25 YEARS OF EXCELLENCE

சமீபத்திய நிகழ்வுகள்:
வெயில் தாக்கம்: ராஜபாளையத்தில் இளநீர் விலை கிடுகிடு உயர்வு. >> சிருங்கேரி ஸ்ரீ சாரதா பீடம், ஜகத்குரு ஸ்ரீ ஸ்ரீ விதுசேகரபாரதீ ஸ்வாமிகள் அவர்களின் வர்தந்தி பூஜை. >> இராஜபாளையம் மூத்தோர் நலச்சங்கம் மற்றும் மாண்புமிகு P.S. குமாரசாமி ராஜா நூற்றாண்டு திருமண மண்டபம் இணைந்து பெருமையுடன் கொண்டாடிய “சுதந்திர தினவிழா”. >> ராஜபாளையம் ரோட்டரி சங்கம், காவேரி மருத்துவமனை–திருநெல்வேலி இணைந்து நடத்திய இலவச இருதயப் பரிசோதனை முகாம். >> இராஜபாளையம் ரோட்டரி சங்கம் நாற்று இலக்கிய அமைப்பு இணைந்து வழங்கும் யானைகள் தின விழா கொண்டாட்டம் - 2026 >> ஆகஸ்ட் - 12 ,யானைகள் தின விழா முன்னிட்டு ,மாணவர்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்த ஒவியப் போட்டிகள். >> ஆடிப்பெருக்கு சிறப்பு வழிபாடு. >> தொடர்பு எல்லைக்கு வெளியே அடுக்குமாடி குடியிருப்பு வாசிகள்; அலைபேசி சிக்னல் இன்றி அவதி. >> வயல் தின விழா. >> ராஜபாளையம் தொழிலாளர் சங்கம் சார்பில், சமூக நலத்துறை அமைச்சர் ஜெகதீஸ்வரிக்கு பாராட்டு விழா >>


செய்தி மக்கள் தொடர்பு அலுவலகம் விருதுநகர் மாவட்டம்

Jul 25, 2025

மத்திய அரசின் வேளாண் உட்கட்டமைப்பு நிதி பெற விரும்பும் சிறு, குறு நிறுவனங்கள் கடனுதவி திட்டத்திற்கு இணையதளம் வாயிலாக விண்ணப்பிக்கலாம் .

மத்திய அரசு அறுவடைக்கு பிந்திய வேளாண் உட்கட்டமைப்புகளை மேம்படுத்திட நீண்ட கால கடன் வசதி திட்டமாக வேளாண் உட்கட்டமைப்பு நிதி திட்டத்தை உருவாக்கியுள்ளது. இந்த திட்டத்தின் கீழ் தமிழ்நாட்டில் 13 ஆண்டுகளில் (2020-2021 முதல் 2032 - 2033 வரை) வங்கிகள் மூலம் பிணையமற்ற குறைந்த வட்டியிலான கடன் வழங்கப்படுகிறது.வேளாண்மை விற்பனை மற்றும் வேளாண் வணிகத்துறையின் மூலம் செயல்படுத்தப்படும் இத்திட்டத்தின் கீழ் விருதுநகர் மாவட்டத்திற்கு 2025-2026 நிதியாண்டுக்கு ரூ.26 கோடி கடன் வழங்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இந்த திட்டத்தின் மூலம் பயனாளிக்கு அதிக பட்சமாக ரூ.2 கோடி வரையிலான கடன்களுக்கு கடன் உத்தரவாதம் அளிக்கிறது 7 ஆண்டு காலத்துக்கு ஆண்டுக்கு 3மூ வட்டிக்குறைப்பு (Interest Subvention) வழங்கப்படுகிறது. இத்திட்டத்தின் மூலம் சிறு மற்றும் குறு நிறுவனங்கள் பயன்பெறலாம்.கடன் வசதி பெற தகுதியான இனங்கள்:இத்திட்டத்தின் கீழ், மின் சந்தையுடன் கூடிய விநியோக தொடர் சேவை, சேமிப்புக்கிடங்குகள், சேமிப்பு கலன்கள் (Silos),  சிப்பம் கட்டும் கூடங்கள், விளைபொருட்களை மதிப்பிடுவதற்கான அமைப்புகள், போக்குவரத்து வசதிகள், முதன்மை பதப்படுத்தும் மையங்கள் மற்றும் பழங்களை அறிவியல் ரீதியாக பழுக்க வைக்கும் அறைகள் போன்ற பல்வேறு அறுவடைக்குப்பின் வேளாண்மைக்கான உட்கட்டமைப்புகள், இயற்கை இடுபொருட்கள் உற்பத்தி, நுண்ணுயிர் உற்பத்தி நிலையங்கள், நவீன மற்றும் துல்லிய பண்ணையத்திற்கான உட்கட்டமைப்புகள், பகுதிக்கேற்ற பயிர் தொகுப்புகளை உருவாக்கி ஏற்றுமதி செய்வதற்கான வசதிகள் ஏற்படுத்துதல் மற்றும் அரசு மற்றும் தனியார் பங்கேற்புடன் அமைக்கப்படும் உட்கட்டமைப்புகள் உள்ளிட்ட பல்வேறு சமுதாய வேளாண் கட்டமைப்புகளுக்கு கடன் வசதி பெற முடியும்.கடன் வசதியை பெற தகுதியானவர்கள்மேற்காணும் உட்கட்டமைப்புகளை உருவாக்க முன்வரும் தொடக்க வேளாண்மை கூட்டுறவுக் கடன் சங்கங்கள், கூட்டுறவு விற்பனை சங்கங்கள், உழவர் உற்பத்தியாளர் நிறுவனங்கள், சுயஉதவிக் குழுக்கள், தனிப்பட்ட விவசாயிகள், கூட்டுறவு நிறுவனங்கள் மூலம் உருவாக்கப்படும் கூட்டுப் பொறுப்பு குழு (JLG),  பல்வகை கூட்டுறவு சங்கங்கள், வேளாண் தொழில் முனைவோர், புதியதாக தொழில் துவங்க முன்வரும் நிறுவனங்களுக்கும், மத்திய, மாநில அமைப்புகள் அல்லது உள்ளாட்சி அமைப்புகளால் முன்மொழியப்படும் அரசு மற்றும் தனியார் பங்கேற்புடன் அமைக்கப்படும் உட்கட்டமைப்புகளுக்கும் கடன் வசதி செய்து தரப்படும்.அரசு அறிவித்துள்ள இந்த வேளாண் உட்கட்டமைப்புகளுக்கான கடன் வசதியின் மூலம் வேளாண் விளைபொருட்கள் வீணாகாமல், சேமித்து வைத்து நல்ல விலை கிடைக்கும் வகையில் கிராமப்புறங்களில் பல்வேறு உட்கட்டமைப்புகளை உருவாக்க இயலும். இந்த கடன் வசதியை பெற விரும்பும் விவசாயிகள், உழவர் உற்பத்தியாளர் நிறுவனங்கள், சுய உதவிக்குழுக்கள், தனியார் தொழில் முனைவோர்கள் தங்கள் பகுதியில் உள்ள தேசிய மயமாக்கப்பட்ட வங்கி மேலாளர்கள், நபார்டு வங்கி மேலாளர்கள் அல்லது வேளாண்மை விற்பனை மற்றும் வேளாண் வணிகத்துறை அலுவலர்களை தொடர்பு கொள்ளுமாறு  கேட்டுக் கொள்கிறார்கள்.மேலும், இத்திட்டத்தில் பயன்பெற விரும்பும் பயனாளிகள் https://agriinfra.dac.gov.in  என்ற இணைய முகவரியில் விரிவான திட்ட அறிக்கையுடன் தாங்கள் விரும்பும் வங்கிக்கிளைக்கு விண்ணப்பிக்கலாம் என மாவட்ட ஆட்சித்தலைவர் மரு.என்.ஓ.சுகபுத்ரா,I A S., அவர்கள் தெரிவித்துள்ளார்.

