விருதுநகர் மாவட்டம், மல்லாங்கிணறு மற்றும் காரியாபட்டி பேரூராட்சி பகுதிகளில் மேற்கொள்ளப்பட்டு வரும் பல்வேறு வளர்ச்சிப் பணிகள் மற்றும் பொதுமக்களுக்கான அடிப்படை வசதிகள் தொடர்பான பணிகளை மாவட்ட ஆட்சித்தலைவர் மரு.என்.ஓ.சுகபுத்ரா, I A S., அவர்கள் (03.09.2026) நேரில் பார்வையிட்டு கள ஆய்வு மேற்கொண்டார்.மாவட்டத்தில் ஊராட்சி, நகராட்சி, பேரூராட்சி பகுதிகளில் பல்வேறு வளர்ச்சித்திட்ட பணிகள், அடிப்படை வசதிகள் தொடர்ச்சியாக மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. அந்த பணிகளின் முன்னேற்றம், தரம் குறித்து ஆய்வு மேற்கொண்டு உறுதி செய்யப்பட்டு வருகிறது.அந்த வகையில், மல்லாங்கிணறு பேரூராட்சிக்கான குடிநீர் ஆதாரத்தை மேம்படுத்தும் வகையில் ரூ.18 இலட்சம் மதிப்பில் நடைபெற்று வரும் 5 புதிய ஆழ்துளை கிணறுகள், 3 ஆழ்துளை கிணறுகள் பராமரிப்பு பணிகள், பேரூராட்சியில் தூய்மைப்பணிகளை மேற்கொள்ள தூய்மைப் பணியாளர்களுக்கு வழங்குவதற்காக பெறப்பட்டுள்ள உபகரணங்கள் மற்றும் வளர்ச்சித்திட்ட பணிகள் ஆய்வு செய்யப்பட்டன.மேலும், காரியாபட்டி பேரூராட்சியில் நடைபெற்று வரும் டெங்கு ஒழிப்பு பணிகள், விநியோகிக்கப்படும் குடிநீரில் குளோரின் அளவு, பள்ளி மாணவியர்களுக்கான அரசு சமூக நீதி விடுதி உள்ளிட்டவை ஆய்வு செய்யப்பட்டது.பொதுமக்களின் அடிப்படைத் தேவைகளை பூர்த்தி செய்வதற்காக அரசு செயல்படுத்தி வரும் அனைத்து திட்டங்களும் உரிய பயனாளிகளை சென்றடைவதை சம்பந்தப்பட்ட அலுவலர்கள் தொடர்ந்து கண்காணிக்கவும், பேரூராட்சி பகுதிகளில் நடைபெற்று வரும் வளர்ச்சிப் பணிகளை தரமாகவும், விரைந்து முடிக்கும் வகையிலும் அலுவலர்கள் ஒருங்கிணைந்து செயல்படவும், குடிநீர் திட்டப் பணிகளின் முன்னேற்றத்தை தொடர்ந்து கண்காணித்து, பொதுமக்களுக்கு சீரான குடிநீர் வழங்குவதை உறுதி செய்யவும், டெங்கு உள்ளிட்ட கொசுக்களால் பரவும் நோய்களைத் தடுப்பதில் பொதுமக்களிடையே தொடர்ந்து விழிப்புணர்வு ஏற்படுத்துவதுடன், வீடுகள் மற்றும் சுற்றுப்புறங்களில் தண்ணீர் தேங்காத வகையில் தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ளவும், பள்ளி மாணவியர் சமூக நல விடுதிகளில் மாணவியர்களின் பாதுகாப்பு, சுகாதாரம் மற்றும் கல்வி சார்ந்த தேவைகளுக்கு முன்னுரிமை அளித்து தேவையான அனைத்து வசதிகளையும் ஏற்படுத்திடவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது என மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் தெரிவித்தார்.இந்த ஆய்வின்போது, பேரூராட்சி செயல் அலுவலர்கள், தொடர்புடைய துறை அலுவலர்கள் மற்றும் பணியாளர்கள் உடனிருந்தனர்.
விருதுநகர் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில், 14.09.2026 அன்று விநாயகர் சதுர்த்தி மற்றும் அதன் பின்னர் நடைபெறும் விநாயகர் சிலை ஊர்வலத்தின் போது மேற்கொள்ள வேண்டிய முன்னேற்பாடு பணிகள் குறித்தும், பின்பற்ற வேண்டிய வழிமுறைகள் குறித்தும் தொடர்புடைய அரசு அலுவலர்கள் மற்றும் பல்வேறு அமைப்புகளுடனான ஆலோசனைக் கூட்டம் மாவட்ட ஆட்சித்தலைவர் மரு.என்.ஓ.சுகபுத்ரா,I A S., அவர்கள் தலைமையில் (03.09.2026) நடைபெற்றது.விருதுநகர் மாவட்டத்தில், 14.09.2026 அன்று விநாயகர் சதுர்த்தி மற்றும் விநாயகர் சிலை ஊர்வலம், சிலை கரைத்தலின் போது, அரசின் விதிமுறைகள் மற்றும் மாசுக்கட்டுபாட்டு வாரியத்தின் வழிமுறைகளை பின்பற்றி செயல்பட வேண்டும்.