25 YEARS OF EXCELLENCE

சமீபத்திய நிகழ்வுகள்:
12 நாளுக்கு ஒருமுறை ராஜபாளையத்தில் குடிநீர் சப்ளை. >> வெயில் தாக்கம்: ராஜபாளையத்தில் இளநீர் விலை கிடுகிடு உயர்வு. >> சிருங்கேரி ஸ்ரீ சாரதா பீடம், ஜகத்குரு ஸ்ரீ ஸ்ரீ விதுசேகரபாரதீ ஸ்வாமிகள் அவர்களின் வர்தந்தி பூஜை. >> இராஜபாளையம் மூத்தோர் நலச்சங்கம் மற்றும் மாண்புமிகு P.S. குமாரசாமி ராஜா நூற்றாண்டு திருமண மண்டபம் இணைந்து பெருமையுடன் கொண்டாடிய “சுதந்திர தினவிழா”. >> ராஜபாளையம் ரோட்டரி சங்கம், காவேரி மருத்துவமனை–திருநெல்வேலி இணைந்து நடத்திய இலவச இருதயப் பரிசோதனை முகாம். >> இராஜபாளையம் ரோட்டரி சங்கம் நாற்று இலக்கிய அமைப்பு இணைந்து வழங்கும் யானைகள் தின விழா கொண்டாட்டம் - 2026 >> ஆகஸ்ட் - 12 ,யானைகள் தின விழா முன்னிட்டு ,மாணவர்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்த ஒவியப் போட்டிகள். >> ஆடிப்பெருக்கு சிறப்பு வழிபாடு. >> தொடர்பு எல்லைக்கு வெளியே அடுக்குமாடி குடியிருப்பு வாசிகள்; அலைபேசி சிக்னல் இன்றி அவதி. >> வயல் தின விழா. >>


செய்தி மக்கள் தொடர்பு அலுவலகம் விருதுநகர் மாவட்டம்

Aug 17, 2026

விருதுநகர் ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட குந்தலப்பட்டி கிராமத்தில் நடைபெற்ற கிராம சபைக் கூட்டத்தில் மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் சிறப்பு பார்வையாளராக பங்கேற்றார்.

