25 YEARS OF EXCELLENCE

சமீபத்திய நிகழ்வுகள்:
வெயில் தாக்கம்: ராஜபாளையத்தில் இளநீர் விலை கிடுகிடு உயர்வு. >> சிருங்கேரி ஸ்ரீ சாரதா பீடம், ஜகத்குரு ஸ்ரீ ஸ்ரீ விதுசேகரபாரதீ ஸ்வாமிகள் அவர்களின் வர்தந்தி பூஜை. >> இராஜபாளையம் மூத்தோர் நலச்சங்கம் மற்றும் மாண்புமிகு P.S. குமாரசாமி ராஜா நூற்றாண்டு திருமண மண்டபம் இணைந்து பெருமையுடன் கொண்டாடிய “சுதந்திர தினவிழா”. >> ராஜபாளையம் ரோட்டரி சங்கம், காவேரி மருத்துவமனை–திருநெல்வேலி இணைந்து நடத்திய இலவச இருதயப் பரிசோதனை முகாம். >> இராஜபாளையம் ரோட்டரி சங்கம் நாற்று இலக்கிய அமைப்பு இணைந்து வழங்கும் யானைகள் தின விழா கொண்டாட்டம் - 2026 >> ஆகஸ்ட் - 12 ,யானைகள் தின விழா முன்னிட்டு ,மாணவர்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்த ஒவியப் போட்டிகள். >> ஆடிப்பெருக்கு சிறப்பு வழிபாடு. >> தொடர்பு எல்லைக்கு வெளியே அடுக்குமாடி குடியிருப்பு வாசிகள்; அலைபேசி சிக்னல் இன்றி அவதி. >> வயல் தின விழா. >> ராஜபாளையம் தொழிலாளர் சங்கம் சார்பில், சமூக நலத்துறை அமைச்சர் ஜெகதீஸ்வரிக்கு பாராட்டு விழா >>


செய்தி மக்கள் தொடர்பு அலுவலகம் விருதுநகர் மாவட்டம்

Jan 12, 2026

அரசுப்பள்ளியில் பயிலும் மாணவர்களுக்கு அகில இந்திய நுழைவுத் தேர்வு(JEE) பயிற்சி வகுப்பின் நிறைவு விழாவில், மாணவர்களின் உயர்கல்விக்கு வழிகாட்டும் திசை திட்டம்.

விருதுநகர் மாவட்டம், மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் (10.01.2026) அரசுப்பள்ளியில் பயிலும் 65-மாணவர்களுக்கு இந்தியாவில் உள்ள தேசிய தொழில்நுட்பக் கழகம் (NIT) இந்திய தொழில்நுட்ப நிறுவனங்கள் (IIT) மற்றும் பிற பொறியியல் கல்லூரிகளில் இளங்கலை பொறியியல் படிப்புகளில் (B.E / B.Tech) சேர்க்கை பெறுவதற்காக 26.12.2025 முதல் 10.01.2026 வரை 15-நாட்கள் நடைபெற்ற அகில இந்திய நுழைவுத் தேர்வு(JEE) பயிற்சி வகுப்பின் நிறைவு விழா மாணவர்களின் உயர்கல்விக்கு வழிகாட்டும் திசை திட்டத்தினை தொடங்கி வைத்து, இலச்சினையை  மாவட்ட ஆட்சித்தலைவர் மரு.என்.ஓ.சுகபுத்ரா,I A S., அவர்கள் வெளியிட்டார்,தொடர்ந்து, தமிழ்நாடு அரசுப்பணியாளர் தேர்வாணையத்தால் நடத்தப்பெறும் தொகுதி-IV தேர்வில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பாராட்டுச் சான்றிதழ் மற்றும் கேடயங்கள் மற்றும் புத்தகங்களையும், வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சித்துறையின் மூலம் பயின்று காவலர் தேர்வில் வெற்றி பெற்று உடற்தகுதி தேர்விற்கு தயாராகும் 25-மாணவர்களுக்கு ஊட்டச்சத்து பொருட்கள் அடங்கிய தொகுப்பினையும் மாவட்ட ஆட்சித்தலைவர்அவர்கள் வழங்கினார். உங்களை சந்தித்ததில் மிகுந்த மகிழ்ச்சியடைகிறேன்.  மாணவர்களுக்கு 15-நாட்கள் நடைபெற்ற அகில இந்திய நுழைவுத் தேர்வு(JEE) பயிற்சி வகுப்பு பயனுள்ள வகையில் அமைந்திருக்கும் என்று நினைக்கிறேன். இதற்கு உறுதுணையாக நின்ற அனைத்து ஒருங்கிணைப்பாளர்களுக்கும், ஆசிரியர்களுக்கும் எனது நன்றியை தெரிவித்துக்கொள்கிறேன்.அரசு பள்ளிகளில் பயிலும் மாணவர்களுக்கு ஒரு வாய்ப்பினை ஏற்படுத்தி தருவதால் அம்மாணவர்கள் சாதிப்பார்கள் என்ற நம்பிக்கையோடும், அனைவரின் கூட்டு முயற்சியோடும் ஏற்படுத்தப்பட்டதே இப்பயிற்சி வகுப்பு.போட்டித்தேர்வுகள் எவ்வாறு இருக்கலாம், எவ்வாறு தயாராவது என்பதே பற்றி அறிந்து கொள்வதற்கான ஒரு வாய்ப்பு தான் இந்த பயிற்சி வகுப்புகள்.நாம் நல்ல நிலையில் இருந்தால் நம்மால் முடிந்த உதவிகளை மற்றவருக்கு செய்ய முடியும் என்று எண்ணுவதே மனித இயல்பு. அதற்கு, தகுந்த கல்வி சூழலை அமைத்துக் கொண்டு, நல்ல பணியில் அமர்ந்து மற்றவருக்கு உதவ வேண்டும் என்ற எண்ணத்தை வளர்ப்பதற்காக அமைக்கப்பட்டதே இந்நிகழ்ச்சி.ஒருங்கிணைப்பாளர்கள் மற்றும் ஆசிரியர்களின் உதவியோடு இப்பயிற்சி வகுப்பு 15-நாட்களில் வெற்றிகரமாக நிறைவு செய்யப்பட்டுள்ளது.  இதற்கு அடுத்தகட்டமாக தயாராவதற்கு ஒரு வருட பயிற்சி வகுப்புகள் திட்டமிடப்பட்டுள்ளன.          பன்னிரெண்டாம் வகுப்பு பயிலும் மாணவர்களுக்கு இக்கல்வியாண்டில் பயிற்சி வகுப்புகள் துவங்கப்படவுள்ளன. மிகப்பெரிய மாற்றத்தை உருவாக்கும் ஒரு ஆயுதம் தான் கல்வி. மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களால் மாணவர்களின் நலன் மற்றும் மேம்பாட்டிற்காக “நான் முதல்வன்” திட்டம் உட்பட பல்வேறு திட்டங்கள் தொடங்கப்பட்டு செயல்படுத்தப்பட்டு வருகிறது. இத்திட்டத்தின் முக்கிய நோக்கம், மாணவர்களின் திறமைகளை மேம்படுத்தி, நாட்டின் செழுமைக்காக அவர்களின் சிறந்த திறமையைக் கண்டறிய வேண்டும். மாணவர்களின் எதிர்கால நலனுக்காக மாணவர்களின் திறன், கல்வித்திறன் மற்றும் மறைந்திருக்கும் திறமை ஆகியவற்றை மேம்படுத்த வேண்டும் என்பதாகும்.இத்திட்டத்தின் கீழ் பள்ளி மாணவர்களுக்கு உயர்க்கல்வி படிப்புகள், அவை தொடர்பான வேலைவாய்ப்புகள் பற்றிய தகவல்களை எளிதில் பெறும் வகையிலும் மாணவர்களுக்கான நுழைவுத்தேர்வுகள், எதிர்கால வேலைவாய்ப்புகள், உயர்கல்வி பிரிவுகள் மற்றும்  படிப்புகள், வாய்ப்புகள் உள்ளிட்டவைகள் குறித்து மாணவர்கள்  தெரிந்துகொள்ளும் வகையில் இத்திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது.அந்த வகையில், ஒவ்வொரு பாடப்பிரிவிற்கும் 500 மாணவர்கள் என மொத்தமாக 1500 முதல் 1600 வரை மாணவர்கள் தேர்வு செய்யப்பட்டு, அம்மாணவர்களுக்கு தொடர்ச்சியாக பயிற்சிகள் நடத்தப்படவுள்ளன. மாணவர்களின் ஒரே குறிக்கோள் கல்வி பயில்வதே.மேலும், அம்மாணவர்களை தேர்வுக்கு எவ்வாறு தயார் செய்வது? தொலைவில் இருந்து வரும் மாணவர்களுக்கு போக்குவரத்து வசதி ஏற்பாடு செய்து தருவது, ஆசிரியர்களுக்கு பயிற்சி வழங்குவது என பல நோக்கங்களை கலந்துரையாடி ஒரே திட்டமாக ஏற்படுத்தப்பட்டுள்ளது.அந்த திட்டம் தான் திசை. இந்த திட்டமானது விருதுநகர் மாவட்டத்தில் உள்ள சாதிக்க விரும்பும் மாணவர்களுக்கு உதவிகரமானதாக அமையும். நாமும் நல்வழியில் சென்று, மற்றவருக்கு உதவி செய்ய வேண்டும் என்ற மனப்பாங்குடன் மாணவர்கள் செயல்பட வேண்டும் எனத் தெரிவித்தார்.தொடர்ந்து, மாணவர்கள் தனித்தனி குழுக்களாகப் பிரிந்து உயர் அலுவலர்களுடன் கலந்துரையாடினர். அலுவலர்கள் மாணவர்களுக்கு எழும் சந்தேகங்களை நிவர்த்தி செய்து, மாணவர்களின் உயர்கல்வி பயில்வதற்கு உரிய அறிவுரை மற்றும் ஆலோசனைகளை வழங்கினர்.இந்நிகழ்ச்சியில், துணை இயக்குநர்(திருவில்லிபுத்தூர் மேகமலை புலிகள் காப்பகம்) மரு.இரா.முருகன்,இ.வ.ப., மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் திரு.கு.அரவிந்தன், மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் திருமதி பிர்தௌஸ் பாத்திமா, மாவட்ட வேலை வாய்ப்பு அலுவலர் திருமதி சு.ஞானபிரபா, உதவி இயக்குநர் (சுரங்கம்) திருமதி சுகாதா ரஹீமா, அரசு அலுவலர்கள் மற்றும் மாணவர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

