25 YEARS OF EXCELLENCE

சமீபத்திய நிகழ்வுகள்:
வைப்பாறு, வைகை ஆறுகள் புத்துயிர் பெற மேற்கு தொடர்ச்சி மலையை பாதுகாக்க வேண்டும் >> இயந்திரம் மூலம் நெல் நடவு பணியை நாடும் விவசாயிகள். >> (நவ. 6) முதல் ராஜபாளையத்தில் புத்தக கண்காட்சி >> அய்யனார் கோவில் நீர்வீழ்ச்சியில் குளிப்பதற்கு தடை. ஒத்துழைக்காத பொதுமக்கள். யாருக்கு நஷ்டம்?. >> எ.கா .த .தர்மராஜா பெண்கள் கல்லூரியில் ரோட்ராக்ட் கிளப் துவக்க விழா >> 227 படுக்கைகளுடன் இராஜபாளையம் அரசு ஆஸ்பத்திரி  தரம் உயர்வு >> இராஜபாளையம் கேசா டிமிர் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியில் கலை அறிவியல் கண்காட்சி நடைபெற்றது. >> வேர்ல்டு விஷன் இந்தியா தொண்டு நிறுவனத்தினர் இலவச சைக்கிள் வழங்கினார்கள். >> பலத்த மழையினால் ராஜபாளைய விவசாயிகள் மகிழ்ச்சி  >> இராஜபாளையம் எ.கா.த. தர்மராஜா பெண்கள் கல்லூரியில் நடந்த மதுரை பல்கலை மண்டலங்களுக்கு இடையேயான வாலிபால் போட்டி, >>


செய்தி மக்கள் தொடர்பு அலுவலகம் விருதுநகர் மாவட்டம்

Aug 14, 2024

மதி சிறகுகள் தொழில் மையத்தின் மூலமாக தகவல் தொழில் நுட்பம் மற்றும் டிஜிட்டல் சேவைத் துறை மூலம் இ-சேவை மையம் 01.08.2024 முதல் செயல்பட துவங்கப்பட்டுள்ளது

வாழ்ந்து காட்டுவோம் திட்டத்தின் மூலம் ஊராட்சிகளில் தொழில் மேம்பாட்டினை வலுப்படுத்தவும், தொழில் முனைவோருக்கும், தொழில் நிறுவனங்களுக்கும் வணிக மேம்பாட்டு உதவி சேவைகளை வழங்குவதற்கு மதி சிறகுகள் தொழில் மையம் துவங்கப்பட்டு இயங்கி வருகிறது.மதி சிறகுகள் தொழில் மையம் மூலமாக தொழில் திட்டம் தயாரித்தல், தொழில்நுட்ப விபரங்கள், திறன் பயிற்சி குறித்த விவரங்கள், சந்தை பற்றிய தகவல்கள், நிதி இணைப்புகள், பிறதுறை இணைப்புகள், வணிக இணைப்பு கூட்டம், வழிகாட்டுநர்கள், துறை ரீதியான ஆலோசனைகள் ஆகிய சேவைகள் வழங்கப்பட்டு வருகிறது. தற்போது மதி சிறகுகள் தொழில் மையத்தின் மூலமாக தகவல் தொழில் நுட்பம் மற்றும் டிஜிட்டல் சேவைத் துறை மூலம் இ-சேவை மையம் 01.08.2024 முதல் செயல்பட துவங்கியுள்ளது.இதன் மூலம் மக்களுக்கு தேவையான சேவைகள் அனைத்தும் அரசு நிர்ணயித்துள்ள குறைந்த கட்டணத்தில் வழங்கப்பட்டு வருகிறது. மேலும் புதிதாக தொழில் தொடங்க ஆர்வமுள்ள தொழில் முனைவோர்களுக்கு தொழில் தொடங்குவதில் ஏற்படும் இடையூறுகளையும், தடைகளையும் கண்டறிந்து அதனை நிவர்த்தி செய்வதற்கான சேவைகளும், அனைத்து துறை ரீதியான கடன் நிதி பெறுவதற்கு தொழில் திட்டம் தயாரித்தல், சட்டபூர்வ ஆவண பதிவுகள் (PAN, GST, MSME, FSSAI…)  தொழிலாளர் நல வாரிய அட்டை, வருவாய் நிர்வாகம் சார்ந்த ஆவணங்கள் (அடங்கல், ஜாதி சான்றிதழ், வருமான சான்றிதழ், இருப்பிட சான்றிதழ்…,) மற்றும் அனைத்து துறை சார்ந்த ஆவணங்களும் பெற்று தரப்படும்.மேலும் கடன் பெற்றவர்களுக்கான வணிக இணைப்பு கூட்டம் ஒவ்வொரு மாதமும் இரண்டாவது புதன்கிழமை அன்று மதி சிறகுகள் தொழில் மையத்தில் வைத்து நடத்தப்பட்டு வருகிறது. இச்சேவை மையத்தை அனைத்து வட்டாரங்களைச் சார்ந்த நபர்களும் பயன்படுத்திக் கொள்ள வேண்டும். மதி சிறகுகள் தொழில் மையம், முதல் தளம், பூமாலை வணிக வளாகம், பழைய பேருந்து நிலையம் அருகில், விருதுநகர் - 626001. கைபேசி எண்: 95147-37043, 99941-42115. மின்னஞ்சல் முகவரி: vkpwlc.vnr@gmail.com. என்ற முகவரியை தொடர்பு கொண்டு பயன்பெறலாம்  என மாவட்ட ஆட்சித்தலைவர் முனைவர் வீ.ப.ஜெயசீலன்,I A S., அவர்கள் தெரிவித்துள்ளார்.

