25 YEARS OF EXCELLENCE

சமீபத்திய நிகழ்வுகள்:
ராஜபாளையம் தொழிலாளர் சங்கம் சார்பில், சமூக நலத்துறை அமைச்சர் ஜெகதீஸ்வரிக்கு பாராட்டு விழா >> ராஜபாளையம் செண்பகத் தோப்பு ரோடு கன்னிமார் கோயில் கும்பாபிஷேகம் . >> பூஜ்யஸ்ரீ ஓங்காராநந்த மஹாஸ்வாமிகள் அநுக்ரஹத்துடன் ஆதிகுரு ஸ்ரீப்ரஜ்ஞா தக்ஷிணாமூர்த்தி வித்யாபீட வர்ஷாபிஷேக விழா. >> திருமங்கலம் - ராஜபாளையம் இடையேயான புதிய 4 வழிச்சாலையில், நத்தம்பட்டி சுங்கச்சாவடி நேற்று முதல் பயன்பாட்டுக்கு வந்தது. >> தமிழ்நாடு கலை இலக்கியப் பெருமன்றம்" இராசபாளையம் ரஜினி பெத்துராஜா படைப்புலகம். >> மாம்பழங்களின் வரத்து அதிகரித்து உள்ளது, ராஜபாளையம் பகுதிகளில் ….. >> ராஜபாளையம்-தென்காசி சாலையில் அமைந்துள்ள புதுப்பாளையம் பெரிய மாரியம்மன் கோவிலில் பூக்குழி திருவிழா. >> ராஜபாளையம் காந்தி கலை மன்றத்தில் புத்தக கண்காட்சி . >> ராஜபாளையம் 6-வது மைல் தேக்கத்தில், வெயிலின் தாக்கத்தால் நீர்மட்டம் குறைந்து 8 அடி மட்டும்தான் தண்ணீர் உள்ளது. >> சித்திரை மாதம்,தமிழ்ப்புத்தாண்டை முன்னிட்டு விருதுநகர் மாவட்டத்தில் உள்ள கோயில்களில்  திரளான மக்கள் சுவாமி தரிசனம் செய்தனர். >>


செய்தி மக்கள் தொடர்பு அலுவலகம் விருதுநகர் மாவட்டம்

Jul 03, 2025

விருதுநகர் ஊராட்சி ஒன்றியப் பகுதிகளில் நடைபெற்று வரும் பல்வேறு வளர்ச்சி திட்டப்பணிகள் குறித்து மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

விருதுநகர் மாவட்டம், விருதுநகர் ஊராட்சி ஒன்றியப் பகுதிகளில் நடைபெற்று வரும் பல்வேறு வளர்ச்சி திட்டப்பணிகள் குறித்து மாவட்ட ஆட்சித்தலைவர் மரு.என்.ஓ.சுகபுத்ரா,I A S, அவர்கள்  (02.07.2025) நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு செய்து, அரசின் மூலம் செயல்படுத்தப்பட்டு வரும்  பல்வேறு அரசு திட்டப்பணிகள் மற்றும் நலத்திட்டங்களின் பயன்கள், கருத்துக்கள் குறித்து பயனாளிகளிடம் கலந்துரையாடினார்.விருதுநகர் ஊராட்சி ஒன்றியம், ஓ.கோவில்பட்டி ஊராட்சியில், புதிதாக கட்டி முடிக்கப்பட்டுள்ள சமுதாயக் கூட்டத்தினை பார்வையிட்டு ஆய்வு செய்தார். பின்னர், ஓ.கோவில்பட்டி ஊராட்சியில் மகாத்மா காந்தி தேசிய வேலை உறுதி திட்டத்தின் கீழ் குளம் அமைக்கப்பட்டு, தூர்வாரப்பட்டு வரும் பணிகளை நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு செய்து, பொதுமக்களிடம் கலந்துரையாடினார்.அதனை தொடர்ந்து, விருதுநகர் சிட்கோ வளாகத்தில் வேளாண் விற்பனை மற்றும் வேளாண் வணிகத்துறையின் கீழ், தமிழ்நாடு சிறுதானிய இயக்க திட்டத்தில், ஒருங்கிணைந்த சிறுதானிய முதல் நிலை சுத்திகரிப்பு மற்றும் மதிப்புக்கூட்டுதல் நிலையமானது ரூ.16.54 இலட்சம் மானியத்தில்  அமைக்கப்பட்டுள்ளது மற்றும்  வேளாண் பட்டதாரி இளைஞர்களை தொழில்முனைவோராக்குதல் திட்டத்தில் மானியம் வழங்கப்பட்டுள்ளதையும் மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு செய்தார்.மேலும், நடைபெற்று வரும் பணிகளை விரைவாகவும், தரமானதாகவும் குறிப்பிட்ட காலத்திற்குள் முடித்து பொதுமக்களின் பயன்பாட்டிற்கு கொண்டுவர சம்மந்தப்பட்ட அரசு அலுவலர்களை அறிவுறுத்தினார்.இந்த ஆய்வின் போது , வேளாண்மை துணை இயக்குநர் (வேளாண் விற்பனை மற்றும் வணிகம்) திருமதி செல்வி, விருதுநகர் விற்பனைக்குழு செயலாளர் திரு.வேலுச்சாமி, வட்டாட்சியர், வட்டார வளர்ச்சி அலுவலர்கள், உதவிப் பொறியாளர்கள் மற்றும் அரசு அலுவலர்கள் உட்பட பலர் இருந்தனர்.         