Jul 24, 2025

விருதுநகர் ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட பல்வேறு பகுதிகளில் நடைபெற்று வரும் வளர்ச்சி திட்டப்பணிகள் குறித்து மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் ஆய்வு செய்தார்.

விருதுநகர் மாவட்டம், விருதுநகர் ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட பல்வேறு பகுதிகளில் நடைபெற்று வரும் வளர்ச்சி திட்டப்பணிகள் குறித்து மாவட்ட ஆட்சித்தலைவர் மரு.என்.ஓ.சுகபுத்ரா, I A S., அவர்கள்  (23.07.2025) நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு செய்தார்.அதன்படி, விருதுநகர் ஊராட்சி ஒன்றியம், எல்லிங்க நாயக்கன்பட்டி ஊராட்சியில் பிரதான் தன்னார்வ தொண்டு நிறுவனத்தின் சமூக பொறுப்புணர்வு நிதியின் கீழ், ரூ.7.45 இலட்சம் மதிப்பில், குமரன்குளம் கண்மாயில் தூர்வாரும் பணியினை மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் இன்று துவக்கி வைத்தார்.அதனை தொடர்ந்து, செங்குன்றாபுரம் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தினை பார்வையிட்டு ஆய்வு செய்து, அங்கு சிகிச்சை முறைகள், மருந்துகளின் இருப்பு, அடிப்படை வசதிகள் உள்ளிட்டவை குறித்து கேட்டறிந்தார். மேலும், மகப்பேறு அடைந்த தாய்மார்களுக்கு தாய்சேய் நலப் பரிசு பெட்டகங்களை வழங்கினார்.  மேலும் அங்கு சிகிச்சை பெற வந்த புறநோயாளிகளிடம் மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் கலந்துரையாடினார்.மேலும், குந்தலபட்டி ஊராட்சி நாராயணபுரம் கிராமத்தில் மகாத்மா காந்தி தேசிய வேலை உறுதி திட்டத்தின் கீழ் ரூ.2.16 இலட்சம் மதிப்பில் மரக்கன்றுகள் நடப்பட்டு பராமரிக்கப்பட்டு வருவதை மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு செய்தார்.  இந்த ஆய்வின் போது, வட்டாட்சியர், வட்டார வளர்ச்சி அலுவலர்கள், உதவிப்பொறியாளர்கள் மற்றும் அரசு அலுவலர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

Jul 24, 2025

தமிழ்நாடு மாநில சிறுபான்மையினர் ஆணையத்தலைவர் அருட்தந்தை சொ.ஜோ அருண்,சே.ச அவர்கள் தலைமையில், மாவட்ட சிறுபான்மையினர் பிரதிநிதிகள் மற்றும் பல்வேறு அரசுத்துறை அலுவலர்களுடனான கலந்தாய்வுக் கூட்டம் நடைபெற்றது.

