விருதுநகர் மாவட்டம், சாத்தூர் எஸ்.ஆர்.என்.எம் கல்லூரியில் விருதுநகர் கல்வி மாவட்டத்தைச் சேர்ந்த அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் நடப்பாண்டில் 11 மற்றும் 12 ஆம் வகுப்பு மாணவ, மாணவிகளுக்கு, நான் முதல்வன் திட்டத்தின் கீழ் உயர்கல்வி வழிகாட்டுதல் நிகழ்ச்சி (28.06.2024) மாவட்ட ஆட்சித்தலைவர் முனைவர் வீ.ப.ஜெயசீலன், I A S., அவர்கள் தலைமையில் நடைபெற்றது.2024-25 கல்வியாண்டில் அரசு மற்றும் அரசு உதவிபெறும் பள்ளிகளில் 11 மற்றும் 12 ஆம் வகுப்பு பயிலும் மாணவர்களுக்கு, கல்லூரிகள் தேர்வு, உயர்கல்வி வாய்ப்புகள் நுழைவு தேர்வுகளுக்கு தங்களை எவ்வாறு தயார் செய்வது கொள்வது என்பது குறித்த வழிகாட்டுதல் வழங்கும் வகையில் இந்த நிகழ்ச்சியில் மாவட்ட ஆசிரியர் பயிற்சிப் பள்ளி விரிவுரையாளர்கள் (ம) ஆசிரியர்கள் மூலம் உரிய வழிகாட்டுதல்கள் வழங்கப்பட்டடு வருகிறது. ஒவ்வொரு நாளும் தலா 2500 மாணவர்கள் வீதம் 7 நாட்கள் சுமார் 17,398 மாணவ, மாணவிகள் கலந்து கொள்ளும் நிகழ்ச்சி 26.06.2024 அன்று தொடங்கப்பட்டு நடத்தப்பட்டு வருகிறது.மூன்றாம் நாளான இன்று சாத்தூர் எஸ்.ஆர்.என்.எம் கல்லூரியில் விருதுநகர் கல்வி மாவட்டத்தில் சாத்தூர் பகுதிகளைச் சேர்ந்த அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் நடப்பாண்டில் 11 மற்றும் 12 ஆம் வகுப்பு மாணவ, மாணவிகளுக்கு உயர்கல்வி வழிகாட்டுதல் நிகழ்ச்சி நடைபெற்றது.இந்த நிகழ்ச்சி மூலம் அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் பயிலும் மாணவர்களுக்கு 12 ஆம் வகுப்பு முடித்த பிறகு கல்லூரிகள் தேர்வு, உயர்கல்வியில் உள்ள வாய்ப்புகள், நீட், கிளாட், ஜே.இ.இ, மத்திய பல்கலைக்கழக சேர்க்கைக்கான நுழைவுத்தேர்வுகள் உள்ளிட்ட பல்வேறு நுழைவுத் தேர்வுகளைஎவ்வாறு எதிர்கொள்வது, அதற்கு எவ்வாறு தயார்படுத்திக் கொள்வது, அதற்கான கட் ஆப் மதிப்பெண்கள், உள்ளிட்ட வழிகாட்டுதல்களை வழங்குவதே இந்நிகழ்ச்சியின் முக்கிய நோக்கமாகும்.அரசு பள்ளிகளில் படிக்கின்ற மாணவர்களின் பெற்றோர்களுக்கு இன்றைய சூழ்நிலையில் தினக்கூலி சம்;பளமாக பெற எவ்வளவு கடினமாக உழைக்க வேண்டியுள்ளது என்பது எல்லோருக்கும் தெரியும்.அரிதான மிகப் பெரிய கல்வி நிறுவனங்களில் சேர வேண்டும் படித்து நல்ல வேலை கிடைக்க வேண்டும் அதன் மூலம் சம்பாதித்து நமது பொருளாதார நிலையையும், சமூக மரியாதையையும் உயர்த்த வேண்டும் என்ற நோக்கில் தான் பெரும்பாலான மாணவர்கள் படிக்கிறார்கள்.ஆனால், நீங்கள் எடுக்கக்கூடிய சிறிய முயற்சியில் மிகப் பெரிய வாய்ப்புகள் இருக்கின்றது. நீங்கள் எந்த துறையை சேர்ந்து படித்தாலும் அதில் என்னென்ன வாய்ப்புகள் இருக்கிறது என்பதை தெரிந்து கொள்ள வேண்டும்.மதிப்பெண்கள் எடுப்பது எவ்வளவு முக்கியமோ, அதை விட எடுத்த மதிப்பெண்கள் மூலம் கிடைக்கும் வாய்ப்பு குறித்து விழிப்புணர்வு மாணவர்களுக்கு இருக்க வேண்டும்.மத்திய, மாநில அரசு கல்வி நிறுவனங்களில் வாய்ப்பு கிடைத்து படிக்கும் போது, அங்கு கல்விக் கட்டணம் மிகக்குறைவு. மேலும், உங்களுக்கு கிடைக்கக்கூடிய உதவித்தொகையும் நீங்கள் செலுத்தக்கூடிய கல்வி கட்டணத்தை விட அதிகமாகவே கிடைக்கின்றன. ஆகையால் நீங்கள் எந்த ஒரு செலவினமும் இல்லாமலும், பெற்றோர்களுக்கு கல்வி கட்டணம் குறித்த கஷ்டம் இல்லாமலேயே நீங்கள் படித்து முடித்து விடுவதற்கான வாய்ப்புகள் இருக்கின்றன. இது குறித்த விழிப்புணர்வு யாருக்கும் இருப்பதில்லை.உயர் கல்விக்கு நிறைய செலவு செய்ய வேண்டும் என்ற கற்பனை இருக்கிறது. ஆனால் இது குறித்த வாய்ப்புகள் நிறைய பேருக்கு தெரிவதில்லை. வழிகாட்டுதல் இருக்கக்கூடிய, பொருளாதாரத்தில் முன்னேறி இருக்கக்கூடிய அல்லது ஓரளவுக்கு விபரங்கள் தெரிந்து தேடக்கூடிய மாணவர்கள் மட்டுமே இந்த வாய்ப்புகளை தெரிந்து கொண்டு, அதன் பலனை அனுபவித்து கொண்டிருக்கிறார்கள். இது குறித்து அரசு மற்றும் அரசு உதவிபெறும் பள்ளிகளில் பயிலும் மாணவர்களுக்கும் விழிப்புணர்வு வேண்டும்.எந்த துறைக்கு எப்படி விண்ணப்பிப்பது, அதற்கான மதிப்பெண்கள் என்ன அதற்கு எந்த மாதிரியான கேள்விகள் கேட்பார்கள் என்று ஆராய்ந்து படித்தாலே போதும்.மாணவ, மாணவிகள் உயர்கல்வியில் சேருவதற்கான வாய்ப்புகள் நிறைய இருக்கின்றன. உயர்கல்வி பயில்வதற்கு அரசு நலத்திட்டங்களும், உதவிகளும், கல்வி உதவித்தொகை, இட ஒதுக்கீடு, பெண்களுக்கு புதுமைபெண் திட்டம், மாணவர்களுக்கு தமிழ்ப்புதல்வன் திட்டம் மூலம் பல்வேறு உதவிகளை அரசு செய்து வருகிறது.
