25 YEARS OF EXCELLENCE

சமீபத்திய நிகழ்வுகள்:
12 நாளுக்கு ஒருமுறை ராஜபாளையத்தில் குடிநீர் சப்ளை. >> வெயில் தாக்கம்: ராஜபாளையத்தில் இளநீர் விலை கிடுகிடு உயர்வு. >> சிருங்கேரி ஸ்ரீ சாரதா பீடம், ஜகத்குரு ஸ்ரீ ஸ்ரீ விதுசேகரபாரதீ ஸ்வாமிகள் அவர்களின் வர்தந்தி பூஜை. >> இராஜபாளையம் மூத்தோர் நலச்சங்கம் மற்றும் மாண்புமிகு P.S. குமாரசாமி ராஜா நூற்றாண்டு திருமண மண்டபம் இணைந்து பெருமையுடன் கொண்டாடிய “சுதந்திர தினவிழா”. >> ராஜபாளையம் ரோட்டரி சங்கம், காவேரி மருத்துவமனை–திருநெல்வேலி இணைந்து நடத்திய இலவச இருதயப் பரிசோதனை முகாம். >> இராஜபாளையம் ரோட்டரி சங்கம் நாற்று இலக்கிய அமைப்பு இணைந்து வழங்கும் யானைகள் தின விழா கொண்டாட்டம் - 2026 >> ஆகஸ்ட் - 12 ,யானைகள் தின விழா முன்னிட்டு ,மாணவர்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்த ஒவியப் போட்டிகள். >> ஆடிப்பெருக்கு சிறப்பு வழிபாடு. >> தொடர்பு எல்லைக்கு வெளியே அடுக்குமாடி குடியிருப்பு வாசிகள்; அலைபேசி சிக்னல் இன்றி அவதி. >> வயல் தின விழா. >>


விளையாட்டு (SPORTS)

Sep 03, 2026

தேசிய யூத் தடகள சாம்பியன்ஷிப்: சஹாயா ஜெமிமாவுக்கு வெண்கலம்.

பஞ்சாப் மாநிலம் லூதியானாவில் 21-வது தேசிய யூத் தடகள சாம்பியன்ஷிப் போட்டிகள் நடைபெற்று வருகின்றன. 18 வயதுக்கு உட்பட்டோருக்கான இந்தத் தொடரில் பெண்களுக்கான 400 மீட்டர் ஓட்டப்பந்தயத்தின் இறுதிப்போட்டி நேற்று நடைபெற்றது.இதில் தமிழகத்தைச் சேர்ந்த சஹாயா ஜெமிமா 55.14 வினாடிகளில் பந்தய தூரத்தை கடந்து 3-வது இடத்தைப் பிடித்தார். இதன் மூலம் அவர் வெண்கலப் பதக்கத்தை வென்றார்.

Sep 03, 2026

லண்டன் ஸ்குவாஷ் கிளாசிக்: அனாஹத், ரமித் டான்டன் 2-வது சுற்றுக்கு முன்னேற்றம்.

லண்டனில் நடைபெற்று வரும் கிளாசிக் ஸ்குவாஷ் தொடரில் இந்திய வீரர், வீராங்கனைகள் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி வருகின்றனர்.பெண்களுக்கான முதல் சுற்றில் இந்தியாவின் அனாஹத் சிங், எகிப்தின் மரியம் மெட்வாலியை எதிர்கொண்டார். வெறும் 11 நிமிடங்கள் நீடித்த இந்தப் போட்டியில் அபாரமாக விளையாடிய அனாஹத் சிங் 2-0 என்ற கணக்கில் (11-3, 11-2) வெற்றி பெற்று 2-வது சுற்றுக்கு முன்னேறினார்.ஆண்களுக்கான முதல் சுற்றில் இந்தியாவின் ரமித் டான்டன், கத்தாரின் அப்துல்லா அல்-தாமிமியை எதிர்கொண்டார். இதில் ரமித் டான்டன் 2-0 என்ற கணக்கில் (11-6, 11-7) வெற்றி பெற்று அடுத்த சுற்றுக்குள் நுழைந்தார்.மற்றொரு ஆட்டத்தில் இந்தியாவின் வீர் சோட்ரானி, சுவிட்சர்லாந்தின் யானிக் வில்ஹெல்மியை எதிர்கொண்டார். இதில் வீர் சோட்ரானி 0-2 (9-11, 9-11) என்ற கணக்கில் தோல்வியடைந்தார்.

