தமிழ்நாடு அரசு நிறுவனமான தமிழ்நாடு கண்ணாடி இழை வலையமைப்பு நிறுவனம் (TANFINET), பாரத்நெட் திட்டத்தின் கீழ் கிராமப்புறங்களில் உயர்தர இணைய சேவைகளை வழங்கும் நோக்கில் மாவட்ட அளவிலான தொழில் பங்கீட்டாளர்களை (DLFP) தேர்வு செய்யும் பணிகளை தொடங்கியுள்ளது.மாநிலத்தில் பாரத்நெட் பணிகள் சுமார் 95% வரை நிறைவடைந்துள்ளன. தமிழ்நாட்டின் 37 மாவட்டங்களிலும், ஒவ்வொரு மாவட்டத்திலும் குறைந்தது இரண்டு தொழில் பங்கீட்டாளர்களை தேர்வு செய்து, தடையில்லா இணைய சேவைகள் வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.இதன்படி, ஒவ்வொரு மாவட்டமும் வருவாய் உட்கோட்டம் (Revenue Division) அடிப்படையில் 2 முதல் 6 வட்டாரங்களை கொண்ட துணைப் பிரிவுகளாக பிரிக்கப்பட்டு, தொழில் பங்கீட்டாளர்கள் தேர்வு செய்யப்படுவர்.விண்ணப்பதாரர் அதிகபட்சம் இரண்டு மாவட்டங்களுக்கு விண்ணப்பிக்க அனுமதிக்கப்படுவர்.அந்த மாவட்டங்கள், நிறுவனம்/நிறுவனத்தின் வணிகச் செயல்பாட்டுப் பகுதி அமைந்துள்ள மாவட்டம் மற்றும்/அல்லது தனிப்பட்ட விண்ணப்பதாரரின் முகவரி அமைந்துள்ள மாவட்டமாக இருக்க வேண்டும்.தேர்வு செய்யப்படும் தொழில் பங்கீட்டாளர்களின் முக்கிய பொறுப்புகளில், Optical Fibre Cable (OFC) மற்றும் Optical Network Terminal (ONT) பராமரிப்பு, தடையில்லா இணைய சேவை வழங்குதல், OFC பராமரிப்பு பணிகள், சேவை தடைகளை காலதாமதமின்றி சரிசெய்தல், Service Level Agreement (SLA) விதிமுறைகளை பின்பற்றுதல் மற்றும் சேவை கிடைப்புத் தரத்தை பராமரித்தல் ஆகியவை அடங்கும்.விண்ணப்ப பதிவு நடைமுறை TANFINET இணையதளம் (https://tanfinet.tn.gov.in) மூலம் நடைபெறும். விண்ணப்பதாரர்கள் அறிவிப்பு மற்றும் தொடர்புடைய ஆவணங்களைப் பதிவிறக்கம் செய்து, தேவையான ஆவணங்களை பதிவேற்றம் செய்து, தாங்கள் செயல்பட விரும்பும் துணைப் பிரிவு-ஐ(Division) தேர்வு செய்ய வேண்டும். ஒவ்வொரு துணைப் பிரிவுக்கும் ₹25,000/- (திரும்பப்பெறக்கூடிய, வட்டியில்லா) விண்ணப்ப பாதுகாப்பு வைப்பு தொகை செலுத்த வேண்டும்.தேர்வு செய்யப்படும் பங்கீட்டாளர்கள், ஒவ்வொரு வட்டாரங்களுக்கும் ₹2,00,000/- பாதுகாப்பு வைப்பு தொகை செலுத்திய பின்னர், TANFINET தலைமையகத்தால் பணி ஆணை (Work Order) வழங்கப்படும்.மேற்படி, https://tanfinet.tn.gov.in. என்ற இணையதளம் வழியாக 01.01.2026 முதல் 14.01.2026 வரை ஆர்வமுள்ள விண்ணப்பதாரர்கள்விண்ணப்பிக்கலாம். மேலும் விவரங்கள் மற்றும் சந்தேகங்களுக்கு 044- 24965595 என்கிற உதவி மைய எண்ணை தொடர்பு கொள்ளலாம் என மாவட்ட ஆட்சித்தலைவர் மரு.என்.ஓ.சுகபுத்ரா, I A S,. அவர்கள் தெரிவித்துள்ளார்.