விருதுநகர் மாவட்ட ஆட்சியர் அலுவலகக் கூட்டரங்கில்  (23.07.2025) பிற்படுத்தப்பட்டோர், மிகவும் பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நலத்துறையின் கீழ், தமிழ்நாடு மாநில சிறுபான்மையினர் ஆணையம் சார்பில், மாவட்ட ஆட்சித்தலைவர் மரு.என்.ஓ.சுகபுத்ரா,I A S., அவர்கள் முன்னிலையில், தமிழ்நாடு மாநில சிறுபான்மையினர் ஆணையத்தலைவர் அருட்தந்தை  சொ.ஜோ அருண்,சே.ச அவர்கள் தலைமையில், மாவட்ட  சிறுபான்மையினர் பிரதிநிதிகள் மற்றும் பல்வேறு அரசுத்துறை அலுவலர்களுடனான கலந்தாய்வுக் கூட்டம் நடைபெற்றது.மாநில சிறுபான்மையினர் நல ஆணையம் என்பது, ஒரு மாநிலத்தின் சிறுபான்மை சமூகங்களின் நலன்களைப் பாதுகாக்கவும், மேம்படுத்தவும், அவர்களின் உரிமைகளைப் பாதுகாக்கவும் அமைக்கப்படும் ஒரு அரசு அமைப்பு. இந்த ஆணையம் சிறுபான்மையினரின் குறைகளை விசாரித்து, தீர்வுகள் காணவும், அரசுக்கு ஆலோசனைகளையும் வழங்கும். சிறுபான்மை சமூகங்களின் கல்வி, வேலைவாய்ப்பு, பொருளாதார மேம்பாடு, சுகாதாரத் திட்டங்கள் போன்றவற்றுக்கான திட்டங்களை அரசுக்கு பரிந்துரைத்தல், சிறுபான்மை சமூகங்களின் நலன் சார்ந்த விவகாரங்களில் அரசாங்கத்தின் கவனத்தை ஈர்த்தல், சிறுபான்மை சமூகங்களின் மீதான வன்முறை, பாகுபாடு போன்ற குற்றங்களை விசாரித்து, சம்பந்தப்பட்டவர்களுக்கு நீதி பெற்றுத்தருதல், சிறுபான்மை சமூகங்களின் உரிமைகளைப் பாதுகாத்தல், மேம்படுத்துதல், சிறுபான்மை சமூகங்களின் நலன் சார்ந்த விவகாரங்களில் பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்துதல் போன்றவை இந்த ஆணையத்தின் செயல்பாடாகும்.தமிழ்நாடு அளவில் உள்ள சிறுபான்மையினர் மக்களின் முக்கிய கோரிக்கையாக உள்ள கிறித்துவர்களுக்கான கல்லறை தோட்டங்கள், முஸ்லிம்களுக்கான கபர்ஸ்தான் இல்லாத இடங்களில் நிலம் கையகப்படுத்தப்பட்டு, கல்லறைத் தோட்டம், கபர்ஸ்தான் அமைக்க நடவடிக்கை எடுக்கப்படும்.இக்கூட்டத்தில் சிறுபான்மையினர் பள்ளிகளுக்கான அனுமதி மற்றும் அங்கீகாரம் குறித்தும், தனி நபர் கோரிக்கையான நலத்திட்டம், வங்கி கடன் பெறுவதல் உள்ளிட்டவைகளில் உள்ள பிரச்சனைகள் குறித்து இங்கு எழுப்பப்பட்ட 70 சதவீத  பிரச்சனைகளுக்கு மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் மற்றும் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அவர்கள் ஆகியோர் அங்கேயே தொடர்புடைய அரசு அலுவலர்களிடம் கலந்துரையாடி, தெளிவாக பிரச்சினைகளை தீர்வு காண்பதற்கு வழிவகை செய்து கொடுத்தார்கள்.விருதுநகர் மாவட்டத்தில் சிறுபான்மையினர்களுடைய கோரிக்கைகளை கேட்டு அவர்களுக்கு தீர்வு காணும் செயல்பாட்டில் தமிழ்நாடு மாநில சிறுபான்மையினர் ஆணையம் முழுநிறைவு பெற்றுள்ளோம்.இந்த ஆணையம் கிருத்துவர்கள், இஸ்லாமியர்கள், சீக்கியர்கள், புத்த மதத்தினர், பார்சிகள், சௌராஷ்டிரர்கள், சமணர்கள் இது மட்டுமல்லாது மொழிவாரியான சிறுபான்மையினரின் உரிமைகளை பாதுகாப்பது இந்த ஆணையத்தின் பொறுப்பாகும். சிறுபான்மையினருக்கு அரசியல் அமைப்பு சட்டத்தில் வரையறுக்கப்பட்ட விதிகள் மற்றும் நலத்திட்டங்கள் முறையாக வழங்கப்படுகிறதா என்பதை கண்காணித்து ஆய்வு மேற்கொள்ளப்பட்டு வருகிறது.  சிறுபான்மையினர்களிடையே கலந்துரையாடல் மேற்கொண்டு அவர்களின் கோரிக்கைகளை நிறைவேற்றுவது மற்றும் அரசு சார்பாக மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கைகளை குறித்து பரிந்துரை மேற்கொள்ளுவது இந்த ஆணையமாகும். மேலும் 38 மாவட்டங்களில் ஆய்வு மேற்கொள்ளப்பட்ட பின்னர், இந்த ஆணையம் சார்பாக மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களிடம் சிறுபான்மையினரின் பாதுகாப்புக்கும் அவர்களின் வாழ்வாதாரத்தை  மேம்படுத்த தேவையான பரிந்துரைகளை இந்த ஆணையம் வழங்கும். இந்த ஆணையத்தில் பொதுமக்கள் தெரிவிக்கும் கோரிக்கைகளை நிறைவேற்ற அரசு அலுவலர்கள் முழு ஒத்துழைப்பு வழங்க வேண்டும் என தெரிவித்தார்.இக்கூட்டத்தில், விருதுநகர் மாவட்டத்தில், பிற்படுத்தப்பட்டோர், மிகவும் பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நலத்துறையின் சார்பில், சிறுபான்மையினருக்காக செயல்படுத்தப்பட்டு வரும் மாவட்ட முஸ்லீம் மகளிர் உதவும் சங்கம், உலமாக்கள் மற்றும் பணியாளர்கள் நலவாரியம், மாவட்ட கிறித்துவ மகளிர் உதவும் சங்கம், கிறித்துவ தேவாலயங்களில் பணிபுரியும் உபதேசியார்கள் மற்றும் பணியாளர்கள் நலவாரியம்,கிறித்துவ தேவாலயங்களை பழுதுபார்த்தல் மற்றம் புனரமைத்தல், கிறித்துவர்களின் பயனிபாட்டிற்காக கல்லறைத்தோட்டம் மற்றும் முஸ்லீம்களின் பயன்பாட்டிற்காக கபர்ஸ்தான் அமைத்தல், சிறுபான்மையின மாணவிகளுக்கான கிராமப்புற பெண்கல்வி ஊக்கத்தொகை வழங்கும் திட்டம், தமிழ்நாடு சிறுபான்மையினர் பொருளாதார மேம்பாட்டு கழகம் (டாம்கோ), சிறுபான்மையினருக்கு மின் மோட்டாருடன் கூடிய விலையில்லா தையல் இயந்திரம் வழங்கும் திட்டம் உள்ளிட்ட பல்வேறு திட்டங்களின் செயல்பாடுகள் குறித்தும், நலத்திட்டங்கள் குறித்தும் விரிவாக கேட்டறிந்து ஆய்வு மேற்கொண்டார்.இந்த கலந்துரையாடல் கூட்டத்தில் விருதுநகர் மாவட்டத்தில் வசிக்கும் சிறுபான்மையினரின் கோரிக்கைகள் குறித்து கேட்டறிந்து, அரசு சார்பாக உரிய நடவடிக்கை மேற்கொள்ள தமிழ்நாடு மாநில சிறுபான்மையினர் ஆணையம் சார்பாக தொடர்புடைய அரசு அலுவலர்களுக்கு அறிவுறுத்தப்பட்டது..