விருதுநகர் மாவட்ட ஆட்சியர் அலுவலக வளர்ச்சி மன்ற கூட்டரங்கில், மாற்றுத்திறனாளிகளுக்கான சிறப்பு குறை தீர்க்கும் நாள் கூட்டம் மாவட்ட ஆட்சித்தலைவர் முனைவர் வீ.ப.ஜெயசீலன்,I A S., அவர்கள் தலைமையில் (28.06.2024) நடைபெற்றது.இம்முகாமில், மாற்றுத்திறனாளிகள் உதவித்தொகை, இலவச தையல் இயந்திரம், ஸ்மார்ட் போன், மாற்றுத்திறனாளிக்கான இலவச வீட்டுமனைப்பட்டா, மாற்றுத்திறனாளிகளுக்கான இலவச பேருந்து பயண அட்டை, மாற்றுத்திறனாளிக்கான வேலைவாய்ப்பு, தொழில் தொடங்குவதற்கான கடன் வசதி உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் தொடர்பாக 407 மனுக்கள் பெறப்பட்டது. இம்மனுக்களை மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் சம்மந்தப்பட்ட துறை அலுவலர்களிடம் ஒப்படைத்து உரிய நடவடிக்கை எடுக்குமாறு உத்தரவிட்டார்கள்.இக்கூட்டத்தில் மனு அளித்த மாற்றுத்திறனாளிக்கு மனுக்களை உடனடியாக பரிசீலனை செய்து, அதில் ஒரு நபருக்கு ரூ.10,200 மதிப்பில் மூன்று சக்கர சைக்கிளையும், மற்றொரு நபருக்கு ரூ.3200 மதிப்பில் காதொலி கருவியையும் மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் வழங்கினார்.இந்த நிகழ்வின் போது, மாவட்ட வருவாய் அலுவலர் திரு.இரா.ராஜேந்திரன், மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலர் திரு.ஜெயபிரகாஷ் உட்பட அரசு அலுவலர்கள், மாற்றுத்திறனாளிகள் பலர் கலந்து கொண்டனர்.
‘ஒரு துளி அதிக பயிர்” திட்டத்தின் கீழ் விருதுநகர் மாவட்டத்திற்கு 1000 ஹெக்டர் பொருள் இலக்கும் 300 இலட்சம் நிதி இலக்கும் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.இத்திட்டத்தின் கீழ் நுண்ணீர்ப்பாசன அமைப்புகள் நிறுவுவதற்கு சிறு / குறு விவசாயிகளுக்கு 100% மானியமும், இதர விவசாயிகளுக்கு 75% மானியமும் வழங்கப்படுகிறது. இத்திட்டத்தின் கீழ் சிறு / குறு விவசாயிகள் அதிகபட்சமாக 2 ஹெக்டர் வரையும், இதர விவசாயிகளுக்கு அதிகபட்சமாக 5 ஹெக்டர் வரையும் நுண்ணீர்ப்பாசனம் அமைத்து பயன்பெறலாம். மேலும் ‘ ஒரு துளி அதிக பயிர்” சொட்டு நீர்ப்பாசன திட்டத்தின் கீழ் பயன்பெறும் விவசாயிகள் துணை நீர் மேலாண்மைத் திட்டத்திலும் இணைந்து பயன்பெறலாம். துணை நீர் மேலாண்மை திட்டத்தின் கீழ் பாதுகாக்கப்பட்ட குறுவட்டங்களில் ஆழ்துளைக் கிணறு அமைப்பதற்கு அதிகபட்சமாக ரூ.25,000/- மானியமாக வழங்கப்படும் . மேலும் நீர் சேமிப்பு அமைப்புகள் நிறுவுவதற்கு 1 கன மீட்டருக்கு ரூ.125/- என்ற அடிப்படையில் அதிகபட்சமாக ரூ.75,000/- மானியமாக வழங்கப்படும்.புதிதாக அமைக்கப்பட்ட ஆழ்துளைக் கிணறு / திறந்த வெளி கிணறுகளில் மோட்டார் (மின் மோட்டார், சூரிய ஒளி, டீசல் மோட்டார்) நிறுவுவதற்கு அதிகபட்சமாக ரூ.15,000/- மானியம் வழங்கப்படும். நீர் ஆதாரங்களில் இருந்து நிலத்திற்கு பாசன குழாய்கள் மூலம் பாசன நீர் கொண்டு செல்வதற்கு அதிகபட்சமாக ஒரு எக்டருக்கு ரூ10,000/- வரை மானியம் வழங்கப்படும். மேலும் சொட்டுநீர் பாசனத்திற்கு தானியங்கி (Automation) பாசன அமைப்பு நிறுவுவதற்கு 1 எக்டர் பரப்பிற்கு ரூ.20,000/- வரை மானியம் வழங்கப்படும்.மேற்காணும் திட்டங்களில் பயன்பெற ஆர்வமுள்ள விவசாயிகள் ஆதார் அட்டைநகல், குடும்ப அட்டை நகல், பட்டா, பயிர் அடங்கல், சிறு /குறு விவசாயி சான்று, வங்கி கணக்கு புத்தக நகல் ஆகிய ஆவணங்களுடன் தாங்கள் MIMIS என்ற இணையத்தின் மூலம் அல்லது வட்டார தோட்டக்கலை உதவி இயக்குநர் அலுவலகங்களை நேரில் அணுகி பயன்பெறுமாறுமாவட்ட ஆட்சித்தலைவர் முனைவர் வீ.ப.ஜெயசீலன், I A S., அவர்கள் தெரிவித்துள்ளார்
