விருதுநகர் மாவட்டத்தை சார்ந்த முன்னாள் படைவீரர்கள் / படைவீரர்களை சார்ந்தோர்கள் அறிவது. முன்னாள் படைவீரர்களுக்கான ஓய்வூதியம் தொடர்பான (Sparsh Outreach programme - Mobile van) குறைகளை நிவர்த்தி செய்வது தொடர்பான முகாம் 01.07.2025 மற்றும் 02.07.2025 ஆகிய நாட்களில் விருதுநகர் மாவட்ட ஆட்சியர் வளாகத்தில் உள்ள கூட்டஅரங்கில் நடைபெற உள்ளது. முன்னாள் படைவீரர்கள் / படைவீரர்களை சார்ந்தோர்கள் இம்முகாமில் கலந்து கொண்டு ஓய்வூதியம் தொடர்பான குறைகளை நிவர்த்தி செய்து கொள்ளுமாறு விருதுநகர் மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் தெரிவித்துள்ளார்.
விருதுநகர் மாவட்டம், சாத்தூர் நகராட்சி, வெம்பக்கோட்டை சாலையில் (25.06.2025) கலைஞர் மேம்பாட்டுத்திட்டம் 2025-2026-ன் கீழ், ரூ.6.79 கோடி மதிப்பீட்டில் சாத்தூர் புதிய பேருந்து நிலையம் அமைப்பதற்கு மாவட்ட ஆட்சித்தலைவர் முனைவர் வீ.ப.ஜெயசீலன், I A S., அவர்கள் தலைமையில், சாத்தூர் சட்டமன்ற உறுப்பினர் திரு.ஏ.ஆர்.ஆர்.ரகுராமன் அவர்கள் முன்னிலையில், வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத்துறை அமைச்சர் திரு.கே.கே.எஸ்.எஸ்.ஆர்.ராமச்சந்திரன் அவர்கள் அடிக்கல் நாட்டி பணிகளை தொடங்கி வைத்தார்.பின்னர், சாத்தூர் நகராட்சியில், மேலக்காந்தி நகர் தொடக்கப்பள்ளியில் மாநில நிதிக்குழு பள்ளி மேம்பாட்டு மானியம் 2023-2024 திட்டத்தின் கீழ், ரூ.86 இலட்சம் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள புதிய வகுப்பறைக் கட்டிடத்தை வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத்துறை அமைச்சர் அவர்கள் திறந்து வைத்தார்.தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள், தமிழகத்தில் அரசின் திட்டங்கள் பொதுமக்களுக்கு எளிதிலும், விரைவாகவும் சென்றடைய வேண்டும் என்ற நோக்கில் பல்வேறு நிர்வாக கட்டமைப்புகளை ஏற்படுத்துதற்கு பல்வேறு திட்டங்கைள வகுத்து செயல்படுத்தி வருகிறார்கள்.அதனடிப்படையில், விருதுநகர் மாவட்;டத்தில் உள்ள அனைத்து நகராட்சி, பேரூராட்சி மற்றும் ஊரகப்பகுதிகளில் பல்வேறு மேம்பாட்டு நிதித்திட்டங்களின் கீழ் பல்வேறு வளர்ச்சித்திட்டப்பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.மேலும், மக்களின் அடிப்படைத் தேவைகளை பூர்த்தி செய்வதிலும் தமிழக அரசு அதிகமான நிதிகளை ஒதுக்கீடு செய்து பல்வேறு திட்டப் பணிகளை செயல்படுத்தி வருகிறது. அதுமட்டுமல்லாமல், பொதுமக்கள் அரசின் நலத்திட்ட உதவிகளை எளிதாக பெற்று பயன்பெற ஏதுவாகவும், அரசு அலுவலர்கள் சிரமமின்றி பணிபுரிய வசதியாகவும் பல்வேறு நிதித்திட்டங்களின் கீழ் நிதிகளை ஒதுக்கீடு செய்து, பல்வேறு துறைகளுக்கு நவீன வசதிகளுடன் கூடிய கட்டிடங்கள் கட்டப்பட்டு வருகிறது.