விருதுநகர் மாவட்டம், விருதுநகர் செந்திகுமார நாடார் கல்லூரியில் (01.07.2026) வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத் துறை சார்பில் நடைபெற்ற “இளம் பேரிடர் நண்பன்”- தன்னார்வலர்களுக்கான பயிற்சி வகுப்பினை (Yuva Aapda Mitra Volunteers Training) மாவட்ட ஆட்சித்தலைவர் மரு.என்.ஓ.சுகபுத்ரா I A S., அவர்கள் தொடங்கி வைத்தார்.இந்த உறைவிட பயிற்சி வகுப்பானது, விருதுநகர் செந்திகுமார நாடார் கல்லூரி (தன்னாட்சி) மற்றும் சிவகாசி அய்யநாடார் ஜானகி அம்மாள் கல்லூரி (தன்னாட்சி) ஆகிய கல்லூரிகளில் 01.07.2026 முதல் 07.07.2026 வரை நடைபெறுகிறது.இயற்கைப் பேரிடர்கள் நிகழும்போது அரசின் மீட்புப் படையினர் வருவதற்கு முன்பாக, உள்ளூர் மக்களும் இளைஞர்களுமே முதல் மீட்பர்களாகச் (First Responders) செயல்படுகின்றனர். பேரிடர் காலங்களில் உயிர்ச்சேதத்தைக் குறைக்கவும், துரிதமாகச் செயல்படவும் இதுபோன்ற பயிற்சிகள் பெரிதும் உதவும். அந்த வகையில், தமிழ்நாடு முழுவதும் மாவட்ட அளவில் “இளம் பேரிடர் நண்பன்” என்ற தலைப்பில் NCC, NSS. My Bharath தன்னார்வலர்களுக்கு ஒரு வார காலம் உறைவிட பயிற்சி நடத்த திட்டமிடப்பட்டுள்ளது. அதன்படி, தமிழகத்தில் முதல் மாவட்டமாக விருதுநகர் மாவட்டத்தில் இந்த உறைவிட பயிற்சி வகுப்பு தொடங்கி வைக்கப்பட்டு 01.07.2026 முதல் 07.07.2026 வரை நடைபெறுகிறது.விருதுநகரில் நடைபெற்று வரும் இப்பயிற்சி வகுப்பில் 102 ஆண்கள் மற்றும் 74 பெண்கள் என மொத்தம் 176 தன்னார்வலர்களும், சிவகாசியில் 146 ஆண்கள் மற்றும் 54 பெண்கள் என மொத்தம் 200 தன்னார்வலர்களும் என ஆக மொத்தம் 376 தன்னார்வலர்களுக்கு பயிற்சி அளிக்கப்படுகிறது.இந்த பயிற்சி வகுப்பில், பெருவெள்ளம், புயல், நிலநடுக்கம் மற்றும் தீ விபத்து போன்ற அவசரக் காலங்களில் பொதுமக்களைப் பாதுகாப்பாக மீட்பது குறித்த செயல்முறை விளக்கங்கள் குறித்தும், காயமடைந்தவர்களுக்கு அடிப்படை முதலுதவி (First Aid) மற்றும் மூச்சுத்திணறல் ஏற்படும்போது சி.பி.ஆர் (CPR) சிகிச்சை அளிக்கும் முறைகள் கற்றுத்தரப்படுகின்றன.தீயணைப்பு மற்றும் மீட்புப் பணிகள் துறை, மாநிலப் பேரிடர் மீட்புப் படை (SDRF) மற்றும் இந்தியச் செஞ்சிலுவை சங்க (Red Cross) வல்லுநர்களைக் கொண்டு இப்பயிற்சி வழங்கப்படுகிறது. மீட்புப் பணிகளுக்கான கயிறுகள் கட்டுதல், மிதவைகளை உருவாக்குதல் மற்றும் எச்சரிக்கை தகவல் தொடர்பு சாதனங்களைச் சரியாகப் பயன்படுத்துதல் குறித்தும் பயிற்சி அளிக்கப்படுகிறது.எனவே, இளம் பேரிடர் நண்பர்களாகப் பயிற்சி பெறும் நீங்கள், முழு ஈடுபாட்டுடன் கற்றுக்கொண்டு உங்கள் பகுதிகளில் பேரிடர் காலங்களில் பொதுமக்களுக்கு உறுதுணையாகவும், இந்த பயிற்சி குறித்த விழிப்புணர்வை பொதுமக்களுக்கு ஏற்படுத்த வேண்டும் எனவும் மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் தெரிவித்தார்.இந்நிகழ்ச்சியில், சாத்தூர் வருவாய் கோட்டாட்சியர் திரு.கனகராஜ், வல்லுநர் (தமிழ்நாடு மாநில பேரிடர் மேலாண்மை ஆணையம், சென்னை) டாக்டர்.முருகானந், வட்டாட்சியர் திரு.ராஜாமணி, கல்லூரி முதல்வர் முனைவர் சாரதி, கல்லூரி நிர்வாகிகள், பேராசிரியர்கள், பயிற்றுநர்கள் மற்றும் தன்னார்வலர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.
