விருதுநகர் மாவட்டம், மல்லாங்கிணர் அரசு மேல்நிலைப்பள்ளியில் (05.03.2026) பன்னிரெண்டாம் வகுப்பு அரசு பொதுத் தேர்வுகள் நடைபெறுவதை மாவட்ட ஆட்சியர் மரு.என்.ஓ.சுகபுத்ரா. I A S., அவர்கள் நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
விருதுநகர் மாவட்டம், தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்கத்தின் கீழ், மாவட்ட அளவில் அரசு திட்டங்களை திறம்பட செயல்படுத்துவதற்காகவும், அனைத்து துறைகளுக்கிடையே ஒருங்கிணைப்பை வலுப்படுத்திடவும், மாவட்ட வாழ்வாதார மற்றும் கடன் மேலாண்மை நிறுவனத்திற்கு (DLCA) வெளிப்பணி மூலம், மாவட்ட வங்கி ஒருங்கிணைப்பாளர் பணியிடம் நிரப்பப்பட வேண்டியுள்ளது. எனவே, மேற்கண்ட மாவட்ட வங்கி ஒருங்கிணைப்பாளர் பணியிடத்திற்கு தகுதி வாய்ந்த, ஓய்வு பெற்ற வங்கி அலுவலர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.தகுதியுள்ள நபர்கள் வரும் 09.03.2026 அன்று மாலை 5.45 மணிக்குள் விண்ணப்பங்களை நகர்ப்புற வாழ்வாதார மையம், கடை எண்: 7, முதல் தளம், பூமாலை வணிக வளாகம், பழையபேருந்து நிலையம் அருகில், விருதுநகர், மின்னஞ்சல் முகவரி clcvnr2021@gmail.com என்ற முகவரிக்கு நேரிலோ அல்லது அஞ்சல் மூலகமாகவோ விண்ணப்பிக்கலாம் என மாவட்ட ஆட்சித்தலைவர் மரு.என்.ஓ.சுகபுத்ரா, I A S., அவர்கள் தெரிவித்துள்ளார்.
விருதுநகர் மாவட்டம், தமிழ்நாடு மாநில ஊரக/ நகர்புர வாழ்வாதார இயக்கத்தின் சார்பில் இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு மற்றும் திறன் பயிற்சிக்கு வாய்ப்பு ஏற்படுத்தி தரும் பொருட்டு மாவட்ட அளவிலான தனியார்துறை வேலைவாய்ப்பு முகாம் மற்றும் திறன் திருவிழா 07.03.2026 (சனிக்கிழமை) அன்று மிளகாய் வத்தல் வியாபாரிகள் திருமண மண்டபம், அல்லம்பட்டி விலக்கு, அருப்புக்கோட்டை ரோடு, விருதுநகரில் வைத்து காலை 10.00 மணிமுதல் மாலை 3.00 வரை நடத்தப்படவுள்ளது.இம்முகாமில் உள்ளூர் மற்றும் வெளி மாவட்டங்களில் இருந்து தனியார் துறை நிறுவனங்கள் இளைஞர்களை நேர்முகத்தேர்வு செய்து வேலை வாய்ப்பை வழங்கிடவும், தீன் தயாள் உபாத்யாய் கிராமின் கௌசல்யா யோஜனா திட்டத்தின் கீழ் இளைஞர்களை பயிற்சிக்கு தேர்வு செய்திடவும் உள்ளனர்.இம்மாவட்ட அளவிலான வேலை வாய்ப்பு முகாமில், விருதுநகர் மாவட்டத்தை சார்ந்த 10 ஆம் வகுப்பு முதல் பட்டப்படிப்பு வரை/ ஐ.டி.ஐ / டிப்ளமோ மற்றும் தொழிற்கல்வி பயின்ற 40 வயதுக்குள்பட்ட ஆண்/பெண் இருபாலரும் தங்களது கல்வி சான்றிதழ், குடும்ப அட்டை உள்;ளிட்ட இதர தகுதி சான்றுகளுடன் (அசல் மற்றும் நகல்) கலந்து கொண்டு தனியார் நிறுவனங்களின் வேலை வாய்ப்புக்களை பெறவும், இளைஞர் திறன் பயிற்சி திட்டத்தின் கீழ் 10 ஆம் வகுப்பு முதல் பொறியியல் வரை படித்த 35 வயதுக்குட்பட்ட ஆண்/பெண் இருபாலரும் தங்களது கல்வி சான்று, குடும்ப அட்டை இதர ஆவனங்களுடன் கலந்து கொண்டு வேலைவாய்ப்புடன் கூடிய திறன் பயிற்சியை பெற்று பயனடையுமாறும் கேட்டுக்கொள்ளப்படுகிறது.மேலும் விவரங்களுக்கு திட்ட இயக்குநர், தமிழ்நாடு மாநில ஊரக/நகர்புர வாழ்வாதார இயக்கம், தரை தளம், ஊரக வளர்ச்சி முகமை அலுவலக வளாகம், மாவட்ட ஆட்சியர் அலுவலகம், விருதுநகர் என்ற முகவரியில் அனுகலாம் என மாவட்ட ஆட்சித்தலைவர் மரு.என்.ஓ.சுகபுத்ரா,I A S., அவர்கள் தெரிவித்துள்ளார்.