Jul 03, 2025

இலங்கை தமிழர் மறுவாழ்வு முகாமில், ரூ.12.19 கோடி மதிப்பில் கட்டிமுடிக்கப்பட்ட 232 புதிய குடியிருப்பு வீடுகளை மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

விருதுநகர் மாவட்டம்,  வெம்பக்கோட்டை வட்டம், துலுக்கன்குறிச்சி இலங்கை தமிழர் மறுவாழ்வு முகாமில் பொது மற்றும் மறுவாழ்வுத்துறையின் சார்பில், ரூ.12.19 கோடி மதிப்பில் கட்டிமுடிக்கப்பட்ட 232 புதிய குடியிருப்பு வீடுகளை மாவட்ட ஆட்சித்தலைவர் மரு.என்.ஓ.சுகபுத்ரா,I A S., அவர்கள் நேரில்  (02.07.2025) சென்று பார்வையிட்டு ஆய்வு செய்தார்.துலுக்கன்குறிச்சி இலங்கை தமிழர் மறுவாழ்வு முகாமில், பொது மற்றும் மறுவாழ்வுத்துறையின் சார்பில், ரூ.12.19 கோடி மதிப்பில் கட்டிமுடிக்கப்பட்ட 232 புதிய குடியிருப்பு வீடுகளை வருகின்ற 07.07.2025 அன்று  தமிழ்நாடு முதலமைச்சர்  அவர்களால் காணொளி காட்சி வாயிலாக திறந்து வைத்து பயனாளிகளுக்கு ஒப்படைக்கப்பட உள்ளது.அதனடிப்படையில் இன்று அடிப்படை வசதிகளான சாலை வசதி, குடிநீர் வசதி, மின்சார வசதி, கழிவு நீர் கால்வாய் வசதி மற்றும் முன்னேற்பாடு பணிகள், குறித்து மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் இன்று நேரில் சென்று ஆய்வு செய்தார்.இந்நிகழ்வில், திட்ட இயக்குநர் (மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை) மரு.தண்டபாணி மற்றும் அரசு அலுவலர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

Jul 03, 2025

அருப்புக்கோட்டை ஊராட்சி ஒன்றியத்தில், கலைஞரின் கனவு இல்லம் திட்டத்தின் கீழ் 100 பயனாளிகளுக்கு வீடுகள் கட்டுவதற்கான வேலை உத்தரவுகளை அமைச்சர் அவர்கள் வழங்கினார்.