விழா ஏற்பாட்டாளர்கள் விநாயகர் சிலைகள் நிறுவவும் மற்றும் ஊர்வலம் நடத்தவும் படிவம் -1-ல் சிவகாசி சார் ஆட்சியர், சாத்தூர்/அருப்புக்கோட்டை வருவாய் கோட்டாட்சியர் ஆகியோர்களிடமிருந்து உரிய அனுமதி பெற வேண்டும். சிலை உற்பத்தியாளர்கள் / சிலை வடிவமைப்பாளர்கள்/ கைவினைஞர்கள் /கலைஞர்கள் ஆகியோர்களுக்கு சிலை செய்வதற்கான உரிமம் அல்லது அனுமதி ஆனது சம்மந்தப்பட்ட உள்ளாட்சி மற்றும் நகர்புற நிர்வாகத்தினரிடம் பெற்றுக் கொள்ள வேண்டும். பொது அமைதி மற்றும் பாதுகாப்பு, மத நல்லிணக்கம் ஆகியவற்றை பேணும் பொருட்டு வருவாய்த்துறை / காவல்துறை / மாசுகட்டுபாட்டு வாரியம் ஆகிய துறையினரால் வகுக்கப்படும் நிபந்தனைகளை கண்டிப்பாக விழா ஏற்பாட்டாளர்கள் பின்பற்ற வேண்டும். விநாயகர் சிலைகள் களிமண்ணால் மட்டுமே செய்யப்பட்டதாக இருக்க வேண்டும். சுற்றுச்சூழலுக்கு பாதிப்பு ஏற்படுத்தும் பிளாஸ்ட்டர் ஆப் பாரீஸ் மற்றும் தெர்மாகோல் (பாலிஸ்டிரின்) போன்ற பொருட்களால் சிலைகள் அமைக்கப்படக் கூடாது. சிலைகளுக்கு வர்ணம் பூசுவதற்கு நச்சு மற்றும் மக்காத இரசாயன சாயம் / எண்ணெய் வண்ணப்பூச்சுகளை கண்டிப்பாக பயன்படுத்தக் கூடாது. மேலும் சிலைகளின் மீது எனாமல் மற்றும் செயற்கை சாயத்தை அடிப்படையாக கொண்ட வண்ணப்பூச்சுகளை பயன்படுத்தக் கூடாது. மாற்றாக சுற்றுச்சூழலுக்கு உகந்த நீர் சார்ந்த / மக்கக்கூடிய / நச்சு கலப்பற்ற இயற்கை சாயங்கள் மட்டுமே பயன்படுத்த வேண்டும். சிலைகளின் ஆபரணங்கள் தயாரிப்பதற்கு உலர்ந்த மலர் கூறுகள், வைக்கோல் போன்றவை பயன்படுத்தப்படலாம். மேலும் சிலைகளை பளபளப்பாக மாற்றுவதற்கு மரங்களின் இயற்கை பிசின்களை பயன்படுத்தலாம். சிலைகளை அழகுபடுத்த வண்ணப்பூச்சுகள் மற்றும் பிற நச்சு இரசாயனங்கள் கொண்ட பொருட்களுக்கு பதிலாக, இயற்கை பொருட்கள் மற்றும் இயற்கை சாயங்களால் செய்யப்பட்ட அலங்கார ஆடைகள் மட்டுமே பயன்படுத்த வேண்டும். நீர்நிலைகள் மாசுபடுவதை தடுக்கும் பொருட்டு, வைக்கோல் போன்ற சுற்றுச்சூழலுக்கு உகந்த பொருட்களை மட்டுமே சிலைகள் தயாரிக்க அல்லது சிலைகள்/பந்தல்கள் ஆகியவைகளை அலங்கரிக்க பயன்படுத்த வேண்டும். பிளாஸ்டிக் மற்றும் தொர்மாக்கோல் போன்ற பொருட்களை கண்டிப்பாக பயன்படுத்தக் கூடாது.சிலைகள் நிறுவப்படும் இடங்களில் அமைக்கப்படும் தற்காலிக அமைப்பு, எளிதில் தீப்பற்றாத பொருட்களைக் கொண்டு (தகரம் மற்றும் சிமிண்ட் அட்டை) அமைக்கப்பட்டிருக்க வேண்டும். சிலையைச் சுற்றிலும் பாதுகாப்பான தடுப்புகள் அமைக்கப்பட்டிருக்க வேண்டும். கண்டிப்பாக எளிதில் தீப்பற்றக் கூடிய தென்னங்கீற்று போன்ற பொருட்களிள் பயன்பாடு கண்டிப்பாக தவிர்க்கப்பட வேண்டும். சிலைகளானது அடி மட்டத்திலிருந்து அதாவது மேடை மற்றும் பீடம் உட்பட அதிகபட்சம் 10 அடி உயரத்தில் மட்டுமே அமைக்கப்பட வேண்டும். மற்ற வழிபாட்டுத்தலங்கள், மருத்துவமனை மற்றும் கல்வி சார்ந்த நிறுவனங்கள் அருகில் விநாயகர் சிலைகள் வைப்பதற்கு அனுமதி கிடையாது. கூம்பு வடிவ ஒலிபெருக்கிகள் பயன்படுத்தக்கூடாது. ஒலிபெருக்கியினை காலை 2 மணி நேரம் மற்றும் மாலை 2 மணி நேரம் வழிபாட்டு நேரங்களில் மட்டுமே பயன்படுத்த அனுமதிக்கப்படும். சிலைகள் வைக்கப்படும் இடங்கள் பொதுமக்களுக்கும், போக்குவரத்திற்கும் இடையூறு இல்லாத இடத்தில் வைக்க வேண்டும். சிலைகள் வைக்கும் இடம், ஊர்வலம் செல்லும் பாதை போன்றவற்றை குறிப்பிட்டு அனுமதி பெற வேண்டும். சிலைகள் அமைக்கும் விழா குழுவினர், சிலை குழு அமைத்து, சிலை வைக்கப்பட்ட நாள் முதல், சிலையை கரைக்கும் நாள் வரை குறைந்தபட்சம் இரு நபர்கள் தொடர்ந்து காவல் துறையினருடன் சேர்ந்து 24 மணி நேரமும் பாதுகாப்பு அலுவலில் இருக்க வேண்டும்.அரசியல் மற்றும் சாதி ரீதியான டிஜிட்டல் பேனர்கள் வைப்பதற்கு அனுமதி கிடையாது. விநாயகர் சிலைகள் வைக்கப்பட்ட தேதியிலிருந்து 5 தினங்களுக்குள் சிலைகள் கரைக்கப்பட வேண்டும். ஊர்வலம் நிர்ணயிக்கப்பட்ட நேரத்தில் காவல்துறையினர் அனுமதிக்கும் வழித்தடங்களில் மட்டுமே சிலைகளை ஊர்வலமாக எடுத்துச் செல்லவேண்டும். ஒவ்வொரு சிலைக்கும் ஒவ்வொரு நாளும் பாதுகாப்புக்கென நியமிக்கப்பட்ட குழு உறுப்பினரின் பெயர், விலாசம், கைபேசி எண் ஆகியவற்றை முன்கூட்டியே தேதி வாரியாக பட்டியலிட்டு சம்மந்தப்பட்ட காவல் நிலையங்களில் எழுத்து மூலமாக கொடுக்க வேண்டும். ஊர்வலத்தின்போது பிற மதத்தினரின் மனதை புண்படுத்தும்படியான கோசங்களோ, வாசகங்களையோ பயன்படுத்தக்கூடாது.