விருதுநகர் மாவட்ட ஆட்சியர் அலுவலகக் கூட்டரங்கில் (23.08.2024) மாவட்ட ஆட்சித்தலைவர் முனைவர் வீ.ப.ஜெயசீலன், I A S, அவர்கள் தலைமையில் கிரிக்கெட்டில் ஆர்வம் உடைய 150 பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்கள் கலந்து கொண்ட சிறப்பு 100-வது “காபி வித் கலெக்டர்” கலந்துரையாடல் நிகழ்ச்சியில், இந்திய கிரிக்கெட் வீரர் திரு.த.நடராஜன் அவர்கள் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு மாணவர்களுடன் கலந்துரையாடினார்.விருதுநகர் மாவட்டத்தில் பள்ளிகளில் பயிலும் மாணவர்களில் கல்வி, பொது அறிவு, விளையாட்டு, ஓவியம், இசை உள்ளிட்ட பல்வேறு திறன் அடிப்படையில் மாணாக்கர்களின் திறன்களை கண்டறிந்து, மாணவ, மாணவியர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டு அவர்களை மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் நேரில் அழைத்து கலந்துரையாடும் “காபி வித் கலெக்டர்” நிகழ்ச்சி 07.01.2022 அன்று தொடங்கப்பட்டு, மொத்தம் 99 கலந்துரையாடல் நிகழ்ச்சிகள் நடைபெற்றுள்ளது.இந்த நிகழ்ச்சியின் முக்கிய நோக்கம், மாணவர்களுடைய உயர்ந்த இலட்சியம், அவர்களுடைய உயர்கல்வி பயில்வதற்கு வழிகாட்டுதல், போட்டி தேர்வுகளை எதிர்கொள்ளுதல், தோல்வியை எவ்வாறு எதிர்கொள்வது, அவர்களுக்கு கல்வி, வேலைவாய்ப்பு உள்ளிட்ட பல்வேறு பிரிவுகளில் அவர்களுடைய சந்தேகங்களை அகற்றி, அவர்கள் வாழ்க்கையில் எங்கு பிறந்தோம், நாம் அரசு பள்ளியில் பயின்றோம், நமக்கு வசதி இல்லை, நமக்கு பின்புலம் இல்லை என்பதெல்லாம், வாழ்க்கையில் ஒரு உயர்ந்த இடத்தை அடைவதற்கு ஒரு தடை இல்லை என்பதை புரிய வைத்து, தன்னம்பிக்கை, விடா முயற்சி, கடின உழைப்புடன் தொடர்ந்து உழைத்தால் நாம் எதையும் சாதிக்க முடியும் என்பதை உணர்த்தும் வகையில் சரியான வழிகாட்டுதல் வழங்குவதே இந்த நிகழ்ச்சியின் முக்கிய நோக்கமாகும்.கல்வி, கலை, அறிவியல், விளையாட்டு உள்ளிட்டவைகளில் ஆர்வமிக்க மாணவர்களை அவர்களுக்கான புதிய வாய்ப்புகள் குறித்தும், அவர்களுக்கு சமூகத்தோடு இணைந்து உயர்வதற்கான வாய்ப்புகள் குறித்து பேசுவதற்கும் உருவாக்கப்பட்ட ஒரு நிகழ்ச்சி இந்த காபி வித் கலெக்டர் என்ற நிகழ்ச்சியாகும்.இதற்கு முன்பாக எழுத்தாளர்கள், பேச்சாளர்கள், திரைத்துறை, ஊடகத்துறை என அனைத்து துறைகளிலும் இருக்கக்கூடிய சிறந்த படைப்பாளிகள் மற்றும் சாதனையாளர்கள் என இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டுள்ளார்கள்.