விருதுநகர் மாவட்டம், சாத்தூர் எஸ்.ஆர்.என்.எம். (SRNM) கல்லூரியில் (03.03.2026), உணவுப்பொருள் வழங்கல் மற்றும் நுகர்வோர் பாதுகாப்புத்துறை சார்பில், தேசிய நுகர்வோர் பாதுகாப்பு தினம் மற்றும் உலக நுகர்வோர் உரிமைகள் தின விழா மாவட்ட ஆட்சித்தலைவர் மரு..என்.ஓ.சுகபுத்ரா,I A S., அவர்கள் தலைமையில் நடைபெற்றது."தமிழக அரசு நுகர்வோருக்குத் தரமான பொருட்கள் மற்றும் சேவைகள் கிடைப்பதை உறுதி செய்யப் பல்வேறு ஆக்கப்பூர்வமான நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. ஒரு பொருளை அல்லது சேவையை விலை கொடுத்தோ அல்லது உரிய வாக்குறுதி அளித்தோ பெறுபவர் எவரோ, அவரே நுகர்வோர் ஆவார். நுகர்வோர் மத்தியில் விழிப்புணர்வை ஏற்படுத்தும் நோக்கில், ஆண்டுதோறும் டிசம்பர் 24-ஆம் தேதி 'தேசிய நுகர்வோர் உரிமைகள் தினமாகவும்', மார்ச் 15-ஆம் தேதி 'உலக நுகர்வோர் உரிமைகள் தினமாகவும்' கொண்டாடப்பட்டு வருகிறது.இந்த நவீன யுகத்தில், நாம் அன்றாடம் பல்வேறு பொருட்களைச் சார்ந்து வாழ வேண்டியுள்ளது. எனவே, நுகர்வோர்களாகிய நாம் நமக்குரிய பாதுகாப்பு உரிமை, தகவல் பெறும் உரிமை, தேர்ந்தெடுக்கும் உரிமை, முறையிடும் உரிமை, குறைதீர்க்கும் உரிமை, நுகர்வோர் கல்விக்கான உரிமை, தூய்மையான சுற்றுச்சூழல் உரிமை மற்றும் அடிப்படைத் தேவைகளுக்கான உரிமை ஆகிய எட்டு முக்கிய உரிமைகளைத் தெளிவாகத் தெரிந்து வைத்திருக்க வேண்டும்.இந்த உரிமைகளை அறிந்துகொள்வதன் மூலம், உடல்நலத்திற்கும் உயிருக்கும் தீங்கு விளைவிக்கக்கூடிய தரம் குறைந்த பொருட்கள் மற்றும் சேவைகளிலிருந்து நம்மைப் பாதுகாத்துக் கொள்ள முடியும். மேலும், தரமற்ற பொருட்களால் ஏற்படும் இழப்புகளுக்கு உரிய நஷ்ட ஈடு பெறவும் இது வழிவகை செய்கிறது.நுகர்வோர் பாதுகாப்பு மற்றும் விழிப்புணர்வு குறித்த கல்வி, பள்ளி மற்றும் கல்லூரிகளிலிருந்தே தொடங்கப்பட வேண்டும். நாம் வாங்கும் பொருளின் தரம், அதன் விலைக்கேற்ற சேவை ஆகியவை சரியாக இருக்கிறதா என்பதைத் துல்லியமாகக் கண்டறியும் திறனை நுகர்வோர் வளர்த்துக்கொள்ள வேண்டும். மாணவர்கள் தாங்கள் கற்ற இந்த விழிப்புணர்வுச் செய்திகளைச் சமுதாயத்தில் உள்ள மற்றவர்களுக்கும் எடுத்துச் சொல்லி விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும்" என மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் தெரிவித்தார்.தொடர்ந்து, 2025-26-ஆம் கல்விய ஆண்டிற்கான நுகர்வோர் தினத்தை முன்னிட்டு, பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்களிடையே நடத்தப்பட்ட கவிதை, கட்டுரை மற்றும் ஓவியப் போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவ, மாணவியர்களுக்குப் பாராட்டுச் சான்றிதழ்கள் மற்றும் கேடயங்களை மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் வழங்கிப் பாராட்டினார்.இந்நிகழ்ச்சியில், கூட்டுறவுச் சங்கங்களின் மண்டல இணைப்பதிவாளர் திரு. செந்தில்குமார், தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழக மண்டல மேலாளர் திரு. பால்பாண்டி, நுகர்வோர் பாதுகாப்பு சேவை மைய மாநிலத் தலைவர் திரு. சுப்பிரமணியம், மாவட்ட நுகர்வோர் உரிமைக் குழு உறுப்பினர் திரு. முகமது எகியா, கல்லூரி முதல்வர், பேராசிரியர்கள், அரசு அலுவலர்கள் மற்றும் மாணவ-மாணவியர்கள் பெருந்திரளாகக் கலந்து கொண்டனர்.