Aug 14, 2024

பொதுமக்கள் தேசியமயமாக்கப்பட்ட மற்றும் தனியார் வங்கிகளில் மட்டும் கடன் பெருமாறும், அதிக வட்டி வசூலிக்கும் மற்றும் கடன் செயலிகள் மூலம் கடன்களை பெற வேண்டாம்

விருதுநகர் மக்களுக்கு ஒருவிழிப்புணர்வு மற்றும் எச்சரிக்கை பதிவு. தற்பொழுது நமது மாவட்டத்தில் முறையாக அனுமதி பெறாத பல சிறு நிதி நிறுவனங்கள் இயங்கி வருவதாகவும், அவைகள் பொது மக்களுக்கு அதிக வட்டியில் கடன்களை வழங்கி மக்களை மிகவும் கஷ்ட்டப்படுத்துவதாக மாவட்ட நிர்வாகத்திற்கு சமீபகாலமாக நிறைய மனுக்கள் வருகின்றன.எனவே நமது மாவட்டத்தில் இயங்கும் சிறு நிதி நிறுவனங்கள் (மைக்ரோபைனான்ஸ் கம்பெனி (MFI) மாவட்ட நிர்வாகத்திடம் முறையான அனுமதி பெற்று இயங்க வேண்டும். மேலும், முறையான அனுமதி பெற்ற நிதி நிறுவனங்கள் அனுமதிக்கப்பட்ட வட்டி விகிதத்தில் மட்டுமே கடன்கள் வழங்க வேண்டும். அதனை மீறும் நிதி நிறுவனங்களின் மீது கடன் வழங்கும் சட்டத்தின் (Money Lending Act)  கீழ் கடுமையான நடவடிக்கை மாவட்ட நிர்வாகத்தின் மூலம் எடுக்கப்படும் என எச்சரிக்கப்படுகிறது.மேலும் பொதுமக்கள் தேசியமயமாக்கப்பட்ட மற்றும் தனியார் வங்கிகளில் மட்டும் கடன் பெருமாறும், இவ்வாறு முறையின்றி நடத்தப்படும், அதிக வட்டி வசூலிக்கும் மற்றும் கடன் செயலிகள் மூலம் கடன்களை பெற வேண்டாம் என்று அறிவுறுத்தப்படுகிறது.வங்கிகள் பொதுமக்களிடம் இருந்து பெறப்படும் கடன் விண்ணப்பங்களை முறையாக பரிசீலினை செய்து உரிய காலத்திற்குள் விண்ணப்பதாரருக்கு முறையான பதிலை தர வேண்டும். இவ்வாறு செயல்படும் நிதி நிறுவனங்கள் மற்றும் செயலிகள் கடன்களை வழங்கிய பின்பு சட்டத்திற்கு புறம்பாக வசூல் நடவடிக்கைகளில் ஈடுபடுகின்றன. எனவே பொது மக்கள் விழிப்புணர்வுடன் இருக்குமாறு மாவட்ட ஆட்சித்தலைவர் முனைவர் வீ.ப.ஜெயசீலன்,I A S ., அவர்கள் தெரிவித்துள்ளார்.

Aug 13, 2024

போதைப் பழக்கத்திற்கு எதிரான உறுதிமொழி நிகழ்ச்சி

விருதுநகர் மாவட்டம், ஸ்ரீ வித்யா கலை மற்றும் அறிவியல் கல்லூரியில்,  மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத்துறை சார்பில் நடைபெற்ற போதைப் பழக்கத்திற்கு எதிரான உறுதிமொழி நிகழ்ச்சியில் மாவட்ட ஆட்சித்தலைவர் முனைவர் வீ.ப.ஜெயசீலன், I A S, அவர்கள் தலைமையில்  (12.08.2024) மாணவ, மாணவியர்கள் அனைவரும் விழிப்புணர்வு உறுதிமொழியினை எடுத்துக்கொண்டனர். அதன்படி, இந்நிகழ்ச்சியில் போதைப்பழக்கத்தால் ஏற்படும் தீய விளைவுகளை நான் முழுமையாக அறிவேன். நான் போதைப் பழக்கத்திற்கு ஆளாகமாட்டேன். மேலும் எனது குடும்பத்தினரையும், நண்பர்களையும் போதைப் பழக்கத்திற்கு ஆளாகாமல் தடுத்து அவர்களுக்கு அறிவுரைகளை வழங்குவேன். போதைப் பழக்கத்திற்குள்ளானவர்களை மீட்டெடுத்து அவர்களை நல்வழிப்படுத்த எனது பங்களிப்பை முழுமையாகத் தருவேன்.போதைப்பொருட்களின் உற்பத்தி, நுகர்வு, பயன்பாடு ஆகியவற்றிற்கு எதிரான தடுப்பு நடவடிக்கைகளின் மூலம் போதைப் பொருட்களை தமிழ்நாட்டில் வேரறுக்க அரசுக்குத் துணை நிற்பேன். மாநிலத்தின் வளர்ச்சிக்கும் மக்களின் நல்வாழ்;விற்கும் நான் அர்ப்பணிப்புடன் பங்காற்றுவேன் என்று உளமார கூறுகின்றேன் என்ற உறுதிமொழியினை மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் தலைமையில் மாணவ, மாணவியர்கள் அனைவரும் எடுத்துக்கொண்டனர்.அரசு மருத்துவமனையிலும் போதை மீட்பு மையங்கள் சிறப்பாக செயல்பட்டு வருகிறது. விருதுநகர், அருப்புக்கோட்டை, காரியாபட்டி, திருவில்லிபுத்தூர், இராஜபாளையம், சாத்தூர், சிவகாசி உள்ளிட்ட அனைத்து இடங்களிலும் உள்ளது. இந்த மையங்களில் போதைக்கு அடிமையானவர்களை 2 வாரங்களில் சரி செய்துவிடலாம் என மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் தெரிவித்தார்இக்கூட்டத்தில், உதவி ஆணையர் (கலால்) திரு.கணேசன்,  கல்லூரி முதல்வர், பேராசிரியர்கள், மாணவ, மாணவியர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