அதனடிப்படையில் இன்று வெம்பக்கோட்டை சாலையில், கலைஞர் மேம்பாட்டுத்திட்டம் 2025-2026-ன் கீழ், ரூ.6.79 கோடி மதிப்பீட்டில் சாத்தூர் புதிய பேருந்து நிலையம் கட்டப்பட உள்ளது.இந்த புதிய பேருந்து நிலையமானது, 20 பேருந்து வழித்தடம், 24 கடைகள்,ஒரு உணவகம், ஒரு ஆண்கள் மற்றும் பெண்கள் கழிப்பறைகள், ஒரு இருசக்கர வாகன காப்பகம், 3 பயணிகள் காத்திருப்பு அறைகள், 2 அலுவலக அறைகள், ஒரு தாய்மார்கள் பாலுட்டும் அறை உள்ளிட்ட பல்வேறு வசதிகளுடன் 1.82 ஏக்கர் பரப்பளவில் கட்டப்பட உள்ளன.மேலும், சாத்தூர் நகராட்சியில், மேலக்காந்தி நகர் தொடக்கப்பள்ளியில் மாநில நிதிக்குழு பள்ளி மேம்பாட்டு மானியம் 2025-2026 திட்டத்தின் கீழ், ரூ.86 இலட்சம் மதிப்பீட்டில் 4 வகுப்பறைகள் கட்டப்பட்டுள்ளது.இந்த வகுப்பறை கட்டடமானது தரைத்தளத்தில் இரண்டு வகுப்பறைகள் 132.35 சதுர மீட்டர் அளவிலும், முதல் தளத்தில் இரண்டு வகுப்பறைகள் 132.35 சதுர மீட்டர் பரப்பளவிலும் கட்டப்பட்டுள்ளது.இதுபோன்ற உட்கட்டமைப்புக்கு தேவையான அனைத்து வசதிகளையும் தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களின் தலைமையிலான அரசு தொடர்ந்து செயல்படும் என வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத்துறை அமைச்சர் அவர்கள் தெரிவித்தார்.இந்நிகழ்ச்சியில், சாத்தூர் வருவாய் கோட்டாட்சியர் திரு.சிவகுமார், சாத்தூர் நகர்மன்ற தலைவர் திரு.குருசாமி, சாத்தூர் நகராட்சி ஆணையாளர் திருமதி ரா.ஜெகதீஸ்வரி, சாத்தூர் நகராட்சி பொறியாளர் திருமதி வி.சத்திய நாகராணி, சாத்தூர் நகர்மன்ற துணைத்தலைவர் திரு.பா.அசோக், உள்ளாட்சி பிரதிநிதிகள், அரசு அலுவலர்கள், பொதுமக்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.
விருதுநகர் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் (25.06.2025) மாவட்ட நிர்வாகத்தின் மூலம் நடைபெற்ற பன்னிரண்டாம் வகுப்பு தேர்ச்சி பெற்ற மாணவர்களுக்கான சிறப்பு குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் மனுக்கள் அளித்து விருதுநகர் கல்வி அறக்கட்டளை மூலம் கல்வி கட்டணத்திற்கான உதவிகள் பெற்று பயனடைந்த மாணவர்களுடனான 206-வது காபி வித் கலெக்டர் நிகழ்ச்சி மூலம் மாவட்ட ஆட்சித்தலைவர் முனைவர் வீ.ப.ஜெயசீலன்,I A S, அவர்கள் கலந்துரையாடினார்.இந்நிகழ்ச்சியில் பன்னிரண்டாம் வகுப்பு தேர்ச்சி பெற்ற மாணவர்களுக்காக நடத்தப்பட்ட சிறப்பு குறை தீர்க்கும் நாள் கூட்டத்தில் உயர்கல்வி பயில்வதற்காக கல்வி கட்டணத்திற்கான உதவித்தொகை வேண்டி மனு அளித்த 14 மாணவர்களுக்கு ரூ.1,65,778/- மதிப்பில் கல்வி உதவித்தொகைக்கான காசோலைகளை மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் வழங்கினார்.