விநாயகர் சிலைகளை மினி லாரி மற்றும் டிராக்டர்கள் ஆகியவற்றில் மட்டுமே கொண்டு செல்ல வேண்டும். மூன்று சக்கர வாகனங்கள் மற்றும் மாட்டுவண்டிகளில் கொண்டு செல்ல அனுமதி கிடையாது. மோட்டார் வாகனச்சட்டம் 1988-ன் படி அனுமதிக்கப்பட்ட நபர்கள் மட்டுமே விநாயகர் சிலைகள் கரைக்கக்கூடிய வாகனங்களில் செல்ல வேண்டும். வருவாய் கோட்டாட்சியரின் அனுமதியில்லாமல் வைக்கப்படும் விநாயகர் சிலைகள் எவ்வித முன்னறிவிப்புமின்றி அகற்றப்படும். அவ்வப்போது நிலவும், சட்டம் ஒழுங்கு பிரச்சினையை கருத்தில் கொண்டு, அனுமதிக்கப்பட்ட வழித்தடங்களை மாற்றம் செய்யவோ, வழங்கப்பட்ட அனுமதியை ரத்து செய்யவோ காவல்துறையினர் மற்றும் வருவாய் துறையினருக்கு அதிகாரம் உண்டு. ஊர்வலத்தின்போது ஆயுதங்களை எடுத்துச் செல்லக்கூடாது. பட்டாசுகள் வெடிக்கக் கூடாது. ஊர்வலம் செல்லும்போது பொதுமக்களுக்கோ, போக்குவரத்திற்கோ இடையூறு செய்யக்கூடாது. சூரிய அஸ்தமனத்திற்கு முன்பு சிலைகள் கரைக்கப்பட வேண்டும்.கடந்த காலங்களில் சிலைகள் வைக்கப்பட்ட இடங்களில் மட்டுமே சிலை வைக்க வேண்டும். புதிய இடங்களில் சிலைகள் வைக்கவும், புதிய வழித்தடங்களில் செல்லவும் அனுமதி மறுக்கப்படுகிறது. விழா ஏற்பட்டாளர்கள், பந்தல்கள் மற்றும் மின் அமைப்பு அலங்காரங்கள் ஆகியவைகளுக்கான அனுமதியினை உரிய அலுவலர்களிடமிருந்து பெற்றுக் கொள்ள வேண்டும். வழிபாட்டுப் பகுதி மற்றும் அதனைச் சுற்றியுள்ள பகுதிகளில் எளிதில் எரியக்கூடிய பொருட்கள் ஏதும் இல்லை என்பதையும் உறுதி செய்து கொள்ள வேண்டும். விநாயகர் வழிபாட்டின் போது அங்கீகரிக்கப்படாத மின் இணைப்பு மற்றும் மின் திருட்டு உள்ளிட்ட சட்ட விரோத செயல்கள் ஏதும் இல்லை என்பதை உறுதி செய்திட வேண்டும். விநாயகர் வழிபாட்டு மற்றும் ஊர்வலத்தின் போது, போதிய முதலுதவி மற்றும் அவசர மருத்துவ வசதிகள் உள்ளதா என்பதை உறுதி செய்திட வேண்டும்.விருதுநகர் மாவட்டத்தில், விநாயகர் சிலைகளை தமிழ்நாடு மாசுக்கட்டுபாட்டு வாரியத்தினால் அங்கீகரிக்கப்பட்ட இடங்களில் மட்டுமே கரைக்கப்படவேண்டும்.அதன்படி, விருதுநகரைச் சுற்றியுள்ள இடங்களிலிருந்து வரும் சிலைகள் கல்கிடங்கிலும், ஆவுடையாபுரத்திலிருந்து வரும் சிலைகள் அங்குள்ள உபயோகப்படுத்தப்படாத கிணற்றிலும், சிவகாசி நகர்ப்புறங்களில் இருந்து வரும் சிலைகள் தெய்வாணை நகரில் உள்ள உபயோகப்படுத்தப்படாத கிணற்றிலும், ஆ.புதுப்பட்டி மாரனேரி ஊர்களில் இருந்து வரும் சிலைகள் மாரனேரி கண்மாயிலும், திருவில்லிபுத்தூர் நகரிலிருந்து வரும் சிலைகள் திருவில்லிபுத்தூர் மடவார் வளாகத்திலும், பந்தல்குடியைச் சுற்றியுள்ள இடங்களிலிருந்து வரும் சிலைகள் பந்தல்குடி பெரிய கண்மாயிலும், இராஜபாளையம் அதன் சுற்றுப்புறத்தில் உள்ள சிலைகள் ஜெயவிலாஸ் பஸ் கம்பெனிக்கு எதிர்புறம் உள்ள வடுகவூரணியிலும், அம்மாபட்டி, ஏழாயிரம்பண்ணை, ஆலங்குளத்திலிருந்து வரும் சிலைகள் அப்பகுதியிலுள்ள உபயோகப்படுத்தாத கிணறு, தெப்பம் மற்றும் ஆலங்குளம் குவாரி பகுதியிலும், கிருஷ்ணன்கோவில் சிலைகள் இராமச்சந்திராபுரம் கண்மாயிலும், குன்னூர் சிலைகள் குன்னூர் கண்மாயிலும், வத்திராயிருப்பு மற்றும் கூமாபட்டி சிலைகள் மகாராஜபுரம் மற்றும் கூமாபட்டி பெரியகுளம் கண்மாயிலும், அருப்புக்கோட்டை நகர்புறத்தில் இருந்து வரும் சிலைகள் பந்தல்குடி சாலையில் உள்ள பெரியகண்மாயிலும்,திருவில்லிபுத்தூர் தாலுகாவிலிருந்து வரும் சிலைகள் திருவண்ணாமலை கோனகிரி குளத்திலும் கரைக்க வேண்டும். விநாயகர் சிலை ஊர்வலத்தின் போது சிலை அமைப்பினர் / நிர்வாகிகள் ஊர்வலம் அமைதியான முறையில் நடைபெற மாவட்ட நிர்வாகத்திற்கும் காவல் துறையினருக்கும் ஒத்துழைப்பு தருமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது. மேலும் மேற்கூறிய விதிமுறைகளை மீறும் பட்சத்தில் சம்மந்தப்பட்ட நபர்கள் மீது சட்டப்படியான நடவடிக்கை எடுக்கப்படும் என மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் தெரிவித்தார்.