விருதுநகர் மாவட்டம், அருப்புக்கோட்டை ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில், நடைபெற்ற நிகழ்ச்சியில் கலைஞரின் கனவு இல்லம் திட்டத்தின் கீழ், நிர்வாக அனுமதி வழங்கப்பட்டுள்ள 100 பயனாளிகளுக்கு தலா ரூ.3.50 இலட்சம் வீதம் என மொத்தம் ரூ.3.50 கோடி மதிப்பில் வீடுகள் கட்டுவதற்கான வேலை உத்தரவுகளை மாவட்ட ஆட்சித்தலைவர் மரு.என்.ஓ.சுகபுத்ரா, I A S ., அவர்கள் தலைமையில்,  வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத்துறை அமைச்சர் திரு.கே.கே.எஸ்.எஸ்.ஆர்.ராமச்சந்திரன் அவர்கள்  (02.07.2025) வழங்கினார்.  தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் பொறுப்பு ஏற்று இருக்கக்கூடிய இந்த நான்கு ஆண்டு காலத்தில் பல்வேறு திட்டங்களை அனைத்து மக்களும் பயன்பெறும் வகையில் செயல்படுத்தி வருகிறார்கள்.அந்த வகையில் ஒவ்வொரு தனி மனிதனுக்கும் இருக்க இடமும், குடியிருக்க வீடு, வேண்டுமென்ற எண்ணத்தோடு,  தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் கலைஞர் கனவு இல்லம் என்ற திட்டத்தினை செயல்டுத்தி வருகிறார்.தமிழ்நாட்டினுடைய பல பகுதிகளில் குடிசைகள் இருந்த சூழ்நிலையில் தமிழ்நாட்டை குடிசை இல்லாத மாநிலமாக மாற்ற வேண்டும் என்ற கனவு முன்னாள் முதலமைச்சர் கலைஞர் அவர்களுக்கு இருந்தது. அந்த வகையில் 1971 ஆம் ஆண்டு முத்தமிழறிஞர் கலைஞர் அவர்கள் முதலமைச்சராக இருந்த காலத்தில், அவர்தான் சென்னை மாநகரம் முழுவதும் இருக்கக்கூடிய குடிசைகளை எல்லாம் மாற்ற வேண்டும் என்ற அடிப்படையில், குடிசை மாற்று வாரியம் என்ற ஒன்றை உருவாக்கி குடிசையில் குடியிருந்த அனைவரும் அடுக்குமாடிகளில் குடியேற வீடுகளை உருவாக்கி தந்தார்.அதன் தொடர்ச்சியாக, டாக்டர். கலைஞர் அவர்கள், கலைஞர் வீடு வழங்கும் திட்டத்தினை அறிமுகப்படுத்தி, தமிழ்நாடு முழுவதும் குடிசை பகுதிகளை கண்டறிந்து அவற்றை எல்லாம் காங்கிரீட் வீடுகளாக மாற்ற வேண்டும் என்ற உயரிய நோக்கத்தில் இருந்த திட்டத்தை செயல்படுத்தினார்.இத்திட்டத்தின் கீழ் ஏறத்தாழ 360 சதுர அடி பரப்பளவில் காங்கிரீட் வீடுகள் கட்டப்படுவதற்கு ஏறத்தாழ ரூ.3.50 இலட்சம் வழங்கப்படுகிறது.  தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் கலைஞர் அவர்கள் அறிமுகப்படுத்திய இந்த திட்டத்தின் வாயிலாக தமிழ்நாட்டில் இருக்கக்கூடிய ஏழை,எளிய மக்களுக்கு எல்லாம் வீடுகள் வழங்கக்கூடிய திட்டத்தை நாம் செய்ய வேண்டும் என்று செயல்படுத்தி வருகிறார்கள்.கலைஞரின் கனவு இல்லம் திட்டத்தின் கீழ், 2024 - 2025 -ஆம் ஆண்டில்  11 வட்டாரங்களில், 1011 வீடுகள் கட்டுவதற்கு  நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு, 910 வீடுகள் கட்டி முடித்து பயனாளிகளிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது. மேலும்,  2025-2026 - ஆம் ஆண்டில்  2237 வீடுகள் கட்டுவதற்கு நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு,  தற்போது பணிகள் நடைபெற்று வருகிறது.அதனடிப்படையில்,  அருப்புக்கோட்டையில் 83 பயனாளிகளுக்கும், சாத்தூரில் 10 பயனாளிகளுக்கும், விருதுநகரில் 7 பயனாளிகளுக்கும் தலா ரூ.3.50 இலட்சம்; மதிப்பில் இன்று மொத்தம் 100 வீடுகள் கட்டுவதற்கான வேலை உத்தரவுகள் வழங்கப்பட்டுள்ளது.மேலும், மழைக்காலத்திற்கு முன்பாக வீடுகளை கட்ட வேண்டும் என்பதற்காக பயனாளிகளை எல்லாம் தேர்வு செய்து, இன்றைக்கு ஒரு பயனாளிகளுக்கு ரூ.3.50 இலட்சம் மதிப்பில் வீடுகள் கட்டுவதற்கு வழங்கப்படுகிறது.மேலும், தகுதியான பயனாளிகள் விடுபட்டிருந்தால், அவர்கள் அத்தனை பேருக்கும் நிச்சயமாக வீடு வழங்கும் திட்டத்தின் வீடுகள் வழங்கப்படும். இது ஒரு மகத்தான திட்டம். இதற்கான பணிகளை விரைவாக தொடங்கி, வீடுகளை கட்டி மனநிறைவோடு அந்த வீடுகளில் நீங்கள் வாழ வேண்டும் என  வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத்துறை அமைச்சர் அவர்கள் தெரிவித்தார்.தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் மக்களுக்கு பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகிறார். அதனடிப்படையில், இன்று நமது மாவட்டத்தில், கலைஞர் கனவு இல்லம் திட்டத்தின் கீழ், 100 பயனாளிகளுக்கு வேலை உத்தரவுகள் வழங்கப்பட்டுள்ளது.கலைஞர் கனவு இல்லம் திட்டம் என்பது மக்களுக்கு சொந்த வீடற்ற நிலை எனும் சூழலை ஒழிக்க வேண்டும் என்பதற்காக உருவாக்கப்பட்டது. இந்தத் திட்டத்தின் மூலம் கிராமப்புறங்களில் வசிக்கும் தனிநபர்களுக்குப் பாதுகாப்பான, நிரந்தரமான கான்கிரீட் வீடுகளை அளிப்பதன் மூலம் அவர்களின் வாழ்க்கைத் தரம் மேம்படுகிறது.எனவே தொடர்ச்சியாக நமது மாவட்டத்தில் கலைஞர் கனவு இல்லம் திட்டத்தின் உடைய பயன்களை பொதுமக்கள் பெற, ஏழை எளிய மக்களின் வாழ்நாள் கனவாக இருக்கக்கூடிய காங்கிரீட் வீடுகளை கட்டுவதற்கு அனைத்துத் துறை அலுவலர்கள் குறிப்பாக ஊரக வளர்ச்சித் துறை அலுவலர்கள் அனைவரும் இணைந்து செயலாற்ற வேண்டும் என தெரிவித்தார்.

Jul 03, 2025

கலைஞர் கனவு இல்ல திட்டத்தின் கீழ், வீடு கட்டுவதற்காக மனு அளித்த பயனாளியின் இல்லம் தேடி சென்று வீடு கட்டுவதற்கான பணி ஆணையினை மாவட்ட ஆட்சித்தலைவர்அவர்கள் வழங்கினார்.

