விருதுநகர் மாவட்ட ஆட்சியர் அலுவலகக் கூட்டரங்கில் வாராந்திர மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் (18.05.2026) மாவட்ட ஆட்சியர் மரு.என்.ஓ.சுகபுத்ரா, I A S, அவர்கள் தலைமையில் நடைபெற்றது.இக்கூட்டத்தில், பொதுமக்கள் மற்றும் மாற்றுத்திறனாளிகளிடமிருந்து இலவச வீட்டுமனைப்பட்டா, பட்டா மாறுதல், புதிய குடும்ப அட்டை, வேலைவாய்ப்பு, விபத்து நிவாரணம், மாற்றுத்திறனாளிகள் மற்றும் நலிந்தோர் நல உதவித்திட்டங்கள், விதவை உதவித்தொகை, திருமண உதவித்தொகை மற்றும் முதியோர் உதவித்தொகை உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் குறித்தான மனுக்கள் பெறப்பட்டன. மேலும், மாவட்ட ஆட்சியர் அவர்கள் மாற்றுத்திறனாளிகள் மற்றும் மூத்த குடிமக்களுக்காக அமைக்கப்பட்டுள்ள சிறப்பு அமருமிடத்திற்கு நேரடியாகச் சென்று, அவர்களின் கோரிக்கை மனுக்களைப் பெற்று கனிவுடன் பரிசீலித்தார். பொதுமக்களிடமிருந்து பெறப்பட்ட இம்மனுக்கள் அனைத்தையும் சம்பந்தப்பட்ட துறை அலுவலர்களிடம் ஒப்படைத்து, அவற்றின் மீது உரிய மற்றும் விரைவான நடவடிக்கை எடுக்குமாறு மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டார். அதனைத் தொடர்ந்து, மாவட்ட ஆட்சியர் அவர்கள் மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்திற்கு நேரில் சென்று, பொதுமக்களுக்காக அங்கு செய்யப்பட்டுள்ள குடிநீர் வசதி, சுகாதார வளாக வசதி உள்ளிட்ட அடிப்படை உள்கட்டமைப்பு வசதிகள் குறித்து கள ஆய்வு மேற்கொண்டார். பொதுமக்கள் எவ்வித சிரமமுமின்றி சேவைகளைப் பெறுவதை உறுதி செய்யுமாறு சம்பந்தப்பட்ட அலுவலர்களுக்கு அறிவுறுத்தினார்.இக்கூட்டத்தில், மாவட்ட வருவாய் அலுவலர் திருமதி இரா.ஆனந்தி, மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (பொது) திருமதி பிர்தௌஸ் பாத்திமா, அரசு துறை அலுவலர்கள் மற்றும் பொதுமக்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.
விருதுநகர் மாவட்டத்தில் செயல்பட்டு வரும் அனைத்து முதியோர் இல்லங்களும், ‘தமிழ்நாடு பெற்றோர் மற்றும் மூத்த குடிமக்களின் பராமரிப்பு மற்றும் நலன் சட்டம் 2007’-ன் (The Maintenance and Welfare of Parents and Senior Citizens Act, 2007) விதிகளின்படி, வரும் *30.06.2026-க்குள்* தங்களைப் பதிவு செய்து கொள்ள வேண்டும் என மாவட்ட ஆட்சியர் அவர்கள் உத்தரவிட்டுள்ளார்.ஏற்கனவே பதிவு செய்து, புதுப்பிக்காமல் உள்ள முதியோர் இல்லங்கள் உடனடியாகத் தங்களது பதிவினைப் புதுப்பித்துக் கொள்ளுமாறும் அறிவுறுத்தப்படுகிறது. முதியோர் இல்லங்கள் பதிவு செய்வது தொடர்பான முழு விவரங்களையும், இதனுடன் இணைக்கப்பட்டுள்ள *QR Code* மூலம் காணொளி வாயிலாக அறிந்து கொள்ளலாம்.குறிப்பிட்ட காலக்கெடுவுக்குள் பதிவு செய்யாத முதியோர் இல்லங்கள் மீது சட்டப்படி கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என மாவட்ட ஆட்சியர் எச்சரித்துள்ளார்.இது தொடர்பான விண்ணப்பங்கள் மற்றும் கருத்துருக்களைக் கீழே குறிப்பிட்டுள்ள முகவரியில் சமர்ப்பிக்கலாம் என மாவட்ட ஆட்சியர் மரு.என்.ஓ.சுகபுத்ரா,I A S., அவர்கள் தெரிவித்துள்ளார்.முகவரிமாவட்ட சமூக நல அலுவலர், மாவட்ட சமூக நல அலுவலகம், மாவட்ட ஆட்சியரக வளாகம், விருதுநகர் மாவட்டம் – 626002.தொலைபேசி எண்: 04562-252701