இந்திய திருநாட்டின் 80-வது சுந்திரதினத்தை முன்னிட்டு, விருதுநகர் மாவட்டம், விருதுநகர் ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட குந்தலப்பட்டி கிராமத்தில் (15.08.2026) நடைபெற்ற சிறப்பு கிராமசபைக் கூட்டத்தில்  மாவட்ட ஆட்சித்தலைவர்  மரு.என்.ஓ.சுகபுத்ரா,I A S., அவர்கள் சிறப்பு பார்வையாளராக பங்கேற்றார்.இக்கூட்டத்தில், தூய்மைப் பணியாளர்களுக்கு மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் பொன்னாடை அணிவித்து கௌரவித்தார். பின்னர், மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை சார்பில் 2 கர்ப்பிணி தாய்மார்களுக்கு ஊட்டச்சத்து பெட்டகங்களையும், கால்நடை பராமரிப்பு துறையின் மூலம் 5 பயனாளிகளுக்கு தாது உப்புக்கலவைகளையும், தோட்டக்கலைத்துறையின் மூலம் 3 பயனாளிகளுக்கு மரக்கன்றுகள், விதைகளையும், 5 மகளிர் சுய உதவி குழுக்களுக்கு ரூ.1.60 இலட்சம் மதிப்பில் கடன் உதவிகளையும் என மொத்தம் 15 பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகளை மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் வழங்கினார்.அரசு என்பது எல்லா மக்களையும் சமமாக பார்த்து அவர்களுக்கு தேவையான அடிப்படை வசதிகளை செய்து தரும் ஒரு அமைப்பாகும். இந்த கிராம சபையின் மிக முக்கிய நோக்கம் என்னவென்றால், ஜனநாயக நாட்டில், கிராமத்தில் ஊராட்சி தலைவர்கள், மாவட்டத்தில் மாவட்ட ஆட்சியர்கள், அரசுத் துறை அலுவலர்கள், மக்கள் பிரதிநிதிகள், உள்ளாட்சி பிரதிநிதிகள் ஆகியோர்கள் இருப்பார்கள். நாங்கள் எல்லாம் மக்களின் பணியாளர்கள். எங்களுக்கு கிடைக்கப்பெற்ற அதிகாரம் உங்களிடம் இருந்து பெறப்பட்டது. உண்மையான அதிகாரம் மக்களிடம் தான் உள்ளது. அதனடிப்படையில் இந்த கிராமசபை கூட்டத்தின் வாயிலாக இந்த கிராமத்தின் வளர்ச்சிக்கு தேவையான பணிகள் அரசு மூலம் என்னென்ன வளர்ச்சி பணிகள் முடிக்கப்பட்டுள்ளது, என்னென்ன பணிகள் நடைபெற்று வருகிறது, இன்னும் என்னென்ன தேவைகள் உள்ளது என்பது கிராம மக்கள் வாயிலாக அறிந்து அதை செயல்படுத்துவது தான் இதன் நோக்கம்.தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களின் ஆணைக்கிணங்க, தமிழக அரசானது  அனைத்துத் துறைகளிலும் மக்களுக்காக பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகிறது.தற்போது ஒவ்வொரு கிராமத்திலும் வெற்றி இல்லம் என்ற திட்டம் செயல்படுத்தப்பட உள்ளது. ஒரு வீட்டிற்கு ரூ.5 இலட்சம் வரை நிதி உதவி வழங்கப்பட உள்ளது. வீடு இல்லாமல் இடம் வைத்துள்ளவர்கள் பொருளாதாரத்தில் பின் தங்கியவர்கள் இத்திட்டத்தின் கீழ் பயன்பெற விண்ணப்பிக்கலாம். அரசின் சார்பில் செயல்படுத்தப்படும் திட்டங்களை அறிந்து பொதுமக்கள் தங்களது கிராமத்தின் அடிப்படைத் தேவைகளையும், வளர்ச்சிக்குத் தேவையான உட்கட்டமைப்பு வசதிகளையும் மேம்படுத்திக் கொள்ள வேண்டும். இந்த கிராம சபை கூட்டத்தில் பொதுமக்கள் தெரிவித்த  சுத்திகரிக்கப்பட்ட குடிநீர், அங்கன்வாடி மையம், வாறுகால் சுத்தம் செய்தல் உள்ளிட்ட கோரிக்கைகளுக்கு நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்தார்.இந்த கிராம சபைக் கூட்டத்தில், 01.04.2025 முதல் 15.08.2026 வரையிலான கிராம ஊராட்சி நிர்வாகம் மற்றும் பொது நிதி செலவினம் குறித்து விவாதிக்கப்பட்டது. மேலும், கிராம ஊராட்சியின் தணிக்கை அறிக்கை, தூய்மையான குடிநீர் விநியோகத்தினை உறுதி செய்வது குறித்து விவாதிக்கப்பட்டது. மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதித் திட்டம், அனைத்து கிராம அண்ணா மறுமலர்ச்சி திட்டம், ஜல் ஜீவன் திட்டம், இதர பொருட்கள் குறித்தும் விவாதிக்கப்பட்டது.மேலும், பொதுசுகாதாரம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை, கால்நடைதுறை, வேளாண்மைத்துறை உள்ளிட்ட பல்வேறு அரசுத்துறைகளை சார்ந்த அரசு அலுவலர்கள் தங்கள் துறைகளின் மூலம் செயல்படுத்தப்படும் திட்டங்களை பொதுமக்கள் அறிந்து தெரிந்து கொள்ளும் விதமாக விரிவாக எடுத்துரைத்தனர்.அதனை தொடர்ந்து, குழந்தை தொழிலாளர் மற்றும் எய்ட்ஸ் விழிப்புணர்வு தொடர்பான உறுதி மொழியினை மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் தலைமையில் அனைவரும் ஏற்றுக்கொண்டனர்.இந்த கிராம சபைக் கூட்டத்தில்,  திட்ட இயக்குநர் (மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை) திருமதி வானதி, உதவி இயக்குநர்(ஊராட்சிகள்) (பொ)  திரு.பாலசுப்பிரமணியன், சாத்தூர் வருவாய் கோட்டாட்சியர் திரு.கனகராஜ், அரசு அலுவலர்கள், ஊர் பொதுமக்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

Aug 15, 2026

மாபெரும் தனியார்துறை வேலைவாய்ப்பு முகாம் நடைபெறவுள்ளது, வேலை நாடுநர்கள் பங்கேற்று பயன்பெற வேண்டும் என மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் தகவல்.