Jan 12, 2026

கூட்டுக்குடிநீர் திட்டத்தின் கீழ் நடைபெற்று வரும் பணிகள் தொடர்பான ஆய்வுக்கூட்டம் .

விருதுநகர் மாவட்ட ஆட்சியர் அலுவலகக் கூட்டரங்கில்  (10.01.2026) விருதுநகர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில், தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரியத்தின் சார்பில், (10.01.2026) கூட்டுக் குடிநீர் திட்டத்தின் கீழ் ரூ.708 கோடி மதிப்பில் நடைபெற்று வரும் தாமிரபரணி கூட்டுக் குடிநீர் திட்ட பணிகள் தொடர்பாக மாவட்ட ஆட்சித்தலைவர் மரு.என்.ஓ.சுகபுத்ரா,I A S., அவர்கள் தலைமையில், தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரிய மேலாண்மை இயக்குநர் திரு.சமீரன்,I A S., அவர்கள் தொடர்புடைய அரசு அலுவலர்களுடன் ஆய்வு மேற்கொண்டார்.விருதுநகர் மாவட்டம், இராஜபாளையம், ஸ்ரீவில்லிபுத்தூர், வத்திராயிருப்பு, விருதுநகர், சிவகாசி, சாத்தூர், வெம்பக்கோட்டை, அருப்புக்கோட்டை, திருச்சுழி, காரியாபட்டி மற்றும் நரிக்குடி ஒன்றியங்களைச் சார்ந்த 1,286 கிராமக்குடியிருப்புகள் மற்றும் தூத்துக்குடி மாவட்டம், கோவில்பட்டி மற்றும் கயத்தாறு ஒன்றியங்களைச் சார்ந்த 45 கிராம குடியிருப்புகளுக்கான தாமிரபரணி ஆற்றை நீராதாரமாகக் கொண்ட புதிய கூட்டுக் குடிநீர் திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது.விருதுநகர் மற்றும் தூத்துக்குடி மாவட்டங்களில் உள்ள 1,331 ஊரகக் குடியிருப்புகளுக்கு தாமிரபரணி ஆற்றினை நீராதாரமாகக் கொண்ட கூட்டுக் குடிநீர்த் திட்டமானது ஜல் ஜீவன் மிஷன் நிதி மூலம் நிறைவேற்றப்படவுள்ளது.இத்திட்டத்தில் விருதுநகர் மாவட்டத்தில் இராஜபாளையம், ஸ்ரீவில்லிபுத்தூர், வத்திராயிருப்பு, விருதுநகர், சிவகாசி, சாத்தூர், வெம்பக்கோட்டை, அருப்புக்கோட்டை திருச்சுழி, காரியாபட்டி மற்றும் நரிக்குடி ஒன்றியத்தைச் சார்ந்த 1,286 குடியிருப்புகள் மற்றும் தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி மற்றும் கயத்தாறு ஒன்றியத்தைச் சார்ந்த 45 குடியிருப்புகள் ஆக மொத்தம் 1,331 கிராம குடியிருப்புகள் பயன்பெற உள்ளன.இத்திட்டம் மூலம் விருதுநகர் மாவட்டத்தில் உள்ள மக்களுக்கு கிராம குடியிருப்புகளில் வசிக்கும் நபர் ஒருவருக்கு 55 லிட்டர் என்ற அளவில் குடிநீர் வழங்க வடிவமைக்கப்பட்டுள்ளது.இத்திட்டம் மூன்று சிப்பங்களாக பிரிக்கப்பட்டு, அதற்கான பணிகள் 88 சதவீதம் நிறைவடைந்துள்ள நிலையில், மீதமுள்ள பணிகளை விரைந்து முடிப்பது தொடர்பாக மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் தலைமையில், தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரிய மேலாண்மை இயக்குநர்  அவர்கள் ஆய்வு மேற்கொண்டார்.விருதுநகர் மாவட்டத்தில் கூட்டுக் குடிநீர் திட்டத்தின் கீழ் நடைபெற்று வரும் குடிநீர் திட்டப்பணிகளை உரிய காலத்திற்குள் முடித்து பொதுமக்களின் பயன்பாட்டிற்கு கொண்டு வர தொடர்புடைய அரசு அலுவலர்களுக்கு அறிவுரை மற்றும் ஆலோசனைகளை வழங்கினார்.இந்நிகழ்ச்சியில், தலைமை பொறியாளர் திரு.எம்.கணேஷ், மேற்பார்வை பொறியாளர் (தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரியம்) திரு.ஆர்.ராமசாமி மற்றும் அரசு அலுவலர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