பதிவுத்துறையில் ஆவணப் பதிவிற்காக ஸ்டார் 3.0(Star 3.0) திட்டம், ஸ்பிரிண்ட் -1 உள்ளடங்கிய காகிதமில்லா ஆவணப்பதிவு, நேரடி வருகை இல்லா ஆவணப் பதிவு, தானியங்கி பத்திர உருவாக்கம், புலன வழி தகவல் தொடர்பு, கைபேசி செயலி, மையக் கணினி வழி சான்றிட்ட நகல் வழங்குதல், மேம்படுத்தப்பட்ட வில்லங்கச் சான்று வழங்குதல், விரைவுக் குறியீட்டுடன் கூடிய புதிய குறு பணப்பரிவர்த்தனை (QR Code Based Payment) ஆகிய சேவைகளுக்கு புதிய மென்பொருள் உருவாக்கப்பட்டுள்ளது.இத்திட்டமானது தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களால் 22.01.2026 அன்று துவக்கி வைக்கப்பட்டு நடைமுறைக்கு வந்துள்ளது. மேற்படி காகிதமில்லா ஆவணப்பதிவில் (Paperless Registration) ஆவணத்தை பொதுமக்கள் எழுதி பதிவுத்துறையின் இணையதளத்தில் பதிவேற்றம் செய்து, இணைய வழியில் பணம் செலுத்தி ஆவண விவரங்கள் சரியாக இருக்கும் பட்சத்தில் சார்பதிவாளர் அலுவலகத்தில் சாட்சிகளுடன் நேரில் ஆஜராகி, சார்பதிவாளர் ஆவணத்தில் கண்ட நபர்களை அவர்கள் அளிக்கும் ஆதார் அட்டையினை இணைய வழி மூலம் சரி பார்த்து கைரேகை மற்றும் புகைப்படம் எடுக்கப்பட்டு ஆவணம் பதிவு செய்யப்பட்டு மின்னணு ஆவணமாக இணைய வழியிலேயே பொது மக்களுக்கு உடனுக்குடன் அனுப்பி வைக்கப்படுகிறது. இந்த வகை காகிதமில்லா ஆவணப்பதிவில் அனைத்து வகை ஆவணங்களும் பதிவு செய்யப்படும்.நேரடி வருகை இல்லா ஆவணப்பதிவு (Presenceless Registration) மேற்கண்ட ஆவணப்பதிவு பொதுமக்கள் நேரடியாக சார்பதிவாளர் அலுவலகத்திற்கு வருகை தராமலேயே மேற்படி மென்பொருளை பயன்படுத்தி ஆவணப்பதிவிற்காக,நேரடி வருகையில்லா ஆவணப்பதிவுக்கு சம்பந்தப்பட்ட ஏழு வகையான ஆவணங்கள் கட்டுமான நிறுவனத்திடமிருந்து புதிய அடுக்குமாடி குடியிருப்புகளை வாங்கும் போதும், புதிதாக உருவாக்கப்பட்ட மனைப்பிரிவுகளிலிருந்து மனைகளை மட்டும் வாங்கும் போதும் முதல் கிரைய ஆவணத்தைப் பொருத்து(First Sale) பொதுமக்கள் தங்கள் வீட்டிலிருந்தோ அல்லது சம்பந்தப்பட்ட சொத்தை விற்பனை செய்யும் நிறுவனத்தின் அலுவலகத்திலிருந்தோ பத்திரத்தை இணையதள வழியாக பதிவுக்கு தாக்கல் செய்யலாம்.மேலும், விற்பனை உடன்படிக்கை(Sale Agreement), குத்தகை ஆவணம் (Lease Deed/ Agreement of Lease), உரிமை ஆவணங்கள் ஒப்படைப்பு ஆவணம் (Deposit of Title Deeds), இரசீது ஆவணம் (Deed of Receipt), சுவாதீனத்துடன் கூடிய அடைமான ஆவணம் (Mortgage wilth Possession Deed), சுவாதீனமில்லா அடைமான ஆவணம் (Mortgage wilthout Possession Deed), சுவாதீனத்துடன் கூடிய மேல் ஈடு ஆவணம் (Further Charge Mortgage wilth Possession Deed), சுவாதீனமில்லா மேல் ஈடு ஆவணம் (Further