தமிழ்நாடு முழுவதும் அரசு அனுமதி பெற்று செயல்பட்டு வரும் கல் குவாரிகளில் அனுமதிக்கப்பட்ட அளவை மீறி கனிமங்கள் வெட்டப்படுவதாகவும், பல இடங்களில் சட்டவிரோத குவாரிகள் செயல்படுவதாகவும் தொடர்ந்து புகார்கள் பெறப்பட்டுள்ள நிலையில், மாநிலம் முழுவதும் உள்ள அனைத்து குவாரிகளையும் ஆய்வு செய்து உடனடி அறிக்கை சமர்ப்பிக்குமாறு புவியியல் மற்றும் சுரங்கத்துறை மாவட்ட அலுவலர்களுக்கு உத்தரவிடப்பட்டது.அதன் தொடர்ச்சியாக, விருதுநகர் மாவட்டம், இராஜபாளையம் வட்டம், மேலூர் துரைசாமிபுரம் கிராமம், அரசு புறம்போக்கு நிலம் புல எண் 328 (Part-V)-ல் செயல்பட்டு வந்த கல் குவாரி தொடர்பாக புவியியல் மற்றும் சுரங்கத்துறை அலுவலர்கள், வருவாய்துறை மற்றும் காவல்துறை அதிகாரிகளுடன் இணைந்து திடீர் கள ஆய்வு மேற்கொண்டனர். திருமதி கா.செல்வி என்பவருக்கு தமிழ்நாடு சிறுகனிம சலுகை விதிகள், 1959-ன் கீழ் குத்தகையாக வழங்கப்பட்டிருந்தாலும், குத்தகை ஒப்பந்த பதிவு பணிகள் முழுமையாக நிறைவு பெறுவதற்கு முன்பே குவாரி பணிகள் மேற்கொள்ளப்பட்டிருப்பது ஆய்வில் கண்டறியப்பட்டது. மேலும், அனுமதியின்றி வெடிபொருட்கள் பயன்படுத்தப்பட்டு கல் வெட்டும் இயந்திர செயல்கள் மற்றும் வெடி வெடிப்பு பணிகள் நடைபெற்றதாகவும் தெரியவந்தது.இத்தகைய நடவடிக்கைகள் சட்டவிரோத கனிம வெட்டும் செயலாக கருதப்படுவதுடன், பொதுமக்கள் பாதுகாப்பு, சுற்றுச்சூழல் மற்றும் அரசிற்கு வருவாய் இழப்பு ஏற்படுத்தக்கூடிய மிகக்கடுமையான விதிமீறலாகும். இதனை தொடர்ந்து சம்பந்தப்பட்ட குவாரி தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டதுடன், ஆய்வின்போது கண்டறியப்பட்ட வாகனங்கள் மற்றும் இயந்திரங்கள் பறிமுதல் செய்யப்பட்டு காவல்துறையிடம் ஒப்படைக்கப்பட்டன.மேலும், சம்பந்தப்பட்டவர்களுக்கு எதிராக சட்டப்படி மேல்நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.மேலும், மாவட்டம் முழுவதும் சட்டவிரோதமாக வெடிபொருட்கள் பயன்படுத்தி குவாரி பணிகள் மேற்கொள்ளப்படுகிறதா என்பதை தொடர்ந்து கண்காணிக்கவும், உரிய அனுமதியின்றி வெடிபொருட்கள் வழங்கப்படுவதை தடுக்கவும் சம்பந்தப்பட்ட வெடிபொருள் கட்டுப்பாட்டு அதிகாரிகளுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.பொதுமக்கள் யாரேனும் சட்டவிரோத கனிம வெட்டுதல், அனுமதியற்ற வெடிபொருள் பயன்பாடு அல்லது விதிமீறிய குவாரி செயல்பாடுகள் குறித்து தகவல் அறிந்தால் உடனடியாக மாவட்ட நிர்வாகம் அல்லது புவியியல் மற்றும் சுரங்கத்துறைக்கு தகவல் தெரிவிக்குமாறு மாவட்ட ஆட்சியர் மரு.என்.ஓ.சுகபுத்ரா, I A S., அவர்கள் தெரிவித்துள்ளார்.
