25 YEARS OF EXCELLENCE

சமீபத்திய நிகழ்வுகள்:
12 நாளுக்கு ஒருமுறை ராஜபாளையத்தில் குடிநீர் சப்ளை. >> வெயில் தாக்கம்: ராஜபாளையத்தில் இளநீர் விலை கிடுகிடு உயர்வு. >> சிருங்கேரி ஸ்ரீ சாரதா பீடம், ஜகத்குரு ஸ்ரீ ஸ்ரீ விதுசேகரபாரதீ ஸ்வாமிகள் அவர்களின் வர்தந்தி பூஜை. >> இராஜபாளையம் மூத்தோர் நலச்சங்கம் மற்றும் மாண்புமிகு P.S. குமாரசாமி ராஜா நூற்றாண்டு திருமண மண்டபம் இணைந்து பெருமையுடன் கொண்டாடிய “சுதந்திர தினவிழா”. >> ராஜபாளையம் ரோட்டரி சங்கம், காவேரி மருத்துவமனை–திருநெல்வேலி இணைந்து நடத்திய இலவச இருதயப் பரிசோதனை முகாம். >> இராஜபாளையம் ரோட்டரி சங்கம் நாற்று இலக்கிய அமைப்பு இணைந்து வழங்கும் யானைகள் தின விழா கொண்டாட்டம் - 2026 >> ஆகஸ்ட் - 12 ,யானைகள் தின விழா முன்னிட்டு ,மாணவர்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்த ஒவியப் போட்டிகள். >> ஆடிப்பெருக்கு சிறப்பு வழிபாடு. >> தொடர்பு எல்லைக்கு வெளியே அடுக்குமாடி குடியிருப்பு வாசிகள்; அலைபேசி சிக்னல் இன்றி அவதி. >> வயல் தின விழா. >>


செய்தி மக்கள் தொடர்பு அலுவலகம் விருதுநகர் மாவட்டம்

Sep 09, 2026

மாற்றுத்திறனாளிகளுக்கான சிறப்பு குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் 9 மாற்றுத்திறனாளிகளுக்கு ரூ.2.16 இலட்சம் மதிப்பீட்டிலான உதவி உபகரணங்களை மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் வழங்கினார்.

விருதுநகர் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் (08.09.2026) நடைபெற்ற மாற்றுத்திறனாளிகளுக்கான சிறப்பு குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் 9 மாற்றுத்திறனாளிகளுக்கு ரூ.2.16 இலட்சம் மதிப்பீட்டிலான உதவி உபகரணங்களை மாவட்ட ஆட்சித்தலைவர் மரு.என்.ஓ.சுகபுத்ரா,I A S., அவர்கள் வழங்கினார். தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் தலைமையிலான தமிழக அரசால் மாற்றுத்திறனாளிகள் சமூக சமநிலையுடன் வாழவும், பிறர் துணையின்றி தங்களது தேவைகளை தாங்களே பூர்த்தி செய்து கொள்ளவும் தன்னம்பிக்கையுடன் அனைத்து பணிகளையும் மேற்கொள்ளவேண்டும் என்பதற்காக மாற்றுத்திறனாளிகள் நலத்துறையின் சார்பில் பல்வேறு திட்டங்களை செயல்படுத்தப்பட்டு வருகின்றன.மாற்றுத்திறனாளிகளின் தேவைகளையும் கோரிக்கைகளையும் நிறைவேற்றித் தந்திடும் வகையில் ஒவ்வொரு வாரமும் திங்கள் கிழமை மாற்றுத்திறனாளிகளிடமிருந்து கோரிக்கை மனுக்கள் பெறப்படுகின்றன. மேலும், அவர்களின் நலன் கருதி கோட்ட அளவிலும், மாவட்ட அளவிலும் சிறப்பு குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடத்தப்பட்டு வருகிறது.இம்முகாமில் மாற்றுத்திறனாளிகளின் அடிப்படைத் தேவைகளான உதவி உபகரணங்கள், சுய தொழில் தொடங்கிட மானியத்துடன் கூடிய வங்கிக் கடன் உதவி, மாதாந்திர பராமரிப்பு உதவித்தொகை, கல்வி பயிலும் மாற்றுத்திறனாளிகளுக்கான கல்வி உதவித்தொகை, மோட்டார் பொருந்திய தையல் இயந்திரம் போன்றவற்றிற்கான மனுக்கள் பெறப்பட்டு அதற்கான தீர்வு காணப்படும்.மேலும், வருவாய்த்துறை மூலம் செயல்படுத்தக்கூடிய மாற்றுத்திறனாளிகளுக்கான ஓய்வூதியம், இலவச வீட்டு மனைப்பட்டா, தாட்கோ, மாவட்ட தொழில் மையம் மற்றும் மத்திய கூட்டுறவு வங்கிகள் மூலம் வழங்கப்படும் கடனுதவி போன்றவற்றிற்கான மனுக்கள் பெறப்பட்டு உரிய நடவடிக்கை மேற்கொள் துறை அலுவலர்களுக்கு அறிவுறுத்தப்பட்டது.அதனடிப்படையில் இன்று நடைபெற்ற சிறப்பு குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் 203 மாற்றுத்திறனாளிகளிடமிருந்து பல்வேறு கோரிக்கை மனுக்கள் பெறப்பட்டன. மேலும்,  ரூ.1.85 இலட்சம் மதிப்பிலான செயற்கைக் கால் 1 மாற்றுத்திறனாளிக்கும், ரூ.26,000 மதிப்பீட்டில் காதொலி கருவிகள் 3 மாற்றுத்திறனாளிகளுக்கும், ரூ.2,400 மதிப்பிலான கால் தாங்கிகள் 3 மாற்றுத்திறனாளிகளுக்கும், ரூ.3,000 மதிப்பிலான மடக்கு குச்சிகள் 2 மாற்றுத்திறனாளிகள் என மொத்தம் 9 மாற்றுத்திறனாளிகளுக்கு ரூ.2,16,400 மதிப்பீட்டிலான உதவி உபகரணங்கள் வழங்கப்பட்டது.மேலும், முகாமில் பெறப்பட்ட மனுக்களுக்கு விரைந்து தீர்வு கண்டு தகுதியுள்ள பயனாளிகளுக்கு அரசின் நலத்திட்ட உதவிகள் கிடைப்பதை உறுதி செய்திட துறை அலுவலர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது என மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் தெரிவித்தார்.முகாமில், மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (பொது) திருமதி ப்ரிதௌஸ் பாத்திமா, தனித்துணை ஆட்சியர் (ச.பா.தி) திருமதி மோகனா, மாவட்ட மாற்றுத்திறனாளிகள் அலுவலர் திரு.பிரம்ம நாயகம் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

