்மைக் கல்லூரி முன்னாள் மாணவர்கள் சார்பில் முனைவர்.எஸ்.மோகன்,(பேட்ச்1972-76) என்பவர் நிவாரண நிதியாக ரூ1,00,000/- மற்றும் திரு.ஜெ.தவசுமுத்து (பேட்ச்1980-84) என்பவர் ரூ.50000/- வரைவோலையாக விருதுநகர் மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்களிடம் வழங்கியுள்ளனர். வரைவோலைகள் கேரளா மாநில முதலமைச்சர் பொது நிவாரண நிதிக்கு அனுப்பப்பட உள்ளது என மாவட்ட ஆட்சித்தலைவர் முனைவர் வீ.ப.ஜெயசீலன் I A S., அவர்கள் தெரிவித்துள்ளார்.
தமிழ்நாடு தொழில் முதலீட்டுக் கழகம் மாநில அளவில் செயல்பட்டு வரும் ஒரு தமிழ்நாடு அரசு நிதிக் கழகம் ஆகும். 1949 ம் ஆண்டு துவங்கப் பெற்ற இக்கழகம் மாநில அரசின் ஆதரவுடன் இதுவரை எண்ணற்ற தொழிற்சாலைகளுக்கு கடனுதவி வழங்கி தொழில் வளர்ச்சிக்கு முன்னோடியாக திகழ்கிறது.இக்கழகம் குறு சிறு மற்றும் நடுத்தர தொழில் பிரிவுகளுக்கு புதிய தொழிற்சாலைகளை நிறுவுவதற்கும் தற்போது இயங்கி கொண்டிருக்கும் தொழிற்சாலைகளை விரிவுபடுத்துவதற்கும், உற்பத்தியை பன்முகப்படுத்துவதற்கும் பல்வேறு சிறப்புத் திட்டத்தின் கீழ் கடனுதவி வழங்கி வருகிறது.தமிழ்நாடு தொழில் முதலீட்டுக் கழகம் சிவகாசி கிளை அலுவலகத்தில் (முகவரி:-98/சி4 சேர்மன் சண்முகநாடார் ரோடு, 2வது தளம், சிவகாசி 626 123, விருதுநகர் மாவட்டம்) குறு சிறு மற்றும் நடுத்தர (MSME) தொழில்களுக்கான சிறப்பு தொழில் கடன் மேளா 19.08.2024 முதல் 06.09.2024 வரை நடைபெறுகிறது.இச்சிறப்பு தொழில் கடன் மேளாவில் தமிழ்நாடு தொழில் முதலீட்டுக் கழகத்தின்; பல்வேறு திட்டங்களின் சிறப்பு அம்சங்கள், மத்திய மாநில அரசுகளின் மானியங்கள் முதல் தலைமுறை தொழில் முனைவோர் மற்றும்; தொழில் நிறுவன மேம்பாட்டுத் திட்டம் (NEEDS) போன்றவை குறித்த விரிவான விளக்கங்கள் தரப்படுகிறது. தகுதி பெறும் தொழில்களுக்கு தமிழக அரசின் 25% முதலீட்டு மானியம் ரூ.150 இலட்சம் வரை வழங்கப்பட்டு வருகிறது மேலும் ஏற்கனவே இயங்கி வரும் நிறுவனங்கள் தங்கள் உற்பத்தியை மேம்படுத்தும் பொருட்டு விரிவாக்கம் செய்ய, நவீன இயந்திரங்கள் நிறுவும் பட்சத்தில் கூடுதலாக 5 % வட்டி மானியம் வழங்கப்படும். இந்த முகாம் காலத்தில் சமர்ப்பிக்கப்படும் கடன் விண்ணப்பங்களுக்கு ஆய்வு கட்டணத்தில் 50 விழுக்காடு சலுகை அளிக்கப்படும். இந்த அரிய வாய்ப்பினை புதிய தொழில் முனைவோர் / தொழிலதிபர்கள் பயன்படுத்தி தொழில் திட்டங்களுடன் வருகை தந்து தொழில் கடன் மற்றும் மத்திய, மாநில அரசுகளின் மானிய சேவைகளை பயன்படுத்திட வேண்டும் எனவும், மேலும் தகவலுக்கு 94443-96806, 04562-229322 என்ற எண்ணை தொடர்பு கொள்ளலாம் என மாவட்ட ஆட்சித்தலைவர் முனைவர் வீ.ப.ஜெயசீலன்,I A S அவர்கள் தெரிவித்துள்ளார்.