விருதுநகர் மாவட்டம், திருவில்லிபுத்தூர் வனக்கோட்டம் வனவியல் விரிவாக்க மையத்தில் (31.12.2025) தமிழ்நாடு வனத்துறை சார்பில் பசுமை தமிழ்நாடு இயக்கம் 2024-2025 கீழ், நாவல், வாகை, புங்கன், நீர் மருது, மந்தாரை, தான்றி, சீத்தா, அத்தி, புளி, மகிழம், ஆத்தி உள்ளிட்ட சுமார் 8000 க்கும் மேற்பட்ட மரக்கன்றுகள் வளர்க்கப்பட்டு வருவதை மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு செய்தார். தொடர்ந்து, திருவில்லிபுத்தூர் ஊராட்சி ஒன்றியம் பிள்ளையார்குளம் ஊராட்சி மொட்டைமலை இலங்கைத் தமிழர் மறுவாழ்வு முகாமில் வசிக்கும் இலங்கைத் தமிழர்களுக்காக புதிதாக குடியிருப்பு வீடுகள் கட்டப்படவுள்ள இடத்தினை மாவட்ட ஆட்சித்தலைவர் மரு.என்.ஓ.சுகபுத்ரா, I A S., அவர்கள் நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு செய்தார்.இந்நிகழ்வில் வனத்துறை அலுவலர்கள், வட்டார வளர்ச்சி அலுவலர்கள் மற்றும் அரசு அலுவலர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.
விருதுநகர் மாவட்டம், அருப்புக்கோட்டை வட்டாரம், செம்பட்டி ஆரம்ப சுகாதார நிலையம் மற்றும் நரிக்குடி வட்டாரம், இலுப்பையூர் ஆரம்ப சுகாதார நிலையங்களில் காலியாக உள்ள கீழ்க்கண்ட பணியிடங்களுக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.மருந்தாளுநர்கள்-2, ஆய்வக நுட்புநர்நிலை (Lab Technician Gr-III)-2, செவிலியர்கள்(RCH,NCD)-6, பல்நோக்கு சுகாதாரபணியாளர்/சுகாதார ஆய்வாளர் நிலை-II (MPHW HI Gr-II)-2, பல்நோக்கு மருத்துவமனை பணியாளர் (Multi Purpose Hospital Worker)-4, தொழில்சார் சிகிச்சையாளார் (Occupational therapist) – 01, சிறப்பு கல்வியாளர் (Special Educator)-01 ஆகிய பணியிடங்களுக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.இப்பணியிடங்களை நிரப்புவதற்கு தேவையான தகுதிகள் மற்றும் விண்ணப்படிவம் ஆகியவை குறித்த விவரத்தினை இம்மாவட்டத்தின் http://virudhunagar.nic.in என்ற இணைய தளத்தில் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். மேலும் நிரப்பப்பட்ட விண்ணப்பங்களை மாவட்ட நலவாழ்வு சங்கம் மாவட்ட சுகாதார அலுவலகத்தில் நேரிலோ அல்லது தபால் வழியாகவோ 29.12.2025 முதல் 14.01.2026 அன்று மாலை 5.45 மணி வரை சமர்ப்பிக்கலாம் என மாவட்ட ஆட்சித்தலைவர் மரு.என்.ஓ.சுகபுத்ரா,I A S.., அவர்கள் தெரிவித்துள்ளார்.
