விருதுநகர் மாவட்டம் வெம்பக்கோட்டை வட்டம் செவல்பட்டியில் (03.07.2024) கி.பி 8 ஆம் நூற்றாண்டில் கட்டப்பட்ட முற்கால பாண்டியர்களின் குடவரை கோவிலினை மாவட்ட ஆட்சித்தலைவர் முனைவர் வீ. ப.ஜெயசீலன், I A S, அவர்கள் நேரில் சென்று பார்வையிட்டு மேற்கொள்ளப்பட வேண்டிய சுற்றுலா வளர்ச்சி பணிகள் குறித்து ஆய்வு ஆய்வு செய்தார்.
விருதுநகர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் (02.07.2024) உலக மருத்துவர் தினம் -2024 முன்னிட்டு, மருத்துவத்துறையில் சிறப்பாக பணியாற்றியமைக்காக மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் திரு.மா.சுப்பிரமணியன் அவர்களால் சிறந்த மருத்துவர்களுக்கான விருது பெற்ற கன்னிச்சேரி புதூர் வட்டார மருத்துவ அலுவலர் மரு மரு.பி.ஆரோக்கிய ரூபன் ராஜ்,தாயில்பட்டி வட்டார மருத்துவ அலுவலர் மரு மரு.சி.செந்தட்டிக்காளை அவர்களை . மாவட்ட ஆட்சித்தலைவர் முனைவர் வீ.ப.ஜெயசீலன். I A S., அவர்கள் நேரில் அழைத்து பாராட்டி வாழ்த்துகளை தெரிவித்தார்.
கால்நடைகளின் உற்பத்தி திறனுக்கு தீவனம் மற்றும் பசுந்தீவனம் மிகவும் இன்றியமையாத காரணிகள் ஆகும். பால் உற்பத்தியைப் பெருக்குவதற்கு, கறவை மாடுகளுக்கு தேவையான அளவு பசுந்தீவனம் வழங்குவது மிகவும்இன்றியமையாதது.கால்நடைகளுக்கான மொத்த உற்பத்தி செலவினத்தில் 70 விழுக்காடு தீவன மற்றும் பசுந்தீவன உற்பத்திக்கு மட்டுமே செலவிடப்படுகிறது. கால்நடைகளுக்கு பசுந்தீவனத்தின் தேவைக்கும் உற்பத்திக்கும் இடையே மிகப் பெரிய இடைவெளி உள்ளது. ஆகவே, தீவனப் பற்றாக்குறையை நிவர்த்தி செய்யும் வகையிலும், கால்நடை வளர்ப்போர் பசுந்தீவனத்தை உற்பத்தி செய்வதை ஊக்கப்படுத்தும் வகையிலும், ஒவ்வொரு ஆண்டும் மாநில தீவன அபிவிருத்தி திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. அதன்படி நடப்பு நிதியாண்டில், ஒருங்கிணைந்த தீவன அபிவிருத்தி திட்டம் 2024-2025-ன் கீழ் விருதுநகர் மாவட்டத்திற்கு 225 ஏக்கர் இலக்கு நிர்ணயிக்கப்பட்டு, கால்நடை வளர்ப்போர் பயன் பெறும் பொருட்டு நீர்ப்பாசன வசதி கொண்ட தென்னை, பழத்தோட்டங்களில் 0.5 ஏக்கர் முதல் 1.0 ஹெக்டேர் பரப்பளவில் பல்லாண்டு தீவன பயிர்களான தீவன சோளம், கம்பு நேப்பியர் ஒட்டுப்புல், பல்லாண்டு பயிர் வகைகள், பல்லாண்டு தீவன புல் வகைகளில் ஏதேனும் ஒன்றை ஊடுபயிராக பயிரிட்டு மூன்று வருட காலம் பராமரிக்க ஒரு ஏக்கருக்கு ரூ.3000-/மும், ஒரு ஹெக்டேருக்கு ரூ.7500/- வரை மானியமாக வழங்கப்படவுள்ளது. மேலும், இத்திட்டத்தில், சிறு, குறு விவசாயிகள், ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினருக்கு முன்னுரிமை வழங்கப்படும். மேற்காணும், திட்டத்தின் மூலம், பயன்பெற விருப்பமுள்ள கால்நடை வளர்ப்பில், ஈடுபட்டுள்ள விவசாயிகள் தங்கள் பகுதிகளிலுள்ள, கால்நடை உதவி மருத்துவரை நேரில் அணுகி எழுத்து மூலமாக விண்ணப்பத்தை வருகிற 20.07.2024-க்குள் அளித்திட கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள். இத்திட்டங்களில் முதலில் வருபவர்களுக்கு முன்னுரிமை என்ற அடிப்படையில், பயனாளிகள் தேர்வு செய்யப்படுவார்கள் என மாவட்ட ஆட்சித்தலைவர் முனைவர் வீ.ப.ஜெயசீலன், I A S., அவர்கள் தெரிவித்துள்ளார்.
