பொதுமக்களின் கோரிக்கைகளுக்கு மிகுந்த முக்கியத்துவம் அளித்து வரும் தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள்,” கள ஆய்வில் முதலமைச்சர் “ என்ற முன்னெடுப்பின் கீழ், பொதுமக்களிடம் பெறப்படும் கோரிக்கைகளை உடனுக்குடன் தீர்வு காண அறிவுறுத்தி வருகிறார்கள். மாண்புமிகு முதலமைச்சர் அவர்களின் மேற்படி முன்னெடுப்பின் நீட்சியாக அன்றாடம் அரசு துறைகளை அணுகும் பொதுமக்களுக்கு அரசு அலுவலர்கள் வழங்கும் சேவைகளை மேலும் செம்மைப்படுத்தி அரசின் சேவைகள் விரைவாகவும் எளிதாகவும் சென்று சேரும் வண்ணம் நிருவாகத்தில் மற்றுமொரு மைல் கல்லாக ”மக்களுடன் முதல்வர்” திட்டம் முதல்வரின் முகவரித்துறையால் நடைமுறைப்படுத்தப்பட்டது.”மக்களுடன் முதல்வர்” திட்டம் அன்றாடம் பொதுமக்கள் அதிகமாக அணுகும் அரசு துறைகள் சார்ந்த கோரிக்கைகள் அடையாளம் காணப்பட்டு நிலையான வழிகாட்டு நெறிமுறைகளின் அடிப்படையில் அனைத்து நகர்ப்புற மற்றும் கிராமப்புற உள்ளாட்சி அமைப்புகளில் வார்டு மற்றும் கிராம ஊராட்சி அளவில் சம்பந்தப்பட்ட துறைகள் அனைத்தும் ஒருங்கிணைந்து ஒரே குடையின் கீழ் கோரிக்கைகளை பெற அனைத்து மாவட்டங்களிலும் சிறப்பு முகாம்கள் நடத்திட உத்தேசிக்கப்பட்டது. விருதுநகர் மாவட்டத்தில் முதற்கட்டமாக கடந்த டிசம்பர் மாதத்தில் அனைத்து மாநகராட்சிகள், நகராட்சிகள், பேரூராட்சிகள் மற்றும் நகர்புறங்களை ஒட்டியுள்ள கிராம ஊராட்சிகள் உள்ளடக்கிய பகுதிகளில் 69 முகாம்கள் நடத்தப்பட்டன.இதன் தொடர்ச்சியாக, இரண்டாம் கட்டமாக ஊரகப்பகுதிகளில் ”மக்களுடன் முதல்வர்” முகாம்கள் நடத்தப்பட உள்ளது. தற்போது 440 கிராம ஊராட்சிகளில் 65 முகாம்கள் 11.07.2024 முதல் 14.08.2024 வரை நடத்திட திட்டமிடப்பட்டுள்ளது, இதற்காக, 15 அரசுத்துறைகள் சார்ந்த 44 சேவைகள் அடையாளம் காணப்பட்டுள்ளன. மேலும், இணைய வழி விண்ணப்ப முறை (Department Online Portal) எனில் சம்பந்தப்பட்ட துறைகள் முகாமிலேயே விண்ணப்பத்தினை இணைய வழியில் பதிவேற்றம் செய்திட . அனைத்து முகாம்களிலும் இ சேவை மையங்கள் அமைக்கப்பட உள்ளது. மேலும். அங்கு மேற்கொள்ளப்படும் சேவைகளுக்கு 50 சதவீத கட்டணம் மட்டுமே பெறப்படும். மேலும், இதுகுறித்த விபரம் பெறுவதற்கு மாவட்ட ஆட்சியர் அலுவலகம் ஐ பிரிவு, தொலைபேசி எண் 04562-252742, விருதுநகரில் தொடர்பு கொண்டு பயனடையுமாறும், மாவட்ட ஆட்சித் தலைவர் முனைவர் வீ.ப.ஜெயசீலன்., I A S.அவர்கள் தெரிவித்துள்ளார்கள்.
விருதுநகர் மாவட்ட அரசு தொழிற்பயிற்சி நிலையங்களான விருதுநகர்/ அருப்புக்கோட்டை/ சாத்தூர்/திருச்சுழி 2024-ம் ஆண்டிற்கான ஓராண்டு / ஈராண்டு தொழிற்பிரிவுகளில் சேர பயிற்சியாளர்களிடமிருந்து இணையதளம் மூலம் விண்ணப்பங்கள் 13.06.2024 முடிய வரவேற்கப்பட்டது. தற்போது 01.07.2024 முதல் 15.07.2024 முடிய நேரடி சேர்க்கை நடைபெறுகிறது. இப்பயிற்சிக்கு இருபாலரும் (ஆண்/பெண்) 15.07.2024 முடிய நேரடியாக விண்ணப்பிக்கலாம். விண்ணப்பிக்க வேண்டிய இணையதள முகவரி www.skilltraining.tn.gov.in பயிற்சிக்கு விண்ணப்பிக்க கல்வித் தகுதி 8-ம் வகுப்பு தேர்ச்சி / 10ம் வகுப்பு தேர்ச்சி மற்றும் அதற்கு மேல் பயின்ற அனைவரும் தகுதியானவர்கள். வயது வரம்பு ஆண்களுக்கு குறைந்தபட்ச வயது 14 முதல் அதிகபட்ச வயது 40 வரை மற்றும் மாற்றுத்திறனாளி / முன்னாள் இராணுவத்தினருக்கு விதிகளின்படி 5 ஆண்டு வயது வரம்பில் தளர்வு உண்டு. பெண்களுக்கு குறைந்தபட்சம் 14 முதல் அதிகபட்ச வயது உச்ச வரம்பு இல்லை. விண்ணப்பக்கட்டணமாக ரூ.50/-யை Debit Card / Credit Card / GPay/ Internet Banking ஆகியவற்றின் மூலமாக மட்டுமே செலுத்த வேண்டும்.