இன்று இந்த நிகழ்ச்சியின் 100-வது அமர்வுக்கு யாரை அழைக்கலாம் என்று சிந்தித்த போது, தன்னுடைய கடும் உழைப்பால், முயற்சியால் ஒரு முக்கிய இடத்தை பிடித்த ஒருவரை அழைக்க வேண்டும், அதைவிட முக்கியம் அவர் இந்த சமுதாயத்திற்கு ஒரு எடுத்துக்காட்டாக இருக்கக்கூடியவராக இருக்க வேண்டும்; என்று நினைத்தவுடன், கிரிக்கெட் வீரர் திரு.த.நடராஜன் அவர்கள் தான் இதற்கு பொருத்தமாக இருப்பார் என்று அவரை இந்த நிகழ்ச்சிக்கு சிறப்பு விருந்தினராக அழைத்துள்ளோம்.ஒரு சிறந்த கிரிக்கெட் வீரர், ஒரு இடதுகை பந்து வீச்சாளர், அதைவிட முக்கியமானது யாக்கர்; பந்து வீச்சில் சிறந்தவர் என்று சொல்லக்கூடிய அளவிற்கு ஒரு சிறந்த விளையாட்டு வீரர். விளையாட்டுகளில் கடினமான உழைப்பை செலுத்துகிறார். மேலும் விளையாட்டில் தொடர்ந்து வெற்றியை பெற்றுள்ளார். அதுமட்டுமல்லாமல், தான் பெற்ற அந்த பலனை தன்னை போன்ற அடுத்த தலைமுறை இளைஞர்களுக்கு, குறிப்பாக கிராமப்புற இளைஞர்கள் பெற வேண்டும் என்பதற்காக தான், கடுமையாக இந்த விளையாட்டில் விளையாடி தான் ஈட்டிய பொருளை எல்லாம் வைத்து தனது சொந்த கிராமத்தில் ஒரு கிரிக்கெட் பயிற்சி மையத்தினை நிறுவியுள்ளார். அந்த கிரிக்கெட் அகாடமி மூலமாக அடுத்த தலைமுறைக்கு தான் பெற்றதை தர வேண்டும் என்ற உயர்ந்த நோக்கத்தோடு செயலாற்றி வருகிறார். கிரிக்கெட்டில் ஆர்வம் இருக்கக்கூடிய மாணவர்களை எல்லாம் ஊக்குவித்து, அவர்களுக்கு சிறந்த ஒரு எடுத்துக்காட்டாக இருக்கிறார். அதைவிட முக்கியமாக அவர் வளர்ந்த சூழல், அவருடைய பின்புலத்தை எல்லாம் பார்க்கின்ற பொழுது, இவர் தமிழ் இளைஞர்களுக்கும், தமிழ் சமுதாயத்திற்கும், அடுத்த தலைமுறைக்கும் எப்படிப்பட்ட உதாரணமாக இருக்கிறார் என்பதை எல்லோரும் தெரிந்து கொள்ள வேண்டும் என்பதற்காக தான் இந்த நிகழ்ச்சி. ஒரு சாதாரண எளிய பின்புலத்தில் இருந்து வருகை தந்தாலும், எந்த துறையின் மீது தனக்கான ஆர்வம் இருக்கின்றதோ, எந்த துறையின் மீது தனக்கு விருப்பம் இருக்கின்றதோ, அவற்றை விடாமல் பற்றிக்கொண்டு அந்த வயதிற்கே உரிய கவனச் சிதறல்;களை எல்லாம் தள்ளி வைத்து விட்டு, நான் எடுத்துக்கொண்ட உறுதியின் மீது தொடர்ச்சியான கடும் உழைப்பின் மூலமாகவும், குறிக்கோளை தொடர்ச்சியாக கைப்பற்றிக் கொண்டு நடப்பதன் மூலமாகவும், எப்படிப்பட்ட உயரங்களை தமிழ் இளைஞர்களும் மாணவர்களும் அடைய முடியும் என்பதற்கு மிகச்சிறந்த உதாரணம் தான் திரு.த.நடராஜன் அவர்கள் என மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் தெரிவித்தார்.
