கால்நடைகளின் உற்பத்தி திறனுக்கு தீவனம் மற்றும் பசுந்தீவனம் மிக முக்கியமாகும். பண்ணை செலவினத்தில் 70 சதவீதம் கால்நடைகளுக்கான தீவன செலவாகும். உற்பத்தி செலவினை குறைத்து, குறைந்த முதலீட்டில் அதிக லாபம் ஈட்டுவதற்கு , தீவனம் விரயம் ஆகுதலை குறைப்பது முக்கியமான ஒன்றாகும். கால்நடைகள் தீவனங்களை வீண் செய்வதை தவிர்க்க, தீவனங்களை சிறு துண்டுகளாக நறுக்கி வழங்குவதற்கு, 2025-26-ஆம் ஆண்டு தீவன அபிவிருத்தி திட்டத்தின் கீழ் மின்சாரத்தினால் இயங்கும் புல்வெட்டும் கருவிகள், தமிழக அரசினால் 50 சதவீத மானியத்தில், 50 பயனாளிகளுக்கு விருதுநகர் மாவட்டத்தில் வழங்கப்படவுள்ளது.இத்திட்டத்தில் பயன் பெறுவதற்கு, குறைந்த பட்சம் 2 கறவைப் பசுக்கள் வைத்திருக்க வேண்டும். மின்சார வசதி கொண்ட இறவையில் தீவன சாகுபடி செய்கூடிய வாறு, குறைந்த பட்சம் ½ ஏக்கர் நிலம் வைத்திருக்க வேண்டும். கடந்த 10 ஆண்டுகளில் இதுபோன்ற திட்டங்களில் பயனாளியாக பயன்பெற்று இருத்தல் கூடாது. சிறு குறு மற்றும் பெண் விவசாயிகள், ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் விவசாயிகளுக்கு முன்னுரிமை வழங்கப்படும்.இத்திட்டத்தில் பயன்பெற விரும்பும் விவசாயிகள் தங்களுக்கு அருகில் உள்ள கால்நடை மருந்தக, கால்நடை உதவி மருத்துவரை அணுகி தங்களிடம் உள்ள கால்நடை விபரம், தீவன சாகுபடி விபரம், நில சர்வே எண் மற்றும் ஆதார் அட்டை நகலுடன் கூடிய விண்ணப்பத்தினை சமர்பித்து பயன்படுத்திக்கொள்ளலாம் என மாவட்ட ஆட்சித்தலைவர் மரு.என்.ஓ.சுகபுத்ரா,I A S., அவர்கள் தெரிவித்துள்ளார்.
முதலமைச்சரின் தாயுமானவர் திட்டத்தின் கீழ், 2025-26 ஆம் ஆண்டில் தெரிவு செய்யப்பட்ட ஊராட்சிய ஒன்றியங்களில் ஏழ்மை நிலையிலுள்ள, சினையுற்ற கறவை பசுக்கள் வைத்துள்ள விவசாயிகளுக்கு 50 சதவீத மானியத்தில் சினையுற்ற கறவை பசுக்களுக்கு ஊட்டச் சத்து வழங்கும் திட்டத்தின் மூலம் சுமார் 5000 கால்நடை வளர்க்கும் விவசாயிகளை மேம்படுத்திட தமிழக அரசால் திட்டம் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.மேற்படி, நிர்ணயம் செய்யப்பட்டுள்ள திட்டத்தில் விருதுநகர் மாவட்டத்திலுள்ள திருச்சுழி மற்றும் நரிக்குடி (Focus block) ஊராட்சி ஒன்றியத்திற்கு திட்டக்குறியீடு நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. ஒரு ஊராட்சி ஒன்றியத்திற்கு தலா 100 விவசாயிகள் வீதம் இரண்டு ஊராட்சி ஒன்றியத்திற்கு 200 விவசாயிகள் இத்திட்டத்தில் பயன்பெறலாம். எனவே இத்திட்டத்தின் மூலம் திருச்சுழி மற்றும் நரிக்குடி (Focus block) ஊராட்சி ஒன்றியத்தில் மாண்புமிகு முதலமைச்சரின் தாயுமானவர் திட்டத்தில் உள்ள விவசாயிகள் சினையுற்ற கறவை பசுக்கள் வைத்திருப்பின் 50 சதவீத மானியத்தில் ஊட்டச் சத்து பெற்று பயனடையலாம். இதன் மூலம் கறவை பசுக்களின் பால் உற்பத்தியினை அதிகரிக்கச் செய்து, விவசாயிகளின் பொருளாதாரத்தை மேம்படுத்த இயலும் .