விருதுநகர் மாவட்டம், அருப்புக்கோட்டை ஊராட்சி ஒன்றியம், பாலவநத்தம் கிராமத்தில் (14.08.2024) “மக்களுடன் முதல்வர்” திட்டத்தின் கீழ் நடைபெற்ற சிறப்பு முகாமில், மாவட்ட ஆட்சித்தலைவர் முனைவர் வீ.ப.ஜெயசீலன், I A S., அவர்கள் தலைமையில், வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத்துறை அமைச்சர் திரு.கே.கே.எஸ்.எஸ்.ஆர்.ராமச்சந்திரன் அவர்கள் கலந்து கொண்டு, பொதுமக்களிடம் கோரிக்கை மனுக்களை பெற்றுக் கொண்டார்.இம்முகாமில் பல்வேறு துறைகளிலிருந்து நலத்திட்ட உதவிகளை வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத்துறை அமைச்சர் அவர்கள் வழங்கினார்கள்.அரசின் சேவைகள் விரைவாகவும் எளிதாகவும் மக்களை சென்றடையும் வகையிலும், நிர்வாகத்தில் வெளிப்படைத் தன்மையை ஏற்படுத்திடவும், “மக்களுடன் முதல்வர்” என்ற புதிய திட்டத்தினை தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் தொடங்கி வைத்து செயல்படுத்தி வருகிறார்கள்.அனைத்து தரப்பு மக்களுக்கும் 15 அரசுத் துறைகளின் சேவைகள் எளிதில் கிடைத்திடவும், தாமதங்களை தவிர்த்திட வேண்டும் என்பதும் தான் இந்த திட்டத்தின் நோக்கமாகும். “மக்களுடன் முதல்வர்” திட்டத்தின் கீழ், நடைபெறும் முகாம்களில் வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத் துறை, நகராட்சி நிர்வாகத் துறை, ஊரக வளர்ச்சித் துறை, ஆதிதிராவிடர் நலத்துறை, பிற்படுத்தப்பட்டோர், மிகப்பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நலத்துறை, சமூக நலத்துறை, மாற்றுத்திறனாளிகள் நலத்துறை, கூட்டுறவுத்துறை, மகளிர் மேம்பாட்டுக் கழகம், வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சி துறை, எரிசக்தி துறை, தொழிலாளர் நலன் மற்றும் திறன் மேம்பாட்டுத் துறை, குறு, சிறு மற்றும் நடுத்தரத் தொழில்கள் துறை ஆகிய துறைகளின் வழியாக வழங்கப்படும் பல்வேறு சேவைகள் திட்டங்கள் மக்கள் எளிதில் உடனடியாக பெறும் வகையில் முகாமில் கோரிக்கைகளை மனுக்களாக பெற்று உடனடியாக தீர்வு காணப்படும்.தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் பொதுமக்களின் நலனுக்காக கலைஞர் மகளிர் உதவித்தொகை, முதியோர் ஓய்வூதிய தொகை, இலவச வீட்டுமனை பட்டா, பெண்களுக்கான இலவச பேருந்து பயணம் உள்ளிட்ட பல்வேறு திட்டங்களை தொடர்ச்சியாக செயல்படுத்தி வருகிறார்கள்.தற்போது மக்களுடன் முதல்வர் முகாம்கள் மூலம் ஐந்து அல்லது ஆறு கிராமங்களை ஒரு கூட்டாக அமைத்து ஒரு பொதுவான இடத்தில் பல்வேறு துறை அலுவலர்கள் நேரடியாக பொதுமக்களிடம் மனுக்களை பெற்று, அதற்கான சரியான தீர்வுகளை வழங்கி வருகிறார்கள்.மேலும், கலைஞர் மகளிர் உரிமைத்தொகைகள் கிடைக்க பெறாதவர்களுக்கும், முதியோர் உதவித்தொகை விண்ணப்பித்தோர்களுக்கும் தகுதியின் அடிப்படையில் விரைவாக தீர்வு காணப்படும்.எனவே தங்கள் பகுதியில் நடைபெறும் குறிப்பிட்ட முகாம் நாட்களில் பொதுமக்கள் அனைவரும் “மக்களுடன் முதல்வர்” முகாமில் கலந்து கொண்டு பயனடையலாம் என்று வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத்துறை அமைச்சர் அவர்கள் தெரிவித்தார்.