விருதுநகர் மாவட்டத்தில் பள்ளிகளில் பயிலும் மாணவர்களில் கல்வி, பொது அறிவு, விளையாட்டு, ஓவியம், இசை உள்ளிட்ட பல்வேறு திறன் அடிப்படையில் மாணாக்கர்களின் திறன்களை கண்டறிந்து, மாணவ, மாணவியர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டு பிரதி வாரம் ஒருமுறை அவர்களை மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் நேரில் அழைத்து கலந்துரையாடும் நிகழ்ச்சி தொடங்கப்பட்டு, இன்று 206-வது முறையாக கலந்துரையாடல் நிகழ்ச்சி நடைபெற்றது.இந்த கலந்துரையாடல் நிகழ்ச்சியில் கலந்து கொண்ட பள்ளி மாணவ, மாணவிகளிடம், அவர்களுடைய இலட்சியம், அவர்களுக்கு எந்த துறையில் ஆர்வம், அவர்கள் உயர்கல்வி பயில விரும்பும் கல்லூரி மற்றும் இடம் உள்ளிட்டவை குறித்து கேட்டறிந்தார்.பள்ளி கல்லூரி படிப்பு என்பது ஒருவரின் வாழ்க்கையில் ஒருமுறை மட்டுமே கிடைக்கும். எனவே பள்ளி மற்றும் கல்லூரி படிப்பின் மூலம் வாழ்க்கைக்கான பல அனுபவங்களை கற்றுக் கொள்ளலாம். அனுபவங்களில் இருந்து கிடைக்கும் கல்விதான் சிறந்த கல்வியாகும்.மத்திய மாநில அரசுகளின் மூலம் நடத்தப்பெறும் பல்வேறு போட்டித்தேர்வுகள் குறித்து தெரிந்து கொண்டு, அதில் முழு ஈடுபாட்டுடன் அந்த இலக்கை நோக்கி சென்றால் வெற்றி பெற முடியும். மேலும், ஒவ்வொருவருக்கும் என்று தனித்திறமைகள் உள்ளன. அத்திறமைகளை அனைவரும் வளர்த்து கொண்டு வாழ்வில் முன்னேற வேண்டும் என மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் தெரிவித்தார்.கல்லூரி மாணவ மாணவர்கள் போட்டித் தேர்வை எவ்வாறு எதிர்கொள்வது என்பது தொடர்பாக மாணவ, மாணவிகளிடையே மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் கலந்துரையாடி விழிப்புணர்வு ஏற்படுத்தினார்.இந்த சந்திப்பில் கல்லூரியில் பயிலும் மாணவ, மாணவியர்கள் உற்சாகத்துடன் கலந்து கொண்டு, இந்த நிகழ்ச்சி மூலம் எங்களுக்கு ஒரு புத்துணர்வு, ஊக்கம் அளிப்பதாகவும், மாவட்ட ஆட்சியர் போன்று தாங்களும் சாதிக்க வேண்டும் என்ற எண்ணம் உருவாகி உள்ளதாகவும், எங்களுடைய கேள்விகள் மற்றும் சந்தேகங்களுக்கு மாவட்ட ஆட்சியர் தெளிவான விடை கொடுத்ததாகவும், நாங்களும் மாவட்ட ஆட்சியர் போன்று சாதித்து காட்டுவோம் என்றும், இந்த நிகழ்ச்சி ஏற்பாடு செய்ததற்கு மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்களுக்கு மாணவர்கள் தங்களது நன்றிகளை தெரிவித்துக்கொண்டனர்