விருதுநகர் மாவட்டத்தில் வேலைவாய்ப்புப் பதிவு, பதிவு புதுப்பித்தல், வேலைவாய்ப்பற்ற இளைஞர்களுக்கான உதவித்தொகை கோருதல், கூடுதல் தகுதிப் பதிவு மற்றும் முகவரி மாற்றம் உள்ளிட்ட அனைத்துச் சேவைகளும் வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சித் துறையின் இணையதளம் வாயிலாக, மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையங்களால் எந்தவிதக் கட்டணமுமின்றி வழங்கப்பட்டு வருகின்றன.மேற்கண்ட அனைத்துச் சேவைகளையும் மனுதாரர்கள் தங்களின் இருப்பிடத்திலிருந்தே www.tnvelaivaaippu.gov.in என்ற இணையதள முகவரியைப் பயன்படுத்தி, எளிய முறையில் இலவசமாகச் செய்துகொள்ளத் தேவையான வசதிகள் ஏற்படுத்தப்பட்டுள்ளன.எனவே, பொதுமக்கள் மற்றும் வேலைவாய்ப்பு அலுவலகப் பதிவாளர்கள் எவரும் போலி விளம்பரங்களையோ அல்லது இடைத்தரகர்களையோ நம்பித் தங்களின் தனிப்பட்ட விவரங்களையோ அல்லது பணத்தையோ கொடுத்து ஏமாற வேண்டாம் என விருதுநகர் மாவட்ட ஆட்சியர் மரு.என்.ஓ.சுகபுத்ரா, I A S ., அவர்கள் தெரிவித்துள்ளார்.
விருதுநகர் மாவட்டத்தில், சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத் துறையின் கீழ் செயல்பட்டு வரும் ‘முதலமைச்சரின் பெண் குழந்தை பாதுகாப்புத் திட்டத்தின்’ கீழ், 2026-27 ஆம் நிதியாண்டிற்குப் புதியதாக விண்ணப்பிக்கலாம் என மாவட்ட ஆட்சியர் மரு.என்.ஓ.சுகபுத்ரா, I A S., அவர்கள் தெரிவித்துள்ளார். இத்திட்டத்தின் கீழ், குடும்பத்தில் ஒரு பெண் குழந்தை மட்டும் இருந்தால் ரூ.50,000/- மற்றும் இரண்டு பெண் குழந்தைகள் இருந்தால் தலா ரூ.25,000/- வீதம் இரண்டு குழந்தைகளுக்கு மொத்தம் ரூ.50,000/- வைப்புத்தொகை இரசீது வழங்கப்படும். அதேபோல், மூன்று பெண் குழந்தைகள் இருக்கும் பட்சத்தில், ஒரு குழந்தைக்கு ரூ.25,000/- வீதம் மூன்று பெண் குழந்தைகளுக்கு மொத்தம் ரூ.75,000/- வைப்புத்தொகை இரசீதாக வழங்கப்படும். இத்திட்டத்தில் பயன்பெறும் குழந்தைகளுக்கு 18 வயது நிறைவடைந்த பின்னர், முதிர்வுத் தொகையைப் பெறுவதற்கு அக்குழந்தையின் வைப்புத்தொகை இரசீது நகல், 10-ஆம் வகுப்பு மதிப்பெண் சான்றிதழ் நகல் மற்றும் வங்கிக் கணக்கு புத்தக நகல் ஆகியவற்றுடன் மாவட்ட சமூக நல அலுவலகம் அல்லது சம்பந்தப்பட்ட வட்டார வளர்ச்சி அலுவலகங்களில் உள்ள சமூக நல விரிவாக்க அலுவலரை அணுகலாம். இ-சேவை மையங்களின் மூலம் இத்திட்டத்திற்கு விண்ணப்பிக்கத் தேவையான ஆவணங்களாவன: குழந்தையின் பிறப்புச் சான்றிதழ், தாய் அல்லது தந்தையின் வயதுச் சான்றிதழ், ஆண்டு வருமானச் சான்றிதழ் (ரூ.1,20,000/-க்குள் இருக்க வேண்டும்), குடும்பக் கட்டுப்பாட்டுச் சான்றிதழ், ஆண் வாரிசு இன்மைச் சான்றிதழ், பிறப்பிடச் சான்றிதழ், குடும்ப அட்டை மற்றும் உரிய அடையாள அட்டை நகல் ஆகியவையாகும். இது குறித்த கூடுதல் விவரங்களுக்கு, "மாவட்ட சமூக நல அலுவலர், மாவட்ட சமூக நல அலுவலகம், மாவட்ட ஆட்சியரக வளாகம், விருதுநகர் மாவட்டம் – 626002" என்ற முகவரியிலோ அல்லது 04562-252701 என்ற தொலைபேசி எண்ணிலோ தொடர்பு கொள்ளலாம் என மாவட்ட ஆட்சியர் அவர்கள் தெரிவித்துள்ளார்.
