திண்டுக்கல் நத்தம் என்.பி.ஆர். கல்லூரி மைதானத்தில் நேற்று நடைபெற்ற டி.என்.பி.எல். லீக் போட்டியில் மதுரை, சேலம் அணிகள் மோதின. ‘டாஸ்’ வென்ற சேலம் அணி முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தது.முதலில் பேட்டிங் செய்த மதுரை அணி, 20 ஓவர்களில் 8 விக்கெட் இழப்புக்கு 195 ரன்கள் குவித்தது.சவாலான இலக்கை துரத்திய சேலம் அணி, 20 ஓவர்களில் 9 விக்கெட் இழப்புக்கு 159 ரன்கள் மட்டுமே எடுத்து தோல்வியடைந்தது. இதன் மூலம் மதுரை அணி வெற்றி பெற்றது.
திண்டுக்கல் நத்தம் பகுதியில் உள்ள என்.பி.ஆர். கல்லூரி மைதானத்தில் நடைபெற்ற டி.என்.பி.எல். லீக் போட்டியில் திண்டுக்கல் மற்றும் சேப்பாக்கம் அணிகள் மோதின. மழை காரணமாக போட்டி ஒரு மணி நேரம் தாமதமாக தொடங்கியது. டாஸ் வென்ற சேப்பாக்கம் அணி முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தது.முதலில் பேட்டிங் செய்த திண்டுக்கல் அணி 20 ஓவர்களில் 8 விக்கெட் இழப்புக்கு 126 ரன்கள் எடுத்தது. இலக்கை விரட்டிய சேப்பாக்கம் அணி 16.2 ஓவர்களில் 3 விக்கெட் இழப்புக்கு 131 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றது.மற்றொரு போட்டியில் நெல்லை மற்றும் திருப்பூர் அணிகள் மோதின. டாஸ் வென்ற திருப்பூர் அணி முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தது. நெல்லை அணி 20 ஓவர்களில் 8 விக்கெட் இழப்புக்கு 206 ரன்கள் குவித்தது.கடினமான இலக்கை துரத்திய திருப்பூர் அணி அதிரடியாக விளையாடி 18.1 ஓவர்களில் 2 விக்கெட் இழப்புக்கு 207 ரன்கள் எடுத்து வெற்றியைப் பதிவு செய்தது.
தென்கொரியாவில் நடைபெற்ற 'சூப்பர் 300' அந்தஸ்து பெற்ற கொரிய மாஸ்டர்ஸ் பாட்மின்டன் தொடரின் பெண்கள் ஒற்றையர் பிரிவு இறுதிப்போட்டியில் இந்தியாவின் அஷ்மிதா சாலிஹா, சீனாவின் ஹான் கியான்சியை எதிர்கொண்டார்.53 நிமிடங்கள் நடைபெற்ற பரபரப்பான போட்டியில் அஷ்மிதா 14-21, 21-14, 21-14 என்ற செட் கணக்கில் வெற்றி பெற்று சாம்பியன் பட்டத்தை கைப்பற்றினார்.அசாமைச் சேர்ந்த அஷ்மிதா, பி.டபிள்யு.எப். உலக டூர் தொடரில் முதல் முறையாக சாம்பியன் பட்டம் வென்றுள்ளார்.
அமெரிக்காவில் நடைபெற்ற 20 வயதுக்கு உட்பட்டோருக்கான உலக இளையோர் தடகள சாம்பியன்ஷிப் போட்டியில் இந்தியாவின் பசந்த் குமார் மேக்வால் உயரம் தாண்டுதல் பிரிவில் வெள்ளிப் பதக்கம் வென்றார்.இறுதிப்போட்டியில் பசந்த் குமார், அல்ஜீரியாவின் யூனஸ் அயாச்சி மற்றும் பிரிட்டனின் ஓடிஸ் பூலே ஆகியோர் தலா 2.21 மீட்டர் உயரத்தைத் தாண்டினர்.இதையடுத்து, அவர்கள் மேற்கொண்ட முயற்சிகளின் எண்ணிக்கையை அடிப்படையாகக் கொண்டு வெற்றியாளர்கள் தேர்வு செய்யப்பட்டனர். இதில் பசந்த் குமார் இரண்டாவது இடத்தைப் பிடித்து வெள்ளிப் பதக்கத்தை கைப்பற்றினார்.ராஜஸ்தானைச் சேர்ந்த இந்திய கடற்படை வீரரான பசந்த் குமார், உலக இளையோர் தடகள போட்டியின் உயரம் தாண்டுதல் பிரிவில் பதக்கம் வென்ற முதல் இந்தியர் என்ற சாதனையைப் படைத்துள்ளார்.