Aug 13, 2024

சாத்தூர் ஊராட்சி ஒன்றியம், நள்ளி கிராமத்தில் மக்களுடன் முதல்வர்” திட்டத்தின் கீழ் நடைபெற்ற சிறப்பு முகாம்

விருதுநகர் மாவட்டம், சாத்தூர் வட்டம், நள்ளி கிராமத்தில் (12.08.2024) “மக்களுடன் முதல்வர்” திட்டத்தின் கீழ் நடைபெற்ற சிறப்பு முகாமில், மாவட்ட ஆட்சித்தலைவர் முனைவர் வீ.ப.ஜெயசீலன்,I A S., அவர்கள் தலைமையில், வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத்துறை அமைச்சர்  திரு.கே.கே.எஸ்.எஸ்.ஆர்.ராமச்சந்திரன் அவர்கள் கலந்து கொண்டு, பொதுமக்களிடம் கோரிக்கை மனுக்களை பெற்றுக் கொண்டார்.இம்முகாமில் பல்வேறு துறைகளிலிருந்து  நலத்திட்ட உதவிகளை மாண்புமிகு வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத்துறை அமைச்சர் அவர்கள் வழங்கினார்கள்.அரசின் சேவைகள் விரைவாகவும் எளிதாகவும் மக்களை சென்றடையும் வகையிலும், நிர்வாகத்தில் வெளிப்படைத் தன்மையை ஏற்படுத்திடவும், “மக்களுடன் முதல்வர்” என்ற புதிய திட்டத்தினை  தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் தொடங்கி வைத்து செயல்படுத்தி வருகிறார்கள்.அனைத்து தரப்பு மக்களுக்கும் 15 அரசுத் துறைகளின் சேவைகள் எளிதில் கிடைத்திடவும், தாமதங்களை தவிர்த்திட வேண்டும் என்பதும் தான் இந்த திட்டத்தின் நோக்கமாகும்.தற்போது மக்களுடன் முதல்வர் முகாம்கள் மூலம் ஐந்து  அல்லது ஆறு கிராமங்களை ஒரு கூட்டாக அமைத்து ஒரு பொதுவான இடத்தில் பல்வேறு துறை அலுவலர்கள் நேரடியாக பொதுமக்களிடம் மனுக்களை பெற்று,  அதற்கான சரியான தீர்வுகளை வழங்கி வருகிறார்கள்.மேலும்,கலைஞர்மகளிர்உரிமைத்தொகைகள்கிடைக்கபெறாதவர்களுக்கும்,முதியோர்உதவித்தொகைவிண்ணப்பித்தோர்களுக்கும் தகுதியின் அடிப்படையில் விரைவாக தீர்வு காணப்படும். ஒரு அரசினுடைய சேவைகளில் மிக முக்கியமானது பொதுமக்களிடம் அவர்களுக்கு இருக்கக்கூடிய தனிப்பட்ட, பொதுநலம் சார்ந்த பல்வேறு கோரிக்கைகளை உரிய கால அவகாசத்திற்குள் அந்த கோரிக்கைகளுடைய நியாயங்களின்  அடிப்படையில்  அவற்றை மிக விரைவாக நிறைவேற்றித் தர வேண்டும் என்பது தான். நமது விருதுநகர் மாவட்டத்தில், பொதுமக்கள் பல்வேறு அரசுத்துறை அலுவலகங்களிலும், உள்ளாட்சி பிரதிநிதிகளிடமும், மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்களிடமும், அமைச்சர் பெருமக்கள் அவர்களிடமும் மனுக்களை நேரில் சென்று அளித்து வருகிறார்கள்.மேலும், இ-சேவை மையங்களின் மூலமாக அரசின் சேவைகளை இணையதளத்தின் மூலம் பதிவு செய்து கோரிக்கைகள்  பெறப்படுகின்றன. அதுமட்டுமல்லாமல் அவ்வபோது நடக்கக்கூடிய மக்கள் தொடர்பு திட்ட முகாம், ஒவ்வொரு மாதம் நடக்கக்கூடிய சிறப்பு முகாம்கள் ஆகியவற்றிலிருந்து கோரிக்கை மனுக்கள் வருகின்றன. கடந்த ஓராண்டில் மட்டும் மாவட்டத்தில் சுமார் ஒரு லட்சம் மனுக்கள் பெறப்பட்டுள்ளது.ஒரு மனுவின் மீது  ஒன்றிற்கு மேற்பட்ட துறைகள் இணைந்து தீர்வு காண வேண்டி உள்ளது.  அதற்காக தான் 15 துறைகளை கண்டறிந்து, அந்த துறைகளையெல்லாம் நான்கு அல்லது ஐந்து கிராமங்கள் ஒன்றாக இணைத்து ஒரு இடத்தை மையமாகக் கொண்டு பொதுவான இடத்திற்கு  நேரடியாக சென்று மனுக்களை வாங்குவது மட்டுமல்லாமல், பெறக்கூடிய மனுக்களை எவ்வளவு நாளில் தீர்வு கண்டுள்ளோம் என்பதும், அதற்கான பதில் அந்தந்த மனுதாரர்களுக்கு  சரியானதாக இருக்கிறதா என்பது குறித்தும் ஆய்வு செய்யப்படுகிறது.தமிழ்நாட்டில் இருக்கக்கூடிய அனைத்து மாவட்டங்களிலும் அதிகமான பட்டாக்களை வழங்கிய மாவட்டமாக நமது மாவட்டம் தான் முதலிடத்தில் இருக்கிறது. மேலும், கலைஞர் உரிமைத்தொகை மற்றும் முதியோர் ஓய்வூதிய தொகை  என எந்தவொரு கோரிக்கையாக இருந்தாலும், அதனை பரிசீலனை செய்து, அதிக எண்ணிக்கையிலான பயனாளிகளுக்கு அரசின் நலத்திட்டங்களை வழங்கி படிப்படியாக நிறைவேற்றிக் கொண்டிருக்கிறோம் .எனவே பொதுமக்கள் தரக்கூடிய கோரிக்கை மனுக்கள் ஒவ்வொன்றும் முழுமையாகவும், கவனமாகவும் பரிசீலிக்கப்படும். மேலும், அந்த மனுக்களை விரைவாக செயல்படுத்துவதற்கு தான் இந்த திட்டம். எனவே இந்த திட்டத்தை பொதுமக்கள் நன்கு பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என்று மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் தெரிவித்தார்.இந்த முகாமில், சாத்தூர் வருவாய் கோட்டாட்சியர் திரு.சிவகுமார், சாத்தூர் ஊராட்சி ஒன்றியக் குழுத்தலைவர் திருமதி நிர்மலா கடற்கரைராஜ், சாத்தூர் நகர்மன்ற தலைவர் திரு.குருசாமி, உள்ளாட்சி பிரதிநிதிகள், ஊராட்சி மன்ற தலைவர், அரசு அலுவலர்கள், பொதுமக்கள்; உட்பட பலர் கலந்து கொண்டனர்.

