உயர்கல்விக்கு வழிகாட்டும் திசை திட்டத்தின் கீழ் கருத்தாளர்களாக பணிபுரியவுள்ள ஆசிரியர்களுடனான கலந்தாய்வு கூட்டம்.
விருதுநகர் மாவட்டம், விருதுநகர் கே.வி.எஸ். ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் (04.03.2026) மாவட்ட நிர்வாகத்தின் சார்பில், உயர்கல்விக்கு வழிகாட்டும் திசை திட்டத்தின் கீழ் கருத்தாளர்களாக பணிபுரியவுள்ள ஆசிரியர்களுடனான கலந்தாய்வு கூட்டம் மாவட்ட ஆட்சித்தலைவர் மரு.என்.ஓ.சுகபுத்ரா,I A S., அவர்கள் தலைமையில் நடைபெற்றது.
இக்கூட்டத்தில் மாவட்டத்தில் நடப்பு கல்வியாண்டில் பன்னிரெண்டாம் வகுப்பு முடிக்கும் அனைத்து மாணவர்களையும் உயர்கல்வி சேர்ப்பதற்கும், ஒவ்வொரு மாணவனுக்கும் உயர்கல்வி சார்ந்து விழிப்புணர்வு ஏற்படுத்துவதற்கும் உரிய அறிவுரை மற்றும் ஆலோசனைகளை மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் வழங்கினார். தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களால் மாணவர்களின் நலன் மற்றும் மேம்பாட்டிற்காக “நான் முதல்வன்” திட்டம் உட்பட பல்வேறு திட்டங்கள் தொடங்கப்பட்டு செயல்படுத்தப்பட்டு வருகிறது. இத்திட்டத்தின் முக்கிய நோக்கம், மாணவர்களின் திறமைகளை மேம்படுத்தி, நாட்டின் செழுமைக்காக அவர்களின் சிறந்த திறமையைக் கண்டறிய வேண்டும். மாணவர்களின் எதிர்கால நலனுக்காக மாணவர்களின் திறன், கல்வித்திறன் மற்றும் மறைந்திருக்கும் திறமை ஆகியவற்றை மேம்படுத்த வேண்டும் என்பதாகும்.
இத்திட்டத்தின் கீழ் பள்ளி மாணவர்களுக்கு உயர்க்கல்வி படிப்புகள், அவை தொடர்பான வேலைவாய்ப்புகள் பற்றிய தகவல்களை எளிதில் பெறும் வகையிலும் மாணவர்களுக்கான நுழைவுத்தேர்வுகள், எதிர்கால வேலைவாய்ப்புகள், உயர்கல்வி பிரிவுகள் மற்றும் படிப்புகள், வாய்ப்புகள் உள்ளிட்டவைகள் குறித்து மாணவர்கள் தெரிந்துகொள்ளும் வகையில் இத்திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது.அந்த வகையில், ஒவ்வொரு பாடப்பிரிவிற்கும் 500 மாணவர்கள் என மொத்தமாக 1500 முதல் 1600 வரை மாணவர்கள் தேர்வு செய்யப்பட்டு, அம்மாணவர்களுக்கு தொடர்ச்சியாக பயிற்சிகள் நடத்தப்படவுள்ளன.
மேலும், அம்மாணவர்களை தேர்வுக்கு எவ்வாறு தயார் செய்வது? தொலைவில் இருந்து வரும் மாணவர்களுக்கு போக்குவரத்து வசதி ஏற்பாடு செய்து தருவது, ஆசிரியர்களுக்கு பயிற்சி வழங்குவது என பல நோக்கங்களை கலந்துரையாடி ஒரே திட்டமாக ஏற்படுத்தப்பட்டுள்ளது.அந்த திட்டம் தான் திசை. இந்த திட்டமானது விருதுநகர் மாவட்டத்தில் உள்ள சாதிக்க விரும்பும் மாணவர்களுக்கு உதவிகரமானதாக அமையும். மற்றவருக்கு உதவி செய்ய வேண்டும் என்ற மனப்பாங்குடன் ஆசிரியர்கள் செயல்படுவதோடு, மாணவர்களுக்கும் அந்த உணர்வை கற்பிக்க வேண்டும்.
மாறி வரும் சூழலுக்கு ஏற்ற வகையில், உடனடி வேலைவாய்ப்புகளை பெற்றுத்தரும் புதிய பாடப்பிரிவுகள் பற்றி மாணவர்களுக்கு எடுத்து சொல்லி அவர்களை அந்த பிரிவுகளில் சேர்வதற்கு தேவையான வழிகாட்டுதல்களையும், உதவிகளையும் செய்திடல் வேண்டும்.மேலும், அரசுப்பள்ளி மாணவர்களுக்கு இருக்கும் 7.5 சதவிகித இடஒதுக்கீடு குறித்தும், அதற்கான கட் ஆப் மதிப்பெண்கள், பாடம் வாரியாக எடுக்க வேண்டிய மதிப்பெண்கள், உயர்கல்வியில் உள்ள துறைகள் உள்ளிட்டவைகள் குறித்து மாணவர்களுக்கு எடுத்துரைத்து விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும் என தெரிவித்தார்.
பள்ளிகளில் பயிலும் மாணவர்களில் சிறந்த மதிப்பெண்கள் பெறும் மாணவர்களை கண்டறிந்து, உயர்கல்வி சார்ந்து, வழங்கப்பட உள்ள பயிற்சி வகுப்புகளில் மாணவர்களை சேர்த்து, படிக்க வைப்பது குறித்து உரிய ஆலோசனைகளை வழங்கினார். இந்நிகழ்ச்சியில், மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் திரு.கு.அரவிந்தன், முதுகலை ஆசிரியர்கள், அரசு அலுவலர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.
0
Leave a Reply