விருதுநகர் மாவட்டம், மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் உள்ள வைப்பு அறையில் எதிர்வரும் சட்டமன்றத் தேர்தல்-2026-ணை முன்னிட்டு, இந்திய தேர்தல் ஆணையத்தின் அறிவுரைகளின்படி, தேர்தலுக்கு முன்னதாக, தேர்தலுக்கு பயன்படுத்தப்படும் வாக்குப்பதிவு இயந்திரங்களுக்கான முதல் நிலை சரிபார்க்கும் பணிகள் (First Level Checking) நடைபெற்றுவருவதை மாவட்ட தேர்தல் அலுவலர் / மாவட்ட ஆட்சித்தலைவர் மரு.என்.ஓ.சுபுத்ரா.I A S., அவர்கள் (31.12.2025) நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.
விருதுநகர்மாவட்டம்,திருச்சுழிவட்டாரப்பகுதிகளில்அரசின்பல்வேறுத்துறைகள்மூலம்செயல்படுத்தப்பட்டுவரும்நலத்திட்டங்களை(30.12.2025)செய்தியாளர் பயணத்தின் போது மாவட்ட ஆட்சித்தலைவர் மரு.என்.ஓ.சுகபுத்ரா, I A S., அவர்கள் பயனாளிகளுக்கு வழங்கினார்.அதன்படி, திருச்சுழி வட்டம் குலசேகரநல்லூர் ஊராட்சியில், ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சிகள் துறை, தமிழ்நாடு மகளிர் மேம்பாட்டு நிறுவனம் மற்றும் தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்கம் இணைந்து மகளிர் சுய உதவி குழுக்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்தும் வகையில் ரூ.10 இலட்சம் மதிப்பில் அமைக்கப்பட்டுள்ள மசாலா தயாரிப்பு தொகுப்பினை மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் திறந்து வைத்து பார்வையிட்டார். தொடர்ந்து, திருச்சுழி வட்டம் குலசேகரநல்லூர் ஊராட்சியில், தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்கம் சார்பில் உற்பத்தி பொருட்களை கொள்முதல் மற்றும் விற்பனை செய்ய ஏதுவாக மகளிர் சுய உதவிக்குழு உறுப்பினர்களுக்கு வட்டி மானியத்தில் வாங்கப்பட்ட சரக்கு வாகனத்தினையும், திருச்சுழி வட்டம் குலசேகரநல்லூர் ஊராட்சியில், தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்கம் சார்பில் மகளிர் சுய உதவிக்குழு உறுப்பினர்களுக்கு அடையாள அட்டைகளையும் மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் வழங்கினார். பின்னர், திருச்சுழி ஊராட்சி ஒன்றியம், சென்னிலைகுடி ஊராட்சியில் தந்தை பெரியார் நினைவு சமத்துவபுரம் 2023-2024-ம் ஆண்டிற்கான திட்டத்தின் கீழ் ரூ.7.91 கோடி மதிப்பில் கட்டப்பட்டுள்ள 100 வீடுகளை தேர்ந்தெடுக்கப்பட்ட பயனாளிகளுக்கு குலுக்கல் மூலம் ஒதுக்கீடு செய்யும் பணிகளை மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் துவக்கி வைத்து, புதிய வீடுகளை பார்வையிட்டார்.இந்த செய்தியாளர் பயணத்தின் போது திட்ட இயக்குநர் மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திரு.வீ.கேசவதாசன், திட்ட இயக்குநர் (தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்கம்) திரு.ஜார்ஜ் ஆண்டனி மைக்கேல், அருப்புக்கோட்டை கோட்டாட்சியர் திரு.மாரிமுத்து, வட்டாட்சியர், அரசு அலுவலர்கள் மற்றும் பயனாளிகள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.