விருதுநகர் மாவட்டம், கிருஷ்ணன்கோவில் கலசலிங்கம் கல்லூரியில், அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் நடப்பாண்டில் 11 மற்றும் 12 ஆம் வகுப்பு மாணவ, மாணவிகளுக்கு, நான் முதல்வன் திட்டத்தின் கீழ் உயர்கல்வி வழிகாட்டுதல் நிகழ்ச்சி (01.07.2024) மாவட்ட ஆட்சித்தலைவர் முனைவர் வீ.ப.ஜெயசீலன், I A S,அவர்கள் தலைமையில் நடைபெற்றது.2024-25 கல்வியாண்டில் அரசு மற்றும் அரசு உதவிபெறும் பள்ளிகளில் 11 மற்றும் 12 ஆம் வகுப்பு பயிலும் மாணவர்களுக்கு, கல்லூரிகள் தேர்வு, உயர்கல்வி வாய்ப்புகள் நுழைவு தேர்வுகளுக்கு தங்களை எவ்வாறு தயார் செய்வது கொள்வது என்பது குறித்த வழிகாட்டுதல் வழங்கும் வகையில் இந்த நிகழ்ச்சியில் மாவட்ட ஆசிரியர் பயிற்சிப் பள்ளி விரிவுரையாளர்கள் (ம) ஆசிரியர்கள் மூலம் உரிய வழிகாட்டுதல்கள் வழங்கப்பட்டு வருகிறது. ஒவ்வொரு நாளும் தலா 2500 மாணவர்கள் வீதம் 7 நாட்கள் சுமார் 17,398 மாணவ, மாணவிகள் கலந்து கொள்ளும் நிகழ்ச்சி 26.06.2024 அன்று தொடங்கப்பட்டு நடத்தப்பட்டு வருகிறது.ஐந்தாம் கட்டமாக இன்று கிருஷ்ணன்கோவில் கலசலிங்கம் கல்லூரியில், விருதுநகர் கல்வி மாவட்டத்தில் அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் நடப்பாண்டில் 11 மற்றும் 12 ஆம் வகுப்பு மாணவ, மாணவிகளுக்கு உயர்கல்வி வழிகாட்டுதல் நிகழ்ச்சி நடைபெற்றது.இந்த நிகழ்ச்சி மூலம் அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் பயிலும் மாணவர்களுக்கு 12 ஆம் வகுப்பு முடித்த பிறகு கல்லூரிகள் தேர்வு, உயர்கல்வியில் உள்ள வாய்ப்புகள், நீட், கிளாட், ஜே.இ.இ, மத்திய பல்கலைக்கழக சேர்க்கைக்கான நுழைவுத்தேர்வுகள் உள்ளிட்ட பல்வேறு நுழைவுத் தேர்வுகளைஎவ்வாறு எதிர்கொள்வது, அதற்கு எவ்வாறு தயார்படுத்திக் கொள்வது, அதற்கான கட் ஆப் மதிப்பெண்கள், உள்ளிட்ட வழிகாட்டுதல்களை வழங்குவதே இந்நிகழ்ச்சியின் முக்கிய நோக்கமாகும்.மதிப்பெண்கள் எடுப்பது எவ்வளவு முக்கியமோ, அதை விட எடுத்த மதிப்பெண்கள் மூலம் கிடைக்கும் வாய்ப்பு குறித்து விழிப்புணர்வு மாணவர்களுக்கு இருக்க வேண்டும்.ஆனால், நீங்கள் எடுக்கக்கூடிய சிறிய முயற்சியில் மிகப் பெரிய வாய்ப்புகள் இருக்கின்றது. நீங்கள் எந்த துறையில் சேர்ந்து படித்தாலும் அதில் என்னென்ன வாய்ப்புகள் இருக்கிறது என்பதை தெரிந்து கொள்ள வேண்டும்.ஐஐடி, நீட், கிளாட் உள்ளிட்ட பல்வேறு நுழைவுத் தேர்வுகளுக்கு தயார் செய்வது என்பது மிகப்பெரிய காரியம் அல்ல. வருடத்திற்கு 100 மணி நேரம் ஒதுக்கி அதை தொடர்ச்சியாக முயற்சி செய்தாலே போதும். ஆனால் இதனை ஆரம்பிப்பது எளிதாக உள்ளது. ஆனால் அதனை பெரும்பாலான மாணவர்கள் தொடர்ச்சியாக செய்வதில்லை.