25 YEARS OF EXCELLENCE

சமீபத்திய நிகழ்வுகள்:
இசை விழாவில் 'நித்யாஞ்சலி' மாணவர்களின் நடன நாடகம் 'காலத்தின் மகத்துவத்தை' உணர்த்தியது. >> மாவட்ட சமூகநலத்துறை மற்றும் இராஜபாளையம் மூத்தோர் நலச்சங்கம் இணைந்து நடத்திய இரண்டு நாள் டிஜிட்டல் மற்றும் நிதிக்கல்வித்திட்டம் பற்றிய விழிப்புணர்வு முகாம். >> மதுரையில் நடைபெற்ற சிறப்பாக வணிகம் புரிந்த முன்னணி முகவர்கள் கூட்டத்தில் திரு வெங்கட் நாராயண ராஜா அவர்களை எல்ஐசி சேர்மன் அவர்கள் கௌரவித்தார். >> ராஜபாளையத்தில் பெண்களுக்கான நீண்ட தூர நடை போட்டி. >> 56 மி.மீ. மழை ராஜபாளையத்தில் பதிவு! >> 12 நாளுக்கு ஒருமுறை ராஜபாளையத்தில் குடிநீர் சப்ளை. >> வெயில் தாக்கம்: ராஜபாளையத்தில் இளநீர் விலை கிடுகிடு உயர்வு. >> சிருங்கேரி ஸ்ரீ சாரதா பீடம், ஜகத்குரு ஸ்ரீ ஸ்ரீ விதுசேகரபாரதீ ஸ்வாமிகள் அவர்களின் வர்தந்தி பூஜை. >> இராஜபாளையம் மூத்தோர் நலச்சங்கம் மற்றும் மாண்புமிகு P.S. குமாரசாமி ராஜா நூற்றாண்டு திருமண மண்டபம் இணைந்து பெருமையுடன் கொண்டாடிய “சுதந்திர தினவிழா”. >> ராஜபாளையம் ரோட்டரி சங்கம், காவேரி மருத்துவமனை–திருநெல்வேலி இணைந்து நடத்திய இலவச இருதயப் பரிசோதனை முகாம். >>


விளையாட்டு (SPORTS)

Sep 21, 2026

செஸ் ஒலிம்பியாட் – இந்திய ஆண்கள் அணிக்கு 5-வது வெற்றி!

.உஸ்பெகிஸ்தானில் நடைபெற்று வரும் 46-வது செஸ் ஒலிம்பியாட் போட்டியில் இந்திய ஆண்கள் அணி தொடர்ந்து வெற்றிகளை குவித்து வருகிறது.ஓபன் பிரிவின் 5-வது சுற்றில் நடப்பு சாம்பியனான இந்திய அணி, நெதர்லாந்தை எதிர்கொண்டது.இதில் இந்தியாவின் பிரக்ஞானந்தா, நெதர்லாந்தின் அனிஷ் கிரியை வீழ்த்தினார். மற்றொரு போட்டியில் இந்திய வீரர் குகேஷ், எர்வின் ஐ'அமியை தோற்கடித்தார்.அர்ஜுன் எரிகைசி மற்றும் நிஹால் சரின் ஆகியோர் தங்களது ஆட்டங்களை டிரா செய்தனர்.முடிவில் இந்திய அணி 3–1 என்ற கணக்கில் வெற்றி பெற்று, தொடர்ச்சியாக 5-வது வெற்றியை பதிவு செய்தது.பெண்கள் பிரிவில் இந்தியாவுக்கு முதல் தோல்வி.பெண்கள் பிரிவில் திவ்யா தேஷ்முக், கொனேரு ஹம்பி மற்றும் வந்திகா அகர்வால் ஆகியோர் தங்களது ஆட்டங்களை டிரா செய்தனர்.முடிவில் இந்திய பெண்கள் அணி 1.5–2.5 என்ற கணக்கில் தோல்வியை சந்தித்தது.

Sep 19, 2026

ஆசிய விளையாட்டு இன்று தொடக்க விழா.