விருதுநகர் அரசு தொழிற்பயிற்சி நிலையத்தில் உள்ள தொழிற்பிரிவுகளின் விபரம் பொருத்துநர் (Fitter), கடைசலர் (Turner), இயந்திர வேலையாள் (Machinist), கம்மியர் மோட்டார் வண்டி (MMV) குளிர்பதனம் மற்றும் தட்பவெப்பநிலை கட்டுபடுத்தும் தொழில்நுட்பவியலாளர் (R&AC Technician) உட்புற வடிவமைப்பு மற்றும் அலங்காரம் (Interior Design and Decoration) மேலும் தீயணைப்பு தொழிற்நுட்பம் மற்றும் தொழிற்சாலை பாதுகாப்பு மேலாண்மை (Fire Technology and Industrial Safety Management) இப்பிரிவில் சேருவதற்கு மட்டும் 10-ம் வகுப்பு கல்வித்தகுதியும், உடற்கூறு தகுதியும் உடையவர்கள் விண்ணப்பிக்கலாம். (உயரம் 165cm, எடை 52 kg, மார்பு விரிவதற்கு முன் 81cm பின் 85cm ). மற்றும் வுயவய Tata Technology மூலம் 4.0-வில் துவங்கியிருக்கும் நவீன தொழிற்நுட்பங்களுடன் கூடிய தொழிற்பிரிவுகளின் விபரம் (Advanced CNC Machining Technician), (Mechanic Electric Vehicle), (Industrial Robotics & Digital Manufacturing) அரசு தொழிற் பயிற்சி நிலையங்களில் சேரும் மாணவ / மாணவிகளுக்கு தமிழக அரசால் பின்வருமாறு விலையில்லா உபகரணங்கள் வழங்கப்படுகிறது.மடிக்கணினி / மிதிவண்டி / கட்டணமில்லா பேருந்து பயணச் சலுகை / மாதாந்திர கல்வி உதவித் தொகை ரூ.750/- (வருகைக்கு ஏற்ப) / சீருடை 2 செட் (தையல்கூலியுடன்) / மூடு காலணி 1 செட் / பாடப்புத்தகங்கள் / வரைபட கருவிகள் மற்றும் பயிற்சியாளர் அடையாள அட்டை/ அரசு பள்ளியில் 6 முதல் 10 ம் வகுப்பு வரை பயின்று உயர்கல்வி பெறும் பெண் பயிற்சியாளர்களுக்கு மூவலூர் இராமாமிர்தம் அம்மையார் உயர் கல்வி உறுதித்திட்டம் மூலம் மாதந்தோறும் ரூ.1000 /- உதவித்தொகை. அரசினர் தொழிற்பயிற்சி நிலையம், விருதுநகர் / அருப்புக்கோட்டை / சாத்தூர்/திருச்சுழி ஆகிய தொழிற்பயிற்சி நிலையங்களில் பயிற்சியில் சேர Online மூலம் விலையில்லாமல் விண்ணப்பிக்க தேவையான ஆவணங்கள் (8-ம் வகுப்பு மதிப்பெண் சான்றிதழ் / 10-ம் வகுப்பு மதிப்பெண் சான்றிதழ் (2021-ம் ஆண்டு தேர்ச்சி பெற்ற 10-ம் வகுப்பு மாணவர்கள் 9-ம் வகுப்பு மதிப்பெண் சான்றிதழ்) / பள்ளி மாற்றுச்சான்றிதழ் /சாதிச்சான்றிதழ் / ஆதார் அட்டை / பாஸ்போர்ட் அளவு புகைப்படம்) மற்றும் மின்னஞ்சல் முகவரி தொலைபேசி எண் விவரம். மேலும் விபரங்களுக்கு தொடர்பு கொள்ள வேண்டிய அரசு தொழிற்பயிற்சி நிலைய தொலைபேசி எண்கள் : விருதுநகர்: 04562-294382 / 252655, அருப்புக்கோட்டை: 04566-225800 சாத்தூர்: 04562-290953 / திருச்சுழி: 95788-55154 / 70100-40810 ஆகிய தொலைபேசி எண்களை தொடர்பு கொண்டு பயனடைய வேண்டும் என மாவட்ட ஆட்சித்தலைவர் முனைவர் வீ.ப.ஜெயசீலன், I A S, அவர்கள் தெரிவித்துள்ளார்.
விருதுநகர் மாவட்ட சமூகநல அலுவலகத்தின் கீழ் செயல்படும் ஒருங்கிணைந்த சேவை மையத்தில் உள்ள காலிப்பணியிடங்களுக்கு தொகுப்பூதிய அடிப்படையில் பணியாளர்களை தேர்ந்தெடுக்கும் பொருட்டு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.பதவியின் பெயர்: மூத்த ஆலோசகர் (Senior Counseller)காலிப் பணியிடம்: 1தகுதிகள்:1. முதுநிலை சமூகப்பணி (சமூகவியல்/உளவியல்) பயின்றவர்கள் விண்ணப்பிக்கலாம்.2. மகளிருக்கான வன்கொடுமை எதிர்த்து இயங்கும் அரசு அல்லது அரசு சாரா நிறுவனத்தில் இரண்டு ஆண்டுகள் அனுபவம் அல்லது அதே அமைப்பிற்குள் அல்லது வெளியே ஆலோசனை வழங்கியதில் குறைந்தபட்சம் ஓராண்டு அனுபவம் தேவை.3. 24/7 சுழற்சி முறையில் பணிபுரிய சம்மதிக்கும் நபர்கள்; மட்டுமே விண்ணப்பிக்கலாம்.4. விருதுநகர் மாவட்டத்தைச் சார்ந்த பெண்கள் மட்டுமே விண்ணப்பிக்க தெரிவிக்கப்படுகிறது.பதவியின் பெயர்: வழக்கு பணியாளர் (Case Worker)காலிப் பணியிடம்: 2தகுதிகள்:1. இளநிலை /முதுநிலை சமூகப்பணி (சமூகவியல்/உளவியல்) பயின்றவர்கள் விண்ணப்பிக்கலாம்.2. மகளிருக்கான வன்கொடுமை எதிர்த்து இயங்கும் அரசு அல்லது அரசு சாரா நிறுவனத்தில் இரண்டு ஆண்டுகள் அனுபவம் அல்லது அதே அமைப்பிற்குள் அல்லது வெளியே ஆலோசனை வழங்கியதில் குறைந்தபட்சம் ஓராண்டு அனுபவம் தேவை.3. 24/7 சுழற்சி முறையில் பணிபுரிய சம்மதிக்கும் நபர்கள் மட்டுமே விண்ணப்பிக்கலாம்.4. விருதுநகர் மாவட்டத்தைச் சார்ந்த பெண்கள் மட்டுமே விண்ணப்பிக்க தெரிவிக்கப்படுகிறது. 23.07.2024 -க்குள் விண்ணப்பங்கள் அனுப்ப வேண்டிய முகவரிமாவட்ட சமூகநல அலுவலர்மாவட்ட சமூகநல அலுவலகம்மாவட்ட ஆட்சியர் வளாகம்,விருதுநகர் மாவட்டம்.