Sep 09, 2026

சிவகாசி வட்டம், நாரணாபுரம் கிராமத்தில் நடைபெறவிருந்த மக்கள் தொடர்பு திட்ட முகாம் ஒத்திவைக்கப்பட்டுள்ளது என மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் தெரிவித்துள்ளார்.

மாவட்ட ஆட்சியர் மற்றும் மாவட்ட அளவிலான அலுவலர்கள் மக்களைத் தேடிச் சென்று குறைகளைக் கேட்டறியவும், பல்வேறு துறைகளின் மூலம் செயல்படுத்தப்படும் திட்டங்கள், செயல்பாடுகளை விரைவுபடுத்தவும் மற்றும் வழங்கப்படும் சேவைகளின் தரத்தை மேம்படுத்தவும், மக்களை நாடி மக்கள் குறைகளைக் கேட்டு, உடனுக்குடன் தீர்வு காணும் விதமாக  மக்கள் தொடர்பு திட்டம்  ஒவ்வொரு மாதமும் மாவட்ட ஆட்சியர் தலைமையில் 2வது புதன் கிழமை நடத்தப்பட்டு வருகிறது.அதன்படி, விருதுநகர் மாவட்டம், ‘சிவகாசி வட்டம்  நாரணாபுரம் கிராமத்தில் அமைந்துள்ள “லலிதா மஹாலில்” வைத்து 09.09.2026ஆம் தேதியன்று நடைபெற இருந்த மக்கள் தொடர்பு திட்ட முகாம் தற்காலிகமாக ஒத்தி வைக்கப்பட்டுள்ளது என்ற விவரம் தெரிவிக்கப்படுகிறது. மக்கள் தொடர்பு திட்ட முகாம் நடத்தப்படும் தேதி பின்னர் தெரிவிக்கப்படும் என மாவட்ட ஆட்சித்தலைவர் மரு.என்.ஓ.சுகபுத்ரா,I A S, அவர்கள் தெரிவித்துள்ளார்.

Sep 09, 2026

மாவட்ட அளவிளான ஆதிதிராவிடர் நலக்குழு உறுப்பினர் சேர்க்கைக்கு விண்ணப்பிக்கலாம்.

 விருதுநகர் மாவட்டத்தில் மாவட்ட அளவிலான ஆதிதிராவிடர் நலக்குழுவானது 20.06.2023 அன்று ஏற்படுத்தப்பட்டுள்ளது. மேற்படி குழுவானது மூன்று வருடத்திற்குள்  கலைக்கப்பட வேண்டும்.  எனவே,  நடைமுறையில் உள்ள ஆதிதிராவிடர் நலக்குழுவானது கலைக்கப்படுகிறது.புதிய குழு அமைத்து, அக்குழுவிற்கு மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் தலைவராகவும், மாவட்ட ஆதிதிராவிடர்  மற்றும் பழங்குடியினர் நல அலுவலர் செயல் உறுப்பினராகவும் செயல்படுவார்கள்.    இக்குழுவில்   அதிகாரப்பூர்வமான உறுப்பினர்களாக  உதவி ஆட்சியர்/வருவாய் கோட்டாட்சியர், மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட  இயக்குநர், தாட்கோ மாவட்ட மேலாளர் , அ-நிலை ஆதிதிராவிடர் நல அலுவலர் , பி-நிலை ஆதிதிராவிடர் அதிகாரி , சி-நிலை ஆதிதிராவிடர் அதிகாரி , டி-நிலை ஆதிதிராவிடர் அதிகாரி மற்றும் மாவட்டத்திலுள்ள ஆதிதிராவிடர்  சட்டமன்ற  உறுப்பினர்களும், ஒன்றியத்  தலைவர்களும் நிரந்தர உறுப்பினர்களாக செயல்படுவார்கள்.ஆதிதிராவிடர்    அரசு அலுவலர்களின் மாவட்ட சங்கத் தலைவர் ஒருவரும், ஆதிதிராவிடர் அமைப்பின் சங்கத் தவைர்கள் மூவரும், பழங்குடியினர் சங்கத் தலைவர் மற்றும் ஆதிதிராவிடர் வழக்குரைஞர், பேராசிரியர், தொழில்அதிபர் என ஆதிதிராவிடர் நலக்குழு உறுப்பினர் பதவிக்கு  விண்ணப்பிக்கலாம்.  எனவே, விருப்பமுள்ள  தகுதி வாய்ந்த   நபர்கள்   விருதுநகர்  மாவட்ட ஆதிதிராவிடர் நலக் குழு உறுப்பினராக  சேர்வதற்கு வருகின்ற 15.09.2026 –க்குள் விண்ணப்பிக்கலாம் என  மாவட்ட ஆட்சித்தலைவர் மரு.என்.ஓ.சுகபுத்ரா,I A S., அவர்கள் தெரிவித்துள்ளார்.

