25 YEARS OF EXCELLENCE

சமீபத்திய நிகழ்வுகள்:
இராஜபாளையம் கேசா டிமிர் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியில் கலை அறிவியல் கண்காட்சி நடைபெற்றது. >> வேர்ல்டு விஷன் இந்தியா தொண்டு நிறுவனத்தினர் இலவச சைக்கிள் வழங்கினார்கள். >> பலத்த மழையினால் ராஜபாளைய விவசாயிகள் மகிழ்ச்சி  >> இராஜபாளையம் எ.கா.த. தர்மராஜா பெண்கள் கல்லூரியில் நடந்த மதுரை பல்கலை மண்டலங்களுக்கு இடையேயான வாலிபால் போட்டி, >> இராஜபாளையம் நாடார் மேல்நிலைப்பள்ளியில் மாநில வாலிபால் போட்டி >> இராஜபாளையம் சஞ்சீவி மலையில் காட்டுத்தீயை அணைக்கும் பணியில் வனத்துறை வீரர்கள். >> ராஜபாளையத்தில் மழை பொய்த்து கடும் வெயிலால் மக்காச்சோள பயிர்கள் நாசம் >> இராஜபாளையம் ராம்கோ குருப் ராமராஜு சர்ஜிகல் காட்டன் மில்ஸ் லிட், சுதர்சனம் ஸ்பின்னிங் மில்ஸ் நூற்பாலைகளில் பணி புரியும் தொழிலாளர்களின் குழந்தைகளுக்கு கல்வி உதவித் தொகை வழங்கும் நிகழ்ச்சி நடந்தது >> M.B. ராதாகிருஷ்ணன் நினைவாக வாழ்நாள் சாதனையாளர் விருது >> இராஜபாளையம்  ரோட்டரி சங்கம், M.V.பீமராஜா ஜானகியம்மாள் அறக்கட்டளை மற்றும் நாற்று இலக்கிய அமைப்பு நடத்திய "யானைகள் திருவிழா" >>


செய்தி மக்கள் தொடர்பு அலுவலகம் விருதுநகர் மாவட்டம்

May 14, 2024

விருதுநகர் மாவட்ட கல்வி அறக்கட்டளைக்கு நிதியுதவி

விருதுநகர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில், விருதுநகர் மாவட்ட கல்வி அறக்கட்டளைக்கு நிதியுதவியாக இராஜபாளையம் சமூக ஆர்வலர் திரு.புஷ்பராஜ் அவர்கள் சார்பில் ரூ.25,000/-க்கான காசோலையினை அவரது உதவியாளர் திரு.முகமது மீரான் அவர்கள், மாவட்ட ஆட்சித்தலைவர் முனைவர் வீ.ப.ஜெயசீலன் , I A S, அவர்களிடம் (13.05.2024) வழங்கினார்.விருதுநகர் மாவட்ட கல்வி அறக்கட்டளை என்ற ஒரு சமூக அமைப்பு மாவட்ட நிர்வாகம், தொழில் முனைவோர்கள், தன்னார்வலர்கள் இணைந்து உருவாக்கப்பட்டு செயல்பட்டு வருகிறது.இதனுடைய நோக்கம் விருதுநகர் மாவட்டத்தில் பள்ளி மற்றும் கல்லூரிகளில் பயிலும் மாணவர்கள்/மாணவிகளுக்கு நல்ல திறமை மற்றும் கல்வியில் ஆர்வம் இருந்தும் பொருளாதார அடிப்படையில் வசதி குறைவு மற்றும் குடும்ப சூழ்நிலைகள் காரணமாக தங்களுடைய கல்வியினை தொடர முடியாமல் இருக்கும் மாணவர்களுக்கு, அவர்களின் கல்வியினை தொடர உதவி செய்வதே இதன் நோக்கமாகும்.இந்த விருதுநகர் மாவட்ட கல்வி அறக்கட்டளைக்கு நிதி உதவி வழங்க விரும்புவோர் 04562-252525, 9445043157 என்ற எண்களைத் தொடர்பு கொள்ளலாம்.மேலும் கல்வி அறக்கட்டளைக்கு வங்கி வரைவோலை மூலம் நிதியுதவி வழங்க விரும்புவோர் CHAIRMAN/DISTRICT COLLECTOR, VIRUDHUNAGAR  என்ற பெயரிலும், வங்கிக் கணக்கில் வழங்க விரும்புவோர் CHAIRMAN/DISTRICT COLLECTOR VIRUDHUNAGAR KALVI ARAKATALAI, The Virudhunagar District Central Co-operative Bank Ltd, A/c No: 717770590, IFSC code: TNSC0011800, MICR Code: 626800007 என்ற வங்கிக்கணக்கிலும் நிதியுதவி அளிக்கலாம் என மாவட்ட ஆட்சித்தலைவர்  அவர்கள் தெரிவித்துள்ளார்.

May 14, 2024

வருவாய்த்துறை அலுவலர்களுடனான ஏப்ரல் -2024 மாதத்திற்கான பணித்திறன் ஆய்வுக்கூட்டம்

விருதுநகர் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில்  (13.05.2024) வருவாய்த்துறை அலுவலர்களுடனான ஏப்ரல் -2024 மாதத்திற்கான பணித்திறன் ஆய்வுக்கூட்டத்தில் சிறப்பாக பணியாற்றிய சிறந்த வருவாய் வட்டாட்சியர் சாத்தூர் வருவாய் வட்டாட்சியர் திரு.கு.லோகநாதன் அவர்களுக்கு முதல் பரிசினை மாவட்ட ஆட்சித்தலைவர் முனைவர் வீ.ப.ஜெயசீலன். I A S, அவர்கள் வழங்கினார்.  