விருதுநகர் மாவட்டம், அருப்புக்கோட்டை ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் (03.03.2026) நடைபெற்ற நிகழ்ச்சியில் மாவட்ட ஆட்சியர் மரு.என்.ஓ.சுகபுத்ரா,I A S., அவர்களின் தலைமையில், கலைஞரின் கனவு இல்லம் திட்டத்தின் கீழ் நிர்வாக அனுமதி வழங்கப்பட்டுள்ள 100 பயனாளிகளுக்கு ரூ.3.50 கோடி மதிப்பீட்டில் வீடு கட்டுவதற்கான வேலை உத்தரவுகளை வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத்துறை அமைச்சர் திரு.கே.கே.எஸ்.எஸ்.ஆர்.இராமச்சந்திரன் அவர்கள் வழங்கினார்.கலைஞர் கனவு இல்லம் திட்டம், 2030-க்குள் தமிழ்நாட்டை குடிசைகள் இல்லாத மாநிலமாக மாற்ற கிராமப்புற ஏழைகளுக்கு இலவச கான்கிரீட் வீடுகளை வழங்கும் தமிழக அரசின் திட்டமாகும்.தமிழகமானது குடிசை இல்லாத தமிழகமாக மாற வேண்டும் என்று நம்முடைய முன்னாள் முதலமைச்சர் கலைஞர் அவர்களின் கனவுத் திட்டம் தான் இந்த கலைஞர் கனவு இல்லம் திட்டம். இத்திட்டத்தின் கீழ்,ஒவ்வொருவருக்கும் தலா ரூ.3.50 இலட்சம் வழங்கப்பட்டு வருகிறது.இன்றைய தினம் 100 பயனாளிகளுக்கு வேலை உத்தரவுகள் வழங்கப்படவுள்ளது. நம்முடைய மாவட்டத்தில் 4433 பயனாளிகளுக்கு இது போன்ற உத்தரவுகள் வழங்கப்பட்டு அதற்கான பணிகள் நடைபெற்று வருகின்றன.கலைஞர் மகளிர் உரிமைத்தொகை, முதியோர் உதவித்தொகை உள்ளிட்ட பல்வேறு நலத்திட்டங்களை மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் செயல்படுத்தி வருகிறார். இவற்றையெல்லாம், பயன்படுத்தி அனைவரும் நலமுடன் இருக்க வேண்டும் எனத் தெரிவித்தார்.தொடர்ந்து, விருதுநகர் மாவட்டத்தில், கலைஞர் கனவு இல்லம் திட்டத்தின் கீழ் 2024-2025 ஆம் ஆண்டிற்கு ரூ.35.38 கோடி மதிப்பில் 1011 வீடுகளும், 2025-2026 ஆம் ஆண்டிற்கு ரூ.76.37 கோடி மதிப்பில் 2182 வீடுகளும்மேலும், கூடுதலாக 2025-2026 ஆம் ஆண்டில் அருப்புக்கோட்டை ஊராட்சி ஒன்றியத்திற்கு 100 வீடுகளும், காரியாபட்டி ஊராட்சி ஒன்றியத்திற்கு 101 வீடுகளும், நரிக்குடி ஊராட்சி ஒன்றியத்திற்கு 101 வீடுகளும், இராஜபாளையம் ஊராட்சி ஒன்றியத்திற்கு 100 வீடுகளும், சாத்தூர் ஊராட்சி ஒன்றியத்திற்கு 101 வீடுகளும், சிவகாசி ஊராட்சி ஒன்றியத்திற்கு 100 வீடுகளும், திருவில்லிபுத்தூர் ஊராட்சி ஒன்றியத்திற்கு 56 வீடுகளும், திருச்சுழி ஊராட்சி ஒன்றியத்திற்கு 100 வீடுகளும், வெம்பக்கோட்டை ஊராட்சி ஒன்றியத்திற்கு 100 வீடுகளும், விருதுநகர் ஊராட்சி ஒன்றியத்திற்கு 101 வீடுகளும், வத்திராயிருப்பு ஊராட்சி ஒன்றியத்திற்கு 40 வீடுகளும் என மொத்தம் ரூ.35 கோடி மதிப்பில் 1000 வீடுகளும் என ஆக மொத்தம் 4193 வீடுகளுக்கு கலைஞர் கனவு இல்லம் திட்டத்தின் கீழ் நிர்வாக அனுமதி வழங்கப்பட்டது.அதனைத்தொடர்ந்து, அருப்புக்கோட்டை ஊராட்சி ஒன்றியத்தில் கலைஞர் கனவு இல்லம் திட்டத்தின் கீழ் 2024-2025 ஆம் ஆண்டிற்கு ரூ.3.22 கோடி மதிப்பில் 92 வீடுகளும், 2025-2026 ஆம் ஆண்டிற்கு ரூ.11.58 கோடி மதிப்பில் 331 வீடுகளும், மேலும், கூடுதலாக 2025-2026 ஆம் ஆண்டிற்கு ரூ.3.50 கோடி மதிப்பில் 100 வீடுகளும் என மொத்தம் 523 வீடுகளுக்கு வீடு கட்டுவதற்கான அனுமதி வழங்கப்பட்டது.