இதனை வள்ளுவர் உடைத்தம் வலியறியார் ஊக்கத்தின் ஊக்கி இடைக்கண் முரிந்தார் பலர் என்ற குறள் மூலம் யார் தன் நோக்கத்தோடு செயல்படாமல் ஒரு செயலை ஆரம்பித்துவிட்டு, பாதியில் விட்டு தோல்வியடைந்தவர்கள் பல பேர் என குறிப்பிடுகிறார். திறமை என்று தனியாக எந்த ஒரு உணர்வுகளும் இல்லை. ஒரு செயலை தொடர்ச்சியாக செய்து, அதன் மூலமாக வெற்றியடைவதே திறமை.7.5 சதவிகித இட ஒதுக்கீட்டில் செல்ல கட் ஆப் மதிப்பெண்கள் என்னென்ன, பாடம் வாரியாக எத்தனை மதிப்பெண்கள் பெற வேண்டும் என்று ஆராய்ந்து செயல்பட வேண்டும். நீங்கள் செய்கின்ற சிறு முயற்சிகள் மூலமாக உங்களுடைய குடும்பம் கடினமான பொருளாதார நிலையில் இருந்து மிகவும் உயர்ந்த பொருளாதாரம் நிலைக்கு உயர முடியும்.இன்னும் நிறைய பெற்றோர்கள் மற்றும் மாணவர்கள் மத்தியில் நிறைய செலவு செய்தால் தான் உயர் கல்வி படிக்க முடியும் என்ற கற்பிதங்கள் உள்ளன. மாணவ, மாணவிகள் உயர்கல்வியில் சேருவதற்கான வாய்ப்புகள் நிறைய இருக்கின்றன. உயர்கல்வி பயில்வதற்கு அரசு நலத்திட்டங்களும், உதவிகளும், கல்வி உதவித்தொகை, இட ஒதுக்கீடு, பெண்களுக்கு புதுமை பெண் திட்டம், மாணவர்களுக்கு தமிழ்ப்புதல்வன் திட்டம் மூலம் பல்வேறு உதவிகளை அரசு செய்து வருகிறது. அரசு கல்லூரியில் படிக்க வருபவர்களுக்கு சில ஆயிரங்களில் மட்டும் தான். அதிலும் அவர்களுக்கு உதவித்தொகையும் கிடைக்கின்றன. இந்த அரசு திட்டங்களை நாம் பயன்படுத்திக் கொள்ள வேண்டும்.அதனை பெறுவதற்கு முதலில் மதிப்பெண்கள் எவ்வளவு பெற வேண்டும் என்பதை தெரிந்து கொள்ள வேண்டும். நுழைவுத் தேர்வு பற்றி தெரிந்து கொள்ள வேண்டும். ஒவ்வொரு நாளும் நீங்கள் கொஞ்சம் கொஞ்சமாக முயற்சிகளை மேற்கொண்டீர்கள் என்றால், இது போன்ற வாய்ப்புகளை நீங்கள் பெற்றுக் கொள்ளலாம். அப்படி வாய்ப்புகளை பெற்று கல்வியின் மூலமாக சிறந்த உயரங்களை அடைவதற்கான மாணவ, மாணவிகளாக நீங்கள் வரவேண்டும். வாழ்க்கையில் வெற்றி அடைவதற்காக பல்வேறு வாய்ப்புகள் இருக்கின்றன. இருப்பதிலேயே மிகவும் எளிதான வாய்ப்பு என்பது என்பது 12-ம் வகுப்பு படிக்கும் போது ஓரளவிற்கு முயற்சி செய்து நன்றாக படித்து, இந்த கல்வியின் மூலமாக கடின உழைப்பின் மூலமாக நீங்கள் பெறக்கூடிய வாய்ப்புகள் தான் வாய்ப்புகளிலேயே மிக எளிய வாய்ப்பு. இந்த நிகழ்ச்சியை நீங்கள் பயன்படுத்தி உங்களுடைய வாய்ப்புகளை தெரிந்து கொண்டு அந்த இலக்கை அடைந்து வெற்றியாளர்களாக மாற வேண்டும் என தெரிவித்தார்.