May 13, 2024

“நான் முதல்வன்”; திட்டத்தின் கீழ் 12 ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்ற அரசு பள்ளி மாணவர்களுக்கான கல்லூரிக் கனவு என்ற உயர்கல்வி வழிகாட்டுதல் நிகழ்ச்சி

விருதுநகர் மாவட்ட அரசு மருத்துவக் கல்லூரி கலையரங்கத்தில் (11.05.2024) நான் முதல்வன் திட்டத்தின் கீழ் 12 ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்ற அரசு பள்ளி மாணவர்களுக்கான கல்லூரிக் கனவு என்ற உயர்கல்வி வழிகாட்டுதல் நிகழ்ச்சி மாவட்ட ஆட்சித்தலைவர் முனைவர் வீ.ப.ஜெயசீலன், I A S., அவர்கள் தலைமையில் நடைபெற்றது.நான் முதல்வன் திட்டத்தின் கீழ் மாணவர்கள் உயர்கல்வி வாய்ப்புகளை தெரிந்து கொள்வதற்காக, குறிப்பாக அரசு பள்ளி மாணவர்கள், அரசு பள்ளிகளில் மாணவர்களுக்கு வழிகாட்டக்கூடிய பொறுப்பாசிரியர்கள் அனைவரும் உலக அளவில் இருக்கக்கூடிய சிறந்த உயர் கல்வி வாய்ப்புகளை எல்லாம் தெரிந்து கொள்ள வேண்டும் என்பதற்காகவும், 12 ஆம் வகுப்பு முடித்த மாணவர்கள் அனைவரும் கல்லூரிகள் சேர்ந்து உயர்கல்விகள் பெற வேண்டும் என்பதை உறுதி செய்யும் நோக்கத்திலும் கல்லூரி கனவு என்ற திட்டத்தை தமிழ்நாடு அரசு நடத்தி வருகிறது.இந்திய அளவில் 12 ஆம் வகுப்பு முடித்து உயர்கல்விக்கு செல்வோரின்  எண்ணிக்கை சுமார் 32 விழுக்காடு ஆக இருக்கிறது. இதுவே தமிழ்நாட்டில் ஏறத்தாழ 52 சதவீதமாக உள்ளது. நமது விருதுநகர் மாவட்டத்தில் கடந்தாண்டு சுமார் 96 விழுக்காடு 12 ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்ற மாணவர்கள் உயர்கல்விக்கு சென்றுள்ளனர். மாநிலம் முழுவதும் அதிகமான உயர்கல்வியை உறுதி செய்திட வேண்டும் என்பதற்காகத்தான் இந்த நிகழ்ச்சிகளை தமிழக அரசு மாநிலம் முழுவதும் நடத்தி வருகிறது.இன்று உயர் கல்வி பெறுவதற்கான வாய்ப்புகள் நிறைய இருக்கின்றன. உயர் கல்வியை பெறுவதற்கு இருக்கக்கூடிய வாய்ப்புகளை நீங்கள் பயன்படுத்திக் கொள்வதற்கு பொருளாதாரம் ஒரு தடையல்ல. சரியான வாய்ப்புகளை நாம் தேடாமல் அல்லது சரியான வாய்ப்புகளை தெரிந்து கொள்ளாமல் இருப்பதும், ஒரு கல்லூரியில் சேர்ந்த பிறகு கூட இருக்கக்கூடிய வாய்ப்புகளை பயன்படுத்தாமல் இருப்பதும் தான் பிரச்சனையாக இருக்கிறது.யாரெல்லாம் தேடுகிறார்களோ, யாரெல்லாம் தன்னுடைய வாய்ப்புகளை தொடர்ச்சியாக பார்த்துக் கொண்டிருக்கிறார்களோ அவர்களெல்லாம் மிகச்சிறந்த நிலையை அடைகிறார்கள். சாதாரண கிராமத்தில் தமிழ் வழிக்கல்வியில் பின்தங்கிய சூழ்நிலையில் படித்து சராசரி மதிப்பெண் எடுத்தவர்கள் கூட அடுத்தடுத்த வாய்ப்புகளை எப்படி எல்லாம் பயன்படுத்தி வாழ்க்கையில் உயர்ந்தார்கள் என்பதற்கு பல்வேறு உதாரணங்கள் இருக்கின்றன. அவர்கள் அடைந்த உயரங்கள் மட்டும் தான் தெரிகிறது. இந்த உயரங்களுக்கு பின்னால் தூங்காத இரவுகளும், கடினமான உழைப்பின் வேர்வைகளும் ஒரு போதும் தெரிவதில்லை.20 சதவிகித வேலைகளில் 80 சதவீத பலனை பெறுவது உலகம் முழுவதும் எல்லா துறைகளிலும் இருக்கக்கூடிய தத்துவம். இதை வாழ்க்கையில் பயன்படுத்த வேண்டும்.உயர்கல்வி வாய்ப்புகளை ஆசிரியர்களும் அதிகமாக தெரிந்து கொள்ள வேண்டும். மாணவர்களுக்கு எடுத்துச் சொல்ல வேண்டும். இன்றைய கல்விச் சூழலை எப்படி எதிர்கொள்வது, இந்த கல்விச்சூழல் நமக்கு தரக்கூடிய வாய்ப்பை எப்படி பயன்படுத்துவது என்பதற்கு மாணவர்களை நாம் தயார் படுத்திக் கொள்ள வேண்டும்.இங்கு இருக்கக்கூடிய மாணவர்கள் ஆசிரியர்களுக்கு எனது அனுபவத்திலிருந்து சொல்லக் கூடியது வாழ்வில் வெற்றி பெறுவதற்கு எவ்வளவு வாய்ப்புகள் இருந்தாலும், மிக மிக எளிய வாய்ப்பு கல்வியும் கடின உழைப்பும் தான். இந்த இரண்டு வழிகளை தவிர எளிய குறுக்கு வழிகள் வேற எதுவும் இல்லை.எனவே சிறந்த வாய்ப்புகளை நீங்கள் உருவாக்கிக் கொள்ளுங்கள். நீங்கள் அடைய வேண்டிய உயரம் இமயமலை போன்றது. அந்த உயரங்களை அடையக்கூடிய மாணவர்களாக விருதுநகர் மாவட்ட மாணவர்கள் இருக்க வேண்டும். அதனை அவர்களுக்கு மிகுந்த சிரத்தையோடும், கடமையோடும் வழிகாட்டக்கூடியவர்களாக ஆசிரியர்கள் திகழ வேண்டும் என தெரிவித்தார்.இந்நிகழ்ச்சியில் உலகளாவிய வாய்ப்புகள், படிப்புகள், கல்லூரிகள், வேலை வாய்ப்புகள் குறித்து கல்வியாளர் திரு.நெடுஞ்செழியன் அவர்கள் விரிவாக மாணவர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கு எடுத்துரைத்தார்.மேலும், சவுதி அரேபியா மஜ்மா பல்கலைக்கழக பேராசிரியர்(வெளிநாடு வாழ் இந்தியர்) திரு.முகமது யாசிக் அவர்கள் உயர்கல்வி வாய்ப்புகள் குறித்து காணொலி காட்சி வாயிலாக மாணவர்களிடையே உரையாற்றினார்.இந்நிகழ்ச்சியில் மாவட்ட வருவாய் அலுவலர் திரு.இரா.ராஜேந்திரன், மாவட்ட முதன்மைக்கல்வி அலுவலர் திருமதி வளர்மதி, பல்வேறு அரசுப்பள்ளிகளைச் சேர்ந்த 600 மாணவ, மாணவியர்கள், ஆசிரியர்கள், அரசு அலுவலர்கள் பலர் கலந்து கொண்டனர்.