Charge Mortgage without Possession Deed), அறக்கட்டளை ஆவணம் (Deed of Trust) ஆகிய 7 வகை ஆவணங்களை இணைய வழியே பதிவுக்கு தாக்கல் செய்யும் போது சொத்தினை எழுதிக்கொடுப்பவர் மற்றும் எழுதி வாங்குபவர்களின் அடையாளமானது விரல் ரேகை ஆதார் ஆணையத்துடன் சரிபார்க்கப்பட்டு இணைய வழி கட்டணம் செலுத்தியவுடன் சமர்ப்பிக்கப்பட்ட ஆவண விவரங்கள் சரியாக இருக்கும் பட்சத்தில் ஆவணம் உடனுக்குடன் பதிவு செய்யப்பட்டு சார்பதிவாளரின் மின்னணு கையொப்பம் இடப்பட்டு மின்னணு ஆவணமாக இணைய வழியில் பொதுமக்களுக்கு அனுப்பி வைக்கப்படுகிறது.எனவே மேற்கண்ட காகிதமில்லா ஆவணப்பதிவு மற்றும் நேரடி வருகை இல்லா ஆவணப்பதிவு ஆகியவற்றை பதிவுத்துறையின் இணையதளமான www.tnreginet.net என்ற இணையதளத்தில் ஆவண உருவாக்கம் குறித்தும், தங்களுக்கான சேவைகளை பொதுமக்கள் சார்பதிவாளர் அலுவலகத்திற்கு நேரில் வராமலேயே தாங்களே ஆவணத்தினை உருவாக்கி சேவையை எளிதாக பெற்றுக் கொள்ளலாம் என மாவட்டப்பதிவாளர்(நிர்வாகம்) அவர்களால் தெரிவிக்கப்படுகிறது.
விருதுநகர் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில், தமிழ்நாடு வனத்துறை, திருவில்லிபுத்தூர் - மேகமலை புலிகள் காப்பகம்(திருவில்லிபுத்தூர் கோட்டம்) சார்பில் வன பாதுகாப்பு, காட்டுத்தீ மேலாண்மை, வனவிலங்கு கணக்கெடுப்பு மற்றும் மனித-விலங்கு மோதல் மேலாண்மை பயிற்சி திட்டத்தின் கீழ் அரசுப்பள்ளி மாணவர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் நடைபெற்ற வனமும், வாழ்வும் பயிற்சியினை நிறைவு செய்த மாணவர்களுக்கும், மாவட்ட அளவிலான ஆசிரியர் பயிற்சி பட்டறையில் பயிற்சி நிறைவு செய்த ஆசிரியர்களுக்கும் பயிற்சி நிறைவுச் சான்றிதழ்களை மாவட்ட ஆட்சித்தலைவர் மரு.என்.ஓ.சுகபுத்ரா,I A S., அவர்கள் (04.03.2026) வழங்கினார்.மேலும், உலக வன உயிரின நாள்-2026 முன்னிட்டு இயற்கை பாதுகாப்பிற்கு மரக்கன்றுகள் நடுதல், மருத்துவ தாவரங்கள் வளர்ப்பதை ஊக்குவித்தல், வனவிலங்குகளை பாதுகாத்தல், இயற்கை சார்ந்த விழிப்புணர்வு முயற்சிகள் உள்ளிட்ட செயல்பாடுகள் மூலம் வனவிலங்குகள் மற்றும் வாழ்விடப் பாதுகாப்பில் பங்களிப்பை, வழங்கிய 3 நபர்களுக்கு சமூக பாதுகாப்பு தலைமைத்துவ விருதுகள் மற்றும் தலா ரூ.25,000/- பரிசுத்தொகைகளையும் மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் வழங்கினார்.