விருதுநகர் மாவட்டத்தில் விவசாயிகள் நீர் வளத்துறை மற்றும் ஊரக வளர்ச்சித்துறையின் பராமரிப்பில் உள்ள பரிந்துரை செய்யப்பட்ட நீர் நிலைகளில் இருந்து இலவசமாக வண்டல் களிமண் எடுத்துக்கொள்ள மாவட்ட அரசிதழில் அறிவிப்புகள் வெளியிடப்பட்டுள்ளது.அதன்படி மேல் வைப்பாறு வடிநிலக் கோட்டம், இராஜபாளையம், வைப்பாறு வடிநிலக் கோட்டம், விருதுநகர், குண்டாறு படுகை (Gundaru Basin) மற்றும் ஊரக வளர்ச்சித்துறை ஆகியவற்றின் கீழ் முறையே மொத்தம் 403 நீர்நிலைகள் தேர்வு செய்யப்பட்டுள்ளது.உள்ளூர் விவசாயிகள், மண்பாண்ட தொழிலாளர்கள் மற்றும் பொதுமக்கள் (இதர வீட்டு பயன்பாட்டிற்கு) வண்டல் மண் அல்லது களிமண் ஆகியவற்றை இலவசமாக எடுத்து செல்வதற்கு அனுமதி வழங்கப்பட உள்ளது.தகுதியுடைய பயனாளிகள் tnesevaitngov.in என்ற இணையதளம் வாயிலாக விண்ணப்பிக்கலாம். விண்ணப்பிக்கும் பயனாளிகளின் வசிப்பிடம் அல்லது வேளாண் நிலம் அமைந்துள்ள கிராமம் மற்றும் வண்டல் மண் அல்லது களிமண் தூர்வாரி எடுத்து செல்லப்பட வேண்டிய நீர்நிலைகள் அமைந்துள்ள கிராமம் ஆகியவை அதே வருவாய் வட்டத்தின் எல்லை வரம்பிற்குள் அமைந்திருக்க வேண்டும்.விவசாய பயன்பாட்டிற்காக வண்டல் மண் பெற விண்ணப்பிக்கும் நபர், சொந்தமாக விவசாய நிலம் வைத்துள்ளவராக இருக்க வேண்டும். மண்பாண்ட தொழிலாளராக இருப்பின், விண்ணப்பித்த பின்பு சம்பந்தப்பட்ட கிராம நிர்வாக அலுவலர் அதனை முறைப்படி உறுதி செய்தபிறகு அனுமதி வழங்கப்படும்.இந்த அனுமதியானது விவசாய நில மேம்பாட்டிற்காக (2 ஆண்டுகளுக்கு ஒருமுறை மட்டும் ) நன்செய் நிலம் எனில் ஏக்கர் ஒன்றுக்கு 75 கன மீட்டர் (ஹெக்டேருக்கு 185 கண மீட்டர்) என்ற அளவிலும், புன்செய் நிலம் எனில் ஏக்கர் ஒன்றுக்கு 90 கனமீட்டர் (ஹெக்டேருக்கு 222 கனமீட்டர்) என்ற அளவிலும், மண்பாண்ட தொழிலுக்கு 60 கன மீட்டருக்கு மிகாமலும், இதர வீட்டு பயன்பாட்டிற்கு 30 கன மீட்டர் அளவிலும் கட்டணமின்றி மண் எடுத்துச் செல்ல அனுமதிக்கப்படும்.விண்ணப்பத்தாரரால் அளிக்கப்பட்ட தகவல்கள் விதிமுறைகளை பூர்த்தி செய்திருப்பின், சம்பந்தப்பட்ட தாசில்தாரால் 10 நாட்களுக்குள் அனுமதி ஆணை வழங்கப்படும்.தாசில்தாரால் அனுமதி ஆணை கிடைக்கப்பெற்ற பயனாளிகள், தொடர்புடைய நீர்நிலை ஆதாரங்களின் பொறுப்பு அலுவலர்களை அணுகி சம்பந்தப்பட்ட துறை அலுவலர்கள் வரையறை செய்யும் பகுதியில் தங்களுக்கு அனுமதிக்கப்பட்ட அளவுக்கு மட்டும் வண்டல் மண் அல்லது களிமண் எடுத்துச்செல்ல வேண்டும் என மாவட்ட ஆட்சியர் மரு.என்.ஓ.சுகபுத்ரா,I A S., அவர்கள் தெரிவித்துள்ளார்.