விருதுநகர் மாவட்டத்தில், 2026-27-ஆம் நிதியாண்டில் வேளாண்மை பொறியியல் துறை மூலமாக இறைப்புத்திறன் குறைந்த பழைய மின் இறைப்பான்களுக்கு பதிலாக புதிய மின் இறைப்பான்கள் மற்றும் புதியதாக மின் இறைப்பான்கள் நிறுவ விரும்பும் சிறு/குறு விவசாயிகளுக்கு பின்னேற்பு மானியம் அதிகபட்சம் ரூ.15,000/- (பதினைந்தாயிரம் மட்டும்) வீதம் 25 எண்களுக்கு ரூ.3.75 இலட்சம் (மூன்று இலட்சத்து எழுபத்தைந்தாயிரம் மட்டும்) வேளாண்மைப் பொறியியல் துறையின் மூலமாக வழங்கப்படவுள்ளது. மானியம் கணக்கிடும் போது மாற்றப்படும் மின் இறைப்பானின் அங்கீகரிக்கப்பட்ட விலையில் 50 சதவீதம் அல்லது ரூ.15000/- இதில் எது குறைவோ அது மானியமாக வழங்கப்படும். இதற்கு விண்ணப்பிக்கவுள்ள விவசாயிகள் வேளாண்மைப் பொறியியல் துறை, தலைமைப் பொறியாளர்(வே.பொ) அவர்களால் அங்கீகரிக்கப்பட்டுள்ள மின் மோட்டார் நிறுவனங்கள் மற்றும் வகையின் விபரத்தினை அருகிலுள்ள வேளாண்மைப் பொறியியல் துறை அலுவலகங்களை அணுகியோ, வட்டார பொறியாளர்களை தொடர்பு கொண்டோ, அவ்வகை இறைப்பான்களை வாங்கி மானியம் பெற்று பயன் பெற கேட்டுக் கொள்ளப்படுகிறது.மேலும், விண்ணப்பிக்க தேவையான ஆவணங்கள் பாஸ்போர்ட் சைஸ் புகைப்படம், பட்டா, அடங்கல், புல வரைபடம் (கிணறு/போர் குறிப்பிடப்படவேண்டும்), ஆதார் நகல், குடும்ப அட்டை நகல், சாதிச் சான்றிதழ், சொட்டு நீர்/தெளிப்பு நீர் பாசன பதிவு விபரம், சிறு/குறு விவசாயி சான்றிதழ், வங்கி புத்தகத்தின் முன் பக்க நகல் ஆகும்.மேலும் விபரங்களுக்கு விருதுநகர், காரியாபட்டி, அருப்புக்கோட்டை, திருச்சுழி மற்றும் நரிக்குடி வட்டார விவசாயிகள் உதவி செயற் பொறியாளர் (வே.பொ), வேளாண்மைப் பொறியியல் துறை, மாவட்ட ஆட்சியரகம், விருதுநகர் ஐ (8838825538) யும் திருவில்லிப்புத்தூர், இராஜபாளையம், வத்திராயிருப்பு, சிவகாசி, வெம்பக்கோட்டை மற்றும் சாத்தூர் வட்டார விவசாயிகள் உதவி செயற்பொறியாளர்(வே.பொ), வேளாண்மைப் பொறியியல் துறை, திருவில்லிபுத்தூர் (9786390851)ஆகியோரை தொடர்பு கொண்டோ பதிவு செய்து முன்னுரிமைப்படி பின்னேற்பு மானியம் பெற்று பயனடைய விருதுநகர் மாவட்ட ஆட்சியர் மருத்துவர்.திரு.என்.ஓ.சுகபுத்ரா I A S. அவர்கள் கேட்டுக் கொள்கிறார்.
விருதுநகர் மாவட்டம், விருதுநகர் ஊராட்சி ஒன்றியம், தாதம்பட்டியில் தோட்டக்கலைத்துறை மூலம் பிரதான் மந்திரி க்ரிஷி சிஞ்சாயீ யோஜனா (Pradhan Mantri Krishi Sinchayee Yojana – PMKSY) – நுண்ணீர் பாசனத் திட்டத்தின் கீழ் அரசு மானியம் பெற்று பழக்கன்றுகள் நடப்பட்டுள்ளதை, விருதுநகர் பாராளுமன்ற உறுப்பினர் திரு.ப.மாணிக்கம்தாகூர் அவர்கள் முன்னிலையில், மாவட்ட ஆட்சித்தலைவர் மரு.என்.ஓ.சுகபுத்ரா, I A S., அவர்கள் தொடர்புடைய அரசுத்துறை அலுவலர்களுடன் ஆய்வு மேற்கொண்டார்.நாட்டில் விவசாயத்திற்குத் தேவையான நீரை சிக்கனமாகவும், திறம்படவும் பயன்படுத்துவதையும், பாசன வசதிகளை மேம்படுத்துவதையும், நீர்ப்பாசனப் பரப்பை அதிகரிப்பதையும் நோக்கமாகக் கொண்டு பிரதான் மந்திரி க்ரிஷி சிஞ்சாயீ யோஜனா திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இத்திட்டத்தின் கீழ், விவசாய நிலங்களில் சொட்டு நீர்ப்பாசனம் மற்றும் தெளிப்பு நீர்ப்பாசனம் உள்ளிட்ட நுண்ணீர் பாசன முறைகள் ஊக்குவிக்கப்படுகின்றன.மாவட்டத்தில், இத்திட்டத்தின் கீழ் 2019 ஆம் ஆண்டு முதல் 2025 ஆம் ஆண்டு வரை தோட்டக்கலை பயிர்களில் 17,252 விவசாயிகளுக்கு 14,501 ஹெக்டேர் பரப்பளவில் சொட்டுநீர் பாசனம் அமைக்கப்பட்டுள்ளது. கடந்த 2025- 26 ஆம் ஆண்டில் சொட்டுநீர் பாசனம் 1013 விவசாயிகளுக்கு 1021 ஹெக்டர்கள் பரப்பளவில் ரூ.3.71 கோடி மானியத்தில் அமைக்கப்பட்டுள்ளது. நடப்பாண்டு 2026- 27 ஆம் ஆண்டில் சொட்டுநீர் பாசனம், தெளிப்பு நீர் பாசனம் உட்பட நுண்ணீர் பாசனம் அமைக்க 800 ஹெக்டேர்கள் இலக்கு நிர்ணயக்கப்பட்டு, ரூ.3.68 கோடி நிதி ஒதுக்கீடு பெறப்பட்டுள்ளது.