விருதுநகர் மாவட்டத்தில் செயல்பட்டு வரும் அனைத்துத் தொழிற்சாலை விடுதிகள், தனியார் பணிபுரியும் மகளிர் விடுதிகள் மற்றும் குழந்தைகள் விடுதிகள் ஆகியவை, ‘தமிழ்நாடு பெண்கள் மற்றும் குழந்தைகள் விடுதிகள் (ஒழுங்குமுறை) சட்டம் 2014’ மற்றும் அதன் 2015-ஆம் ஆண்டு விதிகளின்படி, வரும் *30.06.2026-க்குள்* தங்களது விடுதிகளைக் கட்டாயமாகப் பதிவு செய்துகொள்ள வேண்டும் என மாவட்ட ஆட்சியர் மரு. என்.ஓ. சுகபுத்ரா, I A S., அவர்கள் உத்தரவிட்டுள்ளார்.ஏற்கனவே பதிவு செய்து, புதுப்பிக்காமல் உள்ள விடுதிகள் உடனடியாகத் தங்களது உரிமத்தைப் புதுப்பித்துக் கொள்ளுமாறும் அறிவுறுத்தப்படுகிறது. அரசின் விதிமுறைகளின்படி, உரிய உரிமம் பெறாமல் விடுதிகளை நடத்தினால் *2 ஆண்டுகள் சிறை தண்டனை மற்றும் ரூ.50,000/- அபராதம்* விதிக்கப்படும் என எச்சரிக்கப்படுகிறது.விடுதிகள் பதிவு செய்வது தொடர்பான முழு விவரங்களையும், இதனுடன் இணைக்கப்பட்டுள்ள *QR Code* மூலம் காணொளி வாயிலாக அறிந்து கொள்ளலாம். குறிப்பிட்ட காலக்கெடுவுக்குள் பதிவு செய்யாத அல்லது புதுப்பிக்காத விடுதிகள் மற்றும் நிறுவனங்கள் மீது சட்டப்படி கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார்.இது தொடர்பான விண்ணப்பங்கள் மற்றும் கருத்துருக்களைக் கீழே குறிப்பிட்டுள்ள முகவரியில் சமர்ப்பிக்கலாம் என மாவட்ட ஆட்சியர் அவர்கள் தெரிவித்துள்ளார்.முகவரிமாவட்ட சமூக நல அலுவலர், மாவட்ட சமூக நல அலுவலகம், மாவட்ட ஆட்சியரக வளாகம், விருதுநகர் மாவட்டம் – 626002.தொலைபேசி எண்: 04562-252701
விருதுநகர் மாவட்ட ஆட்சியர் அலுவலகக் கூட்டரங்கில் (16.05.2026), மாவட்டத்தின் வளர்ச்சிப் பணிகள் மற்றும் திட்டச் செயல்பாடுகள் குறித்த அனைத்துத் துறை அரசு அலுவலர்களுடனான ஆலோசனைக் கூட்டம், அமைச்சர் செல்வி ச.கீர்த்தனா அவர்கள் தலைமையில், மாவட்ட ஆட்சியர் மரு. என்.ஓ. சுகபுத்ரா, I A S., மற்றும் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் டாக்டர் என். ஸ்ரீநாதா, இ.கா.