Aug 13, 2024

விருதுநகர் மாவட்டம் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம்

விருதுநகர் மாவட்ட ஆட்சியர் அலுவலக வளர்ச்சிமன்றக் கூட்டரங்கில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் மாவட்ட ஆட்சித்தலைவர் முனைவர் வீ.ப.ஜெயசீலன்,I A S, அவர்கள் தலைமையில்  (12.08.2024) நடைபெற்றது.இக்கூட்டத்தில், இலவச வீட்டுமனைப்பட்டா மற்றும் பட்டா மாறுதல், குடும்பஅட்டை, வேலைவாய்ப்பு, முதியோர், விபத்து நிவாரணம், மாற்றுத்திறனாளிகள், நலிந்தோர் நலத்திட்டம் மற்றும் விதவை உதவித்தொகை, திருமண உதவித்தொகை உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் தொடர்பாக மனுக்கள் பெறப்பட்டது.  மேலும், மாற்றுத்திறனாளிகள் மற்றும் மூத்த குடிமக்களுக்காக அமைக்கப்பட்டுள்ள சிறப்பு அமருமிடத்திற்குச் சென்று, மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் கோரிக்கை மனுக்களை பெற்றுக் கொண்டார். இம்மனுக்களை மாவட்ட ஆட்சித்தலைவர்  அவர்கள் சம்மந்தப்பட்டதுறை அலுவலர்களிடம் ஒப்படைத்து உரிய நடவடிக்கை எடுக்குமாறு உத்தரவிட்டார்கள். மேலும் முதலமைச்சர் தனிப்பிரிவு மனுக்கள் மீது தனிக்கவனம் செலுத்தி நடவடிக்கை எடுக்குமாறு மாவட்ட ஆட்சித்தலைவர்  அவர்கள் தொடர்புடைய அலுவலர்களை அறிவுறுத்தினார்கள்.  இக்கூட்டத்தில்,   தமிழ்நாடு முதலமைச்சரின் பொது  நிவாரண நிதியிலிருந்து சாலை விபத்தில் உயிரிழந்தவர்களின் வாரிசுதாரர் 2 நபர்களுக்கு தலா ரூ.2,00,000/-  மதிப்பிலும், சாலை விபத்தில் காயமடைந்த 4 நபர்களுக்கு தலா ரூ.1,00,000/- மதிப்பிலும் என ஆக மொத்தம் 6 நபர்களுக்கு ரூ.8 இலட்சம் மதிப்பிலான நிவாராணத் தொகைக்கான காசோலைகளை மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் வழங்கினார்.பின்னர், மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நலத்துறை சார்பில் 8 பயனாளிகளுக்கு தலா ரூ.4,870/- மதிப்பில் இலவச தேய்ப்பு பெட்டிகளையும், 14 பயனாளிகளுக்கு தலா ரூ.6,000/- மதிப்பில் தையல் இயந்திரங்களையும் என 22 பயனாளிகளுக்கு மொத்தம் ரூ.1,22,960/- மதிப்பிலான நலத்திட்ட உதவிகளையும் மாவட்ட ஆட்சித்தலைவர்  அவர்கள் வழங்கினார்.இக்கூட்டத்தில், மாவட்ட வருவாய் அலுவலர் இரா.ராஜேந்திரன், தனித்துணை ஆட்சியர்(சமூக பாதுகாப்பு திட்டம்) திரு.காளிமுத்து, மாவட்ட பிற்படுத்தப்டோர் மற்றும் சிறுபான்மையினர் நலத்துறை அலுவலர் திருமதி இ.கார்த்திகேயனி, அரசு அலுவலர்கள் மற்றும்  பொதுமக்கள் உட்பட  பலர் கலந்து கொண்டனர். 