அதன்படி, இத்திட்டத்தின் கீழ் தாதம்பட்டியில் 0.75 ஹெக்டேர் பரப்பளவில் கொய்யா மரக்கன்றுகள், ஒண்டிப்புலி நாயக்கனூரில் 0.78 ஹெக்டேர் பரப்பளவில் வாழை மரக்கன்றுகள் நடப்பட்டுள்ளதை ஆய்வு செய்யப்பட்டது.மேலும், விவசாயிகளின் கோரிக்கைகள் மற்றும் தேவைகள் குறித்து கேட்டறிந்து, திட்டத்தின் கீழ் வழங்கப்படும் நுண்ணீர் பாசன உபகரணங்கள் தரமான முறையில் அமைக்கப்படுவதையும், அவை முறையாகச் செயல்படுவதையும் சம்பந்தப்பட்ட துறை அலுவலர்கள் தொடர்ந்து கண்காணிக்கவும், விவசாயிகளுக்கு தேவையான தொழில்நுட்ப வழிகாட்டுதல்களை வழங்கவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.நுண்ணீர் பாசன முறைகள் மூலம் குறைந்த அளவு நீரைக் கொண்டு அதிக பரப்பளவில் சாகுபடி மேற்கொள்ளும் வாய்ப்பு ஏற்படுவதுடன், நீரின் பயன்பாட்டுத் திறனும் அதிகரிக்கிறது. குறிப்பாக, மழைப்பொழிவு குறைவாக உள்ள பகுதிகளில் கிடைக்கக்கூடிய நீர்வளத்தை சிக்கனமாகப் பயன்படுத்தி விவசாய உற்பத்தியைத் தொடர்ந்து மேற்கொள்ள நுண்ணீர் பாசன முறைகள் முக்கிய பங்காற்றுகின்றன. விவசாயிகளின் நிலத்தடி நீர் மற்றும் பாசன நீர் தேவைகளை கருத்தில் கொண்டு, அரசின் நுண்ணீர் பாசனத் திட்டங்களை தகுதியான விவசாயிகள் முழுமையாகப் பயன்படுத்திக்கொள்ள வேண்டும் என மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் தெரிவித்தார்.இந்த ஆய்வின்போது, வேளாண்மை இணை இயக்குநர் திரு.மோகன்தாஸ் சௌமியன், மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர்(விவ) அ.அம்சவேணி, தோட்டக்கலை துணை இயக்குநர் திரு.ஆறுமுகம் உட்பட அரசு அலுவலர்கள் உடனிருந்தனர்.
விருதுநகர் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் செயல்படும் தன்னார்வப் பயிலும் வட்டம் வாயிலாக பாரத ஸ்டேட் வங்கி (State Bank of India) அறிவிப்பு செய்யப்பட்டுள்ள SBI Junior Associate (9,124 காலிப்பணியிடங்கள்) தேர்விற்கான இலவசப் பயிற்சி வகுப்பு 03.09.2026 (வியாழக்கிழமை) முதல் அலுவலக வளாகத்தில் நடைபெற உள்ளது.அலுவலகத்தில் அனைத்து போட்டித் தேர்வுகளுக்கான புத்தகங்கள் அடங்கிய நூலகம் மற்றும் Wifi வசதியுடன் கணினி ஆய்வகம் உள்ளது. இலவசப் பயிற்சி வகுப்பு திறன் வாய்ந்த பயிற்றுநர்களை கொண்டு நடத்தப்படவுள்ளது. இலவசப் பாடக்குறிப்புகள் வழங்கி பாடவாரியானத் தேர்வுகள் மற்றும் முழுமாதிரித் தேர்வுகள் நடைபெறும்.மேலும், மெய்நிகர் கற்றல் இணையதளம் மூலம் அரசு போட்டித்தேர்வுகளுக்கான மின்பாடக் குறிப்புகள், காணொளி வகுப்புகள், மாதிரித் தேர்வுகள் மற்றும் வினாத்தாள்களை இலவசமாகப் பயன்படுத்திக்கொள்ளலாம். மேலும், புதிய வேலைவாய்ப்பு அறிவிப்புகள், தேர்வு அறிவிக்கைகள் மற்றும் தொழில்நெறி வழிகாட்டுதல் தகவல்களும் வழங்கப்படுகின்றன. தொலைதூரப் பகுதிகளில் உள்ள இளைஞர்களும் எங்கிருந்தும், எப்போது வேண்டுமானாலும் கற்றுக்கொள்ளும் வகையில் இத்தளம் செயல்படுகிறது. www.tamilnaducareerservices.tn.gov.in என்ற இணையதளத்தில் பதிவு செய்து இச்சேவைகளைப் பயன்படுத்திக்கொள்ளலாம்.SBI Junior Associate பயிற்சி வகுப்பில் கலந்துகொள்ள விருப்பம் உடையவர்கள் studycirclevnr@gmail.com என்ற மின்னஞ்சல் வாயிலாகவும் அல்லது விருதுநகர் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் நேரடியாகவும் பதிவு செய்யலாம்.எனவே, SBI –Junior Associate தேர்விற்குத் தயாராகும் தேர்வர்கள் இப்பயிற்சி வகுப்பில் கலந்துக்கொண்டு பயன்பெறலாம் என மாவட்ட ஆட்சித்தலைவர் மரு.என்.ஓ.சுகபுத்ரா,I A S., அவர்கள் தெரிவித்துள்ளார்.