விருதுநகர் மாவட்டத்தில் 2024-25-ஆம் ஆண்டிற்கு “மண்ணுயிர் காத்து மன்னுயிர் காப்போம்” திட்டத்தின் கீழ் மாநில தோட்டக்கலை வளர்ச்சி திட்டத்தின் மூலமாக 25,300 எண்கள் ஊட்டச்சத்து தளைகள் விநியோகம் செய்ய ரூ.11.385/- இலட்சம் நிதி ஒதுக்கீடு பெறப்பட்டுள்ளது.அதன்படி, வீட்டுத் தோட்டத்தில் ஊட்டச்சத்து மிக்க செடிகள் வளர்ப்பதை ஊக்குவிக்கும் பொருட்டு வாழை, முருங்கை, பப்பாளி, கறிவேப்பிலை போன்ற 4 வகையான செடிகள் அடங்கிய தொகுப்பு இத்திட்டத்தின் கீழ் வழங்கப்படும்.தொகுப்பு ஒன்றின் மொத்த விலை ரூ.60/- ஆகும். இத்தொகுப்பு 75% சதவீத மானியத்தில் ரூ.45/-க்கு வழங்கப்படும். பயனாளியின் பங்கு தொகை ரூ.15/- ஆகும். ஒரு குடும்பத்திற்கு அதிகபட்சமாக ஒரு ஊட்டச்சத்து தொகுப்பு மட்டுமே வழங்கப்படும். இத்திட்டத்தில், பயன்பெற ஆர்வமுள்ள பயனாளிகள் https://tnhorticulture.tn.gov.in என்ற இணையதளத்திலோ அல்லது உழவன் செயலியில் பதிவு செய்தோ அல்லது அந்தந்த வட்டார தோட்டக்கலை உதவி இயக்குநர் அலுவலகங்களை அணுகி உரிய ஆவணங்கள் சமர்ப்பித்து பயன்பெறுமாறு மாவட்ட ஆட்சியர் முனைவர் வீ.ப.ஜெயசீலன், I A S., அவர்கள் தெரிவித்துள்ளார்.
விருதுநகர் மாவட்டம் திருச்சுழி வட்டம் செந்நிலைக்குடி கிராமத்தில் வேளாண்மை துறையின் மூலம் வேளாண்மை தொழில்நுட்ப மேலாண்மை முகமை மற்றும் விரிவாக்க சீரமைப்பு திட்டம் இணைந்து நடத்திய கிராம வேளாண் முன்னேற்ற குழு கூட்டம் மற்றும் காரீப் பருவ கால பயிற்சி வகுப்பு மாவட்ட ஆட்சித்தலைவர் முனைவர் வீ.ப.ஜெயசீலன், I A S., அவர்கள் தலைமையில் (25.06.2024) நடைபெற்றது.இந்நிகழ்ச்சியில் வேளாண்மை இயந்திரமாக்கல் திட்டத்தின்கீழ், ரூ.42,000/- மானியத்தில் ரொட்டவேட்டர் இயந்திரத்தையும், தேசிய வேளாண் வளர்ச்சித் திட்டத்தின் கீழ் 50 சதவீத மானியத்தில் 12.5 கிலோ நெல் நுண்ணூட்ட உரமும், 50 சதவீத மானியத்தில் உயிர் உரம் அசோஸ்பைரில்லம் மற்றும் பாஸ்போ பாக்டீரியா கரைசலும், மாநில வேளாண் வளர்ச்சித் திட்டத்திம் நெல்லுக்குப்பின் பயறு என்ற இனத்தின் கீழ் 50 சதவீத மானியத்தில் 20 கிலோ பாசிப்பயறுகளையும் மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் விவசாயிகளுக்கு வழங்கினார்.வேளாண்மைத்துறையில் உள்ள தொழில்நுட்பங்கள், உற்பத்தியில் இயந்திரங்களை பயன்படுத்துதல் குறித்தும், அரசின் புதிய திட்டங்கள் குறித்தும் விவசாயிகளுக்கு எடுத்துக் கூறி விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும்.தற்போது, விவசாயிகள் காய்கறி விவசாயத்தில் நல்ல லாபம் கிடைப்பதாக சொல்கிறார்கள். அதற்கும் அரசு பல்வேறு உதவிகளை செய்கிறது. பந்தல் அமைப்பதற்கான மானியங்கள் அரசு வழங்குகிறது. இது போன்ற என்னென்ன மானியங்கள் மற்றும் திட்டங்கள் உள்ளது என்பதை கேட்டு தெரிந்து கொண்டு, எல்லோரிடமும் எடுத்துக்கூற வேண்டும்.நமது மாவட்டத்தில் விவசாயம் சார்ந்த மக்கள் அதிகம் உள்ளனர். விவசாயத்தைப் பொறுத்தவரை எல்லா காலகட்டத்திலும் லாபகரமாக செய்ய முடியாது. அது காலநிலையை பொருத்து மாறிக்கொண்டே இருக்கும். அதனால் இது போன்ற தொழில்நுட்பங்களை எல்லாம் முடிந்த அளவுக்கு விவசாயத்தில் பயன்படுத்த வேண்டும்.அதற்கு மாவட்டத்தில் வேளாண்மைத் துறையில் 1000-க்கும் மேற்பட்ட நபர்கள் வேலை செய்கிறார்கள். அவர்கள் எல்லோரும் அரசின் திட்டங்களையும், நவீன தொழில்நுட்பத்தையும் விவசாயிகளுக்கு எடுத்துச் சொல்லி விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும்.விவசாய துறை வல்லுநர்கள் ஒவ்வொரு பகுதிகளுக்கும் சென்று ஆய்வு மேற்கொண்டு சிறப்பாக செயல்பட வேண்டும் என தெரிவித்தார்.