Jul 24, 2025

முதலமைச்சர் அவர்களின் மாநில அளவிலான விளையாட்டு விருதுகள் (2024-2025 முதல் 2025-2026 வரை) தகுதியானவர்கள் விண்ணப்பிக்கலாம்.

இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத் துறை சார்பில் ஆண்டுதோறும் பன்னாட்டு அளவிலும், தேசிய அளவிலும் பதக்கங்கள் பெற்று சிறந்து விளங்கும் விளையாட்டு வீரர்கள் (2 ஆண்கள் மற்றும் 2 பெண்கள்), 2 சிறந்த பயிற்றுநர்கள், 2 சிறந்த உடற்கல்வி இயக்குநர் / உடற்கல்வி ஆசிரியர்களுக்கு முதலமைச்சர் மாநில விளையாட்டு விருது வழங்கப்பட்டு பரிசாக தலா ரூ.1.00 இலட்சம், ரூ.10,000/-மதிப்பிலான தங்கப் பதக்கம் மற்றும் பாராட்டுப் பத்திரம் ஆகியவை ஒவ்வொரு ஆண்டிம் வழங்கப்பட்டு வருகிறது.இது தவிர, விளையாட்டுப் போட்டிகளை நடத்தும் ஒரு நடத்துநர் / ஒரு நிர்வாகி / ஒரு ஆதரவளிக்கும் நிறுவனம் மற்றும் ஒரு நன்கொடையாளர் (ரூ.10.00 இலட்சத்திற்கும் அதிகமாக நன்கொடை அளித்தவர்) ஆகியோர்களுக்கு முதலமைச்சர் மாநில விளையாட்டு விருது ஒவ்வொரு ஆண்டிலும் வழங்கப்படுகிறது. இவர்களுக்கு மேற்கண்ட விருதிற்கு ரூ.10,000/-க்கு மிகாமல் ஒரு தங்கப் பதக்கமும், ஒரு பாராட்டுச் சான்றிதழும் வழங்கப்படுகிறது.இத்திட்டத்தின்படி, 2024-2025 மற்றும் 2025-2026 ஆகிய ஆண்டுகளுக்கான முதலமைச்சர் மாநில விளையாட்டு விருதுக்கான விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.  தமிழ்நாட்டில் 3 ஆண்டுகளாக வசித்து வரும் தமிழ்நாட்டிற்காக இரண்டு முறை தமிழ்நாடு அணியின் சார்பாக கலந்து கொண்டு இந்தியாவின் சார்பாக விளையாடியவர்கள். இந்தியாவின் சார்பாக கலந்து கொண்ட தமிழ்நாட்டில் பணியின் நிமித்தம் குறைந்தது 5 ஆண்டுகளாக வசித்து வரும் முப்படை, ரயில்வே, காவல், அஞ்சல் மற்றும் தொலை தொடர்புத் துறை மற்றும் இதர துறைகளில் பணிபுரிபவர்கள் விண்ணப்பிக்கத் தகுதி பெறுவர். ஒரு நபருக்கு இரண்டாவது முறையாக இவ்விருது வழங்கப்பட மாட்டாது. ஒருவர் காலமாகும் பட்சத்திலும், இவ்விருது வழங்கப்படும்.2024 - 2025 ஆம் ஆண்டிற்கான முதலமைச்சர் மாநில விளையாட்டு விருதிற்கு சிறந்த விளையாட்டு வீரர்கள் சிறந்த பயிற்றுநர்கள், சிறந்த உடற்கல்வி இயக்குநர் /உடற்கல்வி ஆசிரியர் பிரிவுகளுக்கு விண்ணப்பிப்பதற்கு 01.04.2021 முதல் 31.03.2024 வரையிலான சாதனைகளும், ஆட்ட நடுவர்-நீதிபதி, நன்கொடையாளர், நிர்வாகி பிரிவுகளுக்கு 01.04.2022 to 31.03.2024 வரையிலான சாதனைகளும் கணக்கில் எடுத்துக்கொள்ளப்படும்.2025 - 2026 ஆம் ஆண்டிற்கான முதலமைச்சர் மாநில விளையாட்டு விருதிற்கு சிறந்த விளையாட்டு வீரர்கள், சிறந்த பயிற்றுநர்கள், சிறந்த உடற்கல்வி இயக்குநர் /உடற்கல்வி ஆசிரியர் பிரிவுகளுக்கு விண்ணப்பிப்பதற்கு 01.04.2022 முதல் 31.03.2025 வரையிலான சாதனைகளும், ஆட்ட நடுவர்-நீதிபதி, நன்கொடையாளர், நிர்வாகி பிரிவுகளுக்கு01.04.2023முதல்31.03.2025வரையிலானசாதனைகளும்கணக்கில்எடுத்துக்கொள்ளப்படும்.இவ்விருதுக்கு விண்ணப்பிக்கும் தலைசிறந்த விளையாட்டு வீரர்கள், தமிழ்நாடு விளையாட்டு கழகம் / மாவட்ட விளையாட்டு மற்றும் இளைஞர் நலன் அலுவலர் /முதன்மை கல்வி அலுவலர் / முதன்மை உடற்கல்வி ஆய்வர் (ஆடவர் /மகளிர் மூலமாகவும், விளையாட்டுப் போட்டிகளை நடத்தும் ஒரு நடத்துநர் / ஒரு நிர்வாகி ஒரு ஆதரவளிக்கும் நிறுவனம் மற்றும் ஒரு நன்கொடையாளர் (ரூ.10.00 இலட்சத்திற்கும் அதிகமாக நன்கொடை அளித்தவர்) / ஒரு ஆட்ட நடுவர் / நடுவர், நீதிபதி ஆகியோர்கள் உரிய வழிமுறையாகவும் விண்ணப்பங்கள் உறுப்பினர் செயலர் அவர்களுக்கு வந்து சேரும்படி அனுப்ப வேண்டும்.          விளையாட்டில் சிறந்து விளங்கும் விளையாட்டு வீரர் / வீராங்கனைகளுக்கு மற்றும் விளையாட்டுப் போட்டிகளை நடத்தும் ஒரு நடத்துநர் / ஒரு நிர்வாகி / ஒரு ஆதரவளிக்கும் நிறுவனம் மற்றும் ஒரு நன்கொடையாளர் (ரூ.10.00 இலட்சத்திற்கும் அதிகமாக நன்கொடை அளித்தவர்), ஒரு ஆட்ட நடுவர் / நடுவர் / நீதிபதி ஆகியோர்களுக்கான முதலமைச்சர் மாநில விளையாட்டு விருதுக்கான விண்ணப்பப்படிவம் மற்றும் விரிவான விதிமுறைகள் தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தின் http://www.sdat.tn.gov.in என்ற இணையதளம் மூலம் பதிவிறக்கலாம்.பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை உறுப்பினர் செயலர் அவர்கள், தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம், ஜவஹர்லால் நேரு விளையாட்டரங்கம், ராஜா முத்தையா ரோடு பெரியமேடு சென்னை 03  என்ற தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையத் தலைமை அலுவலகத்திற்கு 11.08.2025 மாலை 5.45 க்குள் அனுப்பி வைக்கலாம் என மாவட்ட ஆட்சித்தலைவர் என்.ஓ.சுகபுத்ரா,  I A S., அவர்கள் தெரிவித்துள்ளார்.

