விருதுநகர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில், பொது சுகாதாரத்துறை மூலம் மாவட்டத்தில் தொலைதூர கிராமப் பகுதிகளில் உள்ள மக்களின் மருத்துவ தேவைகளை பூர்த்தி செய்யும் விதமாக, மாலை நேரங்களில் மருத்துவ சேவைகள் வழங்கும் வகையில் தேர்ந்தெடுக்கப்பட்ட 9 தொலைதூரப் பகுதிகளில் உள்ள துணை சுகாதார நிலையங்களுக்கு மருத்துவர்கள் மற்றும் இடைநிலை சுகாதார பணியாளர்களுக்கான பணி நியமன ஆணைகளை மாவட்ட ஆட்சித்தலைவர் முனைவர் வீ.ப.ஜெயசீலன்,I A S., அவர்கள் (23.09.2024) வழங்கினார்.இத்திட்டத்தின் மூலம் மருத்துவர்கள் தொலைதூர பகுதிகளில் உள்ள துணை சுகாதார நிலையங்களில் வாரத்தில் மூன்று நாட்கள் (மாதத்திற்கு 12 நாட்கள்) மாலை 6 மணி முதல் 8 மணி வரை மருத்துவ ஆலோசனை, சிகிச்சை மற்றும் அவசர சிகிச்சைகளை வழங்குவர். இதில், மருத்துவர்கள் நோயாளிகளின் சிகிச்சையை தொடர மற்றும் சமூக விழிப்புணர்வு செயல்பாடுகளை நடத்திட இடைநிலை சுகாதாரப் பணியாளர்கள் ஆதரவாக இருப்பர். மருத்துவ சேவைகளை மேம்படுத்தவும், பெரிய மருத்துவமனைகளின் சுமையை குறைப்பதும் மற்றும் நோயாளிகளுக்கு விரைவாக சிகிச்சை அளிப்பதும் இதன் நோக்கமாகும்.தற்போது இச்சேவைகள் நரிக்குடி ஊராட்சி ஒன்றியம் தட்சனேந்தல், ஆனைக்குளம் மற்றும் இருவர்குளம் ஆகிய துணை சுகாதார நிலையங்களுக்கும், திருச்சுழி ஊராட்சி ஒன்றியம் காரேந்தல், கீழக்குடி மற்றும் பி.தொட்டியங்குளம் ஆகிய சுகாதார நிலையங்களுக்கும், வெம்பக்கோட்டை ஊராட்சி ஒன்றியம் மம்சாபுரம், பனையடிபட்டி மற்றும் வலையகுளம் என மொத்தம் 9 துணை சுகாதார நிலையங்களில் துவக்கி வைக்கப்பட்டுள்ளது.இச்சேவைகளை வழங்கும் வகையில் 9 மருத்துவர்கள் மற்றும் 9 இடைநிலை சுகாதார பணியாளர்கள் ஊராட்சி ஒன்றிய பொது நிதியிலிருந்து நியமிக்கப்பட்டுள்ளனர். இத்திட்டத்தின் கீழ் மருத்துவர்கள் மற்றும் இடைநிலை சுகாதாரப் பணியாளர்கள் தங்கள் வட்டார ஆரம்ப சுகாதார நிலையங்களில் உள்ள மருந்துகள் மற்றும் உபயோகப் பொருட்களை கொண்டு வந்து பயன்படுத்துவார்கள். எனவே, அப்பகுதிகளைச் சேர்ந்த மக்கள் இந்தச்சேவைகளை பயன்படுத்திக் கொள்ளுமாறும் மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் தெரிவித்துள்ளார்.இந்த நிகழ்வில் மாவட்ட சுகாதார அலுவலர் மரு.யசோதாமணி, மருத்துவர்கள், மருத்துவ பணியாளர்கள் உட்பட அரசு அலுவலர்கள் பலர் கலந்து கொண்டனர்.