விருதுநகர் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் (23.08.2024) மாவட்ட ஆட்சித்தலைவர் முனைவர் வீ.ப.ஜெயசீலன், I A S., அவர்கள் தலைமையில், ஆணையர், ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித்துறை (பயிற்சி) / மாவட்ட கண்காணிப்பு அலுவலர் மரு.ஆர்.ஆனந்தகுமார்,I A S., அவர்கள் அனைத்துத்துறை திட்டப்பணிகள் தொடர்பாக சம்மந்தப்பட்ட அரசு அலுவலர்களுடன் ஆய்வு மேற்கொண்டார்.இக்கூட்டத்தில், கடந்த கூட்டத்தில் திட்டப் பணிகள் குறித்து எடுக்க வேண்டிய நடவடிக்கைகள் குறித்து அறிவுரை வழங்கப்பட்டது.தற்போது பல்வேறு துறை சார்பில் எடுக்கப்பட வேண்டிய நடவடிக்கைகள் குறித்தும், செயல்பாடுகள் தொடர்பாகவும் அறிவுரை வழங்கப்பட்டது.மேலும், அனைத்து அரசு மருத்துவமனைகளுக்கு 24 மணி நேரமும் தடையில்லா மின்சாரம் வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும். மக்களுடன் முதல்வர் திட்டத்தின் கீழ் பெறப்பட்ட மனுக்களுக்கு உரிய நடவடிக்கைகளை உடனடியாக மேற்கொள்ள வேண்டும். மாவட்டத்தில் உள்ள நவீன மின்சார தகன மேடைகளின் செயல்பாடுகள் குறித்து தொடர்ந்து கண்காணிக்க வேண்டும்.விவசாயிகளுக்கு வண்டல் மண் எடுக்கும் திட்டத்தின் கீழ் நிலுவையில் உள்ள மனுக்களுக்கு உடனடியாக தீர்வு காண வேண்டும்.அனைத்து பொதுமக்களுக்கும் அரசின் நலத்திட்டங்கள் குறித்த நேரத்தில் நேரடியாக சென்று சேர்வதற்கு அரசின் விதிமுறைக்கு உட்பட்டு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என சம்பந்தப்பட்ட அரசு அலுவர்களுக்கு அறிவுரை மற்றும் ஆலோசனைகளை மாவட்ட கண்காணிப்பு அலுவலர் அவர்கள் வழங்கினார்.முன்னதாக, விருதுநகர் ஊராட்சி ஒன்றியம், அழகாபுரி ஆரம்ப சுகாதார நிலையத்தை ஆய்வு செய்து, மருந்துகளின் இருப்பு குறித்தும், மக்களை தேடி மருத்துவம் திட்டத்தின் கீழ் உள்ள பயனாளிகளின் எண்ணிக்கை, வழங்கப்படும் மருந்துகள், வழங்கப்படும் சிகிச்சைகள் குறித்தும் கேட்டறிந்து ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறை ஆணையர், ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித்துறை (பயிற்சி) / மாவட்ட கண்காணிப்பு அலுவலர் அவர்கள் மற்றும் மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் ஆகியோர் ஆய்வு செய்தனர்.பின்னர், மீசலூர் அரசு மேல்நிலைப் பள்ளியை பார்வையிட்டு ஆய்வு செய்து, அங்கு பயிலும் மாணவர்களின் எண்ணிக்கை, கல்வி முறைகள், 11 மற்றும் 12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு வழங்கப்படும் உயர்கல்வி வழிகாட்டுதல் மற்றும் மாணவர்களின் கல்வி தரம் குறித்து கேட்டறிந்தனர்.தொடர்ந்து, விருதுநகர் வட்டாட்சியர் அலுவலகத்தினை பார்வையிட்டு, பதிவேடுகள், மக்களுடன் முதல்வர் திட்டத்தின் மூலம் பெறப்பட்ட மனுக்கள், தீர்வுகள், நிலுவையில் உள்ள மனுக்கள் உள்ளிட்டவைகள் குறித்து மாவட்ட கண்காணிப்பு அலுவலர் அவர்கள் மற்றும் மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் ஆகியோர்கள் நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு செய்தார்கள்.இந்நிகழ்வுகளின் போது, மாவட்ட வருவாய் அலுவலர் திரு.இரா.ராஜேந்திரன், சிவகாசி சார் ஆட்சியர் திருமதி ந.ப்ரியா ரவிச்சந்திரன்,இ.ஆ.ப., உதவி இயக்குநர்(ஊராட்சிகள்) திருமதி விசாலாட்சி, மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர்(பொது) மரு.பிர்தௌஸ் பாத்திமா மற்றும் அனைத்து அரசுத்துறை அலுவலர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.