Sep 03, 2026

ஈட்டி எறிதல் போட்டியில் தமிழக வீரர் மனோஜ் குமார் தங்கப் பதக்கத்தை கைப்பற்றினார்.

இந்திய தடகள கூட்டமைப்பு சார்பில் இந்திய தடகள சீரிஸ் போட்டிகள் நடத்தப்பட்டு வருகின்றன. இதன் 15-வது தொடர் உத்தரப் பிரதேச மாநிலம் மீரட்டில் நேற்று நடைபெற்றது.ஆண்களுக்கான ஈட்டி எறிதல் போட்டியில் தமிழக வீரர் மனோஜ் குமார் அபாரமாக செயல்பட்டு தங்கப் பதக்கத்தை கைப்பற்றினார். தனது 5-வது முயற்சியில் அதிகபட்சமாக 77.82 மீட்டர் தூரம் ஈட்டி எறிந்து முதலிடம் பிடித்தார்.ஆர்மி அணியின் பிபின் 73.94 மீட்டர் தூரத்துடன் வெள்ளிப் பதக்கமும், உத்தரகாண்டைச் சேர்ந்த விகாஷ் 73.07 மீட்டர் தூரத்துடன் வெண்கலப் பதக்கமும் வென்றனர்.ஆண்களுக்கான குண்டு எறிதலில் ராஜஸ்தானின் ராம் சந்திர மாலி 15.91 மீட்டர் தூரம் எறிந்து தங்கப் பதக்கம் வென்றார். தமிழக வீரர் பாலாஜி 15.83 மீட்டர் தூரத்துடன் வெள்ளிப் பதக்கமும், பஞ்சாப் வீரர் மால்கீட் சிங் 15.74 மீட்டர் தூரத்துடன் வெண்கலப் பதக்கமும் பெற்றனர்.ஆண்களுக்கான 400 மீட்டர் ஓட்டத்தில் கேரளாவைச் சேர்ந்த மிஜோ சாக்கோ குரியன் 46.89 வினாடிகளில் இலக்கை கடந்து தங்கப் பதக்கம் வென்றார். தொடர்ந்து 200 மீட்டர் ஓட்டத்திலும் 21.41 வினாடிகளில் ஓடி வெள்ளிப் பதக்கம் கைப்பற்றினார்.ஆண்களுக்கான நீளம் தாண்டுதலில் தமிழகத்தின் தருண் விகாஷ் 7.48 மீட்டர் தூரம் தாண்டி வெள்ளிப் பதக்கம் வென்றார். இதே தூரத்தை பதிவு செய்த சரண் வெண்கலப் பதக்கத்தை கைப்பற்றினார்.

Sep 02, 2026

யூத் தடகளத்தில் தேசிய சாதனை – தமிழக வீரர் நீல் சாம்ராஜ் அசத்தல்!