விருதுநகர் மாவட்ட ஆட்சியர் அலுவலகக் கூட்டரங்கில் (23.09.2024) ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறையின் சார்பில், வன்கொடுமையால் பாதிக்கப்பட்டு இறந்த நபரின் வாரிசுதாரர்களுக்கு ஓய்வூதியம் மற்றும் பணி நியமன ஆணையினை மாவட்ட ஆட்சித்தலைவர் முனைவர் வீ.ப.ஜெயசீலன்.,I A S., அவர்கள் வழங்கினார்.அதன்படி, வன்கொடுமையால் பாதிக்கப்பட்டு இறந்த சிவகாசி வட்டம் விஸ்வநத்தத்தை சேர்ந்த லேட் திரு.செல்வராஜ் என்பவரின் தாயார் திருமதி வேல்த்தாய் மற்றும் மனைவி திருமதி முனீஸ்வரி என்பவருக்கும் ஆதிதிராவிடர் நலத்துறையின் கீழ் அரசு வழங்கும் நிவாரணத் தொகை ரூ.3,00,000/- (மூன்று இலட்சம் மட்டும்) முதல் தவணையாகவும், பின்பு இரண்டாம் தவணையாக ரூ.3,00,000/ (மூன்று இலட்சம் மட்டும்) இருவரின் வங்கி கணக்கிற்கு நேரடியாக வரவு வைக்கப்பட்டது.மேலும், திருத்தப்பட்ட வன்கொடுமை தடுப்புச் சட்டம் 2016-ன் கீழ் வன்கொடுமையால் பாதிக்கப்பட்ட லேட் திரு.செல்வராஜ் என்பவரின் தாயார் திருமதி வேல்த்தாய் என்பவருக்கு மாதாந்திர ஓய்வூதியம் ரூ.5000/- (ரூபாய் ஐந்தாயிரம் மட்டும்) பெறுவதற்கான ஆணையினையும் மற்றும் அவரது மனைவிக்கு ஆதிதிராவிட நலத்துறையின் கட்டுப்பாட்டில் செயல்பட்டு வரும் அரசு ஆதிதிராவிடர் கல்லூரி மாணவியர் விடுதியில், கருணை அடிப்படையிலான சமையலர் பணிக்கான ஆணையினையும் மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் அவர்கள் வழங்கினார்.இந்நிகழ்வின் போது ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நல அலுவலர் திரு.ரமேஷ் உட்பட அரசு அலுவலர்கள் பலர் கலந்து கொண்டனர்
விருதுநகர் மாவட்டம், அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் (23.09.2024) ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சி திட்டம் மூலம் தேசிய ஊட்டச்சத்து மாத விழா -2024 கர்ப்பிணி பெண்கள் மற்றும் பாலூட்டும் தாய்மார்களுக்கு இரத்த சோகை மற்றும் ஊட்டச்சத்துக் கல்வி குறித்த ஒரு நாள் கருத்தரங்கம் மாவட்ட ஆட்சித்தலைவர் முனைவர் வீ.ப.ஜெயசீலன்., I A S ., அவர்கள் தலைமையில் நடைபெற்றது.குழந்தை இறப்பு விகிதத்தை கட்டுப்படுத்துவதற்கும், ஆரோக்கியமான குழந்தைகள் உருவாக்குவதற்கும், மிக மிக முக்கியமானது ஊட்டச்சத்தும் தாய்ப்பாலும் ஆகும். முதல் ஆயிரம் நாட்கள் ஆனது மிகவும் பொன்னான நாட்கள் ஆகும்.ஒரு கரு உருவானதில் இருந்து, அந்த குழந்தை பிறந்த ஆரம்ப காலம் முதல் இரண்டு ஆண்டு காலம் வரை உள்ள ஆயிரம் நாட்களும் குழந்தைக்கும், தாய்க்கும் மிக முக்கியமான நாட்கள். அந்த ஆயிரம் நாட்களில் அவர்களுக்கு முழுமையான ஊட்டச்சத்து மிக முக்கியமானதாகும். குறிப்பாக இரத்த சோகை அளவு மிக முக்கியமானது. இந்த ஊட்டச்சத்தை எல்லாம் குழந்தைகளும் பெற வேண்டும் என்பதற்காகவும், கர்ப்பிணி பெண்களும், குழந்தைகளும் நன்கு வளரவேண்டும் என்பதற்காகவும் தான் ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சி திட்டம் மூலமாக தாய்மார்களுக்கும், குழந்தைகளுக்கும் இந்த இணை உணவுகள் வழங்கப்பட்டு வருகிறது.