விருதுநகர் மாவட்டம், தமிழ்நாடு நகர்ப்புர வாழ்வாதார இயக்கத்தின் கீழ், மாநகராட்சி, நகராட்சி மற்றும் பேரூராட்சி பகுதிகளில் காலியாக உள்ள சமுதாய அமைப்பாளர்கள் பணியிடத்திற்கு தகுதியான நபர்கள் தேர்வு செய்யப்பட உள்ளது. இப்பணியிடத்திற்கு கீழ்கண்ட கல்வி மற்றும் அனுபவ தகுதிகளின் அடிப்படையில் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.சமுதாய அமைப்பாளர்கள் பணிக்கான தகுதியான நிபந்தனைகள் : (Eligibility conditions) மகளிர் சுய உதவிக் குழு உறுப்பினருக்கு முன்னுரிமை அளிக்கப்படும். 35 வயதிற்குட்பட்டவராக இருத்தல் வேண்டும் (05.08.2024 அன்று). ஏதேனும் ஒரு பாடத்திட்டத்தில் இளங்கலைப் பட்டம் பெற்றவராக இருத்தல் வேண்டும். அரசு சார்ந்த திட்டங்களில் விரிவான களப்பணி மூலம் குறைந்தது ஒரு வருட கால அனுபவம் இருத்தல் வேண்டும்.கண்டிப்பாக கணினியில் குறைந்தபட்சம் MS Word, Excel பயன்படுத்த தெரிந்தவராக இருத்தல் வேண்டும். பகுதி அளவிலான கூட்டமைப்பில் உறுப்பினராக இருத்தல் வேண்டும்.சம்மந்தப்பட்ட பகுதி அளவிலான கூட்டமைப்பிலிருந்து தீர்மானம் நிறைவேற்றி அதற்கான அறிக்கையினை சமர்பிக்க வேண்டும். தகவல் பரிமாற்றத்தில் திறமையுடையவராக இருத்தல் வேண்டும். இரு சக்கர வாகன உரிமம் பெற்றிருக்க வேண்டும். அடிப்படை கணினி திறன் பெற்றவராக இருத்தல் வேண்டும்.விருதுநகர் மாவட்டத்திற்குள் வசிப்பவராகவும் மற்றும் 2 ஆண்டுகளுக்கு மேலாக அமைக்கப்பட்ட பகுதி அளவிலான கூட்டமைப்பில் உறுப்பினராக இருக்க வேண்டும். நிர்வாகம் மற்றும் நிதி முறைகேடுகள் காரணமாக TNSRLM/Pudhu Vaazhvu Project/IFAD ஆகிய திட்டத்திலிருந்து பணி நீக்கம்/ தகுதி நீக்கம் செய்யப்பட்டவராக இருத்தல் கூடாது.மேற்காணும் தகுதிகள் உள்ள நபர்கள் 05.09.2024 தேதிக்குள், மாலை 5.45 மணிக்குள் மேலாளர், நகர்ப்புர வாழ்வாதார மையம், இராஜபாளையம் நகராட்சி – 626117- 04563-296624 / 83445-43852 என்ற முகவரிக்கு விண்ணப்பித்து பயனடையுமாறு மாவட்ட ஆட்சித்தலைவர் முனைவர் வீ.ப.ஜெயசீலன்,I A S, அவர்கள் தெரிவித்துள்ளார்.