விருதுநகர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில், திருநெல்வேலி மாநகராட்சி ஆணையராக பணியாற்றி வந்த மரு.என்.ஓ.சுகபுத்ரா,I A S., அவர்கள் தமிழ்நாடு அரசின் அரசாணைப்படி விருதுநகர் மாவட்ட ஆட்சித்தலைவராக (25.06.2025) பொறுப்பேற்றுக்கொண்டார்.இவர், 2017-ஆம் ஆண்டு ஐஏஎஸ் பிரிவைச் சேர்ந்தவர் ஆவார். இவர் முதன் முதலில் கடந்த 2018-ஆம் ஆண்டு திருநெல்வேலி மாவட்டத்தில் பயிற்சி ஆட்சியராக நியமிக்கப்பட்டார்.அதனைத்தொடர்ந்து, இராமநாதபுரம் மாவட்டத்தில் இராமநாதபுரம் சார் ஆட்சியராகவும், தஞ்சாவூர் மாவட்டத்தில் கூடுதல் ஆட்சியராகவும்(வருவாய்), திருவள்ளூர் மாவட்டத்தில் கூடுதல் ஆட்சியராகவும்(வளர்ச்சி), அதனைத் தொடர்ந்து திருநெல்வேலியில் மாநகராட்சி ஆணையராகவும் முக்கிய பொறுப்புக்களை வகித்துள்ளார்.தற்போது விருதுநகர் மாவட்டத்தின் 25 ஆவது மாவட்ட ஆட்சித்தலைவராக மரு.என்.ஓ.சுகபுத்ரா, I A S, அவர்கள் (25.06.2025) பொறுப்பேற்றுக் கொண்டார்.
தமிழ் வளர்ச்சித் துறையின் 2021-2022 ஆம் ஆண்டிற்கான மானியக்கோரிக்கை அறிவிப்பில், நாட்டிற்காகப் பாடுபட்ட தலைவர்களான மகாத்மா காந்தி, ஜவகர்லால்நேரு, அண்ணல் அம்பேத்கர், தந்தை பெரியார், பேரறிஞர் அண்ணா, முத்தமிழறிஞர் கலைஞர் ஆகியோரின் பிறந்த நாளன்று மாவட்ட அளவில் பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்களுக்குப் பேச்சுப் போட்டிகள் நடத்திப் பரிசு, பாராட்டுச் சான்றிதழ் வழங்கப்பட உள்ளது.இவ்வறிவிப்பிற்கிணங்க, 30.06.2025 அன்று அண்ணல் அம்பேத்கர் பிறந்தநாள் பேச்சுப்போட்டியும், 01.07.2025 அன்று முத்தமிழறிஞர் கலைஞர் பிறந்தநாள் பேச்சுப்போட்டியும் விருதுநகர் ஹாஜி பி.செய்யது முகமது ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் பள்ளி மாணவர்களுக்கு முற்பகலிலும் கல்லூரி மாணவர்களுக்குப் பிற்பகலிலும் நடத்தப்பெறவுள்ளன. அரசு/ தனியார் / அரசு உதவிபெறும் பள்ளிகளின் மாணவர்கள், அரசு/ தனியார் / அரசு உதவி பெறும் கலைக் கல்லூரிகள் / பொறியியல்/ மருத்துவக் கல்லூரிகள்/ பல்தொழில்நுட்பக் கல்லூரிகளின் மாணவர்கள் இப்பேச்சுப்போட்டிகளில் பங்கேற்கலாம். போட்டிகள் குறித்த விவரங்கள், பள்ளிகளுக்கு முதன்மைக் கல்வி அலுவலர் வாயிலாகவும், கல்லூரிகளுக்குக் கல்லூரிக் கல்வி இணை இயக்குநர் வாயிலாகவும் அனுப்பப்படும்.அம்பேத்கர் பிறந்தநாள் பேச்சுப்போட்டி தலைப்புகள்: பள்ளி மாணவர்களுக்கு 1.அயல்நாடுகளில் அம்பேத்கரின் உயர்கல்வி 2. இந்திய அரசியலமைப்புச் சட்டம் 3.அரசியலமைப்பின் தந்தை கல்லூரி மாணவர்களுக்கு 1.சுதந்திரம், சமத்துவம், சகோதரத்துவம் 2.அம்பேத்கர் எழுதிய நூல்கள், 3.அரசியல் சாசனத்தின் தலைமைச் சிற்பி, 4.அம்பேத்கரும் பௌத்தமும் ஆகிய தலைப்புகளில் அம்பேத்கர் பிறந்தநாள் பேச்சுப்போட்டிகள் நடத்தப்பெறவுள்ளன.முத்தமிழறிஞர் கலைஞர் பிறந்தநாள் பேச்சுப்போட்டி தலைப்புகள்: பள்ளி மாணவர்களுக்கு 1. பிறப்பொக்கும் எல்லா உயிருக்கும், 2.திராவிடம், 3.நெஞ்சுக்கு நீதி. கல்லூரி மாணவர்களுக்கு 1.அண்ணா தம்பிக்கு எழுதிய கடிதங்கள், 2.