விருதுநகர் சத்திரிய பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் விருதுநகர் கல்வி மாவட்டத்தைச் சேர்ந்த அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் நடப்பாண்டில் 11 மற்றும் 12 ஆம் வகுப்பு மாணவ, மாணவிகளுக்கு, நான் முதல்வன் திட்டத்தின் கீழ் உயர்கல்வி வழிகாட்டுதல் நிகழ்ச்சி (27.06.2024) மாவட்ட ஆட்சித்தலைவர் முனைவர் வீ.ப.ஜெயசீலன், I A S, அவர்கள் தலைமையில் நடைபெற்றது.2024-25 கல்வியாண்டில் அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் 11 மற்றும் 12 ஆம் வகுப்பு பயிலும் மாணவர்களுக்கு, கல்லூரிகள் தேர்வு, உயர்கல்வி வாய்ப்புகள் நுழைவு தேர்வுகளுக்கு தங்களை எவ்வாறு தயார் செய்வது கொள்வது என்பது குறித்த வழிகாட்டுதல் வழங்கும் வகையில் இந்த நிகழ்ச்சியில் மாவட்ட ஆசிரியர் பயிற்சிப் பள்ளி விரிவுரையாளர்கள் (ம) ஆசிரியர்கள் மூலம் உரிய வழிகாட்டுதல்கள் வழங்கப்பட்டடு வருகிறது. ஒவ்வொரு நாளும் தலா 2500 மாணவர்கள் வீதம் 7 நாட்கள் சுமார் 17,398 மாணவ, மாணவிகள் கலந்து கொள்ளும் நிகழ்ச்சி 26.06.2024 அன்று தொடங்கப்பட்டு நடத்தப்பட்டு வருகிறது.இரண்டாம் நாளான இன்று விருதுநகர் சத்திரிய பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் விருதுநகர் கல்வி மாவட்டத்தைச் சேர்ந்த அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் நடப்பாண்டில் 11 மற்றும் 12 ஆம் வகுப்பு மாணவ, மாணவிகளுக்கு உயர்கல்வி வழிகாட்டுதல் நிகழ்ச்சி நடைபெற்றது.இந்த நிகழ்ச்சி மூலம் அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் பயிலும் மாணவர்களுக்கு 12 ஆம் வகுப்பு முடித்த பிறகு கல்லூரிகள் தேர்வு, உயர்கல்வியில் உள்ள வாய்ப்புகள், நீட், கிளாட், ஜே.இ.இ, மத்திய பல்கலைக்கழக சேர்க்கைக்கான நுழைவுத்தேர்வுகள் உள்ளிட்ட பல்வேறு நுழைவுத்தேர்வுகளை எவ்வாறு எதிர்கொள்வது, அதற்கு எவ்வாறு தயார்படுத்திக் கொள்வது, அதற்கான கட் ஆப் மதிப்பெண்கள், உள்ளிட்ட வழிகாட்டுதல்களை வழங்குவதே இந்நிகழ்ச்சியின் முக்கிய நோக்கமாகும்.இந்த வருடம் கல்வியாண்டின் தொடக்கத்திலேயே இந்த நிகழ்ச்சி நடத்தப்படுகிறது. நாம் பார்க்கக் கூடிய வாய்ப்புகளில் சிறந்த வாய்ப்புகள் என்ன என்பது 90 சதவீதம் மாணவர்களுக்கு தெரிவதில்லை.நிறைய நபர்கள் ஆசைப்படுகின்றனர் அல்லது கிடைப்பதற்கு அரிதான மிகப் பெரிய கல்வி நிறுவனங்களில் சேர வேண்டும் படித்து நல்ல வேலை கிடைக்க வேண்டும் அதன் மூலம் சம்பாதித்து நமது பொருளாதார நிலையையும், சமூக மரியாதையையும் உயர்த்த வேண்டும் என்ற நோக்கில் தான் பெரும்பாலான மாணவர்கள் படிக்கிறார்கள்.