சுதந்திர தின விழாவின் போது, தமிழக முதல்வர் அவர்கள் தலைமையில், பெண்களின் முன்னேற்றத்திற்காக பாடுபட்ட, சிறந்த சமூக சேவகர் மற்றும் தொண்டு நிறுவனத்திற்கு, சுதந்திர தின விருது - 2026 வழங்கப்பட உள்ளது.விருது விபரம்:சிறந்த சமூக சேவகர்: ரூ.50,000/- ரொக்கப்பரிசு மற்றும் பாராட்டுச் சான்றிதழ்.சிறந்த தொண்டு நிறுவனம்: ரூ.1,00,000/- ரொக்கப்பரிசு மற்றும் பாராட்டுச் சான்றிதழ்.தகுதி மற்றும் விதிமுறைகள்:விண்ணப்பதாரர் தமிழ்நாட்டைப் பிறப்பிடமாகக் கொண்டவராகவும், 18 வயதுக்கு மேற்பட்டவராகவும் இருத்தல் வேண்டும். குறைந்தபட்சம் 5 ஆண்டுகள் சமூக நலன் சார்ந்த நடவடிக்கைகள், பெண் குலத்திற்குப் பெருமை சேர்க்கும் வகையிலான பணிகள், மொழி, இனம், பண்பாடு, கலை, அறிவியல், நிர்வாகம் போன்ற துறைகளில் மேன்மையாகப் பணிபுரிந்து, மக்களுக்குத் தொடர்ந்து தொண்டாற்றி இருக்க வேண்டும். தொண்டு நிறுவனம் அரசின் உரிய அங்கீகாரம் பெற்ற நிறுவனமாக இருத்தல் வேண்டும்.விண்ணப்பிக்கும் முறை:மேற்குறிப்பிட்ட தகுதியுடைய சமூக சேவகர்கள் மற்றும் தொண்டு நிறுவனங்கள், https://awards.tn.gov.in என்ற இணையதளம் வழியாக ஆன்லைன் மூலமாக வருகிற *19.06.2026-க்குள்* விண்ணப்பிக்க வேண்டும்.ஆன்லைனில் விண்ணப்பித்த விவரங்களை *23.06.2026-க்குள்* மாவட்ட சமூக நல அலுவலகத்தில் சமர்ப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.இது தொடர்பான விவரங்களை கீழே குறிப்பிட்டுள்ள முகவரியில் சமர்ப்பிக்கலாம் என மாவட்ட ஆட்சியர் மரு.என்.ஓ.சுகபுத்ரா,இ.ஆ.ப., அவர்கள் தெரிவித்துள்ளார்.முகவரிமாவட்ட சமூக நல அலுவலர்,மாவட்ட சமூக நல அலுவலகம்,மாவட்ட ஆட்சியரக வளாகம்,விருதுநகர் மாவட்டம் – 626002.தொலைபேசி எண்: 04562-252701
விருதுநகர் மாவட்டம், திருவில்லிபுத்தூர் நகராட்சி அலுவலகக் கூட்டரங்கில் (26.05.2026) கோடைகாலத்தில் பொதுமக்களுக்குத் தங்குதடையின்றிக் குடிநீர் வழங்குவது குறித்த ஆலோசனைக் கூட்டம், மாவட்ட ஆட்சியர் மரு.என்.ஓ.சுகபுத்ரா, I A S., அவர்கள் தலைமையில் நடைபெற்றது.இக்கூட்டத்தில், நகர்ப்புறப் பகுதிகளில் குடிநீர் விநியோகம் சீராக நடைபெறத் தேவையான நடவடிக்கைகள் குறித்துத் தொடர்புடைய துறை அலுவலர்களுடன் விரிவாக ஆலோசிக்கப்பட்டது.குடிநீர் விநியோக அட்டவணை மற்றும் அறிவுரைகள்: திருவில்லிபுத்தூர் நகராட்சிப் பகுதியில் உள்ள அனைத்து வார்டு பொதுமக்களுக்கும் சீரான முறையில் குடிநீர் வழங்கிட வேண்டும் என்றும், ஒரு வார காலத்தில் எந்தெந்தப் பகுதிகளில் குடிநீர் விநியோகம் செய்யப்படவுள்ளது என்பது குறித்த விவரங்கள் அடங்கிய கால அட்டவணையை (Schedule) உடனடியாகச் சமர்ப்பிக்க வேண்டும் என்றும் மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்களால் அறிவுறுத்தப்பட்டது.மேலும், வால்வு இயக்குபவர்கள் (Valve Operators) எவ்விதப் புகார்களுக்கு இடமளிக்காத வகையில், உரிய முறையில் குடிநீர் விநியோகப் பணிகளை மேற்கொள்ள வேண்டும் என அறிவுறுத்தப்பட்டது.முன்னெச்சரிக்கை மற்றும் கடுமையான எச்சரிக்கை: பொதுமக்களுக்கு எவ்விதக் குடிநீர் தட்டுப்பாடும் ஏற்படாத வகையில், தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை உடனடியாக மேற்கொள்ள மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் உத்தரவிட்டார். குடிநீர் வழங்கல் பணியில் ஏதேனும் தொய்வு ஏற்பட்டால், அதற்குப் பொறுப்பான அலுவலர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் எச்சரித்தார்.இக்கூட்டத்தில் நகராட்சி ஆணையாளர், பொறியாளர், நகராட்சிப் பணியாளர்கள் உட்பட அரசு அலுவலர்கள் பலர் கலந்துகொண்டனர்.