பின்னர், விருதுநகர் மாவட்டம் கோவிலார் அணை சூழல் சுற்றுலா மையத்தில் ஈர நில தினத்தை முன்னிட்டு நடைபெற்ற விழாவில் கலந்து கொண்ட மாணவர்களுக்கு சான்றிதழ்களை மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் வழங்கினார். தமிழ்நாடு அரசின் அறிவிப்பின்படி, மாநிலம் முழுவதும் 20,000 அரசு பள்ளி மாணவர்களுக்கு வன பாதுகாப்பு, காட்டுத்தீ மேலாண்மை, வனவிலங்கு கணக்கெடுப்பு மற்றும் மனித-விலங்கு மோதல் மேலாண்மை குறித்த சான்றிதழ் பயிற்சி வழங்கப்பட்டுள்ளது. இத்திட்டத்தின் கீழ் ஒவ்வொரு மாவட்டத்திலும் 25 அரசு மேல்நிலை/உயர்நிலை பள்ளிகள் தேர்வு செய்யப்பட வேண்டும் என்ற அரசு வழிகாட்டுதலின்படி, விருதுநகர் மாவட்டத்திற்குள் உள்ள 25 அரசு பள்ளிகள் தேர்வு செய்யப்பட்டது.மேலும், தேர்வு செய்யப்பட்ட ஒவ்வொரு பள்ளியிலிருந்தும் உயிரியல் அல்லது சுற்றுச்சூழல் அறிவியல் தொகுப்புகளை கற்பிக்கும் 25 ஆசிரியர்கள் தேர்வு செய்யப்பட்டு, அவர்களுக்கு தமிழ்நாடு வனத்துறை வனமும் வாழ்வும், உயர்நிலை வன உயிரின பாதுகாப்பு நிறுவனத்தால் பயிற்சிகள் வழங்கப்பட்டன.அவ்வாறு பயிற்சிகள் வழங்கப்பட்ட ஆசிரியர்கள், ஒவ்வொரு பள்ளியிலும் 11 ஆம் வகுப்பு மாணவர்களில் இருந்து 10 மாணவர்கள், 10 மாணவிகள் என மொத்தம் 20 வீதம் மொத்தம் 500 மாணவர்களை தேர்வு செய்து பயிற்சிகளை வழங்கியுள்ளனர். வன பாதுகாப்பு, காட்டுத்தீ தடுப்பு மற்றும் கட்டுப்பாட்டு நடவடிக்கைகள் பற்றிய விளக்கங்கள், பள்ளிகளில் மாணவர்களுக்கு பயிற்சிகள், வனவிலங்கு கணக்கெடுப்பு அடிப்படை நடைமுறைகள் மற்றும் புது தலைமுறைக்கு வன பாதுகாப்பு பற்றிய விழிப்புணர்வு, மனித-விலங்கு மோதல் தடுப்பு, மேலாண்மை மற்றும் பாதுகாப்பு வழிமுறைகள் உள்ளிட்டவை குறித்து விரிவான விளக்கங்கள் இப்பயிற்சிகள் மூலம் வழங்கப்பட்டன. இந்நிகழ்ச்சியில், பயிற்சி பெற்ற 25 ஆசிரியர்கள் மற்றும் 500 மாணவர்களுக்கு பயிற்சி நிறைவுச் சான்றிதழ்களை மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் வழங்கினார்.இந்நிகழ்ச்சியில், துணை இயக்குநர்(திருவில்லிபுத்தூர் மேகமலை புலிகள் காப்பகம்) திரு.ரவி மீனா,இ.வ.ப., மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் திரு.அரவிந்தன், திருவில்லிபுத்தூர் உதவி வனப்பாதுகாவலர் திரு.ஞானப்பழம், வனச்சர அலுவலர்(சிவகாசி வன உயிரின சரகம்) திரு.பூவேந்தன், வன சர அலுவலர்கள், அரசு அலுவலர்கள், பள்ளி, கல்லூரி மாணவ, மாணவியர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.
விருதுநகர் மாவட்டம், மல்லாங்கிணறு பேரூராட்சி அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் 15- ஆவது நிதிக்குழு ஆணையம் சுகாதார மானிய திட்டத்தின் கீழ் ரூ.75 இலட்சம் மதிப்பில் புதிதாக கட்டப்பட்டுள்ள கூடுதல் பொது சுகாதார கட்டடத்தினை நிதி, சுற்றுச்சூழல் மற்றும் காலநிலை மாற்றத்துறை அமைச்சர் திரு.தங்கம் தென்னரசு அவர்கள் (04.03.2026) பொதுமக்களின் பயன்பாட்டிற்கு திறந்து வைத்தார்.