விருதுநகர் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில், ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறையின் சார்பில் நடைபெற்ற களமாடு பல்திறன் போட்டிகள்-2025 நிகழ்ச்சியில் பங்கேற்று வெற்றி பெற்ற 186 சமூக நீதி கல்லூரி விடுதி மாணவர்களை பாராட்டி கேடயங்கள் மற்றும் சான்றிதழ்களை மாவட்ட ஆட்சித்தலைவர் மரு.என்.ஓ.சுகபுத்ரா,I A S, அவர்கள் (30.12.2025) வழங்கினார்.ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை சார்பில், சமூக நீதி கல்லூரி விடுதிகளில் தங்கிப் பயிலும் மாணவ, மாணவிகளின் தனித் திறன்களைக் கண்டறிந்து ஊக்குவிக்கும் வகையில், தமிழக அரசு சார்பில் 'நல்லோசை களமாடு' பல்திறன் போட்டிகள் நடைபெற்றன.அதன்படி, மாவட்டத்தில், பேச்சுப் போட்டி, பாட்டுப் போட்டி, இசைக் கருவி இசைத்தல், ஓரங்க நாடகம், ஓவியம், பிரசுரங்கள் உருவாக்குதல், கவிதை, கதை எழுதுதல், கேரம், சதுரங்கம், குழு விளையாட்டுப் போட்டிகளாக பூப்பந்து, கைப்பந்தாட்டம் என பல்வேறு போட்டிகள் நடத்தப்பட்டன.அதன்படி, களமாடு பல்திறன் போட்டிகள்-2025 நிகழ்ச்சியில் பங்கேற்று வெற்றி பெற்ற 186 சமூக நீதி கல்லூரி விடுதி மாணவர்களை பாராட்டி கேடயங்கள் மற்றும் சான்றிதழ்களை மாவட்ட ஆட்சித்தலைவர்அவர்கள் (30.12.2025) வழங்கினார்.இந்நிகழ்ச்சியில், மாவட்ட ஆதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நல அலுவலர் திருமதி சாந்தி, அரசு அலுவலர்கள், சமூக நீதி விடுதிகளைச் சேர்ந்த 186 வெற்றி பெற்ற மாணவ, மாணவிகள் மற்றும் காப்பாளர்கள் கலந்து கொண்டனர்.
2026-ஆம் ஆண்டு சனவரி 1-ம் தேதியை தகுதி ஏற்படுத்தும் நாளாகக் கொண்டு வாக்காளர் பட்டியல்களை சிறப்பு தீவிர திருத்தம் செய்யும் பணி நடைபெற்று வருவதன் ஒரு கட்டமாக கடந்த 19.12.2025 அன்று வரைவு வாக்காளர் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது. இந்த வரைவு வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்கப்படாதவர்கள் மற்றும் புதிதாக பெயர் சேர்க்க வேண்டியவர்கள் 19.12.2025 முதல் 18.01.2026 வரையிலான காலத்தில் இதற்கான விண்ணப்பங்களை அளிக்க இயலும்.பொதுமக்கள் இவ்விண்ணப்பங்களை எளிதில் அளிப்பதற்காக கடந்த 27.12.2025, 28.12.2025 ஆகிய சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் விருதுநகர் மாவட்டத்தில் உள்ள அனைத்து வாக்குச்சாவடிகளிலும் சிறப்பு முகாம்கள் நடத்தப்பட்டன. இந்த முகாம்களில் வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்ப்பதற்காக மாவட்டம் முழுவதுமாக 16,270 படிவங்கள் பெறப்பட்டுள்ளன. மேலும் அனைத்து வாக்குச்சாவடிகளிலும் மீண்டும் 03.01.2026 மற்றும் 04.01.2026 ஆகிய சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் சிறப்பு முகாம்கள் நடத்தப்பட உள்ளது.