பஞ்சாப் மாநிலம் லூதியானாவில் 21வது தேசிய யூத் தடகள சாம்பியன்ஷிப் போட்டிகள் நேற்று தொடங்கின. 18 வயதுக்கு உட்பட்டோருக்கான இந்த மூன்று நாள் தொடரில், தமிழகம் சார்பில் 21 வீரர்கள் மற்றும் 16 வீராங்கனைகள் என மொத்தம் 37 பேர் பங்கேற்கின்றனர்.நேற்று நடைபெற்ற ஆண்களுக்கான 100 மீட்டர் ஓட்டப்பந்தயத்தில் தமிழக வீரர் நீல் சாம்ராஜ், 10.46 வினாடிகளில் இலக்கை எட்டி தங்கப்பதக்கம் வென்றார். இதன் மூலம் யூத் தடகளப் பிரிவில் புதிய தேசிய சாதனையையும் படைத்தார்.இதற்கு முன்பு 2023ஆம் ஆண்டு அன்ஷு ராஜ் 10.63 வினாடிகளில் 100 மீட்டரை கடந்ததே தேசிய சாதனையாக இருந்தது.பெண்களுக்கான 100 மீட்டர் ஓட்டப்பந்தயத்தில் தமிழகத்தின் மிர்த்திகா, 11.78 வினாடிகளில் பந்தயத்தை நிறைவு செய்து தங்கப்பதக்கம் வென்றார். இது இந்தத் தொடரின் புதிய சாதனையாக அமைந்தது.பெண்களுக்கான 400 மீட்டர் அரையிறுதி முதல் பிரிவில் தமிழக வீராங்கனை சகாய ஜெமிமா, 55.94 வினாடிகளில் பந்தயத்தை நிறைவு செய்து மூன்றாவது இடம் பிடித்தார்.

Sep 02, 2026

யு.எஸ். ஓபன்: அல்காரஸ், லிண்டா உள்ளிட்டோர் 2வது சுற்றுக்கு முன்னேற்றம்!

அமெரிக்காவின் நியூயார்க் நகரில் நடைபெற்று வரும் யு.எஸ். ஓபன் கிராண்ட்ஸ்லாம் டென்னிஸ் தொடரில், முன்னணி வீரர், வீராங்கனைகள் வெற்றியுடன் இரண்டாவது சுற்றுக்கு முன்னேறியுள்ளனர்.ஆண்கள் ஒற்றையர் பிரிவு முதல் சுற்றில் உலகின் 3ஆம் நிலை வீரரும், நடப்பு சாம்பியனுமான ஸ்பெயினின் கார்லஸ் அல்காரஸ், ரஷ்யாவின் ரோமன் ஷபியுலினை எதிர்கொண்டார்.முதல் செட்டை 6-4 என கைப்பற்றிய அல்காரஸ், அடுத்த இரு செட்களையும் தலா 6-4 என வென்றார். 2 மணி நேரம் 22 நிமிடங்கள் நடைபெற்ற போட்டியின் முடிவில், அல்காரஸ் 6-4, 6-4, 6-4 என்ற நேர் செட் கணக்கில் வெற்றி பெற்று 2வது சுற்றுக்கு முன்னேறினார்.பெண்கள் ஒற்றையர் பிரிவு முதல் சுற்றில் உலகின் 6ஆம் நிலை வீராங்கனையும், நடப்பு விம்பிள்டன் சாம்பியனுமான செக்குடியரசின் லிண்டா நோஸ்கோவா, அமெரிக்காவின் கேட்டீயை எதிர்கொண்டார்.முதல் செட்டை 7-5 என கைப்பற்றிய லிண்டா, இரண்டாவது செட்டை 6-1 என எளிதாக வென்றார். 1 மணி நேரம் 37 நிமிடங்கள் நடைபெற்ற போட்டியின் முடிவில், 7-5, 6-1 என்ற நேர் செட் கணக்கில் வெற்றி பெற்று அடுத்த சுற்றுக்கு முன்னேறினார்.