விருதுநகர் மாவட்டம், விருதுநகர் கே.வி.எஸ். ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் (04.03.2026) மாவட்ட நிர்வாகத்தின் சார்பில், உயர்கல்விக்கு வழிகாட்டும் திசை திட்டத்தின் கீழ் கருத்தாளர்களாக பணிபுரியவுள்ள ஆசிரியர்களுடனான கலந்தாய்வு கூட்டம் மாவட்ட ஆட்சித்தலைவர் மரு.என்.ஓ.சுகபுத்ரா,I A S., அவர்கள் தலைமையில் நடைபெற்றது. இக்கூட்டத்தில் மாவட்டத்தில் நடப்பு கல்வியாண்டில் பன்னிரெண்டாம் வகுப்பு முடிக்கும் அனைத்து மாணவர்களையும் உயர்கல்வி சேர்ப்பதற்கும், ஒவ்வொரு மாணவனுக்கும் உயர்கல்வி சார்ந்து விழிப்புணர்வு ஏற்படுத்துவதற்கும் உரிய அறிவுரை மற்றும் ஆலோசனைகளை மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் வழங்கினார். தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களால் மாணவர்களின் நலன் மற்றும் மேம்பாட்டிற்காக “நான் முதல்வன்” திட்டம் உட்பட பல்வேறு திட்டங்கள் தொடங்கப்பட்டு செயல்படுத்தப்பட்டு வருகிறது. இத்திட்டத்தின் முக்கிய நோக்கம், மாணவர்களின் திறமைகளை மேம்படுத்தி, நாட்டின் செழுமைக்காக அவர்களின் சிறந்த திறமையைக் கண்டறிய வேண்டும். மாணவர்களின் எதிர்கால நலனுக்காக மாணவர்களின் திறன், கல்வித்திறன் மற்றும் மறைந்திருக்கும் திறமை ஆகியவற்றை மேம்படுத்த வேண்டும் என்பதாகும். இத்திட்டத்தின் கீழ் பள்ளி மாணவர்களுக்கு உயர்க்கல்வி படிப்புகள், அவை தொடர்பான வேலைவாய்ப்புகள் பற்றிய தகவல்களை எளிதில் பெறும் வகையிலும் மாணவர்களுக்கான நுழைவுத்தேர்வுகள், எதிர்கால வேலைவாய்ப்புகள், உயர்கல்வி பிரிவுகள் மற்றும் படிப்புகள், வாய்ப்புகள் உள்ளிட்டவைகள் குறித்து மாணவர்கள் தெரிந்துகொள்ளும் வகையில் இத்திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது.அந்த வகையில், ஒவ்வொரு பாடப்பிரிவிற்கும் 500 மாணவர்கள் என மொத்தமாக 1500 முதல் 1600 வரை மாணவர்கள் தேர்வு செய்யப்பட்டு, அம்மாணவர்களுக்கு தொடர்ச்சியாக பயிற்சிகள் நடத்தப்படவுள்ளன.மேலும், அம்மாணவர்களை தேர்வுக்கு எவ்வாறு தயார் செய்வது? தொலைவில் இருந்து வரும் மாணவர்களுக்கு போக்குவரத்து வசதி ஏற்பாடு செய்து தருவது, ஆசிரியர்களுக்கு பயிற்சி வழங்குவது என பல நோக்கங்களை கலந்துரையாடி ஒரே திட்டமாக ஏற்படுத்தப்பட்டுள்ளது.அந்த திட்டம் தான் திசை. இந்த திட்டமானது விருதுநகர் மாவட்டத்தில் உள்ள சாதிக்க விரும்பும் மாணவர்களுக்கு உதவிகரமானதாக அமையும். மற்றவருக்கு உதவி செய்ய வேண்டும் என்ற மனப்பாங்குடன் ஆசிரியர்கள் செயல்படுவதோடு, மாணவர்களுக்கும் அந்த உணர்வை கற்பிக்க வேண்டும்.மாறி வரும் சூழலுக்கு ஏற்ற வகையில், உடனடி வேலைவாய்ப்புகளை பெற்றுத்தரும் புதிய பாடப்பிரிவுகள் பற்றி மாணவர்களுக்கு எடுத்து சொல்லி அவர்களை அந்த பிரிவுகளில் சேர்வதற்கு தேவையான வழிகாட்டுதல்களையும், உதவிகளையும் செய்திடல் வேண்டும்.