May 13, 2024

Coffee With Collector” என்ற 72-வது கலந்துரையாடல் நிகழ்ச்சி

விருதுநகர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில், 10 ஆம் வகுப்பு அரசுப் பொது தேர்வில் அரசுப்பள்ளிகளில் பயின்று முதல் 50 இடங்கள் பெற்ற மாணவ, மாணவிகள் மற்றும் அரசு மாதிரி மேல்நிலைப்பள்ளிகளைச் சேர்ந்த 39 மாணவ, மாணவிகளுடனான “Coffee With Collector” என்ற 72-வது கலந்துரையாடல் நிகழ்ச்சியில், மாவட்ட ஆட்சித்தலைவர் முனைவர் வீ.ப.ஜெயசீலன், I A S., அவர்கள் 11 ஆம் வகுப்பில் எவ்வாறு பாட பிரிவுகளை தேர்ந்து எடுப்பது, 12 ஆம் வகுப்பு ஆண்டு இறுதி தேர்வில் எவ்வாறு அதிக மதிப்பெண்களை பெறுவது குறித்து கலந்துரையாடினார்.விருதுநகர் மாவட்டத்தில் பள்ளி மற்றும் கல்லூரியில் பயிலும் மாணவ / மாணவியர்களுடன் கல்வி, பொது அறிவு, விளையாட்டு, ஓவியம், இசை உள்ளிட்ட பல்வேறு திறன் அடிப்படையில் மாணாக்கர்களின் திறன்களை கண்டறிந்து, மாணவ, மாணவியர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டு பிரதி வாரம் ஒருமுறை அவர்களை மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் நேரில் அழைத்து கலந்துரையாடும் நிகழ்ச்சி தொடங்கப்பட்டு, நடத்தப்பட்டு வருகிறது.தற்போது, 10 ஆம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் வெளியாகியுள்ள நிலையில், பொது தேர்வில் அதிக மதிப்பெண்கள் எடுத்த அரசு மற்றும் அரசு மாதிரி மேல்நிலைப்பள்ளிகளைச் சேர்ந்த 80-க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகளுக்கு 11 ஆம் வகுப்பில் எவ்வாறு பாட பிரிவுகளை தேர்ந்து எடுப்பது, 12 ஆம் வகுப்பு ஆண்டு இறுதி தேர்வில் எவ்வாறு அதிக மதிப்பெண்களை பெறுவது குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் இன்று 71-வது முறையாக கலந்துரையாடல் நிகழ்ச்சி நடைபெற்றது.இந்த கலந்துரையாடல் நிகழ்ச்சியில் கலந்து கொண்ட பள்ளி மாணவ, மாணவிகளிடம், அவர்களுடைய இலட்சியம், அவர்களுக்கு எந்த துறையில் ஆர்வம், அவர்கள் உயர்கல்வி பயில விரும்பும் கல்லூரி மற்றும் இடம் உள்ளிட்டவை குறித்து கேட்டறிந்தார்.பள்ளி கல்லூரி படிப்பு என்பது ஒருவரின் வாழ்க்கையில் ஒருமுறை மட்டுமே கிடைக்கும். எனவே பள்ளி மற்றும் கல்லூரி படிப்பின் மூலம் வாழ்க்கைக்கான பல அனுபவங்களை கற்றுக் கொள்ளலாம். அனுபவங்களில் இருந்து கிடைக்கும் கல்விதான் சிறந்த கல்வியாகும்.மருத்துவம், பொறியியல் படிப்புகளுக்கு அனைத்து நுழைவு தேர்வுகளை பற்றி தெரிந்துகொள்ள வேண்டும். எந்த கல்லூரியில் எந்த படிப்பு சேரவேண்டும் என்பதை முடிவு செய்ய வேண்டும். மருத்துவ படிப்பு சேர விரும்பும் மாணவர்கள் நுழைவு தேர்வை மனதில் வைத்து செயல்பட வேண்டும். மேலும் நீட் தேர்வில் ஒவ்வொரு சரியான பதிலுக்கும் மதிப்பெண்களை வழங்குகிறது. அதே நேரத்தில், ஒவ்வொரு தவறான பதிலுக்கும் மதிப்பெண் கழிக்கப்படுகிறது. இதனை  மாணவர்கள் கவனத்தில் கொள்ளவேண்டும்.