விருதுநகர் மாவட்ட ஆட்சியர் அலுவலகக் கூட்டரங்கில் வாராந்திர மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் (25.05.2026) மாவட்ட ஆட்சியர் மரு.என்.ஓ.சுகபுத்ரா, I A S அவர்கள் தலைமையில் நடைபெற்றது. இக்கூட்டத்தில், பொதுமக்கள் மற்றும் மாற்றுத்திறனாளிகளிடமிருந்து இலவச வீட்டுமனைப்பட்டா, பட்டா மாறுதல், புதிய குடும்ப அட்டை, வேலைவாய்ப்பு, விபத்து நிவாரணம், மாற்றுத்திறனாளிகள் மற்றும் நலிந்தோர் நல உதவித்திட்டங்கள், விதவை உதவித்தொகை, திருமண உதவித்தொகை மற்றும் முதியோர் உதவித்தொகை உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் குறித்தான மனுக்கள் பெறப்பட்டன. மேலும், மாவட்ட ஆட்சியர் அவர்கள் மாற்றுத்திறனாளிகள் மற்றும் மூத்த குடிமக்களுக்காக அமைக்கப்பட்டுள்ள சிறப்பு அமருமிடத்திற்கு நேரடியாகச் சென்று, அவர்களின் கோரிக்கை மனுக்களைப் பெற்று பரிசீலித்தார். பொதுமக்களிடமிருந்து பெறப்பட்ட இம்மனுக்கள் அனைத்தையும் சம்பந்தப்பட்ட துறை அலுவலர்களிடம் ஒப்படைத்து, அவற்றின் மீது உரிய மற்றும் விரைவான நடவடிக்கை எடுக்குமாறு மாவட்ட ஆட்சியர் அவர்கள் உத்தரவிட்டார். அதனைத் தொடர்ந்து, மாவட்ட ஆட்சியர் அவர்கள் பொதுமக்கள் எவ்வித சிரமமுமின்றி சேவைகளைப் பெறுவதை உறுதி செய்யுமாறு சம்பந்தப்பட்ட அலுவலர்களுக்கு அறிவுறுத்தினார். இக்கூட்டத்தில், மாவட்ட வருவாய் அலுவலர் திருமதி இரா.ஆனந்தி, மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (பொது) திருமதி பிர்தௌஸ் பாத்திமா, அரசு துறை அலுவலர்கள் மற்றும் பொதுமக்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.
விருதுநகர் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில்(22.05.2026) விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் மாவட்ட ஆட்சித்தலைவர் மரு.என்.ஓ.சுகபுத்ரா, I A S., அவர்கள் தலைமையில் நடைபெற்றது.இக்கூட்டத்தில் விவசாயிகள் கலந்து கொண்டு தங்களது குறைகளை மாவட்ட ஆட்சியர் அவர்களிடம் தெரிவித்தனர். கடந்த விவசாயிகள் குறை தீர்க்கும் நாள் கூட்டத்தில் விவசாயிகளால்வழங்கப்பட்டமனுக்கள்மீதுஎடுக்கப்பட்டநடவடிக்கைகள்குறித்துவேளாண்மைதுணைஇயக்குநர்மாவட்டஆட்சியரின்நேர்முகஉதவியாளர்(விவ)அவர்களால்எடுத்துரைக்கப்பட்டது.விவசாயிகளிடமிருந்து கொள்முதல் செய்யப்படும் நெல்மூட்டைகளை மழையில் நனையாமல் பாதுகாப்பாக வைக்க உரிய நடவடிக்கை எடுக்குமாறு விவசாயிகள் கோரிக்கை வைத்தனர்.