Jan 10, 2026

தகவல் அறியும் உரிமைச் சட்டம் – 2005 தொடர்பான விழிப்புணர்வு நிகழ்ச்சி.

விருதுநகர் மாவட்ட ஆட்சியர் அலுவலகக் கூட்டரங்கில்  (09.01.2026) அனைத்துத்துறை பொதுத் தகவல் அலுவலர்களுக்கு, தகவல் அறியும் உரிமைச் சட்டம் – 2005 தொடர்பான விழிப்புணர்வு நிகழ்ச்சி மாவட்ட ஆட்சியர் மரு.என்.ஓ.சுகபுத்ரா, I AS., அவர்கள் முன்னிலையில், மாநில தகவல் ஆணையர் திரு.வி.பி.ஆர்.இளம்பரிதி அவர்கள் தலைமையில் நடைபெற்றது.அரசு அலுவலர்களுக்கான தகவல் அறியும் உரிமைச் சட்டம் (RTI) குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சிகள், வெளிப்படைத்தன்மை, பொறுப்புணர்வை அதிகரித்தல், குடிமக்கள் உரிமைகளைப் புரியவைத்தல் ஆகியவற்றை நோக்கமாகக் கொண்டு நடத்தப்படுகின்றது.விருதுநகர் மாவட்டத்தில் உள்ள அனைத்து துறைகளைச் சார்ந்த பொதுத்தகவல் அலுவலர்களுக்கும் தகவல் அறியும் உரிமைச் சட்டம்-2005 குறித்த வழிகாட்டு நெறிமுறைகள் மற்றும் விதிகள் குறித்து விவரிக்கப்பட்டது.மனுதாரர்கள் 6(1)-ன்படி கோரும் தகவல்கள் தங்கள் அலுவலகத்தை சார்ந்தது அல்ல என்றால் 5 நாட்களில் 6(3)-ன்படி உரிய பொதுத் தகவல் அலுவலருக்கு அனுப்ப வேண்டும். மனுதாரர்களுக்கும் இது குறித்து தெரிவிக்கப்பட வேண்டும். அரசு துறைகள் தங்கள் அலுவலகம் சார்ந்த தகவல் என்றால் 30 நாட்களுக்குள் தகவல்கள் வழங்க வேண்டும். தகவல்கள் வழங்கும் அலுவலர் அவரது பெயர் மற்றும் கையொப்பம், பொது தகவல் அலுவலரின் சீல் கட்டாயம் இட வேண்டும். மனுதாரர்களுக்கு மேல் முறையீட்டு அலுவலர் பெயர் மற்றும் முகவரி குறிப்பிட்டு தெரிவிக்கப்பட வேண்டும். பிரிவு 7(3)-ன்படி தகவல்கள் வழங்கும் நிலையில் பக்கத்திற்கு ரூ.2/-வீதம் கணக்கிட்டு பணம் செலுத்தும் வழி வகைகள் தெரிவிக்க வேண்டும்.          தகவல் பெறும் உரிமைச்சட்ட பிரிவு 5(3)-ன்படி பொது தகவல் அலுவலரிடம் தனக்கு வேண்டிய தகவல் தொடர்பாக விவரங்களை மனுதாரர் கோரி வரும்போது அவருக்கு தேவையான நியாயமான உதவிகளை பொது தகவல் அலுவலர் வழங்க வேண்டும். தவறான தகவல்கள் மற்றும் திசை திருப்பும் தகவல்கள் வழங்கக்கூடாது. கட்டாயம் தகவல் பெறும் உரிமைச்சட்டத்தின் கீழ் பெறப்படும் மனுக்களை பிரத்யேகமாக உள்ள தனிப்பதிவேடுகளில் பதிவு செய்ய வேண்டும்.பொது தகவல் அலுவலர் பெயர் மற்றும் மேல்முறையீட்டு அலுவலர் பெயர் குறிப்பிடப்பட்ட முகவரி பலகை தங்கள் அலுவலகத்தில் பார்வைக்கு வைக்கப்பட வேண்டும். ஆணையத்திலிருந்து விசாரணை அறிவிப்பு (சம்மன்) கிடைக்கப் பெற்றால் கட்டாயம் அரசு அலுவலர்கள் ஆணையம் முன்பு விசாரணைக்கு வருகை தர வேண்டும் எனத் தெரிவித்தார்.   தொடர்ந்து, நிலுவையிலுள்ள தகவல் அறியும் உரிமைச் சட்டம்-2005 வருவாய்த்துறை, கூட்டுறவுத்துறை, பள்ளிக்கல்வித்துறை, வட்ட வழங்கல் துறை ஆகிய துறைகளின் இரண்டாம் மேல்முறையீட்டு மனுக்கள் மீது அலுவலர்களிடம் விசாரணை நடைபெற்றது. இந்த விசாரணையின்போது 30 மேல்முறையீட்டு மனுக்கள் தொடர்பாக மனுதாரர்கள் மற்றும் தொடர்புடைய பொது தகவல் அலுவலர்கள் ஆகியோர்களிடம் விசாரணை நடைபெற்றது. விசாரணையின் முடிவில் பொது தகவல் அலுவலர்களுக்கு மாநில தகவல் ஆணையர் அவர்களால் தகவல் அறியும் உரிமைச் சட்டம் குறித்த அறிவுரைகள் வழங்கப்பட்டது.இந்நிகழ்ச்சியில், மாவட்ட வருவாய் அலுவலர் திருமதி ரா.ஆனந்தி, மாவட்ட கூடுதல் காவல் கண்காணிப்பாளர் திரு.கருப்பையா, மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் திருமதி பிர்தௌஸ் பாத்திமா, அனைத்துத் துறை பொதுத் தகவல் அலுவலர்கள் மற்றும் அரசு அலுவலர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

Jan 10, 2026

தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் உங்கள் கனவை சொல்லுங்கள் திட்டத்தினை அமைச்சர்கள் தொடங்கி வைத்தார்கள்.

தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள், திருவள்ளூர் மாவட்டம், பொன்னேரி வட்டம், பாடியநல்லூரில் (09.01.2026) உங்கள் கனவை சொல்லுங்கள் திட்டத்தினை துவக்கி வைத்தார். அதனைத்தொடர்ந்து, விருதுநகர் மாவட்டம், அரசு மருத்துவக் கல்லூரியில் மாவட்ட ஆட்சித்தலைவர் மரு.என்.ஓ.சுகபுத்ரா,I A S., அவர்கள் தலைமையில், விருதுநகர் சட்டமன்ற உறுப்பினர் திரு.ஏ.ஆர்.ஆர்.சீனிவாசன் அவர்கள், சிவகாசி மாநகராட்சி மேயர் திருமதி சங்கீதா இன்பம் அவர்கள் மற்றும் விருதுநகர் நகர்மன்றத் தலைவர் திரு.ஆர்.மாதவன் அவர்கள் முன்னிலையில்,வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத்துறை அமைச்சர் திரு.கே.கே.எஸ்.எஸ்.ஆர்.ராமச்சந்திரன் அவர்கள் மற்றும்  நிதி, சுற்றுச்சூழல் மற்றும் காலநிலை மாற்றத்துறை அமைச்சர் திரு.தங்கம் தென்னரசு அவர்கள் உங்கள் கனவை சொல்லுங்கள் திட்டத்தினை தொடங்கி வைத்து உங்கள் கனவை சொல்லுங்கள் திட்டத்தின்   தன்னார்வலர்களுக்கு கைப்பேசி இணைப்புகள்  மற்றும் கணக்கெடுப்பு பணிகள் மேற்கொள்வதற்கான அடையாள அட்டை, தொப்பி, கனவு அட்டை அடங்கிய தொகுப்பினை  வழங்கி பணிகளைத் தொடங்கி வைத்தார்கள்.உங்கள் கனவை சொல்லுங்கள் திட்டத்தின் கீழ், தமிழ்நாடு மகளிர் மேம்பாட்டு நிறுவனம் மூலம் உரிய பயிற்சி வழங்கப்பட்ட 50,000 தன்னார்வலர்கள் நியமிக்கப்பட்டு, அவர்கள் தமிழ்நாட்டில் கிராமப்புற மற்றும் நகர்ப்புற பகுதிகளில் உள்ள சுமார் 1.91 கோடி குடும்பங்களை நேரடியாக அவர்களின் இல்லங்களுக்கே சென்று சந்தித்து, பல்வேறு அரசுத்துறை நலத்திட்டங்களின் தற்போதைய நிலை, திட்டங்களில் செயல்திறன் மற்றும் தாக்கம், மக்களின் பூர்த்தி செய்யப்படாத தேவைகள், மக்களின் வளர்ந்து வரும் முன்னுரிமைகளை கண்டறிதல் உள்ளிட்ட 10 வகையான திட்டங்கள் அடங்கிய படிவத்தை பொதுமக்களிடம் வழங்குவர்.தன்னார்வலர்கள் தங்களுக்கு ஒதுக்கப்பட்டுள்ள ஒவ்வொரு வீட்டிற்கும் இரண்டு முறை செல்வர். முதல் முறை வீட்டிற்கு செல்லும் போது விண்ணப்ப படிவத்தினை குடும்பத் தலைவர் / உறுப்பினரிடம் வழங்குவர். இணைக்கப்பட்டுள்ள அவ்விண்ணப்பத்துடன் அரசு திட்டங்களின் பெயர் பட்டியல் விவரங்களை அவர்களிடம் தெரிவித்து, படிவத்தினை பூர்த்தி செய்து தரும்படி கோருவர்.இரண்டு நாட்களுக்குப் பிறகு ஒவ்வொரு வீட்டிற்கும் சென்று பூர்த்தி செய்யப்பட்ட படிவத்தினை சரிபார்த்து TNeGA மூலம் வடிவமைக்கப்பட்ட கைபேசி செயலியில் பதிவேற்றம் செய்வர். கைபேசி செயலியில் பதிவேற்றியப் பின்னர் அக்குடும்பத்திற்கு தனித்துவமான அடையாள எண்ணுடன் கூடிய கனவு அட்டையினை வழங்குவர். இந்த அட்டை மூலம் www.uks.tn.gov.in என்ற இணையதளத்தில் தங்களது கனவு / கோரிக்கையின் நிலை குறித்து தெரிந்துக் கொள்ளலாம்.கடந்த ஐந்து ஆண்டுகளில் அமல்படுத்தப்பட்ட பல்வேறு அரசு திட்டங்களில் பயனடைந்துள்ள பயனாளிகளின் தரவுகள் மற்றும் விவரங்களை உறுதிப்படுத்தவும். திட்டங்களின் தற்போதைய செயல்பாட்டு நிலை குறித்து பொதுமக்களின் கருத்தினை அறியவும். மக்களின் எதிர்கால கனவுகள் மற்றும் தேவைகளைக் கண்டறிந்து பொதுமக்களுக்கான எதிர்காலத்திட்டங்களை செயல்படுத்துவதே இத்திட்டத்தின் முக்கிய நோக்கமாகும்.அந்த வகையில், விருதுநகர் மாவட்டத்தில் உள்ள 5,42,842 குடும்ப அட்டைதாரர்களின் இல்லங்களுக்கே நேரடியாகச் சென்று தன்னார்வலர்கள் மூலம் உங்கள் கனவைச் சொல்லுங்கள் திட்டத்தின் கீழ் கணக்கெடுப்பு பணிகள் நடைபெற உள்ளது.          இந்த கணக்கெடுப்பு பணிகளில், மகளிர் திட்ட தன்னார்வலர்கள், இல்லம் தேடிக்கல்வித் திட்ட தன்னார்வலர்கள், தூய்மை பணியாளர்களை ஊக்குவிப்போர்கள், டெங்கு கொசு ஒழிப்பு பணியாளர்கள் உட்பட 1500 பணியாளர்களும், ஊரக வளர்ச்சித்துறை சார்ந்த 588 மேற்பார்வையாளர்கள் என மொத்தம் 2,088 பணியாளர்கள் ஈடுபடுத்தப்படவுள்ளனர்.எனவே, பொதுமக்கள் அனைவரும் உங்கள் கனவைச் சொல்லுங்கள் திட்டத்தின் கீழ் நடைபெறக்கூடிய இந்த கணக்கெடுப்பு பணிகளுக்கு முழு ஒத்துழைப்பு நல்கி இந்த திட்டம் வெற்றியடைவதற்கு உறுதுணையாக இருக்க வேண்டும்.இந்நிகழ்ச்சியில், திட்ட இயக்குநர் (தமிழ்நாடு மாநில ஊரக / நகர்ப்புர வாழ்வாதார இயக்கம்) திரு.வீ.கேசவதாசன் அவர்கள், உதவி திட்ட அலுவலர்கள், உள்ளாட்சி பிரதிநிதிகள், அரசு அலுவலர்கள் மற்றும் தன்னார்வலர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

Jan 10, 2026

வேலைவாய்ப்பு அலுவலகத்தில் பதிவு செய்து வேலைவாய்ப்பற்ற இளைஞர்கள் மற்றும் மாற்றுத்திறனாளிகள் உதவித்தொகை பெற விண்ணப்பிக்கலாம்.

மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தில் தங்களது கல்வித் தகுதியினை பதிவு செய்து வேலைவாய்ப்பிற்காக காத்துக் கொண்டிருக்கும் பதிவுதாரர்களுக்கு வேலைவாய்ப்பற்றோர் உதவித் தொகை வழங்கப்பட உள்ளது. விண்ணப்பதாரர்கள் பின்வரும் தகுதிகளை பெற்றிருக்க வேண்டும். வயது வரம்பானது தாழ்த்தப்பட்ட மற்றும் பழங்குடியினருக்கு 45 வயது மிகாமலும், இதர வகுப்பினர் 40 வயது மிகாமலும் இருத்தல் வேண்டும்.  தங்களது பெயரில் தேசியமயமாக்கப்பட்ட வங்கியில் கணக்கினை துவக்கியிருத்தல் வேண்டும். மேலும், கல்வித் தகுதியினை பதிவு செய்து 5 ஆண்டுகள் நிறைவடைந்திருக்க வேண்டும். குடும்ப ஆண்டு வருமானம் ரூ.72,000/- மிகாமல் இருத்தல் வேண்டும்.        பத்தாம் வகுப்பு தோல்வியுற்றோருக்கு மாதந்தோறும் ரூ.200/- மும், பத்தாம் வகுப்பு தேர்ச்சி மாதந்தோறும் ரூ.300/- மும், பன்னிரெண்டாம் வகுப்பு / பட்டயப்படிப்பு முடித்தவர்களுக்கு மாதந்தோறும் ரூ.400/- மும், பட்டப்படிப்பு முடித்தவர்களுக்கு மாதந்தோறும் ரூ.600/- மும் என 3 ஆண்டுகளுக்கு உதவித்தொகை வழங்க நிர்ணயிக்கப்பட்டுள்ளது.                  எனவே, உதவித் தொகைக்கு விண்ணப்பிக்க விரும்புபவர்கள் விண்ணப்பத்தினை மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்திலோ அல்லது www.tnvelaivaaippu.gov.in என்ற இணையதளத்தில் பதிவிறக்கம் செய்தோ,அதனை பூர்த்தி செய்து வருவாய் ஆய்வாளரிடம் கையொப்பம் பெற்று வேலைவாய்ப்பு அடையாள அட்டை, அனைத்து அசல் சான்றுகள், ஆதார் அட்டை,குடும்ப அட்டை மற்றும் தேசியமயமாக்கப்பட்ட வங்கி கணக்குப்புத்தகம் ஆகியவற்றுடன் அலுவலக வேலைநாட்களில் விண்ணப்பத்தினை விருதுநகர் மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தில் சமர்ப்பிக்க வேண்டும்.மேற்கண்ட உதவித் தொகை காலாண்டு தோறும் கணக்கீடு செய்து நேரடியாக பயனாளிகளது வங்கி கணக்கில் வரவு வைக்கப்படும்.மாற்றுத்திறனாளிகளுக்கு மாதம் தோறும் உதவித்தொகை: மாற்றுத்திறனாளிகள் உதவித்தொகை பெற பின்வரும் தகுதிகளை பெற்றிருக்க வேண்டும். கல்வித் தகுதியினை பதிவு செய்து ஓராண்டு நிறைவடைந்திருந்தால் போதுமானது. மாற்றுத்திறனாளிக்கான தேசிய அடையாள அட்டை பெற்று வேலைவாய்ப்பு அலுவலகத்தில் பதிவு செய்திருத்தல் வேண்டும். வருமான உச்ச வரம்பு கிடையாது.பத்தாம் வகுப்பு  மற்றும் அதற்கு கீழ் பதிவு செய்தவர்களுக்கு மாதந்தோறும் ரூ.600/- மும், மேல்நிலைக்கல்வி தேர்ச்சி பெற்று பதிவு செய்தவர்களுக்கு மாதந்தோறும் ரூ.750/- மும், பட்டப்படிப்பு தேர்ச்சி பெற்று பதிவு செய்தவர்களுக்கு மாதந்தோறும்ரூ.1000/- மும் உதவித்தொகை வழங்க நிர்ணயிக்கப்பட்டுள்ளது.வயது உச்சவரம்பின்றி 10 ஆண்டுகள் வரை மாற்றுத்திறனாளிகள் உதவித் தொகை பெறலாம்.வேலைவாய்ப்பு அடையாள அட்டை, அனைத்து அசல் சான்றுகள், மாற்றுத்திறனாளி அடையாள அட்டை, ஆதார் அட்டை,ஸ்மார்ட் கார்டு மற்றும் தேசியமயமாக்கப்பட்ட வங்கி கணக்குப்புத்தகம் ஆகியவற்றுடன் வேலைவாய்ப்பற்றோர் உதவித் தொகை விண்ணப்பத்தினை அலுவலக வேலைநாட்களில் விருதுநகர் மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தில் சமர்ப்பிக்க வேண்டும் மேற்கண்ட உதவித் தொகை மாதம் தோறும் கணக்கீடு செய்து நேரடியாக பயனாளிகளது வங்கி கணக்கில் வரவு வைக்கப்படும்.மேலும், உதவித் தொகை பெற்றால் வேலைவாய்ப்பு எந்தவிதத்திலும் பாதிக்கப்படாது.தினசரி பள்ளி, கல்லூரி சென்று பயில்பவராக இருத்தல் கூடாது.சுய தொழில் செய்பவராகவோ இருத்தல் கூடாது. அரசிடமிருந்து வேறு எந்த வகையிலாவது உதவித்தொகை பெறுபவராகவோ, ஊதியம் பெறும் பணியிலோ இருத்தல் கூடாது.  இதற்கு பயணப்படி எதுவும் வழங்கப்படமாட்டாது.ஏற்கனவே இவ்வலுவலகத்தில் உதவித் தொகை விண்ணப்ப படிவம் பெற்று சென்றுள்ள பதிவுதாரர்கள் தங்களது விண்ணப்ப படிவத்தினை பூர்த்தி செய்து ஒப்படைக்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.  இத்திட்டம் ஏற்கனவே நடைமுறையில் உள்ள அரசு திட்டம் என்பதால், ஏற்கனவே முழுமையாக உதவித் தொகை பெற்றுள்ள பயனாளிகள் மீண்டும் விண்ணப்பிக்க தேவையில்லை எனவும் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.  வேலைவாய்ப்பற்றோர் உதவித் தொகை பெறும் மாற்றுத்திறனாளி பயனாளிகள் தொடர்ச்சியாக உதவித் தொகை பெற சுய உறுதிமொழி ஆவணம் ஒவ்வொரு ஆண்டும் சமர்ப்பிக்கப்பட வேண்டும். ஏற்கனவே சுய உறுதிமொழி ஆவணம் அளித்திருப்பின் அலுவலகம் வர தேவையில்லை. எனவே, வேலைவாய்ப்பற்றோர் மற்றும் மாற்றுத்திறனாளிகள் இத்திட்டத்தின் கீழ் விண்ணப்பித்து பயனடையுமாறு மாவட்ட ஆட்சித்தலைவர் மரு.என்.ஓ.சுகபுத்ரா,I A S,. அவர்கள் தெரிவித்துள்ளார்.