மேலும், அரசுப்பள்ளி மாணவர்களுக்கு இருக்கும் 7.5 சதவிகித இடஒதுக்கீடு குறித்தும், அதற்கான கட் ஆப் மதிப்பெண்கள், பாடம் வாரியாக எடுக்க வேண்டிய மதிப்பெண்கள், உயர்கல்வியில் உள்ள துறைகள் உள்ளிட்டவைகள் குறித்து மாணவர்களுக்கு எடுத்துரைத்து விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும் என தெரிவித்தார்.பள்ளிகளில் பயிலும் மாணவர்களில் சிறந்த மதிப்பெண்கள் பெறும் மாணவர்களை கண்டறிந்து, உயர்கல்வி சார்ந்து, வழங்கப்பட உள்ள பயிற்சி வகுப்புகளில் மாணவர்களை சேர்த்து, படிக்க வைப்பது குறித்து உரிய ஆலோசனைகளை வழங்கினார். இந்நிகழ்ச்சியில், மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் திரு.கு.அரவிந்தன், முதுகலை ஆசிரியர்கள், அரசு அலுவலர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.
விருதுநகர் மாவட்டம், சாத்தூர் எஸ்.ஆர்.என்.எம். (SRNM) கல்லூரியில் (03.03.2026), உணவுப்பொருள் வழங்கல் மற்றும் நுகர்வோர் பாதுகாப்புத்துறை சார்பில், தேசிய நுகர்வோர் பாதுகாப்பு தினம் மற்றும் உலக நுகர்வோர் உரிமைகள் தின விழா மாவட்ட ஆட்சித்தலைவர் மரு..என்.ஓ.சுகபுத்ரா,I A S., அவர்கள் தலைமையில் நடைபெற்றது."தமிழக அரசு நுகர்வோருக்குத் தரமான பொருட்கள் மற்றும் சேவைகள் கிடைப்பதை உறுதி செய்யப் பல்வேறு ஆக்கப்பூர்வமான நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. ஒரு பொருளை அல்லது சேவையை விலை கொடுத்தோ அல்லது உரிய வாக்குறுதி அளித்தோ பெறுபவர் எவரோ, அவரே நுகர்வோர் ஆவார். நுகர்வோர் மத்தியில் விழிப்புணர்வை ஏற்படுத்தும் நோக்கில், ஆண்டுதோறும் டிசம்பர் 24-ஆம் தேதி 'தேசிய நுகர்வோர் உரிமைகள் தினமாகவும்', மார்ச் 15-ஆம் தேதி 'உலக நுகர்வோர் உரிமைகள் தினமாகவும்' கொண்டாடப்பட்டு வருகிறது.இந்த நவீன யுகத்தில், நாம் அன்றாடம் பல்வேறு பொருட்களைச் சார்ந்து வாழ வேண்டியுள்ளது. எனவே, நுகர்வோர்களாகிய நாம் நமக்குரிய பாதுகாப்பு உரிமை, தகவல் பெறும் உரிமை, தேர்ந்தெடுக்கும் உரிமை, முறையிடும் உரிமை, குறைதீர்க்கும் உரிமை, நுகர்வோர் கல்விக்கான உரிமை, தூய்மையான சுற்றுச்சூழல் உரிமை மற்றும் அடிப்படைத் தேவைகளுக்கான உரிமை ஆகிய எட்டு முக்கிய உரிமைகளைத் தெளிவாகத் தெரிந்து வைத்திருக்க வேண்டும்.இந்த உரிமைகளை அறிந்துகொள்வதன் மூலம், உடல்நலத்திற்கும் உயிருக்கும் தீங்கு விளைவிக்கக்கூடிய தரம் குறைந்த பொருட்கள் மற்றும் சேவைகளிலிருந்து நம்மைப் பாதுகாத்துக் கொள்ள முடியும். மேலும், தரமற்ற பொருட்களால் ஏற்படும் இழப்புகளுக்கு உரிய நஷ்ட ஈடு பெறவும் இது வழிவகை செய்கிறது.