இந்திய தேர்தல் ஆணையத்தின் வழிகாட்டுதல்களின்படி, வாக்காளர் பட்டியல் சிறப்பு சுருக்க முறைத் திருத்தம் 2025 தொடர்பான முன்னேற்பாட்டு பணிகளின் ஒரு பகுதியாக, வாக்குச் சாவடி நிலை அலுவலர்கள் அனைவரும், தொடர்புடைய வாக்குச் சாவடிக்குட்பட்ட பகுதிகளில் அமைந்துள்ள அனைத்து வீடுகளுக்கும் வீடு வீடாகச் சென்று வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்த்தல், நீக்கல் மற்றும் திருத்தங்கள் மேற்கொள்வது தொடர்பான பணிகளை 18.10.2024 வரையிலும் மேற்கொள்ள உள்ளனர்.மேற்படி பணிகள் முடிவடைந்த பின்னர் 29.10.2024 அன்று வரைவு வாக்காளர் பட்டியலானது வெளியிடப்படவுள்ளது. எனவே அனைத்து வாக்காளர்களும் இந்த வாய்ப்பை பயன்படுத்திக் கொண்டு, வாக்காளர் பட்டியலை செம்மைப்படுத்த மாவட்ட நிர்வாகத்திற்கு முழு ஒத்துழைப்பை வழங்கிட வேண்டுமென மாவட்ட ஆட்சித்தலைவர் முனைவர் வீ.ப.ஜெயசீலன்,I A S., அவர்கள் தொவித்துள்ளார்.
தமிழ்நாடு அரசுப்பணியாளர் தேர்வாணையத்தால் 2327 காலிபணியிடங்களுக்கு அறிவிக்கப்பட்டுள்ள ஒருங்கிணைந்த குடிமை பணிகள் தேர்வு தொகுதி - II/IIஅ (குரூப் II/II அ) தேர்வு வரும் 14.09.2024 அன்று நடைபெற உள்ளது.இத்தேர்வுக்கு விண்ணப்பித்துள்ள விருதுநகர் மாவட்ட தேர்வர்கள் பயன்பெறும் பொருட்டு விருதுநகர் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தின் தன்னார்வ பயிலும் வட்டம் வாயிலாக மாநில அளவிலான மாதிரி தேர்வுகள் 28.08.2024, 02.09.2024 மற்றும் 06.09.2024 ஆகிய நாட்களில் விருதுநகர் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையம், சூலக்கரையில் நடைபெற உள்ளது. இந்த மாதிரித் தேர்வில் கலந்துகொள்ள விருப்பம் உடையவர்கள் நேரடியாக மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தில் பதிவு செய்து கொள்ளலாம் அல்லது ஆன்லைன் வாயிலாக https://forms.gle/JH6NeHJh8ETkv4qGA என்ற GOOGLE FORM -ஐ பூர்த்தி செய்து, தேர்வு நடைபெறும் நாட்களில் காலை 10 மணிக்கு விருதுநகர் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்திற்கு நேரில் வருகை புரிந்து மாதிரித் தேர்வினை எழுதி பயன்பெறுமாறு மாவட்ட ஆட்சித்தலைவர் முனைவர் வீ.ப.ஜெயசீலன்,I A S, அவர்கள் தெரிவித்துள்ளார்.