ஜப்பானின் அய்ச்சி-நகோயாவில் 20-வது ஆசிய விளையாட்டுப் போட்டிகள் செப். 19 முதல் அக். 4-ம் தேதி வரை நடைபெற உள்ளன. இந்தியா சார்பில் 35 போட்டிகளில் 501 பேர் (267 வீரர்கள், 234 வீராங்கனைகள்) பங்கேற்க உள்ளனர்.இதில் பங்கேற்கும் நாடுகளை வரவேற்கும் விதமாக, தொடக்க விழாவுக்கு முன்பாக நேற்று மதியம் 1.30 மணிக்கு இந்தியா, ஏமன், வட கொரியா உள்ளிட்ட நாடுகளின் கொடிகள் ஏற்றப்பட்டன.இன்று நடைபெறும் ஆசிய விளையாட்டு தொடக்க விழா அணிவகுப்பில், இந்திய மூவர்ணக் கொடியை இரண்டு ஒலிம்பிக் பதக்கங்கள் வென்ற மனு பாகர் (துப்பாக்கிச் சுடுதல்), கடந்த இரண்டு ஆசிய விளையாட்டுப் போட்டிகளில் தங்கம் வென்ற தஜிந்தர்பால் சிங் தூர் (குண்டு எறிதல்) ஆகியோர் ஏந்திச் செல்ல உள்ளனர்.தஜிந்தர்பால் சிங் தூர் கூறுகையில், “இந்தியக் கொடியை ஏந்திச் செல்வதை பெருமையாகக் கருதுகிறேன்” என்றார்.

Sep 19, 2026

செஸ் ஒலிம்பியாட்: இந்தியாவுக்கு ‘ஹாட்ரிக்’ வெற்றி.

உஸ்பெகிஸ்தானில் 46-வது செஸ் ஒலிம்பியாட் போட்டிகள் நடைபெற்று வருகின்றன. ஓபன் பிரிவில் 3-வது சுற்றில் நடப்பு சாம்பியனான இந்தியா, இத்தாலி அணியை எதிர்கொண்டது.இந்தியாவின் குகேஷ் (கருப்பு காய்கள்), 33-வது நகர்த்தலில் இத்தாலியின் சபினோ புருனெல்லோவை (வெள்ளை காய்கள்) வீழ்த்தினார். மற்றொரு போட்டியில் இந்தியாவின் நிஹால் சரின் (வெள்ளை காய்கள்), 40-வது நகர்த்தலில் இத்தாலி வீரர் பிரான்செஸ்கோ சோனிசை (கருப்பு காய்கள்) தோற்கடித்தார்.இந்தியாவின் பிரக்ஞானந்தா, அர்ஜுன் எரிகைசி ஆகியோர் தங்களது போட்டிகளை ‘டிரா’ செய்தனர். முடிவில் இந்திய அணி 3-1 என்ற கணக்கில் வெற்றி பெற்று, தொடர்ச்சியாக 3-வது வெற்றியைப் பதிவு செய்தது.பெண்கள் பிரிவின் 3-வது சுற்றில் நடப்பு சாம்பியனான இந்தியா, கிரீஸ் அணியை எதிர்கொண்டது. இதில் இந்தியாவின் கொனேரு ஹம்பி (வெள்ளை காய்கள்), 46-வது நகர்த்தலில் கிரீஸ் வீராங்கனை ஸ்டாவ்ரூலாவை (கருப்பு காய்கள்) வீழ்த்தினார்.மற்ற இந்திய வீராங்கனைகளான வந்திகா அகர்வால், சவிதா ஸ்ரீ ஆகியோரும் வெற்றி பெற்றனர். இந்தியாவின் திவ்யா தேஷ்முக் தனது போட்டியை ‘டிரா’ செய்தார். முடிவில் இந்திய அணி 3.5-0.5 என்ற கணக்கில் வெற்றி பெற்று, ‘ஹாட்ரிக்’ வெற்றியைப் பதிவு செய்தது.

Sep 19, 2026

ஆசிய விளையாட்டு: கிரிக்கெட் அரையிறுதிக்கு இந்திய பெண்கள் அணி முன்னேற்றம்.