அதனைத்தொடர்ந்து, இன்றைய தினம் அருப்புக்கோட்டை ஊராட்சி ஒன்றியத்தில் கலைஞர் கனவு இல்லம் திட்டத்தின் கீழ் 2025-2026 ஆம் ஆண்டில் கூடுதலாக வீடு கட்டுவதற்கான நிர்வாக அனுமதி வழங்கப்பட்டுள்ள 100 பயனாளிகளுக்கு ரூ.3.50 கோடி மதிப்பில் வீடு கட்டுவதற்கான வேலை உத்தரவுகளை வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத்துறை அமைச்சர் திரு.கே.கே.எஸ்.எஸ்.ஆர்.இராமச்சந்திரன் அவர்கள் வழங்கினார்.இந்நிகழ்ச்சியில் திட்ட இயக்குநர்(மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை) திரு.வீ.கேசவதாசன், வட்டார வளர்ச்சி அலுவலர்கள், அரசு அலுவலர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.
விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டை ஊராட்சி ஒன்றியம் வில்லிபத்திரி ஊராட்சியில் அண்ணா மறுமலர்ச்சி திட்டத்தின் கீழ் ரூ.31.40 இலட்சம் மதிப்பில் கட்டப்பட்டுள்ள ஊராட்சி மன்ற அலுவலக புதிய கட்டடத்தினை மாவட்ட ஆட்சியர் மரு.என்.ஓ.சுகபுத்ரா, I A S., அவர்கள் தலைமையில் வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத் துறை அமைச்சர் திரு.கே.கே.எஸ்.எஸ்.ஆர்.இராமச்சந்திரன் அவர்கள்(03.03.2026) பொதுமக்களின் பயன்பாட்டிற்கு திறந்து வைத்து குத்துவிளக்குயேற்றினார்.
விருதுநகர் மாவட்டம், தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்கத்தின்கீழ் வாழ்வாதார நடவடிக்கைகளை மேற்கொள்ள விருதுநகர், சிவகாசி, இராஜபாளையம், திருவில்லிபுத்தூர், அருப்புக்கோட்டை, திருச்சுழி, நரிக்குடி, சாத்தூர், வெம்பக்கோட்டை, வத்திராயிருப்பு மற்றும் காரியாபட்டி ஆகிய 11 வட்டாரங்களில் காலியாக உள்ள 23 வட்டார ஒருங்கிணைப்பாளர் பணியிடம் பூர்த்தி செய்யப்பட உள்ளது.வட்டார ஒருங்கிணைப்பாளர் பதவிக்கான தகுதிகள்:1) ஏதேனும் ஒரு பட்டப் படிப்பில் தேர்ச்சி மற்றும் MS Office-ல் குறைந்தது 03 மாத சான்றிதழ் வகுப்பு (Certificate Course) சான்றிதழ் பெற்றவராக இருத்தல் வேண்டும்.2) 35 வயதிற்கு மிகாமல் இருக்க வேண்டும்.3) தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்கத்தின் கீழ் SHG/PLF போன்றவற்றில் குறைந்தது 05 ஆண்டுகள் பணியாற்றிய அனுபவம் பெற்றிருத்தல் வேண்டும்.4) வட்டார ஒருங்கிணைப்பாளர் பணியிடத்திற்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர் விண்ணப்பிக்கும் பணியிடமுள்ள வட்டாரத்தின் எல்கை பகுதிக்குள் வசிப்பவராக இருக்க வேண்டும்.