மக்காச்சோளத்திற்கு நல்ல விலை கிடைக்காமல் அதிக அளவு விலை வீழ்ச்சி அடைந்துள்ளதை தடுக்க நடவடிக்கை எடுக்குமாறு விவசாயிகள் கோரிக்கை வைத்தனர். மக்காச்சோள உற்பத்தி அதிகரித்துள்ளதால் விவசாயிகள் நல்ல விலை கிடைக்காமல் அதிக அளவு விலை வீழ்ச்சி அடைந்துள்ளதை தடுக்க விவசாயிகள் தற்பொழுது உற்பத்தி செய்துள்ள மக்காச்சோளத்தினை ஒழுங்குமுறை விற்பனை கூடங்களில் இருப்பு வைத்து நல்ல விலை கிடைக்கும் போது விற்பனை செய்யுமாறு விவசாயிகளுக்கு அறிவுரை வழங்கப்பட்டது. 2025-26ஆம் ஆண்டு பயிர் அறுவடை பரிசோதனை மூலம் மகசூல் கணக்கீடு செய்து காப்பீடு நிறுவனத்திற்கு அனுப்பப்பட்டுள்ளது. செப்டம்பர் மற்றும் அக்டோபர் மாதத்திற்குள் பயிர்காப்பீட்டுத்தொகை விடுவிக்க ஏற்பாடு செய்யப்படும் என வேளாண்மை இணை இயக்குநர் அவர்களால் தெரிவிக்கப்பட்டது.விவசாயிகளுக்கு உழவர் பதிவேடு அட்டை விரைந்து வழங்க நடவடிக்கை எடுக்குமாறு விவசாயிகள் கோரிக்கை வைத்தனர். இ-சேவை மையங்கள் மூலமாக விவசாயிகளுக்கு சிறப்பு முகாம் நடத்தி பதிவு செய்யாத விவசாயிகளுக்கு விரைந்து உழவர் பதிவேடு அட்டை வழங்க வேளாண்மை இணை இயக்குநர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்களால் அறிவுறுத்தப்பட்டது.ஸ்ரீவில்லிப்புத்தூர், வத்திராயிருப்பு மற்றும் ராஜபாளையம் பகுதிகளில் மா மரங்களின் பூக்கள் கருகிவிட்டதற்கு நஷ்டஈடு வழங்க நடவடிக்கை எடுக்குமாறு அந்த பகுதி விவசாயிகள் கோரிக்கை வைத்தனர். தோட்டக்கலைத்துறை மற்றும் வருவாய்துறை இணைந்து கூட்டாய்வு செய்து உரிய அறிக்கை சமர்ப்பிக்க வேண்டும் என மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் அறிவுறுத்தனார்கள்.அருப்புக்கோட்டை மற்றும் ராஜபாளையம் பகுதியில் பருத்தி கொள்முதல் நிலையம் அமைக்க உரிய நடவடிக்கை மேற்கொள்ளுமாறும், உரத்தட்டுப்பாடை குறைக்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் மற்றும் உரங்களை சிக்கனமாக பயன்படுத்த விவசாயிகளுக்கு பயிற்சி அளிக்க வேண்டும் எனவும் விவசாயிகள் கோரிக்கை வைத்தனர்.உரத்தட்டுப்பாடை குறைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. உரங்களை சிக்கனமாக பயன்படுத்தவும் அனைத்து வட்டாரங்களிலும் உரிய பயிற்சிகள் நடத்தப்பட்டு வருகிறது என வேளாண்மை இணை இயக்குநர் அவர்களால் தெரிவிக்கப்பட்டது. பல்வேறு நகராட்சிகள், மாநகராட்சிகள் மற்றும் ஊராட்சிகளில் கழிவு நீர் சுத்திகரிப்பு நிலையங்கள் செயல்படுத்திட நடவடிக்கை எடுக்குமாறு விவசாயிகள் கோரிக்கை வைத்தனர். இக்கூட்டத்தில் வேளாண்மை துணை இயக்குநர்/ மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர்(விவ.,) திருமதி அ.அம்சவேணி, வேளாண்மை இணை இயக்குநர் திரு.மோகன்தாஸ் சௌமியன், தோட்டக்கலை துணை இயக்குநர் திருமதி சுபா வாசுகி, செயற்பொறியாளர் (வேளாண்மை பொறியியல் துறை) திருமதி இந்திரா உட்பட பல துறை அரசு அலுவலர்கள் கலந்து கொண்டனர்.