விருதுநகர் மாவட்டத்தில் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறையீன் கீழ் இயங்கி வரும் கரிசல்குளம்பட்டி ஆதிதிராவிட நல மேல்நிலைப்பள்ளியில் காலியாகவுள்ள ஒரு அறிவியல் பாட பட்டாதாரி ஆசிரியர் பணி காலியிடத்திற்கு மாதம் ரூபாய் 15,000ஃ- என்ற மாததொகுப்பூதியத்தில் முற்றிலும் தற்காலிகமாக ஆசிரியரை நியமித்திட தகுதியான நபர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. காலிப்பணியிட ஆசிரியர் தேர்வு வாரியம் பதவி உயர்வு மூலம் நிரப்பிடும் வரை அல்லது இக்கல்வியாண்டில் எது முன்னரோ அது வரையில் பணியமர்த்தப்படுவர்.பள்ளி மேலாண்மை குழு மூலம் நியமனம் செய்யப்படும் அறிவியல் பட்டதாரி ஆசிரியர் காலிப்பணியிடத்திற்கு பட்டதாரி ஆசிரியருக்கான தற்போது நடைமுறையில் உள்ள அரசு விதிமுறைகளில் உள்ளவாறு கல்வித்தகுதி பெற்றிருக்க வேண்டும். ஒன்றுக்கு மேற்ப்பட்டவர்கள் விண்ணப்பிக்கும் போது வரையறுக்கப்பட்ட கல்வித்தகுதியுடன் ஆசிரிய தேர்வு வாரியத்தால் நடத்தப்பட்ட போட்டித்தேர்வில் தேர்ச்சி பெற்று சான்றிதழ் சரிபார்ப்பில் கலந்து கொண்டவருக்கும் அவ்வாறு இல்லையெனில் இல்லம் தேடி கல்வித்திட்டத்தில் தன்னார்வலருக்கும் பள்ளி அமைந்துள்ள பகுதி மற்றும் அதன் அருகில் உள்ளவர்களுக்கும் முன்னூpமை வழங்கப்படும்.மேலும் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் இனத்தவருக்கும் முன்னுரிமை அளிக்கப்படும். இப்பணிகளுக்கான தகுதிவாய்ந்த நபர்கள் சம்பந்தப்பட்ட பள்ளி மேலாண்மை குழு மூலம் தேர்வு செய்யப்படுவதுடன் இப்பணி நியமனம்; முற்றிலும் தற்காலியமானதாகும். தற்காலிக பணிக்கு தகுதியுள்ள விண்ணப்பதாரர்கள் 10.07.2024 -க்குள் விருதுநகர் மாவட்ட ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நல அலுவலகத்தில் உரிய சான்றுகளுடன் நேரடியாகவோ, பதிவஞ்சல் மூலமாகவோ, விண்ணப்பிக்க வேண்டும் என மாவட்ட ஆட்சித்தலைவர் முனைவர் வீ.ப.ஜெயசீலன்., I A S., அவர்கள் தெரிவித்துள்ளார்.
விருதுநகர் மாவட்டத்தைச் சார்ந்த முன்னாள் படைவீர்களின் மனைவி / முன்னாள் படைவீரர் விதவை மற்றும் முன்னாள் படைவீரர்களின் திருமணமாகாத மகள்கள் மத்திய / மாநில அரசு மற்றும் அரசு சார்ந்த நிறுவனங்களில் தையற்பயிற்சி முடித்து உரிய சான்று பெற்று அப்பயிற்சி நிறுவனத்தின் மூலம் தையல் இயந்திரம் பெறாதவர்கள் 25.07.2024-க்குள் தையல் பயிற்சி முடித்த சான்றுகளுடன் திருவில்லிபுத்தூரில் இயங்கி வரும் விருதுநகர் மாவட்ட முன்னாள் படைவீரர் நல அலுவலகத்தை நேரில் அணுகி தகவல்களை பெறலாம் என மாவட்ட ஆட்சித்தலைவர் முனைவர்.வீ.ப.ஜெயசீலன், I A S., அவர்கள் தெரிவித்துள்ளார்.
விருதுநகர் நகராட்சி பகுதிகளில் நடைபெற்று வரும் பல்வேறு வளர்ச்சித் திட்டப் பணிகள் குறித்து மாவட்ட ஆட்சித்தலைவர் முனைவர் வீ.ப.ஜெயசீலன், I A S., அவர்கள் (06.07.2024) நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு செய்தார்.அதன்படி, விருதுநகர் நகராட்சி தங்கம்மாள் பெரியசாமி நாடார் பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் பள்ளி உள்கட்டமைப்பு மேம்பாட்டு நிதியின் கீழ் ரூ.1.14 கோடி மதிப்பில் புதிய வகுப்பறையுடன் கூடிய வேதியியல் ஆய்வகம் கட்டப்பட்டு வருவதையும்,பாவாலி சாலை நகராட்சி முஸ்லிம் பள்ளியில் ரூ.90.50 இலட்சம் மதிப்பில் மூன்று வகுப்பறைகள் மற்றும் சுகாதார வளாகம் கட்டப்பட்டு வருவதையும் பார்வையிட்டு ஆய்வு செய்தார். பின்னர் அங்கு உள்ள அங்கன்வாடி மையத்தினை ஆய்வு செய்து, பயன்பெறும் குழந்தைகளின் எண்ணிக்கை, வழங்கப்படும் ஊட்டச்சத்து உணவுகள், வயதிற்கேற்ற உயரம் மற்றும் எடை உள்ளிட்டவைகள் குறித்து கேட்டறிந்தார்.அதனை தொடர்ந்து, நகராட்சி பூங்காவில் நமக்கு நாமே திட்டத்தின் கீழ் ரூ.30 இலட்சம் மதிப்பில் ஸ்கேட்டி யார்டு அமைக்கப்பட்டுள்ளதை பார்வையிட்டு, அங்கு உள்ள பூங்காவில் மரக்கன்று நடும் பணியை தொடங்கி வைத்தார்.பின்னர், திடக்கழிவு மேலாண்மை திட்டத்தின் கீழ் நகராட்சி பகுதிகளில் சேகரிக்கப்படும் திடக்கழிவுகளை மக்கும் மற்றும் மக்காத குப்பைகள் என தரம் பிரித்து நுண் உரம் தயாரிக்கும் பணிகளை பார்வையிட்டு மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் ஆய்வு செய்தார்.மேலும் நடைபெற்று வரும் பணிகளை விரைவாகவும், தரமானதாகவும் முடித்து பொதுமக்களின் பயன்பாட்டிற்கு கொண்டு வர சம்மந்தப்பட்ட அரசு அலுவலர்களுக்கு அறிவுத்தினார்.இந்த ஆய்வின் போது, வருதுநகர் நகர்மன்றத்தலைவர் திரு.மாதவன், விருதுநகர் நகராட்சி ஆணையாளர் திருமதி பி.தமிழ்செல்வி, நகராட்சி பொறியாளர், சுகாதார ஆய்வாளர்கள் மற்றும் அரசு அலுவலர்கள் உட்பட பலர் உடன் இருந்தனர்.
தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டியில் கி.ரா.மணி மண்டபத்தில் 06.07.2024 அன்று கரிசல் இலக்கிய கழகம் சார்பில் தூத்துக்குடி மாவட்ட வருவாய் அலுவலர் திரு.அஜய் சீனிவாசன் அவர்கள் முன்னிலையில், நடைபெற்ற எழுத்தாளர் கு.அழகிரிசாமி நினைவு கருத்தரங்கத்தில் விருதுநகர் மாவட்ட ஆட்சித்தலைவர் முனைவர் வீ.ப.ஜெயசீலன், I A S., அவர்கள் சிறப்புரையாற்றினார்.தென் தமிழ்நாட்டில் இந்தியா முழுவதும் முழுமைக்கும் ஏற்பட்ட தாது வருட பஞ்சம் குறிப்பாக தென்தமிழ்நாட்டில், அதுவும் குறிப்பாக வறண்ட பூமியாக இருக்கக்கூடிய விருதுநகரில் இருக்கக்கூடிய பகுதிகளெல்லாம், வைகைக்கும் தாமரபரணிக்கும் இடையே இருக்கக்கூடிய இந்த வானம் பார்த்த பூமி பகுதிகளில், ஏற்பட்ட தாது வருட பஞ்சத்தில் ஏற்பட்ட சமூக மாற்றங்களை மிக அழகாக பதிவு செய்தவர். ஒரு எழுத்தாளன் ஆய்வாளனாக, வரலாற்று பார்வையாளனாக, இந்த சமூகப் பொறுப்பு மிகுந்த செயல்பாட்டாளராக திகழ முடியும் என்பதற்கு மிகச்சிறந்த உதாரணம் கு.அழகிரிசாமி அவர்கள்.இந்த நிகழ்ச்சியை கொண்டாடுவதற்கு காரணம், இன்று நாம் யாரைப் பற்றி பேசுகின்றோமோ, அவர் கல்லூரிக்கு செல்லாதவர், பள்ளியினுடைய மேல்நிலைப் படிப்பைக் கூட படிக்காதவர். ஆனால் தன்முனைப்போடு முயன்று ஒரு மிகச்சிறந்த எழுத்தாழ்மையொடு நிற்காமல், அந்த எழுத்தின் வழியாக இவ்வளவு காலம் கடந்தும், நாம் பேசுவதற்கும், இன்றும் இந்த சமூகத்திற்கு வழிகாட்டுவதற்கும் மிகச் சிறந்த படைப்புகளை எழுதியவர். அவருடைய அந்த வார்த்தை பிரயோகங்கள் மிக கூர்மையாக இருக்கும். கூர்மையான வசனங்களுக்கும், எழுத்துக்களுக்கு சொந்தக்காரர். அவரிடம் இருந்து கற்றுக் கொள்வதற்கு இன்றைய மாணவர்களுக்கும், இன்றைய குழந்தைகளுக்கும், அதைவிட இன்று அவர்களுக்கு கற்பிக்கக் கூடிய ஆசிரியர்களுக்கும் நிறைய இருக்கிறது. அதை நாம் நினைத்துக் கொள்வதற்காகத்தான் இன்று கு.அழகிரிசாமி அவர்களுடைய நினைவு நாள் கருத்தரங்கம். கரிசல் இலக்கிய கழகம் விருதுநகரில் ஆரம்பிக்கப்பட்டு இருந்தாலும், அதற்கென்று நில எல்லை இருக்கக்கூடாது. கரிசல் இலக்கிய ஆர்வலர்கள், அடுத்த தலைமுறைக்கு கொண்டு செல்ல வேண்டும் என்பதற்காக இந்த நிகழ்ச்சியை இந்த மண்டபத்தில் இன்று ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது என தெரிவித்தார்.இக்கருத்தரங்கில் நாவுக்கரசர் திரு.நாஞ்சில் சம்பத் அவர்கள், “அழகிரிசாமி இன்று” என்ற தலைப்பில் சிறப்புரையாற்றினார்.இந்நிகழ்ச்சியில் கரிசல் இலக்கிய கழக செயலாளர் மருத்துவர் த.அறம் அவர்கள் வரவேற்புரையும், முனைவர் சத்தியபாலன் அவர்கள் நன்றியுரையும் வழங்கினார்கள்.மேலும், கவிஞர் அகிலா கிருஷ்ணமூர்த்தி அவர்கள் எழுதிய “அன்னதான வரிசையில் செயற்கை நுண்ணறிவு” என்ற ஹைக்கூ கவிதை நூல் வெளியிடப்பட்டது.பின்னர், தமிழ்நாடு கலை இலக்கிய பெரு மன்றம் சார்பில் கு.அழகிரிசாமி நூற்றாண்டை முன்னிட்டு, இணைய வழியில் அவருடைய 110 சிறுகதைகள் மற்றும் கட்டுரைகளை “நாளும் ஒரு கதை” என்ற தலைப்பில் கதை சொல்லிய கதை சொல்லிகளுக்கு சான்றிதழ்கள் வழங்கப்பட்டன.இந்நிகழ்ச்சியில் தூத்துக்குடி செய்தி மக்கள் தொடர்பு அலுவலர் திரு.சே.ரா.நவீன்பாண்டியன், கல்லூரி மாணவ, மாணவியர்கள், ஆசிரியர்கள், கரிசல் இலக்கிய நிர்வாகிகள், எழுத்தாளர்கள், அரசு அலுவலர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.