விருதுநகர் மாவட்டத்தில் 2026-27 ம் நிதியாண்டில் வேளாண் இயந்திரமயமாக்கல் துணை இயக்கம் திட்டத்தின் கீழ் வேளாண் இயந்திரங்கள் மற்றும் கருவிகள் வாங்கிட 392 நபர்களுக்கு ரூ.478.32 இலட்சம் மானியம் வேளாண்மைப் பொறியியல் துறை மூலமாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.விருதுநகர் மாவட்டத்தில் விவசாயிகளின் பற்றாக்குறையை நிவர்த்தி செய்திடவும், குறித்த காலத்தில் பயிர் சாகுபடி செய்திடவும், விவசாயிகளின் நிகர லாபத்தை உயர்த்திடவும் தமிழக அரசு சார்பில் வேளாண்மை இயந்திரமயமாக்கல் திட்டம் வேளாண்மைப் பொறியியல் துறை மூலமாக செயல்படுத்தப்பட்டு வருகிறது. இத்திட்டத்தின்கீழ் சிறு/குறு, ஆதிதிராவிட மற்றும் பெண் விவசாயிகளுக்கு 50 சதவீத மானியமும் , இதர விவசாயிகளுக்கு 40 சதவீத மானியம் அல்லது அரசால் நிர்ணயம் செய்யப்பட்ட அதிக பட்ச மானியத் தொகை வழங்கப்படுகிறது.தற்போது இத் திட்டத்தின் கீழ் பயனடைய விரும்பும் தனிப்பட்டவிவசாயிகள் தங்கள் விண்ணப்பத்தினை உழவன் செயலியில் பதிவு செய்து பிரதி மாதம் 1 முதல் 7 வரை மற்றும் 15 முதல் 21 வரை விண்ணப்பத்தினை பதிவு செய்திட வேண்டும். பிரதி மாதம் 8 மற்றும் 22 ம் நாள் கணிணி முறை லாட்டரியில் தேர்ந்தெடுக்கப்படும் பயனாளிகளுக்கு கருவி/ இயந்திரத்திற்கான வழங்கலாணை வழங்கப்பட்டு, பின்னர் இயந்திரம்/கருவிக்கான மொத்த விலையில் மானியத்தொகை கழித்த தொகைக்கு வங்கி வரைவோலை(DD)/உடனடி மொத்த தீர்வு (RTGS) மூலமாக பணத்தினை உற்பத்தியாளருக்கு செலுத்திய பின்னர் கருவி/ இயந்திரங்களை அங்கீகரிக்கப்பட்ட விற்பனையாளர்/விநியோகஸ்தர் விவசாயிகளுக்கு வழங்குவர். பின்னர் கருவி/இயந்திரங்களை உதவி செயற் பொறியாளர்(வே.பொ) மற்றும் வட்டாரப் பொறியாளர்கள் பார்வையிட்டு அரசாணையின்படி, உரிய வழிகாட்டுமுறையின்படி மானியம் விடுவிக்கப்படும்.தற்போது சிறு உழுவை இயந்திரம், பெரிய உழுவை இயந்திரம், பவர்டில்லர், களை எடுக்கும் கருவி, ரோட்டவேட்டர், விதை மற்றும் உரமிடும் கருவி, பேட்டரியினால் இயங்கும் பருத்தி பறிக்கும் கருவி மின்மோட்டர்/இயந்திரம்/பவர் டில்லர்/20 எச்பி க்கு குறைந்த டிராக்டரால் இயங்கும் புல் வெட்டும் கருவி , பல்வகை கதிரடிக்கும் இயந்திரம் ,வைக்கோல் கட்டும் இயந்திரம் , தென்னை ஓலை வெட்டும் இயந்திரம் , எடுத்துச் செல்லக்கூடிய கால்நடைக் கொட்டகை ஆகியவை வழங்கப்படவுள்ளது. மொத்தம் 392 எண்கள் 478.32 இலட்சம் மானியம் வழங்கப்படவுள்ளது.இத்திட்டத்தில் பயன்பெற விவசாயிகள் தங்களது விவசாய பதிவினை (Farmer Registers) கட்டாயமாக பதிவு செய்திருக்க வேண்டும். இத்திட்டத்திற்கு விண்ணப்பிக்க பாஸ்போர்ட் சைஸ் புகைப்படம், பட்டா, அடங்கல், புலவரைபடம், ஆதார் நகல், குடும்ப அட்டை நகல், சாதிச் சான்றிதழ், சிறு/குறு விவசாயி சான்றிதழ் மற்றும் வங்கி புத்தகத்தின் முன்பக்க நகல் ஆகியவை தேவையான ஆவணங்கள் ஆகும்.மேலும் விபரங்களுக்கு விருதுநகர், காரியாபட்டி, அருப்புக்கோட்டை, திருச்சுழி மற்றும் நரிக்குடி வட்டார விவசாயிகள் உதவி செயற் பொறியாளர் (வே.பொ), வேளாண்மைப் பொறியியல் துறை, மாவட்ட ஆட்சியரகம், விருதுநகர் (8838825538) மற்றும் திருவில்லிப்புத்தூர், இராஜபாளையம், வத்திராயிருப்பு, சிவகாசி, வெம்பக்கோட்டை மற்றும் சாத்தூர் வட்டார விவசாயிகள் உதவி செயற்பொறியாளர்(வே.பொ), வேளாண்மைப் பொறியியல் துறை, திருவில்லிபுத்தூர் (9786390851)ஆகியோரை தொடர்பு கொண்டு பயனடையலாம் என மாவட்ட ஆட்சித்தலைவர் மரு.என்.ஓ.சுகபுத்ரா I A S.,அவர்கள் தெரிவித்துள்ளார்.