Aug 13, 2024

"Coffee With Collector” என்ற 94-வது கலந்துரையாடல் நிகழ்ச்சி

விருதுநகர் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில்  (12.08.2024)  சிவகாசி கல்வி மாவட்டத்தை சேர்ந்த  இரண்டு அரசு உதவி பெறும் பள்ளியை சேர்ந்த  11 மற்றும் 12-ஆம் வகுப்பிலிருந்து சிறந்து விளங்கக்கூடிய 40 பள்ளி மாணவர்களுடனான  "Coffee With Collector”   என்ற 94- வது கலந்துரையாடல் நிகழ்ச்சியில் மாவட்ட ஆட்சித்தலைவர்  முனைவர் வீ.ப.ஜெயசீலன்,I A S,அவர்கள் மாணவர்களுடன் கலந்துரையாடி, கல்லூரிகள் தேர்வு, உயர்கல்வி மற்றும் வேலைவாய்ப்பு குறித்த உரிய வழிகாட்டுதல் வழங்கினார்.விருதுநகர் மாவட்டத்தில் பள்ளிகளில் பயிலும் மாணவர்களில் கல்வி, பொது அறிவு, விளையாட்டு, ஓவியம், இசை உள்ளிட்ட பல்வேறு திறன் அடிப்படையில் மாணாக்கர்களின் திறன்களை கண்டறிந்து, மாணவ, மாணவியர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டு பிரதி வாரம் ஒருமுறை அவர்களை மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் நேரில் அழைத்து  கலந்துரையாடும் நிகழ்ச்சி தொடங்கப்பட்டு, இன்று 94-வது முறையாக கலந்துரையாடல் நிகழ்ச்சி நடைபெற்றது.இந்த நிகழ்ச்சியின் முக்கிய நோக்கம், மாணவர்களுடைய உயர்ந்த இலட்சியம், அவர்களுடைய உயர்கல்வி பயில்வதற்கு வழிகாட்டுதல், போட்டி தேர்வுகளை எதிர்கொள்ளுதல், தோல்வியை எவ்வாறு எதிர்கொள்வது, அவர்களுக்கு கல்வி, வேலைவாய்ப்பு உள்ளிட்ட பல்வேறு பிரிவுகளில் அவர்களுடைய சந்தேகங்களை அகற்றி, அவர்கள் வாழ்க்கையில் எங்கு பிறந்தோம், நாம் அரசு பள்ளியில் பயின்றோம், நமக்கு வசதி இல்லை, நமக்கு பின்புலம் இல்லை என்பதெல்லாம், வாழ்க்கையில் ஒரு உயர்ந்த இடத்தை அடைவதற்கு ஒரு தடை இல்லை என்பதை புரிய வைத்து, தன்னம்பிக்கை, விடாமுயற்சி, கடின உழைப்புடன் தொடர்ந்து உழைத்தால்  நாம் எதையும் சாதிக்க முடியும் என்பதை உணர்த்தும் வகையில் சரியான வழிகாட்டுதல் வழங்குவதே இந்த நிகழ்ச்சியின் முக்கிய நோக்கமாகும்.இந்த கலந்துரையாடல் நிகழ்ச்சியில் கலந்து கொண்ட பள்ளி மாணவ, மாணவிகளிடம், அவர்களுடைய இலட்சியம், அவர்களுக்கு எந்த துறையில் ஆர்வம், அவர்கள் உயர்கல்வி பயில விரும்பும் கல்லூரி மற்றும் இடம் உள்ளிட்டவை குறித்து கேட்டறிந்தார்.பள்ளி கல்லூரி படிப்பு என்பது ஒருவரின் வாழ்க்கையில் ஒருமுறை மட்டுமே கிடைக்கும். எனவே பள்ளி மற்றும் கல்லூரி படிப்பின் மூலம் வாழ்க்கைக்கான பல அனுபவங்களை கற்றுக் கொள்ளலாம். அனுபவங்களில் இருந்து கிடைக்கும் கல்விதான் சிறந்த கல்வியாகும்.மருத்துவம், பொறியியல் படிப்புகளுக்கு அனைத்து நுழைவு தேர்வுகளை பற்றி தெரிந்துகொள்ள வேண்டும். எந்த கல்லூரியில் எந்த படிப்பு சேரவேண்டும் என்பதை முடிவு செய்து விடா முயற்சியுடன் படிக்க வேண்டும். மருத்துவ படிப்பு சேர விரும்பும் மாணவர்கள் நுழைவு தேர்வை மனதில் வைத்து படிக்க வேண்டும். மேலும் நீட் தேர்வில் ஒவ்வொரு சரியான பதிலுக்கும் மதிப்பெண்களை வழங்குகிறது. அதே நேரத்தில், ஒவ்வொரு தவறான பதிலுக்கும் மதிப்பெண் கழிக்கப்படுகிறது. இதனை  மாணவர்கள் கவனத்தில் கொள்ள வேண்டும்.12-ஆம் வகுப்பு பள்ளி படிப்பை முடித்தவுடன் கல்லூரி படிப்பில் சேருவதற்காக அனைத்து கல்லூரிகளிலும் தவறாமல் விண்ணப்பம் செய்ய வேண்டும். கடந்தாண்டு எந்த கல்லூரியில் எவ்வளவு கட் ஆப் மதிப்பெண் அடிப்படையில் மாணவர் சேர்க்கை நடைபெற்றது போன்ற தகவல்களை தெரிந்துகொள்ள வேண்டும். ஒவ்வொருவரும் தங்களது தனித் திறமைகளை வளர்த்துக்கொள்ள வேண்டும்.12-ஆம்; வகுப்பில் எடுக்க கூடிய மதிப்பெண்களை பயன்படுத்தி நமக்கான நல்ல வாய்ப்புகளை உருவாக்கி கொள்ள வேண்டும். உயர்கல்வி எங்கு பயின்றாலும், இந்தியாவில் சிறந்த கல்லூரியை தேர்ந்தெடுத்து படிக்க வேண்டும். வெற்றிக்கு  தேவையான  விஷயங்களை தொடர்ந்து ஆர்வத்துடன், கவனசிதறல் இல்லாமல், தொடர்ந்து விடா முயற்சியுடனும், கடினமாக உழைத்தால் எளிதாக வெற்றி பெறலாம்.