விருதுநகர் மாவட்டம், விருதுநகர் ஊராட்சி ஒன்றியம், ஓ.கோவில்பட்டி ஊராட்சியில், கலைஞர் கனவு இல்ல திட்டத்தின் கீழ், வீடு கட்டப்பட்டு வரும் பணிகள் குறித்து ஆய்வு செய்து, வீடு கட்டுவதற்காக மனு அளித்த பயனாளியின் இல்லம் தேடி  சென்று வீடு கட்டுவதற்கான பணி ஆணையினை மாவட்ட ஆட்சித்தலைவர் மரு.என்.ஓ.சுகபுத்ரா, I A S., அவர்கள்  (02.07.2025) வழங்கினார்.கலைஞர் கனவு இல்லம் திட்டம் என்பது மக்களுக்கு சொந்த வீடற்ற நிலை எனும் சூழலை ஒழிக்க வேண்டும் என்பதற்காக உருவாக்கப்பட்டது. இந்தத் திட்டத்தின் மூலம் கிராமப்புறங்களில் வசிக்கும் தனிநபர்களுக்குப் பாதுகாப்பான, நிரந்தரமான கான்கிரீட் வீடுகளை அளிப்பதன் மூலம் அவர்களின் வாழ்க்கைத் தரம் மேம்படுகிறது.தமிழ்நாடு அரசு  கலைஞரின் கனவு இல்லம் திட்டத்தின் கீழ்  2030-க்குள் 8 இலட்சம் பேருக்கு வீடுகள் கட்ட வேண்டும் என்ற இலக்கோடு திட்டங்களை வகுத்து வருகிறது.கலைஞரின் கனவு இல்லம் திட்டத்தின் கீழ், 2024 - 2025 -ஆம் ஆண்டில்  11 வட்டாரங்களில், 1011 வீடுகள் கட்டுவதற்கு  நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு, 910 வீடுகள் கட்டி முடித்து பயனாளிகளிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.மேலும்,  2025-2026 - ஆம் ஆண்டில்  2237 வீடுகள் கட்டுவதற்கு நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு,  தற்போது பணிகள் நடைபெற்று வருகிறது. ஓ.கோவில்பட்டி ஊராட்சியில், கலைஞரின் கனவு இல்லம் திட்டத்தின் கீழ், ரூ.3.50 இலட்சம் மானியத்தில் வீடு கட்டப்பட்டு வருவதை பார்வையிட்டு ஆய்வு செய்தார்.பின்னர், ஓ.கோவில்பட்டி ஊராட்சியில் கலைஞரின் கனவு இல்லம் திட்டத்தின் கீழ், தலா ரூ.3.50 இலட்சம் மதிப்பில்  கட்டி முடிக்கப்பட்ட இரண்டு வீடுகளை பார்வையிட்டு ஆய்வு செய்து, பொதுமக்களிடம் கலந்துரையாடி கருத்துக்களை கேட்டறிந்தார்.அதனை தொடர்ந்து, ஓ. கோவில்பட்டி ஊராட்சியை சேர்ந்த, பெ.வள்ளியம்மாள் க/பெ. பெருமாள் என்பவர் மாவட்ட ஆட்சித்தலைவரிடம்  வீடு கட்டுவதற்காக மனு அளித்தார். அதனை; பரிசீலனை செய்து அந்த பயனாளிக்கு இல்லம் தேடி சென்று கலைஞரின் கனவு இல்லம் திட்டத்தின் கீழ் வீடு கட்டுவதற்கான பணி ஆணையினை மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் வழங்கினார்.கலைஞரின் கனவு இல்லம் திட்டத்தின் கீழ் பயன்பெற்ற திருமதி வள்ளியம்மாள் என்ற  பயனாளி, சொந்த வீடு கட்டுவற்கு மிகவும் கஷ்டப்பட்டு வந்த நிலையில், தனது சிரமத்தை அறிந்து சரியான நேரத்தில், எனக்கு வீடு கட்டுவதற்கு ஆணை வழங்கி உதவிய  முதலமைச்சர் அவர்களுக்கும், மாவட்ட ஆட்சியர் அவர்களுக்கும் கண்ணீர் மல்க தனது நன்றியை தெரிவித்துக் கொண்டார்.இக்கூட்டத்தில், திட்ட இயக்குநர் (மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை) மரு.தண்டபாணி,  வட்டார வளர்ச்சி அலுவலர்கள்,வட்டாட்சியர்கள்  மற்றும் அரசு அலுவலர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

Jul 03, 2025

பாவாலி கிராமத்தில் கால்நடை பராமரிப்புத் துறையின் சார்பில் கால்நடைகளுக்கான 7-வது சுற்று கோமாரி நோய் தடுப்பூசி முகாம்.