தற்போது 18 வயதினைப் பூர்த்தி செய்திருக்கும் இளம் வாக்காளர்களை வாக்காளர் பட்டியலில் சேர்ப்பதற்காக விருதுநகர் மாவட்டத்தில் உள்ள அனைத்துக் கல்லூரிகளில் சிறப்பு முகாம்கள் நடத்தப்பட்டு வருகிறது. மாணவ மாணவியர்களிடமிருந்து இம்முகாம்களில் படிவங்கள் மற்றும் ஆவணங்களைப் பெற்று அந்த இடத்திலேயே தேர்தல் ஆணைய வலைதளத்தில் படிவத்தைப் பதிவேற்றம் செய்யப்படுகிறது.29.12.2025 அன்று திருச்சுழி அரசு கலைக் கல்லூரியில் சிறப்பு முகாம் நடைபெற்றது. இதில் திருச்சுழி தொகுதியில் பெயர் சேர்ப்பதற்காக 40 படிவங்கள் பெறப்பட்டது. 30.12.2025 சிவகாசியில் உள்ள அய்யநாடார் ஜானகி அம்மாள் கல்லூரி, எஸ்.எப்.ஆர். கலை மற்றும் அறிவியல் கல்லூரி, காளீஸ்வரி கலை மற்றும் அறிவியல் கல்லூரி ஆகியவற்றிலும், ராஜபாளையத்தில் உள்ள ராஜுக்கள் கல்லூரி, என்.ஏ.மஞ்சம்மாள் பாலிடெக்னிக் கல்லூரி ஆகியவற்றிலும், ஸ்ரீவில்லிபுத்தூர் அருள்மிகு பாலகிருஷ்ணா கலை மற்றும் அறிவியல் கல்லூரி, சாத்தூர் மேட்டமலையில் உள்ள கிருஷ்ணசாமி கலை மற்றும் அறிவியல் கல்லூரி, பி.எஸ்.என்.எல் கல்வியியல் கல்லூரி ஆகியவற்றிலும், அருப்புக்கோட்டை தேவாங்கர் கலைக் கல்லூரியிலும் சிறப்பு முகாம்கள் நடைபெற்றது.வரைவு வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்கப்படாத நபர்கள் மற்றும் 01.01.2008 அல்லது அதற்கு முன்னர் பிறந்துள்ளவர்கள் (01.01.2026 அன்று 18 வயதைப் பூர்த்தி செய்பவர்கள்), தங்களது பெயர்களை வாக்காளர் பட்டியலில் சேர்த்துக் கொள்வதற்கு படிவம் 6 -ல் விண்ணப்பங்களை அளிக்கலாம். அதே போன்று வரைவு வாக்காளர் பட்டியலில் உள்ள பதிவுகளில் திருத்தங்கள் ஏதேனும் செய்ய வேண்டியிருந்தாலோ, அல்லது ஒரே தொகுதிக்குள் ஒரு பாகத்திலிருந்து மற்றொரு பாகத்திற்கு மாற்றம் செய்ய வேண்டியிருந்தாலோ அல்லது ஒரு தொகுதியிலிருந்து மற்றொரு தொகுதிக்கு மாற்றம் செய்ய வேண்டியிருந்தால் படிவம்-8 ல் விண்ணப்பம் அளிக்கலாம். வரைவு வாக்காளர் பட்டியலில் சேர்க்கப்பட்டுள்ள ஒருவரது பெயரை நீக்கம் செய்ய வேண்டியிருப்பின் படிவம்-7 ல் விண்ணப்பம் அளிக்கலாம்.மேலும், 2026 -ம் ஆண்டில் ஏப்ரல்-1, ஜூலை-1, அக்டோபர்-1 ஆகிய எதிர்வரும் தகுதி ஏற்படுத்தும் நாட்களில் 18 வயதைப் பூர்த்தி செய்பவர்களும் (2.1.2008 முதல் 01.11.2008 வரை பிறந்துள்ளவர்கள்) தற்போதே படிவம்-6-ல் முன்கூட்டிய விண்ணப்பத்தை அளிக்க இயலும். இவ்விண்ணப்பங்கள் அந்தந்த தகுதி ஏற்படுத்தும் நாட்களில் பரிசீலனைக்கு எடுத்துக் கொள்ளப்படும்.மேலும், இந்த விண்ணப்பங்களை சிறப்பு முகாம்களில் மட்டுமல்லாமல், 18.01.2026 வரை அந்தந்த வாக்குச்சாவடி நிலை அலுவலர்கள், வட்டாட்சியர் அலுவலகங்கள், வாக்காளர் பதிவு அலுவலர் அலுவலகங்களில் நேரிலும் மற்றும் அஞ்சல் மூலமாகவும் அளிக்கலாம். இந்த விண்ணப்பங்களை https://voters.eci.gov.in என்ற வலைதளத்தின் மூலமும், Voters Helpline என்ற ஆன்ட்ராய்டு செயலி மூலமாகவும் ஆன்லைன் விண்ணப்பமாக பதிவு செய்யலாம் என மாவட்ட தேர்தல் அலுவலர்/மாவட்ட ஆட்சித்தலைவர் மரு.என்.ஓ.சுகபுத்ரா,I A S., அவர்கள் தெரிவித்துள்ளார்.