மேலும், கர்ப்பிணி பெண்கள் நோய் தொற்று வராமல் தன் சுத்தத்தையும், தன்னை சுற்றி நோய் தொற்று வராமல் தடுப்பது பற்றியும் தெரிந்து கொள்ள வேண்டும். ஒரு பெண் கருவுற்றதில் இருந்து குழந்தை பிறக்கும் வரையிலும் அவர்களுக்கு தொடர்ச்சியாக எப்படி ஊட்டச்சத்து பெற வேண்டும் என்பது குறித்து, கர்ப்பிணி பெண்கள் மற்றும் அவர்கள் குடும்பத்தினருக்கு விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும்.கர்ப்பிணி பெண்களுக்கு ஊட்டச்சத்து குறைவாக இருப்பதால் அவர்களுக்கு பிறக்கும் குழந்தைகள் எடை குறைவாகவும், ஊட்டச்சத்து குறைபாட்டுடனும் பிறக்கின்றனர். அதற்கு மிக முக்கிய காரணம் இளம் வயதில் பெண்களுக்கு திருமணம் செய்து கொள்வது தான். அதனால் அவர்களுக்கு பிறக்கும் குழந்தைகளுக்கு நோய் எதிர்ப்பு சக்தி குறைவாக காணப்படுகிறது. இரும்பு சத்து அளவு குறைவாக இருக்கிறது. அதனால் இது குறித்து பெண்களுக்கு அறிவுரை மற்றும் விழிப்புணர்வு வழங்கப்பட வேண்டும். ஒரு ஆரோக்கியமான குழந்தை என்பது குழந்தையின் தாய்க்கு மட்டும் அல்லாமல், அந்த குடும்பத்திற்கும், அதை விட சமூகத்திற்கும் மிகவும் முக்கியம் ஆகும். ஊட்டச்சத்து குறைப்பாட்டால் உண்டாகும் இரத்த சோகை குறைப்பாட்டை போக்குவதற்கு அரசு மருத்துவமனைகளில் வழங்கும் மருந்துகளை உட்கொள்ள வேண்டும். அதோடு ஊட்டச்சத்து மிக்க உணவை நம் அன்றாட எடுத்துக்கொண்டோம் என்றால் நாம் மருந்துகளை சாப்பிட வேண்டிய அவசியம் இருக்காது. எனவே அனைத்து கர்ப்பிணி தாய்மார்களும் சரியான வகையில் ஊட்டச்சத்து உணவினை எடுத்துக்கொள்ள வேண்டும் என்பது குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்துவதற்காக தான் இந்த நிகழ்ச்சி நடத்தப்படுகிறது.இது போன்ற தொடர்ச்சியான விழிப்புணர்வை ஏற்படுத்தும் பொழுது தான் நாம் எதிர்காலத்தில் ஒரு ஆரோக்கியமான மகப்பேறு உறுதி செய்ய முடியும். எனவே அதற்குரிய நடவடிக்கைகளை நாம் அனைவரும் இணைந்து எடுக்க வேண்டும் என்று இந்த தேசிய ஊட்டச்சத்து மாத நிகழ்ச்சியில் நாம் அனைவரும் உறுதிமொழி எடுத்துக் கொள்ள வேண்டும் என மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் தெரிவித்தார்.இந்நிகழ்ச்சியில், கர்ப்பிணி தாய்மார்களுக்கு ஊட்டச்சத்து பெட்டகங்களை மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் வழங்கினார்.பின்னர், தேசிய ஊட்டச்சத்து மாதம் -2024 -ஐ முன்னிட்டு, “அனைவரும் ஆரோக்கியமான ஊட்டச்சத்து மற்றும் சுகாதாரம் பெறுவதை உறுதி செய்வோம்” என்ற கையெழுத்து இயக்கத்தினை மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் தொடங்கி வைத்தார்.