ஸ்காட்லாந்தின் கிளாஸ்கோ நகரில் நடைபெற்ற 23வது காமன்வெல்த் விளையாட்டுப் போட்டியில் இந்திய வீரர், வீராங்கனைகள் சிறப்பாக செயல்பட்டு 13 தங்கம், 17 வெள்ளி, 9 வெண்கலம் என மொத்தம் 39 பதக்கங்களை வென்றனர். இதன் மூலம் பதக்கப்பட்டியலில் இந்தியா 4வது இடத்தைப் பிடித்தது.பளுதூக்குதலில் தங்கப் பதக்கம் வென்ற மீராபாய் சானு உள்ளிட்ட இந்திய நட்சத்திர வீரர், வீராங்கனைகள் நேற்று டெல்லியில் பிரதமர் மோடியை சந்தித்தனர். அப்போது தாங்கள் வென்ற பதக்கங்களை பிரதமரிடம் காண்பித்தனர்.வீரர்களை வாழ்த்திய பிரதமர் மோடி, இந்தியாவை தொடர்ந்து உற்சாகப்படுத்துமாறு கேட்டுக்கொண்டார்.தங்கப் பதக்கம் வென்ற இந்திய குத்துச்சண்டை வீராங்கனை சாக்ஷி கூறுகையில், காமன்வெல்த் போட்டியில் பதக்கம் வென்ற வீரர்களை பிரதமர் மோடி வரவேற்றது பெருமையாக இருந்ததாகவும், அவரை சந்தித்ததில் மகிழ்ச்சி அடைவதாகவும் தெரிவித்தார்.
செயின்ட் லூயிஸ்: ‘கிராண்ட் செஸ் டூர்’ 11-வது சீசன் 5 தொடர்களாக நடைபெற்று வருகிறது. இதன் 4-வது தொடரான செயின்ட் லூயிஸ் செஸ் தொடர், அமெரிக்காவின் செயின்ட் லூயிஸ் செஸ் கிளப்பில் நடைபெற்றது. போட்டிகள் ‘ரேபிட்’ மற்றும் ‘பிளிட்ஸ்’ முறையில் நடத்தப்பட்டன.முதலில் நடைபெற்ற ‘ரேபிட்’ பிரிவில் இந்தியாவின் பிரக்ஞானந்தா 12 புள்ளிகளுடன் முதலிடம் பிடித்தார்.இதையடுத்து நடைபெற்ற ‘பிளிட்ஸ்’ பிரிவில் 18 சுற்றுகள் முடிவில் 11.5 புள்ளிகளுடன் முதலிடம் பிடித்தார்.ஒட்டுமொத்தமாக ‘ரேபிட் + பிளிட்ஸ்’ பிரிவுகளில் 23.5 புள்ளிகள் (12.0 + 11.5) பெற்ற பிரக்ஞானந்தா, செயின்ட் லூயிஸ் தொடரில் முதன்முறையாக சாம்பியன் பட்டம் வென்றார்.
திண்டுக்கல் நத்தம் என்.பி.ஆர். கல்லூரி மைதானத்தில் நேற்று நடைபெற்ற டி.என்.பி.எல். லீக் போட்டியில் சேப்பாக்கம் மற்றும் நடப்பு சாம்பியன் திருப்பூர் அணிகள் மோதின. ‘டாஸ்’ வென்ற திருப்பூர் கேப்டன் சாய் கிஷோர், ‘பீல்டிங்’ தேர்வு செய்தார்.முதலில் பேட்டிங் செய்த சேப்பாக்கம் அணி 20 ஓவர்களில் 8 விக்கெட்டுக்கு 205 ரன்கள் எடுத்தது. பின்னர் களமிறங்கிய திருப்பூர் அணி 18 ஓவர்களில் 3 விக்கெட்டுக்கு 206 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றது.மற்றொரு போட்டியில் நெல்லை மற்றும் திண்டுக்கல் அணிகள் மோதின. ‘டாஸ்’ வென்ற நெல்லை அணி கேப்டன் சோனு யாதவ், ‘பீல்டிங்’ தேர்வு செய்தார்.முதலில் பேட்டிங் செய்த திண்டுக்கல் அணி 20 ஓவர்களில் 7 விக்கெட்டுக்கு 170 ரன்கள் எடுத்தது. இதையடுத்து நெல்லை அணியின் பேட்டிங் தொடர்கிறது.