விருதுநகர் மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில், (05.07.2024) மாவட்ட நிர்வாகம் சார்பில், நான் முதல்வன் திட்டத்தின் கீழ், திருவனந்தபுரத்தில் உள்ள விக்ரம் சாராபாய் விண்வெளி ஆய்வு மையத்திற்கு 50 மாணவர்களும், கீழடி அகழ்வாராய்ச்சி, மதுரை கலைஞர் நூற்றாண்டு நூலகம் மற்றும் திருமலை நாயக்கர் மஹாலுக்கு 100 மாணவர்களும், பந்தல்குடி சுற்றுச்சூழல் பூங்கா, தூத்துக்குடி ஸ்டெம் பார்க் மற்றும் துறைமுகத்திற்கு 100 மாணவர்களும் செல்லும் அறிவியல் களப்பயணத்தை மாவட்ட ஆட்சித்தலைவர் முனைவர் வீ.ப.ஜெயசீலன்,I A S., அவர்கள் கொடியசைத்து வழியனுப்பி வைத்தார். தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் தமிழக மாணவர்களின் நலன் மற்றும் மேம்பாட்டிற்காக பல்வேறு திட்டங்களை தீட்டி செயல்படுத்தி வருகிறார்கள்.அந்த வகையில் விருதுநகர் மாவட்டத்தில், தமிழக அரசின் வழிகாட்டுதலின்படி, மாவட்ட நிர்வாகத்தின் சிறப்பு முயற்சியாக, பள்ளி மாணவர்களின் கல்வி வளர்ச்சி மற்றும் மேம்பாட்டிற்காக பல்வேறு விழிப்புணர்வு முகாம்கள், அவர்களின் தனித்திறமைகளை வெளிப்படுத்தும் விதமாக கோடைகால சிறப்பு பயிற்சி வகுப்புகள், போட்டித்தேர்வுகளுக்கு தயார் படுத்துவதற்காக சிறப்பு பயிற்சி வகுப்புகள், உயர்கல்வி குறித்த புரிதல் மற்றும் உயர்கல்வி படிப்புகளில் உள்ள துறைகள் குறித்து வழிகாட்டும் நோக்கில் கல்லூரிகளுக்கு கல்விச் சுற்றுலா, உயர்கல்வி படிப்பதற்கு விரிவான வழிகாட்டுதலையும், அவர்களின் எதிர்கால கல்வி நோக்கங்கள் குறித்து தகவல் அறிந்து முடிவுகளை எடுக்க மாணவர்களுக்கு உதவிடும் வகையிலும், அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் பயின்று 12-ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்ற மாணவர்களுக்கு சிறப்பு குறைதீர்க்கும் நாள் கூட்டம், சுற்றுச்சூழல் மற்றும் வன உயிரினங்கள் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தி பசுமை ஆர்வலர்களை உருவாக்கும் திட்டம், மாணவர்களுக்கு கல்வியோடு, அவர்களின் கல்வி இணை செயல்பாடுகளுக்கு முக்கியத்துவம் அளிக்கும் வகையில், அறிவோம் தெளிவோம் என்ற சிறப்புத் திட்டத்தின் கீழ் பள்ளி மாணவர்கள் அருகில் உள்ள பல்வேறு அரசு அலுவலகங்களுக்கு சென்று, அங்குள்ள அலுவலக நடைமுறைகளையும், அங்கு வழங்கப்படும் சேவைகளையும் தெரிந்து கொள்ளுதல் உள்ளிட்ட பல்வேறு முன்னெடுப்புகள் எடுக்கப்பட்டு வருகின்றது.மேலும், மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் தொடர்ச்சியாக காபி வித் கலெக்டர் நிகழ்ச்சிகள் மூலம் பல்வேறு தனித்திறமைகளில் சிறந்து விளங்கும் அரசுப்பள்ளி மாணவர்களை சந்தித்தும், அரசுப்பள்ளிகளுக்கு நேரடியாகச் சென்று, 11, 12 ஆம் வகுப்பு மாணவர்களுடன் கலந்துரையாடி, இலக்கை நிர்ணயிப்பது, அந்த இலக்கை எவ்வாறு அடைவது, வாய்ப்புகளை பயன்படுத்துவது, தொடர்ச்சியான செயல்பாட்டினால் திறமையை வளர்த்துக் கொண்டு வாழ்வில் வெற்றி பெறுவது, தவறுகளில் இருந்து படிப்பினை கற்றுக் கொண்டு எவ்வாறு வாழ்வில் முன்னேறுவது உள்ளிட்ட பல்வேறு கருத்துக்களை கூறி, அறிவுரை மற்றும் ஆலோசனைகளுடன் கூடிய உரிய வழிகாட்டுதல்களை மாணவர்களுக்கு வழங்கி வருகிறார்கள்.அதன் ஒரு பகுதியாக (05.07.2024) திருவனந்தபுரத்தில் உள்ள விக்ரம் சாராபாய் விண்வெளி ஆய்வு மையத்திற்கு 50 மாணவர்களும், கீழடி அகழ்வாராய்ச்சி, மதுரை கலைஞர் நூற்றாண்டு நூலகம் மற்றும் திருமலை நாயக்கர் மஹாலுக்கு 100 மாணவர்களும், பந்தல்குடி சுற்றுச்சூழல் பூங்கா, தூத்துக்குடி ஸ்டெம் பார்க்; மற்றும் துறைமுகத்திற்கு 100 மாணவர்களும் என மொத்தம் 250 மாணவர்கள் அறிவியல் களப்பயணம் செல்லும் 5 சுற்றுலா பேருந்துகளில் அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர்.