(Residence in same block)5) இரு சக்கர வாகனம் ஓட்டுநர் உரிமம் பெற்றிருத்தல் வேண்டும். இருசக்கர வாகனம் நன்றாக இயக்க தெரிந்தவராக இருத்தல் வேண்டும்.6) சிறந்த நன்னடத்தையுடன் இருக்க வேண்டும்.7) தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்க திட்டம்/புதுவாழ்வு திட்டம்/IFAD திட்டம் போன்றவற்றின் கீழ் பணிபுரிந்து நிரந்தர பணிநீக்கம்/தற்காலிக பணிநீக்கம் செய்யப்பட்டவராக இருக்கக்கூடாது. விண்ணப்ப படிவம் பதிவிறக்கம் செய்வதற்கான இணையதள முகவரி www.virudhunagar.nic.in 1) விண்ணப்பதாரர்கள் பிறந்ததேதி, பணிபுரிந்ததற்கான பணிஅனுபவச் சான்று,கல்வித் தகுதிச் சான்று, சாதிச் சான்று ஆகியவற்றின் ஒளிநகல் (Xerox Copy) கண்டிப்பாக இணைக்கப்பட வேண்டும்.2) விண்ணப்ப படிவத்தில் உள்ள விபரங்கள் முழுமையாக பூர்த்தி செய்து அனுப்பப்பட வேண்டும். முழுமையாக பூர்த்தி செய்யப்படாத விண்ணப்பங்கள் கண்டிப்பாக நிராகரிக்கப்படும்.3) தகுதியில்லாத மற்றும் காலங்கடந்து பெறப்படும் விண்ணப்பங்கள் நிராகரிக்கப்படும். மேலும் பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்கள் உரிய சான்றுகளின் நகல்களுடன் இணை இயக்குநர்/திட்ட இயக்குநர் தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்கம், மாவட்ட இயக்க மேலாண்மை அலகு அலுவலக வேலை நாட்களில், காலை 10.00 மணிமுதல் மாலை 5.45 மணி வரை நேரிலோ அல்லது இணை இயக்குநர், தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்கம், மாவட்ட இயக்க மேலாண்மை அலகு, ஒருங்கிணைந்த ஊரக வளர்ச்சித் துறை அலுவலக வளாகம், விருதுநகர் அஞ்சல் 626 002, விருதுநகர் மாவட்டம் என்ற முகவரிக்கு பதிவஞ்சல் மூலமாகவோ 06.03.2026 பிற்பகல் 5.45 மணிக்குள் கிடைக்குமாறு அனுப்பி வைக்கப்பட வேண்டும் என மாவட்ட ஆட்சித்தலைவர் மரு.என்.ஓ.சுகபுத்ரா, I A S., அவர்கள் தெரிவித்துள்ளார்.
விருதுநகர் மாவட்டம், காரியாபட்டி, திருச்சுழி, நரிக்குடி ஊராட்சி ஒன்றியங்களில் (02.03.2026) நடைபெற்ற நிகழ்ச்சியில் மாவட்ட ஆட்சியர் மரு.என்.ஓ.சுகபுத்ரா,I A S ., அவர்களின் தலைமையில், கலைஞரின் கனவு இல்லம் திட்டத்தின் கீழ் நிர்வாக அனுமதி வழங்கப்பட்டுள்ள 302 பயனாளிகளுக்கு ரூ.10.56 கோடி மதிப்பில் வீடு கட்டுவதற்கான வேலை உத்தரவுகளை நிதி,சுற்றுச்சூழல் மற்றும் காலநிலை மாற்றத்துறை அமைச்சர் திரு.தங்கம் தென்னரசு அவர்கள் வழங்கினார்.கலைஞர் கனவு இல்லம் திட்டம், 2030-க்குள் தமிழ்நாட்டை குடிசைகள் இல்லாத மாநிலமாக மாற்ற கிராமப்புற ஏழைகளுக்கு இலவச கான்கிரீட் வீடுகளை வழங்கும் தமிழக அரசின் திட்டமாகும்.அதனடிப்படையில், விருதுநகர் மாவட்டத்தில், கலைஞர் கனவு இல்லம் திட்டத்தின் கீழ் 2024-2025 ஆம் ஆண்டிற்கு ரூ.35.38 கோடி மதிப்பில் 1011 வீடுகளும், 2025-2026 ஆம் ஆண்டிற்கு ரூ.76.37 கோடி மதிப்பில் 2182 வீடுகளும், மேலும், கூடுதலாக 2025-2026 ஆம் ஆண்டிற்கு ரூ.35 கோடி மதிப்பில் 1000 வீடுகளும் என மொத்தம் 4193 வீடுகளுக்கு கலைஞர் கனவு இல்லம் திட்டத்தின் கீழ் நிர்வாக அனுமதி வழங்கப்பட்டது.