Jan 09, 2026

அனைத்து அரிசி குடும்ப அட்டைதாரர்கள் மற்றும் முகாம்வாழ் இலங்கை தமிழர்கள் குடும்பங்களுக்கு பொங்கல் சிறப்பு பரிசுத் தொகுப்பு .

விருதுநகர் மாவட்டம், பாலவநத்தம் தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்க வளாகத்தில்  (08.01.2026) பொங்கல் திருநாள்-2026 ஐ முன்னிட்டு, கூட்டுறவுத் துறையின் மூலம் அனைத்து அரிசி குடும்ப அட்டைதாரர்களுக்கும் பொங்கல் சிறப்பு பரிசுத் தொகுப்புடன்(ஒரு கிலோ பச்சரிசி, ஒரு கிலோ சர்க்கரை, ஒரு முழுக்கரும்பு, இலவச வேட்டி, சேலை) ரூ.3000/- ரொக்கத்தினை மாவட்ட ஆட்சித்தலைவர் மரு.என்.ஓ.சுகபுத்ரா,I A S., அவர்கள் தலைமையில்,  வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத்துறை அமைச்சர் திரு.கே.கே.எஸ்.எஸ்.ஆர்.ராமச்சந்திரன் அவர்கள் வழங்கி தொடங்கி வைத்தார். தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களின் அறிவிப்பிற்கு இணங்க 2026 ஆம் ஆண்டு தமிழ்நாடு மக்கள் சிறப்பாக கொண்டாடிட அனைத்து அரிசி குடும்ப அட்டைதாரர்கள் மற்றும் இலங்கைத் தமிழர் முகாம்களில் வசிக்கும் குடும்பத்தினருக்கு பொங்கல் பரிசுத்தொகுப்பாக ஒரு கிலோ பச்சரிசி, ஒரு கிலோ சர்க்கரை, ஒரு முழுக்கரும்பு, இலவச வேட்டி, சேலை மற்றும் ரூ.3000/- ரொக்கப்பணம் சேர்த்து இன்று முதல் மாநிலத்தில் உள்ள அனைத்து நியாயவிலைக்கடைகளிலும் வழங்கப்பட உள்ளது.  இதன்மூலம் தமிழ்நாடு முழுவதும் அரிசி பெறும் 2,22,72,019 குடும்ப அட்டைதாரர்கள், பொங்கல் பரிசுத்தொகுப்பு பெற உள்ளனர். அதன்படி, விருதுநகர் மாவட்டத்தில், கூட்டுறவுத்துறை மூலம் 5,64,349 குடும்ப அட்டைதாரர்களுக்கும், தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழகம் மூலம் 34,924 குடும்ப அட்டைதாரர்களுக்கும், இலங்கை தமிழர் முகாம்களில் உள்ள 1,062 குடும்ப அட்டைதாரர்களுக்கும், 3,704 மகளிர் குடும்ப அட்டைகள் என மொத்தம் 6,04,039 குடும்ப அட்டைதாரர்களுக்கும் பொங்கல் சிறப்பு பரிசுத்தொகுப்பு வழங்கும் பணிகள் தொடங்கி வைக்கப்பட்டு நடைபெற்று வருகிறது. இப்பணி தொடர்ந்து நடைபெற்று பொங்கல் திருநாளுக்கு முன்னரே சம்மந்தப்பட்ட நியாய விலைக்கடைகள் மூலம் அனைத்து அரிசி குடும்ப அட்டைதாரர்களுக்கு வழங்கப்படும்.இந்த ஆண்டு பொங்கல் மகிழ்ச்சியான பொங்கல் நாளாக அமைய வேண்டும் என்பதற்காக உங்களுக்கு ரூ.3,000/-ரொக்கமாகவும், 1 கிலோ பச்சரிசி, 1கிலோ சக்கரை, 1 முழுக்கரும்பு உள்ளிட்டவைகளை நான்கு நாட்களுக்குள் வழங்குமாறு மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் அறிவுறுத்தியுள்ளார்கள்.  ஒரு குடும்பத்தில் குடும்பத்தலைவரை போல, தமிழ்நாட்டின் தலைவராக இருக்கக்கூடிய மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் நிதிநிலையை சிறப்பாக கையாண்டு, திட்டங்களை செயல்படுத்தி வருகிறார். அந்த வகையில் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு ரூ.3000/- ரொக்கத்துடன் பொங்கல் பரிசு தொகுப்பினை வழங்க ஆணையிட்டுள்ளார்கள்.  கலைஞர் மகளிர் உரிமைத்தொகைக்கு விண்ணப்பித்த விடுபட்ட தகுதியான பெண்களுக்கு உரிமைத்தொகைகள் வழங்கப்பட்டுள்ளன. மேலும், அதிலும் விடுபட்ட தகுதியானவர்களுக்கு வழங்குவதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. அரசாங்கத்தின் அனைத்து வகையான திட்டங்களும் அனைவரையும் சென்றடைய வேண்டும் என்ற நோக்கத்துடன் மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் செயல்பட்டு வருகிறார். அத்தகைய முதலமைச்சர் அவர்களுக்கு நாம் அனைவரும் உறுதுணையாக நிற்க வேண்டும். அனைவருக்கும் பொங்கல் வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கிறேன் என தெரிவித்தார்.இந்நிகழ்ச்சியில், அருப்புக்கோட்டை வருவாய் கோட்டாட்சியர் திரு.மாரிமுத்து, வட்டாட்சியர், அரசு அலுவலர்கள் மற்றும் பயனாளிகள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

Jan 09, 2026

சிவகாசி அய்ய நாடார் ஜானகி அம்மாள் கல்லூரியில் தேசிய பேரிடர் மீட்புப் படை சார்பாக சமூக விழிப்புணர்வு "Familiarization And Mock Exercise scheme" ஒத்திகை பயிற்சி நடைபெற்றது.