தமிழ்நாட்டில் அரிசி, கோதுமை இலவசமாகவும், சர்க்கரை, சமையல் எண்ணெய், பருப்பு உள்ளிட்ட பொருட்கள் குறைந்த விலையிலும் நியாய விலைக்கடைகள் மூலம் குடும்ப அட்டைதாரர்களுக்கு மாதந்தோறும் வழங்கப்பட்டு வருகிறது. அதன்படி நியாயவிலைக்கடைகளுக்கு குடும்ப அட்டையில் பெயர் உள்ள குடும்ப உறுப்பினர்கள் சென்று விற்பனை முனைய இயந்திரத்தில் தங்களின் கைரேகையை பதிவு செய்து பொருட்கள் வாங்கி வருகின்றனர்.மேலும், கடைகளுக்கு சென்று அத்தியாவசியப் பொருட்களை வாங்க முடியாத நிலையில் உள்ள மாற்றுத்திறனாளிகள் மற்றும் மூத்த குடிமக்களுக்கு அவர்களின் வீடுகளுக்கே அத்தியாவசியப் பொருட்களை நேரடியாக சென்று வழங்கும் வகையில் இல்லம் சென்று பொதுவிநியோகத் திட்டப் பொருட்களை விநியோகிக்கும் திட்டத்தை தமிழக அரசு செயல்படுத்திவருகிறது.விருதுநகர் மாவட்டத்தில் இல்லம் சென்று பொதுவிநியோகத் திட்டப் பொருட்களை விநியோகிக்கும் திட்டத்தின் கீழ் வருகின்ற செப்டம்பர் 2026 மாதத்தில் 05.09.2026 (சனிக்கிழமை) மற்றும் 07.09.2026 (திங்கள்கிழமை) ஆகிய தேதிகளில் பயனாளிகளின் வீடுகளுக்கே சென்று குடிமைப்பொருட்கள் விநியோகம் செய்யப்படவுள்ளன என மாவட்ட ஆட்சித்தலைவர் மரு.என்.ஓ.சுகபுத்ரா,I A S., அவர்கள் தெரிவித்துள்ளார்.
விருதுநகர் மாவட்டம், விருதுநகர் ஊராட்சி ஒன்றியம் செங்குன்றாபுரம் கிராமத்தில் விவசாயிகள் விளைநிலங்களில் பயிர் செய்துள்ளதை இணையதளத்தில் பதிவேற்றம் செய்யும் பணியினை மாவட்ட ஆட்சித்தலைவர் மரு.என்.ஓ.சுகபுத்ரா,I A S., அவர்கள் (01.09.2026) பார்வையிட்டார்.தமிழ்நாடு அரசின் அறிவுறுத்தலின்படி, மாவட்டத்தில் சாகுபடி செய்யப்பட்டுள்ள பயிர்களின் பரப்பளவு, பயிர் வகைகள், சாகுபடி நிலை உள்ளிட்ட விவரங்களை துல்லியமாக பதிவு செய்யும் வகையில் டிஜிட்டல் முறையில் பயிர் கணக்கெடுப்பு பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. மின்னணு முறையில் பயிர்கணக்கெடுப்பு பணியானது நவீன தொழில் நுட்பங்கள் துணையுடன் நிகழ்கால பயிர் கணக்கெடுப்பு விவசாய நிலங்கள் புகைப்படத்தோடு கைப்பேசி செயலி மூலம் அனைத்து விவசாயிகளின் நிலங்களிலும் விடுதலின்றி ஒவ்வொரு பருவத்திலும் பயிர்கணக்கெடுப்பு நடத்தப்படுகிறது. விருதுநகர் மாவட்டத்தில் உள்ள நரிக்குடி, வத்திராயிருப்பு, திருவல்லிபுத்தூர், சிவகாசி, திருச்சுழி, விருதுநகர், இராஜபாளையம், காரியாபட்டி, வெம்பக்கோட்டை, சாத்தூர் மற்றும் அருப்புக்கோட்டை ஆகிய 11 ஊராட்சி ஒன்றியங்களில் உள்ள 601 கிராமங்களில் 9,40,138 புல உட்பிரிவுகளில் உள்ள நிலங்களில் கணக்கெடுப்பு பணிகள் நடைபெற்று வருகின்றன. இதுவரை 2,35,357 புல எண்கள் கணக்கெடுக்கப்பட்டுள்ளன. மீதமுள்ள 7,04,781 புல எண்கள் கணக்கெடுக்கும் பணிகள் நடைபெற்று வருகின்றன.அதன்படி, விவசாய நிலங்களில் மேற்கொள்ளப்பட்டு வரும் டிஜிட்டல் பயிர் கணக்கெடுப்பு பணிகளில், களப்பணியாளர்கள் அலைபேசி செயலி வாயிலாக பயிர் வகை, சாகுபடி செய்யப்பட்டுள்ள பரப்பளவு உள்ளிட்ட விவரங்களை பதிவு செய்வது குறித்து ஆய்வு செய்யப்பட்டது.மேலும், கணக்கெடுப்பு பணிகளின்போது விவசாயிகளிடமிருந்து பெறப்படும் தகவல்கள் சரியாகவும், முழுமையாகவும் பதிவு செய்யப்படுவதை உறுதி செய்ய வேண்டும் எனவும், கள ஆய்வின்போது நிலத்தின் உண்மை நிலவரத்துடன் பதிவுகள் பொருந்துவதை உறுதி செய்ய வேண்டும் எனவும் அலுவலர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.பயிர் கணக்கெடுப்பு மூலம் பெறப்படும் தரவுகள், மாவட்டத்தில் வேளாண் சாகுபடி நிலவரத்தை துல்லியமாக அறிந்து கொள்வதற்கும், விவசாயிகளுக்கான அரசு நலத்திட்டங்களை சிறப்பாக செயல்படுத்துவதற்கும், வங்கிக்கடன் பெறுவதற்கும், இயற்கை இடர்பாடுகளால் ஏற்படும் பயிர் பாதிப்புகளுக்கான நிவாரணம், பயிர் காப்பீடு மற்றும் வேளாண்மை தொடர்பான திட்டமிடல் பணிகளுக்கும் முக்கிய ஆதாரமாக அமையும் என மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் தெரிவித்தார்.இந்த ஆய்வின்போது, வேளாண்மை இணை இயக்குநர் திரு.மோகன்தாஸ் சௌமியன், மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (விவ) அ.அம்சவேணி, தோட்டக்கலை துணை இயக்குநர் திரு.ஆறுமுகம், வருவாய்த்துறை அலுவலர்கள் உடனிருந்தனர்.