ஆசிய விளையாட்டுப் போட்டியில் பெண்கள் கிரிக்கெட்டில் இந்திய அணி அரையிறுதிக்கு முன்னேறியது. காலிறுதிப் போட்டியில் ஜப்பான் அணியை 8 விக்கெட் வித்தியாசத்தில் இந்தியா வீழ்த்தியது.ஜப்பானில் நடைபெற்று வரும் ஆசிய விளையாட்டுப் போட்டியில், பெண்கள் கிரிக்கெட் (டி20) காலிறுதியில் நடப்பு சாம்பியனான இந்தியா, ஜப்பான் அணிகள் மோதின.‘டாஸ்’ வென்ற இந்திய அணியின் கேப்டன் ஹர்மன்பிரீத் கவுர், முதலில் பந்துவீச்சைத் தேர்வு செய்தார்.இந்திய பந்துவீச்சை சமாளிக்க முடியாமல் தடுமாறிய ஜப்பான் அணி 19.5 ஓவர்களில் 57 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது.எளிய இலக்கைத் துரத்திய இந்திய அணி 5 ஓவர்களில் 2 விக்கெட் இழப்புக்கு 59 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றது. இதன் மூலம் இந்திய பெண்கள் அணி அரையிறுதிக்கு முன்னேறியது.

Sep 18, 2026

அபிஷேக் சர்மா அதிரடி சதம்: இந்தியா ஹாட்ரிக் வெற்றி.

ஆப்கானிஸ்தானுக்கு எதிரான 3-வது டி20 போட்டியில் இந்திய அணி 127 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்று, தொடரை 3-0 என்ற கணக்கில் முழுமையாக கைப்பற்றியது.இந்தியா வந்த ஆப்கானிஸ்தான் அணி, 3 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் பங்கேற்றது. முதல் இரண்டு போட்டிகளிலும் வெற்றி பெற்ற இந்திய அணி, ஏற்கனவே தொடரை 2-0 என கைப்பற்றியிருந்தது.டெல்லி அருண் ஜெட்லி மைதானத்தில் நடைபெற்ற கடைசி போட்டியில் டாஸ் வென்ற ஆப்கானிஸ்தான் அணி, முதலில் பந்துவீச்சைத் தேர்வு செய்தது. அதிரடியாக விளையாடிய இந்திய அணி, 20 ஓவர்களில் 7 விக்கெட் இழப்புக்கு 221 ரன்கள் குவித்தது. இந்திய வீரர் அபிஷேக் சர்மா 30 பந்துகளில் சதம் விளாசி அசத்தினார்.கடின இலக்கை துரத்திய ஆப்கானிஸ்தான் அணி, இந்திய பந்துவீச்சை சமாளிக்க முடியாமல் 14.1 ஓவர்களில் 94 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது. இதன்மூலம் இந்திய அணி 127 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று, தொடரை 3-0 என கைப்பற்றியது.

Sep 18, 2026

செஸ் ஒலிம்பியாட்: இந்திய அணிகளுக்கு தொடர்ந்து 2வது வெற்றி.

உஸ்பெகிஸ்தானின் கண்ட் நகரில் 46-வது செஸ் ஒலிம்பியாட் போட்டி நடைபெற்று வருகிறது. ஓபன் பிரிவில் 208 அணிகளும், பெண்கள் பிரிவில் 192 அணிகளும் என மொத்தம் 400 அணிகள் பங்கேற்றுள்ளன.ஓபன் பிரிவின் 2-வது சுற்றில் நடப்பு சாம்பியனான இந்திய அணி, இந்தோனேஷியாவை எதிர்கொண்டது. இந்தியாவின் நிஹால் சரின், 37-வது நகர்த்தலில் இந்தோனேஷியாவின் ஆரிப் அப்துல் ஹபிசை வீழ்த்தினார்.மற்ற போட்டிகளில் இந்திய வீரர்களான பிரக்ஞானந்தா, குகேஷ், விதித் குஜ்ராத்தி ஆகியோர் தங்களது ஆட்டங்களை டிரா செய்தனர். இதன்மூலம் இந்திய அணி 2.5-1.5 என்ற கணக்கில் வெற்றி பெற்று, தொடர்ச்சியாக 2-வது வெற்றியை பதிவு செய்தது. முதல் சுற்றில் தாய்லாந்தை இந்தியா வீழ்த்தியிருந்தது.பெண்கள் பிரிவின் 2-வது சுற்றில் நடப்பு சாம்பியனான இந்திய அணி, பின்லாந்தை எதிர்கொண்டது.இந்தியாவின் திவ்யா 38-வது நகர்த்தலில் பின்லாந்தின் ஜோஹன்னாவை வீழ்த்தினார். மேலும், இந்திய வீராங்கனைகள் வந்திகா அகர்வால், சவிதா ஸ்ரீ ஆகியோரும் வெற்றி பெற்றனர்.மற்றொரு ஆட்டத்தில் இந்தியாவின் வைஷாலி, அனஸ்டாசியா கெய்னானெனுக்கு எதிரான போட்டியை டிரா செய்தார்.முடிவில் இந்திய அணி 3.5-0.5 என்ற கணக்கில் வெற்றி பெற்று, தொடர்ந்து 2-வது வெற்றியை பதிவு செய்தது. முதல் சுற்றில் டொமினிகன் குடியரசு அணியை இந்தியா வீழ்த்தியிருந்தது.

