விருதுநகர் மாவட்டத்தைச் சேர்ந்த 5-8, 9-12, 13-16 வயதுப் பிரிவுகளில் உள்ள மாணவர்கள் தங்களது வயதுச் சான்றுகளுடன் 10-12-2022 அன்று காலை 9-00 மணிக்கு நடைபெறும் கலைப்போட்டிகளில் கலந்து கொள்ளலாம்
தமிழ்நாடு அரசு கலை பண்பாட்டுத்துறையின் கீழ் இயங்கி வரும் விருதுநகர் ஜவகர் சிறுவர் மன்றங்களில் 5 வயது முதல் 16 வயதிற்குட்பட்ட சிறுவர்களுக்கு வார நாட்களான சனி மற்றும் ஞாயிறு கிழமைகளில் காலை 10.00 மணி முதல் 12.00 மணி வரை குரலிசை, பரதநாட்டியம், ஓவியம் மற்றும் சிலம்பம் போன்ற கலைப் பயிற்சி வகுப்புகள் சிவகாசி அண்ணாமலையம்மாள் உண்ணாமலைநாடார் அரசு மேல்நிலைப்பள்ளியில் நடத்தப்பட்டு வருகிறது. இவ்ஜவகர் சிறுவர் மன்றத்தின் வாயிலாக, குழந்தைகளிடம் மறைந்து கிடக்கும் ஆக்கப்பூர்வமான கலைகளை வெளிக் கொணர, அரசு ஒவ்வொரு ஆண்டும் மாவட்டம் மற்றும் மாநில அளவிலான கலைப் போட்டிகளை நடத்தி பரிசுகள் மற்றும் பாராட்டுச் சான்றிதழ்கள் வழங்கி வருகின்றது.
மாவட்ட அளவில் பாட்டு, பரதநாட்டியம், நாட்டுப்புற நடனம் மற்றும் ஓவியப் போட்டிகளில் 5-8, 9-12, 13-16, ஆகிய வயதுப் பிரிவுகளில் போட்டிகள் நடைபெறும். இப்போட்டிகளில் 9-12, 13-16 ஆகிய வயதுப் பிரிவுகளில் முதலிடம் பெறும் குழந்தைகள் மாநில அளவில் நடைபெறும் கலைப்போட்டிக்கு ஜவகர் சிறுவர் மன்ற செலவில் அழைத்துச் செல்லப்படவுள்ளார்கள். மேலும், இம்மாநில அளவிலான கலைப் போட்டிகளில் முதல் பரிசு பெறும் மாணவர்க்கு ரூ.10000/-ம், இரண்டாம் பரிசு பெறும் மாணவர்க்கு ரூ.7500/-ம், மூன்றாம் பரிசு பெறும் மாணவர்க்கு ரூ.5000ஃ-ம் பரிசுகள் வழங்கப்படவுள்ளன.
போட்டி விதிகள்
1. பரதநாட்டியம் (செவ்வியல்)
பரதநாட்டியம், தமிழக நாட்டுப்புற நடனங்கள், குச்சுப்புடி, மோகினி ஆட்டம் போன்ற நடனங்களும் ஆடலாம். முழு ஒப்பனை மற்றும் உரிய ஆடைகளுடன் நடனம் இருத்தல் வேண்டும். திரைப்படப் பாடல்களுக்கான நடனங்கள் (கர்நாடக இசைப்பாடல்களுக்கான திரைப்பட நடனங்கள் தவிர்த்து) மேற்கத்திய நடனங்கள் மற்றும் குழு நடனங்கள் அனுமதியில்லை. பக்க வாத்தியங்களையோ ஒலி நாடாக்களையோ பயன்படுத்திக் கொள்ளலாம். இவற்றை போட்டியில் பங்கேற்பவர்களே ஏற்பாடு செய்து கொள்ள வேண்டும். குறைந்தபட்சம் 3 நிமிடங்கள் முதல் அதிக பட்சம் 5 நிமிடங்கள் வரை நடனமாட அனுதிக்கப்படும்.