Sep 02, 2026

விளையாட்டு போட்டிகள் – முக்கிய அப்டேட்கள்

 இந்தியா – நியூசிலாந்து டெஸ்ட் தொடர்.இந்திய கிரிக்கெட் அணி நியூசிலாந்து மண்ணில் இரண்டு டெஸ்ட் போட்டிகளில் விளையாட உள்ளது.முதல் டெஸ்ட் வெலிங்டனில் நவம்பர் 19 முதல் 23ஆம் தேதி வரையும், இரண்டாவது டெஸ்ட் கிறைஸ்ட்சர்ச்சில் நவம்பர் 27 முதல் டிசம்பர் 1ஆம் தேதி வரையும் நடைபெற உள்ளது.இந்த தொடருக்கு தயாராகும் வகையில் இந்திய ‘ஏ’ அணி, அதிகாரப்பூர்வமற்ற மூன்று டெஸ்ட் போட்டிகளில் விளையாட உள்ளது. தலா நான்கு நாட்கள் நடைபெறும் இந்தத் தொடர் அக்டோபர் 24ஆம் தேதி தொடங்குகிறது. மாஸ்டர்ஸ் பாட்மின்டன்இந்தோனேஷியாவில் நடைபெற்று வரும் மாஸ்டர்ஸ் பாட்மின்டன் தொடரின் ஆண்கள் ஒற்றையர் பிரிவு முதல் சுற்றில் இந்தியாவின் தருண், தனது சக வீரர் மஞ்சுநாத்தை 21-15, 21-14 என்ற நேர் கேம் கணக்கில் வீழ்த்தி அடுத்த சுற்றுக்கு முன்னேறினார்.சீனாவில் சர்வதேச மாஸ்டர்ஸ் சூப்பர் 750 பாட்மின்டன் தொடர் நேற்று தொடங்கியது.பெண்கள் ஒற்றையர் பிரிவு முதல் சுற்றில் உலகத் தரவரிசையில் 25வது இடத்தில் உள்ள இந்தியாவின் உன்னதி ஹூடா, தென் கொரியாவின் கிம் கா யுனிடம் 10-21, 18-21 என்ற கணக்கில் தோல்வியடைந்து தொடரில் இருந்து வெளியேறினார்.

Sep 01, 2026

சர்வதேச கால்பந்து அரங்கில் இருந்து ஓய்வு பெற்றார் மெஸ்ஸி.

அர்ஜென்டினா கால்பந்து அணியின் கேப்டனும், உலகின் தலைசிறந்த கால்பந்து வீரர்களில் ஒருவருமான லயோனல் மெஸ்ஸி, சர்வதேச கால்பந்து போட்டிகளில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளார்.2005-ல் அர்ஜென்டினா அணியில் அறிமுகமான மெஸ்ஸி, 2006 உலகக் கோப்பை தொடரில் செர்பியா மற்றும் மான்டேநெக்ரோ அணிக்கு எதிரான போட்டியில் முதன்முறையாக களமிறங்கினார். இதையடுத்து 2010, 2014, 2018 மற்றும் 2022 உலகக் கோப்பை தொடர்களிலும் அவர் பங்கேற்றார்.2022-ம் ஆண்டு கத்தாரில் நடைபெற்ற உலகக் கோப்பை தொடரின் இறுதிப் போட்டியில் பிரான்ஸ் அணியை வீழ்த்தி அர்ஜென்டினா சாம்பியன் பட்டம் வென்றது. இதன் மூலம் 1978, 1986-க்கு பிறகு அர்ஜென்டினா மூன்றாவது முறையாக உலகக் கோப்பையை கைப்பற்றியது. இந்த வெற்றியில் மெஸ்ஸியின் பங்களிப்பு முக்கியமானதாக இருந்தது.தனது ஓய்வு குறித்து மெஸ்ஸி கூறுகையில், “உலகக் கோப்பை இறுதிப் போட்டிக்குப் பிறகு ஓய்வு குறித்து தீவிரமாக யோசித்தேன். தற்போது அர்ஜென்டினா அணியில் இருந்து ஓய்வு பெறுகிறேன். இது மிகவும் வேதனையான முடிவு. ஆனால் ஓய்வுக்கான நேரம் வந்துவிட்டதை புரிந்து கொண்டேன்” என்றார்.மேலும், “கடந்த 20 ஆண்டுகளாக நீங்கள் வழங்கிய அன்பிற்கு நன்றி. மைதானத்தில் இருந்தபோது உங்கள் குரலைக் கேட்கும் வாய்ப்பு இனி கிடைக்காது. இனிமேல், உங்களில் ஒருவராக இருந்து அர்ஜென்டினா அணிக்கு ஆதரவு அளிப்பேன்” என்றும் அவர் தெரிவித்தார்.