விருதுநகர் மாவட்டத்திற்குட்டபட்ட நகராட்சிகளில் நடைபெற்றுவரும் பணிகள் குறித்தும், பொதுமக்களிடமிருந்து மனுக்கள் பெறவும், நடைபெற்றுவரும் பணிகள் மற்றும் மேற்கொள்ள வேண்டிய பணிகள் குறித்தும், வாரம் ஒரு நகராட்சியில் மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் முகாமிட்டு ஆய்வு பணிகளை மேற்கொள்ள உள்ளார்.அதன்படி, திருவில்லிபுத்தூர் நகராட்சியில் 26.09.2024 அன்றும், அருப்புக்கோட்டை நகராட்சியில் 03.10.2024 அன்றும், விருதுநகர் நகராட்சியில் 10.10.2024 அன்றும், சாத்தூர் நகராட்சியில் 17.10.2024 அன்றும் மற்றும் இராஜபாளையம் நகராட்சியில் 24.10.2024 அன்று பல்வேறு துறைகளின் மூலம் செயல்படுத்தப்படும் திட்டங்கள், செயல்பாடுகளை விரைவுபடுத்தவும் மற்றும் வழங்கப்படும் சேவைகளின் தரத்தை மேம்படுத்தவும், மக்களின் குறைகளை கேட்டறிந்து தீர்வுகாணும் பொருட்டும், மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் கள ஆய்வு மேற்கொள்ள உள்ளார்.எனவே, அந்தந்த நகராட்சிப் பகுதிகளில் உள்ள பொதுமக்கள் தங்களது பகுதிகளில் உள்ள குறைகள் மற்றும் கோரிக்கைகள் தொடர்பான மனுக்களை மாவட்ட ஆட்சியர் அவர்களிடம் நேரில் தெரிவித்து, அரசின் திட்டங்கள் அனைத்தும் தங்கள் பகுதிக்கு முழுமையாக கிடைத்திட இந்த அரிய வாய்ப்பினை பயன்படுத்திக் கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது
விருதுநகர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் 23.09.24 வெம்பக்கோட்டை வட்டம் செவல் பட்டி கிராமத்தில் இயங்கி வரும் தனியார் பட்டாசு தொழிற்சாலையில் 19.09.2024 அன்று ஏற்பட்ட வெடிவிபத்தில் மரணமடைந்த வெம்பக்கோட்டை வட்டம்அம்மையார்பட்டி கிராமத்தைச் சேர்ந்த லேட் திரு. கோவிந்தராஜ் என்பரின் வாரிசுதாரரான தாயார்திருமதி.முருகேஸ்வரிஎன்பவருக்குமுதலமைசரின் பொது நிவாரண நிதியிலிருந்து ரூ3 இலட்சம் மதிப்பிலான காசோலையினை மாவட்ட ஆட்சித்தலைவர் முனைவர் வீ. ப. ஜெயசீலன் I A S அவர்கள் வழங்கினார்.
விருதுநகர் ஊராட்சி மற்றும் விருதுநகர் நகராட்சி பகுதிகளில் பள்ளிகளில் 9 முதல் 12 ஆம் வகுப்பில் இடைநிற்றல் ஆன மாணவர்களை, மீண்டும் பள்ளியில் சேர்க்கும் வகையில் மாவட்ட ஆட்சித்தலைவர் முனைவர் வீ.ப.ஜெயசீலன், I A S., அவர்கள் நேரில் சென்று சிறப்பு கள ஆய்வு மேற்கொண்டார்.விருதுநகர் மாவட்டத்தில் உள்ள அனைத்து ஊராட்சி ஒன்றியங்களிலும் மாணவர்கள் 100 சதவிகிதம் பள்ளி படிப்பை முடிப்பதற்கும், பள்ளி படிப்பு முடித்து உயர் கல்வி சேர்வதையும் உறுதி செய்யும் வகையில் பல்வேறு முன்னெடுப்புகள் மாவட்ட நிர்வாகம் மூலம் எடுக்கப்பட்டு, தொடர்ச்சியாக ஒவ்வொரு ஆண்டும் இடைநிற்றல் ஆன மாணவர்களை, மீண்டும் பள்ளியில் சேர்ப்பதற்கு பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு, அதற்கான பணிகள் நடைபெற்று வருகிறது.