Sep 08, 2026

மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் 59 பயனாளிகளுக்கு இ-பட்டாவினை மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் வழங்கினார்.

விருதுநகர் மாவட்ட ஆட்சியர் அலுவலகக் கூட்டரங்கில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் 59 பயனாளிகளுக்கு இ-பட்டாவினை  மாவட்ட ஆட்சித்தலைவர் மரு.என்.ஓ.சுகபுத்ரா I A S, அவர்கள்  (07.09.2026) வழங்கினார்.இக்கூட்டத்தில், பொதுமக்கள் மற்றும் மாற்றுத்திறனாளிகளிடமிருந்து இலவச வீட்டுமனைப்பட்டா, பட்டா மாறுதல், புதிய குடும்ப அட்டை, வேலைவாய்ப்பு, விபத்து நிவாரணம், மாற்றுத்திறனாளிகள் மற்றும் நலிந்தோர் நல உதவித்திட்டங்கள், விதவை உதவித்தொகை, திருமண உதவித்தொகை மற்றும் முதியோர் உதவித்தொகை உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் குறித்தான மனுக்கள் பெறப்பட்டன.மேலும், மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் மாற்றுத்திறனாளிகள் மற்றும் மூத்த குடிமக்களுக்காக அமைக்கப்பட்டுள்ள சிறப்பு அமருமிடத்திற்கு நேரடியாகச் சென்று, அவர்களின் கோரிக்கை மனுக்களைப் பெற்று பரிசீலித்தார். பொதுமக்களிடமிருந்து பெறப்பட்ட இம்மனுக்கள் அனைத்தையும் சம்பந்தப்பட்ட துறை அலுவலர்களிடம் ஒப்படைத்து, அவற்றின் மீது உரிய மற்றும் விரைவான நடவடிக்கை எடுக்கவும், முதலமைச்சரின் தனிப்பிரிவு மனுக்கள் மீது கூடுதல் கவனம் செலுத்தி விரைந்து தீர்வு காணவேண்டும் என  உத்தரவிட்டார்.இக்கூட்டத்தில், ஆதி திராவிடர் நலத்துறை சார்பில் அருப்புக்கோட்டை வட்டம், பெரியபுளியம்பட்டி கிராமத்தைச் சார்ந்த 22 பயனாளிகளுக்கு கணினி வழி இ-பட்டாக்களையும், பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நலத்துறை சார்பில் சாத்தூர் வட்டம், சின்னகொல்லப்பட்டி கிராமத்தைச் சார்ந்த 19 பயனாளிகளுக்கும், விருதுநகர் வட்டம், கூரைக்குண்டு கிராமத்தைச் சார்ந்த 18 பயனாளிகளுக்கும்  கணினி வழி இ-பட்டாக்களை மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் வழங்கினார்.  தொடர்ந்து, பொதுமக்களிடமிருந்து 566 மனுக்கள் பெறப்பட்டன. இம்மனுக்கள் சம்மந்தப்பட்ட துறை அலுவலர்களிடம் உரிய நடவடிக்கை எடுக்க ஒப்படைக்கப்பட்டது.இக்கூட்டத்தில், மாவட்ட வருவாய் அலுவலர் திருமதி ரா.ஆனந்தி, மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (நிலம்) திரு.சையது முகமது, தனித்துணை ஆட்சியர் (ச.பா.தி) திருமதி மோகனா, ஆதி திராவிடர் நலத்துறை அலுவலர் திருமதி சாந்தி, மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நல அலுவலர் திரு.ஜான்சன் தேவசகாயம், மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலர் திரு.பிரம்ம நாயகம், பொது மேலாளர் (தாட்கோ) திருமதி இந்திராகாந்தி, அரசுத் துறை அலுவலர்கள் மற்றும் பொதுமக்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

Sep 08, 2026

போதைப்பொருள் இல்லா தமிழ்நாட்டை உருவாக்கும் வகையில் பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்துவதற்காக கட்டணமில்லா தொலைபேசி எண்ணை மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் வெளியிட்டார்.