நுகர்வோர் பாதுகாப்பு மற்றும் விழிப்புணர்வு குறித்த கல்வி, பள்ளி மற்றும் கல்லூரிகளிலிருந்தே தொடங்கப்பட வேண்டும். நாம் வாங்கும் பொருளின் தரம், அதன் விலைக்கேற்ற சேவை ஆகியவை சரியாக இருக்கிறதா என்பதைத் துல்லியமாகக் கண்டறியும் திறனை நுகர்வோர் வளர்த்துக்கொள்ள வேண்டும். மாணவர்கள் தாங்கள் கற்ற இந்த விழிப்புணர்வுச் செய்திகளைச் சமுதாயத்தில் உள்ள மற்றவர்களுக்கும் எடுத்துச் சொல்லி விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும்" என மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் தெரிவித்தார்.தொடர்ந்து, 2025-26-ஆம் கல்விய ஆண்டிற்கான நுகர்வோர் தினத்தை முன்னிட்டு, பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்களிடையே நடத்தப்பட்ட கவிதை, கட்டுரை மற்றும் ஓவியப் போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவ, மாணவியர்களுக்குப் பாராட்டுச் சான்றிதழ்கள் மற்றும் கேடயங்களை மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் வழங்கிப் பாராட்டினார்.இந்நிகழ்ச்சியில், கூட்டுறவுச் சங்கங்களின் மண்டல இணைப்பதிவாளர் திரு. செந்தில்குமார், தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழக மண்டல மேலாளர் திரு. பால்பாண்டி, நுகர்வோர் பாதுகாப்பு சேவை மைய மாநிலத் தலைவர் திரு. சுப்பிரமணியம், மாவட்ட நுகர்வோர் உரிமைக் குழு உறுப்பினர் திரு. முகமது எகியா, கல்லூரி முதல்வர், பேராசிரியர்கள், அரசு அலுவலர்கள் மற்றும் மாணவ-மாணவியர்கள் பெருந்திரளாகக் கலந்து கொண்டனர்.
விருதுநகர் மாவட்டம், அருப்புக்கோட்டை ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் (03.03.2026) நடைபெற்ற நிகழ்ச்சியில் மாவட்ட ஆட்சியர் மரு.என்.ஓ.சுகபுத்ரா,I A S., அவர்களின் தலைமையில், கலைஞரின் கனவு இல்லம் திட்டத்தின் கீழ் நிர்வாக அனுமதி வழங்கப்பட்டுள்ள 100 பயனாளிகளுக்கு ரூ.3.50 கோடி மதிப்பீட்டில் வீடு கட்டுவதற்கான வேலை உத்தரவுகளை வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத்துறை அமைச்சர் திரு.கே.கே.எஸ்.எஸ்.ஆர்.இராமச்சந்திரன் அவர்கள் வழங்கினார்.கலைஞர் கனவு இல்லம் திட்டம், 2030-க்குள் தமிழ்நாட்டை குடிசைகள் இல்லாத மாநிலமாக மாற்ற கிராமப்புற ஏழைகளுக்கு இலவச கான்கிரீட் வீடுகளை வழங்கும் தமிழக அரசின் திட்டமாகும்.தமிழகமானது குடிசை இல்லாத தமிழகமாக மாற வேண்டும் என்று நம்முடைய முன்னாள் முதலமைச்சர் கலைஞர் அவர்களின் கனவுத் திட்டம் தான் இந்த கலைஞர் கனவு இல்லம் திட்டம். இத்திட்டத்தின் கீழ்,ஒவ்வொருவருக்கும் தலா ரூ.3.50 இலட்சம் வழங்கப்பட்டு வருகிறது.இன்றைய தினம் 100 பயனாளிகளுக்கு வேலை உத்தரவுகள் வழங்கப்படவுள்ளது. நம்முடைய மாவட்டத்தில் 4433 பயனாளிகளுக்கு இது போன்ற உத்தரவுகள் வழங்கப்பட்டு அதற்கான பணிகள் நடைபெற்று வருகின்றன.கலைஞர் மகளிர் உரிமைத்தொகை, முதியோர் உதவித்தொகை உள்ளிட்ட பல்வேறு நலத்திட்டங்களை மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் செயல்படுத்தி வருகிறார். இவற்றையெல்லாம், பயன்படுத்தி அனைவரும் நலமுடன் இருக்க வேண்டும் எனத் தெரிவித்தார்.