அதனைத்தொடர்ந்து, காரியாபட்டி ஊராட்சி ஒன்றியத்தில் கலைஞர் கனவு இல்லம் திட்டத்தின் கீழ் 2024-2025 ஆம் ஆண்டிற்கு ரூ.1.82 கோடி மதிப்பில் 52 வீடுகளும், 2025-2026 ஆம் ஆண்டிற்கு ரூ.9.66 கோடி மதிப்பில் 276 வீடுகளும், மேலும், கூடுதலாக 2025-2026 ஆம் ஆண்டிற்கு ரூ.3.53 கோடி மதிப்பில் 101 வீடுகளும் என மொத்தம் 429 வீடுகளும்தொடர்ந்து, திருச்சுழி ஊராட்சி ஒன்றியத்தில் கலைஞர் கனவு இல்லம் திட்டத்தின் கீழ் 2024-2025 ஆம் ஆண்டிற்கு ரூ.91 இலட்சம் மதிப்பில் 26 வீடுகளும், 2025-2026 ஆம் ஆண்டிற்கு ரூ.4.34 கோடி மதிப்பில் 124 வீடுகளும், மேலும், கூடுதலாக 2025-2026 ஆம் ஆண்டிற்கு ரூ.3.50 கோடி மதிப்பில் 100 வீடுகளும் என மொத்தம் 250 வீடுகளும்,மேலும், நரிக்குடி ஊராட்சி ஒன்றியத்தில் கலைஞர் கனவு இல்லம் திட்டத்தின் கீழ் 2024-2025 ஆம் ஆண்டிற்கு ரூ.5.18 கோடி மதிப்பில் 148 வீடுகளும், 2025-2026 ஆம் ஆண்டிற்கு ரூ.8.50 கோடி மதிப்பில் 243 வீடுகளும், மேலும், கூடுதலாக 2025-2026 ஆம் ஆண்டிற்கு ரூ.3.53 கோடி மதிப்பில் 101 வீடுகளும் என மொத்தம் 492 வீடுகளுக்கும் வீடு கட்டுவதற்கான அனுமதி வழங்கப்பட்டது.அதனைத்தொடர்ந்து, இன்றைய தினம் கலைஞர் கனவு இல்லம் திட்டத்தின் கீழ் 2025-2026 ஆம் ஆண்டில் கூடுதலாக வீடு கட்டுவதற்கான நிர்வாக அனுமதி வழங்கப்பட்டுள்ள 302 பயனாளிகளுக்கு ரூ.10.56 கோடி மதிப்பில் வீடு கட்டுவதற்கான வேலை உத்தரவுகளை நிதி,சுற்றுச்சூழல் மற்றும் காலநிலை மாற்றத்துறை அமைச்சர் திரு.தங்கம் தென்னரசு அவர்கள் வழங்கினார்.இந்நிகழ்ச்சியில் திட்ட இயக்குநர்(மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை) திரு.வீ.கேசவதாசன், வட்டார வளர்ச்சி அலுவலர்கள், அரசு அலுவலர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.
விருதுநகர் மாவட்டம் மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் (02.03.2026) சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை சார்பில் எதிர்வரும் சட்டமன்றத் தேர்தல் 2026 - னை முன்னிட்டு அனைவரும் தவறாமல் வாக்களிக்க வேண்டும், மற்றும் வாக்களிப்பதின் அவசியம் குறித்து நடைபெற்ற விழிப்புணர்வு உறுதிமொழியினை (SVEEP) மாவட்ட தேர்தல் அலுவலர் / மாவட்ட ஆட்சித் தலைவர் மரு.என்.ஓ.சுகபுத்ரா., I A S ., அவர்கள் தலைமையில் அரசு ஊழியர்கள் மற்றும் பொதுமக்கள் அனைவரும் ஏற்றுக் கொண்டனர்.இந்திய தேர்தல் ஆணையத்தின் வழிகாட்டுதல்களின் அடிப்படையில், 01.01.2026 - ஆம் தேதியை தகுதி நாளாகக் கொண்டு, வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிரத் திருத்தம்-2026- மேற்கொள்ளப்பட்டு, இறுதி வாக்காளர் பட்டியலானது அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சி பிரதிநிதிகள் முன்னிலையில் 23.02.2026 அன்று வெளியிடப்பட்டது.