விருதுநகர் மாவட்ட ஆட்சியர் அலுவலக வளர்ச்சிமன்றக் கூட்டரங்கில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் மாவட்ட ஆட்சித்தலைவர் மரு.என்.ஓ.சுகபுத்ரா, I A S., அவர்கள் தலைமையில் (29.12.2025) நடைபெற்றது.இக்கூட்டத்தில், இலவச வீட்டுமனைப்பட்டா மற்றும் பட்டா மாறுதல், குடும்பஅட்டை, வேலைவாய்ப்பு, முதியோர், விபத்து நிவாரணம், மாற்றுத்திறனாளிகள், நலிந்தோர் நலத்திட்டம் மற்றும் விதவை உதவித்தொகை, திருமண உதவித்தொகை உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் தொடர்பாக மனுக்கள் பெறப்பட்டது.மேலும், மாற்றுத்திறனாளிகள் மற்றும் மூத்த குடிமக்களுக்காக அமைக்கப்பட்டுள்ள சிறப்பு அமருமிடத்திற்குச் சென்று, மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் கோரிக்கை மனுக்களை பெற்றுக் கொண்டார். இம்மனுக்களை மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் சம்மந்தப்பட்டதுறை அலுவலர்களிடம் ஒப்படைத்து உரிய நடவடிக்கை எடுக்குமாறு உத்தரவிட்டார்கள். மேலும் முதலமைச்சர் தனிப்பிரிவு மனுக்கள் மீது தனிக்கவனம் செலுத்தி நடவடிக்கை எடுக்குமாறு மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் அறிவுறுத்தினார்கள். இக்கூட்டத்தில், இலவச வீட்டுமனைப் பட்டா வேண்டி விண்ணப்பித்த சாத்தூர் வட்டத்தைச் சேர்ந்த 4 பயனாளிகளுக்கு ரூ.2.23 இலட்சம் மதிப்பிலான இலவச வீட்டு மனை பட்டாக்களையும், விருதுநகர் குடிமைப்பொருள் வழங்கல் பிரிவு துறையின் சார்பில், 4 பயனாளிகளுக்கு புதிய மின்னணு குடும்ப அட்டைகளையும் மாவட்ட ஆட்சித்தலைவர் மரு.என்.ஓ.சுகபுத்ரா,இ.ஆ.ப., அவர்கள் வழங்கினார்.மேலும், உலக மாற்றுத்திறனாளிகள் தினம்-2025ஐ முன்னிட்டு, மாற்றுத்திறனாளி மாணவர்களிடையே நடத்தப்பட்ட ஓவியப் போட்டியில் வெற்றி பெற்ற 27 மாணவர்களுக்கு மொத்தம் ரூ.16,500/- பரிசுத்தொகைகள் மற்றும் பாராட்டுச் சான்றிதழ்களை மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் வழங்கினார். மேலும், விருதுநகர் மாவட்டம் வெம்பக்கோட்டை வட்டம் கங்காரக்கோட்டை, இ.மேட்டுர் கிராம ஊராட்சியில் துப்புரவு பணியாளராக பணிபுரிந்து தீ விபத்து காரணமாக பணியிடை மரணமடைந்த திருமதி முத்துமுனியம்மாள் என்பவரின் வாரிசுதாரரான கணவர் திரு.மூக்காண்டி என்பவருக்கு முதலமைச்சரின் நிவாரண நிதியிலிருந்து வரப்பெற்ற தொகை ரூ.1 இலட்சத்திற்கான காகோலையினை மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் வழங்கினார்.இக்கூட்டத்தில், மாவட்ட வருவாய் அலுவலர் திருமதி ஆனந்தி, தனித்துணை ஆட்சியர் (சமூக பாதுகாப்பு திட்டம்) திரு.காளிமுத்து, மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் திருமதி பிரதெளஸ் பாத்திமா, அரசு அலுவலர்கள் மற்றும் பொதுமக்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.