Aug 13, 2024

குழந்தைகளின் கல்விக்காக மாவட்ட ஆட்சியரின் விருப்புரிமை நிதியிலிருந்து காசோலை

விருதுநகர் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் (12.08.2024) நடைபெற்ற மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில், திருவில்லிபுத்தூர் வட்டம், கோட்டைப்பட்டியைச் சேர்ந்த திருமதி. பார்வதி என்பவர் தனக்கு 4 பெண்குழந்தைகள் உள்ளதாகவும், மிகவும் வறுமையான சூழ்நிலையில் குழந்தைகளை படிக்க வைத்து வருவதால் குழந்தைகளின் கல்விக்காக உதவி செய்யுமாறு மனு அளித்திருந்த நிலையில், மாவட்ட ஆட்சியரின் விருப்புரிமை நிதியிலிருந்து கல்லூரி பயிலும் 2 மாணவிகளுக்கு தலா ரூ.3000 /- வீதம் மொத்தம் ரூ.6000 /- த்திற்கான காசோலைகளை மாவட்ட ஆட்சித்தலைவர் முனைவர் வீ.ப.ஜெயசீலன்,I A S,அவர்கள் வழங்கினார்.

Aug 13, 2024

நூலகர் தின விழா

விருதுநகர் மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் உள்ள மாவட்ட நூலக அலுவலகத்தில் பள்ளிக்கல்வித்துறை மற்றும் பொது நூலக இயக்ககம் சார்பில் நூலகர் தின விழா மாவட்ட ஆட்சித்தலைவர் முனைவர் வீ.ப.ஜெயசீலன்,I A S, அவர்கள் தலைமையில் (12.08.2024) நடைபெற்றது.இந்நிகழ்ச்சியில், நூலகர் தின விழாவை முன்னிட்டு நடைபெற்ற கோலப்போட்டி, வார்த்தை, பொது அறிவு உள்ளிட்ட பல்வேறு போட்டிகளில் வெற்றி பெற்ற நூலகர்களுக்கு பரிசுகளை மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் வழங்கினார்நூலக அறிவியலின் ஐந்து கோட்பாடுகளின் அடிப்படையில் ஒரு நூலகத்தை எப்படி பல்கலைக்கழகங்களாக உருவாக்க முடியும். சாதாரண மனிதர்கள் தங்கள் வாழ்நாள் முழுவதும் தொடர்ச்சியாக வாசிப்பதற்கு எப்படி நூலகம் உறுதுணையாக இருக்கிறது. ஒரு நூலகத்தில் நூலகரின் பணிகள் என்னென்ன என்பவற்றையெல்லாம் குறித்து மிக விரிவான கோட்பாடுகளை உருவாக்கியதோடு மட்டுமல்லாமல், தனது வாழ்நாள் முழுவதும் நூலகத்தை செம்மையுடன் பேணுவது குறித்து தொடர்ச்சியாக யோசித்து சிறந்த நூலகராக இருந்த இந்திய நூலகத்தின் தந்தை என அழைக்கப்படும் டாக்டர் எஸ்.ஆர்.அரங்கநாதன் அவர்களின் பிறந்த நாளான ஆகஸ்டு 12-ம் தேதி தேசிய நூலகர் தினமாக கடைபிடிக்கப்படுகிறது.நமது மாவட்டத்தில் ஒவ்வொரு கிராமத்திலும் நூலகங்கள் அமைக்கப்பட்டுள்ளன. அந்த நூலகங்கள் அமைக்கப்பட்டதோடு, தொடர்ச்சியாக பல்வேறு திட்டங்களின் கீழ் நூலகங்கள் புதுப்பிக்கப்பட்டு, மேம்படுத்தப்பட்டு, செம்மைப்படுத்தப்பட்டு வருகின்றது.தற்போது கூட நமது மாவட்டத்தில் 25 நூலகங்களுக்கு மேல் புதிதாக கட்டடங்கள் கட்டுவதற்கும், கட்டடங்கள் பழுது பார்ப்பதற்கும் பணிகள் தொடங்கி நடைபெற்றுக் கொண்டிருக்கின்றன.