25 YEARS OF EXCELLENCE

சமீபத்திய நிகழ்வுகள்:
இசை விழாவில் 'நித்யாஞ்சலி' மாணவர்களின் நடன நாடகம் 'காலத்தின் மகத்துவத்தை' உணர்த்தியது. >> மாவட்ட சமூகநலத்துறை மற்றும் இராஜபாளையம் மூத்தோர் நலச்சங்கம் இணைந்து நடத்திய இரண்டு நாள் டிஜிட்டல் மற்றும் நிதிக்கல்வித்திட்டம் பற்றிய விழிப்புணர்வு முகாம். >> மதுரையில் நடைபெற்ற சிறப்பாக வணிகம் புரிந்த முன்னணி முகவர்கள் கூட்டத்தில் திரு வெங்கட் நாராயண ராஜா அவர்களை எல்ஐசி சேர்மன் அவர்கள் கௌரவித்தார். >> ராஜபாளையத்தில் பெண்களுக்கான நீண்ட தூர நடை போட்டி. >> 56 மி.மீ. மழை ராஜபாளையத்தில் பதிவு! >> 12 நாளுக்கு ஒருமுறை ராஜபாளையத்தில் குடிநீர் சப்ளை. >> வெயில் தாக்கம்: ராஜபாளையத்தில் இளநீர் விலை கிடுகிடு உயர்வு. >> சிருங்கேரி ஸ்ரீ சாரதா பீடம், ஜகத்குரு ஸ்ரீ ஸ்ரீ விதுசேகரபாரதீ ஸ்வாமிகள் அவர்களின் வர்தந்தி பூஜை. >> இராஜபாளையம் மூத்தோர் நலச்சங்கம் மற்றும் மாண்புமிகு P.S. குமாரசாமி ராஜா நூற்றாண்டு திருமண மண்டபம் இணைந்து பெருமையுடன் கொண்டாடிய “சுதந்திர தினவிழா”. >> ராஜபாளையம் ரோட்டரி சங்கம், காவேரி மருத்துவமனை–திருநெல்வேலி இணைந்து நடத்திய இலவச இருதயப் பரிசோதனை முகாம். >>


விளையாட்டு (SPORTS)

Oct 12, 2026

யுனிசெப் இந்தியாவின் தூதராக ஸ்மிருதி மந்தனா நியமனம்.

ஐக்கிய நாடுகள் சபையின் குழந்தைகள் நல அமைப்பான யுனிசெப் நிறுவனத்தின் இந்தியப் பிரிவு தூதராக, இந்திய கிரிக்கெட் வீராங்கனை ஸ்மிருதி மந்தனா நியமிக்கப்பட்டுள்ளார்.இந்திய பெண்கள் கிரிக்கெட் அணியின் கேப்டனாகப் பொறுப்பேற்றுள்ள ஸ்மிருதி மந்தனா, குழந்தைகளின் பாதுகாப்பு, உடல்நலம் மற்றும் பெண் குழந்தைகளுக்கான வாய்ப்புகளை மேம்படுத்தும் பணிகளில் ஈடுபட உள்ளார்.இதுகுறித்து ஸ்மிருதி மந்தனா கூறுகையில், “இந்தப் பொறுப்பை பெருமையாகக் கருதுகிறேன். மன உறுதியுடன் போராடினால் வாழ்க்கையில் சாதிக்க முடியும் என்பதை கிரிக்கெட் எனக்குக் கற்றுக் கொடுத்துள்ளது. ஒவ்வொரு குழந்தையும் பெரிய கனவுகளைக் காணவும், அந்தக் கனவுகளை நனவாக்குவதற்கான வாய்ப்புகளைப் பெறவும் தகுதியுடையவர்கள்” என்றார்.தெற்காசியாவுக்கான யுனிசெப் தூதராக உள்ள இந்திய கிரிக்கெட் ஜாம்பவான் சச்சின் டெண்டுல்கர், மந்தனாவை யுனிசெப் குடும்பத்திற்கு வரவேற்பதாகத் தெரிவித்துள்ளார். மேலும், குழந்தைகளின் உரிமைகளுக்காகச் சிறந்த குரலாக அவர் திகழ்வார் என்றும் குறிப்பிட்டுள்ளார்.