விருதுநகர் மாவட்டம், மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் போதைப்பொருள் இல்லா தமிழ்நாட்டை உருவாக்குவதற்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் கட்டணமில்லா தொலைபேசி எண்ணை மாவட்ட ஆட்சித்தலைவர் மரு.என்.ஓ.சுகபுத்ரா,I A S., அவர்கள்(07.09.2026) வெளியிட்டார்.விருதுநகர் மாவட்டத்தில் போதைப்பொருள் பயன்பாட்டை முற்றிலும் ஒழித்து பொதுமக்கள்,இளைஞர்கள் மற்றும் மாணவ/மாணவியர்களின் எதிர்காலத்தை பாதுகாக்கும் வகையில் "போதைப்பொருளுக்கு இல்லை - ஆரோக்கியமான எதிர்காலத்திற்கு ஆம்“ என்ற விழிப்புணர்வு பிரசாரம் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.இதன் ஒரு பகுதியாக, “I AM AGAINST DRUGS SAY NO TO DRUGS, SAY YES TO LIFE” என்ற விழிப்புணர்வு போதைப் பொருள் தொடர்பான புகார்களை தெரிவிக்க பொதுமக்களும், மாணவ, மாணவிகளும் Drug free tamilnadu என்ற செயலியை இணையதளத்தில் இருந்து பதிவிறக்கம் செய்து பயன்படுத்தலாம், 10581 என்ற கட்டணமில்லா தொலைபேசி எண்ணையும் பயன்படுத்தலாம் என்ற பதாகைகள் வெளியிடப்பட்டது.மேலும், போதைப்பொருள் பயன்பாடு தனிநபரின் உடல்நலம் மற்றும் குடும்ப நலனுக்கு மட்டுமின்றி சமூகத்தின் எதிர்காலத்தையும் பாதிக்கக்கூடியது. எனவே, போதைப்பொருள் இல்லாத சமூகத்தை உருவாக்க அரசு மேற்கொண்டு வரும் நடவடிக்கைகளுக்கு பொதுமக்கள், மாணவர்கள்/இளைஞர்கள், பெற்றோர்கள் மற்றும் தன்னார்வலர்கள் முழுமையான அனைவரும் ஒத்துழைப்பு வழங்க வேண்டும்.எனவே, போதைப்பொருள் தொடர்பான நடவடிக்கைகள் குறித்து பொதுமக்கள் விழிப்புடன் இருந்து, சந்தேகத்திற்கிடமான செயல்பாடுகள் குறித்து மேற்கண்ட செயலி மற்றும் கட்டணமில்லா தொலைபேசி எண்ணிற்க்கு உரிய தகவல் தெரிவிக்க வேண்டும் புகார் அளிக்கும் நபர்கள் குறித்து ரகசியம் பாதுகாக்கப்படும் என மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் தெரிவித்தார்.இந்நிகழ்வில், மாவட்ட வருவாய் அலுவலர் திருமதி ரா.ஆனந்தி, உதவி ஆணையர்(கலால்) திரு.சு.சோமசுந்தர சீனிவாசன், மாவட்ட ஆட்சியரின் நேர்முக  உதவியாளர் (பொது) திருமதி ப்ரிதௌஸ் பாத்திமா, அரசுத் துறை அலுவலர்கள் மற்றும் பொதுமக்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

Sep 08, 2026

தனியார்துறை வேலைவாய்ப்பு முகாம் 11.09.2026 அன்று அருப்புக்கோட்டை, ஜெய்சாய்ராம் கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் நடைபெறுவதை வேலை நாடுநர்கள் பயன்படுத்திக்கொள்ள வேண்டும்.

விருதுநகர், மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தின் வாயிலாக ஒவ்வொரு மாதமும் சிறிய அளவிலான தனியார்துறை வேலைவாய்ப்பு முகாம் நடத்தப்பட்டுவருகிறது.அதன்படி, படித்த வேலை தேடும் இளைஞர்களுக்காக வரும் 11.09.2026 அன்று வெள்ளிக்கிழமை காலை 10.00 மணி முதல் 02.00 மணி வரை தனியார்துறை வேலைவாய்ப்பு  முகாம், அருப்புக்கோட்டை மெயின் ரோடு, பாலவநத்தத்தில் அமைந்துள்ள ஜெய்சாய்ராம் கலை மற்றும் அறிவியல் கல்லூரியில்   நடைபெறவுள்ளது.இத்தனியார் துறை வேலைவாய்ப்பு முகாமில் எலிவேட் டிஜி டெக்னாலஜி, அடையார் ஆனந்தபவன், டிவிஎஸ் சுந்தரம், செபாஸ் மெடிகல், தேவேந்திரன் பிளாஸ்டிக்ஸ், பீமா ஜூவல்லரி போன்ற 20க்கும் மேற்பட்ட பிரபல  முன்னணி நிறுவனங்கள் கலந்துகொண்டு 8ஆம் வகுப்பு  தேர்ச்சி முதல் பட்டப்படிப்பு,  தொழிற்படிப்பு,  டிப்ளமோ மற்றும் பொறியியல் படிப்பு ஆகிய கல்வித் தகுதி   உடைய  பணியாளர்களை  தெரிவு  செய்யவுள்ளார்கள்.இந்த   அரிய  வாய்ப்பினை   பயன்படுத்த        விரும்பும்      வேலை நாடுநர்கள் 11.09.2026 அன்று   வேலைவாய்ப்பு  முகாமில்    கலந்து        கொள்வதற்கு முன்பாக www.tnprivatejobs.tn.gov.in (தனியார்துறை  வேலைவாய்ப்பு  இணையம்) என்ற  இணையதளத்தில் தங்களது  சுய விவரங்களை  பதிவு   செய்துவிட்டு    சுய   விவரச்     சான்றிதழ்,   அனைத்து கல்விச்சான்றிதழ், ஆதார்      அட்டை நகல்   ஆகியவற்றுடன்    கலந்து  கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.   மேலும்  இச்சேவையானது      முற்றிலும்        கட்டணமில்லா  சேவையாகும்.            இம்முகாமில்  கலந்து   கொள்ள        விரும்பும்   தனியார்     துறை நிறுவனங்கள் விருதுநகர்  மாவட்ட வேலைவாய்ப்பு  அலுவலகத்திற்கு  நேரில்   வருகை புரிந்து மாவட்ட வேலைவாய்ப்பு   அலுவலர்       அவர்களை       நேரிலோ   அல்லது    9360171161 என்ற தொலைபேசி  வாயிலாக  தொடர்பு கொள்ளுமாறு கேட்டுக் கொள்ளப்படுகின்றனர்.  தனியார்துறை வேலைவாய்ப்பு முகாம் மூலம் பணிநியமனம் பெற்றவர்களது வேலைவாய்ப்பு அலுவலக பதிவு மூப்பு எவ்விதத்திலும் பாதிக்கப்படாது என  மாவட்ட ஆட்சித்தலைவர்  மரு.என்.ஓ.சுகபுத்ரா,I A S., அவர்கள்  தெரிவித்துள்ளார்.