விருதுநகர் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில், தாய்மாமன் தங்க மோதிரம் வழங்கும் திட்டம் தொடர்பாக மேற்கொள்ளப்பட்டு வரும் முன்னேற்பாடு பணிகளை மாவட்ட ஆட்சித்தலைவர் மரு.என்.ஓ.சுகபுத்ரா,I A S., அவர்கள் (01.09.2026) நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களால் அரசு மருத்துவமனைகளில் பிரசவிக்கும் ஒவ்வொரு குழந்தையையும் மற்றும் பிரசவித்த தாயையும் கௌரவிக்கும் விதமாக தாய்மாமன் தங்க மோதிரம் திட்டம் வருகின்ற 15.09.2026 அன்று தொடங்கி வைக்கப்படவுள்ளது.விருதுநகர் மாவட்டத்தில் உள்ள 60 அரசு ஆரம்ப சுகாதார நிலையங்கள், 9 அரசு மருத்துவமனைகள், 1 அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனை ஆகியவற்றில் 15.09.2026 அன்று முதல் அரசு மருத்துவமனையில் பிறக்கும் குழந்தைகளுக்கு தாய்மாமன் தங்க மோதிரம் திட்டத்தின் கீழ் தலா 1 கிராம் தங்க மோதிரம் வழங்கப்படவுள்ளது. மாவட்டத்தில் அரசு மருத்துவமனைகளில் நாளொன்றுக்கு சராசரியாக 25 முதல் 30 குழந்தைகள் பிறக்கின்றன.அதன்படி, விருதுநகர் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில், தாய்மாமன் தங்க மோதிரம் வழங்கும் திட்டம் தொடர்பாக மேற்கொள்ளப்பட்டு வரும் முன்னேற்பாடு பணிகள் குறித்து ஆய்வு செய்யப்பட்டது.இந்த ஆய்வின்போது, தாய்மாமன் தங்க மோதிரம் வழங்கும் திட்டத்தின் கீழ் நடைபெறவுள்ள நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகள், தங்க மோதிரம் வைப்பறைகள், அதற்கான பாதுகாப்பு வசதிகள், நிகழ்ச்சி நடைபெறும் இடம், பயனாளிகள் அமர்வதற்கான ஏற்பாடுகள், வருகை தரும் பயனாளிகளுக்கு முறையாக வசதிகளை ஏற்படுத்தி தருதல், பாதுகாப்பு ஏற்பாடுகள், குடிநீர் வசதி, சுகாதார வசதி, மின்சார வசதி உள்ளிட்ட அடிப்படை வசதிகள் குறித்தும் ஆய்வு செய்யப்பட்டது என மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் தெரிவித்தார்.இந்த ஆய்வின்போது, அரசு மருத்துவ கல்லூரி முதல்வர் மரு.ஜெயசிங், மாவட்ட சுகாதார அலுவலர்(விருதுநகர்) மரு.வே.யசோதாமணி, மருத்துவர்கள், சுகாதாரத்துறை அலுவலர்கள் மற்றும் அரசு அலுவலர்கள் உடனிருந்தனர்.
விருதுநகர் மாவட்டம், விருதுநகர் ஊராட்சி ஒன்றியம், அழகாபுரியில் தமிழ்நாடு தொழில் முனைவோர் மேம்பாடு மற்றும் புத்தாக்க நிறுவனம் சார்பில் திருநர்களுக்காக நடைபெற்று வரும் செயற்கை நுண்ணறிவு மற்றும் இயந்திரவியல்(AI and Robotics) தொழில்நுட்பப் பயிற்சியினை மாவட்ட ஆட்சித்தலைவர் மரு.என்.ஓ.சுகபுத்ரா,I A S., அவர்கள் (01.09.2026) நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.திருநர்களின் திறன்களை மேம்படுத்தி அவர்களுக்கு சுயதொழில் மற்றும் தொழில் முனைவோர் வாய்ப்புகளை உருவாக்கும் நோக்கில் இத்தொழில்நுட்பப் பயிற்சி வழங்கப்பட்டு வருகிறது. இப்பயிற்சியில் 10 திருநர்கள் கலந்து கொண்டு பயிற்சி பெற்று வருகின்றனர்.இப்பயிற்சியில் பங்கேற்ற திருநர்களிடம் பயிற்சியின் மூலம் தங்களுக்கு கிடைக்கும் பயன்கள், கற்றுக்கொள்ளும் தொழில்நுட்பங்கள் மற்றும் பயிற்சிக்குப் பின்னர் மேற்கொள்ள விரும்பும் சுயதொழில் நடவடிக்கைகள் குறித்து கேட்டறியப்பட்டது.திருநர்களின் திறன்களை மேம்படுத்தி, சுய தொழில் புரிந்து பொருளாதார ரீதியாக முன்னேற்றுவதற்கும், சுயதொழில் வாய்ப்புகளை உருவாக்குவதற்கும் அரசின் பல்வேறு நலத்திட்டங்கள் மற்றும் தொழில் முனைவோர் மேம்பாட்டுத் திட்டங்களை உரிய முறையில் பயன்படுத்திக்கொள்ள வேண்டும் என மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் தெரிவித்தார்.இப்பயிற்சியில் கலந்து கொண்ட திருநர்கள், தங்களுக்கு பயனளிக்கும் வகையில் தொழில்நுட்பப் பயிற்சி வழங்கப்பட்டு வருகிறது. இதன் மூலம் நாங்கள் பயிற்சி பெற்று, வேலைவாய்ப்பை பெறுவதோடு, எங்களைப் போன்ற திருநர்களுக்கும் இந்த பயிற்சியை வழங்க முடியும். இதனால் எங்கள் வாழ்வாதாரத்தை மேம்படுத்திக் கொள்ள முடியும். இந்த வாய்ப்பளித்ததற்கும், திருநர்களின் வாழ்வாதார மேம்பாட்டிற்காக பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருவதற்கும் மாவட்ட நிர்வாகத்திற்கு தங்களது நன்றிகளைத் தெரிவித்துக் கொண்டனர்.இந்நிகழ்வின்போது, கால்நடை பராமரிப்புத்துறை இணை இயக்குநர் மரு.ம.சு.சரவணன், ஆவின் பொது மேலாளர் திருமதி தேவகி, மாவட்ட சமூக நல அலுவலர் திருமதி திலகம், அரசு அலுவலர்கள், பயிற்றுநர்கள் மற்றும் பயிற்சியில் பங்கேற்ற திருநர்கள் உடனிருந்தனர்.