விருதுநகர் மாவட்டம், காரியாபட்டி வட்டம், அழகியநல்லூர் கிராமத்தில், மக்கள் தொடர்பு திட்ட முகாம் மாவட்ட ஆட்சித்தலைவர் முனைவர் வீ.ப.ஜெயசீலன்,I A S, அவர்கள் தலைமையில் (14.08.2024) நடைபெற்றது.இம்முகாமில், வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத்துறையின் மூலம், வெடி விபத்தில் உயிரிழந்த 3 நபர்களின் வாரிசுதாரர்களுக்கு தலா ரூ.3 இலட்சம் வீதம் முதலமைச்சர் பொது நிவாரண நிதி (உதவிதொகை) களையும், 55 பயனாளிகளுக்கு ரூ.16,14,000/- மதிப்பில் இலவச வீட்டுமனைப் பட்டாக்களையும், 30 பயனாளிகளுக்கு நத்தம் நிலவரித்திட்ட தூய சிட்டாக்களையும், 4 பயனாளிகளுக்கு நத்தம் பட்டாக்களையும், வேளாண்மைத்துறையின் மூலம் 4 பயனாளிகளுக்கு ரூ.42,365/- மதிப்பில் கலைஞரின் அனைத்து கிராம ஒருங்கிணைந்த வேளாண்மை வளர்ச்சி திட்டம் மற்றும் NFSNM - சத்துமிகு தானியம் மற்றும் இடுபொருள்களையும், தோட்டக்கலைத்துறையின் மூலம் 2 பயனாளிகளுக்கு ரூ.14,400/-மதிப்பில் கலைஞரின் அனைத்து கிராம ஒருங்கிணைந்த வேளாண்மை வளர்ச்சி திட்டம் மற்றும் மாநில தோட்டக்கலை அபிவிருத்தி காய்கறி சாகுபடி பரப்பு விரிவாக்கத்தையும், கால்நடை பராமரிப்புத் துறையின் மூலம், 5 பயனாளிகளுக்கு தாது உப்புக்கலவையையும், மீன்வளத்துறையின் மூலம் 3 பயனாளிகளுக்கு ரூ.3000/- மதிப்பில் கலைஞரின் அனைத்து கிராம அண்ணா மறுமலர்ச்சித் திட்டத்தின் கீழ் மீன் குஞ்சுகளையும் என 106 பயனாளிகளுக்கு ரூ.25,73,765/- மதிப்பிலான அரசின் பல்வேறு நலத்திட்ட உதவிகளை மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் வழங்கினார்.தமிழ்நாடு அரசின் மூலம் செயல்படுத்தப்பட்டு வரும் அனைத்து திட்டங்கள் பற்றியும் அதற்கான தகுதிகள் பற்றியும் அனைத்து பொதுமக்களும் தெரிந்துகொள்ள வேண்டும் என்ற நோக்கில் இம்முகாம் நடத்தப்படுகிறது. இம்முகாமில் பல்வேறு துறைகளை சார்ந்த அரசு அலுவலர்கள் தங்கள் துறைசார்ந்து என்னென்ன திட்டங்கள் உள்ளன என்பதை எடுத்துரைத்து, அனைத்து திட்டங்களையும் கடைக்கோடி கிராமங்களில் வாழும் ஏழை, எளிய மக்களும் அறிந்து தெரிந்து கொண்டு எவ்வித சிரமமின்றி அரசின் அனைத்து நலத்திட்ட உதவிகளையும் தகுதியான மக்கள் பெற்று பயன்பெற வேண்டும் என்பதற்காகத்தான் ஒவ்வொரு மாதமும் ஒரு கிராமத்தை தேர்வு செய்து, அதனடிப்படையில் மக்கள் தொடர்பு திட்ட முகாம் நடத்தப்படுகிறது.மேலும் இந்த மக்கள் தொடர்பு முகாமில் அரசினுடைய திட்டங்களை மக்கள் அறிந்து கொள்கிற வகையில் பல்வேறு அரசுத் துறைகள் மூலமாக கண்காட்சி அரங்குகள் அமைக்கப்பட்டு, அதன் மூலம் பொது மக்களுக்கு திட்டங்கள் குறித்து எடுத்துரைக்கப்பட்டு வருகிறது.ஏழை எளிய கிராமப்புற மக்கள் தமக்கான சந்தேகங்களை போக்கிக் கொண்டு, அறிவியல் பூர்வமாக தெரிந்து கொண்டு பயன்பெறுவதே இது போன்ற நிகழ்ச்சிகள் நடத்தப்படுவதின் நோக்கம். தமிழ்நாடு அரசு மூலம் ஒவ்வொரு துறையின் மூலமாக பல்வேறு திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகின்றன.
