வண்டல் மண், களிமண் இலவசமாக எடுக்க விவசாயிகள் விண்ணப்பிக்கலாம் மாவட்ட ஆட்சியர் தகவல்.
விருதுநகர் மாவட்டத்தில் விவசாயிகள் நீர் வளத்துறை மற்றும் ஊரக வளர்ச்சித்துறையின் பராமரிப்பில் உள்ள பரிந்துரை செய்யப்பட்ட நீர் நிலைகளில் இருந்து இலவசமாக வண்டல் களிமண் எடுத்துக்கொள்ள மாவட்ட அரசிதழில் அறிவிப்புகள் வெளியிடப்பட்டுள்ளது.அதன்படி மேல் வைப்பாறு வடிநிலக் கோட்டம், இராஜபாளையம், வைப்பாறு வடிநிலக் கோட்டம், விருதுநகர், குண்டாறு படுகை (Gundaru Basin) மற்றும் ஊரக வளர்ச்சித்துறை ஆகியவற்றின் கீழ் முறையே மொத்தம் 403 நீர்நிலைகள் தேர்வு செய்யப்பட்டுள்ளது.
உள்ளூர் விவசாயிகள், மண்பாண்ட தொழிலாளர்கள் மற்றும் பொதுமக்கள் (இதர வீட்டு பயன்பாட்டிற்கு) வண்டல் மண் அல்லது களிமண் ஆகியவற்றை இலவசமாக எடுத்து செல்வதற்கு அனுமதி வழங்கப்பட உள்ளது.தகுதியுடைய பயனாளிகள் tnesevaitngov.in என்ற இணையதளம் வாயிலாக விண்ணப்பிக்கலாம். விண்ணப்பிக்கும் பயனாளிகளின் வசிப்பிடம் அல்லது வேளாண் நிலம் அமைந்துள்ள கிராமம் மற்றும் வண்டல் மண் அல்லது களிமண் தூர்வாரி எடுத்து செல்லப்பட வேண்டிய நீர்நிலைகள் அமைந்துள்ள கிராமம் ஆகியவை அதே வருவாய் வட்டத்தின் எல்லை வரம்பிற்குள் அமைந்திருக்க வேண்டும்.
விவசாய பயன்பாட்டிற்காக வண்டல் மண் பெற விண்ணப்பிக்கும் நபர், சொந்தமாக விவசாய நிலம் வைத்துள்ளவராக இருக்க வேண்டும். மண்பாண்ட தொழிலாளராக இருப்பின், விண்ணப்பித்த பின்பு சம்பந்தப்பட்ட கிராம நிர்வாக அலுவலர் அதனை முறைப்படி உறுதி செய்தபிறகு அனுமதி வழங்கப்படும்.இந்த அனுமதியானது விவசாய நில மேம்பாட்டிற்காக (2 ஆண்டுகளுக்கு ஒருமுறை மட்டும் ) நன்செய் நிலம் எனில் ஏக்கர் ஒன்றுக்கு 75 கன மீட்டர் (ஹெக்டேருக்கு 185 கண மீட்டர்) என்ற அளவிலும், புன்செய் நிலம் எனில் ஏக்கர் ஒன்றுக்கு 90 கனமீட்டர் (ஹெக்டேருக்கு 222 கனமீட்டர்) என்ற அளவிலும், மண்பாண்ட தொழிலுக்கு 60 கன மீட்டருக்கு மிகாமலும், இதர வீட்டு பயன்பாட்டிற்கு 30 கன மீட்டர் அளவிலும் கட்டணமின்றி மண் எடுத்துச் செல்ல அனுமதிக்கப்படும்.
விண்ணப்பத்தாரரால் அளிக்கப்பட்ட தகவல்கள் விதிமுறைகளை பூர்த்தி செய்திருப்பின், சம்பந்தப்பட்ட தாசில்தாரால் 10 நாட்களுக்குள் அனுமதி ஆணை வழங்கப்படும்.தாசில்தாரால் அனுமதி ஆணை கிடைக்கப்பெற்ற பயனாளிகள், தொடர்புடைய நீர்நிலை ஆதாரங்களின் பொறுப்பு அலுவலர்களை அணுகி சம்பந்தப்பட்ட துறை அலுவலர்கள் வரையறை செய்யும் பகுதியில் தங்களுக்கு அனுமதிக்கப்பட்ட அளவுக்கு மட்டும் வண்டல் மண் அல்லது களிமண் எடுத்துச்செல்ல வேண்டும் என மாவட்ட ஆட்சியர் மரு.என்.ஓ.சுகபுத்ரா,I A S., அவர்கள் தெரிவித்துள்ளார்.
0
Leave a Reply