விருதுநகர் மாவட்டம், திருச்சுழி ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட பல்வேறு பகுதிகளில் நடைபெற்று வரும் வளர்ச்சி பணிகள் குறித்து மாவட்ட ஆட்சித்தலைவர் முனைவர் வீ.ப.ஜெயசீலன், I A S,அவர்கள் (02.07.2024) நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு செய்தார். அதன்படி, திருச்சுழி ஊராட்சி ஒன்றியம், கீழசேகரநல்லூர் ஊராட்சி மேலகண்டமங்களம் கிராமத்தில் நமக்கு நாமே திட்டத்தின் கீழ் ரூ.25.64 இலட்சம் மற்றும் ரூ.47 இலட்சம் மதிப்பீட்டில் இரண்டு சிறுபாலங்கள் கட்டப்பட்டுள்ளதை பார்வையிட்டு, பணிகளின் தரம் குறித்து ஆய்வு மேற்கொண்டார்.அதனை தொடர்ந்து, கீழகண்டமங்களம் ஊராட்சி சித்தலக்குண்டு கிராமத்தில் உள்ள ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் ரூ.12.73 இலட்சம் மதிப்பில் புணரமைப்பு பணிகள் செய்யப்பட்டுள்ளதை பார்வையிட்டு ஆய்வு செய்து, பள்ளியில் காலை உணவுத்திட்டத்தின் கீழ் குழந்தைகளுக்கு வழங்கப்படும் உணவின் தரம் குறித்து ஆய்வு செய்தார். மேலும், பள்ளியில் பயிலும் மாணவ, மாணவிகளுக்கு எளிதாக பாடங்களை புரிந்து கொள்ளும் வகையில் வில்லுப்பாட்டு மூலம் பாடங்கள் நடத்தப்பட்டு வருவதை பார்வையிட்டார்.பின்னர், கொட்டம் கிராமத்தில் உள்ள ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் ரூ.3.57 இலட்சம் மதிப்பில் புணரமைப்பு பணிகள் செய்யப்பட்டுள்ளதை பார்வையிட்டு, அங்கு பள்ளி மாணவர்களுக்கு வழங்கப்படும் உணவின் தரம் குறித்து மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் ஆய்வு செய்தார். இந்த ஆய்வின்போது, வட்டார வளர்ச்சி அலுவலர்கள், உதவிப் பொறியாளர்கள், ஊராட்சி மன்ற தலைவர்கள் மற்றும் அரசு அலுவலர்கள் உட்பட பலர் இருந்தனர்.
விருதுநகர் மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில், விவசாயிகள் மற்றும் மண்பாண்டத் தொழிலாளர்கள் அனுமதிக்கப்பட்ட நீர்நிலைகளிலிருந்து கட்டணம் இல்லாமல் வண்டல் மண்/ களிமண் எடுப்பது தொடர்பாக அரசு அலுவலர்கள் மற்றும் விவசாயப் பிரதிநிதிகளுடனான ஆலோசனைக் கூட்டம் (01.07.2024)அன்று மாவட்ட ஆட்சித்தலைவர் முனைவர்.வீ.ப.ஜெயசீலன், I A S., அவர்கள் தலைமையில் நடைபெற்றது.தமிழ்நாடு அரசால் சிறுகனிம விதிகளில் தேவையான திருத்தங்கள் மேற்கொள்ளப்பட்டு பொதுப்பணித்துறை மற்றும் ஊரக வளர்ச்சித்துறை பராமரிப்பில் உள்ள கண்மாய்கள், குளங்கள், ஏரிகள், நீர்த்தேக்கங்கள் மற்றும் கால்வாய்களிலிருந்து கட்டணம் இல்லாமல் விவசாயப் பயன்பாட்டிற்கும் மற்றும் மண்பாண்ட தொழில் செய்வதற்கும் வண்டல் மண் / களிமண் எடுக்க சம்மந்தப்பட்ட வட்டாட்சியர்களே இணைய வழியில் அனுமதி வழங்கும் வகையில் அரசாணை பிறப்பிக்கப்பட்டுள்ளது,அந்த வகையில், விருதுநகர் மாவட்டத்தில் விவசாயிகள் மற்றும் மண்பாண்டத் தொழிலாளர்கள் அனுமதிக்கப்பட்ட நீர்நிலைகளிலிருந்து கட்டணமில்லாமல் வண்டல் மண் எடுப்பது தொடர்பான ஆலோசனைக் கூட்டம் 01.07.2024 நடத்தப்பட்டது. விருதுநகர் மாவட்டத்தில் 283 நீர் நிலைகளில் வண்டல் / களிமண் எடுக்க விருதுநகர் மாவட்ட அரசிதழ் சிறப்பு வெளியீடு எண்.4, நாள்:29.06.2024 மற்றும் மாவட்ட அரசிதழ் சிறப்பு வெளியீடு எண்.5, நாள்:01.07.2024-ன்படி அனுமதி அளித்து ஆணை பிறப்பிக்கப்பட்டுள்ளது.