கறவை பசுக்களுக்கு வழங்கப்படும் ஊட்டச் சத்துக்கள் TANUVAS / AIRLIVAS / AAVIN மூலம் பெற்று வழங்கப்படும் . ஒரு சினையுற்ற கறவை பசுவிற்கு ஒரு நாளைக்கு 3 கிலோ ஊட்டச்சத்து வீதம் 4 மாதங்களுக்கு (120 நாட்களுக்கு) 360 கிலோ ஊட்டச்சத்து 50 சதவீத மானியத்தில் வழங்கப்படும் . 1 கிலோ ஊட்டச்சத்து ரூ.35 (360 கிலோ X 35=12,600) ஓரு சினையுற்ற கறவை பசுவிற்கு ஒரு மாதத்திற்கு 1 கிலோ தாது உப்பு கலவை மற்றும் வைட்டமின் சப்ளிமன்ட்ஸ் வீதம் 4 மாதங்களுக்கு (120 நாட்களுக்கு) 4 கிலோ தாது உப்பு கலவை மற்றும் வைட்டமின் சப்ளிமன்ட்ஸ் 50 சதவீத மானியத்தில் வழங்கப்படும் .1 கிலோ ஊட்டச்சத்து ரூ.100 (4 கிலோ X 100 =400) ஒரு சினையுற்ற கறவை பசுவிற்கு 360 கிலோ ஊட்டச்சத்து மற்றும் 4 கிலோ தாது உப்பு கலவை மற்றும் வைட்டமின் சப்ளிமன்ட்ஸ் 50 சதவீத மானியத்தில் வழங்கப்படும். இதில் அரசின் மானியத்தொகை ரூ.6500 + பயனாளியின் பங்குத் தொகை ரூ.6500 ஆகும் இத்திட்டத்தில் பயன்பெற பின்வரும் தகுதி உள்ள பயனாளிகள் விண்ணப்பிக்கலாம் . இத்திட்டத்தில் பயன்பெற விரும்பும் விவசாயிகள், 2025-26 ஆம் ஆண்டில் மாண்புமிகு முதலமைச்சரின் தாயுமானவர் திட்டத்தில் கீழ் தெரிவு செய்யப்பட்ட ஊராட்சி ஒன்றியங்களிலுள்ள விவசாயிகளாக இருக்க வேண்டும் . ( விருதுநகர் மாவட்டத்தில் நரிக்குடி மற்றும் திருச்சுழி ஊராட்சி ஒன்றியங்களிலுள்ள விவசாயிகள் பயன்பெறலாம் .) திட்டத்தில் பயன்பெற விரும்பும் பயனாளி சொந்தமாக கறவை பசு வைத்திருக்க வேண்டும் . பயனாளிகள் மாவட்ட தமிழ்நாடு பால் உற்பத்தியாளர் கூட்டுறவு சங்கத்தின் உறுப்பினராக இருக்க வேண்டும் . மேலும் உள்ளுரில் உள்ள பால் கூட்டுறவு சங்கத்திற்கு மட்டுமே தங்களது மாடுகளிலிருந்து பெறப்படும் பாலினை அளிக்க வேண்டும்.பெண் பயனாளிகள் / ஆதரவற்ற விதவைகள் / மாற்றுத்திறனாளிகள் / ஏற்கனவே உறுப்பினராக உள்ள பால் உற்பத்தியாளர்கள் / பட்டியலினம் / பழங்குடியினர் இவர்களுக்கு முன் உரிமை அளிக்கப்படும். இத்திட்டத்தில் பயன்பெற விரும்பும் பயனாளிகள், திட்டம் தொடர்பாக, தங்கள் அருகில் உள்ள கால்நடை மருந்தக, கால்நடை உதவி மருத்துவரை அணுகி திட்டம் தொடர்பாக மேலும் விரிவான விபரங்களை தெரிந்து கொள்ளலாம். மேலும் பால் உற்பத்தியாளர்கள் கூட்டுறவு சங்கத்தின் மூலமாகவும் விண்ணப்பிக்கலாம் .எனவே, விருதுநகர் மாவட்டத்திலுள்ள நரிக்குடி மற்றும் திருச்சுழி ஊராட்சி ஒன்றியத்திலுள்ள கால்நடை வளர்ப்போர் இத்திட்டத்தின் மூலம் பயன் பெறலாம் என மாவட்ட ஆட்சித்தலைவர் மரு.என்.ஓ.சுகபுத்ரா,I A S, அவர்கள் தெரிவித்துள்ளார்.