விருதுநகர் ஊராட்சி ஒன்றியம், பாவாலி கிராமத்தில்  (02.07.2025) கால்நடை பராமரிப்புத்துறையின் சார்பில், தேசிய கால்நடை நோய் கட்டுப்பாட்டுத் திட்டத்தின் கீழ் நடைபெற்ற கால்நடைகளுக்கான 7-வது சுற்று கோமாரிநோய் தடுப்பூசி முகாமினை   மாவட்ட ஆட்சித்தலைவர் மரு.என்.ஓ.சுகபுத்ரா,I A S, அவர்கள் தொடங்கிவைத்தார்.விருதுநகர் மாவட்டத்தில், கால்நடை பராமரிப்புத்துறை சார்பில், தேசிய கால்நடை நோய் தடுப்புத் திட்டம் மூலம் பசு மற்றும் எருமை இனங்களை கோமாரி நோயிலிருந்து  காக்கும் வண்ணம் கோமாரி நோய் தடுப்பூசி முகாம் 02.07.2025 முதல் 22.07.2025 வரை 21 நாட்களுக்கு விருதுநகர் மாவட்டம் முழுவதும் நடைபெற உள்ளது.    கோமாரி நோய் ஒருவைரஸ் கிருமியால் உண்டாக்கப்படும் பொருளாதார முக்கியத்துவம் வாய்ந்த நோயாகும். இந்நோய் கண்ட கால்நடைகளுக்கு வாய் மற்றும் கால் பகுதிகளில் புண்களும், காய்ச்சல் மற்றும் தீவனம் உண்ணாமை ஆகிய அறிகுறிகளோடு சினையுற்ற கால்நடைகளுக்கு கருச்சிதைவு ஏற்படுவதோடு, சினையின் தன்மை குறைந்து காணப்படும். இந்நோய் கொடிய தொற்று நோயாகும்.  காற்று மூலம் பரவுவதோடு ஒரு பண்ணையில் ஒரு மாட்டிற்கு காணப்பட்டால் அனைத்து கால்நடைகளுக்கும் உடனடியாக பரவ நேரிடும்.        இந்நோய் கண்ட கால்நடைகளுக்கு உடனடி இறப்பு ஏற்படாவிட்டாலும் உற்பத்திதிறன் அதிக பாதிப்பு ஏற்படும்.  கால் மற்றும் வாய் காணை (கோமாரி) நோயானது குறிப்பாக கலப்பின மாடுகளை அதிகம் தாக்கி கால்நடைவளர்ப்போருக்கு பொருளாதாரம் மற்றும் உற்பத்தி இழப்பை ஏற்படுத்துகிறது.இந்நோயினால் இறப்புகள் குறைவாக இருந்த போதிலும் கறவை மாடுகளில் பால் உற்பத்தி குறைவு, எருதுகளின் வேலைத்திறன் குறைவு,கறவைமாடுகளில் சினைபிடிப்புதடைபடுவது, இளங்கன்றுகளில் இறப்பு போன்ற பாதிப்புகளால் ஏற்படும் பொருளாதார இழப்பு அதிகமாகும்.இந்நோய் பொதுவாக குளிர் மற்றும் பனிக்காலங்களில் ஏற்படும் நோய் பாதிக்கப்பட்ட இடங்களில் இருந்து வாங்கிவரப்பட்ட கால்நடைகள் சுகாதாரமற்ற கால்நடைவளர்ப்பு மற்றும் கால்நடைகளுக்கு தடுப்பூசி போடாமல் இருத்தல் போன்ற காரணங்களினால் விரைவாக காற்றின் மூலம் பரவும் தன்மை கொண்டது. இந்நோய் பாதிக்கப்பட்ட மாடுகளின்  சிறுநீர், பால், உமிழ்நீர், சாணம் ஆகியவற்றால் மற்ற கால்நடைகளுக்கு பரவுகிறது.     மேலும், விருதுநகர் மாவட்டத்தில் சுமார் 1,45,700 பசு மற்றும் எருமை இனங்களுக்கு தடுப்பூசி போட இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. விருதுநகர் மாவட்டத்திலுள்ள 82 கால்நடை மருந்தகங்கள் மற்றும் 6 கால்நடை மருத்துவமனைகளில் உள்ள கால்நடை உதவி மருத்துவர், கால்நடை ஆய்வாளர்கள் மற்றும் கால்நடை பராமரிப்பு உதவியாளர்கள் கொண்ட 51 குழுக்கள் அமைக்கப்பட்டு, 21 நாட்களுக்கு தடுப்பூசி பணி இலவசமாக மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இத்தடுப்பூசிப் பணி நான்கு மாதத்திற்கு மேல் உள்ள கன்றுகளுக்கும் மற்றும் நிறை மாத  சினை இல்லாத மாடுகளுக்கும் ஆறு மாதங்களுக்கு ஒரு முறை போடப்பட்டு வருகிறது. எனவே, விருதுநகர் மாவட்டத்தில் உள்ள விவசாயிகள் மற்றும் கால்நடைவளர்ப்போர் தங்களது பசுக்கள், எருதுகள் மற்றும் 4 மாதங்களுக்கு மேற்பட்ட இளங்கன்றுகளுக்கு ஒவ்வொரு கிராமத்திலும் குறிப்பிட்ட நாளில் குறிப்பிட்ட இடத்தில் முன்அறிவிப்போடு நடைபெறும் கோமாரி நோய் முகாமில் தடுப்பூசியை தங்களது கால்நடைகளுக்கு போட்டுக்கொண்டு பயனடையுமாறு மாவட்டஆட்சித்தலைவர் அவர்கள் தெரிவித்தார்.முன்னதாக, 5 பயனாளிகளுக்கு தீவன புல்கரணைகளும், 5 பயனாளிகளுக்கு கால்நடைகளுக்கு உரித்தான தாது உப்பு கலவையையும் வழங்கப்பட்டது.மேலும், 237 கால்நடைகளுக்கு கோமாரி நோய் தடுப்பூசி போடப்பட்டது. பின்னர், 160 கன்றுகளுக்கு குடற்புழு நீக்கம் செய்யப்பட்டது.இம்முகாமில், கால்நடை பாராமரிப்புத்துறை மண்டல இணை இயக்குநர் மரு.எட்வின் ஜேம்ஸ், துணை இயக்குநர் (கால்நடை பெருக்கம்  மற்றும் தீவன அபி விருத்தி) திருமதி கலையரசி, உதவி இயக்குநர் மரு.பழனிசாமி, விருதுநகர் கால்நடை மருத்துவர்கள் மரு.ரமேஷ் (விருதுநகர்),  மரு.கார்த்திக் (திருத்தங்கல்) மற்றும் கால்நடை மருத்துவப் பணியாளர்கள், விவசாயிகள் மற்றும் அரசு அலுவலர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

Jul 03, 2025

தமிழ்நாடு நாளையொட்டி தமிழ் வளர்ச்சித் துறை சார்பில் பள்ளி மாணவர்களுக்குக் கட்டுரை மற்றும் பேச்சுப் போட்டிகள்