கல்லூரி படிப்பில் சேருவதற்காக அனைத்து கல்லூரிகளிலும் தவறாமல் விண்ணப்பம் செய்ய வேண்டும். கடந்தாண்டு எந்த கல்லூரியில் எவ்வளவு கட் ஆப் மதிப்பெண் அடிப்படையில் மாணவர் சேர்க்கை நடைபெற்றது போன்ற தகவல்களை தெரிந்துகொள்ள வேண்டும். ஒவ்வொருவரும் தங்களது தனித் திறமைகளை வளர்த்துக்கொள்ள வேண்டும்.12-ஆம் வகுப்பில் எடுக்கப்பட்டும் மதிப்பெண்களை பயன்படுத்தி நமக்கான நல்ல வாயப்புகளை உருவாக்கி கொள்ள வேண்டும். உயர்கல்வி எங்கு பயின்றாலும், இந்தியாவில் சிறந்த கல்லூரியை தேர்ந்தெடுத்து படிக்க வேண்டும். வெற்றிக்கு  தேவையான  விஷயங்களை தொடர்ந்து ஆர்வத்துடன், கவனசிதறல் இல்லாமல், தொடர்ந்து விடா முயற்சியுடனும், கடினமாக உழைத்தால் எளிதாக வெற்றி பெறலாம்.கல்லூரி படிப்பில் சேர்வதற்கு விருப்பத்தின் அடிப்படையில் மட்டும் முடிவு எடுத்தல் கூடாது. அனைவருக்கும் இலட்சியம் உண்டு. இலட்சியத்தை அடைவதற்கு தொடர்ந்து விடா முயற்சி செய்ய வேண்டும். நிலையான தொடர்ச்சியான சிறிய முயற்சிகள் பெரிய மாற்றங்களை ஏற்படுத்துகிறது.மேலும், ஒவ்வொருவருக்கும் என்று தனித்திறமைகள் உள்ளன. அத்திறமைகளை அனைவரும் வளர்த்து கொண்டு வாழ்வில் முன்னேற வேண்டும் என மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் தெரிவித்தார்.இந்த சந்திப்பில் மாணவ, மாணவியர்கள் உற்சாகத்துடன் கலந்து கொண்டு, இந்த நிகழ்ச்சி மூலம் எங்களுக்கு ஒரு புத்துணர்வு, ஊக்கம் அளிப்பதாகவும், மாவட்ட ஆட்சியர் போன்று தாங்களும் சாதிக்க வேண்டும் என்ற எண்ணம் உருவாகி உள்ளதாகவும், எங்களுடைய கேள்விகள் மற்றும் சந்தேகங்களுக்கு மாவட்ட ஆட்சியர் தெளிவான விடை கொடுத்ததாகவும், நாங்களும் மாவட்ட ஆட்சியர் போன்று சாதித்து காட்டுவோம் என்றும், இந்த நிகழ்ச்சி ஏற்பாடு செய்ததற்கு மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்களுக்கு மாணவர்கள் தங்களது நன்றிகளை தெரிவித்துக்கொண்டனர்.  

May 11, 2024

பட்டாசு தொழிற்சாலைகளில் நிகழும் விபத்துக்கள் தொடர்பாக மாவட்ட அளவிலான பாதுகாப்பு குழுவின் உறுப்பினர்கள் கூட்டம்

விருதுநகர் மாவட்டம், மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் தொழிலக பாதுகாப்பு மற்றும் சுகாதார இயக்ககம் சார்பில் பட்டாசு தொழிற்சாலைகளில் நிகழும் விபத்துக்கள் தொடர்பாக மாவட்ட அளவிலான பாதுகாப்பு குழுவின் உறுப்பினர்கள் கூட்டம் மாவட்ட ஆட்சித்தலைவர் முனைவர் வீ.ப.ஜெயசீலன்,  I A S,அவர்கள் தலைமையில்  (10.5.2024) நடைபெற்றது. உடன் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.பெரொஸ்கான் அப்துல்லா அவர்கள் உள்ளார்.