விருதுநகர் மாவட்டம், விருதுநகர், அருப்புக்கோட்டை, திருச்சுழி மற்றும் நரிக்குடி ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட பல்வேறு பகுதிகளில் நடைபெற்று வரும் வளர்ச்சிப் பணிகள் குறித்து மாவட்ட ஆட்சித்தலைவர் மரு.என்.ஓ.சுகபுத்ரா, I A S., அவர்கள் (30.07.2025) நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு செய்து, அரசின் மூலம் செயல்படுத்தப்பட்டு வரும் பல்வேறு அரசு திட்டப்பணிகள் மற்றும் நலத்திட்டங்களின் பயன்கள், கருத்துக்கள் குறித்து பயனாளிகளிடம் கலந்துரையாடினார்.அதன்படி, விருதுநகர் மாவட்டம், சூலக்கரையில் உள்ள ஆயுதப்படை மைதான சாலையினை மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் நேரில் சென்று ஆய்வு மேற்கொண்டார்.அதனை தொடர்ந்து, அருப்புக்கோட்டை வட்டம், ஆவியூர் - பந்தல்குடி தேசிய நெடுஞ்சாலை பாளையம்பட்டி விலக்கு பகுதிகளில் உள்ள புறவழிச் சாலை பிரிவு வரும் இடங்களில் வாகனங்களுக்கு வழிகாட்டி பதாகைகள், மிளிரும் ஸ்டிக்கர்கள், பாதுகாப்பு வசதிகள் உள்ளிட்டவைகள் அமைப்பது குறித்து தொடர்புடைய அரசு அலுவலர்களுக்கு அறிவுரைகள் மற்றும் ஆலோசனைகளை வழங்கினார்.பின்னர், திருச்சுழி ஊராட்சி ஒன்றியம், சேதுபதி அரசு தொடக்கப்பள்ளியினை மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் நேரில் சென்று பார்வையிட்டு, தொடக்கப்பள்ளி மாணவர்களுக்கு கற்றல், கற்பித்தல், வாசிப்பு திறன் குறித்து கேட்டறிந்து ஆய்வு செய்தார்.திருச்சுழியில் உள்ள அங்கன்வாடி மையத்தினை மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் நேரில் சென்று பார்வையிட்டு, அங்கு பயிலும் மாணவர்களின் எண்ணிக்கை, குழந்தைகளுக்கு வழங்கப்படும் ஊட்டச்சத்து பொருட்களின் தரம் குறிந்து பணியாளர்களிடம் கேட்டறிந்து ஆய்வு செய்தார். திருச்சுழியில் கால்நடை மருந்தகத்தினை மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் நேரில் சென்று பார்வையிட்டு, பயன்பெறும் கால்நடைகளின் எண்ணிக்கை, மருந்துகளின் இருப்பு, மருத்துவர்களின் பணி நேரம் குறித்து ஆய்வு மேற்கொண்டார்.மேலும், திருச்சுழி ஊராட்சி ஒன்றியம், உடையனம்பட்டி கிராமத்தில் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதித்திட்டத்தின் கீழ் ரூ.9.70 இலட்சம் மதிப்பில் புதிதாக கட்டப்பட்டு வரும் நியாய விலைக் கடையினை மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு செய்தார்.திருச்சுழி ஊராட்சி ஒன்றியம், உடையனம்பட்டி கிராமத்தில் ரூ.3.50 இலட்சம் மானியத்தில் புதிதாக கட்டப்பட்டு வரும் கலைஞர் கனவு இல்ல கட்டுமான பணியை பார்வையிட்டு ஆய்வு செய்தார்.மேலும், நரிக்குடி ஊராட்சி ஒன்றியம், முத்தநேரி கிராமத்தைச் சேர்ந்தவர் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் இலவச வீட்டு மனை பட்டா வேண்டி மனு அளித்தததின்பேரில் பயனாளிக்கு இலவச வீட்டு மனை பட்டாவினை பயனாளியின் வீட்டிற்கே நேரில் சென்று மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் வழங்கினார்.