Sep 01, 2026

ஆசிய விளையாட்டு: இந்திய வாள் சண்டை அணியில் பவானி தேவி.

ஜப்பானின் அச்சி-நகோயா நகரில் நடைபெற உள்ள 20-வது ஆசிய விளையாட்டுப் போட்டியில் பங்கேற்கும் இந்திய வாள் சண்டை அணியில் தமிழகத்தைச் சேர்ந்த பவானி தேவி இடம் பெற்றுள்ளார்.ஆசிய விளையாட்டுப் போட்டிகள் செப்டம்பர் 19 முதல் அக்டோபர் 4 வரை நடைபெற உள்ளன. இதில் 43 விளையாட்டுகளில் 71 பிரிவுகளில் போட்டிகள் நடத்தப்படுகின்றன.இந்தியா சார்பில் 35 விளையாட்டுகளில் 265 வீரர்கள் மற்றும் 227 வீராங்கனைகள் என மொத்தம் 492 பேர் பங்கேற்க உள்ளனர். இவர்களில், 20 பேர் கொண்ட இந்திய வாள் சண்டை அணி தற்போது அறிவிக்கப்பட்டுள்ளது.இந்த அணியில் தமிழகத்தைச் சேர்ந்த முன்னணி வாள் சண்டை வீராங்கனையான பவானி தேவி இடம் பெற்றிருப்பது தமிழக விளையாட்டு ரசிகர்களுக்கு மகிழ்ச்சியளிக்கும் செய்தியாக அமைந்துள்ளது.

Sep 01, 2026

கால்பந்து: சிரியாவை வீழ்த்தியது இந்தியா.

உஸ்பெகிஸ்தானில் நடைபெற்று வரும் 20 வயதுக்குட்பட்டோருக்கான ஆசிய கோப்பை கால்பந்து தொடரின் 2027-ம் ஆண்டு தகுதிச்சுற்று போட்டிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகின்றன.‘பி’ பிரிவில் நடைபெற்ற முதல் போட்டியில் இந்திய அணி 1-0 என்ற கோல் கணக்கில் சிரியா அணியை வீழ்த்தி வெற்றியுடன் தனது பயணத்தை தொடங்கியது.இந்த வெற்றியைத் தொடர்ந்து இந்திய அணி, செப்டம்பர் 3-ம் தேதி நடைபெறும் அடுத்த போட்டியில் போட்டியை நடத்தும் உஸ்பெகிஸ்தான் அணியை எதிர்கொள்கிறது.

Sep 01, 2026

பாரா டேபிள் டென்னிஸ்: இந்தியாவுக்கு 16 பதக்கங்கள்.

பின்லாந்தில் நடைபெற்ற மாற்றுத்திறனாளிகளுக்கான உலக ‘பாரா பியூச்சர்’ டேபிள் டென்னிஸ் தொடரில் இந்திய வீரர், வீராங்கனைகள் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினர்.இந்தத் தொடரில் இந்தியா 6 தங்கப் பதக்கங்கள், 4 வெள்ளிப் பதக்கங்கள் மற்றும் 6 வெண்கலப் பதக்கங்கள் என மொத்தம் 16 பதக்கங்களை வென்றது.இந்திய வீரர்களின் சிறப்பான செயல்பாடு, சர்வதேச பாரா டேபிள் டென்னிஸ் அரங்கில் நாட்டின் வளர்ந்து வரும் திறமையை வெளிப்படுத்தியுள்ளது.

1 2 3 4 5 6 7 8 9 10 ... 175 176

AD's