இன்று கைபேசியில் அனைத்து விவரங்களையும் தெரிந்து கொள்ளலாம். அனைத்தும் இணையதளங்களில் கிடைக்கிறது. இன்றைய நவீன தகவல் தொழில் நுட்ப யுகத்தில் நூலகங்களுக்கான தேவை இருக்கிறதா என்ற ஒரு கேள்வி இருக்கிறது.ஆனால் ஒரு புள்ளி விவரத்தை எடுத்து ஆய்வு செய்து பார்த்தால் நவீன தகவல் தொழில்நுட்ப வசதிகள் வாசிப்பதற்கு கிடைத்தாலும், இன்னும் முறையாக வாசிக்க கூடியவர்கள், ஒரு தலைப்பை எடுத்து அந்த தலைப்பில் முறையாக படிக்கக் கூடியவர்களுக்கு இணையமும் அதை ஒட்டி உள்ள தொழில்நுட்பங்களும் துணைக் கருவிகளாகத்தான் இருக்கின்றதே தவிர முழுமையாக வாசிப்பதற்கு என்று புத்தகங்கள் தான் ஒரு அமைப்பாகவே இருக்கிறது.இளைஞர்களும், புதிய தலைமுறையினரும் எந்தெந்த துறையினை வாசிக்கிறார்கள் என்பதில் தான் அவர்களுடைய அறிவு திறப்பு மாறி இருக்கிறது. பொது நூலகங்களில், புத்தகக் கண்காட்சிகளில், புத்தக விற்பனை நிலையங்களில் எல்லாம் ஜோதிடம் மற்றும் சமையல் கலை ஆகிய இரண்டு நூல்கள் தான் அதிகம் விற்பதாக புள்ளிவிவரமாக சொல்லப்படுகிறது.ஆனால் இதையும் தாண்டி அவர்கள் வசிப்பதற்கு எவ்வளவு துறைகள் இருக்கின்றன. ஒரு பொழுதுபோக்கு வாசிப்பில் கூட இன்று நிறைய மாற்றங்கள் உருவாகி இருக்கிறது. எனவே நூலகர்களின் தேவை முன்னெப்போதையும் விட தற்போது தான் அதிகமாக இருக்கிறது.இன்னும் நிறைய நூலகங்கள் கிராம புற பகுதிகளில்; இளைஞர்களை வாசிப்பதற்கு ஒரு மையமாக இருக்கிறது. இன்னும் நிறைய புதிதாக சிந்திப்பதற்கு வாசிப்பு தான் மிக அடிப்படை.நூலகங்கள் என்பது எல்லோரும் வந்து வாசிப்பதற்கு உரிய இடமாக உருவாக்குவதில் நூலகரின் பங்கு மிக முக்கியம். பெண்கள், கல்லூரி மாணவர்கள் வாசிப்பதற்கு அதற்குரிய இடமாக உருவாக்குவதற்கு நூலகரின் பங்கு மிக முக்கியமானது. தற்போது நமது மாவட்டத்தில் மூன்றாவது புத்தகத் திருவிழா செப்டம்பர் மாதம் இறுதியில் நடைபெறஇருக்கிறது.இந்தபுத்தகத்திருவிழாவையொட்டி நூலகர்கள் அந்தந்த நூலகங்களில் இளைஞர்கள், பெண்கள் என அனைவரும் வந்து வாசிப்பதற்குரிய ஒரு இடமாக வாசிப்பு இயக்கமாக உருவாக்க வேண்டும்.இதனால் நூகலத்திற்கு வரக்கூடியவர்களின் எண்ணிக்கை அதிகமாகும். நூலகங்களை பொதுமக்கள் அதிகம் பயன்படுத்தினால் தான், புதிய நூல்கள் வாங்குவதற்கான தேவைகள் ஏற்படும். எனவே நூலகங்களை பொதுமக்கள் குறிப்பாக பெண்கள், குழந்தைகள், இளைஞர்கள் வாசிப்பதற்குரிய ஒரு இடமாக நூலகர்கள்; அவற்றை அங்கு உருவாக்குவதற்கு தொடர்ச்சியாக செயல்பட வேண்டும் என தெரிவித்தார்.இந்நிகழ்ச்சியில் சிவகாசி எஸ்.எப்.ஆர். மகளிர் கல்லூரி நூலகர் முனைவர் யாஸ்மின், மாவட்ட நூலக அலுவலர்(பொ) திரு.சுப்பிரமணியன், மாவட்ட நூலக கண்காணிப்பாளர் திரு.பழனிக்குமார் உட்பட நூலக பணியாளர்கள், நூலகர்கள் பலர் கலந்து கொண்டனர்.