ப., ஆகியோர் முன்னிலையில் நடைபெற்றது. விருதுநகர் மாவட்டத்தின் வளர்ச்சிக்குத் துறை அலுவலர்கள் அனைவரும் ஒரு ஒருங்கிணைந்த வழிகாட்டியாகத் திகழ வேண்டும். கல்வித் துறையில் விருதுநகர் மாவட்டம் எப்பொழுதும் முதன்மை மாவட்டமாகத் திகழ்வதை உறுதி செய்யும் வகையில், மாவட்டத்தில் சிறப்பாகச் செயல்படுத்தப்பட்டு வரும் “உயிர்” மற்றும் “திசை” ஆகிய திட்டங்களின் செயல்பாடுகள் பாராட்டுக்குரியவை.அதேபோல், பொதுத்தேர்வுகளில் தேர்ச்சி பெறாத 500-க்கும் மேற்பட்ட மாணவர்களின் கல்வித் தரத்தை மேம்படுத்தும் நோக்கில், 10 மாணவர்களுக்கு ஒரு பொறுப்பு அலுவலர் நியமிக்கப்பட்டு, அவர்களைத் தேர்ச்சி பெற வைக்க மாவட்ட நிர்வாகம் எடுத்து வரும் சிறப்பு நடவடிக்கைகள் தொடர வேண்டும். கடந்த ஐந்து ஆண்டுகளுக்கு முன்பு ‘முன்னேற விழையும் மாவட்டங்களின் (Aspirational Districts) பட்டியலில் நமது விருதுநகர் மாவட்டம், தற்போது மாவட்ட நிர்வாகத்தின் தொடர் முயற்சியால் பல்வேறு குறியீடுகளில் சிறந்த முன்னிலையை எட்டியுள்ளது. இதே உத்வேகத்துடன் மாவட்டத்தின் வளர்ச்சியை அடுத்த கட்டத்திற்கு எடுத்துச் செல்ல வேண்டும்.பொதுமக்களின் அடிப்படைத் தேவைகளான குடிநீர் விநியோகம் உள்ளிட்ட பணிகளுக்குத் துறை அலுவலர்கள் முன்னுரிமை அளிக்க வேண்டும். குறிப்பாக, தாமிரபரணி கூட்டுக் குடிநீர் திட்டத்தினை முழுமையாகச் செயல்படுத்தத் தேவையான உள்கட்டமைப்புப் பணிகளை விரைந்து மேற்கொள்ள வேண்டும். நமது மாவட்ட இளைஞர்களின் விளையாட்டுத் திறனை ஊக்குவிக்கும் வகையில், நவீன விளையாட்டு அரங்கம் அமைப்பதற்குத் தேவையான உரிய நிதி ஒதுக்கீடுகளைச் செய்து, அவர்களின் நீண்ட நாள் தேவையைப் பூர்த்தி செய்ய நடவடிக்கைகள் எடுக்கப்படும். மேலும், பொது சுகாதாரம் மற்றும் குழந்தைகள் பாதுகாப்பு ஆகியவற்றுக்குத் தேவையான அனைத்து முன்னெச்சரிக்கை மற்றும் பாதுகாப்பு நடவடிக்கைகளையும் உள்ளாட்சி மற்றும் சுகாதாரத் துறையினர் தொய்வின்றி மேற்கொள்ள வேண்டும் எனத் தெரிவித்தார்.இக்கூட்டத்தில், மாவட்ட வருவாய் அலுவலர் திருமதி ரா. ஆனந்தி, சிறப்பு மாவட்ட வருவாய் அலுவலர்(தேசிய நெடுஞ்சாலை நில எடுப்பு) திரு.ம.ராஜசேகரன், மற்றும் பல்வேறு அரசுத் துறைகளின் உயர் அலுவலர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.