தென் கொரியாவில் ‘சூப்பர் 300’ அந்தஸ்து பெற்ற கொரிய மாஸ்டர்ஸ் பாட்மின்டன் தொடர் நடைபெற்று வருகிறது. இதில் இந்தியாவின் அஷ்மிதா சாலிஹா, ரக்ஷிதா ஸ்ரீ ஆகியோர் பெண்கள் ஒற்றையர் பிரிவு அரையிறுதிக்கு முன்னேறினர்.காலிறுதியில் இந்திய வீராங்கனைகள் தான்வி சர்மா மற்றும் ரக்ஷிதா ஸ்ரீ மோதினர். முதல் செட்டை தான்வி சர்மா 21-18 எனக் கைப்பற்றினார். 2-வது செட்டை ரக்ஷிதா ஸ்ரீ 21-19 என வென்றார்.வெற்றியாளரைத் தீர்மானிக்கும் 3-வது செட்டில் ரக்ஷிதா ஸ்ரீ 21-18 என வெற்றி பெற்றார். ஒரு மணி நேரம் 1 நிமிடம் நீடித்த போட்டியில் 18-21, 21-19, 21-18 என்ற செட் கணக்கில் வெற்றி பெற்ற ரக்ஷிதா ஸ்ரீ அரையிறுதிக்கு முன்னேறினார்.மற்றொரு காலிறுதியில் இந்தியாவின் அஷ்மிதா சாலிஹா, ஜப்பானின் ஹினா அகேச்சியை எதிர்கொண்டார். இதில் அஷ்மிதா சாலிஹா 20-22, 21-15, 21-19 என்ற செட் கணக்கில் வெற்றி பெற்று அரையிறுதிக்கு தகுதி பெற்றார்.
பிலிப்பைன்சில் ஆசிய ஏரோபிக் ஜிம்னாஸ்டிக்ஸ் சாம்பியன்ஷிப் போட்டி நடைபெற்றது. இதில் இந்தியா சார்பில் அரிஹா வீராங்கனை பங்கேற்றார்.முதலில் நடைபெற்ற ‘ஆர்டிஸ்டிக்’ பிரிவில் அரிஹா 8.650 புள்ளிகளும், அடுத்து நடைபெற்ற ‘எக்ஸிகியூஷன்’ பிரிவில் 7.600 புள்ளிகளும் பெற்றார். ‘டிஃபிகல்ட்டி’ பிரிவில் 2.850 புள்ளிகள் பெற்றார்.ஒட்டுமொத்தமாக 19.100 புள்ளிகள் பெற்ற அரிஹா முதலிடம் பிடித்து தங்கப் பதக்கம் வென்றார்.ஆசிய ஏரோபிக் ஜிம்னாஸ்டிக்ஸ் சீனியர் பிரிவில் தங்கம் வென்ற முதல் இந்தியர் என்ற வரலாற்றையும் அரிஹா படைத்தார்.
அமெரிக்காவில் 20 வயதுக்கு உட்பட்டோருக்கான உலக யூத் தடகள சாம்பியன்ஷிப் போட்டியின் 21-வது சீசன் நடைபெற்று வருகிறது. இதில் 147 அணிகளைச் சேர்ந்த சுமார் 1,800 வீரர், வீராங்கனைகள் பங்கேற்றுள்ளனர்.இந்தியா சார்பில் 23 வீரர்கள், 13 வீராங்கனைகள் என 36 பேர் களமிறங்கியுள்ளனர்.ஆண்களுக்கான 400 மீட்டர் ஓட்டத்தின் தகுதிச்சுற்று நடைபெற்றது. இதில் 5-வது பிரிவில் களமிறங்கிய முகமது ஆஷ்பக் 45.81 வினாடிகளில் இலக்கை கடந்து 2-வது இடம் பிடித்தார். ஒட்டுமொத்தமாக 4-வது இடம் பெற்று அரையிறுதிக்கு முன்னேறினார்.மேலும், 20 வயதுக்கு உட்பட்டோர் பிரிவில் அவர் பதிவு செய்த 45.81 வினாடிகள் புதிய தேசிய சாதனையாக அமைந்தது.ஆண்களுக்கான உயரம் தாண்டுதல் தகுதிச்சுற்றில் இந்தியாவின் பசந்த் அதிகபட்சமாக 2.14 மீட்டர் உயரம் தாண்டினார். ஒட்டுமொத்தமாக 11-வது இடம் பிடித்த அவர், 13 பேர் பங்கேற்கும் இறுதிப்போட்டிக்கு தகுதி பெற்றார்.பெண்களுக்கான வட்டு எறிதல் இறுதிப்போட்டியில் இந்தியாவின் அமனத் கம்போஜ் 53.24 மீட்டர் தூரம் எறிந்தார். இது அவரது சிறந்த செயல்பாடாக அமைந்தது. எனினும், அவருக்கு 6-வது இடமே கிடைத்தது.