குறளோவியம், 3.கலைஞரின் எழுதுகோல் ஆகிய தலைப்புகளில் முத்தமிழறிஞர் கலைஞர் பிறந்தநாள் பேச்சுப்போட்டிகள் நடத்தப்பெறவுள்ளன.பள்ளி / கல்லூரி மாணவர்களுக்கு மாவட்ட அளவில் முதல் பரிசு ரூ.5000-, இரண்டாம்பரிசு ரூ.3000-, மூன்றாம் பரிசு ரூ.2000- என்ற வீதத்திலும் பள்ளி மாணவர்களுக்கென நடத்தப்பெறும் பேச்சுப் போட்டியில் மட்டும், தங்கள் பேச்சுத்திறனைச் சிறப்பாக வெளிப்படுத்திய அரசுப் பள்ளி மாணவர்கள் இரண்டு பேர் தனியாகத் தெரிவு செய்யப்பட்டு ஒவ்வொருவருக்கும் சிறப்புப் பரிசாக ரூ.2000- என்ற வீதத்தில் வழங்கப்படும் என மாவட்ட ஆட்சித்தலைவர் முனைவர் வீ.ப.ஜெயசீலன்,I A S, அவர்கள் தெரிவித்துள்ளார்.
விருதுநகர் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் (24.06.2025) காரியாபட்டி சேது பொறியியல் கல்லூரியில் பயிலும் 40 மாணவர்களுடனான நடைபெற்ற ‘Coffee With Collector” என்ற 205-வது கலந்துரையாடல் நிகழ்ச்சியில் மாவட்ட ஆட்சித்தலைவர் முனைவர் வீ.ப.ஜெயசீலன்,I A S., அவர்கள் மாணவர்களுடன் கலந்துரையாடி, பள்ளித் தேர்வு, உயர்கல்வி, வேலைவாய்ப்பு மற்றும் சுற்றுச்சூழலின் முக்கியத்துவம் குறித்த உரிய வழிகாட்டுதல் வழங்கினார்.விருதுநகர் மாவட்டத்தில் பள்ளிகளில் பயிலும் மாணவர்களில் கல்வி, பொது அறிவு, விளையாட்டு, ஓவியம், இசை உள்ளிட்ட பல்வேறு திறன் அடிப்படையில் மாணாக்கர்களின் திறன்களை கண்டறிந்து, மாணவ, மாணவியர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டு பிரதி வாரம் ஒருமுறை அவர்களை மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் நேரில் அழைத்து கலந்துரையாடும் நிகழ்ச்சி தொடங்கப்பட்டு, இன்று 205-வது முறையாக கலந்துரையாடல் நிகழ்ச்சி நடைபெற்றது.இந்த கலந்துரையாடல் நிகழ்ச்சியில் கலந்து கொண்ட பள்ளி மாணவ, மாணவிகளிடம், அவர்களுடைய இலட்சியம், அவர்களுக்கு எந்த துறையில் ஆர்வம், அவர்கள் உயர்கல்வி பயில விரும்பும் கல்லூரி மற்றும் இடம் உள்ளிட்டவை குறித்து கேட்டறிந்தார்.பள்ளி கல்லூரி படிப்பு என்பது ஒருவரின் வாழ்க்கையில் ஒருமுறை மட்டுமே கிடைக்கும். எனவே பள்ளி மற்றும் கல்லூரி படிப்பின் மூலம் வாழ்க்கைக்கான பல அனுபவங்களை கற்றுக் கொள்ளலாம். அனுபவங்களில் இருந்து கிடைக்கும் கல்விதான் சிறந்த கல்வியாகும்.மத்திய மாநில அரசுகளின் மூலம் நடத்தப்பெறும் பல்வேறு போட்டித்தேர்வுகள் குறித்து தெரிந்து கொண்டு, அதில் முழு ஈடுபாட்டுடன் அந்த இலக்கை நோக்கி சென்றால் வெற்றி பெற முடியும். மேலும், ஒவ்வொருவருக்கும் என்று தனித்திறமைகள் உள்ளன. அத்திறமைகளை அனைவரும் வளர்த்து கொண்டு வாழ்வில் முன்னேற வேண்டும் என மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் தெரிவித்தார்.