Sep 18, 2026

நாளை தொடங்குகிறது ஆசிய விளையாட்டு: பதக்க வேட்டைக்கு தயாராகும் இந்தியா.

ஜப்பானின் அய்ச்சி-நகோயா நகரில் 20-வது ஆசிய விளையாட்டு போட்டிகள் நாளை தொடங்குகின்றன. செப்டம்பர் 19 முதல் அக்டோபர் 4-ம் தேதி வரை நடைபெறும் இந்த போட்டியில் 45 நாடுகளைச் சேர்ந்த சுமார் 11,000 வீரர், வீராங்கனைகள் பங்கேற்க உள்ளனர்.மொத்தம் 43 விளையாட்டுகளில் 469 பதக்கங்கள் வழங்கப்பட உள்ளன. இந்த முறை சர்பிங் மற்றும் டெக்பால் உள்ளிட்ட போட்டிகள் புதிதாக இடம்பெறுகின்றன.இந்தியா சார்பில் 35 விளையாட்டுகளில் 501 வீரர், வீராங்கனைகள் களமிறங்க உள்ளனர். இதில் 267 வீரர்களும், 234 வீராங்கனைகளும் இடம்பெற்றுள்ளனர்.கடந்த ஆசிய விளையாட்டில் இந்தியா 106 பதக்கங்களை வென்று பதக்கப் பட்டியலில் 4-வது இடம் பிடித்தது. இந்த முறையும் துப்பாக்கிச் சுடுதல், வில்வித்தை, பேட்மிண்டன், மல்யுத்தம், தடகளம் உள்ளிட்ட போட்டிகளில் இந்திய வீரர், வீராங்கனைகள் பதக்கங்களை வெல்லும் எதிர்பார்ப்பு உள்ளது.மேலும், ஆண்கள் ஹாக்கி, டி20 கிரிக்கெட் மற்றும் ஆண்கள் கபடி அணிகளும் பதக்கத்திற்காக களமிறங்குகின்றன. கடந்த முறை ஹாங்சோவில் நடைபெற்ற ஆசிய விளையாட்டில் இந்தியா சிறப்பான செயல்பாட்டை வெளிப்படுத்தி 106 பதக்கங்களுடன் 4-வது இடம் பிடித்திருந்தது.

Sep 17, 2026

20வது ஆசிய விளையாட்டுப் போட்டிகள் .

ஜப்பானின் அய்ச்சி, நகோயா நகரங்களில் வரும் செப். 19 முதல் அக். 4 வரை 20வது ஆசிய விளையாட்டுப் போட்டிகள் நடக்கின்றன.இந்தியா சார்பில் 35 வகையான விளையாட்டுகளில் 267 வீரர்கள், 234 வீராங்கனைகள் என மொத்தம் 501 பேர் களமிறங்குகின்றனர். தடகளத்தில் அதிகபட்சமாக 79 பேர் (36 வீரர்கள், 43 வீராங்கனைகள்) பங்கேற்கின்றனர். இவர்களுடன் 265 உதவியாளர்களும் சென்றுள்ளனர்.ஆசிய விளையாட்டு வரலாற்றில், கடந்த முறை (2022) 28 தங்கம், 38 வெள்ளி, 40 வெண்கலம் என அதிகபட்சமாக 106 பதக்கங்களைக் கைப்பற்றிய இந்தியா, பதக்கப் பட்டியலில் 4வது இடம் பிடித்தது.இதேபோல, இம்முறையும் இந்தியாவின் பதக்க எண்ணிக்கை அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.இந்திய டென்னிஸ் வீரர் சுமித் நாகல் கூறுகையில், “ஆசிய விளையாட்டில் இம்முறை டென்னிஸில் இந்தியாவுக்கு 3 பதக்கங்கள் உறுதி. ஒட்டுமொத்தமாக 113 பதக்கங்கள் கிடைக்கும்” என்றார்.

Sep 17, 2026

உலக பாரா துப்பாக்கி சுடுதல்: இந்திய அணிக்கு தங்கம்.