அது கிடைப்பதற்கு வாய்ப்புகளை எளிதாக ஏற்படுத்தி தரக்கூடிய சிறந்த கல்லூரி நிறுவனங்கள் இந்தியா முழுவதிலும், தமிழகத்திலும் இருக்கின்றன. ஆனால் அது குறித்து குறிப்பாக அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் பயிலும் குழந்தைகளுக்கு பெரும்பாலும் தெரிவதில்லை. உதாரணத்திற்கு ஐஐடி பல்கலைக்கழகத்திலேயே நிறைய துறைக்கான பாடப்பிரிவுகள் உள்ளன. நான்கு வருட ஆசிரியர் பயிற்சி பாடப்பிரிவு உள்ளது. இந்த பாடப் பிரிவுக்கு கல்வி கட்டணம் மிகக்குறைவு. மேலும், உங்களுக்கு கிடைக்கக்கூடிய உதவித்தொகையும் நீங்கள் செலுத்தக்கூடிய கல்வி கட்டணத்தை விட அதிகமாகவே கிடைக்கின்றன. ஆகையால் நீங்கள் எந்த ஒரு செலவினமும் இல்லாமலும், பெற்றோர்களுக்கு கல்வி கட்டணம் குறித்த கஷ்டம் இல்லாமலேயே நீங்கள் படித்து முடித்து விடுவதற்கான வாய்ப்புகள் இருக்கின்றன. இது குறித்த விழிப்புணர்வு யாருக்கும் இருப்பதில்லை.உயர் கல்விக்கு நிறைய செலவு செய்ய வேண்டும் என்று கற்பனை இருக்கிறது. ஆனால் இது குறித்த வாய்ப்புகள் நிறைய பேருக்கு தெரிவதில்லை. வழிகாட்டுதல் இருக்கக்கூடிய, பொருளாதாரத்தில் முன்னேறி இருக்கக்கூடிய அல்லது ஓரளவுக்கு விபரங்கள் தெரிந்து தேடக்கூடிய மாணவர்கள் மட்டுமே இந்த வாய்ப்புகளை தெரிந்து கொண்டு, அதன் பலனை அனுபவித்து கொண்டிருக்கிறார்கள். இது குறித்து அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் பயிலும் மாணவர்களுக்கும் விழிப்புணர்வு வேண்டும்.எந்த துறைக்கு எப்படி விண்ணப்பிப்பது, அதற்கான மதிப்பெண்கள் என்ன அதற்கு எந்த மாதிரியான கேள்விகள் கேட்பார்கள் என்று ஆராய்ந்து படித்தாலே போதும். பொழுதுபோக்கிற்காக உபயோகப்படுத்தும் சமூக ஊடகங்கள், யூ-டியுப் போன்றவற்றில் தான் நமக்கு தேவையான பயனுள்ள அனைத்து விஷயங்களையும் கிடைக்கின்றன.இன்னும் நிறைய பெற்றோர்கள் மற்றும் மாணவர்கள் மத்தியில் நிறைய செலவு செய்தால் தான் உயர் கல்வி படிக்க முடியும் என்ற கற்பிதங்கள் உள்ளன. மாணவ, மாணவிகள் உயர்கல்வியில் சேருவதற்கான வாய்ப்புகள் நிறைய இருக்கின்றன. உயர்கல்வி பயில்வதற்கு அரசு நலத்திட்டங்களும், உதவிகளும், கல்வி உதவித்தொகை, இட ஒதுக்கீடு, பெண்களுக்கு புதுமை பெண் திட்டம், மாணவர்களுக்கு தமிழ்ப்புதல்வன் திட்டம் மூலம் பல்வேறு உதவிகளை அரசு செய்து வருகிறது.அரசு உயர்கல்விக்கு பல நூறு கோடிகளை ஒதுக்குகிறது. இந்த அரசு திட்டங்களை நாம் பயன்படுத்திக் கொள்ள வேண்டும். அதனை பெறுவதற்கு முதலில் மதிப்பெண்கள் எவ்வளவு பெற வேண்டும் என்பதை தெரிந்து கொள்ள வேண்டும். நுழைவுத் தேர்வு பற்றி தெரிந்து கொள்ள வேண்டும். ஒவ்வொரு நாளும் நீங்கள் கொஞ்சம் கொஞ்சமாக முயற்சிகளை மேற்கொண்டீர்கள் என்றால், இது போன்ற வாய்ப்புகளை நீங்கள் பெற்றுக் கொள்ளலாம்.இந்த நிகழ்ச்சியை நீங்கள் பயன்படுத்தி உங்களுடைய வாய்ப்புகளை தெரிந்து கொண்டு அந்த இலக்கை அடைந்து வெற்றியாளர்களாக மாற வேண்டும் என தெரிவித்தார்.இன்று முற்பகலில் நடைபெற்ற நிகழ்ச்சியில், அரசு உதவி பெறும் பள்ளிகளில் பயிலும் சுமார் 1000 மாணவிகளும், பிற்பகலில் நடைபெற்ற நிகழ்ச்சியில் அரசுப்பள்ளிகளில் பயிலும் சுமார் 1000 மாணவர்களும் என மொத்தம் 2000-க்கும் மேற்பட்ட மாணவ, மாணவியர்கள் கலந்து கொண்டு பயன்பெற்றனர்.இந்நிகழ்ச்சியில், விரிவுரையாளர்கள், உயர்கல்வி வழிகாட்டுதல் ஆசிரியர்கள் மூலம் உயர்கல்வியில் உள்ள வாய்ப்புகள், நுழைவுத்தேர்வுகள், தேர்வுகளுக்கு தயார் செய்து எதிர்கொள்ளுதல் குறித்து எடுத்துரைக்கப்பட்டது.