Jul 23, 2025

விருதுநகர் ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட பகுதிகளில் நடைபெற்று வரும் பல்வேறு வளர்ச்சி திட்டப்பணிகள் குறித்து மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

விருதுநகர் மாவட்டம், விருதுநகர்  ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட பகுதிகளில் நடைபெற்று வரும் பல்வேறு வளர்ச்சி திட்டப்பணிகள் குறித்து மாவட்ட ஆட்சித்தலைவர் மரு.என்.ஓ.சுகபுத்ரா, I A S, அவர்கள் (22.07.2025) நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு செய்தார்.அதன்படி, விருதுநகர் மாவட்டம், விருதுநகர் ஊராட்சி ஒன்றியம், குருமூர்த்தி நாயக்கன்பட்டி ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் முதலமைச்சரின் காலை உணவுத் திட்டத்தின் செயல்பாடுகள் குறித்து, மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் பார்வையிட்டு, அங்கு மாணவர்களுக்கு வழங்கப்படும்   உணவின் தரம் குறித்தும், உணவு தயாரிப்பதற்கான முழுப் பொருட்களின் தரம் குறித்தும், தொடக்கப்பள்ளி மாணவர்களுக்கு  கற்றல், கற்பித்தல் நடைபெற்று வருவதையும் ஆய்வு செய்தார்.அதனை தொடர்ந்து, விருதுநகர் ஊராட்சி ஒன்றியம் குருமூர்த்தி நாயக்கன்பட்டியை சேர்ந்த மூதாட்டி மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் முதியோர் உதவித்தொகை வேண்டி மனு அளித்ததன்பேரில், அவரது மனுவை உடனடியாக பரிசீலனை செய்து அவரது வீட்டிற்கு மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் நேரில் சென்று  முதியோர் உதவித்தொகை பெறுவதற்கான ஆணையினை வழங்கினார். இந்த ஆய்வின் போது, சிவகாசி வட்டாட்சியர் திரு.லட்சம், வட்டார வளர்ச்சி அலுவலர்கள், பொறியாளர்கள், உதவிப் பொறியாளர்கள், அரசு அலுவலர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

Jul 23, 2025

பட்டாசுத் தொழிற்சாலைகளில் ஏற்படுகின்ற விபத்துகளில் பெற்றோரை இழந்த தொழிலாளர்களின் குழந்தைகளுக்கு மாதாந்திர பராமரிப்பு உதவிதொகைக்கான ஆணைகளை அமைச்சர் அவர்கள் வழங்கினார்.

தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களின் அறிவிப்பிற்கிணங்க, விருதுநகர் மாவட்ட ஆட்சியர் அலுவலகக் கூட்டரங்கில்  (22.07.2025) தொழிலாளர் நலன் மற்றும் திறன் மேம்பாட்டுத்துறையின் தொழிலக பாதுகாப்பு மற்றும் சுகாதார இயக்ககம் சார்பில் நடைபெற்ற நிகழ்ச்சியில், மாவட்ட ஆட்சித்தலைவர் மரு.என்.ஓ.சுகபுத்ரா,I A S, அவர்கள் தலைமையில், விருதுநகர் சட்டமன்ற உறுப்பினர் திரு.ஏ.ஆர்.ஆர்.சீனிவாசன் அவர்கள் மற்றும் சிவகாசி மாநகராட்சி மேயர் திருமதி சங்கீதா இன்பம் ஆகியோர் முன்னிலையில், பட்டாசுத் தொழிற்சாலைகளில் ஏற்பட்ட விபத்துகளில் பெற்றோரை இழந்த தொழிலாளர்களின் 38 குழந்தைகளுக்கு மாந்தோறும் ரூ.2000 வீதம் மொத்தம்  ரூ.5.20 இலட்சம் மதிப்பிலான மாதாந்திர பராமரிப்பு உதவித்தொகைக்கான ஆணைகளை  நிதி, சுற்றுச்சூழல் மற்றும் காலநிலை மாற்றத்துறை அமைச்சர் திரு.தங்கம் தென்னரசு அவர்கள் வழங்கினார். தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் 10.11.2024 அன்று வெளியிட்ட அறிவிப்பின்படி, பட்டாசுத் தொழிற்சாலைகளில், ஏற்படுகின்ற விபத்துகளில் உயிரிழக்கின்ற தொழிலாளர்களின் குழந்தைகளுடைய உயர்கல்வி வரையிலான அனைத்துக் கல்விச் செலவுகளையும் அரசே ஏற்கும் என்றும், இந்த உதவிகளை மாவட்ட அளவிலேயே முடிவு செய்து வழங்கக்கூடிய வகையில், விருதுநகர் மாவட்ட ஆட்சியரின் கீழ், இதற்கான ஒரு தனி நிதியம் ஒன்று உருவாக்கப்படும் என்றும் இதற்கான முதற்கட்ட உதவியாக ரூ.5 கோடி ரூபாயை அரசு வழங்கும் எனவும் அறிவித்தார்.அதனடிப்படையில், பட்டாசுத் தொழிற்சாலை விபத்துக்களில் தாய், தந்தை இருவரில் எவரேனும் ஒருவர் மரணமடைந்த நிகழ்வில் பராமரிப்பு உதவித்தொகையாக (18 வயது பூர்த்தியாகும் வரை) மாதந்தோறும் ரூ.2000/-மும் மற்றும் தாய், தந்தை இருவரும் மரணமடைந்த நிகழ்வில் பராமரிப்பு உதவித்தொகையாக (18 வயது பூர்த்தியாகும் வரை) ரூ.4000/- மும் வழங்கப்படும்.அதன்படி,  விருதுநகர் மாவட்டத்தில், கடந்த பட்டாசு விபத்துக்களில் பெற்றோரை இழந்த தொழிலாளர்களின் 38 குழந்தைகளுக்கு நவம்பர் 2024 முதல் மே-2025 வரையிலான 7  மாதங்களுக்கான மாதாந்திர உதவித்தொகை ரூ.5.20 இலட்சம் வழங்கப்பட்டுள்ளது.மேலும், அரசு கல்லூரிகள், அரசு உதவி பெறும் கல்லூரிகள் மற்றும் சுயநிதி கல்லூரிகளில் அரசு ஒதுக்கீட்டின் கீழ் பயிலும் மாணவர்களுக்கு கல்வி உதவித்தொகையும் வழங்கப்படும்.இதுபோன்று பட்டாசு தொழிற்சாலை விபத்துக்களில் உயிரிழக்கின்ற தொழிலாளர்களின் குழந்தைகளுடைய உயர்கல்வி வரையிலான கல்வி செலவுகளுக்கு தமிழ்நாடு அரசு என்றும் உறுதுணையாக இருக்கும் என  நிதி, சுற்றுச்சூழல் மற்றும் காலநிலை மாற்றத்துறை அமைச்சர் அவர்கள் தெரிவித்தார்.இந்நிகழ்வில், தொழிலக பாதுகாப்பு மற்றும் சுகாதாரம் இணை இயக்குநர்கள்  திரு.ஆர்.ரவிச்சந்திரன், திரு.பி.ராஜ்குமார், விருதுநகர் நகர்மன்ற தலைவர் திரு.மாதவன், பட்டாசு தொழிலாளர்களுடைய குழந்தைகள், உள்ளாட்சி பிரதிநிதிகள் மற்றும் அரசு அலுவலர்கள் உட்பட பலர் இருந்தனர்.

Jul 22, 2025

விருதுநகர் ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட பல்வேறு பகுதிகளில் நடைபெற்று வரும் வளர்ச்சி பணிகள் குறித்து மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

விருதுநகர் ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட பல்வேறு பகுதிகளில் நடைபெற்று வரும் வளர்ச்சி பணிகள் குறித்து மாவட்ட ஆட்சித்தலைவர் மரு.என்.ஓ.சுகபுத்ரா,I A S., அவர்கள் (21.07.2025)  நேரில் சென்று  பார்வையிட்டு ஆய்வு செய்து, அரசின் மூலம் செயல்படுத்தப்பட்டு வரும் பல்வேறு அரசு திட்டப்பணிகள் மற்றும் நலத்திட்டங்களின் பயன்கள், கருத்துக்கள் குறித்து பயனாளிகளிடம் கலந்துரையாடினார்.அதன்படி, விருதுநகர்மாவட்டம், சத்திரரெட்டியாபட்டி இரயில்வே இருப்புபாதை பகுதிகளை நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு செய்து, இருப்புபாதைகள்  அமைத்தல், மேம்படுத்துதல், மேலும், ரயில் பாதையில் உள்ள சிக்கனல் அமைப்புகள், பாலங்கள், சுரங்கப்பாதைகள், ரயில் நிலையங்களின் பராமரிப்பு மற்றும் இயந்திரங்களை பராமரித்தல் குறித்து பாணியாளரிடம் கேட்டறிந்தது மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு செய்தார்.அதனை தொடர்ந்து, சத்திரரெட்டியாபட்டியில் உள்ள அங்கன்வாடி மையத்தினை மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் நேரில் சென்று பார்வையிட்டு, அங்கு பயிலும் மாணவர்களின் எண்ணிக்கை, கர்ப்பிணி தாய்மார்கள் மற்றும் குழந்தைகளுக்கு வழங்கப்படும் ஊட்டசத்திற்கான காய்கறிகள், முட்டைகள், பருப்பு உள்ளிட்ட பொருட்களின் தரம் குறிந்து பணியாளர்களிடம் கேட்டறிந்து ஆய்வு செய்தார்.  சத்திரரெட்டியாபட்டியில் உள்ள வட்டாட்சியர் அலுவலகத்தில்  மாவட்ட ஆட்சித்தலைவர் மரு.என்.ஓ.சுகபுத்ரா,இ.ஆ.ப., அவர்கள் நேரில் சென்று பார்வையிட்டு, பதிவேடுகள், கோப்புகள், பெறப்பட்டுள்ள மனுக்கள் உள்ளிட்டவை குறித்து ஆய்வு மேற்கொண்டு, நிலுவையில் உள்ள மனுக்கள் மற்றும்  பொதுமக்களிடமிருந்து பெறப்படும் மனுக்களை விரைந்து பரிசீலனை செய்து தீர்வு வழங்க தொடர்புடைய அரசு அலுவலர்களுக்கு அறிவுரை மற்றும் ஆலோசனைகளை வழங்கினார். சத்திரரெட்டியாபட்டியில் உள்ள மேல்நிலை நீர்தேக்க தொட்டியினை நேரில் சென்று பார்வையிட்டு,  குடிநீர் சேகரிக்கப்படும் அளவு, தண்ணீரின் தரம், அங்குள்ள மக்களுக்க போதிய தண்ணீர் வசதி கிடைக்கப்பெற்றுள்ளதா எனவும்,  நீரேற்று குழாய்கள் மூலம் குடிநீர் பெரும் இடங்களில் ஏதாவது பிரச்சனைகள் உள்ளதா என்று பொதுமக்களிடம் கேட்டறிந்து, தடையின்றி தண்ணீர் பெறுவதற்கு அந்த பகுதியில் உள்ள அரசு அலுவலர்களுக்கு  அறிவுரை மற்றும் ஆலோசனைகளை வழங்கினார். நீர்தேக்க தொட்டியில் ஏற்பட்டுள்ள சேதங்களை சரிசெய் வேண்டும் என அறிவுத்தினார், இந்த ஆய்வின் போது, அரசின் மூலம் அந்தந்த ஊராட்சிகளில் செயல்படுத்தப்பட்டு வரும் பல்வேறு  திட்ட பணிகள் மற்றும் நலத்திட்டங்கள் முறையாக மக்களை சென்றடைகிறதா என பொதுமக்கள் மற்றும் பயனாளிகளிடம் கலந்துரையாடி, அவர்களின் கருத்துக்களை மாவட்ட ஆட்சித்தலைவர் , அவர்கள் கேட்டறிந்தார். மேலும் நடைபெற்று வரும் பணிகளை விரைவாகவும், தரமானதாகவும் முடித்து பொதுமக்களின் பயன்பாட்டிற்கு கொண்டு வர சம்மந்தப்பட்ட அரசு அலுவலர்களுக்கு அறிவுத்தினார்.இந்த ஆய்வின் போது, வட்டார வளர்ச்சி அலுவலர்கள், உதவி செயற்பொறியாளர்கள் மற்றும் அரசு அலுவலர்கள் உட்பட பலர் உடன் இருந்தனர்.