விருதுநகர் மாவட்டம் சாத்தூர் ஊராட்சி ஒன்றியம் கஞ்சம்பட்டி ஊராட்சியில் செய்தி மக்கள் தொடர்பு துறையின் சார்பாக வைக்கப்பட்டுள்ள தமிழக அரசின் சாதனை விளக்க புகைப்பட கண்காட்சியினை பொதுமக்கள் பார்வையிட்டனர்.
மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் செயல்படும் தன்னார்வ பயிலும் வட்டம் வாயிலாக TNPSC, TNUSRB, SSC, RRB மற்றும் TRB போன்ற தேர்வு முகமைகளால் நடத்தப்படும் பல்வேறு போட்டித் தேர்வுகளுக்கான இலவசப் பயிற்சி வகுப்புகள் தொடர்ந்து நடத்தப்பட்டு வருகின்றது.இரயில்வே தேர்வு வாரியம் 22,195 காலிப்பணியிடங்களுக்கான RRB Group–D-க்கான அறிவிக்கை வெளியிடப்பட்டது. விருதுநகர் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் RRB Group-D தேர்விற்கான இலவசப் பயிற்சி வகுப்பு 09.02.2026 முதல் நடைபெற்றது.அதனைத் தொடர்ந்து விருதுநகர் மாவட்ட தேர்வர்கள் RRB Group–D தேர்விற்கு தயாராகும் பொருட்டு விருதுநகர் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையம் மூலமாக இலவச முழு மாதிரித் தேர்வுகள் 04.07.2026 மற்றும் 10.07.2026 அலுவலக வளாகத்தில் நடைபெறவிருக்கிறது. இம்முழுமாதிரித் தேர்வில் கலந்துகொள்ள விருப்பம் உடையவர்கள் https://forms.gle/fQ22tTLoLsbpUq4w8 என்ற இணையதள முகவரியில் பதிவு செய்தோ அல்லது studycirclevnr@gmail.com என்ற மின்னஞ்சல் வாயிலாகவோ அல்லது விருதுநகர் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் நேரடியாகவோ தெரிவிக்கலாம். எனவே இரயில்வே RRB Group–D தேர்வர்கள் இம்மாதிரித் தேர்வில் கலந்துக்கொண்டு பயன்பெறுமாறு மாவட்ட ஆட்சித்தலைவர் மரு.என்.ஓ.சுகபுத்ரா,I A S., அவர்கள் தெரிவித்துள்ளார்.