கல்லூரி மாணவ மாணவர்கள் போட்டித் தேர்வை எவ்வாறு எதிர்கொள்வது என்பது தொடர்பாக மாணவ, மாணவிகளிடையே மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் கலந்துரையாடி விழிப்புணர்வு ஏற்படுத்தினார்.இந்த சந்திப்பில் கல்லூரியில் பயிலும் மாணவ, மாணவியர்கள் உற்சாகத்துடன் கலந்து கொண்டு, இந்த நிகழ்ச்சி மூலம் எங்களுக்கு ஒரு புத்துணர்வு, ஊக்கம் அளிப்பதாகவும், மாவட்ட ஆட்சியர் போன்று தாங்களும் சாதிக்க வேண்டும் என்ற எண்ணம் உருவாகி உள்ளதாகவும், எங்களுடைய கேள்விகள் மற்றும் சந்தேகங்களுக்கு மாவட்ட ஆட்சியர் தெளிவான விடை கொடுத்ததாகவும், நாங்களும் மாவட்ட ஆட்சியர் போன்று சாதித்து காட்டுவோம் என்றும், இந்த நிகழ்ச்சி ஏற்பாடு செய்ததற்கு மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்களுக்கு மாணவர்கள் தங்களது நன்றிகளை தெரிவித்துக்கொண்டனர்.
விருதுநகர் மாவட்ட ஆட்சியர் அலுவலகக் கூட்டரங்கில், (24.06.2025) உலக குருதிக்கொடையாளர்கள் தினம்-2025 - ஐ முன்னிட்டு, தமிழ்நாடு மாநில குருதி பரிமாற்றுக் குழுமம் சார்பில் நடத்தப்பட்ட இரத்த தான முகாம்களில் அதிக முறை இரத்த தானம் செய்த கொடையாளர்களுக்கு மாவட்ட ஆட்சித்தலைவர் முனைவர் வீ.ப.ஜெயசீலன்,I A S., அவர்கள் பாராட்டுச்சான்றிதழ்கள் மற்றும் கேடயங்களை வழங்கி கௌரவித்தார்கள்.அதன்படி, விருதுநகர் மாவட்டத்தில் உள்ள விருதுநகர், அருப்புக்கோட்டை, சிவகாசி, இராஜபாளையம் ஆகிய அரசு இரத்த வங்கிகளுக்கு, வருடத்திற்கு 3 முறைக்கு அதிகமாக குருதி வழங்கிய 66 கொடையாளர்களுக்கு பாராட்டுச் சான்றிதழ்களையும் கேடயங்களையும் மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் வழங்கினார்.ஒவ்வொரு ஆண்டும் ஜீன் -14 ஆம் நாளில் குருதிக் கொடையாளர் தினம் அனுசரிக்கப்படுகிறது. உலக ரீதியில் இத்தினத்தை கொண்டாடுவதற்கான முக்கிய நோக்கம் ரத்த தானம் வழங்குபவர்களை கௌரவப்படுத்துவதற்காகவே கொண்டாடபட்டு வருகிறது. உலகில் நவீன தொழில்நுட்பங்கள் எவ்வளவு தூரம் முன்னேறியபோதிலும் இரத்தத்துக்கு மாற்றீடாக வேறு எந்த ஆக்கக்கூறுகளும் கண்டறியப்படவில்லை.இரத்தம் தேவைப்படுவோருக்கு இரத்தமே வழங்க வேண்டும். அவ்வாறு வழங்கப்படாவிடின் நோயாளி மரணிக்கவும் கூடும். சாதாரண எடையுள்ள ஒரு ஆரோக்கியமான மனிதனின் உடலில் 5 முதல் 6 லிட்டர் இரத்தம் உள்ளது. அதில், இருந்து வெறும் 300 முதல் 350 மில்லிலிட்டர் (ஒரு யூனிட்) இரத்தம் மட்டுமே தானத்தின் போது பெறப்படும். அவ்வாறு கொடுத்த இரத்தத்தின் அளவு இரண்டே வாரங்களில் நாம் உண்ணும் சாதாரண உணவிலேயே மீண்டும் உற்பத்தியாகிவிடும். 3 மாதங்களுக்கு ஒரு முறை எந்தவித பாதிப்பும் இன்றி இரத்த தானம் செய்யலாம் என மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் தெரிவித்தார்.