Jul 22, 2025

மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் தலைமையில் நடைபெற்றது.

விருதுநகர் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் மக்கள் குறைதீர்க்கும்  நாள் கூட்டம் மாவட்ட ஆட்சித்தலைவர் மரு.என்.ஓ.சுகபுத்ரா,I A S., அவர்கள் தலைமையில் (21.07.2025) நடைபெற்றது.இக்கூட்டத்தில், இலவச வீட்டுமனைப்பட்டா மற்றும் பட்டா மாறுதல், குடும்ப அட்டை, வேலை வாய்ப்பு, விபத்து நிவாரணம், மாற்றுத்திறனாளிகள், நலிந்தோர் நலத்திட்டம் மற்றும் விதவை உதவித்தொகை, திருமண உதவித்தொகை, முதியோர் உதவித்தொகை உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் தொடர்பாக மனுக்கள் பெறப்பட்டது.மேலும், மாற்றுத்திறனாளிகள் மற்றும் மூத்தகுடி மக்களுக்காக அமைக்கப்பட்டுள்ள சிறப்பு அமருமிடத்திற்குச் சென்று, மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் கோரிக்கை மனுக்களை பெற்றுக் கொண்டார். இம்மனுக்களை மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் சம்மந்தப்பட்ட துறை அலுவலர்களிடம் ஒப்படைத்து உரிய நடவடிக்கை எடுக்குமாறு உத்தரவிட்டார்கள்.மேலும் முதலமைச்சர் தனிப்பிரிவு மனுக்கள் மீது தனிக்கவனம் செலுத்தி நடவடிக்கை எடுக்குமாறு மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் தொடர்புடைய அலுவலர்களை அறிவுறுத்தினார்கள்.இக்கூட்டத்தில்,மாவட்ட வருவாய் அலுவலர் திரு.இரா.ராஜேந்திரன், தனித்துணை ஆட்சியர் (ச.பா.தி) திரு.காளிமுத்து, அரசு அலுவலர்கள் மற்றும் பொதுமக்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

Jul 22, 2025

தேசிய வேளாண் வளர்ச்சி -திட்டத்தின் கீழ் மக்காச்சோளம் மற்றும் பருத்தி விதைகள் சாகுபடி செய்யும் விவசாயிகள் மானியம் பெற விண்ணப்பிக்கலாம்.

 தேசிய வேளாண் வளர்ச்சி திட்டத்தின் கீழ், மக்காச்சோள சாகுபடிக்காக சிறப்பு திட்டமாக தேசிய வேளாண் வளர்ச்சி திட்டம் - மக்காச்சோள சாகுபடி சிறப்பு திட்டம்(Special Project on maize cultivation)-ஆக அறிவிக்கப்பட்டது. இத்திட்டத்தின் கீழ் மக்காச்சோள செயல்விளக்கத்திடல் விருதுநகர்மாவட்டத்திற்கு 5,500 எக்டேர் இலக்கு பெறப்பட்டுள்ளது.விருதுநகர் மாவட்டத்தில் சிறுதானியசாகுபடியில் முக்கிய பயிராக மக்காச்சோளமே முதலிடத்தில் உள்ளது. அதனை சாகுபடி செய்யும் விவசாயிகளுக்கான முக்கிய திட்டமான இதில் விதைகள் அங்கக உரங்கள் மற்றும் உயிர் உரங்கள் வழங்கப்படவுள்ளது. செயல்விளக்கத்திடல்கள் அமைத்து அனைத்து தொழில்நுட்பங்களையும் கடைபிடித்து உயர் மகசூல் பெற்றிடவும் அதன் விளைவாக மக்காச்சோளப்பயிர் சாகுபடி பரப்பினை அதிகரித்திடும் வகையில் இத்திட்டம் செயல்படுத்தப்படுகிறது.மேலும் தேசிய வேளாண் வளர்ச்சி திட்டத்தின் கீழ், நெற்பயிரில் SRI/ இயந்திர நடவுக்காக எக்டருக்கு ரூ.6000 மானியம், பருத்தி விதைகள் கிலோவிற்கு ரூ.140 மானியம், பருத்தியில் நுனிக்கிள்ளுதலுக்கு எக்டருக்கு ரூ.1250 மானியம் போன்ற திட்டங்கள் செயல்படுத்தப்படுகிறது. எனவே, விவசாயிகள் தங்கள்அருகிலுள்ள வேளாண்மை உதவி இயக்குநர் அலுவலகத்தை அணுகி அரசின் மானியங்களைப் பெற்றுபயனடைந்திடுமாறு மாவட்ட ஆட்சித்தலைவர் மரு.என்.ஓ.சுகபுத்ரா,I A S.,  அவர்கள் தெரிவித்துள்ளார். 