தமிழ்நாடு நாளையொட்டி தமிழ் வளர்ச்சித் துறை சார்பில் பள்ளி மாணவர்களுக்குக் கட்டுரை மற்றும் பேச்சுப் போட்டிகள் நடைபெறவுள்ளது.தாய்த்தமிழ்நாட்டிற்குத் தமிழ்நாடு எனப் பேரறிஞர் அண்ணா அவர்கள் பெயர் சூட்டிய சூலை 18 (18.07.1967) ஆம் நாளினைப் பெருமைப்படுத்தும் வகையில் அந்த நாள் ”தமிழ்நாடு   நாளாகக்” கொண்டாடப்படும் என  தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களால் அறிவிக்கப்பெற்றது.இவ்வறிவிப்பிற்கிணங்க, தமிழ்நாடு நாளையொட்டி மாவட்டத்திலுள்ள அனைத்துப் பள்ளிகளிலும் 6 முதல் 12ஆம் வகுப்பு வரை பயிலும் மாணவர்களுக்குக் கட்டுரை மற்றும் பேச்சுப்போட்டிகள் 04.07.2025 ஆம் நாள் முற்பகல் 09.30 மணிக்கு விருதுநகர் மாவட்ட பழைய மாவட்ட ஆட்சியரகக் கூட்ட அரங்கில்  நடைபெற உள்ளது. அரசு/ தனியார் / அரசு உதவிபெறும் பள்ளிகளின் மாணவர்கள் இப்போட்டிகளில்  பங்கேற்கலாம். போட்டிகள் குறித்த விவரங்கள் முதன்மை கல்வி அலுவலர் வாயிலாகப் பள்ளிகளுக்கு அனுப்பப்படும்.கட்டுரை போட்டிக்கான தலைப்புகள் 1. ஆட்சிமொழி வரலாற்றில் கீ.இராமலிங்கம், 2.பன்மொழிப்புலவர் கா.அப்பாதுரையாரின் தமிழ் ஆட்சிச் சொல்பணி என்ற தலைப்பிலும்,பேச்சுப் போட்டிக்கான தலைப்புகள் 1. கடமை, கண்ணியம், கட்டுப்பாடு, 2.அன்னைத் தமிழே ஆட்சிமொழி, 3.தொன்றுதொட்டு தமிழ்நாடு எனும் பெயர், 4.அறிஞர் அண்ணா கண்ட தமிழ்நாடு, 5. ஆட்சிமொழி விளக்கம், 6.தமிழ்நாடு எனப்பெயர் சூட்டிய நிகழ்வு, 7.ஆட்சிமொழி - சங்க காலம் தொட்டு, 8.இக்காலத்தில் ஆட்சிமொழி என்ற தலைப்பிலும்,மாவட்ட அளவில் ஒவ்வொரு போட்டிக்கும் முதல் பரிசு ரூ.10000-மும், இரண்டாம் பரிசு ரூ.7000-மும்,  மூன்றாம் பரிசு ரூ.5000-ம் என்ற  வீதத்தில்  வழங்கப்பெறவுள்ளன.மாவட்ட அளவில் முதல் பரிசு பெற்ற மாணவர்கள் மட்டும் 15.07.2025 அன்று நடைபெறும் மாநில அளவிலான  போட்டியில் கலந்து கொள்ள அனுமதிக்கப்படுவர் என மாவட்ட ஆட்சித்தலைவர் மரு.என்.ஓ.சுகபுத்ரா, I A S., அவர்கள் தெரிவித்துள்ளார்.

Jul 03, 2025

கால்நடைத் துறையின் சார்பாக - அரசு மானியத்துடன் நாட்டுக்கோழி பண்ணை அமைக்க விண்ணப்பிக்கலாம்.