மேலும், மாவட்டத்தில் ஜீன் மாதத்தில் இதுவரை இரத்தத்தான கொடையாளர்களால் 700 யூனிட்டிற்கும் அதிகமாக இரத்தம் பெறப்பட்டுள்ளது.முன்னதாக, விருதுநகர் மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் இன்று மாவட்ட எய்ட்ஸ் தடுப்பு மற்றும் கட்டுபாடு அலசு சார்பில், மாவட்ட அளவிலான எச்.ஐ.வி.ஃஎய்ட்ஸ் விழிப்புணர்வு கிராமிய கலை நிகழ்ச்சி வாகனத்தை மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் கொடியசைத்து துவக்கி வைத்தார்.இவ்வாகனத்தின் மூலம் மாவட்டத்தில் உள்ள அனைத்து கிராமங்களிலும் எச்.ஐ.வி மற்றும் எய்ட்ஸ் தொடர்பான விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடத்தப்பட உள்ளது.இக்கூட்டத்தில், மாவட்ட சுகாதார அலுவலர் திருமதி மரு.யசோதாமணி, மாவட்ட திட்ட மேலாளர் திரு.வேலையா, அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை கண்காணிப்பாளர் மரு.அரவிந்த் பாபு, இரத்த வங்கி மருத்துவ அலுவலர் திருமதி மரு.ஆனந்த ஈஸ்வரி, மாவட்ட மேற்பாவையாளர் திரு.அய்யனார், மருத்துவர்கள், செவிலியர்கள், இரத்ததான கொடையாளர்கள் மற்றும் அரசு அலுவலர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.
விருதுநகர் மாவட்ட ஆட்சியர் அலுவலகக் கூட்டரங்கில் (24.06.2025) திருநங்கைகளுக்கான சிறப்பு குறைதீர்க்கும் நாள் கூட்டம் மாவட்ட ஆட்சித்தலைவர் முனைவர் வீ.ப.ஜெயசீலன்,I A S.,அவர்கள் தலைமையில் நடைபெற்றது. இம்முகாமில், திருநங்கைகள் நல வாரிய அட்டை, ஆதார் அட்டையில் திருத்தம் மேற்கொள்ளுதல், முதலமைச்சரின் மருத்துவ காப்பீட்டு திட்ட அட்டை, ஆயுஷ்மான் பாரத் அட்டை மற்றும் வாக்காளர் அட்டை, சொந்தமாக சுயத்தொழில் தொடங்குவதற்கான மானியம் வேண்டுதல் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் தொடர்பான சுமார் 165 மனுக்கள் பெறப்பட்டன.இம்மனுக்களை மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் சம்மந்தப்பட்ட துறை அலுவலர்களிடம் ஒப்படைத்து உரிய நடவடிக்கை எடுக்குமாறு உத்தரவிட்டார்கள். இம்முகாமில், 20 நபர்களுக்கு திருநங்கை தேசிய அடையாள அட்டைகளையும், 1 நபருக்கு முதலமைச்சரின் மருத்துவ காப்பீட்டு அட்டையினையும், 24 நபர்களுக்கு புதிய மின்னணு குடும்ப அட்டைகளையும், 26 நபர்களுக்கு தமிழ்நாடு திருநங்கைகள் நல வாரிய அட்டை என மொத்தம் 71 திருநங்கைகளுக்கு நலத்திட்ட உதவிகளை மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் வழங்கினார்.இந்நிகழ்ச்சியில், மாவட்ட சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை அலுவலர் திருமதி திலகம், திருநங்கைகள் மற்றும் அரசு அலுவலர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.