திருச்சுழி ஊராட்சி ஒன்றியம், தமிழ்பாடி ஊராட்சியில் மகாத்மா காந்தி தேசிய வேலை உறுதித் திட்டத்தின் கீழ் குளத்தின் கரைகளில் மரக்கன்றுகள் நடப்பட்டு வருவதையும்,திருச்சுழி ஊராட்சி ஒன்றியம், குலசேகர நல்லூர் ஊராட்சியில், வனத்துறை சார்பில், அமைக்கப்பட்டுள்ள மத்திய நாற்றாங்கால் பண்ணையில் நர்சரி மரக்கன்றுகள் உருவாக்கப்பட்டு வருவதை மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு செய்தார்.மேலும், திருச்சுழி ஊராட்சி ஒன்றியம் குலசேகர நல்லூர் ஊராட்சி மன்ற அலுவலகத்தினை பார்வையிட்டு அங்கு மேற்கொள்ளப்படும் பணிகள், பதிவேடுகள், கோப்புகள் குறித்து ஆய்வு மேற்கொண்டார்.பின்னர், விருதுநகர் ஊராட்சி ஒன்றியம், ரோசல்பட்டி கிராமத்தில் நடைபெற்று வரும்; உங்களுடன் ஸ்டாலின் முகாமில் வரப்பெற்ற மனுக்கள் குறித்தும், உடனடியாக தீர்வு காணப்பட்ட மனுக்கள் குறித்தும், கலைஞர் மகளிர் உரிமை தொகை தொடர்பாக பெறப்பட்ட மனுக்கள் குறித்தும் கேட்டறிந்து பல்வேறு துறை சார்ந்து பெறப்படும் மனுக்களுக்கு உரிய நாட்களுக்குள் தீர்வு காணுவதற்கு தொடர்புடைய அலுவலர்களை அறிவுறுத்தினார்.மேலும், நடைபெற்று வரும் பணிகளை விரைவாகவும், தரமானதாகவும் முடித்து பொதுமக்களின் பயன்பாட்டிற்கு கொண்டுவர வேண்டுமென தொடர்புடைய அரசு அலுவலர்களை மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் அறிவுறுத்தினார்.இந்த ஆய்வின் போது, மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.தெ.கண்ணன்.,த.கா.ப., அவர்கள், வட்டார வளர்ச்சி அலுவலர்கள், உதவி பொறியாளர்கள் மற்றும் அரசு அலுவலர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.
தமிழ்நாட்டில் மாற்றுத்திறனாளிகளின் மேம்பாட்டிற்காக அரசின் சார்பில் பல்வேறு நலத்திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகின்றன. இந்த நலத்திட்டங்கள் மாற்றுத்திறனாளிகளின் இல்லத்திற்கே சென்று சேரும் வகையில் உலக வங்கி நிதியுடன் தமிழ்நாடு உரிமைகள் திட்டம் செயல்படுத்தப்பட்டுவருகிறது.இந்நிலையில் நமது மாவட்டத்தில் இல்லந்தோறும் சென்று அனைத்து வகை மாற்றுத்திறனாளிகளையும் கண்டறிந்து அவர்களது முழு விவரங்கள் அடங்கிய சமூக தரவு தளத்தை உருவாக்க மேற்கொள்ளப்பட்டுள்ளது.இதற்காக மாவட்டத்தில் அனைத்து பகுதிகளிலும் நகர்ப்புறம் மற்றும் ஊரகப் பகுதிகளில் முன் களப்பணியாளர்கள் மூலம் வீடுவீடாக சென்று கணக்கெடுப்பு நடத்தி மாற்றுத்திறனாளிகள் குறித்த விவரங்களை சேகரிக்கும் பணி நடைபெறவுள்ளது.கணக்கெடுப்பிற்காக ஏற்கனவே தேர்வு செய்யப்பட்ட சமூகசேவை வழங்கும் நிறுவனங்கள் (CSP’s) மூலம் முன் களப்பணியாளர்கள் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.இந்தகணக்கெடுப்புப் பணி ஜுன் 2-ஆம் தேதி முதல் துவங்கி வருகிற ஆகஸ்டு மாத இறுதிக்குள் நடத்தி முடிக்க திட்டமிடப்பட்டுள்ளது.எனவே, மாற்றுத்திறனாளிகள் நலத்துறை சார்பில் நடத்தப்படும் இக்கணக்கெடுப்பிற்காக தங்கள் வீடுகளுக்கு வரும் முன் களப்பணியர்களுக்கு பொதுமக்கள் அனைவரும் தகுந்த ஒத்துழைப்பு அளித்து கணக்கெடுப்பு பணிசிறப்பாக நடைபெற உதவுமாறு மாவட்ட ஆட்சித்தலைவர் மரு.என்.ஓ.சுகபுத்ரா,I A S., அவர்கள் கேட்டுக்கொண்டுள்ளார்.