விருதுநகர் மாவட்டம், திருவில்லிபுத்தூர் வட்டம், மல்லி உட்கடை மாயத்தேவன்பட்டி கிராமத்தில் இயங்கி வரும் தனியாருக்குச் சொந்தமான பட்டாசு ஆலையில் (14-08-2024) காலை சுமார் 09.20 மணியளவில் எதிர்பாராதவிதமாக ஏற்பட்ட வெடிவிபத்தில் விருதுநகர் மாவட்டம், திருவில்லிபுத்தூர், மல்லி உட்கடை நாகபாளையத்தைச் சேர்ந்த திரு.புள்ளகுட்டி (வயது 65) த/பெ.கோபால்சாமி மற்றும் வத்திராயிருப்பு, குன்னூரைச் சேர்ந்த திரு.கார்த்திக் ஈஸ்வரன் (வயது 35) த/பெ. ஜோதி நாயுடு ஆகிய இருவரும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர் என்ற துயரமான செய்தியைக் கேட்டு மிகுந்த வருத்தமும் வேதனையும் அடைந்தேன்.மேலும், இவ்விபத்தில் காயமடைந்து சிவகாசி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவரும் திரு.போஸ் (வயது 35) த/பெ.சபரியப்பன் மற்றும் திரு.மணிகண்டன் (வயது 31) த/பெ.பிள்ளையார் ஆகிய இருவருக்கும் சிறப்புச் சிகிச்சை அளிக்கவும் உத்தரவிட்டுள்ளேன். இந்த விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கும் அவர்களது உறவினர்களுக்கும் எனது ஆழ்ந்த இரங்கலையும், ஆறுதலையும் தெரிவித்துக் கொள்வதோடு, உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு தலா மூன்று இலட்சம் ரூபாயும், காயமடைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருபவர்களுக்கு தலா ஐம்பதாயிரம் ரூபாயும் முதலமைச்சரின் பொது நிவாரண நிதியிலிருந்து வழங்கிடவும் உத்தரவிட்டுள்ளேன்.
விருதுநகர் மாவட்டம், இராஜபாளையம் ஊராட்சி ஒன்றியம், மீனாட்சிபுரம் ஊராட்சியில் (13.08.2024) செய்தி மக்கள் தொடர்புத்துறையின் சார்பாக வைக்கப்பட்டுள்ள தமிழக அரசின் சாதனை விளக்க புகைப்படக் கண்காட்சியினை பொதுமக்கள் பார்வையிட்டனர்.