Jul 22, 2025

குழந்தைகள் நலன் மற்றும் சிறப்புச்சேவைகள் துறை யின் கீழ் இயங்கும் நிறுவனங்களுக்கு ”முன் மாதிரியான சேவை விருது பெற தகுதியான நிறுவனங்கள் விண்ணப்பிக்கலாம்.

குழந்தைகளின் நலனை பேணிக் காக்க திறம்பட செயல்பட்டு வரும் நிறுவனங்களை அங்கீகரிப்பதற்காகவும் ஊக்குவிப்பதாகவும், ஆண்டு தோறும் "முன் மாதிரியான சேவை விருதுகள் குழந்தைகள் நலன் மற்றும் சிறப்பு சேவைகள் இயக்குநரகம் மூலம் வழங்கப்படுகிறது.அதன்படி அரசின் கீழ் இயங்கும் குழந்தைகள் இல்லங்கள், தன்னார்வத் தொண்டு நிறுவனங்கள் கீழ் செயல்படும் குழந்தைகள் இல்லங்கள், சட்டத்திற்கு முரணாக செயல்பட்டதாக கருதப்படும் குழந்தைகளுக்கான இல்லங்கள், மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலகுகள் ஆகிய  4 நிறுவனங்களுக்கு  தலா ரூ. 1 இலட்சம் வீதம் மொத்தம் ரூ.4 இலட்சம்  பரிசுத்தொகை வழங்கப்படும்.இவ்விருதுக்கு, குழந்தைகள் நலன் மற்றும் சிறப்பு சேவைகள் துறையின்கீழ் பதிவு பெற்று செயல்படும் இல்லங்கள் முன் மாதிரியான சேவை விருதுகளுக்கான விண்ணப்பங்களை  அரசு குழந்தைகள் இல்லங்கள், தன்னார்வத் தொண்டு நிறுவனங்கள் கீழ் செயல்படும் குழந்தைகள் இல்லங்கள், சட்டத்திற்கு முரணாக செயல்பட்டதாக கருதப்படும் குழந்தைகளுக்கான இல்லங்கள் என ஒவ்வொரு பிரிவிற்கும் தனித்தனியாக மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலரிடம் சமர்ப்பிக்க வேண்டும். மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலர் அவ்விண்ணப்பங்களை மாநில அளவிலான தேர்வுக்குழுவிற்கு சமர்ப்பித்து, மாவட்ட அளவிலான தேர்வுக்குழுவின் அடிப்படையில் இல்லங்கள்/நிறுவனங்களை பரிசீலனை செய்து மாவட்ட ஆட்சியருக்கு பரிந்துரை செய்து, அவற்றில் சிறப்பாக பணியாற்றிய ஒரு குழந்தைகள் பராமரிப்பு  நிறுவனத்தினை தேர்வு செய்து மாநில அளவிலான ஆய்வுக்குழுவிற்கு சமர்ப்பிக்கப்பட்டு, மாநில அளவிலான தேர்வுக்குழுவினரால் சிறந்த இல்லங்களை தேர்வுச் செய்யப்படும்.தகுதிகள் பின்வருமாறு:1.  இளைஞர் நீதிச்சட்டம் (பாதுகாப்பு மற்றும் பராமரிப்பு தேவைப்படும் குழந்தைகள்) 2015-ன்கீழ் குழந்தைகள் பராமரிப்பு நிறுவனங்கள் பதிவு செய்திருக்க வேண்டும்.2 .  தொடர்ந்து ஐந்து வருட காலம் செயல்பாட்டில் இயங்கி இருக்க வேண்டும்.3. குழந்தை பராமரிப்பு நிறுவனம் மற்றும் அந்நிறுவனத்தில் பணியாற்றும் பணியாளர்கள் மீதும் மற்றும் குற்றவியல் தொடர்பான வழக்குகள் பதிவு எந்தவொரு உரிமையியல் செய்யப்பட்டிருக்கக்கூடாது.எனவே, விருதுநகர் மாவட்டத்தில் "முன் மாதிரியான சேவை விருது”- க்கு மேற்குறிப்பிட்ட தகுதிகளின் அடிப்படையில் உரிய சான்றுகளின் ஒளிநகல்களுடன் 'மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலர், மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலகு, அறை எண். 503,5-வது தளம், புதிய மாவட்ட ஆட்சியர் அலுவலகம், விருதுநகர் -626002 என்ற முகவரிக்கு நேரடியாகவோ அல்லது அஞ்சல் மூலமாகவோ 31.07.2025 அன்று மாலை 5.30 மணிக்குள் சேரும் வகையில் அனுப்படவேண்டும். மேற்குறிப்பிட்ட தேதிக்கு பின்வரும் விண்ணப்பங்கள் தகவலின்றி நிராகரிக்கப்படும் என மாவட்ட ஆட்சித்தலைவர் மரு.என்.ஓ.சுகபுத்ரா, I A S., அவர்கள் தெரிவித்துள்ளார். 

1 2 ... 91 92 93 94 95 96 97 ... 140 141

AD's



More News