தமிழ்நாடு ஆதிதிராவிடர் வீட்டுவசதி மற்றும் மேம்பாட்டுக்கழகம் (தாட்கோ) மூலமாக ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின இனத்தை சார்ந்த இளைஞர்களுக்கு பல்வேறு திறன் அடிப்படையிலான பயிற்சி திட்டங்களை வழங்கப்பட்டு வருகிறது. இதன் தொடர்ச்சியாக தற்போது தாட்கோ மற்றும் தனியார் நிறுவனத்துடன் இணைந்து ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின இளைஞர்களுக்கு அழகுக்கலை மற்றும் சிகை அலங்கார (Cosmetology & Hair Dressing Courses) பயிற்சி வழங்கப்படவுள்ளது.இப்பயிற்சியினை பெற ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின இனத்தை சார்ந்த எட்டாம் வகுப்பு முதல் பனிரெண்டாம் வகுப்பு வரை படித்தவராக இருக்க வேண்டும். 18 முதல் 35 வயது வரை உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம். குடும்ப வருமானம் ஆண்டிற்கு ரூ.3.00 இலட்சத்திற்குள் இருக்க வேண்டும்.இப்பயிற்சிக்கான கால அளவு 45 நாட்கள் ஆகும். மேலும் சென்னையில் தங்கி படிக்கும் வசதியும் இப்பயிற்சியினை முழுமையாக முடிக்கும் இளைஞர்களுக்கு இந்திய தேசிய திறன் மேம்பாட்டு நிறுவனத்தால் NSDI (National Skill Development of India) அங்கீகரிக்கப்பட்ட தரச்சான்றிதழ் வழங்கப்படும். இப்பயிற்சியினை வெற்றிகரமாக முடிக்கும் இளைஞர்களுக்கு தனியார் அழகு நிலையங்களில் பணிபுரிய வேலை வாய்ப்பு வழங்கி ஆரம்ப கால மாத சம்பளமாக ரூ.10,000/- முதல் ரூ.20,000/- வரை பெறலாம். இப்பயிற்சியினை பெற தாட்கோ இணையதளமான (www.tahdco.com) என்ற முகவரியில் விண்ணப்பிக்கலாம். தங்கும் விடுதி, உணவு உட்பட செலவினம் தாட்கோ மூலமாக வழங்கப்படும். தகுதியுடைய விண்ணப்பதாரர்கள் பதிவு செய்து இவ்வாய்ப்பினை பயன்படுத்திக்கொள்ளலாம் என மாவட்ட ஆட்சித்தலைவர் மரு.என்.ஓ.சுகபுத்ரா, I A S., அவர்கள் தெரிவித்துள்ளார்.
தமிழ்நாடு ஆதிதிராவிடர் வீட்டு வசதி மற்றும் மேம்பாட்டுக்கழகம் (தாட்கோ) மூலமாக ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் சார்ந்தவர்களுக்கு பல்வேறு திறன் அடிப்படையிலான பயிற்சி திட்டங்களை வழங்கி வருகிறது. அதன் அடிப்படையில் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் சார்ந்தவர்களுக்கு ஜெர்மன் மொழி தேர்வுக்கான பயிற்சி (German Language Test Training) அளிக்கப்படவுள்ளது.இதற்கான தகுதிகள் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் சார்ந்தவராக இருக்க வேண்டும். இப்பயிற்சிக்கு பி.எஸ்.சி நர்சிங் (B.Sc Nursing), பொது நர்சிங் மற்றும் (GNM Diploma) ஆகிய படிப்புகளில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். மேலும் வயது வரம்பு 21 முதல் 35 வயதிற்குள்ளும். குடும்ப வருமானம் ஆண்டிற்கு ரூ.3.00 இலட்சத்திற்குள் இருக்க வேண்டும். இப்பயிற்சிக்காக கால அளவு ஒன்பது மாதமும் மேலும் விடுதியில் தங்கி படிப்பதற்கான செலவினத் தொகை தாட்கோவால் வழங்கப்படும். இப்பயிற்சி முடித்தவுடன் தகுதியான நபர்களை பயிற்சி அளிக்கும் நிறுவனத்தின் மூலமாக தேர்வு செய்து அந்நிறுவனத்தின் சார்பாக ஜெர்மனி நாட்டில் பணிபுரிய ஆரம்ப கால மாத ஊதியமாக ரூ.2,50,000- முதல் ரூ.3,00,000- வரை வருவாய் ஈட்ட வேலை வாய்ப்பு ஏற்படுத்தி தரப்படும்.இப்பயிற்சியில் சேருவதற்கு தாட்கோ இணையதளம் www.tahdco.com என்ற முகவரியில் பதிவு செய்ய வேண்டும். தகுதியுடைய விண்ணப்பதாரர்கள் பதிவு செய்து இவ்வாய்ப்பினை பயன்படுத்திக்கொள்ளலாம் என மாவட்ட ஆட்சித்தலைவர் மரு.என்.ஓ.சுகபுத்ரா,I A S.,அவர்கள் தெரிவித்துள்ளார்.