விருதுநகர் மாவட்டம், காரியாபட்டி அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளியில், பள்ளிக்கல்வித்துறை சார்பில் இன்று(21.08.2024) நடைபெற்ற விழாவில், மாண்புமிகு நிதி மற்றும் மனிதவள மேலாண்மைத்துறை அமைச்சர் திரு.தங்கம் தென்னரசு அவர்கள் 360 மாணவிகளுக்கு விலையில்லா மிதிவண்டிகளை வழங்கினார்.ஒரு நாட்டினுடைய சமுதாயம் முன்னேற வேண்டும் என்று சொன்னால், தலைநிமிர்ந்த சமுதாயம் பெற வேண்டும் என்றால் அந்த நாட்டில் இருக்கக்கூடிய பெண்கள் கல்வி கற்க வேண்டும்.அதனைத்தான் நமது தமிழக அரசு தொடர்ந்து செய்து வருகிறது. பெண் கல்வி மற்றும் உயர்கல்வியில் சிறந்து இருக்கின்றோம். ஆண்களை விட பெண்களே முதலிடத்தில் வரக்கூடிய ஒரு இடத்தை நாம் இன்று பெருமையோடு பெற்றிருக்கின்றோம். அரசாங்கம், ஆட்சித்துறை, விஞ்ஞானம் என அனைத்து துறைகளிலும் சாதனையாளர்களாக பெண்கள் வந்திருக்கிறார்கள் என்று சொன்னால் கல்வியால் வந்திருக்கக்கூடிய புரட்சிதான்.அந்த கல்வி எல்லோருக்கும் கிடைக்க வேண்டும் என்று தான், அனைத்து இடங்களிலும் பள்ளிகள் திறக்கப்பட்டன. நமது விருதுநகர் மாவட்டத்தில் எந்த பகுதியாக இருந்தாலும் ஒரு கிலோமீட்டருக்கு ஒரு தொடக்கப்பள்ளி, 3 கிலோமீட்டருக்கு ஒரு நடுநிலைப்பள்ளி, 5 கிலோ மீட்டருக்கு ஒரு உயர்நிலைப்பள்ளி, 7 கிலோமீட்டருக்கு ஒரு மேல்நிலைப்பள்ளி என்று இந்த மாவட்டம் முழுமைக்கும் பள்ளிகள் உருவாக்கப்பட்டுள்ளன.அதற்கும் மேலே பள்ளிக் கல்வி முடித்து பெண்கள் உயர் கல்விக்கு போக வேண்டும் என்று தான் நமது மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் புதுமைப்பெண் திட்டம் மூலம் மாதந்தோறும் ரூ.1000ஃ- வழங்கும் திட்டத்தை செயல்படுத்தி வருகிறார்கள். விருதுநகர் மாவட்டத்தில் 2024-2025-ம் நிதியாண்டில் 9,669 மாணவர்களுக்கும் 8,100 மாணவிகளுக்கும் என மொத்த 17,769 மிதிவண்டிகள் வழங்கப்படவுள்ளன.இன்று காரியாபட்டி அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளியில், 360 மாணவிகளுக்கு விலையில்லா மிதிவண்டிகள் வழங்கப்பட்டுள்ளன.இது போன்ற கல்விக்கான கட்டமைப்புகள், விலையில்லா மிதிவண்டிகள் வழங்குவது போன்றவைகள் எல்லாம் மாணவர்கள் பள்ளிகளுக்கு வரவேண்டும். கல்வி உங்களானதாக இருக்க வேண்டும். அந்த கல்வி மூலமாக நம்முடைய குழந்தைகள் மிகப் பெரிய சாதனையாளர்களாக, விஞ்ஞானிகளாக, பெரிய பதவிகளில் வர வேண்டும் என்பதற்கு தான் என தெரிவித்தார்.
விருதுநகர் வே.வ.வன்னியப்பெருமாள் பெண்கள் கல்லூரியில், தமிழ்நாடு மாநில ஊரக/நகர்ப்புற வாழ்வாதார இயக்கம் மூலம் மகளிர் சுய உதவிக் குழுக்களின் உற்பத்திப் பொருட்களை கல்லூரி மாணவியரிடம் சந்தைப்படுத்தும் நோக்குடன் நடத்தப்பட்ட கல்லூரி சந்தை நிகழ்ச்சியினை மாவட்ட ஆட்சித்தலைவர் முனைவர் வீ.ப.ஜெயசீலன்., I A S, அவர்கள் (21.08.2024) துவக்கி வைத்தார்.