இஸ்ரோவின் முக்கிய மையமான திருவனந்தபுரத்தில் உள்ள விக்ரம் சாராபாய் விண்வெளி மையத்தில்( VSSC ) ஏவுகணை வடிவமைப்பு, உந்துசக்திகள், திட உந்துவிசை தொழில்நுட்பம், காற்றியக்கவியல், காற்றியக்க கட்டமைப்பு மற்றும் காற்று வெப்ப அம்சங்கள், ஏவியனிக்ஸ், கணினி மற்றும் தகவல், இயந்திரவியல் போன்ற தொடர்புடைய தொழில்நுட்பங்களுக்கான ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு நடவடிக்கைகளை குறித்தும்,மதுரையில் உள்ள கலைஞர் நூற்றாண்டு நூலகத்தில் உள்ள 3.5 இலட்சத்திற்கு மேற்பட்ட புத்தகங்கள், குழந்தைகள் நூல், சிறுவர் திரையரங்கம், கலையரங்கம், மாதிரி வானூர்தி, எண்ணிம திரைகள், தமிழ் நூல்கள், ஆங்கில நூல்கள், ஆராய்ச்சி நூல்கள் , போட்டித் தேர்வுகளுக்கான நூலகப்பகுதி, பார்வையற்றவர்களுக்கான நூல்கள் மின்னூல், ஒலிநூல், மேற்கோள் நூல்கள் குறித்தும்,சிவகங்கை மாவட்டத்தில் உள்ள கீழடி அகழாய்வில் தமிழர்களின் பண்பாட்டின் முக்கியத்துவம் மற்றும் தொன்மை, நாகரீகம், கண்டெடுக்கப்பட்ட பொருட்கள் குறித்தும், திருமலை நாயக்கர் மஹாலில் உள்ள கட்டிட அமைப்புகள், கட்டடகலை, தொழிநுட்பங்கள் குறித்தும்,தூத்துக்குடியில் அமைக்கப்பட்டுள்ள பிரம்மாண்டமான ஸ்டெம் அறிவியல் பூங்காவில் மனிதனின் பரிணாம வளர்ச்சி, ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள விண்வெளி ஏவு மையத்தில் ராக்கெட் ஏவுதல மாதிரி, டைனோசர் உள்ளிட்ட பல்வேறு விலங்குகளின் உருவங்கள், அறிவியலில் இயற்பியல் கணக்குகளை செய்முறையாக செய்வது குறித்த மாதிரிகள், புவி வெப்பமாதல் உள்ளிட்ட பாதிப்புகளை விளக்கும் டிஜிட்டல் அரங்குகள், மாணவர்களுக்கு திரை காட்சிகள் மூலம் அறிவியல் குறித்து அறிவை வளர்ப்பதற்கான நவீன டிஜிட்டல் திரையரங்குகள் ஆகியவற்றையும்,பந்தல்குடியில் உள்ள ராம்கோ சுற்றுசூழலியல் மாணவர்களுக்கு இயற்கையை பாதுகாப்பது குறித்தும், பறவையினங்கள், பூச்சினங்கள், பட்டாம்பூச்சி இனங்கள் என காடுகளில் வாழும் உயிரினங்கள் குறித்தும், அவை எவ்வாறு மனிதன் வாழ்வியலில் முக்கியத்துவம் பெறுகின்றன என்பதை குறித்தும் மாணவர்கள் அறிந்து கொண்டு, அவர்களுக்கு ஒரு தூண்டுகோலாகவும், வழிகாட்டியாகவும் இந்த அறிவியல் களப்பயணம் முக்கியத்துவம் வாய்ந்ததாக இருக்கும்.இந்நிகழ்வின் போது, பள்ளி தலைமையாசிரியர், ஆசிரியர்கள், மாணவ, மாணவிகள் பலர் கலந்து கொண்டனர்.
விருதுநகர் மாவட்டம், திருச்சுழி வட்டாரம் கல்லூரணி ஊராட்சி, எஸ்.பி.கே.மேல்நிலைப்பள்ளியில் மத்திய அரசின்; நிதி ஆயோக் அமைப்பின் வாயிலாக தேர்வு செய்யப்பட்ட முன்னேற விழையும் வட்டாரமான திருச்சுழி வட்டாரத்தில் நிர்ணயிக்கப்பட்ட 6 இலக்குகளை அடைவதற்கான சம்பூர்ணதா அபியான் திட்டத்தினை மாவட்ட ஆட்சித்தலைவர் முனைவர் வீ.ப.ஜெயசீலன்., I A S அவர்கள் (05.07.2024) தொடங்கி வைத்தார்.பின்னர், திருச்சுழி வட்டாரத்தில் இத்திட்டத்தின் கீழ் வகுக்கப்பட்டுள்ள காரணிகளான சுகாதாரம், ஊட்டச்சத்து, விவசாயம், மகளிர் மேம்பாடு உள்ளிட்டவைகளில் இலக்கினை அடைவது குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் விதமாகவும், பொதுமக்கள்; தங்கள் பங்களிப்பை அளிக்கும் விதமாகவும் சிறப்பு கிராமசபைக் கூட்டம் நடைபெற்றது.தேசிய அளவில் முன்னேற விழைகிற மாவட்டங்களாக மத்திய அரசின் நிதி ஆயோக் அமைப்பினால் 112 பின்தங்கிய மாவட்டங்கள் தேர்வு செய்யப்பட்டு, அதில் தமிழ்நாட்டில் விருதுநகர் மாவட்டம் மற்றும் ராமநாதபுரம் மாவட்டங்கள் தேர்வு செய்யப்பட்டு, 81 குறியீடுகளை அடிப்படையாகக் கொண்டு, இலக்குகளை நிறைவேற்றும் விதமாக அதற்கான பணிகள் 2018 ஆம் ஆண்டு முதல் நடைபெற்று வருகிறது. இதில் பெரும்பாலான குறியீடுகளினுடைய இலக்குகள் நிறைவேற்றப்பட்டுள்ளன. அதனைத் தொடர்ந்து தற்போது தேசிய அளவில் 500 பின்தங்கிய வட்டாரங்கள் நிதி ஆயோக் அமைப்பின் வாயிலாக தேர்வு செய்யப்பட்டு, அதில் தமிழகத்தில் 16 வட்டாரங்கள் முன்னேற விழையும் வட்டாரங்களாக தேர்வு செய்யப்பட்டுள்ளது. விருதுநகர் மாவட்டத்தில் முன்னேற விழையும் வட்டாரமான திருச்சுழி வட்டாரம் தேர்வு செய்யப்பட்டுள்ளது. இதில் 39 காரணிகளை குறியீடுகளை அடிப்படையாகக் கொண்டு இலக்கினை அடைவதற்கான பணிகள்;; துவக்கி வைக்கப்பட்டுள்ளது.