May 11, 2024

வத்திராயிருப்பு ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட பல்வேறு பகுதிகளில் நடைபெற்று வரும் வளர்ச்சி பணிகள்

விருதுநகர் மாவட்டம், வத்திராயிருப்பு ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட பல்வேறு பகுதிகளில் நடைபெற்று வரும் வளர்ச்சி பணிகள் குறித்து மாவட்ட ஆட்சித்தலைவர் முனைவர் வீ.ப.ஜெயசீலன், I A S., அவர்கள் (10.05.2024) நேரில் சென்று  பார்வையிட்டு ஆய்வு செய்தார்.அதன்படி, வத்திராயிருப்பு ஊராட்சி ஒன்றியம் அழகாபுரி கிராமத்தில் ரூ.25.00 இலட்சம் மதிப்பீட்டில் சமுதாயக்கூடம் கட்டப்பட்டுள்ளதையும், வெள்ளப்பொட்டல் ஊராட்சியில் அனைத்து கிராம அண்ணா மறுமலர்ச்சி திட்டத்தின் கீழ் ரூ.14.31 இலட்சம் மதிப்பீட்டில் அங்கன்வாடி மையத்திற்கு வண்ணம் அடிக்கப்பட்டு வருவதையும், வெள்ளப்பொட்டல் ஊராட்சியில் 15-வது மானிய நிதி குழு திட்டத்தின்  கீழ், ரூ.4.00 இலட்சம் மதிப்பீட்டில் சமுதாய நலக்கூடத்தை பழுதுபார்த்து, வண்ண பூச்சு அடிக்கப்பட்டு வருவதையும்,காடனேரி கிராமத்தில் அனைத்து கிராம அண்ணா மறுமலர்ச்சி திட்டத்தின் கீழ் ரூ.12.30 இலட்சம் மதிப்பீட்டில் நியாயவிலை கட்டடம் கட்டப்பட்டு வருவதையும் மற்றும் காடனேரி கிராமத்தில் அனைத்து கிராம அண்ணா மறுமலர்ச்சி திட்டத்தின் கீழ், ரூ.7.20 இலட்சம் மதிப்பீட்டில் கதிரடிக்கும் தளம் கட்டப்பட்டுள்ளதையும்,கோட்டையூர் ஊராட்சியில், கிருஷ்ணாபுரம் கிராமத்தில் ரூ.14.31 இலட்சம் மதிப்பீட்டில், அங்கன்வாடி மையத்தில் பூச்சு வேலை நடைபெற்று வருவதையும்,தம்பிப்பட்டி ஊராட்சியில், அரசு பள்ளிகளில் அடிப்படை உட்கட்டமைப்பு மேம்படுத்துதல் மற்றும் ஒட்டுமொத்தமாக தூய்மைபடுத்துதல் திட்டத்தின் கீழ், ரூ.5.00 இலட்சம் மதிப்பீட்டில் தம்பிப்பட்டி நடுநிலைப்பள்ளியில் கிழக்கு பக்கம் உள்ள வடக்கு பார்த்த பள்ளி கட்டடத்தில் பூச்சு நடைபெற்று வருவதையும்,பின்னர், மகாராஜபுரம் ஊராட்சியில், பிரதான் மந்திரி ஆவாஸ் யோஜனா திட்டத்தின் கீழ், இலவச வீட்டு மனை பட்டா வழங்கப்படுவதையும்,இராமசாமிபுரம் ஊராட்சியில், அனைத்து கிராம அண்ணா மறுமலர்ச்சி திட்டத்தின் கீழ், ரூ.9.45 இலட்சம் மதிப்பீட்டில் நியாயவிலை கட்டடம் கட்டப்பட்டு வருவதையும்,ரெங்கப்பநாயக்கன்பட்டி ஊராட்சியில், அனைத்து கிராம அண்ணா மறுமலர்ச்சி திட்டத்தின் கீழ், ரூ.31.46 இலட்சம் மதிப்பீட்டில், ஊராட்சி மன்ற அலுவலகக் கட்டடம் பூச்சு நடைபெற்று வருவதையும்,குன்னூர் ஊராட்சியில் அனைத்து கிராம அண்ணா மறுமலர்ச்சி திட்டத்தின் கீழ், ரூ.9.77 இலட்சம் மதிப்பீட்டில், நியாயவிலை கட்டடத்திற்கு வண்ணப்பூச்சு அடிக்கப்பட்டு வருவதையும்  மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் நேரில் சென்று பார்வையிட்டு பணிகளின் தரம் குறித்து ஆய்வு செய்தார்.மேலும் நடைபெற்று வரும் பணிகளை விரைவாகவும், தரமானதாகவும் முடித்து பொதுமக்களின் பயன்பாட்டிற்கு கொண்டு வர சம்மந்தப்பட்ட அரசு அலுவலர்களுக்கு அறிவுத்தினார்.இந்த ஆய்வின் போது, வட்டார வளர்ச்சி அலுவலர்கள், உதவி செயற்பொறியாளர்கள் மற்றும் அரசு அலுவலர்கள் உட்பட பலர் உடன் இருந்தனர்.