விருநகர் மாவட்ட ஆட்சியர் அலுவலகக் கூட்டரங்கில் (29.07.2025) ஊரக வளர்ச்சி துறை அலுவலர்களுக்கான பணித்திறன் ஆய்வுக்கூட்டம் மாவட்ட ஆட்சித்தலைவர் மரு.என்.ஓ.சுகபுத்ரா, I A S., அவர்கள் தலைமையில் நடைபெற்றது.
விருதுநகர் மாவட்டம், சாத்தூர் நகராட்சியில் நடைபெற்று வரும் பல்வேறு வளர்ச்சிப் பணிகள் குறித்து மாவட்ட ஆட்சித்தலைவர் மரு.என்.ஓ.சுகபுத்ரா,I A S., அவர்கள் (29.07.2025) நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு செய்து, அரசின் மூலம் செயல்படுத்தப்பட்டு வரும் பல்வேறு அரசு திட்டப்பணிகள் மற்றும் நலத்திட்டங்களின் பயன்கள், கருத்துக்கள் குறித்து பயனாளிகளிடம் கலந்துரையாடினார்.அதன்படி, சாத்தூர் நகராட்சியில் புதிதாக பேருந்து நிலையம் அமையவுள்ள இடத்தினை மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு செய்தார்.அதனை தொடர்ந்து, சாத்தூர் நகராட்சி, மேலகாந்திநகர் தொடக்கப்பள்ளியில் முதலமைச்சரின் காலை உணவுத் திட்டத்தின் செயல்பாடுகள் குறித்து, மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் பார்வையிட்டு, அங்கு மாணவர்களுக்கு வழங்கப்படும் உணவின் தரம் குறித்தும், உணவு தயாரிப்பதற்காக பயன்படுத்தப்படும் பொருட்களின் தரம் குறித்தும், தொடக்கப்பள்ளி மாணவர்களுக்கு கற்றல், கற்பித்தல் நடைபெற்று வருவதையும் ஆய்வு செய்தார்.மேலும், சாத்தூர் நகராட்சியில், முதலமைச்சரின் காலை உணவுத் திட்டம் மூலம் உணவு தயாரிக்க புதியதாக அமையவுள்ள சமையல் கூடத்தினை பார்வையிட்டு, அடிப்படை வசதிகள் குறித்து ஆய்வு செய்தார்.பின்னர், சாத்தூர் நகராட்சி அலுவலகத்தினை மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் நேரில் சென்று பார்வையிட்டு, பதிவேடுகள், கோப்புகள், பெறப்பட்டுள்ள மனுக்கள், திடக்கழிவு மேலாண்மை உள்ளிட்டவை குறித்து ஆய்வு மேற்கொண்டு, நிலுவையில் உள்ள மனுக்கள் மற்றும் பொதுமக்களிடமிருந்து பெறப்படும் மனுக்களை விரைந்து பரிசீலனை செய்து தீர்வு வழங்க தொடர்புடைய அரசு அலுவலர்களுக்கு அறிவுரை மற்றும் ஆலோசனைகளை வழங்கினார்.மேலும், சாத்தூர் நகராட்சியில் மின் மயானம் புதிதாக அமைக்கப்பட்டு வருவதை பார்வையிட்டு ஆய்வு செய்தார்.மேலும், இருக்கன்குடி அணையினை நேரில் சென்று பார்வையிட்டு, அணையின் கொள்ளளவு, தற்போதைய நீர் இருப்பு, பயன்பெறும் பாசன நிலங்கள், வரத்து கால்வாய்கள் உள்ளிட்டவை குறித்து கேட்டறிந்து ஆய்வு செய்தார்.பின்னர், சாத்தூர் இருக்கன்குடி செல்லும் வழியில் உள்ள ஆட்டுப்பண்ணையினை பார்வையிட்டு, அதன் செயல்பாடுகள், அங்கு ஆடுகள் வளர்த்தல் விதம் குறித்து கேட்டறிந்து, அங்கு மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் மரக்கன்றுகளை நட்டு வைத்தார்.மேலும், சாத்தூர் வருவாய் கோட்டாட்சியர் அலுவலகத்தினை பார்வையிட்டு ஆய்வு செய்து, இலவச வீட்டுமனை பட்டா பெற்ற பயனாளிகள் கிராம கணக்கு பதிவேட்டில் சேர்க்க வேண்டி மாண்புமிகு அமைச்சர் பெருமக்கள் அவர்கள் மற்றும் மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்களிடம் நேரில் மனு அளித்ததன் பேரில், அவர்கள் கோரிக்கையினை பரிசீலனை செய்து 15 நாட்களுக்குள் இணைய வழியில் பட்டா பதிவேற்றம் செய்து, இ.