விருதுநகர் மாவட்டத்திற்கு வருகை தந்த அமைச்சர் செல்வி. ச.கீரத்தனா அவர்களை மாவட்ட ஆட்சியர் மரு.என்.ஓ.சுகபுத்ரா,I A S., அவர்கள் (15.05.2026) பூங்கொத்து வழங்கி வரவேற்றார். உடன் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் டாக்டர் என்.ஸ்ரீநாதா,இ.கா.ப., அவர்கள், மாவட்ட வருவாய் அலுவலர் திருமதி ரா.ஆனந்தி அவர்கள் ஆகியோர் உள்ளனர்.
விருதுநகர் மாவட்ட ஆட்சியர் அலுவலகக் கூட்டரங்கில் (14.05.2026) நடைபெற்ற நிகழ்வில், இளைஞர் நீதிக் குழுமத்தைச் சேர்ந்த மாணவர் ஒருவர் தனது கல்வியைத் தொடர்வதற்காக, 2026-2027 ஆம் ஆண்டிற்கான கல்வி உதவித்தொகை ரூ. 24,000/- க்கான காசோலையினை மாவட்ட ஆட்சியர் மரு. என்.ஓ. சுகபுத்ரா, I A S., அவர்கள் மாணவரின் பெற்றோரிடம் வழங்கினார்.விருதுநகர் மாவட்டத்தை சார்ந்த மாணவர், தான் இளைஞர் நீதிக் குழுமத்தைச் (Juvenile Justice Board - JJB) சார்ந்த இளஞ்சிறார் பிரிவில் உள்ளதாகவும், தற்போது பாலிடெக்னிக் கல்லூரியில் முதலாம் ஆண்டு படிப்பை நிறைவு செய்துள்ளதாகவும் தெரிவித்தார். தனது குடும்பம் மிகவும் வறுமையான நிலையில் உள்ளதால், மேல்படிப்பைத் தொடர கல்வி உதவித்தொகை வழங்கிடுமாறு மாவட்ட ஆட்சியரிடம் கோரிக்கை மனு அளித்திருந்தார்.அம்மாணவரின் கோரிக்கையை ஏற்று, அவரது கல்வி நலனைக் கருத்தில் கொண்டு, முதற்கட்டமாக 2026-2027 ஆம் கல்வி ஆண்டிற்கான கல்வி உதவித்தொகையாக ரூ. 24,000/- வழங்கப்பட்டது. இதற்கான காசோலையினை மாவட்ட ஆட்சியர் அவர்கள் மாணவரின் பெற்றோரிடம் நேரில் வழங்கினார். இந்நிகழ்வில், இளைஞர் நீதிக் குழும உறுப்பினர் திருமதி முனியம்மாள், கல்லூரி முதல்வர் மற்றும் அரசு அலுவலர்கள் கலந்து கொண்டனர்.
பன்முக திறமை கொண்டவர்களுக்கு 2027-ஆம் ஆண்டு ஜனவரி -26-ஆம் தேதி குடியரசு தின விழாவில் "பத்ம விருது" வழங்க தகுதியான நபர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது.2025-ம் ஆண்டு பத்ம விருது வழங்கும் பொருட்டு கருத்துருக்கள் அனுப்புவதற்கான விதிமுறைகள்:1. விருதுநகர் மாவட்டத்தை சேர்ந்த தகுதியான நபர்கள் (ஆண்/பெண்) விண்ணப்பிக்கலாம்.2. கலை, இலக்கியம், கல்வி, விளையாட்டு, மருத்துவம், சமூகப் பணி, அறிவியல், பொறியியல், பொது விவகாரங்கள், குடிமைப்பணிகள், வர்த்தகம் மற்றும் தொழில் உள்ளிட்ட பல்வேறு துறைகளில் மிக சிறந்து விளங்குவராக இருத்தல் வோர்டும்.3. பத்ம விருது குறித்த விவரங்கள் அனைத்தும் இணையதளத்தில் (https://awards.gov.in) 15.03.2026 முதல் வெளியிடப்பட்டுள்ளது.4. இணையதளம் மூலம் விண்ணப்பிக்க வேண்டிய கடைசி நாள்: 31.07.2026 இணையதளம் மூலம் விண்ணப்பிக்கப்பட்ட விண்ணப்பங்கள் மட்டுமே ஏற்றுக்கொள்ளப்படும்.5. இணையதளத்தில் பதிவு செய்த பிறகு அனைத்து ஆவணங்களையும் விருதுநகர் மாவட்ட சமூகநல அலுவலகத்தில், கையேடாக (Booklet) தயார் செய்து தமிழ் (ம) ஆங்கிலத்தில் தட்டச்சு செய்து தலா 3 நகல்கள் 31.07.2026-ற்குள் சமர்ப்பிக்க வேண்டும்.மேலும், கருத்துருக்களை மாவட்ட சமூக நல அலுவலகம், மாவட்ட ஆட்சியர் வளாகம், விருதநகர். 04562-252 701 என்ற முகவரிக்கு சமர்பிக்கலாம் என மாவட்ட ஆட்சியர் மரு.என்.ஓ.சுகபுத்ரா,I A S ., அவர்கள் தெரிவித்துள்ளார்.