விருதுநகர் மாவட்டம், சிவகாசி அய்ய நாடார் ஜானகி அம்மாள் கல்லூரியில், மாவட்ட நிர்வாகம் மற்றும் சிவகாசி அய்ய நாடார் ஜானகி அம்மாள் கல்லூரி இணைந்து நடத்திய நாடகக்கலை, கோயிற்கலை குறித்த இரண்டுநாள் கருத்தரங்கம் மாவட்ட ஆட்சித்தலைவர் முனைவர் வீ.ப.ஜெயசீலன்., I A S, அவர்கள் தலைமையில் (27.06.2024) நடைபெற்றது.நமது பண்பாட்டு சூழலில் நாடகக்கலை மற்றும் கோயிற்கலை இந்த இரண்டும் அடுத்த தலைமுறைக்கு அறிவியல் நுட்பத்தோடு எடுத்துச் செல்வதற்கும் அவற்றினுடைய கலை பண்பாட்டை புரிந்து கொள்வதற்கும் இந்த நிகழ்ச்சி நடத்தப்படுகிறது.மேலும், 5000 ஆண்டுகள் இருக்கக்கூடிய பண்பாட்டு தொடர்ச்சியில் ஏறத்தாழ 2500 ஆண்டுகள் எழுதப்பட்ட இலக்கியங்கள் இருக்கக்கூடிய ஒரு அறிவு சமூகத்தில் நாடகக்கலையின் வாயிலாக அறிவு கடத்தப்படுவது தொடர்ச்சியாக காலம் காலமாக நடந்து கொண்டு வருகிறது. சங்க இலக்கியத்தில் பல பாடல்களை பார்த்தால் அதுவும் நாடக பாங்கான சூழலில் அமைந்துள்ளது. அதாவது புறநானூறில் புறம் சார்ந்த பாடல்கள் இருந்தாலும், அகநானூற்றில் அகம் சார்ந்த பாடல்கள் இருந்தாலும் அல்லது குறுந்தொகை பாடலாக இருந்தாலும் அனைத்துமே நாடகப் பாங்கான தன்மையில் தான் சங்க இலக்கியம் முழுவதும் இருக்கிறது.அதற்குப் பிறகு வந்த வாழ்வியல் சார்ந்த இலக்கியங்கள் முழுவதுமாகவே நாடகப் பாங்காக தான் இருந்தது. அதுவும் குறிப்பாக சிலப்பதிகாரம் நாடகக்காப்பியம் என்று சொல்லக்கூடிய அளவில் மிக முக்கியமான வாழ்வியல் கருத்தை நாடகப் பாங்கோடு வெளிப்படுத்திக் கொண்டிருக்கிறது. சிலப்பதிகாரத்தை நாம் ஏன் குடிமக்கள் காப்பியம் என்று சொல்கிறோம் என்றால், சாதாரண ஒரு குடிமக்களுக்கு இழைக்கப்பட்ட அநீதியை கூட, அதிகாரத்தில் இருக்கக்கூடிய ஒரு மன்னனை நோக்கி கேள்வி கேட்பதற்கான உரிமை இருக்கிறது. அது தான் ஒரு ஜனநாயக மாண்பு. அந்த உரிமையை விட அதை கேட்டதற்கான தைரியம், ஆற்றல் அந்த பெண்ணுக்கு வேண்டும் அது அடிப்படையில் சொல்வது தான் குடிமக்கள் காப்பியம் என்கிறோம்.இதனை நாடகக்காப்பியம் என்று கூறுகிறார்கள். ஏனென்றால்,இதில் முழுவதுமாக இயல்பான நாடகத்தை இயக்கக்கூடிய அளவிற்கு மக்களுக்கான செய்திகளை கொண்டு சேர்க்கக் கூடிய நாடக பாங்கின் இலக்கியத்தின் உச்சமாக தமிழ் இலக்கியம் இருப்பது சிலப்பதிகாரம் காப்பியங்கள். கம்பராமாயணம் முழுவதுமே ஒவ்வொரு பாடலும் நாடகபாங்கில் தான் இருக்கும்.நமது இலக்கியங்கள் முழுவதுமே நாடக பாங்கான இலக்கியங்கள் தான். அதுவும் பிற்காலத்தில் நமது சுதந்திர போராட்ட காலக்கட்டத்தில் பல தமிழ் நாடகங்கள் தடை செய்யப்பட்டது. அது குறிப்பாக பாஸ்கர சேதுபதி என்ற மிகச் சிறந்த எழுத்தாளர் நாடகங்கள் அதிகமாக எழுதியுள்ளார். அவருடைய நாடகங்கள் பல தடை செய்யப்பட்டது. இந்திய சுதந்திர போராட்டத்தின் போது வெள்ளை காக்கா என்று புகழ் பெற்ற நாடகம். அந்த நாடகத்தில் வெள்ளையர்களை குறிப்பிட்டு சொல்வதற்காக வெள்ளை காக்கா என்ற தலைப்பில் மிகவும் பிரபலமான நாடகத்தை நாடகத்தின் மூலமாகத்தான் இந்த சமுதாயத்தின் உடைய அடுத்தடுத்து மக்களின் வழித்தடங்கள் பேசப்பட்டனர். இந்த சமுதாயத்தின் உடைய பிரச்சனைகள் பேசப்பட்டன. குறிப்பாக விளிம்பு நிலையில் உள்ள மக்கள், கழுவிறக்கத்தில் உள்ளவர்கள் மற்றும் இந்த நாட்டின் இருக்கக்கூடிய சமூக அநீதிகள் அனைத்தையும் தைரியமாக நாடகங்கள் மூலமாக பேசப்பட்டன.நம்முடைய பழைய வரலாற்றை புரிந்து கொள்வதற்கு வரலாற்று ஏடுகளை விட வரலாற்று நாடகங்கள்; மிகப்பெரிய அளவில் பங்கு வகிக்கின்றன. நம்முடைய மரபு என்பது மிகவும் இலக்கிய கலந்த நாடக மரபு. நாடக மரபு சங்க இலக்கியங்களில் இருந்து இன்றைக்கு இருக்கக்கூடிய இன்ஸ்டாகிராம் இலக்கியம் வரை தொடர்ச்சியாக இருக்கிறது. இதிலிருந்து கற்றுக்கொள்வது நிறைய உள்ளது .