Sep 08, 2026

2026 ஆம் ஆண்டிற்கான முதலமைச்சர் கோப்பை விளையாட்டுப் போட்டிகள் 09.09.2026 முதல் 30.09.2026 வரை நடைபெறவுள்ளது

தமிழ்நாடு ஒலிம்பிக்ஸ் என்று அழைக்கப்படும் முதலமைச்சர் கோப்பைக்கான விளையாட்டுப் போட்டிகள் தமிழ்நாட்டில் உள்ள பள்ளி, கல்லூரி மாணவ, மாணவியர்கள், மாற்றுத்திறனாளிகள், பொதுமக்கள் மற்றும் அரசுப்பணியாளர்கள் பங்கேற்கும் வகையில் ஒவ்வொரு வருடமும் நடத்தப்பட்டு வருகின்றது.அதனடிப்படையில் விருதுநகர் மாவட்ட விளையாட்டரங்கத்தின் சார்பாக 2026 ஆம் ஆண்டிற்கான முதலமைச்சர் கோப்பை விளையாட்டுப் போட்டிகள் 09.09.2026 முதல் 30.09.2026 வரை மாவட்ட விளையாட்டரங்கம் உட்பட மொத்தம் 10 இடங்களில் நடைபெற உள்ளது.அனைத்துப் பிரிவுகளிலும் மாவட்ட அளவில் வெற்றி பெறுபவர்களுக்கு முதற்பரிசாக ரூ.3,000/-மும், இரண்டாம் பரிசாக ரூ.2,000/-மும், மூன்றாம் பரிசாக ரூ.1,000/-மும், பதக்கங்களும், சான்றிதழ்களும் வழங்கப்படவுள்ளது. மாநில அளவிலான போட்டிகளில் வெற்றி பெறுவர்களுக்கு அரசின் உயரிய பரிசுத் தொகையான முதல் பரிசாக ரூ.1,00,000/-மும், இரண்டாம் பரிசாக ரூ.75,000/-மும், மூன்றாம் பரிசாக ரூ.50,000/-மும், குழுப்போட்டிகளில் வெற்றி பெறுபவர்களுக்கு முதற்பரிசாக ரூ.75,000/-மும், இரண்டாம் பரிசாக ரூ.50,000/-மும், மூன்றாம் பரிசாக ரூ.25,000/-மும், தனித்தனியாக வழங்கப்படவுள்ளது.விளையாட்டுப் போட்டிகளில் கலந்து கொள்ளவிருக்கும் பள்ளி மற்றும் கல்லுாரி மாணவ மாணவியர்கள், தலைமையாசிரியர்கள் அல்லது கல்லுாரி முதல்வர் அவர்களால் வழங்கப்பட்ட உறுதி சான்றிதழ் (Bonafide Certificate) (அ) அடையாள அட்டை (Id Card) கண்டிப்பாக எடுத்து வரவேண்டும். அரசுப்பணியாளர்கள் பிரிவில் பங்கேற்கும் வீரர் மற்றும் வீராங்கனைகள் தங்களது அடையாள அட்டையினை (Id Card) தவறாது சமர்பிக்க வேண்டும்.மேலும் விளையாட்டுப் போட்டிகளில் கலந்து கொள்ளவிருக்கும் அனைத்துப் பிரிவினரும் தங்களது புகைப்பட நகல், ஆதார் கார்டு நகல் மற்றும் வங்கிப்புத்தகத்தின் முதல் பக்க நகலினை தவறாது சமர்பிக்க வேண்டும். சிலம்பம், சதுரங்கம், கேரம், இறகுபந்து, ஸ்கேட்டிங், யோகா, கிரிக்கெட், துப்பாக்கி சுடுதல், மேசைபந்து ஆகிய விளையாட்டு போட்டியில் பங்குபெறும் மாணவ, மாணவிகள் அதற்கான விளையாட்டு உபகரணங்களை தாங்களே கொண்டு வரவேண்டும். ஆன்லைன் மூலம் பதிவு செய்த மாணவ, மாணவிகள் மட்டுமே விளையாட்டு போட்டியில் கலந்து கொள்ள இயலும். பள்ளியிலிருந்து வரும் மாணவ, மாணவிகளை அதற்கென பொறுப்பு ஆசிரியர்களை நியமித்து அனுப்பி வைத்திடுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.மாணவ, மாணவியர்கள் காலை மற்றும்  மதிய உணவுகளை தாங்களே கொண்டு வரவேண்டும். அனைத்துப் போட்டிகளும் காலை 8 மணிக்கு ஆரம்பமாகும். முதலமைச்சர் கோப்பை விளையாட்டுப் போட்டிகளுக்கு முன்பதிவு செய்துள்ள வீரர் மற்றும் வீராங்கனைகளுக்கான, விளையாட்டுப் போட்டிகள்  நடைபெறும் தேதி மற்றும் இடம் குறித்த விவரங்களை https://tncmtrophy.sdat.in/ என்ற இணையதளத்தில் பார்த்து அறிந்து கொள்ளலாம்  என மாவட்ட ஆட்சித்தலைவர் மரு.என்.ஓ.சுகபுத்ரா,I A S .,அவர்கள் தெரிவித்துள்ளார்.