நாட்டுக்கோழி  வளர்ப்பானது எளிமையான தொழில்நுட்பங்கள் கொண்டதால் கிராமப்புறங்களில் இத்தொழிலினை வெற்றிகரமாக நடத்த முடியும். இதற்கு மிகக் குறைந்த ஆரம்ப மூலதனச் செலவு போதுமானதாகும். 250 எண்ணம் கோழிகள் கொண்ட ஒரு நாட்டுக்கோழிப்பண்ணையை குடும்ப உழைப்பை மட்டுமே பயன்படுத்தி இலாபகரமாக இயக்க முடியும். இதனால் கூடுதல் மனித சக்தியின் தேவை குறைகிறது. நாட்டுக்கோழி இறைச்சி மற்றும் முட்டைகளுக்கு மாநிலம் முழுவதும் நல்ல சந்தை இருப்பதால், பயனாளியே வளர்ப்பு மற்றும் சந்தைப்படுத்துதல் செய்ய முடியும் .திட்டத்தின் நன்மைகள் :-  நாட்டுக்கோழிகள் 80 முட்டைகள் வரை கொடுக்கும். பயனாளி ஒருவர் 72 வாரங்கள் வரை கோழிகளை வளர்த்து, வருடத்திற்கு 10,000 முடடைகள் ( 125 X 80 )    உற்பத்தி செய்து, அதில் சில முட்டைகளை தாய்கோழிகளைக் கொண்டு குஞ்சு பொரிப்பதற்காக பயன்படுத்தி, குஞ்சுகள் உற்பத்தி செய்து விற்பனை செய்வதன் மூலமும், மீதமுள்ள முட்டைகளை உண்பதற்கான முட்டைகளாக விற்பனை செய்வதன் மூலமும் மற்றும் வளர்ந்த பெண்கோழிகளை (ம) சேவல்களை இறைச்சிக்காக விற்பனை செய்தும் , ஒரு வருடத்திற்கு ரூபாய் இரண்டு இலட்சம் வரை வருமானம் ஈட்டலாம் .எனவே, தமிழக அரசினால் கிராமப்புறங்களில் சிறிய அளவிலான (250 கோழிகள் / அலகு ) நாட்டுக்கோழிப் பண்ணை அலகுகள் 50 சதவீத மானியத்தில் 10 பயனாளிகளுக்கு 2025-2026 ஆம் ஆண்டில் விருதுநகர்  மாவட்டத்தில் செயல்படுத்தப்பட உள்ளது. ஒரு அலகிற்கான திட்ட மதிப்பீட்டில் (கோழிகொட்டகை கட்டுமான செலவு, உபகரணங்கள் வாங்கும் செலவு, 4 மாதத்திற்கு தேவையான தீவனச் செலவு) 50 சதவீத  மானியமாக ரூ.1,50,625/- யை தமிழக அரசு (  Back Ended Subsidy)  வழங்குகிறது. ( 50 சதவீத பயனாளியின் பங்குத் தொகை ரூ.1,50,625/-)  இத்திட்டத்தில் பயன்பெற பின்வரும் தகுதி உள்ள பயனாளிகள் விண்ணப்பிக்கலாம் . ஒவ்வொரு பயனாளிக்கும் 250 எண்ணிக்கையிலான 4 வார வயதுடைய நாட்டுக்கோழி குஞ்சுகள் மாவட்ட கால்நடை பண்ணை ஓசூர்  /  மாவட்ட  கால்நடை பண்ணை  அபிஷேகப்பட்டி / மாவட்ட கால்நடை பண்ணை  சிவகங்கை - யிலிருந்து இலவசமாக வழங்கப்படும் .கோழி வளர்ப்பில் ஆர்வமுள்ள மற்றும் நாட்டுக்கோழி வளர்ப்பில்  திறன் கொண்ட கிராமப்புற பயனாளிகளாக இருக்க வேண்டும். கோழி கொட்டகை சொந்த செலவில் அமைக்க குறைந்த பட்சம் 625 சதுரஅடி நிலம் சொந்தமாக இருக்க வேண்டும் . இடத்தின் சிட்டா /அடங்கல் நகல் இணைக்கப்பட வேண்டும் .  இந்த பகுதி மனித குடியிருப்பிலிருந்து விலகி இருக்க வேண்டும் .கிராமத்தில் நிரந்தரமாக வசிப்பவராக இருக்க வேண்டும்.தேர்ந்தெடுக்கப்பட்ட பயனாளிகளுக்கு கோழி வளர்ப்பு மற்றும் மேலாண்மை குறித்த 3 நாள் பயிற்சி கால்நடை மருத்துவ அறிவியல் பல்கலைகழகம் உடன் இணைந்து வழங்கப்படும்.விதவைகள், ஆதரவற்றோர், திருநங்கைகள் மற்றும் மாற்றுத் திறனாளிகளுக்கு முன்னுரிமை  வழங்கப்படும் . தாயுமானவர் திட்ட பயனாளிகளுக்கு முன்னுரிமை வழங்கப்படும். தேர்ந்தெடுக்கப்பட்டட பயனாளிகளில் 30 சதவிகிதம் தாழ்த்தப்பட்ட / பழங்குடி இனத்தை சேர்ந்தவர்களாக இருக்க வேண்டும். கடந்த 2022-23    2023 - 24  மற்றும் 2024-25 ஆம் ஆண்டிற்கான  திட்டங்களில் பயனாளி பயனடைந்திருக்கக் கூடாது. பயனாளி 3 வருடங்களுக்கு குறையாமல் பண்ணையை பராமரிக்க உறுதி அளிக்க வேண்டும்.தேசிய மயமாக்கப்பட்ட / திட்டமிடப்பட்ட வங்கி/ கூட்டுறவு வங்கி பயனாளிக்கு நிதியளிக்க தயாராக இருக்க வேண்டும் அல்லது பயனாளி சொந்தமாக முதலீடு செய்ய முன் வந்தால், திட்டத்திற்கு நிதியளிப்பதற்கான அவரது நிதி திறன்களின் ஆதராம் / சான்றுகளை அளிக்க வேண்டும்.இத்திட்டத்தில் பயன்பெற விரும்பும் பயனாளிகள், திட்டம் தொடர்பாக, தங்கள் அருகில் உள்ள கால்நடை மருந்தக, கால்நடை உதவி மருத்துவரை அணுகி திட்டம் தொடர்பாக மேலும் விரிவான விபரங்களை தெரிந்து கொள்ளலாம்.  விண்ணப்பங்களை கால்நடை மருந்தக, கால்நடை உதவி மருத்துவரிடம் பெற்று பூர்த்தி  செய்து, ஆதார் அட்டை நகல், நில ஆவண நகல்களுடன் 05.07.2025 -க்குள் கால்நடை உதவி மருத்துவரிடமே சமர்ப்பிக்கலாம் என மாவட்ட ஆட்சித்தலைவர் மரு.என்.ஓ.சுகபுத்ரா, I A S., அவர்கள் தெரிவித்துள்ளார்.

Jul 02, 2025

முன்னாள் படைவீரர்கள் ,படைவீரர்களை சார்ந்தோர்கள் ஓய்வூதியம் தொடர்பான(Sparsh Outreach programme - Mobile van) குறைகளை நிவர்த்தி செய்வது தொடர்பாக குறைதீர்க்கும் முகாம்.