Oct 10, 2026

டென்னிஸ்: அரையிறுதிக்கு முன்னேறிய மாயா ரேவதி.

போர்ச்சுகலில் நடைபெற்று வரும் ஐ.டி.எப். மகளிர் டென்னிஸ் தொடரில், இந்திய வீராங்கனை மாயா ரேவதி அரையிறுதிக்கு முன்னேறினார்.போர்ச்சுகலின் லாகோஸ் நகரில் நடைபெறும் இத்தொடரின் ஒற்றையர் பிரிவு காலிறுதிப் போட்டியில், மாயா ரேவதி, எட்டாம் நிலை வீராங்கனையான சீனாவின் தியன் ஜியாலினை எதிர்கொண்டார்.தொடக்கம் முதலே சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய மாயா, முதல் செட்டை 6-2 எனக் கைப்பற்றினார். தொடர்ந்து ஆதிக்கம் செலுத்திய அவர், இரண்டாவது செட்டையும் 6-1 என தன்வசப்படுத்தினார்.ஒரு மணி நேரம் 42 நிமிடங்கள் நடைபெற்ற இப்போட்டியில், 6-2, 6-1 என்ற நேர் செட் கணக்கில் வெற்றி பெற்ற மாயா ரேவதி, அரையிறுதிக்கு தகுதி பெற்றார்.அரையிறுதிப் போட்டியில், மூன்றாம் நிலை வீராங்கனையான நெதர்லாந்தின் பிரிட்டு பிரீயை மாயா எதிர்கொள்ள உள்ளார்.

Oct 10, 2026

ஐ.எஸ்.எல்., கால்பந்து இன்று தொடக்கம்.

ஐ.எஸ்.எல்., கால்பந்து தொடரின் 13வது சீசன் இன்று பெங்களூருவில் தொடங்குகிறது. இதில் ஈஸ்ட் பெங்கால், சென்னை, மும்பை, கேரளா உள்ளிட்ட 13 அணிகள் பங்கேற்கின்றன.இன்று நடைபெறும் முதல் போட்டியில் பெங்களூரு, டில்லி அணிகள் மோதுகின்றன. லீக் சுற்றில் ஒவ்வொரு அணியும் மற்ற அணிகளுடன் இருமுறை மோதும். புள்ளிப்பட்டியலில் முதலிடம் பெறும் அணி ஷீல்டு வெல்லும். முதல் 6 இடங்களைப் பிடிக்கும் அணிகள் பிளே ஆப் சுற்றில் பங்கேற்கும்.

Oct 09, 2026

ஒலிம்பிக் கனவை நனவாக்க 'டிரீம் ஒலிம்பிக்' திட்டம்!

