130 ஏழை, எளிய பெண்களுக்கு ரூ.1.33 கோடி மதிப்பிலான திருமாங்கல்யத்திற்கான தங்க நாணயங்கள் மற்றும் திருமண நிதியுதவிகளை வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத்துறை அமைச்சர் அவர்கள் வழங்கினார்.
விருதுநகர் மாவட்ட ஆட்சியர் அலுவலகக் கூட்டரங்கில் (12.03.2025) சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை மூலம் ஏழைப் பெண்களுக்கு திருமண நிதி உதவியுடன் திருமாங்கல்யத்திற்கு தங்கம் வழங்கும் நிகழ்ச்சியில் மாவட்ட ஆட்சித்தலைவர் முனைவர் வீ.ப.ஜெயசீலன்,I A S., அவர்கள் தலைமையில், விருதுநகர் சட்டமன்ற உறுப்பினர் திரு.ஏ.ஆர்.ஆர்.சீனிவாசன் அவர்கள் முன்னிலையில், அருப்புக்கோட்டை, சாத்தூர்,வெம்பக்கோட்டை,திருவில்லிபுத்தூர், வத்திராயிருப்பு மற்றும் இராஜபாளையம் ஆகிய ஊராட்சி ஒன்றியங்களைச் சேர்ந்த 130 ஏழை, எளிய பெண்களுக்கு ரூ.79.12 இலட்சம் மதிப்பில் தங்க நாணயங்கள் மற்றும் ரூ.53.75 இலட்சம் மதிப்பில் திருமண நிதியுதவிகள் என மொத்தம் ரூ.1.33 கோடி மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத்துறை அமைச்சர் திரு.கே.கே.எஸ்.எஸ்.ஆர்.ராமச்சந்திரன் அவர்கள் வழங்கினார்.
மக்களால் அமைக்கப்பட்ட தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களின் வழியில் செயல்படும் தமிழக அரசு, மக்கள் நலன் காக்கும் அரசாக, செயல்பட்டு வருகிறது. பல்வேறு தரப்பட்ட மக்களின் வாழ்வாதாரத்திற்கு தேவையான திட்டங்களை தீட்டி, செயல்படுத்தி வருகிறது.
பெண்கள் கல்வி கற்பதை ஊக்குவிக்கும் வகையில் பல்வேறு திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகின்றன. அந்த வகையில் பெண்கள் ஆண்களுக்கு நிகராக பல்வேறு துறைகளில் பணியாற்றி வருகிறார்கள்.போதிய பணவசதி இல்லாத காரணத்தால் ஏழை பெண்களின் திருமணம் தடைபட்டு விடக்கூடாது என்பதற்காக திருமண நிதியுதவி திட்டம் கொண்டு வரப்பட்டு சிறப்பாக செயல்படுத்தப்பட்டு வருகிறது.திருமண உதவித் திட்டம் என்பது, பொருளாதார அளவில் நலிவுற்ற, ஏழை விதவை தாய்மார்களின் மகள்களுக்கு திருமணத்தினை நடத்திட போதிய வசதி இல்லாமல் ஏற்படும் சிரமத்ததை தவிர்த்திக்கும் வகையிலும், சமூகத்தில் பிறப்பு அடிப்படையிலான இனப்பாகுபாட்டினை களைந்து சமநிலையை உருவாக்கிடவும், தாய், தந்தையர்கள் இல்லாத ஆதரவற்ற பெண்களுக்கு பொருளாதார வகையில் திருமணத்திற்கு உதவிட தாலிக்கு தங்கம் வழங்கிடும் பொருட்டும், கணவரை இழந்த விதவைகளுக்கு புதுவாழ்வு அளித்திட விதவை மறுமணம் திருமண நிதியதவி வழங்கிடும் வகையிலும் செயல்படுத்தப்பட்டு வருகிறது.
அதன்படி, பள்ளிப் படிப்பை முடித்த பெண்களுக்கு நிதியுதவி தொகையாக ரூ.25,000/- மற்றும் பட்டபடிப்பு பயின்ற பெண்களுக்கு ரூ.50,000/- நிதியுதவியுடன் திருமாங்கல்யத்திற்கான தங்க நாணயமும் வழங்கப்படுகிறது.அதன்படி, 2024-2025 ஆம் ஆண்டில், அருப்புக்கோட்டை, சாத்தூர், வெம்பக்கோட்டை, திருவில்லிபுத்தூர், வத்திராயிருப்பு மற்றும் இராஜபாளையம் ஆகிய ஒன்றியங்களைச் சேர்ந்த 130 ஏழை, எளிய பெண்களுக்கு ரூ.79.12 இலட்சம் மதிப்பில் தங்க நாணயங்கள் மற்றும் ரூ.53.75 இலட்சம் மதிப்பில் திருமண நிதியுதவிகள் என மொத்தம் ரூ.1.33 கோடி மதிப்பிலான நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டுள்ளன.