சீர்மரபினர் நல வாரியத்தில் பதிவு பெற்ற உறுப்பினர்களுக்கு கீழ்கண்ட நலத்திட்ட உதவிகள் கடந்த 2008 ஆம் ஆண்டு முதல் வழங்கப்பட்டு வருகிறது.1. விபத்து ஈட்டுறுதி திட்டத்தின் கீழ் உதவித்தொகை2. இயற்கை மரணத்திற்கான உதவித்தொகை3. ஈமச்சடங்கு செலவிற்கான உதவித்தொகை4. கல்வி உதவித்தொகை5. திருமண உதவித்தொகை6. மகப்பேறு உதவித்தொகை7. மூக்குக்கண்ணாடி செலவுத்தொகை ஈடு செய்தல்8. முதியோர் ஓய்வூதியம்மேற்படி நலத்திட்ட உதவிகள் பெற 1) சீர்மரபினர் இனத்தைச் சார்ந்தவர்கள் 2) 18 வயது முதல் 60 வயது நிறைவு பெறாதவர்கள் 3) அமைப்பு சாரா நிறுவனங்களில் பணிபுரியும் குடும்பத்தில் ஒருவர் (அமைப்பு சாரா தொழில், நிலமற்ற விவசாய கூலி, உடலுழைப்பு தொழில் ஈடுபட்டுள்ள) இவ்வாரியத்தில் உறுப்பினராக பதிவு செய்து நலத்திட்ட உதவிகள் பெற தகுதி பெறுகின்றனர். மேற்படி, நல வாரியத்தில் உறுப்பினராக பதிவு செய்தல், நலத்திட்ட உதவிகள் பெறுதலை எளிதாக்கும் வகையில் இணையதளம் உருவாக்கப்பட்டுள்ளது. இனி www.dncwb.tn.gov.in என்ற இணையதளம் மூலம் விண்ணப்பம் செய்து, பயன்பெறுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.மேலும் விவரங்கள் அறிய மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் 5 வது மாடியில் உள்ள மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நல அலுவலரை தொடர்பு கொள்ளுமாறு மாவட்ட ஆட்சியர் மரு.என்.ஓ.சுகபுத்ரா,I A S., அவர்கள் தெரிவித்துள்ளார்.
விருதுநகர் மாவட்ட அரசு தொழிற்பயிற்சி நிலையங்களான விருதுநகர் / அருப்புக்கோட்டை / சாத்தூர் / திருச்சுழி ஆகிய அரசு தொழிற்பயிற்சி நிலையங்களில் 2026-ம் ஆண்டிற்கான ஓராண்டு / ஈராண்டு தொழிற்பிரிவுகளில் சேர பயிற்சியாளர்களிடமிருந்து இணையதளம் மூலம் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது.இப்பயிற்சிக்கு இருபாலரும் (ஆண் / பெண்) 03.06.2026 முடிய இணையதளம் மூலம் விண்ணப்பம் செய்யலாம். விண்ணப்பிக்க வேண்டிய இணையதள முகவரி www.skilltraining.tn.gov.in ஆகும். பயிற்சிக்கு விண்ணப்பிக்க கல்வித் தகுதி 8-ம் வகுப்பு தேர்ச்சி / 10ம் வகுப்பு தேர்ச்சி மற்றும் அதற்கு மேல் பயின்ற அனைவரும் தகுதியானவர்கள்.வயது வரம்பு ஆண்களுக்கு குறைந்தபட்ச வயது 14 முதல் அதிகபட்ச வயது 40 வரை மற்றும் மாற்றுத்திறனாளி / முன்னாள் இராணுவத்தினருக்கு விதிகளின்படி 5 ஆண்டு வயது வரம்பில் தளர்வு உண்டு. பெண்களுக்கு குறைந்தபட்சம் 14 முதல் அதிகபட்ச வயது உச்ச வரம்பு இல்லை. விண்ணப்பக்கட்டணமாக ரூ.50/-யை Debit Card / Credit Card / GPay/ Internet Banking ஆகியவற்றின் மூலமாக மட்டுமே செலுத்த வேண்டும்.விருதுநகர் அரசு தொழிற்பயிற்சி நிலையத்தில் பொருத்துநர் (Fitter), கடைசலர் (Turner), இயந்திர வேலையாள் (Machinist), கம்மியர் மோட்டார் வண்டி (MMV), குளிர்பதனம் மற்றும் தட்பவெப்பநிலை கட்டுபடுத்தும் தொழில்நுட்பவியலாளர் (R&AC Technician), கம்பியாள் (Wireman), பற்றவைப்பவர் (Welder), உட்புற வடிவமைப்பு மற்றும் அலங்காரம் (Interior Design and Decoration), மேலும் தீயணைப்பு தொழிற்நுட்பம் மற்றும் தொழிற்சாலை பாதுகாப்பு மேலாண்மை (Fire Technology and Industrial Safety Management) ஆகிய தொழிற்பிரிவு உள்ளன.