இந்த ஆண்டு ஆகஸ்ட் 2024 வரை மாவட்டத்தில் உள்ள 11 வட்டாரங்களில் 9 முதல் 12 ஆம் வகுப்பு வரை அருப்புக்கோட்டை ஊராட்சி ஒன்றியத்தில் 113 மாணவர்களும், காரியாபட்டி ஊராட்சி ஒன்றியத்தில் 53 மாணவர்களும், நரிக்குடி ஊராட்சி ஒன்றியத்தில் 30 மாணவர்களும், சாத்தூர் ஊராட்சி ஒன்றியத்தில் 82 மாணவர்களும்,திருவில்லிபுத்தூர் ஊராட்சி ஒன்றியத்தில் 74 மாணவர்களும், வெம்பக்கோட்டை ஊராட்சி ஒன்றியத்தில் 168 மாணவர்களும், வத்திராயிருப்பு ஊராட்சி ஒன்றியத்தில் 67 மாணவர்களும், சிவகாசி ஊராட்சி ஒன்றியத்தில் 338 மாணவர்களும், திருச்சுழி ஊராட்சி ஒன்றியத்தில் 62 மாணவர்களும், இராஜபாளையம் ஊராட்சி ஒன்றியத்தில் 137 மாணவர்களும், விருதுநகர் ஊராட்சி ஒன்றியத்தில் 182 மாணவர்களும், என மொத்தம் 1306 மாணவர்கள் தொடர்ச்சியாக 15 நாட்களுக்கும் மேலாக இடைநிற்றல் மாணவர்களாக உள்ளனர். இந்நிலையில், மாவட்ட ஆட்சியர், காவல் கண்காணிப்பாளர், மாவட்ட வருவாய் அலுவலர், திட்ட இயக்குநர் (மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை), துணை ஆட்சியர்கள், துணைக்காவல் கண்காணிப்பாளர் மற்றும் வட்டாட்சியர்கள் உட்பட அலுவலர்களுக்கு ஒவ்வொரு அலுவலர்களுக்கும் தனித்தனியாக இடைநின்ற மாணவர்களின் விபரங்கள் கொடுக்கப்பட்டு, ஒவ்வொரு அலுவலர்களும் நேரில் சந்தித்து, இடைநிற்றலுக்கான காரணம் அறிந்து, குறைகளை நீக்கி, மீண்டும் பள்ளியில் சேர நடவடிக்கை எடுக்கும் வகையில் மாணவர்களை நேரில் சென்று சந்தித்து, இடைநிற்றலுக்கான காரணங்கள், குறைகளை கேட்டறிந்து அதை நிவர்த்தி செய்வதற்கான கள ஆய்வினை மேற்கொண்டு வருகின்றனர்.அதன்படி, விருதுநகர் ஊராட்சி ஒன்றியம் மற்றும் விருதுநகர் நகராட்சி பகுதிகளில் பள்ளிகளில் 9 முதல் 12 ஆம் வகுப்பில் இடைநிற்றல் ஆன மாணவர்களை, மீண்டும் பள்ளியில் சேர்க்கும் வகையில் மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் நேரில் சென்று சிறப்பு கள ஆய்வு மேற்கொண்டார். மாணவர்கள் மற்றும் பெற்றோர்கள் சொல்கின்ற காரணங்களின் அடிப்படையில், அவர்களுக்கு உரிய வழிகாட்டுதல் மற்றும் அறிவுரைகள் வழங்கப்பட்டு, பள்ளியில் சேர்வதை உறுதி செய்யும் வகையில் தொடர்ந்து அலுவலர்கள் மூலம் கண்காணிக்கப்பட்டு, அவர்களுக்கு தேவையான மருத்துவ உதவி, நிதியுதவி, மாணவர்களுக்கும், பெற்றோர்களுக்கும் தேவையான ஆலோசனைகள் வழங்குதல், சிறப்பு வகுப்புகள் எடுத்தல், ஆர்வமின்மையை போக்கி மீண்டும் பள்ளியில் சேர்த்தல், புலம்பெயர்ந்தவர்களை கண்டறிந்து உரிய வழிகாட்டுதல், கல்வியின் அவசியம் குறித்து எடுத்துரைத்தல் உள்ளிட்ட பல்வேறு உதவிகள் வழங்கப்பட்டு இடைநிற்றல் மாணவர்களை பள்ளியில் சேர்ப்பதற்கு உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் தெரிவித்துள்ளார்.
