வெம்பக்கோட்டை வட்டத்தில் "உங்களைத் தேடி உங்கள் ஊரில்" என்ற திட்டத்தின் கீழ், அரசின் திட்டங்கள் மற்றும் சேவைகள் பொதுமக்களிடம் சென்றடைவது குறித்து, மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் கள ஆய்வு செய்தார். ---
மாவட்ட ஆட்சியர் மற்றும் மாவட்ட அளவிலான அலுவலர்கள் மக்களை தேடிச்சென்று குறைகளைக் கேட்டறியவும், பல்வேறு துறைகளின் மூலம் செயல்படுத்தப்படும் திட்டங்கள், செயல்பாடுகளை விரைவுபடுத்தவும் மற்றும் வழங்கப்படும் சேவைகளின் தரத்தை மேம்படுத்தவும், மக்களை நாடி மக்கள் குறைகளைக் கேட்டு, உடனுக்குடன் தீர்வு காண அரசு இயந்திரம் களத்திற்கே சென்று ஆய்வு செய்திட "உங்களைத் தேடி உங்கள் ஊரில்" என்ற புதிய திட்டம் தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களால் அறிவிக்கப்பட்டு, செயல்படுத்தப்பட்டு வருகிறது.
அதன்படி, விருதுநகர் மாவட்டம், வெம்பக்கோட்டை வட்டத்தில் "உங்களைத் தேடி உங்கள் ஊரில்" என்ற திட்ட முகாமானது 16.10.2024 இன்று காலை 9 மணி முதல் மறுநாள் 17.10.2024 அன்று காலை 9 மணி வரை நடைபெறவுள்ளது. இந்த முகாமின் கீழ், பல்வேறு அரசுத்துறை அலுவலர்கள் அரசின் திட்டங்கள், செயல்பாடுகளை விரைவுபடுத்தவும் மற்றும் வழங்கப்படும் சேவைகளின் தரத்தை மேம்படுத்தவும் கள ஆய்வு மேற்கொண்டு வருகின்றனர்.அதனடிப்படையில், வெம்பக்கோட்டை அரசு துணை சுகாதார நிலையத்தினை பார்வையிட்டு, அங்கு சிகிச்சை முறைகள், மருந்துகளின் இருப்பு, அடிப்படை வசதிகள் குறித்து கேட்டறிந்து மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் ஆய்வு செய்தார்.
பின்னர், வெம்பக்கோட்டை ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில், மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் மாணவர்களின் கற்றல் திறன், மாணவர்களுக்கு வழங்கப்படும் மதிய உணவு குறித்து ஆய்வு செய்து, அங்குள்ள ஆசிரியர்களிடம் மாணவர்களின் கல்வி தரம், கற்பிக்கும் முறைகள், வருகைப்பதிவேடு, உள்ளிட்டவைக் குறித்து கேட்டறிந்தார்.மேலும், வெம்பக்கோட்டை புள்ளியல் துறை அலுவலகத்தினை பார்வையிட்டு, அங்கு பராமரிக்கப்படும் பதிவேடுகள், கோப்புகளை மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் ஆய்வு செய்தார்.பின்னர், வெம்பக்கோட்டை அணையின் கரைப்பகுதியில் பனை விதைகள் நடும் பணியினை மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் துவக்கி வைத்தார்.
தொடர்ந்து, வெம்பக்கோட்டை வட்டம், குண்டாயிருப்பு ஊராட்சியில் 21 வீடுகள் ரூ.1.28 கோடி மதிப்பில் திருநங்கைகளுக்காக கட்டப்பட்டு வருவதையும், ஆலங்குளம் கிராமத்தில் கலைஞரின் கனவு இல்லம் திட்டத்தின் கீழ் வீடு கட்டப்பட்டு வருவதையும் மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.மேலும், ஆலங்குளம் ஏ.ரெ.இரா நினைவு அரசு மேல்நிலைப்பள்ளியில் ஆசிரியர்களிடம் மாணவர்களின் கல்வி தரம், கற்பிக்கும் முறைகள், வருகைப்பதிவேடு, 10 மற்றும் 12 ஆம் வகுப்பு தேர்ச்சி விகிதம் உள்ளிட்டவைக் குறித்து கேட்டறிந்தார்.அதனைத்தொடர்ந்து, ஆலங்குளத்தில் உள்ள நியாய விலைக்கடையில் பயன்பெறும் மொத்த குடும்ப அட்டைகளின் எண்ணிக்கை, பொருட்களின் இருப்பு, பொதுமக்களுக்கு விநியோகிக்கப்படும் அரிசி, பருப்புகள் மற்றும் அவைகளின் தரம் குறித்து கேட்டறிந்து ஆய்வு செய்தார்.அதனை தொடர்ந்து, வெம்பக்கோட்டை ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில், மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் பொதுமக்களிடம் பல்வேறு கோரிக்கைகள் தொடர்பான மனுக்களை பெற்று குறைகளை கேட்டறிந்தார்.
பின்னர், அனைத்து ஊராட்சிகளில் மேற்கொள்ள வேண்டிய குடிநீர், சுகாதாரம் மற்றும் சாலைப் பணிகள், அரசின் திட்டங்கள் மற்றும் சேவைகள் உரிய பயனாளிகளை சென்றடைவதை உறுதி செய்வது குறித்து அனைத்து அரசு அலுவலர்களுடனான ஆலோசனைக் கூட்டம் மாவட்ட ஆட்சித்தலைவர் முனைவர் வீ.ப.ஜெயசீலன்,I A S, அவர்கள் தலைமையில் நடைபெற்றது.இந்நிகழ்ச்சியில், மாவட்ட வருவாய் அலுவலர் திரு.இரா.ராஜேந்திரன், திட்ட இயக்குநர் (மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை) மரு.தண்டபாணி, உதவி ஆட்சியர்(பயிற்சி) திரு.ஹிமான்சு மங்கள்,I A S, அவர்கள், தனித்துணை ஆட்சியர் (சமூக பாதுகாப்பு திட்டம்) திரு.காளிமுத்து, கோட்டாட்சியர் திரு.சிவகுமார், வட்டாட்சியர் உட்பட பல்வேறு துறை அரசு அலுவலர்கள் பலர் கலந்து கொண்டனர்.
0
Leave a Reply