விருதுநகர் மாவட்டம், சிவகாசி அய்ய நாடார் ஜானகி அம்மாள் கல்லூரியில் (07.01.2025) அன்று தேசிய பேரிடர் மீட்புப் படை (NDRF) சார்பாக பழக்கப்படுத்தல் மற்றும் மாதிரிப் பயிற்சித் திட்டம்(Familiarization And Mock Exercise scheme) மூலம்  சமூக விழிப்புணர்வு நிகழ்ச்சி  நடைபெற்றது.தேசிய பேரிடர் மீட்புப் படை (NDRF) 4-வது படையணியிலிருந்து (அரக்கோணம்) ஒரு குழு, விருதுநகர் மாவட்டத்தில் பழக்கப்படுத்தல் மற்றும் மாதிரிப் பயிற்சித் திட்டம்(Familiarization And Mock Exercise scheme) மூலம்  பேரிடர் முன்னெச்சரிக்கை மற்றும் விழிப்புணர்வு நடவடிக்கைகளை மேற்கொள்ள வருகை தந்துள்ளது.இதன் ஒரு பகுதியாக பள்ளிகள், கல்லூரிகள், பாதிப்புக்குள்ளாகும் இடங்கள், அபாயகரமான இரசாயன விழிப்புணர்வு நிகழ்ச்சி (Community Awareness Programme – CAP)  உள்ளிட்ட பல்வேறு பேரிடர் சார்ந்த செயல்பாடுகள் மேற்கொள்ளப்படவுள்ளது. அந்தத் திட்டத்தின் ஒரு பகுதியாக, 07.01.2026 அன்று சிவகாசி, அய்ய நாடார் ஜானகி அம்மாள் கல்லூரியில் அணித் தலைவர் SI/Exe திரு.எஸ்.ரத்னகுமார் அவர்கள் தலைமையில் 4 பேர் கொண்ட குழுவின் சமூக விழிப்புணர்வு நிகழ்ச்சி (Community Awareness Programme – CAP) நடைபெற்றது.இந்நிகழ்ச்சியில் பேரிடரின் அறிமுகம், வகைகள் மற்றும் விளைவுகள், தேசிய பேரிடர் மீட்புப் படையின் (National Disaster Response Force) பங்கு மற்றும் பொறுப்புகள், முதலுதவி பயிற்சி, தூக்கி எடுத்துச் செல்லும் முறைகள், இரத்தப்போக்கு கட்டுப்பாடு, கார்டியோபுல்மோனரி ரெசசிட்டேஷன் (Cardiopulmonary Resuscitation), "Foreign Body Airway Obstruction" "அந்நியப் பொருள் சுவாசக் குழாய் அடைப்பு" FBAO, ஸ்பிளிண்டிங், டிரையாஜ், தற்காலிக ஸ்ட்ரெச்சர்கள் மற்றும் மிதக்கும் சாதனங்கள் (லைப் ஜாக்கெட், லைப் புய்) நிலநடுக்கம் - முன்/நேரம்/பின் செய்ய வேண்டியவை மற்றும் தேடல் முறைகள், மௌசம் சாசெட், தாமினி, பூகம்ப செயலிகள் தீ பாதுகாப்பு, வெள்ள மீட்பு, வெப்ப அலை, விஷமயக்கம் மற்றும் இரசாயன, உயிரியல், கதிரியக்க மற்றும் அணுசக்தி பாதுகாப்பு (CBRN)  அவசர நிலைகளில் மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கைகள் குறித்து விளக்கப்பட்டது.இந்த சமூக விழிப்புணர்வு நிகழ்ச்சியில் மொத்தம் 350 க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டு பயனடைந்தனர்.

Jan 09, 2026

கதர் மற்றும் கிராமப் பொருட்கள் உற்பத்தி மற்றும் விற்பனை குறித்து, தமிழ்நாடு கதர் கிராமத் தொழில் வாரிய தலைமை செயல் அலுவலர் அவர்கள் ஆய்வு மேற்கொண்டார்.

விருதுநகர் மாவட்ட ஆட்சியர் அலுவலகக் கூட்டரங்கில் (08.01.2026) மாவட்ட ஆட்சித்தலைவர் மரு.என்.ஓ.சுகபுத்ரா,I A S,. அவர்கள் முன்னிலையில், தமிழ்நாடு கிராம தொழில் வாரியம் தலைமைச் செயல் அலுவலர் திரு.வ.சம்பத்,I A S., அவர்கள்  தலைமையில் தமிழ்நாடு கதர் கிராமத் தொழில் வாரியத்தால் உற்பத்தி செய்யப்படும் கதர் மற்றும் கிராம பொருள்கள் விற்பனையை மேம்படுத்துவது தொடர்பாக அனைத்துத்துறை அலுவலருடன் கலந்தாய்வு கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்தில், கதர் வாரியத்தில் உற்பத்தி செய்யப்படும் கதர் மற்றும் கிராமப் பொருட்கள் மற்றும் பனை சார்ந்த பொருட்கள் விற்பனையை மேம்படுத்த ஒத்துழைப்பு வழங்குவது குறித்து அனைத்துத்துறை சார்ந்த அலுவலர்களுக்கு வலியுறுத்தப்பட்டது.மேலும் பாரதப் பிரதமரின் வேலைவாய்ப்பு உருவாக்கும் திட்டத்தின் கீழ் கடனுதவி வழங்குவது தொடர்பாக மாவட்ட முன்னோடி வங்கி மேலாளர், மாவட்ட தொழில் மையம் பொது மேலாளர் உள்ளிட்ட அலுவலருடன் ஆலோசனை மேற்கொள்ளப்பட்டது.முன்னதாக திருவில்லிபுத்தூர் மாரியம்மன் எண்ணெய் உற்பத்தியாளர் கூட்டுறவு சங்கம், எழுது பொருள் மற்றும் அச்சு தொழிற் கூட்டுறவு சங்கம் ஆகியவற்றை தமிழ்நாடு கிராம தொழில் வாரியம் தலைமைச் செயல் அலுவலர்  அவர்கள் பார்வையிட்டு ஆய்வு செய்தார்இக்கூட்டத்தில், மாவட்ட வருவாய் அலுவலர் திருமதி ஆனந்தி, மண்டல துணை இயக்குநர்(கதர் கிராமத் தொழில்கள்) திருமதி சே.பாரதி, உதவி இயக்குநர்(மதுரை, கதர் கிராம தொழில்கள்) திரு.எபனேசர் மற்றும் பல்வேறு துறை சார்ந்த அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

Jan 09, 2026

பொங்கல் திருநாளை முன்னிட்டு திருநெல்வேலி மண்டலக் கலை பண்பாட்டு மையம் வாயிலாக, 15.01.2026 மற்றும் 16.01.2026 ஆகிய இரண்டு நாட்கள், விருதுநகர், தேசப்பந்து திடலில் பொங்கல் விழா சிறப்பாக நடைபெறவுள்ளது .

தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களால், சென்னையில் சங்கமம், நம்ம ஊரு திருவிழா 14.01.2026 அன்று தொடங்கி வைக்கப்பட்டு சென்னையில் மக்கள் கூடும் 20 இடங்களில் 15.01.2026 முதல் 18.01.2026 வரை பாரம்பரிய நாட்டுப்புறக் கலைகள் மற்றும் செவ்வியல் கலை நிகழ்ச்சிகள் நடைபெறவுள்ளது.அதனைத் தொடர்ந்து பொங்கல் விழாவினை கலை பண்பாட்டுத் துறை, திருநெல்வேலி மண்டலக் கலை பண்பாட்டு மையம் வாயிலாக, 15.01.2026 மற்றும் 16.01.2026 ஆகிய இரண்டு நாட்கள், விருதுநகர், தேசப்பந்து திடலில் பொங்கல் விழா சிறப்பாக நடைபெறவுள்ளது.இவ்விழாவில் மக்கள் விரும்பும்  வகையில் பாரம்பரியமிக்க கிராமியக் கலை நிகழ்ச்சிகள் சுமார் 100 கலைஞர்களைக் கொண்டு நடத்தப்படவுள்ளது. பொங்கல் விடுமுறை நாட்களில் நடைபெறும் இவ்விழாவினை பொதுமக்கள் கண்டுகளிக்குமாறு மாவட்ட ஆட்சித்தலைவர் மரு.என்.ஓ.சுகபுத்ரா,I A S., அவர்கள் தெரிவித்துள்ளார்.