ஆசிய விளையாட்டுப் போட்டிகள் மற்றும் சர்வதேச ஒலிம்பியாட் செஸ் போட்டிகளில் பதக்கங்களை வென்ற தமிழக வீரர், வீராங்கனைகளுக்கு ஊக்கத்தொகை வழங்கும் நிகழ்ச்சி சென்னையில் நடைபெற்றது. லீலா பேலஸ் ஹோட்டலில் நடந்த விழாவில் முதல்வர் விஜய் பங்கேற்று, சாதனை படைத்த வீரர்களுக்கு உயரிய ஊக்கத்தொகைகளை வழங்கினார்.மேலும், ஒலிம்பிக் போட்டிகளில் பங்கேற்கும் நோக்கில் வீரர்களைத் தயார்படுத்தும் 'டிரீம் ஒலிம்பிக்' திட்டத்தையும் அவர் தொடங்கி வைத்தார்.தமிழக வீரர்கள் சர்வதேச அளவிலான போட்டிகளில் சிறப்பாகச் செயல்படுவதற்காக, வெளிநாடுகளுக்குச் சென்று பயிற்சி பெறும் வாய்ப்புகள் ஏற்படுத்தப்பட்டு வருகின்றன. விளையாட்டுத் துறையின் வளர்ச்சிக்குத் தேவையான முதலீடுகளை மேற்கொள்ளவும் முக்கியத்துவம் அளிக்கப்படுகிறது.போதைப் பழக்கத்தைத் தடுப்பதில் விளையாட்டுக்கு முக்கியப் பங்கு இருப்பதால், பள்ளி, கல்லூரிகளில் விளையாட்டுக்கு அதிக முக்கியத்துவம் அளிக்க வேண்டும் என வலியுறுத்தப்பட்டது. பள்ளிகளில் தினமும் 45 நிமிடங்கள் உடற்கல்வி வகுப்புகளை நடத்தத் திட்டமிடப்பட்டுள்ளது. இதேபோல், கல்லூரிகளிலும் 45 நிமிட உடற்கல்வி வகுப்புகளைக் கட்டாயமாக்குவது குறித்து பரிசீலிக்க வேண்டும் என்றும் தெரிவிக்கப்பட்டது.மேலும், திருநங்கையர்களுக்காக மாநில அளவிலான விளையாட்டுப் போட்டிகளை நடத்தவும் திட்டமிடப்பட்டுள்ளது.

Oct 09, 2026

சீன ஸ்மாஷ் டேபிள் டென்னிஸ்: அரையிறுதியில் இந்திய ஜோடி!

சீனாவின் பீஜிங்கில் நடைபெற்று வரும் சீன ஸ்மாஷ் டேபிள் டென்னிஸ் தொடரில், இந்தியாவின் மானவ் தாக்கர் – மானுஷ் ஷா ஜோடி அரையிறுதிக்கு முன்னேறியது.ஆண்கள் இரட்டையர் பிரிவு காலிறுதியில், சீனாவின் ஜிங்குன் லியாங் – பெங்ஜியாங் ஜோடியுடன் இந்திய அணி மோதியது. இதில் ஆதிக்கம் செலுத்திய மானவ் – மானுஷ் ஜோடி, 11-9, 11-5, 11-4 என்ற கணக்கில் தொடர்ந்து மூன்று கேம்களையும் கைப்பற்றியது. இதன் மூலம் 3-0 என்ற நேர் கேம் கணக்கில் வெற்றி பெற்று அரையிறுதிக்குள் நுழைந்தது.

Oct 09, 2026

ஆர்க்டிக் ஓபன் பாட்மின்டன்: காலிறுதிக்கு முன்னேறிய சிந்து!

பின்லாந்தில் நடைபெற்று வரும் ஆர்க்டிக் ஓபன் சூப்பர் 500 பாட்மின்டன் தொடரில், இந்தியாவின் நட்சத்திர வீராங்கனை பி.வி. சிந்து காலிறுதிக்கு முன்னேறினார்.பெண்கள் ஒற்றையர் பிரிவின் இரண்டாவது சுற்றில், ஜப்பானின் ரிகோவை எதிர்கொண்ட சிந்து, தொடக்கம் முதலே சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினார். 49 நிமிடங்கள் நீடித்த இப்போட்டியில் 21-15, 21-15 என்ற நேர் செட் கணக்கில் வெற்றி பெற்றார். இதன்மூலம் அவர் காலிறுதிச் சுற்றுக்குத் தகுதி பெற்றார்.

Oct 09, 2026

பாரா ஆசிய விளையாட்டு: பதக்க வேட்டைக்குத் தயாராகும் இந்திய அணி!