2. கிராமிய நடனம் (நாட்டுப்புறக்கலை)
தமிழகத்தின் மாண்பினை வெளிப்படுத்தும் கிராமிய நடனங்கள் ஆடலாம். முழு ஒப்பனை மற்றும் உரிய நடைகளுடன் நடனம் இருத்தல் வேண்டும் திரைப்படப் பாடல்களுக்கான நடனங்கள் (கிராமிய இசை பாடல்களுக்கான திரைப்பட நடனங்கள் தவிர்த்து) மற்றும் முழு நடனங்கள் அனுமதியில்லை. ஒலி நாடாக்கள்,குறுந்தகடுகள்,பென்டிரைவ் ஆகியவற்றினை பயன்படுத்திக் கொள்ளலாம். இவற்றை போட்டியில் பங்கேற்பவர்களே ஏற்பாடு செய்து கொள்ள வேண்டும். குறைந்த பட்சம் 3 நிமிடங்கள் முதல் அதிக பட்சம் 5 நிமிடங்கள் வரை நடனமாட அனுமதிக்கப்படும்.
3.குரலிசை
கர்நாடக இசை, தேசியப்பாடல்கள், சமூக விழிப்புணர்ச்சி பாடல்கள், நாட்டுப்புறப் பாடல்கள் மட்டுமே பாட வேண்டும். மேற்கத்திய இசை, திரைப்பட பாடல்கள், பிறமொழிப்பாடல்கள், குழுப் பாடல்கள் அனுமதியில்லை. குறைந்த பட்சம் 3 நிமிடங்கள் முதல் அதிக பட்சம் 5 நிமிடங்கள் வரை அனுமதிக்கப்படும்.
4. ஓவியம்
40x30 செ.மீ. அளவுள்ள ஓவியத் தாள்களையே பயன்படுத்த வேண்டும். பென்சில், கிரையான், வண்ணங்கள், போஸ்டர் கலர், வாட்டர் கலர் பெயிண்டிங் என எவ்வகையிலும் ஓவியங்கள் அமையலாம். ஓவியம் வரைவதற்கான அட்டைகள், ஓவியத் தாள், வண்ணங்கள், தூரிகைகள் உள்பட தங்களுக்குத் தேவையானவற்றைப் போட்டியாளர்களே கொண்டு வருதல் வேண்டும். குழுவாக ஓவியங்கள் வரைய அனுமதியில்லை. ஒவ்வொரு வயது வகைக்கும் தனித் தனியாக தலைப்புகள் போட்டி தொடங்கும்போது அறிவிக்கப்படும்.
ஒரே மாணவர் மேற்காணும் மூன்று வகைப்போட்டிகளிலும் கலந்து கொள்ளலாம். போட்டிகளில் பங்குபெறும் மாணவர்கள் அனைவருக்கும் பங்கேற்புச் சான்றிதழ்கள் வழங்கப்படும்.
போட்டிகள் நடைபெறும் இடம்
ஜவகர் சிறுவர் மன்றம்
அண்ணாமலையம்மாள் உண்ணாமலைநாடார் அரசு மேல்நிலைப்பள்ளி
சிவகாசி. திட்ட அலுவலர் அலைப்பேசி எண்.94439 61523
இப்போட்டிகளில் கலந்து கொள்கின்ற விருதுநகர் மாவட்டத்தைச் சேர்ந்த 5-8, 9-12, 13-16 வயதுப்பிரிவுகளில் உள்ள மாணவர்கள் தங்களது வயதுச் சான்றுகளுடன் அண்ணாமலையம்மாள் உண்ணாமலைநாடார் அரசு மேல்நிலைப்பள்ளியில் 10-12-2022 (சனிக்கிழமை) அன்று காலை 9-00 மணிக்கு நடைபெறும் கலைப்போட்டிகளில் கலந்து கொள்ளுமாறு மாவட்ட ஆட்சித்தலைவர் திரு.ஜெ.மேகநாதரெட்டி,I A S அவர்கள் தெரிவித்துள்ளார்கள்.
0
Leave a Reply