May 11, 2024

எஸ்எஸ்.எல்.சி. பொதுத்தேர்வில் 95.14 சதவிகிதம் தேர்ச்சி பெற்று தமிழ்நாட்டில் ஆறாவது மாவட்டமாக நமது மாவட்டம் இடம் பெற்றுள்ளது

விருதுநகர் மாவட்டத்தில் ஏப்ரல் 2024ல் நடைபெற்ற எஸ்.எஸ்.எல்.சி. பொதுத்தேர்வில், விருதுநகர் வருவாய் மாவட்டத்தில் 357 பள்ளிகளைச் சேர்ந்த மாணவர்கள் 114 தேர்வு மையங்களில் 11,792 மாணவர்களும், 12,523 மாணவியர்களும்  ஆக என மொத்தம் 24,315 மாணவர்கள் தேர்வு எழுதினார்கள். அதில் 10,988 மாணவர்களும், 12,146 மாணவியர்களும் என மொத்தம் 23,134 மாணவர்கள் தேர்ச்சி பெற்று, தேர்ச்சி விழுக்காடு  (95.14 சதவீதம்) பெற்று தேர்ச்சி சதவீதத்தில் தமிழ்நாட்டில் 6-ஆவது மாவட்டமாக இடம் பெற்றுள்ளது.மேலும், அரசுப்பள்ளிகள்- 57, சமூக நலப்பள்ளிகள்-3 , உதவி பெறும் பள்ளிகள் - 28, பதின்மப் பள்ளிகள் -52 என மொத்தமாக 140 பள்ளிகள்  100 சதவீதம் தேர்ச்சி பெற்றுள்ளது.மாவட்ட அளவில் என்.கேசவப்பிரியா என்ற மாணவி 498/500 மதிப்பெண்களும் அதனைத் தொடர்ந்து வி.ஜன ஆனந்த் என்ற மாணவன் 497/500, எஸ்.சகானா பார்வதி என்ற மாணவி 497/500, எம்.யஷ்வந்த்தமன் என்ற மாணவன் 496/500 (சங்கரலிங்காபுரம், அரசு மேல்நிலைப்பள்ளி), ஜெயசூர்யா கார்த்திகேயன் என்ற மாணவன் 496/500, என்.திவாகரன் என்ற மாணவன் 496/500, எ.நந்தினி என்ற மாணவி 496/500, இ.செல்வராணி என்ற மாணவி 496/500, ஆர்.அக்ஷயா என்ற மாணவி 496/500, சி.வி.ரவீந்திரகுமார் என்ற மாணவன் 496/500, எம்.ஷாரு ப்ரீத்தி என்ற மாணவி 496/500 மதிப்பெண்கள்  பெற்று இம்மாவட்டத்திற்கு பெருமை சேர்த்துள்ளார்கள்.ஆங்கிலம் பாடத்தில் 6 மாணவர்கள், கணக்கு பாடத்தில் 687 மாணவர்கள், அறிவியல் பாடத்தில் 101 மாணவர்கள், சமூக அறிவியல் பாடத்தில் 82 மாணவர்களும் 100 மதிப்பெண்கள் பெற்றுள்ளார்கள்.

May 11, 2024

மாவட்டத்தில் குழந்தை திருமணத்தில் ஈடுபடுவோர் மீது குழந்தை திருமணம் தடைச் சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது -

18 வயது நிறைவடையாத பெண்கள் குழந்தைகளாகவே கருதப்படுவர். அவ்வாறு 18 வயது நிறைவடையாத பெண்ணுக்கும், 21 வயது நிறைவடையாத ஆணுக்கும் நடைபெறுவதை தடைசெய்வதே இச்சட்டத்தின் நோக்கமாகும்.• குழந்தை திருமணம் தொடர்பாக புகார்கள் 1098 அல்லது 181 மூலம் பெறப்பட்ட உடன் நடவடிக்கையாக குழந்தையின் விபரம் மாவட்ட சமூகநல அலுவலகத்தின் கீழ் பணிபுரியும் சமூக நல களப்பணியாளர்களுக்கு தெரிவிக்கப்பட்டு, களப்பணியாளர்கள், சைல்டுலைன் பணியாளர்கள், ஒருங்கிணைந்த சேவை மையம் வழக்கு பணியாளர்கள், ஆள் கடத்தல் தடுப்புபிரிவு காவல் ஆய்வாளர் ஆகியோர்களால் நேரடியாக குழந்தையின் இல்லத்திற்கு சென்று விசாரணை செய்யப்படும்.• குழந்தை திருமணம் நடைபெற்றதற்கான ஆதாரங்களோ, திருமணம் நடைபெறுவதற்கான ஏற்பாடுகள் ஏதேனும் செய்யப்பட்டிருப்பின் உடனடியாக குழந்தையினை மீட்டு குழந்தைகள் நலகுழுமத்தில் ஒப்படைக்கப்படும்.• குழந்தைதிருமணம் நடைபெற்றிருப்பின் குழந்தையினை திருமணம் செய்து கொண்ட மணமகன், மணமகனின் பெற்றோர், குழந்தையின் பெற்றோர் மற்றும் திருமணம் நடைபெறுவதற்கு உடந்தையாக இருந்த அனைவர் மீதும் வழக்கு பதிவு செய்யப்படும்.• இளவயதில் கருவுற்ற குழந்தைகள் தொடர்பாக புகார் பெறப்படின் காரணமான நபர் மீது உடனடியாக வழக்கு பதிவு செய்யப்படும்வழங்கப்படும் தண்டனைகள்• 18 வயது நிரம்பாத பெண் குழந்தையைத் திருமணம் செய்யும் ஆணுக்கு அதிகபட்சமாக 2 வருட கடும் சிறைத்தண்டனை அல்லது ஒரு இலட்சம் ரூபாய் அபராதம் அல்லது இரண்டும் சேர்த்து விதிக்கப்படும்.• குழந்தை திருமணத்தை நடத்தி வைப்போருக்கு 2 வருடம் கடும் சிறைத்தண்டனை மற்றும் ஒருலட்சம் ரூபாய் அபராதம் விதிக்கப்படும்.• இக்குற்றம் பிணையில் விடுவிக்க இயலாத குற்றமாகும்.• 18 வயது நிரம்பாத பெண் குழந்தையை பாலியல் துன்புறுத்தலுக்கு ஆளாக்கி கருவுற்ற நிலையில் கண்டறியப்பட்டின் காரணமான நபருக்கு 7 ஆண்டுகள் வரை சிறைத்தண்டனை வழங்கப்படும்  கடந்த 01.04.2024 முதல் 30.04.2024 வரை பதின்மூன்று குழந்தை திருமணங்கள் தொடர்பாக புகார் பெறப்பட்டதை தொடர்ந்து அவற்றின் மீது முதல் தகவல் அறிக்கை பதிவு செய்யப்பட்டுள்ளது மற்றும் 18 வயது பூர்த்தியடையாமல் கருவுற்ற பெண் குழந்தைகள் தொடர்பாக பெறப்பட்ட தகவல்களின் அடிப்படையில் ஏழு நபர்களின் மீது முதல் தகவல் அறிக்கை பதிவு செய்யப்பட்டுள்ளது என மாவட்ட ஆட்சித்தலைவர்     முனைவர் வீ.ப.ஜெயசீலன், I A S., அவர்கள் தெரிவித்துள்ளார்கள்.

