ஐடி ஊழியராக இருந்து நடிகரான துல்கர் சல்மான்
தந்தையை பலரும் பெருமையாக பேசுவதை கேட்கும்போது மகனுக்கு மகிழ்ச்சியாக இருக்கும், அதேவேளையில் தனது மகனை பலரும் பாராட்டி பேசும் போது தந்தைக்கு பெருமையாக இருக்கும். இந்த இரண்டு நிகழ்வுகளையும் அனுபவித்தவர்கள் இறைவனின் ஆசிர்வாதத்தை பரிபூரணமாக பெற்றவர்கள் என்றுதான் சொல்ல வேண்டும். மலையாள திரையுலகின் உச்ச நடிகர்களில் ஒருவரான மம்முட்டியும், அவரது மகனும் இளம் நடிகருமான துல்கர் சல்மானும் அந்த விஷயத்தில் பாக்கியம் செய்தவர்கள்தான்.
துல்கர் சல்மான் பர்டூ பல்கலைக்கழகத்தில் வணிக மேலாண்மை பட்டம் பெற்றவர். படிப்பை முடித்தவுடன், துபாயில் உள்ள ஒரு தகவல் தொழில்நுட்ப நிறுவனத்தில் பணியாற்றினார்.இருப்பினும் தனக்கு உண்மையான ஆர்வம் நடிப்பில் இருப்பதை உணர்ந்து வேலையை துறந்து விட்டு கேரளாவுக்கு விமானம் ஏறினார். 2012ல் செகண்ட் ஷோ என்ற படத்தின் மூலம் வெள்ளித்திரையில் தோன்றினார். நடித்தால் கதாநாயகனாகத் தான் நடிப்பேன் என்பவர்களுக்கு மத்தியில், தனது முதல் படத்தில் எதிர்மறையான கதாபாத்திரத்தில் தோன்றி அனைவரையும் ஆச்சரியப்பட வைத்தார்.
துல்கர் சல்மானின் நடிப்பில் வெளிவந்த உஸ்தாத் ஹோட்டல், பெங்களூரு டேஸ், சார்லி மற்றும் குரூப் போன்ற படங்கள் விமர்சன மற்றும் வணிகரீதியான வெற்றிகளை பதிவு செய்தன.தனது தந்தை மம்முட்டியின் புகழ் நிழலை தவிர்த்து, தனது வெற்றி பாதையை செதுக்கியுள்ளார். அவரது அர்ப்பணிப்பு மற்றும் சிறந்த நடிப்பு அவரை நட்சத்திர அந்தஸ்து உயரத்துக்கு உயர்த்தியது. 2024ல் லக்கி பாஸ்கர், கன்ஸ் & குலாப்ஸ் மற்றும் அல்லு அர்ஜூனுடன் இணைந்து ஒரு படம் என துல்கர் சல்மானின் நடிப்பில் வெளிவர உள்ளது. கல்கி 2898-கி.பி. என்ற புதிரான படமும் அவரது கையில் உள்ளது.
துல்கர் சல்மான் சிறந்த நடிகர் மட்டுமல்ல சிறந்த தொழிலதிபரும் கூட. வேஃபேரர் பிலிம்ஸ் என்ற திரைப்பட தயாரிப்பு நிறுவனத்தின் மூலம் படங்களும் தயாரிக்கிறார். மேலும் பல விளம்பரங்களில் நடித்தும் வருமானம் ஈட்டுகிறார். 2023ம் ஆண்டு நிலவரப்படி துல்கர் சல்மானின் சொத்து மதிப்பு சுமார் ரூ.57 கோடியாகும். இவருக்கு துபாயில் சுமார் ரூ.14 கோடி மதிப்பிலான பென்ட்ஹவுஸ் மற்றும் கொச்சியின் மேல்தட்டு பகுதியான கடவந்தாராவில் சுமார் ரூ.100 கோடி மதிப்பிலான சொத்து ஆகியவையும் அவரது ரியல் சொத்துக்களில் அடங்கும் துல்கர் சல்மானுக்கு சொகுசு கார்கள் மீது அலாதி பிரியம். அவரது கேரேஜில், கார்கள் அணிவகுத்து நிற்கின்றன தனிப்பயன் சொகுசு பைக்குகளும் உள்ளன.
0
Leave a Reply