விருதுநகர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில், மாவட்ட அளவிலான சிறப்பு தடுப்பு பணி பிரிவு (District Level Task Force) மற்றும் மணல் ஒருங்கிணைப்புக் குழு (Sand Co-ordination Committee) கூட்டம் மாவட்ட ஆட்சியர் மரு.என்.ஓ.சுகபுத்ரா, I A S ., அவர்கள் தலைமையில் (13.05.2026) நடைபெற்றது.இக்கூட்டத்தில், மாவட்டத்தில் சட்டவிரோத மணல் மற்றும் கனிமக் கடத்தலை தடுக்கும் நடவடிக்கைகள் குறித்து விரிவாக ஆய்வு செய்யப்பட்டது.கடந்த மார்ச் மற்றும் ஏப்ரல் 2026 மாதங்களில் வருவாய்த்துறை, காவல் துறை மற்றும் கனிம வளத்துறை இணைந்து மேற்கொண்ட திடீர் சோதனைகள் மற்றும் வழக்குகள் தொடர்பாக ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.குறிப்பாக, சட்டவிரோத மணல் கடத்தலில் ஈடுபட்ட வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்ட விவரங்கள் பரிசீலிக்கப்பட்டன.மேலும், மாவட்டத்தில் செயல்பட்டு வரும் கல் குவாரிகள், கிரானைட் குவாரிகள் மற்றும் செங்கல் சூளைகளின் செயல்பாடுகள் குறித்தும் ஆய்வு செய்யப்பட்டது.சம்பந்தப்பட்ட அலுவலர்கள் தங்களது கட்டுப்பாட்டு பகுதிகளில் தொடர்ந்து கண்காணிப்பு மேற்கொண்டு, விதிமுறைகள் மீறப்பட்டால் உடனடி நடவடிக்கை எடுக்க அறிவுறுத்தப்பட்டனர்.கனிமக் கடத்தலைத் தடுக்கும் வகையில் வருவாய், காவல், சுரங்கத்துறை மற்றும் உள்ளாட்சி அமைப்புகள் ஒருங்கிணைந்து செயல்பட வேண்டும் என்றும், அனைத்து வட்டார அளவிலும் வட்டாட்சியர்களால் பணிக்குழு கூட்டங்களும் முறையாக நடத்தப்பட வேண்டும் என்றும் மாவட்ட ஆட்சியர் அறிவுறுத்தினார்.மேலும், பொதுப்பணித்துறை மற்றும் ஊரக வளர்ச்சி துறைகளின் மூலம் மேற்கொள்ளப்படும் பணிகளுக்காக கனிமங்கள் பயன்படுத்தப்படும் போது, விதிகளின்படி அனுமதி பெற்று மட்டுமே பயன்படுத்த வேண்டும் என்றும், பயன்பாட்டு சான்றிதழ்கள் முறையாக பராமரிக்கப்பட வேண்டும் என்றும் அறிவுறுத்தப்பட்டது.இக்கூட்டத்தில் மாவட்ட வருவாய் அலுவலர் திருமதி ஆனந்தி, சிவகாசி சார் ஆட்சியர் திரு.முகமது இர்பான், I A S., உதவி இயக்குநர் (புவியியல் மற்றும் சுரங்கத்துறை) முனைவர்.சி. சுகதாரஹிமா, கோட்டாட்சியர்கள், காவல் துறை, சுரங்கத்துறை மற்றும் தொடர்புடைய துறை அலுவலர்கள் கலந்து கொண்டனர்.