Sep 08, 2026

சர்வதேச திறன் போட்டித்தேர்விற்கான பயிற்சி வகுப்புகளில் பங்கேற்றிட மாவட்ட அளவிலான திறன் போட்டித் தேர்வுகள் நடைபெறவுள்ளது.

2026-2027 ஆம் ஆண்டிற்கான தேசிய மற்றும் சர்வதேச அளவிலான திறன் போட்டிகளில் பங்கேற்கும் வகையில் உலகத்தரம் வாய்ந்த திறமையான இளைஞர்களைக் கண்டறிந்து அவர்களின் திறனை மேம்படுத்தும் விதமாக திறன் போட்டிகள் நடை பெறவிருக்கிறது. விருப்பமுள்ள மாணவ,  மாணவியர் https://www.skillindiadigital.gov.in/account/register?returnUrl=%2Findia-skills-%20competition என்ற இணையதளம் வாயிலாக வரும் 15-09-2026 வரை பதிவு செய்யலாம்.ஐடிஐ, பாலிடெக்னிக், இன்சினீயரிங் கல்லூரி மற்றும் கலை அறிவியல் கல்லூரி மாணவ மாணவியர் இப்போட்டிகளில் பங்கேற்கலாம். கடந்த 2025-2026 ஆம் ஆண்டு தெற்கு மண்டல போட்டிகளில் தமிழகம் முதலிடம் பிடித்து, 30 தங்கம், 32 வெள்ளி, 29 வெண்கலம் மற்றும் 17 சிறப்பு பதக்கங்கள் என மொத்தம் 108 பதக்கங்களை வென்றது குறிப்பிடத்தக்கது.எனவே, சர்வதேச திறன் போட்டிகளில் மாணவ, மாணவியர்கள் பங்கேற்று தங்கள் திறமைகளை வெளிப்படுத்தலாம் என மாவட்ட ஆட்சித்தலைவர் மரு.என்.ஓ.சுகபுத்ரா,I A S., அவர்கள் தெரிவித்துள்ளார்.

Sep 05, 2026

யாகி இமானுவேல் சேகரன் நினைவு தினம் அனுசரிப்பது தொடர்பான ஆலோசனைக்கூட்டம் .