அதன்படி, விருதுநகர் மாவட்டத்தில் வத்திராயிருப்பு வட்டத்தில் 49 நீர்நிலைகளும், சிவகாசி வட்டத்தில் 11 நீர்நிலைகளும், இராஜபாளையம் வட்டத்தில் 44 நீர்நிலைகளும், காரியாபட்டி வட்டத்தில் 16 நீர்நிலைகளும், திருச்சுழி வட்டத்தில் 47 நீர்நிலைகளும்;, விருதுநகர் வட்டத்தில் 13 நீர்நிலைகளும்;, சாத்தூர் வட்டத்தில் 28 நீர்நிலைகளும்;, திருவில்லிபுத்தூர் வட்டத்தில் 46 நீர்நிலைகளும்;, அருப்புக்கோட்டை வட்டத்தில் 17 நீர்நிலைகளும்;, வெம்பக்கோட்டை வட்டத்தில் 12 நீர்நிலைகளும்; என மொத்தம் 283 நீர் நிலைகள் இனம் கண்டறியப்பட்டு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. மேலும், கூடுதலான நீர்நிலைகளில் வண்டல் மண்ஃகளிமண் எடுக்க அனுமதி அளித்திட தேவையான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.வண்டல் மண் / களிமண் தேவைப்படும் விவசாயிகள், மண்பாண்டத் தொழிலாளர்கள் தாம் வசிக்கும் வட்டத்தின் அருகாமையில் மாவட்ட நிர்வாகத்தால் அனுமதிக்கப்பட்ட நீர்நிலைகளிலிருந்து எடுத்திட இணைய வழியில் விண்ணப்பம் செய்து, சம்மந்தப்பட்ட வட்டாட்சியர் அளவிலேயே அனுமதி பெற்று, தங்களது சொந்த செலவில் வண்டல் மண் /களிமண் வெட்டி எடுத்து தமது வயல்களை வளம் பெறச் செய்வதோடு, மண்பாண்டத் தொழிலாளர்களும் தங்களது தொழிலை மேம்படுத்திக்கொள்ள வழிவகை செய்யப்பட்டுள்ளது.விவசாய பயன்பாட்டிற்காக வண்டல்மண் /களிமண் பெற்றுக்கொள்ள விண்ணப்பிக்கும் நபர் தங்களது நில ஆவணங்களை இணையதளத்தில் பதிவு செய்து விண்ணப்பிக்கலாம். இவ்விண்ணப்பங்கள் வருவாய்த் துறையால் பராமரிக்கப்பட்டு வரும் இணைய தரவுகளின் கீழ் நில ஆவணங்கள் அனைத்தும் சரிபார்க்கப்பட்டு தொடர்புடைய வட்டாட்சியரால் வண்டல் மண்/களிமண் எடுக்க 30 நாட்களுக்கு மிகாமல் அரசால் தெரிவிக்கப்பட்டுள்ள நிபந்தனைகளுக்குட்பட்டு அனுமதி வழங்கப்படும்.விவசாய பயன்பாட்டிற்கென நஞ்சை நிலத்திற்கு இரண்டு ஆண்டுகளுக்கு ஒருமுறை ஒரு ஏக்கருக்கு 75 கன மீட்டர் அல்லது ஒரு ஹெக்டேருக்கு 185 கன மீட்டர் அளவிலும், புஞ்சை நிலத்திற்கு இரண்டு ஆண்டுகளுக்கு ஒருமுறை ஒரு ஏக்கருக்கு 90 கனமீட்டர் அல்லது ஒரு ஹெக்டேருக்கு 222 கன மீட்டர் அளவிலும், மண்பாண்டம் தயாரித்திட 60 கன மீட்டர் அளவிலும் மற்றும் சொந்த வீட்டு உபயோகத்திற்கு 30 கன மீட்டர் அளவிலும் கட்டணமில்லாமல் வண்டல்மண்/களிமண் எடுத்துக்கொள்ள அனுமதிக்கப்பட்டு உள்ளது. எனவே, விவசாயிகள் மற்றும் மண்பாண்டத் தொழிலாளர்கள் இவ்வாய்பினைப் பயன்படுத்திக்கொள்ள கேட்டுக்கொள்ளப்படுகிறது.மேலும், களிமண் மற்றும் வண்டல் மண் எடுப்பதை கண்காணிக்கும் பொருட்டு மாவட்ட அளவில் துணை ஆட்சியர் நிலையில் திரு.தி.வெ.ரமேஷ், மாவட்ட ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நல அலுவலர் மற்றும் வட்டாட்சியர் நிலையில் திரு.சீனிவாசன், தனி வட்டாட்சியர் (பேரிடர் மேலாண்மை) ஆகிய அலுவலர்கள் நியமனம் செய்து உத்தரவிடப்பட்டுள்ளது.மேலும், பொதுமக்கள் தங்களுக்கு தேவையான தகவல்கள் அல்லது புகார்களை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் இயங்கி வரும் பேரிடர் மேலாண்மை துறையிலும், கட்டுப்பாட்டு அறை கட்டணமில்லா அலைபேசி எண்.1077-ல் தொடர்பு கொண்டு தெரிவிக்கலாம்.மண் எடுக்க அனுமதி பெற்று முறைகேட்டில் ஈடுபடுவோர் மீது குற்ற வழக்கு பதிவு செய்யப்பட்டு நடவடிக்கை எடுக்கப்படும் என மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் தெரிவித்துள்ளார்.