குமாரலிங்காபுரம் கிராமத்தைச் சேர்ந்த 4 பயனாளிகளுக்கும், சூரங்குடி கிராமத்தைச் சேர்ந்த 1 பயனாளிக்கும் என 5 பயனாளிகளுக்கு இலவச வீட்டுமனை பட்டா ஆணையினை மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் வழங்கினார்.இந்த ஆய்வின் போது, அரசு திட்டங்கள் மற்றும் பயன்கள் உரிய பயனாளிகளுக்கு சென்றடைய அரசு அலுவலர்களுக்கு மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் அறிவுரை மற்றும் ஆலோசனைகளை வழங்கினார்.இந்த ஆய்வின் போது, சாத்தூர் வருவாய் கோட்டாட்சியர் திரு.கனகராஜ், சாத்தூர் வட்டாட்சியர், சாத்தூர் நகராட்சி ஆணையர், வட்டார வளர்ச்சி அலுவலர்கள், உதவி பொறியாளர்கள் மற்றும் அரசு அலுவலர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.
தமிழ்நாட்டில் சொந்த கட்டடங்களில் இயங்கும் கிறித்தவ தேவாலயங்களை பழுதுபார்த்தல் மற்றும் புனரமைத்தல் பணிகள் மேற்கொள்ள மானியத்தொகை வழங்கும் திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. தேவாலயங்கள் 10 ஆண்டுகளுக்கு மேலாக சொந்த கட்டடத்தில் இயங்கியிருக்க வேண்டும். தேவாலயத்திற்காக வெளிநாட்டிலிருந்து எவ்வித நிதி உதவியும் வாங்கியிருக்க கூடாது. அவ்வாறு ஒரு தேவாலயத்திற்கு மானியத்த தொகை வழங்கி பின்னர் 5 வருடத்திற்கு அத்தேவாலயம் இம்மானியத்தொகை வேண்டி விண்ணப்பிக்க தகுதியற்றது.மேற்படி, திட்டத்தின் கீழ் பின்வரும் கூடுதல் பணிகள் மேற்கொள்ளவும் கட்டடத்தின் வயதிற்கேற்ப மானியத் தொகை உயர்த்தியும் அரசு ஆணையிட்டுள்ளது.கூடுதலாக மேற்கொள்ள அனுமதி அளிக்கப்பட்டுள்ள பணிகள் விவரம் ,தேவாலயங்களில் பீடம் கட்டுதல் (Construction of Pedestal in Churches), கழிவறை வசதி அமைத்தல் (Construction of Toilet facilities),குடிநீர் வசதிகள் உருவாக்குதல் (Creation of Drinking Water facilities), சுவிசேஷம் வாசிக்கும் ஸ்டாண்ட், மைக்செட் (ம) ஒலிப்பெருக்கி, நற்கருணை பேழை பீடம், திருப்பலிக்கு தேவையான கதிர் பாத்திரங்கள், சுரூபங்கள், மெழுகுவர்த்தி ஸ்டான்ட்கள் (ம) பக்தர்கள் அமர்ந்து முழங்காலிட்டு இருக்க தேவையான பெஞ்சுகள் போன்ற ஆலயங்களுக்கு தேவையான உபகரணங்கள், தேவாலயத்திற்கு சுற்றுச்சுவர் வசதி அமைத்தல் ,தேவாலய கட்டடத்தின் வயதிற்கேற்ப உயர்த்தப்பட்டுள்ள மானிய தொகை விவரம்:1. 10-15 வருடம் வரை இருப்பின் தற்போது வழங்கப்படும் மானியம் ரூ.10 இலட்சமாக உயர்த்தப்பட்டுள்ளது.2. 15-20 வருடம் வரை இருப்பின் தற்போது வழங்கப்படும் மானியம் ரூ.15 இலட்சமாக உயர்த்தப்பட்டுள்ளது.3. 20 வருடங்களுக்கு மேலிருப்பின் தற்போது வழங்கப்படும் மானியம் ரூ.20 இலட்சமாக உயர்த்தப்பட்டுள்ளது.இத்திட்டத்தின் கீழ் விண்ணப்பிக்க மாவட்ட ஆட்சியர் வளாகத்தில் உள்ள மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நல அலுவலகத்தை அணுகி விவரம் அறிந்து கொள்ளலாம் என மாவட்ட ஆட்சித்தலைவர் மரு.என்.ஓ.சுகபுத்ரா,I A S., அவர்கள் தெரிவித்துள்ளார்.