ஜப்பானின் அய்ச்சி–நகோயா பகுதியில் ஆசிய விளையாட்டுப் போட்டிகள் நிறைவடைந்ததைத் தொடர்ந்து, மாற்றுத்திறனாளி வீரர்களுக்கான பாரா ஆசிய விளையாட்டுப் போட்டிகள் நடைபெற உள்ளன. வரும் அக். 18 முதல் 24ம் தேதி வரை நடைபெறும் இப்போட்டியின் 5வது சீசனில், 45 நாடுகளைச் சேர்ந்த வீரர், வீராங்கனைகள் 18 விளையாட்டுப் பிரிவுகளில் பங்கேற்கின்றனர். மொத்தம் 492 தங்கப் பதக்கங்கள் வழங்கப்பட உள்ளன.இந்தியாவின் சார்பில் 80 வீரர்கள், 41 வீராங்கனைகள் என மொத்தம் 121 பேர் களமிறங்க உள்ளனர். ஆறு விளையாட்டுப் பிரிவுகளில் பங்கேற்கும் இந்திய வீரர்கள், பதக்கங்களைக் குவிக்கும் முனைப்புடன் தயாராகி வருகின்றனர். போட்டியின் தொடக்க விழா அக். 18ம் தேதி நடைபெறுகிறது.

Oct 08, 2026

ஹர்மன்பிரீத் கவுருக்குப் புதிய கேப்டன் ஸ்மிர்தி மந்தனா புகழாரம்

இந்தியப் பெண்கள் கிரிக்கெட் அணியின் கேப்டனாகக் கடந்த 10 ஆண்டுகளாகச் செயல்பட்டு வந்த 37 வயது ஹர்மன்பிரீத் கவுர், கேப்டன் பொறுப்பில் இருந்து அண்மையில் விலகினார். இதைத் தொடர்ந்து அணியின் புதிய கேப்டனாக ஸ்மிர்தி மந்தனா நியமிக்கப்பட்டார்.இந்நிலையில், கேப்டன் பதவியில் இருந்து ஒதுங்கிய ஹர்மன்பிரீத் கவுருக்குப் புதிய கேப்டன் ஸ்மிர்தி மந்தனா புகழாரம் சூட்டியுள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள இன்ஸ்டாகிராம் பதிவில்:"இத்தனை ஆண்டுகளாக உங்களுடன் இணைந்து விளையாடியது பெருமகிழ்ச்சி அளிக்கிறது. உங்களது 10 ஆண்டு கால தலைமுறைத் தலைமைத்துவம் (Leadership) மிகவும் அற்புதமானது. நாட்டிற்காக மேலும் பல வெற்றிகளை ஈட்ட உங்களுடன் இணைந்து தொடர்ந்து பாடுபடுவோம்" எனக் குறிப்பிட்டுள்ளார்.

Oct 08, 2026

சர்வதேச கால்பந்திலிருந்து கண்ணீர் மல்க விடைபெற்றார் லயோனல் மெஸ்சி!