Aug 13, 2024

நபார்டு வங்கி நிதி உதவியுடன் விருதுநகர் மாவட்ட மானவாரி நிலங்கள், தரிசு நிலங்கள் மேம்படுத்துதல் மற்றும் சிறுதானிய சாகுபடி திட்டம் மூலம் பல்வேறு நலத்திட்ட உதவிகள்

விருதுநகர் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் (12.08.2024) நபார்டு வங்கி நிதி உதவியுடன் விருதுநகர் மாவட்ட மானாவாரி நிலங்கள், தரிசு நிலங்கள் மேம்படுத்துதல் மற்றும் சிறுதானிய சாகுபடி திட்டம் மூலம் விவசாயிகளுக்கு சிறுதானிய விதைகள் மற்றும் நுண்ணூட்டசத்து, விதைநேர்த்தி உயிர் உரங்கள், ஊராட்சிகளுக்கு மரக்கன்றுகள், பெண்கள் கூட்டமைப்பு சுழல்நிதி மூலம் கடனுதவிகள், உழவர் உற்பத்தியாளர் நிறுவனத்திற்கு வேளாண் கருவிகள் வாங்குவதற்கான கடனுதவிகள் உள்ளிட்ட பல்வேறு நலத்திட்ட உதவிகளை மாவட்ட ஆட்சித்தலைவர் முனைவர் வீ.ப.ஜெயசீலன்,I A S., அவர்கள் வழங்கினார்.அதன்படி, 200 விவசாயிகளுக்கு குதிரைவாலி விதை மற்றும் நுண்ணூட்டசத்து, விதைநேர்த்தி உயிர் உரங்களையும்,  நபார்டு நீர்வடிப்பகுதி திட்டம் மூலம் ஊராட்சிகளுக்கு வரத்துக் கால்வாய் மற்றும் பொது இடங்களில் நடுவதற்கு வன மரக்கன்றுகளையும்,வடக்குபுளியம்பட்டி நபார்டு நீர்வடிப்பகுதி பெண்கள் கூட்டமைப்பு சுழல்நிதி மூலம் 3 பயனாளிகளுக்கு மொத்தம் ரூ.1.10 இலட்சம் மதிப்பில் கறவைமாடு மற்றும் வெள்ளாடு வளர்ப்புக்கான கடனுதவிகளையும்,பிள்ளையார் தொட்டியாங்குளம் நபார்டு நீர்வடிப்பகுதி பெண்கள் கூட்டமைப்பு சுழல்நிதி மூலம் 3 பயனாளிகளுக்கு மொத்தம் ரூ.1.50 இலட்சம் மதிப்பில் தையல் கடை மற்றும் வெள்ளாடு வளர்ப்புக்கான கடனுதவிகளையும்,எழுவாணி நபார்டு நீர்வடிப்பகுதி நெல் பயிர் விவசாயிகள் பயன் பெறும் வகையில் 2 பயனாளிகளுக்கு வரிசை நெல் நடவு இயந்திரங்களையும்,எருமைக்குளம் நபார்டு நீர்வடிப்பகுதி சார்பாக எழுவாணி பசுமை உழவர் உற்பத்தியாளர் நிறுவனத்திற்கு வேளாண் கருவிகள் வாங்குவதற்கு ரூ.1 இலட்சம் நிதியுதவியினையும்,SEEDS – Syncom Agri Tech Ltd சார்பில் காரியாபட்டி, திருச்சுழி வட்டங்களில் உள்ள 20 கிராமங்களில் 368 விவசாயிகளின் நிலத்தில் 800 ஏக்கர் பரப்பளவில் இயற்கை முறையில் பருத்தி விவசாயம் சாகுபடி செய்யும் 5 விவசாயிகளுக்கு இடுபொருட்களையும் மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் வழங்கினார்.

Aug 13, 2024

சமுதாயம் சார்ந்த அமைப்புகளில் 15.08.2024 அன்று ஆண்டு பொதுக் குழு கூட்டம் நடத்த வேண்டும் என மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் தகவல்

 விருதுநகர் மாவட்டம், தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்கத்தின் கீழ் செயல்பட்டு வரும் சமுதாயம் சார்ந்த அமைப்புகளான சுய உதவிக்குழுக்கள், ஊராட்சி அளவிலான கூட்டமைப்புகள், கிராம வறுமை ஒழிப்புச் சங்கங்கள் மற்றும் வட்டார அளவிலான கூட்டமைப்புகளில்   மேற்கொள்ளப்பட்டு வரும் தகுதியுடைய மகளிரைக் கொண்டு குழு அமைத்தல், உரிய காலத்தில் கடன் மதிப்பீடு செய்து கடன் பெற்றுத் தருதல், தகுதியான குழுக்களுக்கு சமுதாய முதலீட்டு நிதிஃசுழல் நிதி பெற்றுத் தருதல், திறன் வளர்ச்சிக்கு திட்டமிடுதல், குழுக்களிடையே வருவாய் பெருக்கும் செயல்பாடுகளை ஏற்படுத்துதல் ஆகிய திட்டப்பணிகள் முன்னேற்றம் குறித்து  எதிர்வரும் 15.08.2024 அன்று முற்பகல் 11.00 மணியளவில் இந்திய சுதந்திர தினத்தன்று ஆண்டு பொதுக் குழு கூட்டத்தினை உரிய முறையில் நடத்தி தீர்மானம் இயற்ற வேண்டும் என மாவட்ட ஆட்சித்தலைவர் முனைவர் வீ.ப.ஜெயசீலன்,I A S., அவர்கள் தெரிவித்துள்ளார்.

1 2 ... 35 36 37 38 39 40 41 ... 74 75

AD's



More News