May 10, 2024

பள்ளி மாணவ, மாணவியர்கள் பயணம் செய்யும் தனியார் பள்ளி வாகனங்களின் தரம் குறித்து ஆய்வு

விருதுநகர் ஆயுதப்படை மைதானத்தில்  (09.05.2023) பள்ளி மாணவ, மாணவியர்கள் பயணம் செய்யும் தனியார் பள்ளி வாகனங்களின் தரம் குறித்து மாவட்ட ஆட்சித்தலைவர்  முனைவர் வீ.ப.ஜெயசீலன்., I A S,அவர்கள் நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு செய்தார்.பள்ளிக் குழந்தைகளின் பாதுகாப்பு கருதி தமிழ்நாடு மோட்டார் வாகனங்கள் (கட்டுப்பாடு மற்றும் நடைமுறைப்படுத்துதல்) சிறப்பு விதிகள் 2012-ன் படி மாவட்ட நிர்வாகம், காவல்துறை, போக்குவரத்துத்துறை, பள்ளிக்கல்வித்துறை ஆகிய துறைகள் இணைந்து பள்ளி வாகனங்களை கூட்டாய்வு செய்து வருகிறார்கள்.அதன்படி, விருதுநகர் மாவட்டத்தில் உள்ள விருதுநகர், சிவகாசி மற்றும் ஸ்ரீவில்லிபுத்தூர் வட்டாரப் போக்குவரத்து அலுவலகங்கள் மற்றும் இராஜபாளையம், அருப்புக் கோட்டை மோட்டார் வாகன ஆய்வாளர் அலுவலகங்கள் ஆகியவற்றின் கட்டுப்பாட்டில் பள்ளி வாகன அனுமதிச்சீட்டு பெற்றுள்ள  அனைத்து பள்ளிகளின்  வாகனங்களும் இன்று  ஆய்வு செய்யப்பட்டது.  அதனடிப்படையில்,  விருதுநகர் மாவட்டத்தில், (விருதுநகர்-46, ஸ்ரீவில்லிபுத்தூர்-28, சிவகாசி-29, அருப்புக்கோட்டை-30, இராஜபாளையம்-48)  மொத்தம்-181 பள்ளிகளில், விருதுநகர்-244, ஸ்ரீவில்லிபுத்தூர்-83, சிவகாசி-132, அருப்புக்கோட்டை-154, இராஜபாளையம்-166 என  மொத்தம் 779  பள்ளி வாகனங்களுக்கு அனுமதிச்சீட்டு வழங்கப்பட்டுள்ளது.  அவற்றில் 779    பள்ளி வாகனங்கள் ஆய்வுக்கு உட்படுத்தப்பட்டுள்ளது.  அதில்        654 பள்ளி வாகனங்கள் முழுத்தகுதி உடையவையாக உள்ளன.   62     பள்ளி வாகனங்கள் முழுத்தகுதி இல்லாத காரணத்தினால் தகுதியற்றவையாக நிராகரிக்கப்பட்டுள்ளது.  நிராகரிக்கப்பட்ட வாகனங்கள் குறைகளை நிவர்த்தி செய்து மீண்டும் ஆய்வுக்கு கொண்டுவர அறிவுறுத்தப்பட்டுள்ளது.  மீதமுள்ள  வாகனங்கள் தகுதி பெறும் பொருட்டு பள்ளி நிர்வாகத்தால் வாகன பணிமனைகளில் நிறுத்தப்பட்டு பழுதுநீக்கம் செய்யப்பட்டு வருகின்றன.இந்த ஆய்வில், தீயணைப்புக் கருவிகள் பொருத்தப்பட்டு முறையாக பராமரிக்கப்படுகிறதா, உரிய மருத்துவ உபகரணங்களுடன் கூடிய முதலுதவிப்பெட்டி பொருத்தப் பட்டுள்ளதா,அவசரகால வழிகள் அமைக்கப்பட்டுள்ளதா, வேகக் கட்டுப்பாட்டு கருவி பொருத்தப்பட்டுள்ளதா, உரிய நடத்துநர் உரிமம் பெற்ற  உதவியாளர் மாணவ, மாணவியர்கள் உரிய முறையில் வாகனத்தில் ஏறி இறங்கும் பொழுது உதவி புரியும் வகையில் பணியமர்த்தப்பட்டுள்ளாரா, மாணவ, மாணவியர் வாகனத்தில் எளிதாக ஏறும் வகையில் படிக்கட்டின் முதல் படி தரையில் இருந்து 25 செ.மீ இல் இருந்து 30 செ.