விருதுநகர் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் (13.08.2024) சிவகாசி கல்வி மாவட்டத்தை சேர்ந்த நான்கு அரசு உதவி பெறும் பள்ளியை சேர்ந்த 11 மற்றும் 12-ஆம் வகுப்பிலிருந்து சிறந்து விளங்கக்கூடிய 40 பள்ளி மாணவர்களுடனான ‘Coffee With Collector” என்ற 95- வது கலந்துரையாடல் நிகழ்ச்சியில் மாவட்ட ஆட்சித்தலைவர் முனைவர் வீ.ப.ஜெயசீலன், I A S, அவர்கள் மாணவர்களுடன் கலந்துரையாடி, கல்லூரிகள் தேர்வு, உயர்கல்வி மற்றும் வேலைவாய்ப்பு குறித்த உரிய வழிகாட்டுதல் வழங்கினார்.விருதுநகர் மாவட்டத்தில் பள்ளிகளில் பயிலும் மாணவர்களில் கல்வி, பொது அறிவு, விளையாட்டு, ஓவியம், இசை உள்ளிட்ட பல்வேறு திறன் அடிப்படையில் மாணாக்கர்களின் திறன்களை கண்டறிந்து, மாணவ, மாணவியர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டு பிரதி வாரம் ஒருமுறை அவர்களை மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் நேரில் அழைத்து கலந்துரையாடும் நிகழ்ச்சி தொடங்கப்பட்டு, இன்று 95-வது முறையாக கலந்துரையாடல் நிகழ்ச்சி நடைபெற்றது.இந்த நிகழ்ச்சியின் முக்கிய நோக்கம், மாணவர்களுடைய உயர்ந்த இலட்சியம், அவர்களுடைய உயர்கல்வி பயில்வதற்கு வழிகாட்டுதல், போட்டி தேர்வுகளை எதிர்கொள்ளுதல், தோல்வியை எவ்வாறு எதிர்கொள்வது, அவர்களுக்கு கல்வி, வேலைவாய்ப்பு உள்ளிட்ட பல்வேறு பிரிவுகளில் அவர்களுடைய சந்தேகங்களை அகற்றி, அவர்கள் வாழ்க்கையில் எங்கு பிறந்தோம், நாம் அரசு பள்ளியில் பயின்றோம், நமக்கு வசதி இல்லை, நமக்கு பின்புலம் இல்லை என்பதெல்லாம், வாழ்க்கையில் ஒரு உயர்ந்த இடத்தை அடைவதற்கு ஒரு தடை இல்லை என்பதை புரிய வைத்து, தன்னம்பிக்கை, விடாமுயற்சி, கடின உழைப்புடன் தொடர்ந்து உழைத்தால் நாம் எதையும் சாதிக்க முடியும் என்பதை உணர்த்தும் வகையில் சரியான வழிகாட்டுதல் வழங்குவதே இந்த நிகழ்ச்சியின் முக்கிய நோக்கமாகும்.இந்த கலந்துரையாடல் நிகழ்ச்சியில் கலந்து கொண்ட பள்ளி மாணவ, மாணவிகளிடம், அவர்களுடைய இலட்சியம், அவர்களுக்கு எந்த துறையில் ஆர்வம், அவர்கள் உயர்கல்வி பயில விரும்பும் கல்லூரி மற்றும் இடம் உள்ளிட்டவை குறித்து கேட்டறிந்தார்.பள்ளி கல்லூரி படிப்பு என்பது ஒருவரின் வாழ்க்கையில் ஒருமுறை மட்டுமே கிடைக்கும். எனவே பள்ளி மற்றும் கல்லூரி படிப்பின் மூலம் வாழ்க்கைக்கான பல அனுபவங்களை கற்றுக் கொள்ளலாம். அனுபவங்களில் இருந்து கிடைக்கும் கல்விதான் சிறந்த கல்வியாகும்.மருத்துவம், பொறியியல் படிப்புகளுக்கு அனைத்து நுழைவு தேர்வுகளை பற்றி தெரிந்துகொள்ள வேண்டும். எந்த கல்லூரியில் எந்த படிப்பு சேரவேண்டும் என்பதை முடிவு செய்து விடா முயற்சியுடன் படிக்க வேண்டும். மருத்துவ படிப்பு சேர விரும்பும் மாணவர்கள் நுழைவு தேர்வை மனதில் வைத்து படிக்க வேண்டும். மேலும் நீட் தேர்வில் ஒவ்வொரு சரியான பதிலுக்கும் மதிப்பெண்களை வழங்குகிறது. அதே நேரத்தில், ஒவ்வொரு தவறான பதிலுக்கும் மதிப்பெண் கழிக்கப்படுகிறது. இதனை மாணவர்கள் கவனத்தில் கொள்ள வேண்டும்.12-ஆம் வகுப்பு பள்ளி படிப்பை முடித்தவுடன் கல்லூரி படிப்பில் சேருவதற்காக அனைத்து கல்லூரிகளிலும் தவறாமல் விண்ணப்பம் செய்ய வேண்டும். கடந்தாண்டு எந்த கல்லூரியில் எவ்வளவு கட் ஆப் மதிப்பெண் அடிப்படையில் மாணவர் சேர்க்கை நடைபெற்றது போன்ற தகவல்களை தெரிந்துகொள்ள வேண்டும். ஒவ்வொருவரும் தங்களது தனித் திறமைகளை வளர்த்துக்கொள்ள வேண்டும்.