தியாகி இமானுவேல் சேகரன் நினைவு தினம் அனுசரிப்பது தொடர்பான ஆலோசனைக்கூட்டம் மாவட்ட ஆட்சித்தலைவர் மவிருதுநகர் மாவட்ட ஆட்சியர் அலுவலகக் கூட்டரங்கில், 11.09.2026 அன்று பரமக்குடியில் தியாகி இமானுவேல் சேகரனார் நினைவு தினம் அனுசரித்தல் தொடர்பாக மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.தெ.கண்ணன்,த.கா.ப., அவர்கள் மற்றும் சிவகாசி சார் ஆட்சியர் திரு.முகமது இர்பான்,I A S., அவர்கள் ஆகியோர் முன்னிலையில், மாவட்ட ஆட்சித்தலைவர் மரு.என்.ஓ.சுகபுத்ரா,இ.ஆ.ப., அவர்கள் தலைமையில், அனைத்துத்துறை அலுவலர்கள் மற்றும் சமுதாய தலைவர்களுடன் சட்டம் ஒழுங்கு முன்னேற்பாடுகள் தொடர்பான ஆலோசனைக் கூட்டம் (03.09.2026) அன்று நடைபெற்றது.அஞ்சலி செலுத்த செல்பவர்கள் சொந்த வாகனங்களில் மட்டுமே செல்ல அனுமதிக்கப்படுகிறது.  வாடகை வாகனங்கள் (T.Board) மற்றும் திறந்த வெளி வாகனங்களில் (Open type) செல்ல அனுமதி இல்லை.  இரு சக்கர வாகனங்கள், டிராக்டர், டாடா ஏஸ் (TATA ACE), சைக்கிள் போன்ற வாகனங்களில் செல்ல அனுமதி இல்லை. சொந்த வாகனங்கள் மூலம் (கார், வேன் மற்றும் பிற இலகு வாகனங்கள் மட்டும்) வருகை தருபவர்கள்; வாகன எண், வாகனத்தில் பயணம் செய்வோர் விபரங்களை 08.09.2026-ஆம் தேதிக்கு முன்பாக விருதுநகர் காவல் கண்காணிப்பாளர் அலுவலக மாவட்ட தனிப்பிரிவு அலுவலகத்தில் அளித்து வாகன அனுமதி சீட்டு (Vehicle Pass) பெற்றுக் கொள்ள வேண்டும். இதனை வாகனத்தில் முன்புற கண்ணாடியில் ஒட்ட வேண்டும்.  வாகன அனுமதிச் சீட்டு இல்லாத வாகனங்கள் பரமக்குடி செல்வதற்கு அனுமதிக்கப்படமாட்டாது.  சொந்த வாகனங்களில் செல்பவர்கள் அனுமதிக்கப்பட்ட வழித்தடங்களில் மட்டுமே நினைவிடத்திற்கு சென்றுவர வேண்டும். புதிதாக வேறு வழித்தடத்தில் சென்றுவர அனுமதியில்லை. வாகனத்தின் மேற்கூரையில் பயணம் செய்யக் கூடாது. வாகனத்தில் ஆயுதங்கள் ஏதும் எடுத்துச் செல்லக் கூடாது.  வரும் வழித்தடங்களில் வெடி போடுவதை கண்டிப்பாக தவிர்க்க வேண்டும். வாகனங்களில் சாதி மத உணர்வுகளைத் தூண்டும் வாசகங்கள் அடங்கிய பேனர்களைக் கட்டி வரவோ, கோஷங்களை எழுப்பவோ கூடாது. வாகனத்தில் ஒலி பெருக்கிகள் பொருத்திச் செல்லக் கூடாது.  வாகனங்களில் செல்பவர்கள் மேளதாளம் அடித்துச் செல்லக்கூடாது.  வாகனங்களில் செல்பவர்கள் சட்டம் ஒழுங்கு பிரச்சினையில் ஈடுபடும் பட்சத்தில் அவர்களின் வாகனம் பறிமுதல் செய்யப்படுவதுடன் சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும். சட்டம் ஒழுங்கை கருத்திற்கொண்டு காவல்துறையினர் ஏற்படுத்திய சோதனைச் சாவடிகளில் வாகனங்களை சோதனைக்குட்படுத்தி காவல்துறையினரின் பணிக்கு ஒத்துழைப்பு தரவேண்டும்.  பரமக்குடி நகருக்குள் சந்தைப்பேட்டை சந்திப்பு முதல் காட்டுப்பரமக்குடி வரை தேசிய நெடுஞ்சாலையில் எந்த ஒரு வாகனத்தையும் நிறுத்தி வைக்க அனுமதி கிடையாது. வாகனங்களில் வரும்பொழுது வரும் வழியில் போக்குவரத்திற்கு இடையூறு செய்யும் வகையில் வாகனங்களை நினைத்த இடங்களில் நிறுத்தக் கூடாது. அஞ்சலி செலுத்துவதற்காக கிராமங்களிலிருந்து பேருந்துகளில் வருபவர்கள் தங்கள் கிராமங்களிலிருந்து காலை 08.00 மணிக்குள் புறப்பட வேண்டும். வாகனங்களில் (பேருந்துகள் உட்பட) பிளக்ஸ் போர்டு, பேனர், கட்சி கொடிகள் மற்றும் ஒலிபெருக்கி  ஆகியவற்றை பயன்படுத்தக் கூடாது.  மேலும் ஜோதி தொடர்பான உபகரணங்களை   பேருந்துகளில் எடுத்து வரக்கூடாது. வாகனங்களில் (பேருந்துகள் உட்பட) படிக்கட்டு மற்றும் மேற்கூரையில் பயணம் செய்யக்கூடாது. பேருந்துகளில் அனைவரும் முறையாக பயணச் சீட்டு பெற்று வர வேண்டும்.அரசியல் கட்சிகள் மற்றும் அமைப்புகளின் தலைவர்கள் செல்லும் பொழுது உடன் 3 சொந்த வாகனங்கள் மட்டும் அனுமதிக்கப்படும்,  மேலும் தலைவர்களுக்கு ஒதுக்கப்பட்ட குறித்த நேரத்தில் அஞ்சலி செலுத்தி விட்டு செல்ல வேண்டும். நடைபயணமாக அஞ்சலி செலுத்த செல்லக்கூடாது.   ஜோதி, முளைப்பாரி மற்றும் பால்குடம் ஆகியவற்றிற்கு அனுமதி இல்லை.  நினைவிடத்திலிருந்து சுமார் 1 கி.மீ. தொலைவிற்குள் மட்டுமே எடுத்து வர அனுமதிக்கப்படும். செப்டம்பர் 11-ஆம் தேதிக்கு முந்தைய தினமோ, பிந்தைய தினமோ எவ்வித நிகழ்ச்சிகள் கொண்டாடவும், ஒலிபெருக்கி அமைப்பதற்கும் அனுமதி கிடையாது.   செப்டம்பர் 11-ஆம் தேதி மட்டும்  அவரவர்களது சொந்த ஊரில் ஒலிபெருக்கி இன்றி புகைப்படம் வைத்து, மாலை அணிவித்து மரியாதை செலுத்தலாம். பரமக்குடி நினைவிடத்தில் செப்டம்பர் 11-ஆம் தேதி மட்டும்  அஞ்சலி செலுத்த அனுமதிக்கப்படும்.  மேற்படி நிகழ்ச்சி தொடர்பாக பேனர் மற்றும் கட்அவுட்கள் வைக்கக் காவல் துறையினர் மற்றும் சம்மந்தப்பட்ட துறையினரிடம் முன்அனுமதி பெற்ற பின்னரே  வைக்க வேண்டும்.   அவ்வாறு அனுமதி பெறாமல் வைக்கப்படும் கட்அவுட்கள் எவ்வித முன்னறிவிப்புமின்றி அகற்றப்படும்.  மேலும் சுவரொட்டிகள் மற்றும் சுவர் விளம்பரம் செய்வதற்கு அனுமதி இல்லைஅலங்கார ஊர்தி அணிவகுப்பு மாட்டு வண்டியில் வருதல், சாதித் தலைவர்கள் வேடமணிந்து வருதல் ஆகியவற்றுக்கு அனுமதி இல்லை. நினைவிடத்தில் தேவேந்திர பண்பாட்டுக் கழகம் சார்பாக மட்டுமே கூட்டத்தை முறைப்படுத்த ஒரு ஒலிபெருக்கி மட்டும்  பயன்படுத்திக் கொள்ள அனுமதிக்கப்படும்.  நினைவிடத்திற்குள் தலைவர்கள் ஒலிபெருக்கியில் பேசுவதற்கு அனுமதி கிடையாது. பரமக்குடி நினைவிடத்தில் 11.09.2026 ஆம் தேதி அன்று மாலை 04.00 மணிக்குள் அனைத்து நிகழ்ச்சிகளையும் முடித்துக் கொள்ள வேண்டும்.  அஞ்சலி செலுத்த வருபவர்களில் பதிவு செய்யப்பட்ட அரசியல் கட்சிகளின் (Registered Political Parties) தலைவர்களுக்கு மட்டும் நேரம் ஒதுக்கீடு செய்யப்படும்.  இதற்கு ஏதுவாக சம்பந்தப்பட்ட அரசியல் கட்சிகள் இராமநாதபுரம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் 08.09.2026-ஆம் தேதி மாலை 5.45 மணிக்கு முன்பாக விண்ணப்பத்தினை அளிக்க வேண்டும்.மேற்கூறிய விதிமுறைகளை மீறும்பட்சத்தில் சம்மந்தப்பட்ட நபர்களின் மீதும், அமைப்புகள் மீதும் சட்டப்படி உரிய நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என மாவட்ட ஆட்சித்தலைவர் , அவர்கள்  தெரிவித்தார்.இக்கூட்டத்தில் மாவட்ட வருவாய் அலுவலர் திருமதி ஆனந்தி, கூடுதல் காவல் கண்காணிப்பாளர் திரு.கருப்பையா, சிவகாசி சார் ஆட்சியர் திரு.முகமது இர்பான்,இ.ஆ.ப., மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் திருமதி பிர்தௌஸ் பாத்திமா உட்பட அரசு அலுவலர்கள், காவல்துறை அலுவலர்கள், பல்வேறு அமைப்புகளின் பிரதிநிதிகள் பலர் கலந்து கொண்டனர்.