தென் கொரியாவில் மாற்றுத்திறனாளிகளுக்கான பாரா துப்பாக்கி சுடுதல் உலக சாம்பியன்ஷிப் போட்டி நடக்கிறது. பெண்கள் அணிகளுக்கான ‘ஆர்-2’ 10 மீ., ‘ஏர் ரைபிள்-எஸ்.எச்.1’ பிரிவு இறுதிப்போட்டியில், அவனி லெஹரா (629.4), மோனா அகர்வால் (626.8), மில்லி ஷா (622.4) ஆகியோர் அடங்கிய இந்திய அணி 1,878.6 புள்ளிகளுடன் முதலிடம் பிடித்து தங்கப்பதக்கத்தை வென்றது.பெண்களுக்கான தனிநபர் ‘ஆர்-2’ 10 மீ., ‘ஏர் ரைபிள்-எஸ்.எச்.1’ பிரிவு இறுதிப்போட்டியில் இந்தியாவின் மோனா அகர்வால் 250.0 புள்ளிகளுடன் வெள்ளிப்பதக்கமும், அவனி லெஹரா 229.4 புள்ளிகளுடன் வெண்கலப்பதக்கமும் கைப்பற்றினர். சிறப்பாக செயல்பட்ட மோனா அகர்வால், லாஸ் ஏஞ்சல்ஸ் பாராலிம்பிக் (2028) போட்டிக்கு தகுதி பெற்ற முதல் இந்திய நட்சத்திரமாகி உள்ளார்.ஆண்கள் அணிகளுக்கான ‘ஆர்-1’ 10 மீ., ‘ஏர் ரைபிள்-எஸ்.எச்.1’ பிரிவு இறுதிப்போட்டியில், ஆனந்த கிருஷ்ணா (620.8), ஸ்வரூப் மஹாவீர் (618.0), ராகேஷ் (617.5) ஆகியோர் அடங்கிய இந்திய அணி 1,856.3 புள்ளிகளுடன் 2வது இடம் பிடித்து வெள்ளிப்பதக்கம் வென்றது.

Sep 17, 2026

செஸ் ஒலிம்பியாட் தொடரை இந்திய அணிகள் வெற்றியுடன் தொடங்கின.

சர்வதேச செஸ் கூட்டமைப்பு சார்பில், இரண்டு ஆண்டுகளுக்கு ஒருமுறை செஸ் ஒலிம்பியாட் தொடர் நடத்தப்படுகிறது. இதன் 46வது சீசன் நேற்று உஸ்பெகிஸ்தானின் சமர்கண்ட் நகரில் தொடங்கியது. ஓபன் பிரிவில் 208 அணிகளும், பெண்கள் பிரிவில் 192 அணிகளும் என மொத்தம் 400 அணிகள் பங்கேற்கின்றன.ஓபன் பிரிவில் ‘நம்பர்-2’ அந்தஸ்து பெற்ற இந்திய அணி, தனது முதல் போட்டியில் தாய்லாந்தை சந்தித்தது. கருப்பு நிற காய்களுடன் விளையாடிய நிஹால் சரின், 28வது நகர்த்தலில் தனடோனை வீழ்த்தி, இந்தியாவுக்கு முதல் வெற்றியைப் பெற்றுத் தந்தார்.உலக சாம்பியன் குகேஷ், பரிஷ் ரஷித்தை வீழ்த்தினார். விதித் குஜராத்தி, டுபாவை வென்றார். மற்றொரு போட்டியில் அர்ஜுன் அதிர்ச்சித் தோல்வியடைந்தார். முடிவில் இந்திய அணி 3.0-1.0 என்ற கணக்கில் வெற்றி பெற்றது.பெண்கள் பிரிவில் ‘நம்பர்-1’ அந்தஸ்துடன் களமிறங்கிய இந்திய அணி, முதல் போட்டியில் டொமினிகன் குடியரசு அணியை சந்தித்தது. இந்தியா சார்பில் களமிறங்கிய வைஷாலி, ஹம்பி, சவிதாஸ்ரீ, வந்திகா ஆகிய நான்கு பேரும் வெற்றி பெற்றனர். முடிவில் இந்திய அணி 4.0-0 என்ற கணக்கில் வெற்றி பெற்றது.

1 2 3 4 5 6 7 8 9 10 ... 181 182

AD's



More News