விருதுநகர்,  மாவட்ட   வேலைவாய்ப்பு  மற்றும்  தொழில்நெறி  வழிகாட்டும்  மையம் வாயிலாக மாவட்ட நிர்வாகத்தின் சார்பில்   மாபெரும்   தனியார்துறை  வேலைவாய்ப்பு  முகாம் நடத்தப்படவுள்ளது.அதன்படி , படித்த   வேலை  தேடும்  இளைஞர்களுக்காக  வரும் 22.08.2026 அன்று  சனிக்கிழமை   காலை 09.00 மணி முதல் 03.00 மணி வரை தனியார்துறை   வேலைவாய்ப்பு  முகாம்,  விருதுநகர்-சிவகாசி மெயின் ரோடு, ஆமத்தூரில் அமைந்துள்ள ஏ.ஏ.ஏ பொறியியல் கல்லூரியில் நடைபெறவுள்ளது.இம்மாபெரும் தனியார்துறை வேலைவாய்ப்பு முகாமில் எம்ஆர்எஃப் டயர்ஸ், ஹுண்டாய் மோட்டார்ஸ், வி.வி.வி & சன்ஸ் எடிபில் ஆயில்(இதயம்), ராயல் என்பீல்டு, மீனாட்சி மிஷன் ஹாஸ்பிடல், டிவிஎஸ் ஸ்ரீசக்ரா, அடையார் ஆனந்தபவன், சென்டர்சாஃட் டெக்னாலஜிஸ், சால்காம்ப் போன்ற  100க்கும் மேற்பட்ட முன்னணி நிறுவனங்கள் கலந்து கொண்டு 10,000க்கும் மேற்பட்ட பணிக்காலியிடங்களுக்கு 8 ஆம் வகுப்பு தேர்ச்சி முதல் பட்டப்படிப்பு மற்றும் ஐ.டி.ஐ/டிப்ளமோ ஆகிய கல்வித் தகுதி உடைய பணியாளர்கள தெரிவு செய்யவுள்ளார்கள்.இந்த  அரிய வாய்ப்பினை பயன்படுத்த   விரும்பும் வேலைநாடுநர்கள் 22.08.2026  அன்று  மாபெரும் தனியார் துறை வேலைவாய்ப்பு  முகாம்  நேர்காணலில் கலந்து  கொள்ளவதற்கு  முன்பாக தனியார் துறை வேலைவாய்ப்பு இணையத்தில்   தங்களது சுய  விவரங்களை  பதிவு  செய்துவிட்டு  சுய விவரச் சான்றிதழ்  (RESUME)> அனைத்து   கல்விச்சான்றிதழ்,   ஆதார் அட்டை நகல்  ஆகியவற்றுடன்  கலந்து  கொள்ளுமாறு   கேட்டுக்கொள்ளப்படுகிறது.  மேலும்  இச்சேவையானது   முற்றிலும்   கட்டணமில்லா சேவையாகும்.மேலும் வேலையளிக்கும் நிறுவனங்கள்  முகாமிற்கு பதிவு செய்ய மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலக தொலைப்பேசி எண்ணிற்கு (9360171161) தொடர்பு கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது. தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம் மூலம் பணிநியமனம் பெற்றவர்களது வேலைவாய்ப்பு அலுவலக பதிவுமூப்பு எவ்விதத்திலும் பாதிக்கப்படாது  என  மாவட்ட ஆட்சித்தலைவர்  மரு.என்.ஓ.சுகபுத்ரா,I A S.. அவர்கள்  தெரிவித்துள்ளார்.

Aug 15, 2026

100% மானியத்தில் உயர் ரக பருப்பு விதை உற்பத்தி மற்றும் கொள்முதல் செயல் விளக்கத்திடல் அமைத்திட வருப்பமுள்ள விவசாயிகள் விண்ணப்பத்திடலாம் என மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள்தெரிவித்துள்ளார்.

இந்தியாவில் பருப்பு வகைகளில் முழுமையான தன்னிறைவு அடைவதை நோக்கமாக கொண்டு மத்திய அரசின் மூலம் ஆத்மநிர்பர்தாவிற்கான திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. பருப்பு வகைகளின் இறக்குமதியை குறைத்து உள்நாட்டு வேளாண்மையின் மூலம் பருப்பு வகைகளின் உற்பத்தியை அதிகரிப்பதே இதன் முக்கிய நோக்கமாகும். 2025 – 26 முதல் 2030 – 31 வரை பயறு உற்பத்தி அதிகரிப்பு பயறு வகை சாகுபடி பரப்பு விரிவாக்கம் போன்றவற்றில் முழு கவனம் செலுத்தி பயறு உற்பத்தியில் தன்னிறைவு அடைவதற்காக இத்திட்டம் நடைமுறை படுத்தப்பட்டு வருகிறது.    விருதுநகர் மாவட்டத்திற்கு உளுந்து மற்றும் பாசிபயறு வகைகளில் இத்திட்டம் செயல்படுத்த இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.  இத்திட்டத்தின் முக்கிய கூறான சான்று விதை விநியோகம் (8 ஆண்டுகளுக்கு உட்பட்டது) மூலம் குவிண்டாலுக்கு ரூ.6,000/- வீதம் மானியத்தில் விவசாயிகளுக்கு 400 குவிண்டால் உயர்ரக விதைகள் விநியோகம் செய்யப்பட்டு வருகிறது.  ரூ.10,000/- மதிப்புள்ள செயல்விளக்க திடல் அமைப்பதற்கு தேவையான இடுபொருட்கள் (விதை, உயிர் உரங்கள், நுண்ணூட்ட உரம், Pulse wonder, பயிர் பாதுகாப்பு மருந்துகள்) விவசாயிகளுக்கு 100 சதவீத மானியத்தில் வழங்கப்பட உள்ளது. எனவே, விருதுநகர் மாவட்ட  விவசாயிகள் உழவன் செயலி மூலம் பதிவு செய்தோ அல்லது தங்கள் பகுதி ஒருங்கிணைந்த வேளாண் விரிவாக்க மையங்களை தொடர்பு கொண்டும் பயன் பெறலாம்.  அனைத்து விவசாயிகளும் இத்திட்டத்தில் பயன்பெற்று பயறு உற்பத்தியில் தன்னிறைவு அடையலாம் என மாவட்ட ஆட்சித்தலைவர் மரு.என்.ஓ.சுகபுத்ரா .I A S., அவர்கள் தெரிவித்துள்ளார். 