தொடர்ந்து, விருதுநகர் மாவட்டத்தில், கலைஞர் கனவு இல்லம் திட்டத்தின் கீழ் 2024-2025 ஆம் ஆண்டிற்கு ரூ.35.38 கோடி மதிப்பில் 1011 வீடுகளும், 2025-2026 ஆம் ஆண்டிற்கு ரூ.76.37 கோடி மதிப்பில் 2182 வீடுகளும்மேலும், கூடுதலாக 2025-2026 ஆம் ஆண்டில் அருப்புக்கோட்டை ஊராட்சி ஒன்றியத்திற்கு 100 வீடுகளும், காரியாபட்டி ஊராட்சி ஒன்றியத்திற்கு 101 வீடுகளும், நரிக்குடி ஊராட்சி ஒன்றியத்திற்கு 101 வீடுகளும், இராஜபாளையம் ஊராட்சி ஒன்றியத்திற்கு 100 வீடுகளும், சாத்தூர் ஊராட்சி ஒன்றியத்திற்கு 101 வீடுகளும், சிவகாசி ஊராட்சி ஒன்றியத்திற்கு 100 வீடுகளும், திருவில்லிபுத்தூர் ஊராட்சி ஒன்றியத்திற்கு 56 வீடுகளும், திருச்சுழி ஊராட்சி ஒன்றியத்திற்கு 100 வீடுகளும், வெம்பக்கோட்டை ஊராட்சி ஒன்றியத்திற்கு 100 வீடுகளும், விருதுநகர் ஊராட்சி ஒன்றியத்திற்கு 101 வீடுகளும், வத்திராயிருப்பு ஊராட்சி ஒன்றியத்திற்கு 40 வீடுகளும் என மொத்தம் ரூ.35 கோடி மதிப்பில் 1000 வீடுகளும் என ஆக மொத்தம் 4193 வீடுகளுக்கு கலைஞர் கனவு இல்லம் திட்டத்தின் கீழ் நிர்வாக அனுமதி வழங்கப்பட்டது.அதனைத்தொடர்ந்து, அருப்புக்கோட்டை ஊராட்சி ஒன்றியத்தில் கலைஞர் கனவு இல்லம் திட்டத்தின் கீழ் 2024-2025 ஆம் ஆண்டிற்கு ரூ.3.22 கோடி மதிப்பில் 92 வீடுகளும், 2025-2026 ஆம் ஆண்டிற்கு ரூ.11.58 கோடி மதிப்பில் 331 வீடுகளும், மேலும், கூடுதலாக 2025-2026 ஆம் ஆண்டிற்கு ரூ.3.50 கோடி மதிப்பில் 100 வீடுகளும் என மொத்தம் 523 வீடுகளுக்கு வீடு கட்டுவதற்கான அனுமதி வழங்கப்பட்டது.அதனைத்தொடர்ந்து, இன்றைய தினம் அருப்புக்கோட்டை ஊராட்சி ஒன்றியத்தில் கலைஞர் கனவு இல்லம் திட்டத்தின் கீழ் 2025-2026 ஆம் ஆண்டில் கூடுதலாக வீடு கட்டுவதற்கான நிர்வாக அனுமதி வழங்கப்பட்டுள்ள 100 பயனாளிகளுக்கு ரூ.3.50 கோடி மதிப்பில் வீடு கட்டுவதற்கான வேலை உத்தரவுகளை வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத்துறை அமைச்சர் திரு.கே.கே.எஸ்.எஸ்.ஆர்.இராமச்சந்திரன் அவர்கள் வழங்கினார்.இந்நிகழ்ச்சியில் திட்ட இயக்குநர்(மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை) திரு.வீ.கேசவதாசன், வட்டார வளர்ச்சி அலுவலர்கள், அரசு அலுவலர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.
விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டை ஊராட்சி ஒன்றியம் வில்லிபத்திரி ஊராட்சியில் அண்ணா மறுமலர்ச்சி திட்டத்தின் கீழ் ரூ.31.40 இலட்சம் மதிப்பில் கட்டப்பட்டுள்ள ஊராட்சி மன்ற அலுவலக புதிய கட்டடத்தினை மாவட்ட ஆட்சியர் மரு.என்.ஓ.சுகபுத்ரா, I A S., அவர்கள் தலைமையில் வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத் துறை அமைச்சர் திரு.கே.கே.எஸ்.எஸ்.ஆர்.இராமச்சந்திரன் அவர்கள்(03.03.2026) பொதுமக்களின் பயன்பாட்டிற்கு திறந்து வைத்து குத்துவிளக்குயேற்றினார்.