அதனைத்தொடர்ந்து, சட்டமன்றத் தேர்தலில் அனைவரது பங்களிப்பினை உறுதி செய்திடவும், வாக்களிப்பதின் அவசியம் குறித்தும் பொதுமக்கள் அனைவரும் அறிந்து கொள்ளும் பொருட்டு, மாவட்ட தேர்தல் அலுவலர் / மாவட்ட ஆட்சியர் அவர்கள் தலைமையில் “இந்திய குடிமக்களாகிய நாங்கள், ஜனநாயகத்தில் நிலையான நம்பிக்கை கொண்டு, நமது நாட்டின் ஜனநாயக மரபுகளையும் சுதந்திரமான, நியாயமான மற்றும் அமைதியான தேர்தல்களின் கண்ணியத்தையும் நிலைநிறுத்தவும், ஒவ்வொரு தேர்தலிலும் அச்சமின்றி, மதம், இனம், சாதி, சமூகம் மொழி அல்லது எந்த தூண்டுதலாலும் பாதிக்கப்படாமல் வாக்களிக்கவும் இதன் மூலம் உறுதியளிக்கிறோம்.”என்ற உறுதிமொழியினை மாவட்ட ஆட்சியர் தலைமையில் அரசு அலுவலர்கள், கிராமப்புற செவிலியர்கள், பொதுமக்களுடன் இணைந்து ஏற்றுக்கொண்டார்.மேலும், வாக்களிப்பதன் முக்கியத்துவத்தைப் மக்களுக்கும் கொண்டு சேர்க்கும் வகையில், தமிழ்நாட்டின் பாரம்பரிய கலைகளான கரகாட்டம், ஒயிலாட்டம் மற்றும் தப்பாட்டம் வாயிலாகக் கலை நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டன.தொடர்ந்து, "எனது வாக்கு, எனது மாவட்டம், எனது பொறுப்பு" என்ற மையக்கருத்தை வலியுறுத்தி நடைபெற்ற விழிப்புணர்வு கையெழுத்து இயக்கத்தை, மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் முதல் கையெழுத்திட்டுப் தொடங்கி வைத்தார்.இந்நிகழ்வில் மாவட்ட சமூக நல அலுவலர் திருமதி திலகம், வட்டாட்சியர்( தேர்தல்) திரு.சீனிவாசன், பல்வேறு துறை சார்ந்த அரசு அலுவலர்கள், செவிலியர்கள் மற்றும் பொதுமக்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.
விருதுநகர் மாவட்டம், காரியாபட்டி அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் பன்னிரெண்டாம் வகுப்பு அரசு பொதுத் தேர்வுகள் நடைபெறுவதை மாவட்ட ஆட்சியர் மரு.என்.ஓ.சுகபுத்ரா,I A S., அவர்கள் (02.03.2026) நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு செய்தார்.2025-2026 ஆம் ஆண்டுக்கான பன்னிரெண்டாம் வகுப்பு அரசு பொதுத் தேர்வானது விருதுநகர் மாவட்டத்தில் 99 தேர்வு மையங்களில் 9,855 மாணவர்களும், 11,715 மாணவியர்களும் மற்றும் தனித்தேர்வர்களாக 553 மாணவர்கள் என ஆக மொத்தம் 22,123 பள்ளி மாணவ, மாணவியர்கள் தேர்வு எழுதுகின்றனர்.தேர்வு மையங்களில் குடிநீர் வசதி, மின்சாரம் மற்றும் கழிப்பிட வசதி உள்ளிட்ட அடிப்படை வசதிகள் சிறப்பான முறையில் அமைத்திட ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது. தேர்வு மையங்கள் அமைந்துள்ள பகுதிகளில் தடையில்லா மின்சார வசதி ஏற்படுத்தியும், தேர்வு மைய வழித்தடங்களில் மாணவர்கள் சிரமமின்றி செல்வதற்கு வசதியாக கூடுதல் பேருந்துகளும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன. இத்தேர்வு நடைபெறும் அனைத்து தேர்வு மையங்களில் 103 முதன்மைக் கண்காணிப்பாளர்கள், 103 துறை அலுவலர்கள், 1235 அறைக் கண்காணிப்பாளர்கள் நியமனம் செய்யப்பட்டு தேர்வுப் பணி மேற்கொண்டு வருகின்றனர்.பள்ளிக் கல்வித்துறை அலுவலர்களைக் கொண்டு பறக்கும் படை உறுப்பினர்கள் நியமனம் செய்யப்பட்டு, தேர்வு மையங்களில் மாணாக்கர்கள் ஒழுங்கீன செயல்களில் ஈடுபடுவதை தடுக்கவும், தேர்வுகள் சிறப்பான முறையில் நடைபெறுவதை கண்காணிக்கவும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.