மீ ற்குள் உள்ளவாறு அமைக்கப்பட்டுள்ளதா, வாகன ஓட்டுநரின் இருக்கைப்பகுதி தனியாக பிரிக்கப்பட்டுள்ளதா, இருக்கைகள் முறையாக வாகனத்தின் தரைத்தளத்துடன் டீழடவள- மூலம் பொருத்தப்பட்டுள்ளதா, புத்தகப்பைகள் வைத்திட தனியாக இடம் அமைக்கப்பட்டுள்ளதா, வாகனத்தின் தரைத்தளம் நல்ல தரத்துடன் பொருத்தப்பட்டுள்ளதா,  வாகனத்தின் பக்கவாட்டு ஜன்னல்கள் மாணவ, மாணவியர் கரம், சிரம் நீட்டாதவாறு, மூன்று நீளமாக கிடைமட்ட கம்பிகளால் பொருத்தப்பட்டு பாதுகாப்பாக உள்ளதா, போன்றவை குறித்தும் ஆய்வு செய்யப்பட்டது.பள்ளி வாகனங்கள் மாணவர்களின் பாதுகாப்பு கருதி விபத்தில்லாமல் பாதுகாப்பு நடைமுறைகளை பின்பற்றி பள்ளி குழந்தைகளை பாதுகாப்பாக வாகனங்களில் அழைத்து சென்று வர வேண்டும் என பள்ளி வாகன ஓட்டுனர்கள் மற்றும் உதவியாளர்களுக்கு மாவட்ட ஆட்சித்தலைவர் முனைவர் வீ.ப.ஜெயசீலன்.,இ.ஆ.ப.,அவர்கள் அறிவுறித்தினார்கள். பின்னர், தீயணைப்பு மற்றும் மீட்புத்துறை மூலமாக வாகனத்தில் தீ விபத்து ஏற்படும்போது செய்ய வேண்டிய மீட்பு மற்றும் சீரமைப்பு நடவடிக்கைகள் குறித்த செயல் விளக்கம் செய்து காண்பிக்கப்பட்டது. பள்ளிகளில் பயணம் செய்யும் குழந்தைகளுக்கு ஆபத்து காலங்களில் செய்யப்படும் முதல் உதவிப் பயிற்சி, விருதுநகர் மாவட்ட 108 அவசர ஊர்தி அலுவலர்களால் செயல்முறை விளக்கம் நடத்தி காண்பிக்கப்பட்டது. மேலும், இந்த ஆய்வில் கலந்து கொண்ட அனைத்து ஒட்டுநர்கள் மற்றும் உதவியாளர் அனைவரும் பயன்பெறும் வகையில் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்திலிருந்து மருத்துவர்கள் இலவசமாக இரத்த அழுத்தம் மற்றும் இரத்தத்தில் சக்கரையின் அளவு பார்க்கப்பட்டது.இந்த ஆய்வின் போது, வருவாய் கோட்டாட்சியர்கள், விருதுநகர், சிவகாசி, மற்றும் ஸ்ரீவில்லிபுத்தூர் வட்டாரப் போக்குவரத்து அலுவலர்கள், இயக்கூர்தி ஆய்வாளர்கள், பள்ளிக்கல்வி துறையைச் சேர்ந்த அலுவலர்கள், தீயணைப்புத்துறை அலுவலர்கள் மற்றும் அரசு அலுவலர்கள்  உட்பட பலர் கலந்து கொண்டனர்.

May 10, 2024

பட்டாசு ஆலையில் ஏற்பட்ட வெடி விபத்தில் காயமடைந்த சிகிச்சை குறித்து ஆய்வு

விருதுநகர் மாவட்டம், சிவகாசி வட்டம், செங்கமலைபட்டி கிராமத்தில் இயங்கிய தனியாருக்குச் சொந்தமான பட்டாசு ஆலையில்  (9.5.2024) எதிர்பாராதவிதமாக ஏற்பட்ட வெடி விபத்தில் காயமடைந்து சிவகாசி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவரும் தொழிலாளர்களை மாவட்ட ஆட்சித்தலைவர் முனைவர் வீ.ப.ஜெயசீலன், I A S, அவர்கள் நேரில் சென்று பார்வையிட்டு ஆறுதல் தெரிவித்து அவர்களுக்கு வழங்கப்படும் சிகிச்சை குறித்து மருத்துவர்களிடம் கேட்டறிந்தார்.

1 2 ... 54 55 56 57 58 59 60 ... 69 70

AD's



More News