Aug 15, 2026

தொழில் முதலீட்டு, ஊக்குவிப்பு மற்றும் வர்த்தகத்துறை அமைச்சர்அவர்கள் மற்றும் சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை அமைச்சர் அவர்கள் திருவில்லிப்புத்தூர் அருள்மிகு நாச்சியார் (ஆண்டாள்) திருக்கோயில் ஆடிப்பூரத் தேரோட்டத்தினை தொடங்கி வைத்தார்கள்.

 தொழில் முதலீட்டு, ஊக்குவிப்பு மற்றும் வர்த்தகத்துறை அமைச்சர் செல்வி ச.கீர்த்தனா அவர்கள் மற்றும்  சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை அமைச்சர் திருமதி கு.ஜெகதீஸ்வரி அவர்கள் ஆகியோர் திருவில்லிப்புத்தூர் அருள்மிகு நாச்சியார் (ஆண்டாள்) திருக்கோயில் ஆடிப்பூரத் தேரோட்டத்தினை மாவட்ட ஆட்சித்தலைவர் மரு.என்.ஓ.சுகபுத்ரா,I A S , அவர்கள் தலைமையில், திருவில்லிபுத்தூர் சட்டமன்ற உறுப்பினர் திரு.அ.கார்த்திக் அவர்கள் முன்னிலையில்  (14.08.2026) தொடங்கி வைத்தார்கள்.அருள்மிகு நாச்சியார் (ஆண்டாள்) திருக்கோவிலில்  திருஆடிபூரத்  திருத்தேரோட்டம்  ஆண்டு தோறும் ஆடிமாதம் ஆண்டாள் பிறந்த நாளை கொண்டாடும் வகையில் ஆடிப்பூரத் திருவிழாவாக கொண்டாடப்பட்டு வருகிறது.இவ்விழாவின் முக்கிய நிகழ்ச்சியாக ஆடிப்பூரத்தேரோட்ட விழா நடைபெற்றது. இந்த விழாவைதொழில் முதலீட்டு, ஊக்குவிப்பு மற்றும் வர்த்தகத்துறை அமைச்சர் செல்வி ச.கீர்த்தனா அவர்கள் மற்றும் சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை அமைச்சர் திருமதி கு.ஜெகதீஸ்வரி அவர்கள் திருத்தேரின் வடம்பிடித்து தேரோட்டத்தினை துவக்கி வைத்தார்கள்.திருத்தேரானது கோவிலை சுற்றியுள்ள நான்கு ரத வீதிகளிலும் உலா வந்தது.ஆடிப்பூரத்  தேரோட்ட விழாவிற்கான முன்னேற்பாடுகளை மாவட்ட நிர்வாகமும், காவல் துறையும் சிறப்பான முறையில் ஏற்பாடுகளை செய்திருந்தது. காவல்துறையின் மூலம் தேரோட்ட நிகழ்ச்சியில் பங்கேற்கும் பொதுமக்களுக்கு தேவையான பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன. குற்றங்களைத் தடுக்க ஆங்காங்கே கண்காணிப்பு கேமிராக்கள் பொருத்தி கண்காணிக்கப்பட்டது. கூட்ட நெரிசலை தவிர்க்க போக்குவரத்தினை ஒழுங்குபடுத்தி மாற்றுப்பாதை ஏற்படுத்தப்பட்டிருந்தது. வருகின்ற பொதுமக்கள் மற்றும் பக்தர்களுக்குத் தேவையான குடிநீர் வசதி மற்றும் சுகாதார வசதிகள் நகராட்சி நிர்வாகத்தால் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.  இந்நிகழ்ச்சியில், மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.கௌதம் கோயல், இ.கா.ப., மாவட்ட வருவாய் அலுவலர் திருமதி ரா.ஆனந்தி, சிவகாசி சார் ஆட்சியர் திரு.முகமது இர்பான்,I A S., இணை ஆணையர் திரு.செ.மாரியப்பன், தக்கார்/உதவி ஆணையர் திரு.மு.நாகராஜன், திருக்கோவில் செயல் அலுவலர் திருமதி சௌ.சக்கரையம்மாள், அரசு அலுவலர்கள், ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர்.

Aug 15, 2026

இருக்கண்குடி அருள்மிகு மாரியம்மன் திருக்கோவில் திருவிழா.

 தொழில் முதலீட்டு ஊக்குவிப்பு மற்றும் வர்த்தகத்துறை அமைச்சர் செல்வி ச. கீர்த்தனா அவர்கள், சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை அமைச்சர் திருமதி.கு.ஜெகதீஸ்வரி அவர்கள் ஆகியோர் விருதுநகர் மாவட்டம், இருக்கண்குடி அருள்மிகு மாரியம்மன் திருக்கோவில் திருவிழாவினை முன்னிட்டு  (14.08.2026) பக்தர்களுக்கு உணவினை பரிமாறினார்கள்.