மாணவர்கள் தேர்வு எழுத வசதியாக தரை தளத்தில் தேர்வு அறைகள் ஒதுக்கீடும், மாற்றுத்திறன் கொண்ட மாணவர்களின் கோரிக்கைக்கேற்ப 146 பேர் சொல்வதை எழுதுபவர் பணிக்கு நியமிக்கப்பட்டு இவர்களுக்கு கூடுதல் நேரமும் ஒதுக்கப்பட்டுள்ளது.விருதுநகர் மாவட்ட ஆட்சித் தலைவர் அவர்களின் தலைமையில் கல்வித்துறை அலுவலர்கள், மாவட்ட காவல் கண்காணிப்பாளர், மாவட்ட வருவாய் அலுவலர், சார் ஆட்சியர், வருவாய் கோட்டாட்சியர், மாவட்ட ஆய்வு அலுவலர், ஊர்காவல் படைத்தலைவர் மற்றும் பிறத்துறை அலுவலர்களை கொண்டு மாவட்ட தேர்வுக் குழு அமைக்கப்பட்டு தேர்வு மையங்கள் திடீர் ஆய்வு செய்ய ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது.2025-2026 ஆம் கல்வியாண்டில் மேல்நிலை இரண்டாம் ஆண்டு தேர்வு எழுதும் மாணவ, மாணவியர்கள் அனைவரும் முழுதேர்ச்சி பெற வேண்டும் எனவும், அதிக மதிப்பெண்களை பெற வேண்டும் எனவும் மாணவ செல்வங்களுக்கு வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன் என மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் தெரிவித்தார்.இந்த ஆய்வின் போது, அரசு அலுவலர்கள் உட்பட பலர் உடன் இருந்தனர்.
விருதுநகர் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் மாவட்ட ஆட்சியர் மரு.என்.ஓ.சுகபுத்ரா,I A S ., அவர்கள் தலைமையில் (02.03.2026) நடைபெற்றது.இக்கூட்டத்தில், இலவச வீட்டுமனைப்பட்டா மற்றும் பட்டா மாறுதல், குடும்ப அட்டை, வேலை வாய்ப்பு, விபத்து நிவாரணம், மாற்றுத்திறனாளிகள், நலிந்தோர் நல உதவித்திட்டம் மற்றும் விதவை உதவித்தொகை, திருமண உதவித்தொகை, முதியோர் உதவித்தொகை உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் தொடர்பாக மனுக்கள் பெறப்பட்டது. மேலும், மாற்றுத்திறனாளிகள் மற்றும் மூத்தகுடிமக்களுக்காக அமைக்கப்பட்டுள்ள சிறப்பு அமருமிடத்திற்குச் சென்று, மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் கோரிக்கை மனுக்களை பெற்றுக் கொண்டார்.இம்மனுக்களை மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் சம்மந்தப்பட்டதுறை அலுவலர்களிடம் ஒப்படைத்து உரிய நடவடிக்கை எடுக்குமாறு உத்தரவிட்டார்கள்.மேலும் முதலமைச்சர் தனிப்பிரிவு மனுக்கள் மீது தனிக்கவனம் செலுத்தி நடவடிக்கை எடுக்குமாறு மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் அறிவுறுத்தினார்கள். இக்கூட்டத்தில், பல்வேறு விபத்துகளில் பெற்றோரை இழந்த 5 மாணவ/மாணவிகளுக்கு தலா ரூ.75 ஆயிரம் மதிப்பிலான காப்பீட்டுப் பத்திரங்களை மாவட்ட ஆட்சியர் அவர்கள் வழங்கினார்.இக்கூட்டத்தில், மாவட்ட வருவாய் அலுவலர் திருமதி ஆனந்தி, மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் திருமதி பிர்தௌஸ் பாத்திமா, அரசு அலுவலர்கள் மற்றும் பொதுமக்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.