விருதுநகர் மாவட்டம் இராஜபாளையம் அரசு மருத்துவமனையில் முதலமைச்சர் காப்பீடு திட்டத்தின் கீழ் ரூ.3 இலட்சம் மதிப்பில் மகப்பேறு மற்றும் குடும்ப நலபுற நோயாளிகள் பிரிவு மற்றும் குடும்ப கட்டுப்பாடு ஆலோசனை மையம் ஆகியவை புணரமைக்கப்பட்டு (24.06.2025) இராஜபாளையம் சட்டமன்ற உறுப்பினர் திரு.எஸ் தங்கப்பாண்டியன் அவர்கள் முன்னிலையில் மாவட்ட ஆட்சித்தலைவர் முனைவர் வீ. ப. ஜெயசீலன், I A S, அவர்கள் பயன்பாட்டிற்கு திறந்து வைத்து பார்வையிட்டார். உடன் இணை இயக்குநர்(மருத்துவ பணிகள்) மரு.மாரியப்பன், மருத்துவர்கள், செவிலியர்கள் உள்ளனர்.
ஒன்றிய அரசு சார்பாக மேன்மை பொருந்திய பணிகளுக்காக இந்திய அரசாங்கம் பத்ம விருதுகளை (பத்ம விபுஷன், பத்ம பூஷன், பத்ம ஸ்ரீ) வழங்க அறிவித்துள்ளது. கலை, அறிவியல், இலக்கியம், விளையாட்டு, மருத்துவம், கல்வி, தொழில் நுட்பம், சமூக நலன், பொதுப்பணிகள், தொழில் மற்றும் இதர பிரிவுகளில் மிகவும் குறிப்பிடத்தக்க மற்றும் அசாதாரணமான பணிகள் ஆற்றியவர்களுக்கு வருகிற 2026 ஆம் ஆண்டு நடைபெற உள்ள குடியரசுதின விழா அன்று பத்ம விருதுகள் வழங்க அறிவிக்கப்பட்டுள்ளது. இவ்விருதுகள் தொழில், இனம், உத்தியோகம், பாலினம் ஆகியவற்றிற்கு வித்தியாசமின்றி வழங்கப்படுகிறது. மேலும், விவரங்கள் அறிய https://awards.gov.in மற்றும் https://padmaawards.gov.in என்ற இணையதளத்தில் விளையாட்டு துறைக்குட்பட்ட விண்ணப்பங்கள் மட்டும் பூர்த்தி செய்துவிட்டு அதன் 3 நகல்களை 27.06.2025- ஆம் தேதிக்குள் மாவட்ட விளையாட்டு மற்றும் இளைஞர் நலன் அலுவலர், விருதுநகர் மாவட்டம் அவர்களுக்கு தகுதியுள்ளவர்கள் நேரில் வந்து சமர்பிக்கவேண்டும். தேர்வு செய்யப்படும் விண்ணப்பங்கள் மாவட்ட ஆட்சித் தலைவர் அவர்களின் பரிந்துரைகளுடன் அரசுக்கு அனுப்பிவைக்கப்படும் என மாவட்ட ஆட்சித்தலைவர் முனைவர் வீ.ப.ஜெயசீலன்,I A S, அவர்கள் தெரிவித்துள்ளார்.