விருதுநகர் ஊராட்சி ஒன்றியம், மருளுத்து கிராமத்தில் (29.12.2025) கால்நடை பராமரிப்புத்துறையின் சார்பில், தேசிய கால்நடை நோய் கட்டுப்பாட்டுத் திட்டத்தின் கீழ் நடைபெற்ற கால்நடைகளுக்கான 8-வது சுற்று கோமாரிநோய் தடுப்பூசி முகாமினை மாவட்ட ஆட்சித்தலைவர் மரு.என்.ஓ.சுகபுத்ரா,I A S, அவர்கள் தொடங்கி வைத்தார்.விருதுநகர் மாவட்டத்தில், கால்நடை பராமரிப்புத்துறை சார்பில், தேசிய கால்நடை நோய் தடுப்புத் திட்டம் மூலம் பசு மற்றும் எருமை இனங்களை கோமாரி நோயிலிருந்து காக்கும் வண்ணம் கோமாரி நோய் தடுப்பூசி முகாம் 29.12.2025 முதல் 18.01.2026 வரை 21 நாட்களுக்கு விருதுநகர் மாவட்டம் முழுவதும் நடைபெற உள்ளது. கோமாரி நோய் ஒருவைரஸ் கிருமியால் உண்டாக்கப்படும் பொருளாதார முக்கியத்துவம் வாய்ந்த நோயாகும். இந்நோய் கண்ட கால்நடைகளுக்கு வாய் மற்றும் கால் பகுதிகளில் புண்களும், காய்ச்சல் மற்றும் தீவனம் உண்ணாமை ஆகிய அறிகுறிகளோடு சினையுற்ற கால்நடைகளுக்கு கருச்சிதைவு ஏற்படுவதோடு, சினையின் தன்மை குறைந்து காணப்படும். இந்நோய் கொடிய தொற்று நோயாகும். காற்று மூலம் பரவுவதோடு ஒரு பண்ணையில் ஒரு மாட்டிற்கு காணப்பட்டால் அனைத்து கால்நடைகளுக்கும் உடனடியாக பரவ நேரிடும்.இந்நோய் கண்ட கால்நடைகளுக்கு உடனடி இறப்பு ஏற்படாவிட்டாலும் உற்பத்திதிறன் அதிக பாதிப்பு ஏற்படும். கால் மற்றும் வாய் காணை (கோமாரி) நோயானது குறிப்பாக கலப்பின மாடுகளை அதிகம் தாக்கி கால்நடைவளர்ப்போருக்கு பொருளாதாரம் மற்றும் உற்பத்தி இழப்பை ஏற்படுத்துகிறது. இந்நோயினால் இறப்புகள் குறைவாக இருந்த போதிலும் கறவை மாடுகளில் பால் உற்பத்தி குறைவு, எருதுகளின் வேலைத்திறன் குறைவு, கறவை மாடுகளில் சினைபிடிப்பு தடைபடுவது, இளங்கன்றுகளில் இறப்பு போன்ற பாதிப்புகளால் ஏற்படும் பொருளாதார இழப்பு அதிகமாகும்.இந்நோய் பொதுவாக குளிர் மற்றும் பனிக்காலங்களில் ஏற்படும் நோய் பாதிக்கப்பட்ட இடங்களில் இருந்து வாங்கிவரப்பட்ட கால்நடைகள் சுகாதாரமற்ற கால்நடைவளர்ப்பு மற்றும் கால்நடைகளுக்கு தடுப்பூசி போடாமல் இருத்தல் போன்ற காரணங்களினால் விரைவாக காற்றின் மூலம் பரவும் தன்மை கொண்டது. இந்நோய் பாதிக்கப்பட்ட மாடுகளின் சிறுநீர், பால், உமிழ்நீர், சாணம் ஆகியவற்றால் மற்ற கால்நடைகளுக்கு பரவுகிறது. மேலும், விருதுநகர் மாவட்டத்தில் சுமார் 1,45,700 பசு மற்றும் எருமை