விருதுநகர் மாவட்டத்தைச் சார்ந்த முன்னாள் படைவீரர்கள் , அவரைச் சார்ந்தோர்கள் மற்றும் தற்பொழுது இராணுவத்தில் பணிபுரியும் படைவீரர்களின் குடும்பத்தினருக்கான சிறப்பு குறைதீர்க்கும் நாள் வரும் 06.07.2026 அன்று முற்பகல் 10.00 மணிக்கு மாவட்ட ஆட்சித்தலைவர் அலுவலகத்தில், மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டரங்கில் விருதுநகர் மாவட்ட ஆட்சித் தலைவர் அவர்களால் நடத்தப்பட உள்ளது.எனவே, விருதுநகர் மாவட்டத்திலுள்ள முன்னாள் படைவீரர்கள், அவரைச் சார்ந்தோர்கள் மற்றும் தற்பொழுது இராணுவத்தில் பணிபுரியும் படைவீரர்களின் குடும்பத்தினர் என அனைவரும் சிறப்பு குறைதீர்க்கும் நாளன்று மாவட்ட ஆட்சித்தலைவர் அலுவலகத்திற்கு வருகை தந்து தங்களின் குறைகள் பற்றிய விண்ணப்பங்களை இரட்டை பிரதிகளில் சமர்ப்பித்து பயன் பெறலாம் என மாவட்ட ஆட்சித்தலைவர் மரு.என்.ஓ.சுகபுத்ரா,I A S., அவர்கள் தெரிவித்துள்ளார்.
விருதுநகர் மாவட்ட ஆட்சியர் அலுவலகக் கூட்டரங்கில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் (29.06.2026) மாவட்ட வருவாய் அலுவலர் திருமதி ரா.ஆனந்தி அவர்கள் தலைமையில் நடைபெற்றது. இக்கூட்டத்தில், பொதுமக்கள் மற்றும் மாற்றுத்திறனாளிகளிடமிருந்து இலவச வீட்டுமனைப்பட்டா, பட்டா மாறுதல், புதிய குடும்ப அட்டை, வேலைவாய்ப்பு, விபத்து நிவாரணம், மாற்றுத்திறனாளிகள் மற்றும் நலிந்தோர் நல உதவித்திட்டங்கள், விதவை உதவித்தொகை, திருமண உதவித்தொகை மற்றும் முதியோர் உதவித்தொகை உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் குறித்தான மனுக்கள் பெறப்பட்டன. மேலும், மாவட்ட வருவாய் அலுவலர் அவர்கள் மாற்றுத்திறனாளிகள் மற்றும் மூத்த குடிமக்களுக்காக அமைக்கப்பட்டுள்ள சிறப்பு அமருமிடத்திற்கு நேரடியாகச் சென்று, அவர்களின் கோரிக்கை மனுக்களைப் பெற்று பரிசீலித்தார். பொதுமக்களிடமிருந்து பெறப்பட்ட இம்மனுக்கள் அனைத்தையும் சம்பந்தப்பட்ட துறை அலுவலர்களிடம் ஒப்படைத்து, அவற்றின் மீது உரிய மற்றும் விரைவான நடவடிக்கை எடுக்குமாறு உத்தரவிட்டார். தொடர்ந்து, பொதுமக்களிடமிருந்து 587 மனுக்கள் பெறப்பட்டன. இம்மனுக்கள் சம்மந்தப்பட்ட துறை அலுவலர்களிடம் உரிய நடவடிக்கை எடுக்க ஒப்படைக்கப்பட்டது.அதனைத் தொடர்ந்து, மாவட்ட வருவாய் அலுவலர் பொதுமக்கள் எவ்வித சிரமமுமின்றி சேவைகளைப் பெறுவதை உறுதி செய்யுமாறு சம்பந்தப்பட்ட அலுவலர்களுக்கு அறிவுறுத்தினார்.இக்கூட்டத்தில், தனித்துணை ஆட்சியர்(சமூக பாதுகாப்பு திட்டம்) திரு.கு.மோகனா, அரசு துறை அலுவலர்கள் மற்றும் பொதுமக்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.
சமுகநலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை அமைச்சர் திருமதி கு.ஜெகதீஸ்வரி அவர்கள் (27.06.2026) விருதுநகர் மாவட்டம், இராஜபாளையம் வட்டம் தளவாய்புரம் ஊராட்சி மாஞ்சோலை பிள்ளையார் கோவில் தெருவில் ரூ.4.57 இலட்சம் மதிப்பில்பேவர் பிளாக் கல் அமைக்கும் பணிகளை அடிக்கல் நாட்டி தொடங்கி வைத்தார்.பின்னர், சமுகநலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை அமைச்சர் திருமதி கு.ஜெகதீஸ்வரி அவர்கள் இராஜபாளையம் ஊராட்சி ஒன்றியம் தெற்கு வெங்காநல்லூர் ஊராட்சியில் சிறப்பு பகுதி மேம்பாட்டு திட்டம் 2024- 2025 இன் கீழ் ரூ.20 இலட்சம் மதிப்பில் கட்டப்பட்டுள்ள புதிய அங்கன்வாடி மைய கட்டிடத்தினை திறந்து வைத்து மாணவர்களுக்கு கல்வி உபகரணங்களை வழங்கினார்.தமிழ்நாடு அரசு நகர்ப்புறங்களுக்கு இணையாக கிராமப்புறங்களுக்கும் அடிப்படை வசதிகளை மேம்படுத்தும் வகையில் பல்வேறு உட்கட்டமைப்பு வசதிகளை செயல்படுத்தி வருகிறது.அந்த வகையில் இராஜபாளையம் வட்டம் தளவாய்புரம் ஊராட்சி மாஞ்சோலை பிள்ளையார் கோவில் தெருவில் 15 ஆவது நிதிக்குழு மானியத்தின் கீழ் ரூ.4.57 இலட்சம் மதிப்பில் 88 மீட்டர் நீளம், 3.5 மீட்டர் அகலத்தில் பேவர் பிளாக் சாலை அமைக்கும் பணிகள் தொடங்கி வைக்கப்பட்டுள்ளது.இந்த பணிகள் குறிப்பிட்ட காலக்கெடுவிற்குள் தரமாக முடிக்கப்பட்டு விரைவில் மக்கள் பயன்பாட்டிற்குக் கொண்டுவரப்படும்.மேலும், குழந்தைகள் மற்றும் கர்ப்பிணித் தாய்மார்களின் நலனை மேம்படுத்தும் நோக்கில்,இராஜபாளையம் ஊராட்சி ஒன்றியம் தெற்கு வெங்காநல்லூர் ஊராட்சியில் சிறப்பு பகுதி மேம்பாட்டு திட்டம் 2024-2025 இன் கீழ் ரூ.20 இலட்சம் மதிப்பில் அங்கன்வாடி மையம் கட்டப்பட்டுள்ளது.இந்த புதிய அங்கன்வாடி மையத்தில் ஆரம்பள்ளிக்கல்வியில் குழந்தைகளைஈர்க்கும் வகையிலான வண்ணமயமான சுவரோவியங்கள் மற்றும் விளையாட்டு உபகரணங்கள், அடிப்படை வசதிகலான பாதுகாப்பான குடிநீர், தடையில்லா மின்சாரம் மற்றும் காற்றோட்டமான கட்டமைப்பு, ஊட்டச்சத்து உறுதி செய்யும் வகையில் சுகாதாரமான முறையில் சத்துணவு தயாரிப்பதற்கான நவீன சமையலறை வசதி, சுகாதாரத்தை பேணும் வகையில் குழந்தைகளுக்கான பிரத்யேக கழிப்பறை வசதிகள் அமைக்கப்பட்டுள்ளன.இதுபோன்று அனைத்து பகுதிகளிலும் பொதுமக்களுக்கு தேவையான வசதிகள் தொடர்ச்சியாக செய்து தரப்படும் என தெரிவித்தார்.இந்நிகழ்ச்சியில் செய்தி மக்கள் தொடர்பு அலுவலர் திரு.அ.கொ.நாகராஜ பூபதி, வட்டார வளர்ச்சி அலுவலர் திருமதி விஜயலட்சுமி, அரசு அலுவலர்கள், பொதுமக்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.
சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை அமைச்சர் திருமதி கு. ஜெகதீஸ்வரி அவர்கள் விருதுநகர் சட்டமன்ற உறுப்பினர் திரு. பி.செல்வம் அவர்கள் ஆகியோர் முன்னிலையில் விருதுநகர் நகராட்சிக்குட்பட்ட புல்லலக்கோட்டை நகர்புற அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் 1,33,475 குழந்தைகளுக்கு போலியோ சொட்டு மருந்து வழங்கும் பணியினை (28.06.2026) தொடங்கி வைத்தார். தமிழ்நாடு முதலமைச்சர் திரு. ச. ஜோசப் விஜய் அவர்கள் தமிழகத்தை மருத்துவ உட்கட்டமைப்பில் இந்தியாவிற்கே முதன்மை மாநிலமாகவும், அனைத்து தரப்பு மக்களுக்கும் சமூக, பொருளாதார வேறுபாடின்றி உயர்தரமான மருத்துவ சேவையினை வழங்குவதில் முன்னுதாரமான மாநிலமாக திகழும் வகையில் மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுதுறையின் மூலம் பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகிறார்.போலியோ (Poliomyelities) என்பது போலியோவைரஸ் (Poliovirus) மூலம் பரவும் ஒரு ஆபத்தான தொற்று நோயாகும். இது நரம்பு மண்டலத்தை பாதித்து, உடலை முடக்குவாதம் (Paralysis) அடையச் செய்துவிடும். இது பொதுவாக 5 வயதிற்குட்பட்ட குழந்தைகளை அதிகம் பாதிக்கிறது. இந்நோய்க்கு எந்தவிதமான சிகிச்சையோ அல்லது நிரந்தர மருந்தும் இல்லை. சொட்டு மருந்து மற்றும் தடுப்பூசிகள் (Oral Polio Vaccine & Inactivated Polio Vaccine) மட்டுமே நோயிலிருந்து குழந்தைகளைப் பாதுகாக்கும் ஒரே வழியாகும்.பிறந்த குழந்தை முதல் 5 வயது வரை உள்ள அனைத்து குழந்தைகளுக்கும் போலியோ சொட்டு மருந்து கொடுக்க வேண்டும். குழந்தைக்கு ஏற்கனவே வழக்கமான போலியோ மற்றும் பிற தடுப்பூசிகளை போட்டிருந்தாலும், அரசு நடத்தும் போலியோ முகாம்களில் மீண்டும் சொட்டு மருந்து கொடுக்கலாம்.குழந்தை ஆரோக்கியமாக இருந்தாலும், லேசான சளி அல்லது காய்ச்சல் இருந்தாலும், மருத்துவர் வேறு சிகிச்சைக்கு அறிவுறுத்தாத வரை பொதுவாக சொட்டு மருந்து கொடுக்கலாம். விருதுநகர் மாவட்டத்தில் அரசு ஆரம்ப சுகாதார நிலையங்கள், அரசு மருத்துவமனைகள், அங்கன்வாடி மையங்கள், பள்ளிகள் மற்றும் சமுதாயக் கூடங்கள், பேருந்து நிலையங்கள், ரயில் நிலையங்கள் என 1,137 மையங்களில் முகாம்கள் அமைக்கப்பட்டு சுகாதார பணியாளர்கள், அங்கன்வாடி பணியாளர்கள், மகளிர் சுய உதவிக் குழுவினர், தன்னார்வத் தொண்டு நிறுவனங்கள், பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்கள் என 4,580 பணியாளர்கள் மூலம் 1,33,475 குழந்தைகளுக்கு வழங்கப்படுகிறது. மேலும், 74 நடமாடும் குழுக்கள் அமைக்கப்பட்டு முகாம் வாழ் இலங்கைத் தமிழர் குடியிருப்பு பகுதிகள், நரிக்குறவர்கள் மற்றும் தற்காலிக குடியிருப்பு பகுதிகளில் வசிக்கின்ற குழந்தைகளுக்கும் காலை 7 