அதற்கு பிறகு நமது நாடகமரபு பெரிதாக ஏற்றம் பெறவில்லை. அதுவும் குறிப்பாக நமது நவீனஊடகங்கள், காட்சி ஊடகங்கள், சினிமா ஊடகங்கள் வந்த பிறகு அதற்கான இடத்தை பெறவில்லை. அதற்கான இடங்களும் சுருங்கிவிட்டது.மேலும், தமிழில் நிறைய நாடகங்கள், அதாவது சுதந்திர காலகட்டத்தில் நாடகங்கள் நடத்துவது என்பது மிகப்பெரிதாக இருந்தது. தற்பொழுது நவீன தொழில்நுட்பம் அதிகமாக வந்துள்ளது. ஸ்ரீராம்ஷர்மா என்பவர் வேலுநாச்சியார் பற்றி நாடகங்களை எல்லாம் எழுதியுள்ளார். பின்னர் சுதந்திரப் போராட்டத்தை கண்முன்னே கொண்டுவரக் கூடியதாகவும், அந்தபோராட்டதை எப்படி வென்றார்கள் என்றும், எப்படி சூழ்ச்சிகளை மேற்கொண்டார்கள் என்றும், வரலாற்றுப்புத்தகங்களில் பல பக்கங்களை படித்து அறிவதை ஒரு சிலமணித்துளிகளிலே நாடகங்களாக அரங்கேற்றக் கூடிய வகையில் நாடகம் அமைந்திருக்கும்.பாண்டியர் கால கட்டிடகலையில், ஓவியக்கலை மிகுந்த செல்வாக்கை பெற்றுள்ளது . நமது கட்டிடக்கலைகள் மிகநுட்பமாக பேசுவது பாறைஓவியம். பல்லவர்கள் கால குடைவரைக்கோவில்கள் அனைத்தும் மன்னர்கள் காலத்தின் குடவரைக்கோவில்களின் உச்சமாகும். ஒரு குடவரைக்கோவில் என்பது ஒரு மன்னரால் மட்டும் கட்டி முடிக்கமுடியாது. அது ஒரு நீண்டகாலதிட்டம் ஆகும்.இந்நிகழ்வில், மதுரை கலைடாஸ்கோப் நாடக நிறுவனர் முனைவர் இரா.பிரபாகர் மற்றும் காரைக்குடி அழகப்பா பல்கலைக்கழகம், அரங்கம் மற்றும் திரைப்படப் படிப்புகள் துறை உதவிப் பயிற்றுநர் திரு.பூ.பாஞ்சாலிராஜன் ஆகியோர் கற்றல் மேம்பாட்டில் நாடகக்கலை என்ற தலைப்பில் உரையாற்றி பயிற்சிகளை வழங்கினர்.இந்நிகழ்வில் முதுகலைத் தமிழ்த்துறைத் தலைவர் ஒருங்கிணைப்பாளர் முனைவர் அருள்மொழி அவர்கள் வரவேற்புரையும், இளநிலைத் தமிழ்த்துறைத் தலைவர் முனைவர் சந்திரகுமார் அவர்கள் நன்றியுரையும் ஆற்றினர்.இந்நிகழ்ச்சியில், கல்லூரி முதல்வர் முனைவர் அசோக், விருதுநகர், தேனி, தென்காசி, மதுரை, திருநெல்வேலி, தஞ்சாவூர் உள்ளிட்ட மாவட்டங்களைச் சேர்ந்த சுமார் 160 -ற்கு மேற்பட்ட மாணவர்கள், பேராசிரியர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.
விருதுநகர் மாவட்ட ஆட்சியர் அலுவலகக் கூட்டரங்கில் (27.06.2024) உணவுப்பொருள் வழங்கல் மற்றும் நுகர்வோர் பாதுகாப்புத்துறை சார்பில் தேசிய நுகர்வோர் பாதுகாப்பு தினம் மற்றும் உலக நுகர்வோர் உரிமைகள் தின விழா மாவட்ட ஆட்சித்தலைவர் முனைவர் வீ.ப.ஜெயசீலன்.,I A S., அவர்கள் தலைமையில் நடைபெற்றது.தமிழக அரசு நுகர்வோருக்கு தரமான முறையில் பொருட்கள் கிடைக்க பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. நுகர்வோர் என்பவர் பொருட்கள் சேவைகளை விலை கொடுத்து அல்லது வாக்குறுதி கொடுத்து வாங்குபவர் ஆவர். நுகர்வோர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் ஒவ்வொரு ஆண்டும் உலக நுகர்வோர் தினம் மார்ச் 15 அன்றும் தேசிய நுகர்வோர் தினம் டிசம்பர் 24 அன்றும் கொண்டாடப்பட்டு வருகிறது. இந்த நவீன யுகத்தில் நாம் அனைவரும் பல்வேறு பொருட்களை சார்ந்து வாழ வேண்டிய சூழ்நிலை உள்ளது. இந்த தேசிய நுகர்வோர் பாதுகாப்பு தின விழாவின் நோக்கமானது, நுகர்வோர்களுக்கு பாதுகாப்பு உரிமை, தகவல் பெறும் உரிமை, தேர்ந்தெடுக்கும் உரிமை, முறையிடும் உரிமை, குறைதீர்க்கும் உரிமை, நுகர்வோர் கல்விக்கான உரிமை, தூய்மையான நலம் பயக்கும் சுற்றுச்சூழலுக்கான உரிமை, அடிப்படை தேவைகளுக்கான உரிமை ஆகிய உரிமைகளை தெரிந்து கொள்வதே. இதன் மூலம் உடலுக்கும் உயிருக்கும் ஆபத்து விளைவிக்கக் கூடிய பொருட்கள் உற்பத்தி செய்யும் முறைகள் மற்றும் சேவைகளிலிருந்து பாதுகாத்துக் கொள்ளவும், தனக்குத் தேவையான பொருட்களை சுதந்திரமாக தேர்ந்தெடுத்துக் கொள்ளவும், தரமற்ற பொருட்கள் சேவைகள் காரணமாக ஏற்படும் இழப்புகளுக்கு உரிய நஷ்ட ஈடு பெறவும் வழிவகை செய்கிறது.