விருதுநகர் மாவட்ட மக்களின் நீண்ட நாள் கோரிக்கையினை ஏற்று, வத்திராயிருப்பு நகரத்தின் போக்குவரத்து நெரிசலைக் குறைக்கும் வகையில் அமையவுள்ள புதிய புறவழிச்சாலைத் திட்டத்திற்கு வருவாய்த்துறை அமைச்சர் அவர்கள் அடிக்கல் நாட்டி, பணிகளைத் தொடங்கி வைத்தார். இத்திட்டமானது 2026-2027ஆம் ஆண்டிற்கான ஒருங்கிணைந்த சாலை உட்கட்டமைப்பு திட்டத்தின் (CRIDP) கீழ் செயல்படுத்தப்படுகிறது.இச்சாலையில் நீரோடைகள் மற்றும் குறுக்கீடுகளைக் கடக்க 25 பெட்டிப்பாலங்கள் (Box Culverts) மற்றும் 3 சிறு பாலங்கள் அமைக்கப்பட உள்ளன.போக்குவரத்து சீராக நடைபெற ஏதுவாக, டி-சந்திப்பு (T-Junction), நான்கு முனைச் சந்திப்பு மற்றும் மூன்று இடங்களில் ரவுண்டானாக்கள் (Roundabouts) என மொத்தம் 5 சந்திப்புகள் உருவாக்கப்படவுள்ளன.இத்திட்டத்தின் மூலம் வத்திராயிருப்பு, சதுரகிரி, கூமாபட்டி, கான்சாபுரம், அர்ஜுனாபுரம், புதுப்பட்டி, கிழவன்கோவில், பிளவக்கல் மற்றும் அத்திகோவில் ஆகிய பகுதிகளைச் சேர்ந்த பொதுமக்கள் நேரடியாகப் பயனடைவார்கள். குறிப்பாக சதுரகிரி போன்ற ஆன்மீகத் தலங்களுக்குச் செல்லும் பக்தர்களுக்குப் போக்குவரத்து எளிதாகும்.இந்நிகழ்ச்சியில் நெடுஞ்சாலைத்துறை கோட்ட பொறியாளர் (விருதுநகர்) திருமதி பாக்கியலெட்சுமி, நெடுஞ்சாலை துறை பொறியாளர்கள், உள்ளாட்சி பிரதிநிதிகள் மற்றும் அரசு அலுவலர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.
விருதுநகர் மாவட்ட ஆட்சியர் அலுவலகக் கூட்டரங்கில் (27.02.2026) மாவட்ட முன்னோடி வங்கி மற்றும் அனைத்து வங்கிகளின் சார்பில் இந்த நிதியாண்டில் மூன்றாவது முறையாக கல்லூரி மாணவ / மாணவியர்களுக்கு சிறப்பு கல்விக்கடன் வழங்கும் முகாம் மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் தலைமையில் நடைபெற்றது.இம்முகாமில் கலந்துகொண்ட மாணவர்களில் 144 மாணவர்களுக்கு ரூ.8.49 கோடி கல்விக்கடன் ஆணைகளை மாவட்ட ஆட்சித்தலைவர் மரு.என்.ஓ.சுகபுத்ரா,I A S., அவர்கள் வழங்கினார்.இம்முகாமில் மாவட்டத்திலுள்ள 200 தேசியமயமாக்கப்பட்ட மற்றும் தனியார் வங்கி கிளைகளின் மாவட்ட அளவிலான வங்கி பிரதிநிதிகள் கலந்துகொண்டனர்.அனைத்து வங்கிகள் சார்பாகவும் அரங்குகள் அமைக்கப்பட்டு கல்விக்கடன் தொடர்பாக விசாரிக்க வரும் மாணவர்கள் மற்றும் பெற்றோர்களுக்கு கல்விக்கடன் சம்பந்தமான சந்தேகங்களை நிவர்த்திசெய்தனர்.மேலும் மாணவர்களிடம் நேரடியாக கல்விக்கடன் விண்ணப்பங்கள் வங்கிகளின் மூலம் பெறப்பட்டன. இந்த முகாமின் மூலம் பெறப்பட்ட விண்ணப்பங்கள் வங்கிக்கிளைகளில் பரிசீலனை செய்யப்பட்டு, 20 நாட்களுக்குள் தகுதியான அனைத்து மாணவர்களுக்கும் கல்வி கடன் வழங்கப்படும் என்று மாவட்ட முன்னோடி வங்கி மேலாளர் அவர்கள் தெரிவித்தார்.நடப்பு நிதி ஆண்டிற்கு கல்வி கடன் இலக்காக ரூ.38.11 கோடி நிர்ணயிக்கப்பட்டுள்ளது. அதில் நமது மாவட்டத்திலுள்ள வங்கிகள் டிசம்பர் மாதம் வரை 1932 மாணவர்களுக்கு ரூ.37.68 கோடி கல்விக்கடனாக வழங்கி மாணவர்களுக்கு கடன் தொகை விடுக்கப்பட்டுள்ளது.இம்முகாமில், மாவட்ட முன்னோடி வங்கி மேலாளர் திரு.சு.பாண்டிச்செல்வன் அனைத்து வங்கிகளின் மாவட்ட பிரதிநிதிகள், பெற்றோர்கள் மற்றும் மாணவர்கள் உட்பட பலர் கலந்துகொண்டனர்.