Sep 04, 2026

மாவட்டத்தில் 218 நகர்ப்புற நியாய விலைக்கடைகள் மூலம் 25,000 கிலோ வெங்காயம் கிலோ ரூ.35-க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

விருதுநகர் மாவட்டம், மல்லாங்கிணறு தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்க வளாகத்தில் உள்ள நியாயவிலைக்கடைகளில் பொதுமக்களுக்கு கிலோ ரூ.35/- விலையில் வெங்காயம் விற்பனை செய்யப்படும் பணிகளை மாவட்ட ஆட்சித்தலைவர் மரு.என்.ஓ.சுகபுத்ரா, I A S., அவர்கள் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.தமிழ்நாடு அரசு ஏழை எளிய நடுத்தர மக்களின் நலனை கருத்தில் கொண்டு, வெங்காய விலை ஏற்றத்தை உடனடியாக கட்டுப்படுத்தும் வகையில் பொதுமக்களுக்கு நியாயமான விலையில் விற்பனை செய்ய நடவடிக்கை எடுத்துள்ளது.விருதுநகர் மாவட்டத்தில் பொதுமக்களின் அன்றாட தேவையை கருத்தில் கொண்டு, தமிழ்நாடு கூட்டுறவு விற்பனை இணையத்தின் மூலம் ஒதுக்கீடு செய்யப்பட்ட 25,000 கிலோ வெங்காயம், மாவட்டத்தில் உள்ள 218 நகர்ப்புற நியாய விலைக்கடைகள் மூலம் இன்று முதல்(03.09.2026) குடும்ப அட்டைதாரர்களுக்கு கிலோ ரூ.35/- என்ற விலையில் விற்பனை செய்யப்பட்டு வருகிறது.மாவட்டத்தில் உள்ள நகர்ப்புற நியாய விலைக்கடைகளின் எண்ணிக்கையின் அடிப்படையில் வட்டாரம் வாரியாக வெங்காயம் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. அதன்படி, அருப்புக்கோட்டை வட்டாரத்தில் 28 நியாய விலைக்கடைகளுக்கு 3,200 கிலோ, காரியாபட்டி வட்டாரத்தில் 11 கடைகளுக்கு 1,200 கிலோ, இராஜபாளையம் வட்டாரத்தில் 53 கடைகளுக்கு 6,150 கிலோ, சாத்தூர் வட்டாரத்தில் 7 கடைகளுக்கு 650 கிலோ, சிவகாசி வட்டாரத்தில் 49 கடைகளுக்கு 6,450 கிலோ, திருவில்லிபுத்தூர் வட்டாரத்தில் 31 கடைகளுக்கு 3,450 கிலோ, வத்திராயிருப்பு வட்டாரத்தில் 17 கடைகளுக்கு 1,650 கிலோ மற்றும் விருதுநகர் வட்டாரத்தில் 22 கடைகளுக்கு 2,250 கிலோ என மொத்தம் 218 நகர்ப்புற நியாய விலைக்கடைகளுக்கு 25,000 கிலோ வெங்காயம் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.எனவே, நகர்ப்புற பகுதி குடும்ப அட்டைதாரர்கள் தங்களுக்கான நியாய விலைக்கடைகளில் கிலோ ரூ.35/- என்ற விலையில் வெங்காயத்தை பெற்றுக்கொண்டு பயன்பெறலாம் என மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் தெரிவித்தார்.இந்த ஆய்வின் போது, மல்லாங்கிணறு பேரூராட்சி செயல் அலுவலர், கூட்டுறவு பணியாளர்கள், அரசு அலுவலர்கள் பலர் உடனிருந்தனர்.

1 2 3 4 5 6 7 8 9 10 ... 144 145

AD's



More News