இனங்களுக்கு தடுப்பூசி போட இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. விருதுநகர் மாவட்டத்திலுள்ள 82 கால்நடை மருந்தகங்கள் மற்றும் 6 கால்நடை மருத்துவமனைகளில் உள்ள கால்நடை உதவி மருத்துவர், கால்நடை ஆய்வாளர்கள் மற்றும் கால்நடை பராமரிப்பு உதவியாளர்கள் கொண்ட 58 குழுக்கள் அமைக்கப்பட்டு, 21 நாட்களுக்கு தடுப்பூசி பணி இலவசமாக மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இத்தடுப்பூசிப் பணி நான்கு மாதத்திற்கு மேல் உள்ள கன்றுகளுக்கும் மற்றும் நிறை மாத சினை இல்லாத மாடுகளுக்கும் ஆறு மாதங்களுக்கு ஒரு முறை போடப்பட்டு வருகிறது. எனவே, விருதுநகர் மாவட்டத்தில் உள்ள விவசாயிகள் மற்றும் கால்நடைவளர்ப்போர் தங்களது பசுக்கள், எருதுகள் மற்றும் 4 மாதங்களுக்கு மேற்பட்ட இளங்கன்றுகளுக்கு ஒவ்வொரு கிராமத்திலும் குறிப்பிட்ட நாளில் குறிப்பிட்ட இடத்தில் முன்அறிவிப்போடு நடைபெறும் கோமாரி நோய் முகாமில் தடுப்பூசியை தங்களது கால்நடைகளுக்கு போட்டுக்கொண்டு பயனடையுமாறு மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் தெரிவித்தார்.முன்னதாக, பயனாளிகளுக்கு தீவன புல்கரணைகள், கால்நடைகளுக்கு உரித்தான தாது உப்பு கலவையையும் வழங்கப்பட்டது.இம்முகாமில், கால்நடை பாராமரிப்புத்துறை மண்டல இணை இயக்குநர் மரு.எட்வின் ஜேம்ஸ், துணை இயக்குநர் (கால்நடை பெருக்கம் மற்றும் தீவன அபி விருத்தி) மரு.கார்த்திக், உதவி இயக்குநர்(விருதுநகர்) மரு.பழனிசாமி, உதவி இயக்குநர்(கால்நடை புலனாய்வுப் பிரிவு) மரு.அரவிந்தன், கால்நடை மருத்துவப் பணியாளர்கள், விவசாயிகள் மற்றும் அரசு அலுவலர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.
விருதுநகர் மாவட்டம், கிருஷ்ணன் கோவில், கலசலிங்கம் பல்கலைக்கழகத்தில் (29.12.2025) அரசுப்பள்ளியில் பயிலும் 80 மாணவர்களுக்கு இந்தியாவில் உள்ள தேசிய தொழில்நுட்பக் கழகம் (NIT) இந்திய தொழில்நுட்ப நிறுவனங்கள் (IIT) மற்றும் பிற பொறியியல் கல்லூரிகளில் இளங்கலை பொறியியல் படிப்புகளில் (BE / BTech) சேர்க்கை பெறுவதற்காக நடத்தப்படும் அகில இந்திய நுழைவுத் தேர்வு (JEE) பயிற்சி வகுப்பினை மாவட்ட ஆட்சித்தலைவர் மரு.என்.ஓ.சுசுபுத்ரா, I A S, அவர்கள் நேரில் சென்று பார்வையிட்டு, மாணவர்களுக்கு நடத்தப்படும் பாடத்திட்டங்கள் குறித்து மாணவர்களிடம் கேட்டறிந்து கலந்துரையாடினார்.