Jan 09, 2026

முதலமைச்சர் இளைஞர் விளையாட்டு திருவிழா – “இது நம்ம ஆட்டம்-2026”

 தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் இளையதலை முறையினரின் சமூக முன்னேற்றம், உடற்கல்வி, விளையாட்டு, சமூக இணைப்பு மற்றும் உடல்-மன ஆரோக்கியத்தை வலுப்படுத்தும் நோக்கில் 22.1.2026  முதல்  8.2.2026 வரை தமிழ்நாடு முழுவதும் ஊராட்சி ஒன்றிய அளவில், மாவட்ட அளவில் மற்றும் மாநில அளவில் “முதலமைச்சர்  இளைஞர் விளையாட்டு  திருவிழா – ‘இது  நம்ம ஆட்டம் 2026’ போட்டிகள் நடத்த உத்தரவிட்டுள்ளதன் அடிப்படையில் விருதுநகர் மாவட்டத்தினைச் சார்ந்த அனைத்து (11தொகுதிகள்) ஊராட்சி ஒன்றிய அளவில் விளையாட்டுப்போட்டிகள் நடைபெற உள்ளது. இந்த விளையாட்டுப் போட்டிகளில் தனிநபர் மற்றும் குழுப்போட்டிகளில் முதல் இடம் பெறுபவருக்கு தலா ரூ.3,000/- பரிசுத்தொகையும், இரண்டாம் இடம்பெறுபவருக்கு தலா ரூ.2,000/- மற்றும் மூன்றாம் இடம் பெறுபவருக்கு தலாரூ.1,000/- பரிசுத்தொகையும், மாவட்ட அளவில் தனிநபர் மற்றும் குழுப்போட்டிகளில் முதல் இடம் பெறுபவருக்கு தலா ரூ.6,000/- பரிசுத்தொகையும், இரண்டாம் இடம் பெறுபவருக்கு தலா ரூ.4,000/- மற்றும் மூன்றாம் இடம்பெறுபவருக்கு தலா ரூ.2,000/- பரிசுத் தொகையும், மாநில அளவில், அணிபிரிவில் முதல் இடம் பெறுபவருக்கு தலா ரூ.75,000/- பரிசுத்தொகையும், இரண்டாம் இடம் பெறுபவர்களுக்கு தலா ரூ.50,000/- மற்றும் மூன்றாம் இடம்பெறுபவர்களுக்கு தலா ரூ.25,000/- பரிசுத்தொகையும் வழங்கப்பட உள்ளது.அதன்படி, விருதுநகர் மாவட்டத்திலுள்ள அனைத்து (11) ஊராட்சி ஒன்றியங்களிலும் 16 வயது முதல் 35 வயது வரையிலான தகுதியுடைய அனைத்து இளைஞர்களும் பங்கேற்கும் வகையில் ஒன்றிய அளவிலான போட்டிகள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. ஒவ்வொரு ஊராட்சி ஒன்றியத்திலும் முதல் இடம் பெறும் வீரர், வீராங்கனைகள் மற்றும் அணிகள் மட்டுமே மாவட்ட அளவிலான போட்டிகளில் கலந்துகொள்ள தகுதி பெறுவர். ஒவ்வொரு ஊராட்சி ஒன்றியத்திலும் முதல் இடம் பெறும்வீரர், வீராங்கனைகள் மற்றும் அணிகள் மட்டுமே மாவட்ட அளவிலான போட்டிகளில்  கலந்து கொள்ள  தகுதி பெறுவர்.ஊராட்சி ஒன்றிய மற்றும் மாவட்ட அளவில் தடகளம் - 100 மீட்டர் மற்றும் குண்டு எறிதல், கபாடி, வாலிபால், கேரம், கயிறு இழுத்தல் போட்டி, ஸ்ட்ரீட் கிரிக்கெட் மற்றும் எறிபந்து ஆகியபோட்டிகள் நடத்தப்படவுள்ளது. மேலும் மாவட்ட அளவில் ஓவியம், கோலப்போட்டிகள் மற்றும் உடல்சார் மாற்றுத்திறனாளிகளுக்கு 100 மீட்டர் ஓட்டமும், பார்வைசார் மாற்றுத்திறனாளிகளுக்கு குண்டு எறிதல் போட்டியும், அறிவுசார் மாற்றுத்திறனாளிகளுக்கு 100 மீட்டர் ஓட்டமும் அதே போன்று செவிசார் மாற்றுத்திறனாளிகளுக்கு 100 மீட்டர் ஓட்டமும் என மாற்றுத்திறனாளிகளுக்கு 4 பிரிவுகளாகவும் போட்டிகள் நடத்தப்படவுள்ளன. மாவட்ட அளவில் முதலிடத்தினை பெறும் பெண்களுக்கான கபாடி அணி மற்றும் ஆண்களுக்கான ஸ்ட்ரீட் கிரிக்கெட் அணியினர்களுக்கு மட்டும் மாநில அளவிலான போட்டிகள் நடத்தப்படவுள்ளன.முதலமைச்சர் இளைஞர் விளையாட்டு திருவிழா – “இது நம்ம ஆட்டம்-2026” போட்டிகளில் கலந்து கொள்ள விரும்பும் 16 வயது முதல் 35 வயதுடைய விளையாட்டு வீரர், வீராங்கனைகள் தமிழ்நாடு விளையாட்டுமேம்பாட்டு ஆணையத்தின் இணையதளமான http://cmyouthfestival.sdat.in மற்றும் http://sdat.tn.gov.in வாயிலாக 06.01.2026 முதல் முன்பதிவு செய்து தனி நபர்  மற்றும் குழுப்போட்டிகளில் கலந்து கொள்ளலாம். முன்பதிவு செய்திட கடைசி நாள். 21.01.2026 ஆகும். மேலும், விபரங்களுக்கு விருதுநகர் மாவட்ட விளையாட்டு அலுவலகத்தினை 04562-225947 என்ற அலைபேசி எண்ணிலோ அனைத்து வேலை நாட்களிலும் காலை 10 மணி முதல் மாலை 6 மணி வரை தொடர்பு கொள்ளலாம். விளையாட்டு வீரர்கள் இந்த விளையாட்டுப் போட்டிகளில் பங்கேற்றிட தங்களுக்கான விளையாட்டு உபகரணங்கள் மற்றும் தகுந்த விளையாட்டு சீருடை அணிந்து வர வேண்டும் என  மாவட்ட ஆட்சித்தலைவர் மரு.என்.ஓ.சுகபுத்ரா,I A S., அவர்கள் கேட்டுக்கொண்டுள்ளார்.

1 2 ... 50 51 52 53 54 55 56 ... 140 141

AD's



More News