விருதுநகர் மாவட்டத்தில், அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் 2023 - 24ஆம் கல்வியாண்டில் பன்னிரெண்டாம் வகுப்பு தேர்ச்சி பெற்றோர் எண்ணிக்கை 17,448. தேர்ச்சி பெற்ற மாணவர்களில் இதுவரை மொத்தம் 17,198 பேர் (98.6%) (கலந்தாய்வில் கலந்து கொள்ள காத்திருக்கும் மாணவர்களையும் சேர்த்து) உயர்கல்விக்கு செல்கிறார்கள். மீதம் உள்ள 308 மாணவர்களை உயர்கல்வியில் சேர்க்கும் பொருட்டு மாவட்ட நிர்வாகத்தால் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. முதற்கட்ட சேர்க்கை நடந்து முடிந்த நிலையில் மேற்கண்ட பாடப்பிரிவில் காலிப்பணியிடம் இருப்பதால் கல்லூரிக் கல்வி இயக்ககம், இரண்டாம் கட்ட சேர்க்கைக்கான ஆன்லைன் விண்ணப்ப பதிவு தேதியினை நீட்டித்துள்ளது. TNGASA இணையதளத்தில் விண்ணப்பிக்காத மாணவர்கள் 03.07.2024 முதல் 05.07.2024 வரை விண்ணப்பித்துக் கொள்ளலாம்.அரசு கலைக் கல்லூரிகளில் சேரும் மாணவர்களுக்கு மாணவ, மாணவியர்களுக்கு தமிழ்நாடு அரசு புதுமைப்பெண் திட்டம், தமிழ் புதல்வன் திட்டம் உள்ளிட்ட திட்டங்களின் மூலம் ரூ.1000/- வீதம் கல்வித் தொகை கிடைக்கும்.பாடப்பிரிவு காலியிட விவரம்1 அரசு கலைக்கல்லூரி, சாத்தூர்.பி.ஏ., தமிழ் 21பி.ஏ., ஆங்கிலம் 43பி.எஸ்.சி., கணிதம் 55பி.காம்., 172 அரசு கலைக்கல்லூரி, திருச்சுழி.பி.ஏ., தமிழ் 04பி.ஏ., ஆங்கிலம் 44பி.காம்., 26பி.எஸ்.சி., வேதியியல் 21பி.எஸ்.சி., கணினி அறிவியல் 143.அரசு கலைக்கல்லூரி, அருப்புக்கோட்டைபி.ஏ., தமிழ் 30பி.ஏ., ஆங்கிலம் 48பி.எஸ்.சி., கணிதம் 48பி.காம்., 154.அரசு கலைக்கல்லூரி, திருவில்லிபுத்தூர்பி.ஏ., ஆங்கிலம் 14பி.எஸ்.சி., கணிதம் 455. அரசு கலைக்கல்லூரி, சிவகாசிபி.ஏ., தமிழ் 02பி.ஏ., ஆங்கிலம் 04பி.எஸ்.சி., கணிதம் 19பி.காம்., 01பி.எஸ்.சி., கணினி அறிவியல் 02பி.எஸ்.சி., தாவரவியல் 08பி.எஸ்.சி., விலங்கியல் 02பி.எஸ்.சி., வேதியியல் 02பி.எஸ்.சி., இயற்பியல் 06பி.பி.ஏ., 04பி.ஏ., வரலாறு 12பி.ஏ., பொருளாதாரம் 05எனவே விருதுநகர் மாவட்டத்தில் இது வரை கல்லூரிகளில் சேராத மாணவர்கள் உடனடியாக சேருவதற்கும், இதற்கு முந்தைய ஆண்டுகளில் பன்னிரெண்டாம் வகுப்பு முடித்தவர்களும் இந்த ஆண்டு கல்லூரிகளில் சேர்ந்து படித்து பட்டம் பெறுவதற்கு முன் வரவேண்டும்.பெற்றோர்களும், உறவினர்களும் அவர்களை ஊக்குவிக்க வேண்டும். விண்ணப்பிக்க விரும்பும் மாணவர்கள் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் இயங்கக் கூடிய உயர்கல்வி ஆலோசனை மையத்தில் வந்தும் விண்ணப்பித்தும் கொள்ளலாம். இதற்காக உயர்கல்வி சேர்க்கைக்காக சிறப்பு குறைதீர்க்கும் கூட்டம் வரும் வெள்ளிக்கிழமை 05.07.2024 அன்று காலை 10.00 மணி முதல் 01.00 மணி வரை நடைபெறும் என மாவட்ட ஆட்சித்தலைவர் முனைவர் வீ.ப.ஜெயசீலன், I A S., அவர்கள் தெரிவித்துள்ளார்.