இக்கண்காட்சியில் விருதுநகர் மாவட்ட ஊராட்சி, மாநகராட்சி, நகராட்சி மற்றும் பேரூராட்சி பகுதிகளில் உள்ள மகளிர் சுய உதவிக்குழுக்கள் மற்றும் மதுரை, திண்டுக்கல், இராமநாதபுரம், திருநெல்வேலி மற்றும் தூத்துக்குடி ஆகிய வெளி மாவட்டங்களில் உள்ள மகளிர் சுய உதவிக்குழுக்கள் தங்கள் உற்பத்தி பொருட்களான காட்டன் சேலைகள், சுடிதார் டாப்ஸ், சணல் நார் பொருட்கள், மர பொம்மைகள், செயற்கை ஆபரணங்கள், கிறிஸ்டல் பொருட்கள், வீட்டு உபயோக பொருட்கள், பேன்ஸி பொருட்கள், மசாலா பொருட்கள் மற்றம் திண்பண்டங்கள் உள்ளிட்ட உற்பத்திப்பொருட்களின் கண்காட்சி மற்றும் விற்பனை நடைப்பெற்றது.இந்நிகழ்ச்சியில், திட்ட இயக்குநர் (தமிழ்நாடு மாநில ஊரக/நகர்புர வாழ்வாதார இயக்கம்) திரு.ஜே.ஜார்ஜ் ஆண்டனி மைக்கேல், கல்லூரி முதல்வர் டாக்டர்.திருமதி.சே.சிந்தனா, வணிக மேலாண்மை நிர்வாகவியல் துறை தலைவர் டாக்டர்.திருமதி.பி.சுகந்தி., பேராசிரியர்கள், உதவி திட்ட அலுவலர்கள், வட்டார இயக்க மேலாளர், வட்டார ஒருங்கிணைப்பாளர்கள், சமுதாய அமைப்பாளர்கள்; மகளிர் சுய உதவிக்குழு உறுப்பினர்கள் மற்றும் கல்லூரி மாணவியர் மற்றும் அரசு அலுவலர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.
விருதுநகர் மாவட்டம், அருப்புக்கோட்டை தேவாங்கர் பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் (21.08.2024) பள்ளிக்கல்வித்துறை சார்பில் நடைபெற்ற விழாவில், 370 மாணவ மாணவியர்களுக்கு விலையில்லா மிதிவண்டிகளை வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத்துறை திரு.கே.கே.எஸ்.எஸ்.ஆர்.ராமச்சந்திரன் அவர்கள் வழங்கினார்.தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள், தமிழகத்தின் அனைத்து தரப்பு மாணவ, மாணவியர்களும் முழுமையாக கல்வி பெற்று பயன்பெற வேண்டும் என்ற அடிப்படையில், கல்விக்காக பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகிறார்கள்.எதிர்காலத்தில் உறுதியான வாழ்க்கை என்ற சூழலை தயார் படுத்திக் கொள்வதற்காகத்தான் மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள், கல்வி மற்றும் சுகாதாராம் ஆகிய இரண்டையும் இரண்டு கண்களாக நினைத்தும், பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகிறார்கள்.அதன்படி, விருதுநகர் மாவட்டத்தில் 2024-2025-ம் நிதியாண்டில் 9,669 மாணவர்களுக்கும் 8,100 மாணவிகளுக்கும் என மொத்த 17,769 மிதிவண்டிகள் வழங்கப்படவுள்ளன.அதனை துவக்கி வைக்கும் விதமாக இன்று அருப்புக்கோட்டை தேவாங்கர் பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் 163 மாணவர்கள், 207 மாணவிகள் என 370 நபர்களுக்கு விலையில்லா மிதிவண்டிகள் வழங்கப்பட்டுள்ளன.தமிழக அரசால் வழங்கப்படும், மிதிவண்டி மாணவர்களுக்கு படிக்கும் காலம் வரையிலும், படிப்பதற்கு பின்பும் உங்களுக்கும், உங்கள் குடும்பத்தாரும் பயன்பெறும். இது போன்ற படிக்கின்ற குழந்தைகளுக்கான அனைத்து உதவிகளையும் செய்து தர தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் தலைமையிலான அரசு தயாராக உள்ளது என அமைச்சர் அவர்கள் தெரிவித்தார்.
தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் மற்றும் விருதுநகர் மாவட்டம் சார்பாக 2024-ம் ஆண்டிற்கான தமிழ்நாடு முதலமைச்சர் கோப்பை விளையாட்டு போட்டிகளுக்கான போட்டிகளில் பல்வேறு புதிய விளையாட்டுக்கள் சேர்க்கப்பட்டு பள்ளி, கல்லூரி மாணவ ,மாணவியர், மாற்றுத்திறனாளிகள், பொதுமக்கள் மற்றும் அரசு ஊழியர்கள் என 5 பிரிவுகளில் 27 விளையாட்டுக்கள் 53 வகைகளில் மாவட்ட, மண்டல மற்றும் மாநில அளவிலான தமிழ்நாடு முதலமைச்சர் கோப்பைக்கான விளையாட்டுப் போட்டிகள் வரும் செப்டம்பர் மற்றும் அக்டோபர் மாதங்களில் நடத்தப்பட உள்ளது.மேலும், மாநில அளவில் தனிநபர் போட்டிகளில் வெற்றி பெறுபவர்களுக்கு முதல் பரிசாக ரூ.1 இலட்சமும், இரண்டாம் பரிசாக ரூ.75 ஆயிரமும், மூன்றாம் பரிசாக ரூ.50 ஆயிரமும் வழங்கப்படும். குழு போட்டிகளில் பங்கு பெற்று வெற்றி பெறுபவர்களுக்கு முதல் பரிசாக தலா ரூ.75 ஆயிரமும், இரண்டாம் பரிசாக தலா ரூ.50 ஆயிரமும், மூன்றாம் பரிசாக தலா ரூ.25 ஆயிரமும் பரிசாக வழங்கப்பட உள்ளது. மேலும், இவ்வாண்டு தனிநபர் மற்றும் குழு போட்டிகளில் வெற்றி பெறுபவர்களுக்கு தமிழ்நாடு அரசு முதல் முறையாக நான்காம் இடம் பெற்றவர்களுக்கும் மூன்றாம் பரிசிற்கு இணையாக வழங்கிட உள்ளது.இப்போட்டிகளில் வழங்கப்படும் சான்றுகள் மூலம் உயர்கல்வி மற்றும் வேலைவாய்ப்பில் சலுகைகளும் பெற இயலும். விருதுநகர் மாவட்டத்தை சார்ந்த 12 வயது முதல் 19 வயது வரை உள்ள பள்ளி மாணாக்கர்களுக்கும், 17 வயது முதல் 25 வயது வரை கல்லூரி மாணக்கர்களுக்கும், 15 வயது முதல் 35 வயது வரை பொதுப்பிரிவினருக்கும், அனைத்து வயது மாற்றுத்திறனாளிகளுக்கும் மற்றும் தமிழ்நாடு அரசு ஊழியர்களான நிரந்தரப் பணியாளர்களுக்கும் விளையாட்டுப் போட்டிகள் நடத்தப்பட உள்ளது. இப்போட்டிகளில் கலந்து கொள்வதற்கான விவரத்தினை http://sdat.tn.gov.in என்ற இணையதளம் வாயிலாக முன்பதிவு செய்து அதற்குரிய ஆவணங்களை சமர்ப்பித்து பதிவேற்றம் செய்திடலாம்.போட்டிகளில் பங்கேற்க முன்பதிவு செய்திட கடைசி நாள் 25.08.2024 ஆகும். இணையதளம் மூலம் பதிவு செய்தவர்கள் மட்டுமே போட்டிகளில் பங்கேற்க முடியும். மேலும் விபரங்களுக்கு மாவட்ட விளையாட்டு அலுவலகம் மற்றும் ஆடுகளம் தகவல் தொடர்பு மையத்தை அனைத்து வேலை நாட்களிலும், காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரை 95140-00777 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளலாம் என மாவட்ட ஆட்சித்தலைவர் முனைவர் வீ.ப.ஜெயசீலன்,I A S., அவர்கள் தெரிவித்துள்ளார்.
விருதுநகர் புதிய பேருந்துநிலையம் (21.08.2024) முதல் முழுமையாக செயல்பாட்டிற்கு வந்துள்ளதை தொடர்ந்து, அங்கு இயக்கப்படும் பேருந்து சேவைகள், அடிப்படை வசதிகள் உள்ளிட்டவை குறித்து மாவட்ட ஆட்சித்தலைவர் முனைவர் வீ.ப.ஜெயசீலன், I A S., அவர்கள் நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு செய்தார்.