இப்பிரிவில் சேருவதற்கு மட்டும் 10-ம் வகுப்பு கல்வித்தகுதியும், உடற்கூறு தகுதியும் உடையவர்கள் விண்ணப்பிக்கலாம். (உயரம் 165செ.மீ, எடை 52 கிலோ, மார்பு விரிவதற்கு முன் 81 செ.மீ பின் 85 செ.மீ ). மேலும், Tata Technology மூலம் 4.0-வில் நவீன தொழிற்நுட்பங்களுடன் கூடிய தொழிற்பிரிவுகள் (Advanced CNC Machining Technician), (Mechanic Electric Vehicle), (Industrial Robotics & Digital Manufacturing)உள்ளன.அரசு தொழிற் பயிற்சி நிலையங்களில் சேரும் மாணவ / மாணவிகளுக்கு தமிழக அரசால் மிதிவண்டி / கட்டணமில்லா பேருந்து பயணச் சலுகை / மாதாந்திர கல்வி உதவித் தொகை ரூ.750/- (வருகைக்கு ஏற்ப) / சீருடை 2 செட் (தையல்கூலியுடன்) / மூடு காலணி 1 செட் / பாடப்புத்தகங்கள் / வரைபட கருவிகள் மற்றும் பயிற்சியாளர் அடையாள அட்டை/ அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளியில் 6 முதல் 10 ம் வகுப்பு வரை பயின்று உயர்கல்வி பெறும் ஆண் / பெண் பயிற்சியாளர்களுக்கு தமிழ்புதல்வன் / புதுமைப்பெண் திட்டத்தின் மூலம் மாதந்தோறும் ரூ.1000/- உதவித்தொகை வழங்கப்படுகிறது.விருதுநகர்/அருப்புக்கோட்டை/சாத்தூர்/திருச்சுழி ஆகிய அரசினர் தொழிற்பயிற்சி நிலையங்களில் பயிற்சியில் சேர 8-ம் வகுப்பு மதிப்பெண் சான்றிதழ், 10-ம் வகுப்பு மதிப்பெண் சான்றிதழ், பள்ளி மாற்றுச்சான்றிதழ், சாதிச்சான்றிதழ், ஆதார் அட்டை, பாஸ்போர்ட் அளவு புகைப்படம் மற்றும் மின்னஞ்சல் முகவரி தொலைபேசி எண் விவரம் உள்ளிட்ட விவரங்களுடன் இணையதளம் மூலம் விண்ணப்பிக்கலாம்.மேலும் விபரங்களுக்கு தொடர்பு கொள்ள வேண்டிய அரசு தொழிற்பயிற்சி நிலைய தொலைபேசி எண்கள் : விருதுநகர்: 04562-294382 / 252655, அருப்புக்கோட்டை: 04566-225800 சாத்தூர்: 04562-290953 / திருச்சுழி: 9578855154 / 7010040810 ஆகிய எண்களை தொடர்பு கொண்டு பயன்பெறலாம் என மாவட்ட ஆட்சித்தலைவர் மரு.என்.ஓ.சுகபுத்ரா,I A S., அவர்கள் தெரிவித்துள்ளார்.
விருதுநகர் மாவட்டம், சிவகாசி மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் (19.05.2026) மேற்கொள்ளப்பட்டு வரும் பல்வேறு வளர்ச்சித் திட்டப் பணிகளை, சிவகாசி மாநகராட்சி மேயர் திருமதி சங்கீதா இன்பம் அவர்கள் முன்னிலையில், மாவட்ட ஆட்சியர் மரு. என்.ஓ. சுகபுத்ரா, I A S., அவர்கள் நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு செய்தார். கூட்டுத் தூய்மைப் பணித் தொடக்கம்: அதன் ஒரு பகுதியாக, சிவகாசி மாநகராட்சிக்கு உட்பட்ட திருத்தங்கல் பகுதியில் பொது சுகாதாரம் மற்றும் அறிவியல் பூர்வமான கழிவு மேலாண்மையை ஊக்குவிக்கும் வகையிலும், மாநகராட்சி முழுவதும் தூய்மையைப் பேணுவதில் குடிமக்களின் பங்களிப்பை உறுதி செய்யும் பொருட்டும், 'தூய்மைத் திருவிழா-2026' என்ற தலைப்பில் நடைபெற்ற மாபெரும் கூட்டுத் தூய்மைப் பணியினை மாவட்ட ஆட்சியர் அவர்கள் தொடங்கி வைத்தார். பொது சுகாதார வளாக ஆய்வு மற்றும் அறிவுரைகள்: அதனைத் தொடர்ந்து, சிவகாசி பேருந்து நிலையத்தில் தற்போது செயல்பட்டு வரும் பொது சுகாதார வளாகத்தின் (Public