அதன்படி, 2023-2024 - ஆம் ஆண்டிற்கான தேசிய நுகர்வோர் பாதுகாப்பு தினம் மற்றும் உலக நுகர்வோர் உரிமைகள் தின விழாவை முன்னிட்டு, ஓவியம், கவிதை, கட்டுரை உள்ளிட்ட பள்ளிகள் அளவில் நடத்தப்பட்ட விழிப்புணர்வு போட்டிகளில் வெற்றி பெற்று முதல் மூன்று இடங்களை பிடித்தவர்களுக்கு பரிசுகள் மற்றும் பாராட்டு சான்றிதழ்களை மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் வழங்கினார்.மேலும், மாவட்டத்தில் உள்ள பள்ளி மற்றும் கல்லூரிகளில் சிறப்பாக செயல்பட்ட மூன்று குடிமக்கள் நுகர்வோர் மன்றங்களுக்கும், தன்னார்வ நுகர்வோர் அமைப்புகளில் சிறப்பாக செயலாற்றிய நுகர்வோர் அமைப்புகளுக்கும் பாராட்டு சான்றிதழ்களை மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் வழங்கினார்.
விருதுநகர் மாவட்ட ஆட்சியர் அலுவலகக் கூட்டரங்கில் (27.06.2024) மாவட்ட அளவிலான பொது விநியோகத்திட்ட கண்காணிப்புக்குழு கூட்டம் மாவட்ட ஆட்சித்தலைவர் முனைவர் வீ.ப.ஜெயசீலன்.,I A S., அவர்கள் தலைமையில் நடைபெற்றது.தமிழ்நாடு உணவுப் பாதுகாப்பு விதிகள் -2017-ன் படி, 2017-ஆம் ஆண்டு முதல் மாவட்டம், வட்டம், மற்றும் நியாய விலைக்கடை அளவிலான கண்காணிப்புக்குழு உறுப்பினர்கள் தேர்வு செய்யப்பட்டு பொது விநியோகத்திட்ட கண்காணிப்புக் குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளது. மேற்படி கண்காணிப்புக் குழு இரண்டு ஆண்டுகளுக்கு செல்லத்தக்கது.இந்த கண்காணிப்புக் குழுவின் நோக்கமானது பொது விநியோகத்திட்டத்தின் பயன்கள் (PDS- Public Distribution System) உரியவர்களை சென்றடைவதை உறுதி செய்வதற்காக ஏற்படுத்தப்பட்டது.மேலும், பொது விநியோகத் திட்டத்தின் செயல்பாடுகளில் ஏற்படும் குறைபாடுகள் மற்றும் புகார்கள் தொடர்பாக பொதுமக்கள் ஃ குடும்ப அட்டைதாரர்களிடம் (complaint cell) Toll Free Number 1967 மற்றும் 1800 425 5901- என்ற கட்டணமில்லா தொடர்பு எண்களை பயன்படுத்துவது தொடர்பாக விழிப்புணர்வு ஏற்படுத்துதல், குடும்ப அட்டைதாரர்களிடம் முன்னுரிமை குடும்ப அட்டைகள் (PHH Card) மற்றும் முன்னுரிமையற்ற குடும்ப அட்டைகள் (NPHH Card) பெற உள்ள தகுதிகள் மற்றும் தகுதியுடைய நபர்கள் குறித்த விழிப்புணர்வு ஏற்படுத்துதல்.மேலும், பொது விநியோகத் திட்டத்தின் செயல்பாடுகளில் குறைபாடுகள் ஏதும் காணப்பட்டாலோ, புகார்கள் வரப்பெற்றாலோ, அதன் தொடர்பாக சம்மந்தப்பட்ட அலுவலர்களின் கவனத்திற்கும் மற்றும் மாவட்ட குறைதீர்வு அலுவலர்ஃ மாவட்ட வருவாய் அலுவலர் (District Grievance Redressal Officer - DGRO) கவனத்திற்கும் கொண்டு சென்று நடவடிக்கை எடுத்தல், வட்ட மற்றும் நியாய விலைக் கடைகள் வாரியாக அமைக்கப்பட்டுள்ள கண்காணிப்புக் குழுக்களை கண்காணித்தல் ஆகியவை குறித்த பணிகளை மாவட்ட அளவிலான கண்காணிப்புக் குழு மற்றும் உறுப்பினர்கள் மேற்கொண்டு வருகின்றனர். அதன்படி, இந்த மாதத்திற்கான பொது விநியோகத்திட்ட கண்காணிப்புக்குழு கூட்டம் நடைபெற்றது.
விருதுநகர் ஊராட்சி ஒன்றியம் ரோசல்பட்டி ஊராட்சியில், (27.06.2024) செய்தி மக்கள் தொடர்புத்துறையின் சார்பாக வைக்கப்பட்டுள்ள தமிழக அரசின் சாதனை விளக்க புகைப்படக் கண்காட்சியினை பொதுமக்கள் பார்வையிட்டனர்.