அர்ஜென்டினா கால்பந்து அணியின் ஜாம்பவானும், அந்த அணியின் கதாநாயகனுமான லயோனல் மெஸ்சி சர்வதேச கால்பந்து போட்டிகளில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்தார். உலகக் கோப்பை கால்பந்து இறுதி ஆட்டத்தில் அவரது தலைமையிலான அர்ஜென்டினா அணி 0-1 என்ற கோல் கணக்கில் ஸ்பெயினிடம் தோல்வியடைந்தது. அடுத்த சில நாட்களில் அவரது தந்தை காலமானதால் நிலைகுலைந்த மெஸ்சி, தனது ஓய்வு முடிவை அதிரடியாக அறிவித்தார்.இருப்பினும், அர்ஜென்டினா கால்பந்து அணியின் துருவ நட்சத்திரமாக விளங்கிய மெஸ்சிக்கு அதிகாரபூர்வமாகப் பிரியாவிடை கொடுக்கும் போட்டிக்கு அந்த நாட்டு கால்பந்து சம்மேளனம் ஏற்பாடு செய்திருந்தது. இந்தப் பிரிவுபசாரப் போட்டி, அர்ஜென்டினா தலைநகர் பியூனஸ் அயர்ஸில் உள்ள மானுமென்டல் ஸ்டேடியத்தில் நடைபெற்றது. இதில் அர்ஜென்டினா மற்றும் ஆப்பிரிக்க நாடான பெனின் அணிகள் மோதின.39 வயதான மெஸ்சி, கடந்த 2005-ம் ஆண்டில் சர்வதேச போட்டிகளில் அறிமுகமானார். இந்த பிரியாவிடை போட்டியையும் சேர்த்து, அவர் அர்ஜென்டினா அணிக்காக மொத்தம் 208 ஆட்டங்களில் விளையாடி 126 கோல்களை அடித்துள்ளார். சர்வதேச கால்பந்தில் அதிக கோல்கள் அடித்தவர்களின் பட்டியலில் போர்ச்சுகல் கேப்டன் கிறிஸ்டியானோ ரொனால்டோவுக்கு (146 கோல்கள்) அடுத்த இடத்தில் மெஸ்சி இருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.சர்வதேச போட்டிகளில் இருந்து ஓய்வு பெற்றாலும், மேலும் சில ஆண்டுகள் கிளப் போட்டிகளில் தொடர மெஸ்சி முடிவு செய்துள்ளார். தற்போது அவர் அமெரிக்காவின் 'இன்டர் மியாமி' (Inter Miami) கிளப் அணிக்காக விளையாடி வருகிறார்.

Oct 08, 2026

ஆசிய விளையாட்டில் 3 பதக்கம் வென்ற தடகள வீராங்கனை வித்யா மற்றும் பயிற்சியாளருக்கு கார் பரிசு!

ஜப்பானில் நடைபெற்ற ஆசிய விளையாட்டுப் போட்டிகளில், இந்திய தடகள வீராங்கனையான தமிழகத்தைச் சேர்ந்த வித்யா ராம்ராஜ் 3 பதக்கங்களை வென்று அசத்தினார். இவர் பெண்கள் அணிக்கான தொடர் ஓட்டத்தில் தங்கமும், கலப்பு தொடர் ஓட்டத்தில் வெள்ளியும், 400 மீட்டர் தடை ஓட்டத்தில் வெண்கலப் பதக்கமும் கைப்பற்றித் தடகள ராணியாக ஜொலித்தார்.சாதனை படைத்த வித்யாவுக்கும், அவரது பயிற்சியாளர் நேஹ்பால் சிங்குக்கும் 'வேலம்மாள் நெக்ஸஸ்' குழுமம் சார்பில் பிரமாண்டமான பாராட்டு விழா நடத்தப்பட்டது. சென்னை ஆவடியில் உள்ள வேலம்மாள் வித்யாலயா பள்ளியில் நடந்த இந்த விழாவில், வீராங்கனை வித்யா, அவரது தாயார் மற்றும் பயிற்சியாளர் நேஹ்பால் சிங் ஆகியோரை மாணவர்கள் அலங்கரிக்கப்பட்ட சாரட் வண்டியில் ஊர்வலமாக அழைத்துச் சென்று உற்சாக வரவேற்பு அளித்தனர்.பின்னர், வித்யாவைத் தலைசிறந்த வீராங்கனையாக உருவாக்கியதில் முக்கிய பங்காற்றிய அவரது பயிற்சியாளருக்கும், வீராங்கனை வித்யாவுக்கும் தலா ஒரு புதிய கார் பரிசாக வழங்கப்பட்டது. இவற்றை വേலம்மாள் நெக்ஸஸ் நிறுவனத்தின் தாளாளர் எம்.வி.எம். வேல்மோகன் வழங்கிப் பாராட்டினார்.

1 2 3 4 5 6 7 8 9 10 ... 181 182

AD's



More News