விருதுநகர் மாவட்ட ஆட்சியர் அலுவலக வளர்ச்சி மன்ற கூட்டரங்கில் (20.09.2024) விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் மாவட்ட ஆட்சித்தலைவர் முனைவர் வீ.ப. ஜெயசீலன், I A S, அவர்கள் தலைமையில் நடைபெற்றது. இக்கூட்டத்தில் மாவட்ட விவசாயிகள் கலந்து கொண்டு தங்களது குறைகளை மாவட்ட ஆட்சியர் அவர்களிடம் தெரிவித்துக் கொண்டனர். மாவட்ட ஆட்சியர் அவர்கள் விவசாயிகளின் கோரிக்கைகளைக் கேட்டறிந்து உரிய விளக்கம் அளித்து தொடர் நடவடிக்கை எடுக்க தொடர்புடைய அலுவலர்களுக்கு அறிவுறுத்தினார்கள்.கடந்த விவசாயிகள் குறை தீர்க்கும் நாள் கூட்டத்தில் விவசாயிகளால் வழங்கப்பட்ட மனுக்கள் மீது எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் குறித்து வேளாண்மை துணை இயக்குநர்/ மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (விவ) அவர்களால் எடுத்துரைக்கப்பட்டது.மாவட்ட ஆட்சித் தலைவர் அவர்களால் பயிர் விளைச்சல் போட்டியில் நெல் பயிரில் மாவட்ட அளவில் முதல் பரிசு பெற்ற நல்லூர்பட்டி, வத்திராயிருப்பு விவசாயிக்கு ரூ.15000/- வழங்கப்பட்டது. பயிர் விளைச்சல் போட்டியில் நெல் பயிரில் மாவட்டஅளவில் இரண்டாம் பரிசு பெற்ற முள்ளிகுளம், திருவில்லிபுத்தூர் விவசாயிக்கு ரூ.10000/- வழங்கப்பட்டது. பயிர் விளைச்சல் போட்டியில் மக்காச்சோளம் பயிரில் மாவட்ட அளவில் முதல் பரிசு பெற்ற சுப்ரமணியபுரம், வெம்பக்கோட்டை விவசாயிக்கு ரூ.10000/- வழங்கப்படுகிறது. பயிர் விளைச்சல் போட்டியில் மக்காச்சோளம் பயிரில் மாவட்ட அளவில் இரண்டாம் பரிசு பெற்ற கங்கர்செவல், வெம்பக்கோட்டை விவசாயிக்குரூ.5000/- வழங்கப்பட்டது. தோட்டக்கலைத்துறையின் மூலம் வெங்கடேஷ்வாபுரம் என்ற விவசாயிக்கு SHDS மாடித்தோட்ட தொகுப்பு ஒரு எண்ணம் ரூ.450/- மானியத்தில் வழங்கப்பட்டது. என்.மேட்டுப்பட்டியை சேர்ந்த விவசாயிக்கு வேளாண்மை வளர்ச்சித்திட்டதின் கீழ் நறுமணப்பொருட்கள் மற்றும் மிளகாய் விதைகள் ரூ.6000/- மானியத்தில் வழங்கப்பட்டது. பனையடிப்பட்டியை சேர்ந்த விவசாயிக்கு வேளாண்மை வளர்ச்சித்திட்டதின் கீழ் நறுமணப்பொருட்கள் மற்றும் மிளகாய் ரூ.4,800/- மானியத்தில் வழங்கப்பட்டது. எம்.துரைச்சாமிபுரத்தைச் சேர்ந்த விவசாயிக்கு கலைஞரின் அனைத்து கிராம ஒருங்கிணைந்த வேளாண் வளர்ச்சித் திட்டத்தின் கீழ் வெண்டை விதை ரூ.1,500/- மானியத்தில் ஆகிய இடுபொருட்கள் மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்களால் வழங்கப்பட்டது. கண்மாய்கள் மற்றும்; ஓடை ஆக்கிரமிப்புகளை அகற்றுவதற்கு விவசாயிகளின் கோரிக்கைகளை ஏற்று முன்னுரிமை அடிப்படையில் அப்பகுதிக்குரிய வட்டாட்சியர், செயற்பொறியாளர், நீர்வளத்துறை, வட்டார வளர்ச்சி அலுவலர் மற்றும் செயற்பொறியாளர், வேளாண் பொறியியல் துறை, விருதுநகர் இணைந்து துரித நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மாவட்ட ஆட்சியர் அறிவுறுத்தினார்கள். சீமைக் கருவேல மரங்களை அரசு ஆணையின்படி அகற்றிட நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் சீமைக் கருவேல மரங்களை அகற்றினால் மட்டுமே வனவிலங்குள் காட்டுப்பன்றிகள் பயிர் சேதத்தினை தடுக்க முடியும் என மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் தெரிவித்தார்கள். விருதுநகர், திருவில்லிபுத்தூர் மற்றம் இராஜபாளையம் கண்மாய் ஆக்கிரமிப்புகளை அகற்றி எடுத்த நடவடிக்கையின் விபரத்தை உடன் தொடர்புடைய அலுவலகத்திற்கு சமர்ப்பிக்குமாறு மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் அறிவுறுத்தினார்கள். வனவிலங்குகளால் பயிர்சேதம் ஏற்படும் பட்சத்தில் வனத்துறையினர் முன்னுரிமை அடிப்படையில் கள ஆய்வு செய்து விவசாயிகளுக்கு இழப்பீடு உடனடியாக வழங்கிட வேண்டும். கம்பிக்குடி கால்வாய் திட்டத்தினை செயல்படுத்திட துரித நடவடிக்கையினை எடுக்குமாறு செயற்பொறியாளர், குண்டாறு அவர்களுக்கு அறிவுறுத்தப்பட்டது. தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கத்தில் உரம் போதியளவு இருப்பு வைக்க அறிவுறுத்தப்பட்டது. மாவட்டத்தில் மல்லிகை செண்ட் தொழிற்சாலை அமைக்க அரசுக்கு கருத்துரு அனுப்பி நடவடிக்கை மேற்கொள்ள அறிவுறுத்தப்பட்டது.