Aug 14, 2026

தமிழ்நாடு முதலமைச்சர் திரு. ச. ஜோசப் விஜய் அவர்களுக்கு ஊக்கத்தொகையினை உயர்த்தி அறிவித்தமைக்காக சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை அமைச்சர் அவர்களிடம் விவசாயிகள் நன்றிகளை தெரிவித்தனர்.

 தமிழ்நாடு முதலமைச்சர் திரு.ச.ஜோசப் விஜய் அவர்கள் தமிழ்நாடு சட்டமன்றப் பேரவையில், விதி எண் 110-இன் கீழ் நெல் மற்றும் கரும்புக்கான மாநில அரசின் ஊக்கத்தொகையினை உயர்த்தி அறிவித்தார்கள்.அதன்படி, விவசாயிகள் நெல் மற்றும் கரும்புகளைப் பயிரிடவும், அறுவடை செய்திடவும், விற்பனை செய்திடவும், தங்களது உடல், பொருள், ஆவி அனைத்தையும் செலவிட்டு மேற்கொள்கின்றனர். நெல் மற்றும் கரும்பு பயிரிட்டுள்ள விவசாயிகளின் நலனைப் பாதுகாக்கவேண்டும் என்பதைக் கருத்தில் கொண்டு தமிழ்நாட்டின் வரலாற்றில் இல்லாத அளவில் மாநில அரசின் நெல் மற்றும் கரும்புக்கான ஊக்கத் தொகை அதிகரிக்கப்பட்டது.அதனடிப்படையில், நெல் கொள்முதல் பருவம் வரும் செப்டம்பர் 1-ஆம் தேதி தொடங்க இருப்பதால் குறைந்தபட்ச ஆதரவு விலையுடன், மாநில அரசின் ஊக்கத்தொகையாக சன்ன ரக நெல்லுக்கு குவிண்டால் ஒன்றுக்கு ரூ.289/-ம் மற்றும் பொது ரக நெல் ஒன்றுக்கு ரூ.159/-ம் என உயர்த்தி, சன்னரக நெல் ரூ.2,750/-ம் பொது ரக நெல் ரூ.2,600/-ம் என அறிவிக்கப்பட்டுள்ளது.அதேபோல், 2025-26 கரும்பு அரவைப்பருவத்தில் சர்க்கரை ஆலைகளில் பதிவு செய்து கரும்பு வழங்கும் விவசாயிகளுக்கு ஒன்றிய அரசு மெட்ரிக் டன் ஒன்றுக்கு ரூ.3,290.50 நிர்ணயம் செய்துள்ளது. அதற்கு மேல் தமிழ்நாடு அரசால் சிறப்பு ஊக்கத் தொகையாக டன் ஒன்றுக்கு ரூ.709.50 வழங்கப்படும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது. இதன்மூலம் விவசாயிகளுக்கு டன் ஒன்றுக்கு ரூ.4,000 கரும்பு விலையாகக் கிடைக்கப்பெறும்.மாநில அரசு நெல்லுக்கான ஊக்கத் தொகையினை ஓர் ஆண்டில் ரூ.156 மேல் உயர்த்தி வழங்குவதும், கரும்பு சிறப்பு ஊக்கத் தொகையாக மெட்ரிக் டன் ஒன்றுக்கு ஓர் ஆண்டில் ரூ.134-க்கு மேல் வழங்கப்படுவதும் வரலாற்றில் இதுவே முதல் முறையாகும்.மாநில அரசு வழங்கும் நெல் மற்றும் கரும்பிற்கான ஊக்கத்தொகையினை தமிழக வரலாற்றிலேயே இதுவரை இல்லாத அளவிற்கு உயர்த்தி வழங்கி, விவசாயிகளை ஒருபோதும் விட்டுவிடாமல் அவர்களோடு தோளோடு தோள் கொடுத்து விவசாயம் சிறக்கவும்,  ஊரக வாழ்வாதாரம் சிறக்கவும் என்றும் உறுதுணையாக இருக்கும், தமிழ்நாடு முதலமைச்சர் திரு.ச.ஜோசப் விஜய் அவர்களுக்கு விருதுநகர் மாவட்ட விவசாயிகள் சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை அமைச்சர் திருமதி கு.ஜெகதீஸ்வரி அவர்களிடம் நன்றிகளை தெரிவித்துக்கொண்டனர்.

Aug 14, 2026

சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத் துறை அமைச்சர் அவர்கள் 2 புதிய வழித்தடங்களுக்கான பேருந்து சேவைகளை தொடங்கி வைத்தார்.

சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத் துறை அமைச்சர் திருமதி கு.ஜெகதீஸ்வரி அவர்கள், மாவட்ட ஆட்சித்தலைவர் மரு.என்.ஓ.சுகபுத்ரா, I A S, அவர்கள் தலைமையில், விருதுநகர் மாவட்டம், வெம்பக்கோட்டை வட்டத்தில் கொருக்காம்பட்டி – இராஜபாளையம் வழிதடத்திற்கும் மற்றும் அருப்புக்கோட்டை – திருச்சுழி வழித்தடத்திற்கும்  புதிய பேருந்து சேவைகளை இன்று(13.08.2026) கொடியசைத்து தொடங்கி வைத்தார்.கிராமப்புறங்களில் வசிக்கும் பொதுமக்கள் தங்களது அன்றாடத் தேவைகளுக்காக அருகிலுள்ள நகர்ப்புற பகுதிகளுக்குச் செல்வதற்கு போதிய போக்குவரத்து வசதிகளை ஏற்படுத்திட தமிழ்நாடு அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது.அதன் ஒரு பகுதியாக, விருதுநகர் மாவட்டம், கொருக்காம்பட்டி கிராமத்திலிருந்து இராஜபாளையம் வழிதடத்திற்கும், அருப்புக்கோட்டை – திருச்சுழி வழிதடத்திற்கும் புதிய பேருந்து சேவை தொடங்கி வைக்கப்பட்டுள்ளது. இந்த புதிய பேருந்து சேவை மூலம் அப்பகுதி மற்றும் அதனைச் சுற்றியுள்ள கிராமங்களைச் சேர்ந்த பொதுமக்கள் எளிதாகவும், பாதுகாப்பாகவும் பயணம் மேற்கொள்ளும் வசதி ஏற்பட்டுள்ளது.குறிப்பாக, காலை மற்றும் மாலை நேரங்களில் பள்ளி, கல்லூரிகளுக்குச் செல்லும் மாணவ, மாணவியர்களுக்கும், பணிக்குச் செல்லும் தொழிலாளர்கள் மற்றும் பொதுமக்களுக்கும் இந்த பேருந்து சேவை பெரிதும் பயனளிக்கும். மாணவர்கள் உரிய நேரத்தில் கல்வி நிறுவனங்களுக்குச் செல்லவும், பணியாளர்கள் தங்களது பணியிடங்களுக்கு சென்று வரவும் இந்த பேருந்து சேவை உதவிகரமாக அமையும்.  மேலும், மருத்துவமனைகள், அரசு அலுவலகங்கள், வணிக நிறுவனங்கள் உள்ளிட்ட பல்வேறு அத்தியாவசிய தேவைகளுக்காக நகர்ப்புற பகுதிகளுக்குச் செல்லும் பொதுமக்களுக்கு பயண நேரத்தையும் சிரமத்தையும் குறைத்து, எளிதான போக்குவரத்து வசதியை ஏற்படுத்தும். புதிய பேருந்து சேவை தொடங்கப்பட்டதன் மூலம் சுற்றுவட்டாரப் பகுதிகளைச் சேர்ந்த பொதுமக்களின் நீண்டநாள் போக்குவரத்துத் தேவைக்கு தீர்வு காணப்பட்டுள்ளதுடன், கிராமப்புற மக்களின் கல்வி, வேலைவாய்ப்பு, மருத்துவம் மற்றும் பொருளாதார நடவடிக்கைகளுக்கும் இச்சேவை உறுதுணையாக அமையும்.  மேலும், இப்புதிய பேருந்து சேவை மூலம் இப்பகுதியில் உள்ள அரசுப் பள்ளிகளுக்கு மாணவர்கள் எளிதில் சென்று வருவதற்கான வாய்ப்பு ஏற்படுவதால், அரசுப் பள்ளிகளில் மாணவர் சேர்க்கை அதிகரிப்பதற்கும் வழிவகை செய்யும். எனவே, இப்புதிய பேருந்து சேவையினை சுற்றுவட்டாரப் பகுதிகளைச் சேர்ந்த பொதுமக்கள் அனைவரும் முழுமையாகப் பயன்படுத்திக் கொள்ள வேண்டும்” என தெரிவித்தார். புதிய பேருந்து சேவை தொடங்கப்பட்டதையடுத்து, சுற்றுவட்டாரப் பகுதிகளைச் சேர்ந்த பொதுமக்கள், மாணவ, மாணவியர்கள் மற்றும் பணியாளர்கள் மகிழ்ச்சி தெரிவித்தனர். மேலும், இப்பகுதி மக்களின் நீண்டநாள் போக்குவரத்துத் தேவையை நிறைவேற்றும் வகையில் புதிய பேருந்து சேவை வழங்கிய தமிழ்நாடு அரசிற்கும், மாவட்ட நிர்வாகத்திற்கும் பொதுமக்கள் நன்றிகளைத் தெரிவித்துக் கொண்டனர்.இந்நிகழ்ச்சியில் அரசு அலுவலர்கள், போக்குவரத்துத்துறை அலுவலர்கள் மற்றும் பொதுமக்கள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

Aug 14, 2026

சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை அமைச்சர் அவர்கள் தளவாய்புரத்தில் கூட்டுறவு சங்கங்களின் செயல்பாடுகள் குறித்து ஆய்வு மேற்கொண்டார்.

சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை அமைச்சர் திருமதி கு.ஜெகதீஸ்வரி அவர்கள், மாவட்ட ஆட்சித்தலைவர்மரு.என்.ஓ.சுகபுத்ரா,இ.ஆ.ப., அவர்கள் தலைமையில், விருதுநகர் மாவட்டம், இராஜபாளையம் வட்டம், தளவாய்புரத்தில் செயல்பட்டு வரும் அன்னை சத்யா பெண்கள் தையல் தொழிலாளர்கள் தொழிற்கூட்டுறவு சங்கம் மற்றும் இணை உணவு தயாரிக்கும் மகளிர் மேம்பாட்டு தொழிற் கூட்டுறவு சங்கம் ஆகியவைகளின் செயல்பாடுகள் குறித்து (13.08.2026)  பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.தமிழ்நாடு அரசு சமூக நலத்துறையின் மூலம் பெண்கள் மற்றும் குழந்தைகளின் ஆரோக்கியமான வளர்ச்சிக்கு பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகிறது.விருதுநகர் மாவட்ட சமூக நல அலுவலக கட்டுப்பாட்டின் கீழ் மொத்தம் 6 மகளிர் தையல் தொழில் கூட்டுறவு சங்கங்கள் செயல்பட்டு வருகின்றன. இச்சங்கங்கள் மூலம் இலவச சீருடை திட்டம் 2026 2027 ஆம் ஆண்டில் விருதுநகர் மற்றும் சிவகாசி கல்வி மாவட்டங்களில்   11 வட்டார கல்வி அலுவலகங்களின் கீழ் பயிலும் 52,334 மாணவர்கள், 53,242  மாணவிகள் என மொத்தம் 1,05,576 மாணாக்கர்கள் பயன்பெறுகின்றனர்.அதனடிப்படையில், தளவாய்புரத்தில் உள்ள அன்னை சத்யா பெண்கள் தையல் தொழிலாளர்கள் தொழிற்கூட்டுறவு சங்கம் மூலம் 2026-2027ஆம் கல்வியாண்டிற்கான இலவச சீருடைத் திட்டத்தின் கீழ், இராஜபாளையம் வட்டாரக் கல்வி அலுவலகத்தின் கீழ் 153 பள்ளிகளில் 9,306 மாணவ, மாணவியர்களுக்கும், சிவகாசி வட்டாரக் கல்வி அலுவலகத்தின் கீழ் 118 பள்ளிகளில் 11,259 மாணவ, மாணவியர்களுக்கும் எனமொத்தம் 271 அரசுப்பள்ளிகளைச் சேர்ந்த 20,565 மாணவ, மாணவியர்களுக்கு சீருடைகள் தயாரித்து வழங்குவதற்கான பணிகள் நடைபெற்று வருகின்றன.சங்கத்தின் மூலம் தையல் பணியில் ஈடுபடும் உறுப்பினர்களுக்கு அவர்களின் பணியின் அடிப்படையில் குறைந்தபட்சமாக ரூ.5,000 முதல் அதிகபட்சமாக ரூ.35,000 வரை வருமானம் கிடைத்து வருகிறது. இந்த சங்கம் மூலம், சீருடைகள் தயாரிக்கும் பணியில் ஈடுபட்டுள்ள பெண் தையல் தொழிலாளர்களை  நேரில் சந்தித்து, அவர்களின் பணிகள், பணிச்சூழல் மற்றும் தொழிற்கூட்டுறவு சங்கத்தின் செயல்பாடுகள் குறித்து ஆய்வு செய்யப்பட்டது.மேலும், இணை உணவு தயாரிக்கும் மகளிர் மேம்பாட்டு தொழிற் கூட்டுறவு சங்கம் மூலம்  கர்ப்பிணித் தாய்மார்கள் மற்றும் வளர் இளம் பெண்களுக்கு வழங்கப்படும் இணை உணவு சத்து மாவு தயாரிக்கப்பட்டு வருகிறது. இதில், கோதுமை 42 சதவீதம், மூலப்பொருட்களான வெல்லம், சோயா, கடலை, உளுத்தம் பருப்பு, கேழ்வரகு, வேர்க்கடலை, தாது உப்புகள் மற்றும் வைட்டமின்கள் அடங்கியவை 58 சதவீதம் என்ற விகிதத்தில்  தயாரிக்கப்படுகிறது.மேலும், இங்கு தயாரிக்கப்படும் பிஸ்கெட்டுகள் விருதுநகர் மற்றும் ஈரோடு மாவட்டங்களுக்கு அனுப்பி வைக்கப்படுகிறது. இங்கு தயாரிக்கப்படும் இணை உணவு சத்துமாவுகள்  விருதுநகர் மாவட்டத்தில் 25,191 வளரிளம் பெண்கள் மற்றும் 14,888 கர்ப்பிணி மற்றும் பாலூட்டும் தாய்மார்களும்  நாளொன்றுக்கு தலா 150 கிராம் பெற்று பயனடைந்து வருகின்றனர்.அதன்படி, சத்து மாவு தயாரிப்பிற்காக பயன்படுத்தப்படும் மூலப்பொருட்கள் பெறப்படும் முறை, அவற்றை தரம் பிரித்தல், சுத்தம் செய்தல், உலர்த்துதல், அரைத்தல், தேவையான அளவில் கலவை செய்தல் உள்ளிட்ட பல்வேறு நிலைகளை குறித்தும்,  சத்து மாவு தயாரிப்பின்போது கடைப்பிடிக்கப்படும் தரக்கட்டுப்பாட்டு நடைமுறைகள், சுகாதார நடவடிக்கைகள், பாதுகாப்பான சேமிப்பு மற்றும் பொட்டலமிடும் முறைகள் குறித்தும் ஆய்வு செய்யப்பட்டது.மகளிர் கூட்டுறவு சங்கத்தின் மூலம் பெண்களுக்கு வேலைவாய்ப்பு மற்றும் வாழ்வாதார வாய்ப்புகள் ஏற்படுத்தப்பட்டு வருகிறது. பெண்கள் தங்களது திறன்களை மேம்படுத்திக்கொண்டு பொருளாதார ரீதியாக முன்னேறுவதற்கு கூட்டுறவு சங்கங்கள் முக்கிய பங்காற்றி வருகின்றன என தெரிவித்தார்.இந்த ஆய்வின்போது, மாவட்ட சமூக நல அலுவலர் திருமதி திலகம், கூட்டுறவுத்துறை அலுவலர்கள், மகளிர் மேம்பாட்டு கூட்டுறவு சங்க நிர்வாகிகள் மற்றும் அரசு அலுவலர்கள் உடனிருந்தனர்.