தமிழ்நாடு அரசின் போதைப் பொருட்கள் மற்றும் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்களை தீவிர ஒழிப்புத் திட்டத்தின்படி, உணவு பாதுகாப்பு துறை மற்றும் காவல் துறையினரும் இணைந்த 7 குழுக்கள் அமைக்கப்பட்டு, பள்ளி, கல்லூரிகள் அருகாமையில் உள்ள கடைகளிலும் மற்றும் இதர பகுதிகளில் உள்ள கடைகளிலும் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் விற்பனை செய்யப்படுகிறதா என ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. கடந்த 01-01-2024 முதல் 22-06-2024 முடிய உணவு பாதுகாப்பு துறை மற்றும் காவல் துறையினரும் குழுவாக இணைந்து 427 முறை தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் உள்ளதா என சோதனைகள் மேற்கொள்ளப்பட்டன. அதில், தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் விற்பனை செய்வதை கண்டறியப்பட்ட 165 கடைகள் மற்றும் 10 வாகனங்களில் 729 கிலோ 500 கிராம் எடையிலான புகையிலை பொருட்கள் கைப்பற்றப்பட்டன. இது தொடர்பாக 165 கடைகளுக்கு சீல் வைக்கப்பட்டன. மேலும், 165 கடைகள் மற்றும் 10 வாகனங்களுக்கும்;; ரூ.38,60,000 ( ரூபாய் முப்பத்து எட்டு இலட்சத்து அறுபதாயிரம்) அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. கடந்த 23-06-2024 முதல் 29-06-2024 முடிய ஒரு வாரத்தில் உணவு பாதுகாப்பு துறை அதிகாரிகளும், காவல் துறையினரும் இணைந்து மேற்கொள்ளப்பட்ட 21 குழு ஆய்வுகளில் 13 கடைகள் மற்றும் 3 வாகனங்களில்; 121 கிலோ எடையுள்ள புகையிலை பொருட்கள் கைப்பற்றப்பட்டன. இது தொடர்பாக 13 கடைகள் சீல் வைக்கப்பட்டன. 13 கடைகள் மற்றும் 3 வாகனங்களுக்கு ரூ.4 லட்சம் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. முதன் முறையாக தடை செய்யப்பட்ட புகையிலை விற்பது கண்டுபிடிக்கப்பட்டால் ரூ.25 ஆயிரம் அபராதம், 15 நாட்களுக்கு கடை மூடி சீல் வைக்கப்படும். 2வது முறையாக தவறு செய்தால் ரூ.50 ஆயிரம் அபராதம் ஒரு மாதம் வரை கடை மூடி சீல் வைக்கப்படும.; 3வது முறையும் தவறு செய்தால் ரூ.1 லட்சம் அபராதம், மூன்று மாதங்களுக்கு கடை மூடி சீல் வைக்கப்படும். இம்மாவட்டம் முழுவதும் தொடர்ந்து ஆய்வு செய்யப்பட்டு, தடை செய்யப்பட்ட புகையிலைப் பொருட்களை விற்பனை செய்வது மற்றும் இருப்பு வைப்பது கண்டறியப்பட்டால் கடும் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என மாவட்ட ஆட்சித்தலைவர் முனைவர் வீ.ப.ஜெயசீலன், I A S, அவர்கள் தெரிவித்துள்ளார்.
தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்கத்தின் கீழ் ஊரகப் பகுதிகளில் சிறப்பாக செயல்படும் சுயஉதவிக்குழுக்கள், ஊராட்சி அளவிலான கூட்டமைப்பு, வட்டார அளவிலான கூட்டமைப்பு, கிராம வறுமை ஒழிப்பு சங்கங்கள் மற்றும் நகர்புரப்பகுதிகளில் சிறப்பாக செயல்படும் சுய உதவிக்குழுக்கள், பகுதி அளவிலான கூட்டமைப்பு, நகர அளவிலான கூட்டமைப்பு ஆகியவற்றிற்கு மணிமேகலை விருது வழங்குவதற்கு அரசாணை(நிலை) எண் : 76, நாள்:15.03.2024-இன்படி ரூ.3.00 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. மணிமேகலை விருது பெறுவதற்கு சமுதாய அமைப்புகளை தேர்வு செய்வதற்கான தகுதி வரம்புகள் குறித்து இவ்வரசாணையில் விரிவாக வழங்கப்பட்டுள்ளது. மேலும் இவ்விருதிற்கு விண்ணப்பிக்கும் சமுதாய அமைப்புகளை கீழ்க்காணும் 6 காரணிகளின் அடிப்படையில் தேர்வு செய்திட தமிழ்நாடு மகளிர் மேம்பாட்டு நிறுவன வழிகாட்டுதல்களில் தெரிவிக்கப்பட்டுள்ளது.1. கூட்டம் தொடர்ந்து முறையாக நடத்தப்பட்டிருக்க வேண்டும்.2. சேமிப்புத் தொகையினை பயனுள்ளதாக பயன்படுத்திருக்க வேண்டும்.3. வங்கிக்கடன் பெற்றிருக்க வேண்டும்.4. குழு உறுப்பினர்கள் பொருளாதார மேம்பாடு அடைந்திருக்க வேண்டும்.5. திறன் வளர்ப்பு மற்றும் வாழ்வாதார பயிற்சிகள் வழங்கப்பட்டிருக்க வேண்டும்.6. சமூக நல நடவடிக்கைகளில் பங்கெடுத்திருக்க வேண்டும். அதன்படி, விருதுநகர் மாவட்டம் தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்கத்தின் கீழ் ஊரகப் பகுதிகளில் சிறப்பாக செயல்படும் சுயஉதவிக்குழுக்கள், ஊராட்சி அளவிலான கூட்டமைப்பு, வட்டார அளவிலான கூட்டமைப்பு, கிராம வறுமை ஒழிப்பு சங்கங்கள் மற்றும் நகர்புரப்பகுதிகளில் சிறப்பாக செயல்படும் சுய உதவிக்குழுக்கள், பகுதி அளவிலான கூட்டமைப்பு, நகர அளவிலான கூட்டமைப்பு ஆகியவற்றிற்கு 2023-24-ம் நிதி ஆண்டிற்கு மணிமேகலை விருது வழங்குவதற்கு உரிய வழிகாட்டுதல்களை பின்பற்றி தகுதியுடைய சமுதாய அமைப்புகளிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது என மாவட்ட ஆட்சித்தலைவர் முனைவர் வீ.ப.ஜெயசீலன்,I A S., அவர்கள் தெரிவித்துள்ளார்.
தாய்த் தமிழ்நாட்டிற்குத் தமிழ்நாடு எனப் பேரறிஞர் அண்ணா அவர்கள் பெயர் சூட்டிய சூலை 18 (18.07.1967) ஆம் நாளினைப் பெருமைப்படுத்தும் வகையில் அந்த நாள் ”தமிழ்நாடு நாளாகக்” கொண்டாடப்படும் என தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களால் அறிவிக்கப்பெற்றது.இவ்வறிவிப்பிற்கிணங்க, தமிழ்நாடு நாளையொட்டி மாவட்டத்திலுள்ள அனைத்துப் பள்ளிகளிலும் 6 முதல் 12ஆம் வகுப்பு வரை பயிலும் மாணவர்களுக்குக் கட்டுரை மற்றும் பேச்சுப்போட்டிகள் 09.07.2024 ஆம் நாள் முற்பகலில் விருதுநகர் மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்திலுள்ள மாவட்ட நூலக அலுவலகக் கட்டடத்தில் நடைபெற உள்ளது.அரசு, தனியார் மற்றும் அரசு உதவிபெறும் பள்ளிகளின் மாணவர்கள் இப்போட்டிகளில் பங்கேற்கலாம். போட்டிகள் குறித்த விவரங்கள் முதன்மை கல்வி அலுவலர் வாயிலாகப் பள்ளிகளுக்கு அனுப்பப்படும்.கட்டுரைப் போட்டி “ஆட்சி மொழி தமிழ்” என்ற தலைப்பிலும், பேச்சுப்போட்டிகள் குமரித் தந்தை மார்சல் நேசமணி, தென்னாட்டு பெர்னாட்ஷா பேரறிஞர் அண்ணா, முத்தமிழறிஞர் கலைஞர் கருணாநிதி என்ற தலைப்புகளிலும் நடைபெறும்.மாவட்ட அளவில் ஒவ்வொரு போட்டிக்கும் முதல் பரிசு ரூ.10,000/-, இரண்டாம் பரிசு ரூ.7000/- , மூன்றாம் பரிசு ரூ.5000/- என்ற வீதத்தில் வழங்கப்பெறவுள்ளன. மாவட்ட அளவில் முதல் பரிசு பெற்ற மாணவர்கள் மட்டும் 12.07.2024 அன்று சென்னை மாநில மகளிர் மேல்நிலைப் பள்ளியில் நடைபெறும் மாநில அளவிலான போட்டியில் கலந்து கொள்ள அனுமதிக்கப்படுவர்கள் என மாவட்ட ஆட்சித்தலைவர் முனைவர் வீ.ப.ஜெயசீலன்.,I A S, அவர்கள் தெரிவித்துள்ளார்.