விருதுநகர் மாவட்ட ஆட்சியர் அலுவலகக் கூட்டரங்கில் (20.09.2024) விருதுநகர் மாவட்டத்தை சார்ந்த கல்லூரி மாணவர்கள் பயன்பெறும் வகையில் விருதுநகர் மாவட்டத்தில் மாவட்ட முன்னோடி வங்கி மற்றும் அனைத்து வங்கிகளின் சார்பில் சிறப்பு கல்வி கடன் வழங்கும் முகாம் மாவட்ட ஆட்சித்தலைவர் முனைவர் வீ.ப.ஜெயசீலன்., I A S., அவர்கள் தலைமையில் நடைபெற்றது.இம்முகாமில் கலந்துகொண்ட மாணவர்களில் 97 மாணவர்களுக்கு ரூபாய் 6.75 கோடிக்கான கல்விக்கடன் பெறுவதற்கான ஆணையினை மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் வழங்கினார்.மேலும், இம்முகாமில் மாவட்டத்திலுள்ள 200 தேசியமயமாக்கப்பட்ட மற்றும் தனியார் வங்கி கிளைகளின் மாவட்ட அளவிலான வங்கி பிரதிநிதிகள் கலந்துகொண்டனர். அனைத்து வங்கிகள் சார்பாகவும் அரங்குகள் அமைக்கப்பட்டு மாணவர்கள் மற்றும் பெற்றோர்களுக்கு கல்விக்கடன் தொடர்பான சந்தேகங்கள் மற்றும் கேள்விகளுக்கு விளக்கம் அளிக்கப்பட்டது. மேலும் மாணவர்களிடம் நேரடியாக கல்விக்கடன் விண்ணப்பங்கள் வங்கிகளின் மூலம் பெறப்பட்டன. இந்த முகாமின் மூலம் பெறப்பட்ட விண்ணப்பங்கள் வங்கிக்கிளைகளில் பரிசீலனை செய்யப்பட்டு 20 நாட்களுக்குள் தகுதியான அனைத்து மாணவர்களுக்கும் கல்வி கடன் வழங்கப்படும் என மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் தெரிவித்தார்.இந்த முகாமில் மாவட்ட முன்னோடி வங்கி மேலாளர் திரு.சு.பாண்டிச்செல்வன், அனைத்து வங்கிகளின் மாவட்ட பிரதிநிதிகள், மாவட்டம் முழுவதிலும் இருந்து கல்லூரி மாணவர்கள் மற்றும் பெற்றோர்கள் கலந்துகொண்டனர்.