  விருதுநகர் மாவட்ட ஆட்சியர் அலுவலக் கூட்டரங்கில்  (01.07.2025) முன்னாள் படைவீரர்களுக்கு ஓய்வூதியம் தொடர்பான (Sparsh Outreach programme - Mobile van)குறைகளை நிவர்த்தி செய்வது தொடர்பாக குறைதீர்க்கும்   முகாமினை  மாவட்ட ஆட்சித்தலைவர் மரு.என்.ஓ.சுகபுத்ரா,I A S., அவர்கள் தொடங்கி வைத்தார்.        முன்னாள் படைவீரர்களுக்கான ஓய்வூதியம் தொடர்பான(Sparsh Outreach programme - Mobile van) குறைகளை நிவர்த்தி செய்வது  தொடர்பான முகாமானது 01.07.2025 மற்றும் 02.07.2025 ஆகிய நாட்களில் நடைபெறுகிறது.அதன்படி,  நடைபெற்ற முதல் நாள் கூட்டத்தில், முன்னாள் படைவீரர்களின் நீண்ட நாள் கோரிக்கையை நிறைவேற்றி உயிர்சான்று சமர்ப்பிக்கப்பட்டு,மாவட்டஆட்சித்தலைவர்அவர்களால்முன்னாள்படைவீரர்களுக்குசான்றுகள்வழங்கப்பட்டது.இந்நிகழ்ச்சியில்,சுமார் 80க்கும் மேற்பட்ட முன்னாள் படைவீரர்கள் / சார்ந்தோர்கள் மற்றும் அரசு அலுவலர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர். 

Jul 02, 2025

கல்குவாரிகள் மற்றும் கனிம சேமிப்பு கிடங்குகள் ஆகியவற்றில் இருந்து கனிமங்களை கொண்டு செல்ல பயன்படுத்தப்படும் வாகனங்களில் 31.07.2025-க்குள் ஜி.பி.எஸ் கருவி கட்டாயம் பொருத்தப்படுவது தொடர்பான ஆலோசனைக்கூட்டம்

விருதுநகர் மாவட்ட ஆட்சியர் அலுவலகக் கூட்டரங்கில் (30.06.2025) அன்று மதுரை மண்டலத்திற்குட்பட்ட மாவட்டங்கள் முழுவதும் உள்ள கல்குவாரிகள் மற்றும் கனிம சேமிப்பு கிடங்குகள் ஆகியவற்றில் இருந்து கனிமங்களை கொண்டு செல்ல பயன்படுத்தப்படும் வாகனங்களில் 31.07.2025-க்குள் ஜி.பி.எஸ் கருவி கட்டாயம் பொருத்தப்படுவது தொடர்பான ஆலோசனைக்கூட்டம் மதுரை மண்டலம் இணை இயக்குநர்  திரு.லோ.சட்டநாதன் அவர்கள் தலைமையில் நடைபெற்றது.தமிழக சட்டப் பேரவையில் மாண்புமிகு நீர்வளத்துறை மற்றும் கனிம வளத்துறை அமைச்சர் அவர்களால் 2021-2022ஆம்  வருடம் அறிவிக்கப்பட்ட அறிவிப்பில் கனிமங்கள் கொண்டு செல்லும்  அனைத்து வாகனங்களிலும் ஜி.பி.எஸ் கருவி பொருத்தி இயக்கப்பட வேண்டும் என அறிவுறுத்தப்பட்டிருந்தது.இது தொடர்பாக, மதுரை மண்டலத்திற்குட்பட்ட மதுரை, விருதுநகர், தேனி, திண்டுக்கல், தூத்துக்குடி, சிவகங்கை, திருநெல்வேலி, தென்காசி, கன்னியாகுமரி, இராமநாதபுரம் ஆகிய 10 மாவட்டங்களில் உள்ள கற்குவாரிகள் மற்றும் கனிம சேமிப்பு கிடங்குகள் ஆகியவற்றில் இருந்து கனிமங்களை கொண்டு செல்ல பயன்படுத்தப்படும் வாகனங்களில் 31.07.2025-க்குள் ஜி.பி.எஸ்  கருவி கட்டாயம் பொருத்தப்பட வேண்டும் என மதுரை மண்டலத்திற்குட்பட்ட அனைத்து மாவட்ட கல்குவாரி உரிமையாளர்கள், கனிம சேமிப்பு கிடங்கு உரிமையாளர்கள் மற்றும் லாரி உரிமையாளர்களுக்கும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.மேலும், மதுரை மண்டலத்திற்குட்பட்ட அனைத்து குவாரிகள், கிரஷர்கள் மற்றும் சேமிப்பு கிடங்குகளில் கட்டாயமாக எடைமேடை நிறுவப்பட வேண்டும் எனவும் அறிவுத்தப்பட்டது.இக்கூட்டத்தில், உதவி இயக்குநர் (புவியியல் மற்றும் சுரங்கத்துறை) முனைவர்.சி. சுகதாரஹிமா, மதுரை மண்டலத்தில் உள்ள அனைத்து துணை இயக்குநர்கள் மற்றும் உதவி இயக்குநர்கள், மாவட்ட கல்குவாரி உரிமையாளர்கள், கனிம சேமிப்பு கிடங்கு உரிமையாளர்கள் மற்றும் லாரி உரிமையாளர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

Jul 02, 2025

இலுப்பையூர் ஊராட்சியில் புதிதாக கட்டிமுடிக்கப்பட்டுள்ள அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தினை மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள்  நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு

விருதுநகர் மாவட்டம் திருச்சுழி ஊராட்சி ஒன்றியம், இலுப்பையூர் ஊராட்சியில்(01.07 2025) மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வு துறை சார்பில் ரூ. 1.2 கோடி  மதிப்பில் புதிதாக கட்டிமுடிக்கப்பட்டுள்ள அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தினை மாவட்ட ஆட்சித்தலைவர் மரு.என். ஓ. சுகபுத்ரா , I A S,அவர்கள்   நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

1 2 ... 90 91 92 93 94 95 96 ... 138 139

AD's



More News