விருதுநகர் மாவட்டம் திருவில்லிபுத்தூர் வட்டம், அச்சம்தவிழ்த்தான் கிராமத்தில், ஊரக வளர்ச்சி மற்றும் உள்ளாட்சித்துறை, பசுமை தமிழ்நாடு இயக்கம் மற்றும் பசுமை விருதுநகர் இணைந்து செயல்படுத்தும் அதிகளவு மரக்கன்றுகள் நடும் பணியினை மாவட்ட ஆட்சித்தலைவர் முனைவர் வீ.ப.ஜெயசீலன், I A S., அவர்கள் (13.08.2024) தொடங்கி வைத்தார்.பின்னர், அத்திக்குளம் தேய்வேந்தரி கிராமத்தில், வேளாண்மைத்துறையின் மூலம் விவசாய நிலங்களில் நீடித்த பசுமைப் போர்வைக்கான இயக்கம் திட்டத்தின்கீழ், 5 ஏக்கர் பரப்பளவில் சுமார் 1000 மகோகனி மரக்கன்றுகள் நடப்பட்டு, பராமரிக்கப்பட்டு வரும் பணிகளை மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு செய்தார்.பின்னர், அத்திக்குளம் தேய்வேந்தரி கிராமத்தில், வேளாண்மைத்துறையின் மூலம் முதலமைச்சரின் மண்ணுயிர் காத்து மன்னுயிர் காப்போம் திட்டத்தின் கீழ் விவசாயிகளுக்கு பாரம்பரிய நெல் ரகங்களை 50 சதவீகித மானியத்திலும், மாநில வேளாண் அபிவிருத்தி திட்டத்தின்; துவரை ஊடுபயிர் சாகுபடிக்கு துவரை விதைகளையும், தேசிய உணவு பாதுகாப்பு திட்டத்தின் கீழ் விவசாயிகளுக்கு மானிய விலையில் உளுந்து விதைகளையும், வேளாண் விரிவாக்க சீரமைப்பு திட்டத்தின் கீழ் மாடி தோட்டம் அமைப்பதற்கான தொகுப்புகளையும் மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் வழங்கினார்.அதனை தொடர்ந்து, திருவில்லிபுத்தூர் வட்டம், வன்னியம்பட்டி அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தினை பார்வையிட்டு, அங்கு சிகிச்சை பெற வரும் புறநோயாளிகள், கர்ப்பிணி தாய்மார்களிடம் சுகாதார நிலையத்தில் வழங்கப்படும் சேவைகள், அடிப்படை வசதிகள் உள்ளிட்டவைகள் குறித்து கேட்டறிந்தார்.பின்னர் திருவில்லிபுத்தூரில் வேளாண்மை விரிவாக்க மையத்தில் உள்ள சேமிப்பு கிடங்கினை மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் பார்வையிட்டு ஆய்வு செய்து, விவசாயிகளுக்கு வழங்கப்படும் உரம், பூச்சிக்கொல்லி மற்றும் இடுபொருட்கள் கண்காட்சியினை பார்வையிட்டார்.இந்த நிகழ்வுகளின் போது, மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர்(விவசாயம்) திருமதி நாச்சியார் அம்மாள், மாவட்ட சுகாதார அலுவலர்(பொ) (சிவகாசி) மரு.யசோதாமணி, வேளாண்மைத்துறை அலுவலர்கள், தோட்டக்கலைத் துறை அலுவலர்கள் மற்றும் அரசு அலுவலர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.