இந்திய தேர்தல் ஆணைய உத்தரவின்படி, வாக்காளர் பட்டியல் சிறப்பு சுருக்கத்திருத்தம் 2025-ன் முன் நடவடிக்கைகளின் ஒருபகுதியாக வாக்குசாவடிகள் பகுப்பாய்வு மறுசீரமைப்பு பணிகள் தற்போது நடைபெற்று வருகிறது. அதன் தொடர்சியாக (20.09.2024) மாலை 03.30 மணியளவில் விருதுநகர் மாவட்டத்தில் உள்ள ஏழு சட்டமன்றத் தொகுதிகளுக்கான வாக்குச்சாவடிகள் பகுப்பாய்வு மற்றும் மறுசீரமைப்பு தொடர்பாக அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகளுடனான கூட்டம் விருதுநகர் மாவட்ட ஆட்சியர் அலுவலக வளர்ச்சிமன்ற கூட்டரங்கில் மாவட்ட ஆட்சித்தலைவர் முனைவர் வீ.ப.ஜெயசீலன், I A S., அவர்கள் தலைமையில் நடைபெற்றது.இக்கூட்டத்தில் மாவட்ட தேர்தல் அலுவலர் மற்றும் வாக்காளர் பதிவு அலுவலர்களால் ஏற்கெனவே நடத்தப்பட்ட கூட்டத்தில், அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகளால் தெரிவிக்கப்பட்ட கோரிக்கைகள் மற்றும் பொதுமக்களின் நலன் ஆகியவற்றின் அடிப்படையில் வாக்குச்சாவடி மையங்கள் நேரிடையாக பார்வையிடப்பட்டு வாக்காளர் பதிவு அலுவலர்கள் அவர்களால் பரிந்துரை செய்யப்பட்ட வாக்குச்சாவடி இடமாற்றம்/கட்டிடம் மாற்றம், வாக்குச்சாவடி மறுசீரமைப்பு, வாக்குச்சாவடி பெயர் மாற்றம், புதிய வாக்குச்சாவடி உருவாக்கம் குறித்து அரசியல் கட்சிகள் மற்றும் மக்கள் பிரதிநிதிகளுக்கு விளக்கமாக எடுத்துரைக்கப்பட்டு, அவர்களது ஒப்புதல் பெறப்பட்டது.மறுசீராய்வு பணியில் 202-இராஜபாளையம் சட்டமன்ற தொகுதியில் ஒரு வாக்குச்சாவடியும், 204-சாத்தூர் சட்டமன்ற தொகுதியில் ஒரு வாக்குச்சாவடி, 205-சிவகாசி சட்டமன்ற தொகுதியில் இரண்டு வாக்குச்சாவடிகள், 206-விருதுநகர் சட்டமன்ற தொகுதியில் மூன்று வாக்குச்சாவடிகள், 208-திருச்சுழி சட்டமன்ற தொகுதியில் ஒரு வாக்குச்சாவடி என மொத்தம் 08 வாக்குச்சாவடிகள் புதியதாக ஏற்படுத்தப்பட உள்ளன.வாக்குச்சாவடிகள் பகுப்பாய்வு மற்றும் மறுசீராய்வு பணிகளுக்குப் பிறகு விருதுநகர் மாவட்டத்தின் மொத்த வாக்குச்சாவடிகளின் எண்ணிக்கை 1893-ல் இருந்து 1901 ஆக உயரும் என மாவட்ட தேர்தல் அலுவலர் மற்றும் மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் தெரிவித்துள்ளார்.
விருதுநகர் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் (20.09.2024) வாழ்ந்து காட்டுவோம் திட்டத்தின் கீழ் பகுதி அளவிலான தையல் தொழில் குழுக்களுக்கான வாங்குபவர் மற்றும் விற்பவர்களுக்கான (Buyer-Seller) வணிக இணைப்புக் கூட்டம் மாவட்ட ஆட்சித்தலைவர் முனைவர் வீ.ப.ஜெயசீலன்,I A S.,அவர்கள் தலைமையில் நடைபெற்றது.இக்கூட்டத்தில் 14 ஆடை உற்பத்தியாளர்கள் நிறுவனங்களும், 6 பகுதி அளவிலான தையல் தொழில் குழு நிர்வாகிகளும் மற்றும் ஆடை உற்பத்தியாளர் சங்க நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.இக்கூட்டத்தின் வாயிலாக பகுதி அளவிலான தையல் தொழில் குழுக்களுக்கான கொள்முதல் மற்றும் விற்பனை ஆணை ஆடை உற்பத்தியாளர் நிறுவனங்கள் மூலம் தொடர்ந்து வழங்க ஏற்பாடு செய்து தரப்பட்டது. இதன் மூலம் தையல் தொழில் குழுக்களின் வருமானம் அதிகரிக்கவும் பெண் உற்பத்தியாளர்களின் வாழ்வாதாரம் மேம்படுத்தவும் வழிவகை செய்யப்பட்டது இக்கூட்டத்தில் வாழ்ந்து காட்டுவோம் திட்ட மாவட்ட செயல் அலுவலர் திருமதி ராஜாத்தி, வாழ்ந்து காட்டுவோம் திட்ட பணியாளர்கள் மற்றும் அரசு அலுவலர்கள் பலர் கலந்து கொண்டனர்.