Aug 14, 2026

சுதந்திர தினத்தை முன்னிட்டு 15.082026 அன்று ஒரு நாள் மட்டும் எப்.எல் -1 / எப்.எல் -2 / எப்.எல் -3 / எப்.எல் -3A / எப்.எல் -3AA / மற்றும் எப்.எல் -11 ஆகிய மதுபான உரிம ஸ்தலங்களை தற்காலிகமாக மூடுவதற்கு உத்தரவிடப்படுகிறது .

விருதுநகர் மாவட்டத்தில் செயல்பட்டு வரும் அனைத்து டாஸ்மாக் மதுபான சில்லறை விற்பனைக் கடைகள்  எப்.எல் -1/ எப்.எல் -2/ எப்.எல் -3/ எப்.எல் -3A/ எப்.எல் -3AA மற்றும் எப்.எல் -11 ஆகிய மதுபான உரிம ஸ்தலங்களை 2003-ம் ஆண்டைய தமிழ்நாடு மதுபான சில்லறை விற்பனை விதிகளின் விதி 12 துணை விதி (1) Tamil Nadu Liquor (Licence and Permit) Rules, 1981-ன்படி, எதிர்வரும் சுதந்திர தினமான 15.08.2026 (சனி கிழமை) அன்று (ஒரு நாள் மட்டும்) தற்காலிகமாக மூடிட உத்தரவிடப்பட்டுள்ளது. மேற்படி உத்தரவினை மீறி செயல்படும் டாஸ்மாக் நிறுவனப் பணியாளர்கள் எப்.எல் -1/ எப்.எல் -2/ எப்.எல் -3/ எப்.எல் -3A/ எப்.எல் -3AA மற்றும் எப்.எல் -11    ஆகிய மதுபான ஸ்தலங்களின்  உரிமதாரர்களின் மீது   Tamil Nadu Liquor (Licence and Permit) Rules, 1981  நடவடிக்கை மேற்கொள்ளப்படும்  எனவும் மாவட்ட ஆட்சித்தலைவர் மரு.என்.ஓ.சுகபுத்ரா, I A S., அவர்கள் தெரிவித்துள்ளார்.

Aug 14, 2026

இருக்கண்குடி அருள்மிகு மாரியம்மன் கோவில் திருவிழாவினை முன்னிட்டு 14.08.2026 அன்று மட்டும் நென்மேனி கிராமத்தில் இயங்கும் மதுபான கடையை மூடுவதற்கு உத்தரவிடப்படுகிறது.

 விருதுநகர் மாவட்டம், சாத்தூர் வட்டம் இருக்கண்குடி அருள்மிகு மாரியம்மன் கோவில் திருவிழா நடைபெற உள்ளது. இதன்காரணமக நென்மேனி கிராமத்தில் இயங்கிவரும் டாஸ்மாக் கடை எண் 11978 -யை மட்டும் 14.08.2026 (வெள்ளிக்கிழமை) அன்று (ஒருநாள் மட்டும்) தற்காலிகமாக மூடுவதற்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்து.மேற்படி உத்தரவினை மீறி செயல்படும் டாஸ்மாக் நிறுவனப் பணியாளர்கள் மீது   Tamil Nadu Liquor (Licence and Permit) Rules, 1981  நடவடிக்கை மேற்கொள்ளப்படும்  எனவும் மாவட்ட ஆட்சித்தலைவர் மரு.என்.ஓ.சுகபுத்ரா,I A S ., அவர்கள் தெரிவித்துள்ளார்.

1 2 3 4 5 6 7 8 9 10 ... 143 144

AD's



More News