இதன் முதற்கட்டமாக சம்பூர்ணதா அபியான் திட்டத்தின் கீழ் விவசாயம், மருத்துவம், சுகாதாரம், ஊட்டச்சத்து, மகளிர் மேம்பாடு ஆகிய துறைகள் தொடர்புடைய ஆறு காரணிகளை 100 சதவிகிதம் இலக்கு நிர்ணயிக்கப்பட்டு, ஜூலை முதல் செப்டம்பர் மாதத்திற்குள் நிறைவு செய்திட சம்பூர்ணதா அபியான் திட்டத்தின் கீழ் இன்று பணிகள் துவக்கி வைக்கப்பட்டுள்ளது.மத்திய மாநில திட்டங்களை எல்லாம் சேகரித்து அனைத்து தரப்பு மக்கள், பெண்கள் குழந்தைகள், கர்ப்பிணி தாய்மார்கள் என மக்களினுடைய நலனுக்காக திட்டங்களை எல்லாம் முழுமையாக்க வேண்டும் என்பதற்காகத்தான் இந்த திட்டத்தை செயல்படுத்திக் கொண்டிருக்கிறார்கள். அதில் இன்று திருச்சுழி வட்டாரத்துக்குட்பட்ட பொது மக்களுக்கு ஆறு குறியீடுகள் முழுமை அடைய வைப்பதே இந்த திட்டத்தின் நோக்கமாகும்.இந்த திட்டங்களை நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டும். இதில் மக்கள் பங்கேற்பும் இருக்க வேண்டும். கருவுற்ற மூன்று மாதங்களுக்குள் பதிவு செய்யப்பட வேண்டும். ஏனென்றால் மூன்று மாதத்துக்குள் பதிவு செய்யும் பொழுது தான் அவர்களிடத்தில் இருக்கக்கூடிய ஹீமோகுளோபின் அளவு, ஊட்டச்சத்து குறைபாடுகள் என அனைத்தையும் சரி செய்து, பிரசவத்தின் போது ஏற்படும் சிக்கல்கள் சரிசெய்ய முடியும்.பெண் குழந்தைகளுக்கு இரத்த சோகை தவிர்க்கும் வகையில், அவர்களுக்கான ஊட்டச்சத்துக்களை உறுதி செய்ய வேண்டும். இரும்புச்சத்து குறைபாடுகள் இருப்பின், முறையாக கண்டறிந்து, அரசு மருத்துவமனைகளில் வழங்கப்படும் இரும்புச்சத்து மாத்திரைகளை உட்கொள்ள வேண்டும். 18 வயது முன்பாக குழந்தைகளுக்கு திருமணம் செய்து வைப்பது சட்டப்படி தவறாகும். அப்படி திருமணம் செய்து வைக்கும் பெற்றோர்கள் மீதும், திருமணம் செய்து கொண்ட ஆணின் மீதும் குற்ற வழக்கு பதிவு செய்யப்படுகிறது. எனவே, குழந்தை திருமணத்தை அனைத்து பெற்றோர்கள் தவிர்க்க வேண்டும். அவ்வாறு கண்டறியப்பட்டால் அவர்களின் மீது கடுமையான நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.மேலும், இரத்த அழுத்தம், நீரிழிவு நோய் ஏறக்குறைய மூன்றில் ஒருவருக்கு கண்டிப்பாக இருக்கிறது. 2030- ல் உலகத்திலே அதிகமாக சர்க்கரை நோய் கொண்ட நாடாக இந்தியா இருக்கும் என்று மருத்துவர்கள் கூறுகிறார்கள். இதற்கு காரணம் உணவு பழக்க வழக்கம். இரத்த அழுத்தம், நீரிழிவு என்பது ஒரு நோய் கிடையாது. உடல் செயலியில் இருக்கக்கூடிய ஒரு மாற்றம். முதலில் அதனை கண்டுபிடித்தது அதற்கென்று மருந்து மாத்திரைகள் எடுத்து கொள்ள வேண்டும். எனவே உயர் இரத்த அழுத்தத்தை கட்டுப்படுத்துவதற்கு 40 வயதிற்கு மேற்பட்டோர் வருடத்திற்கு இரண்டு முறை ரத்த அழுத்தத்தையும், சர்க்கரை நோய் பரிசோதனை செய்து கொள்ள வேண்டும்.பின்னர், விவசாயிகள் மண் பரிசோதனை செய்து, அதற்கு ஏற்றாற்போல் பயிர் செய்ய வேண்டும். மண்ணின் தன்மை, சத்துக்களுக்கு ஏற்ப உரம் இட வேண்டும். இதனால் மகசூல் அதிகமாக கிடைக்கிறது. எனவே, விவசாயிகள் அனைவரும் வேளாண்மை துறை அலுவலர்களை அணுகி பயன்பெறலாம்.நமது பகுதியில் மகளிர் சுய உதவி குழுக்கள் உள்ளன. அந்த சுய உதவி குழுக்களுக்கு சுழல் நிதி அரசு வழங்குகிறது. அந்த நிதியை பெற்று அதன் மூலம் தொழில் செய்து, தங்கள் பொருளாதாரத்தை உயர்த்தி கொள்ள வேண்டும். மகளிர் சுய உதவிக்குழுக்களுக்கு தொழில் தொடங்குவதற்காக பயிற்சிகளும் வழங்கப்பட்டு வருகின்றனர். இதனை பயன்படுத்தி கொள்ள வேண்டும்.இந்த ஆறு குறியீடுகளை அடுத்து வரக்கூடிய மூன்று மாதங்களில் முழுமை அடைய செய்ய வேண்டும். இதற்காக வட்டார அளவில் உள்ள அலுவலர்களை தொடர்பு கொண்டு அது குறித்து தெரிந்து பயனடையலாம் என மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் தெரிவித்தார்.இக்கூட்டத்தில், சம்பூர்ணதா அபியான் என்னும் முழுமையான இயக்கத்தின் கீழ், திருச்சுழி வட்டாரத்தில் முன்னேற்றம் காண்பதற்கு முழுமையான இயக்க பணிகளில் எனது பங்களிப்பை அளிப்பேன் என்ற உறுதிமொழியினை மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் தலைமையில் அனைவரும் எடுத்துக்கொண்டனர்.பின்னர், சம்பூர்ணதா இயக்கத்தின் விழிப்புணர்வு குறித்த கையெழுத்து இயக்கத்தினை மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் துவக்கி வைத்தார்.
விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டை சௌடாம்பிகா பொறியியல் கல்லூரியில் (05.07.2024) தூய்மை பாரத இயக்கம் (ஊரகம்) பகுதி-II சார்பில் திட மற்றும் திரவக்கழிவு மேலாண்மைத் திட்டத்தை சிறப்பாக செயல்படுத்துதல் தொடர்பாக அருப்புக்கோட்டை, காரியாபட்டி, நரிக்குடி ஊராட்சி ஒன்றியங்களைச் சேர்ந்த ஊராட்சி மன்றத் தலைவர்கள் மற்றும் ஊராட்சி செயலாளர்களுக்கான சிறப்பு பயிற்சி வகுப்பினை மாவட்ட ஆட்சித்தலைவர் முனைவர் வீ.ப.ஜெயசீலன், I A S., அவர்கள் தொடங்கி வைத்தார்.திடக்கழிவு மேலாண்மையில் தொடர்ச்சியான செயல்பாடு முக்கியம். விருதுநகர் மாவட்டத்தில் உள்ள 450 ஊராட்சிகளில், எந்த ஊராட்சியில் தலைவர்கள் மற்றும் ஊராட்சி செயலாளர்கள் தொடர்ச்சியாக செயல்படுகிறார்களோ அங்கு மாற்றம் வந்திருக்கின்றது.இந்தியாவினுடைய தலைநகராக இருக்கக்கூடிய டெல்லியில், சுற்றுச்சூழல் பிரச்சனை குறிப்பாக காற்றில் இருக்கக்கூடிய மாசின் காரணமாக நுரையீரல் பாதிப்பில் ஒருவருடைய சராசரி ஆயுள் காலம் சில ஆண்டுகள் குறைகிறது என்று ஆய்வுகள் தெரிவிக்கின்றன. நுரையீரல் சம்பந்தமான மருத்துவரிடம் போகக்கூடிய நோய்களின் எண்ணிக்கை ஒரு மாதத்திற்கு 100 பேர் இருந்தால் அது சராசரியாக 120 முதல் 130 நபராக உயர்கிறது என ஆய்வுகள் கூறுகின்றன. இதற்கு முக்கிய காரணம் நாம் எரிக்கக் கூடிய குப்பைகள்.சராசரியாக 10 வயதுக்குட்பட்ட குழந்தைகள் ஓர் ஆண்டுக்கு குறிப்பாக சுகாதார கேடுகளால் பரவக்கூடிய தொற்றுநோய் என்று சொல்லக்கூடிய வயிற்றுப்போக்கு, காலரா மாதிரியான நோய்களினால் வருடத்திற்கு குறைந்தபட்சம் 15 ல் இருந்து 20 நாட்கள் உடல் நிலை சரியில்லாமல் போகிறார்கள். இது எந்தெந்த ஊர்களில் எந்தெந்த இடங்களில் எல்லாம் குப்பையை முறையாக பராமரிக்கிறார்களோ அங்கு இந்த நாட்களினுடைய எண்ணிக்கை குறைவு. வயதானவர்கள், நோய் எதிரப்பு சக்தி குறைவாக இருப்பவர்களுக்கும் இந்த சுற்றுச்சூழல் பாதிப்பினால் நோய்களுக்கு ஆட்படுகின்றனர்.பொதுமக்களுக்கான பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி கொடுத்தாலும், அவர்களுக்கு ஆரோக்கியத்திற்கான வேலையை செய்வது மிக மிக முக்கியமானது. சுகாதாரம் பேணுவது மற்றும் குடிநீரை வழங்குதல் ஆகியவை உள்ளாட்சி அமைப்பினுடைய இரண்டு கைகள்.கடைகள், வணிக வளாகங்கள், பெரிய நிறுவனங்கள் அவர்களுடைய திடக்கழிவு மேலாண்மையை அவர்களே செய்ய வேண்டும். குப்பைகளை மறுசுழற்சி செய்ய வேண்டும்.குப்பைகள் கொட்டுவது, திறந்த வெளி மலம் கழித்தல், குப்பைகள் எரிப்பது குறித்த மக்களின் மனநிலையை மாற்றுவதற்கு தொடர்ச்சியான முயற்சிகளை மேற்கொள்ள வேண்டும். அப்போதுதான் மாற்றத்தை உருவாக்க முடியும். இந்தியாவைப் போன்ற சம வளர்ச்சி உள்ள நாடுகளில் கூட குப்பைகளை சிறப்பாக கையாளுகிறார்கள். நீங்கள் நினைத்தால் அது நம் நாட்டிலும் முடியும்.நம் கிராமத்திற்கு ஏதாவது நல்லது செய்ய வேண்டும் என்றால், மக்களிடையே குப்பை மேலாண்மை குறித்தும், குப்பை மேலாண்மை பழக்கவழக்கத்தை மாற்றுவதற்கும் முயற்சி செய்ய வேண்டும். பல கிராமங்களில் இது சிறப்பாக செய்திருக்கிறார்கள்.ஊராட்சிகளில் உள்ள காலி பணியிடங்களை நிரப்புவது, நிதி ஆதாரங்களை அதிகம் வழங்குவது, புதிய உபகரணங்களை வழங்குவது போன்ற காரணங்களை தாண்டி இவற்றையெல்லாம் விட திடக்கழிவு மேலாண்மையில் நீங்கள் வெற்றி பெற வேண்டும் என்றால் அதற்கு தொடர்ச்சியான செயல்பாடு முக்கியம்.இதெல்லாம் செய்ய வேண்டியது கோரிக்கையோ, வேண்டுகோளோ, அரசின் அறிவுறுத்ததோ அல்ல. இது சட்டபூர்வமானது. திடக்கழிவு மேலாண்மை சட்டத்தின்படி உள்ளாட்சி அமைப்புகள் திடக்கழிவு மேலாண்மையை முழுமையாக செய்வது, அவர்களுக்கான சட்டபூர்வமான கடமை. அந்த சட்டபூர்வமான கடமைகளை எந்த உள்ளாட்சி அமைப்புகள் செய்யவில்லையோ, அவர்களுக்கு தனிப்பட்ட விதத்தில் பலமுறை அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.இதற்கென்று தனியாக ஒரு உயர் நீதிமன்றத்தை போன்று அதிகாரம் உள்ள நீதி அமைப்பு இருக்கின்றது. அது பசுமை தீர்ப்பாயம். அந்த தீர்ப்பாயத்திற்கு ஓய்வு பெற்ற உயர்நீதிமன்ற தலைமை நீதிபதிகள் உறுப்பினர்களாக இருக்கிறார்கள். அவர்களுடைய பணி சுற்றுச்சூழல் சம்பந்தமான பிரச்சினைகளை தீவிரமாக ஆய்வு செய்து அதற்குரிய உத்தரவுகளை பிறப்பிப்பது.தினந்தோறும், செய்தித்தாள்கள், சமூக ஊடகங்களில் வரும் செய்திகளை பார்த்தால், அடிப்படை வசதிகள் மற்றும் சுற்றுச்சூழல் மாசுமாடு குறித்து தான் உள்ளது.எனவே, இதன் முக்கியத்துவத்தை புரிந்து கொண்டு செயலாற்ற வேண்டும். வந்திருக்கக்கூடிய ஊராட்சி தலைவர்களுக்கும், செயலாளர்களுக்கும் பொதுமக்களுக்கு செய்ய வேண்டிய சட்டப்பூர்வமான கடமைகள் மற்றும் அடிப்படை கடமை இந்த இரண்டும் இருக்கிறது என்பதை புரிந்து கொண்டு செயல்பட வேண்டும் என தெரிவித்தார்.