அதுமட்டுமல்ல பெண்களுக்கான அனைத்து நலத்திட்டங்களையும் செய்யக்கூடிய அரசாக இந்த தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் தலைமையிலான அரசு செயல்படுகிறது.அதற்கு காரணம் பெண்கள் முன்னேறினால் சமுதாய முன்னேறும். சாதாரணமாக ஒரு வீட்டில் பெண் கல்வி கற்றிருந்தால் அந்த குடும்பமே படித்து விடும். கல்வி அறிவு மட்டுமல்ல நாகரீகமும் சேர்ந்து வளரும்.இந்த சமுதாயத்தில் பாதிக்கு மேலான வேலைகளை பெண்கள்தான் செய்கிறார்கள்.ஆண்களை விட அதிகமாக வீட்டில் உள்ள அனைத்து வேலைகளையும் செய்யும் பெண்களுக்கு அங்கீகாரம் அளிக்க வேண்டும் என்பதற்காக தான் மகளிர் உரிமைத் தொகை திட்டம் மூலம் மாதந்தோறும் ரூ.1000/- வழங்கப்படுகிறது.
அதுபோல,அரசு பள்ளியில் படித்து உயர் கல்விக்கு செல்லும் ஆண் மற்றும் பெண் குழந்தைகளுக்கு மாதந்தோறும் ஆயிரம் ரூபாய் வழங்கப்படுகிறது. விடியல் பயணம் மூலம் மகளிர்களுக்கு இலவச பயணம்,மகளிர் சுய உதவி குழுக்களுக்கு எந்தவித பிணையும் இல்லாமல் கடனுதவிகள் வழங்கப்படுகிறது.முதலமைச்சரின் காலை உணவு திட்டம் மூலம் 1 முதல் 5 வரை படிக்கும் குழந்தைகளுக்கு காலை உணவுகள் வழங்கப்படுகிறது.இதனால்,மாணவ, மாணவிகள் பசியின்றி பள்ளிக்கு வருவதோடு,தாய்மார்களின் பணிச்சுமையும் குறைகிறது.இதுபோன்ற எண்ணற்ற பெண்கள் முன்னேற்றத்திற்கான திட்டங்களை செயல்படுத்தும் தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களின் தலைமையிலான அரசுக்கு பெண்கள் என்றும் உறுதுணையாகவும் ஆதரவாகவும் இருக்க வேண்டும் என தெரிவித்தார்.தமிழ்நாடு அரசு சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை சார்பில் பெண்களின் நலனுக்காக பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. அனைத்து திட்டங்களையும் பெண்கள் நன்கு பயன்படுத்திக்கொண்டு, குறிப்பாக பொருளாதாரத்தில் மிகப்பெரிய வலிமை அடைய வேண்டும் என்பதற்காக தான் இந்த நிகழ்ச்சி என மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் தெரிவித்தார்.
முன்னதாக, மாற்றுத்திறனாளிகள் நலத்துறையின் சார்பில், 161 மாற்றுத்திறனாளிகளுக்கு தலா ரூ.1,01,800ஃ வீதம் மொத்தம் ரூ.1.64 கோடி மதிப்பிலான இணைப்பு சக்கரம் பொருத்தப்பட்ட மோட்டார் இருசக்கர வாகனங்களையும்,15 மாற்றுத்திறனாளி பெண்களுக்கு திருமாங்கல்யத்திற்கான தங்கத்தினையும் வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத்துறை அமைச்சர் அவர்கள் வழங்கினார்.இந்நிகழ்ச்சியில், விருதுநகர் நகர்மன்ற தலைவர் திரு.மாதவன், மாவட்ட சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை அலுவலர் திருமதி ஷீலா சுந்தரி, மாற்றுத்திறனாளிகள் நலத்துறை அலுவலர் திரு.சீனிவாசன், சமூகநலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை கண்காணிப்பாளர் திருமதி யுவஸ்ரீ மற்றும் உள்ளாட்சி பிரதிநிதிகள், அரசு அலுவலர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.
0
Leave a Reply