விருதுநகர் மாவட்டம், திருவில்லிபுத்தூர் மற்றும் இராஜபாளையம் ஊராட்சி ஒன்றியப் பகுதிகளில் தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்கம் (மகளிர் திட்டம்) மூலம் நடைபெற்று வரும் பல்வேறு வளர்ச்சி திட்டப்பணிகள் குறித்து மாவட்ட ஆட்சித்தலைவர் மரு.என்.ஓ.சுகபுத்ரா,I A S., அவர்கள் (28.07.2025) நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு செய்து, அரசின் மூலம் மகளிர்களுக்காக செயல்படுத்தப்பட்டு வரும் பல்வேறு அரசு திட்டப்பணிகள் மற்றும் நலத்திட்டங்களின் பயன்கள், கருத்துக்கள் குறித்து பயனாளிகளிடம் கலந்துரையாடினார்.அதன்படி, திருவில்லிபுத்தூர் ஊராட்சி ஒன்றியம், பிள்ளையார்குளம் ஊராட்சியில், மகளிர் சுய உதவிக்குழுவின் மூலம் பால்கோவா தயாரித்து விற்பனை செய்து வருவதை மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் பார்வையிட்டு சுய உதவிக்குழு பெண்களிடம் கலந்துரையாடினார்.பின்னர், பிள்ளையார் குளம் ஊராட்சியில், சமூக முதலீட்டு நிதியிலிருந்து ரூ.50,000/- கடனுதவி பெற்று தேநீர் கடை நடத்தி வரும் மகளிர் சுய உதவிக்குழுவினரிடம் கலந்துரையாடினார் .பின்னர், இராமச்சந்திராபுரம் ஊராட்சியில், பழைய செங்குளம் கிராமத்தில் சுமார் 25 மகளிர் சுய உதவிக்குழு பெண்களிடம் மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் கலந்துரையாடினார்.அதனை தொடர்ந்து, இராமச்சந்திராபுரம் ஊராட்சியில், சமுதாய திறன் பள்ளியில் பயிற்சி பெற்று, வட்டார வணிக நலன் நிறுவனத்திடம் இருந்து ரூ.50,000/- கடனுதவி பெற்று போட்டோ ஸ்டூடியோ நடத்தி வரும் மகளிர் சுய உதவிக்குழுவினரை நேரில் சென்று பார்வையிட்டு, கலந்துரையாடினார்.பின்னர், இராஜபாளையம் ஊராட்சி ஒன்றியத்தில், கரிசல்காடு விவசாய உற்பத்தியாளர் நிறுவனத்தினை நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு செய்தார்.பின்னர், இராஜபாளையம் நகராட்சியில், நாய் அறுவை சிகிச்சை மையத்தினை பார்வையிட்டு ஆய்வு செய்தார்.அதனை தொடர்ந்து, இராஜபாளையம் பழைய ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் வட்டார போக்குவரத்து அலுவலகத்தினை செயல்படுத்துவது குறித்து மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு செய்தார்.இந்த ஆய்வின் போது, திட்ட இயக்குநர் (தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்கம்) திரு.ஜார்ஜ் ஆண்டனி மைக்கேல், வட்டார வளர்ச்சி அலுவலர்கள் மற்றும் அரசு அலுவலர்கள் உட்பட பலர் இருந்தனர்.