Restroom/Sanitation Complex) நிலை மற்றும் தூய்மைத் தன்மை குறித்து மாவட்ட ஆட்சியர் அவர்கள் நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு செய்தார். மேலும், மாநகராட்சியில் உள்ள பொது சுகாதார வளாகங்களை குறிப்பிட்ட கால இடைவெளியில் தூய்மை செய்து, பொதுமக்களின் சுகாதாரத்தினை உறுதி செய்ய வேண்டும் எனத் தொடர்புடைய அலுவலர்களுக்கு மாவட்ட ஆட்சியர் அவர்கள் அறிவுறுத்தினார். மதுபானக் கடை அகற்றம் உறுதி செய்தல்: விருதுநகர் மாவட்டத்தில் உள்ள பள்ளிகள், கல்லூரிகள், வழிபாட்டுத் தலங்கள் மற்றும் பேருந்து நிலையங்களைச் சுற்றி 500 மீட்டர் சுற்றளவிற்குள் அமைந்துள்ள தமிழ்நாடு மாநில வாணிபக் கழகத்தின் (TASMAC) மதுபான சில்லறை விற்பனைக் கடைகள் அரசால் மூடப்பட்டு வருகின்றன. அந்த வகையில், சிவகாசி பேருந்து நிலையம் அருகில் செயல்பட்டு வந்த மதுபான சில்லறை விற்பனைக் கடை முழுமையாக அகற்றப்பட்டுள்ளதை உறுதி செய்யும் பொருட்டு, மாவட்ட ஆட்சியர் அவர்கள் அந்த இடத்திற்கு நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு செய்து உறுதி செய்தார். இந்நிகழ்வின் போது, சிவகாசி மாநகராட்சி ஆணையர் திரு. சரவணன், அரசு அலுவலர்கள், மாநகராட்சிப் பணியாளர்கள், தூய்மைப் பணியாளர்கள் மற்றும் பொதுமக்கள் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.
விருதுநகர் மாவட்டம், அருப்புக்கோட்டை நகராட்சி பேருந்து நிலைய வளாகத்தில் மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் (20.05.2026) நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு செய்தார்.அதன்படி, பேருந்து நிலைய வளாகத்தின் தூய்மை நிலை, செயல்பட்டு வரும் கடைகளில் உள்ள பொருட்களின் தரம், பொதுமக்கள் பயன்பாட்டிற்கான அடிப்படை வசதிகள், குடிநீர் வசதி, சுகாதார வளாகம் பராமரிப்பு மற்றும் பயணிகள் நலனுக்கான வசதிகள் குறித்து ஆய்வு செய்தார்.மேலும், பொதுமக்கள் மற்றும் பயணிகள் எந்தவித சிரமமும் இன்றி சேவைகளை பெற தேவையான தொடர்ச்சியான நடவடிக்கைகளை மேற்கொள்ள தொடர்புடைய அலுவலர்களுக்கு அறிவுறுத்தினார்.பின்னர், அருப்புக்கோட்டை நகராட்சி பேருந்து நிலைய வளாகத்தில் செயல்பட்டு வரும் அம்மா உணவகத்தை மாவட்ட ஆட்சித்தலைவர் மரு.என்.ஓ.சுகபுத்ரா, I A S,. அவர்கள் ஆய்வு மேற்கொண்டார்.பொதுமக்களுக்கு வழங்கப்பட்டு வரும் உணவின் தரம், சுகாதாரமான உணவு தயாரிப்பு முறைகள், சமையலறை பராமரிப்பு, குடிநீர் வசதி, தூய்மை நிலை மற்றும் பொதுமக்களுக்கு வழங்கப்படும் சேவைகள் குறித்து மாவட்ட ஆட்சித்தலைவர் ஆய்வு செய்தார். மேலும், உணவு தயாரிப்பில் சுகாதார நடைமுறைகளை முறையாக பின்பற்றிடவும், பொதுமக்களுக்கு தரமான மற்றும் சத்தான உணவுகளை தொடர்ந்து வழங்கிடவும் தொடர்புடைய அலுவலர்கள் மற்றும் பணியாளர்களுக்கு அறிவுறுத்தினார். மேலும், அம்மா உணவகத்திற்கு வருகை தரும் பொதுமக்களின் தேவைகளை கவனத்தில் கொண்டு, தேவையான அடிப்படை வசதிகளை மேம்படுத்த நடவடிக்கை எடுக்கவும் அறிவுறுத்தினார். இந்நிகழ்வின் போது அருப்புக்கோட்டை நகராட்சி பொறியாளர், உதவி பொறியாளர், அரசு அலுவலர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.