மணி முதல் மாலை 5 மணி வரை போலியோ சொட்டு மருந்து வழங்கப்படும். இதன் மூலம் 5 வயதுக்குட்பட்ட அனைத்து குழந்தைகளுக்கும் போலியோவிலிருந்து பாதுகாப்பு அளிப்பது போலியோ வைரஸ் பரவாமல் தடுப்பது அனைத்து குழந்தைகளுக்கும் சொட்டு மருந்து கிடைப்பதனை உறுதி செய்திடவும் போலியோ இல்லாத நாடு என்ற நிலையினை அடைந்திடவும் போலியோ சொட்டு மருந்து முகாம் நடத்தப்படுகிறது. இம்மருந்தானது மிகவும் பாதுகாப்பானதாகும்.அனைவரும் தங்கள் குழந்தைகளுக்கு போலியோ சொட்டு மருந்தினை செலுத்தி, நோய்த்தொற்றிலிருந்து பாதுகாத்து ஊனமில்லாத சமுதாயத்தினை உருவாக்கிட வேண்டும் என சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை அமைச்சர் திருமதி கு. ஜெகதீஸ்வரி அவர்கள் தெரிவித்தார். முகாமில் மாவட்ட சுகாதார அலுவலர் யாசோதா தேவி உட்பட மருத்துவ அலுவலர்கள் பலர் கலந்துகொண்டனர்.
சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை அமைச்சர் திருமதி கு.ஜெகதீஸ்வரி அவர்கள், விருதுநகர் மாவட்ட அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் (26.06.2026) சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை சார்பில், அரசு மருத்துவமனையில் மகப்பேறு அடைந்த 40 தாய்மார்களுக்கு தாய் சேய் நல பெட்டகங்களை மாவட்ட ஆட்சித்தலைவர் மரு.என்.ஓ.சுகபுத்ரா,I A S., அவர்கள் தலைமையில், விருதுநகர் சட்டமன்ற உறுப்பினர் திரு.பி.செல்வம் அவர்கள், திருவில்லிபுத்தூர் சட்டமன்ற உறுப்பினர் திரு.அ.கார்த்திக் அவர்கள் ஆகியோர் முன்னிலையில் வழங்கினார். தமிழ்நாடு அரசால் தாய் மற்றும் சேய் நலனைப் பேணும் வகையில் ”தாய் சேய் நல பெட்டகம்” வழங்கும் திட்டத்தினை செயல்படுத்தி வருகிறது. அரசு மருத்துவமனைகளில் பிறக்கும் குழந்தைகளுக்கு வழங்கப்படும் இப்பெட்டகம், பச்சிளங் குழந்தைகளின் ஆரம்பகால ஆரோக்கியம் மற்றும் சுகாதாரத்தை உறுதி செய்வதை முதன்மை நோக்கமாகக் கொண்டுள்ளது. அந்த வகையில் பச்சிளங் குழந்தை மற்றும் தாயின் அத்தியாவசியத் தேவைகளைப் பூர்த்தி செய்யும் வகையில் இந்தப் பெட்டகத்தில் குழந்தைக்கான ஆடைகள் மற்றும் துண்டு, படுக்கை மற்றும் கொசுவலை, பராமரிப்புப் பொருட்கள், சுகாதாரப் பொருட்கள், விளையாட்டுப் பொருட்கள், தாய்க்கான குளியல் சோப்பு மற்றும் தாய்-சேய் சுகாதாரக் கையேடு உள்ளிட்டவை அடங்கிய சுமார் 16 வகையான பொருட்கள் வழங்கப்படுகின்றன. அதன்படி, விருதுநகர் மாவட்ட அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் இன்று(26.06.2026) அரசு மருத்துவமனையில் மகப்பேறு அடைந்த 40 தாய்மார்களுக்கு தலா ரூ.1600/- மதிப்புள்ள தாய் சேய் நல பெட்டகங்கள் வழங்கப்பட்டுள்ளன என சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை அமைச்சர் திருமதி கு.ஜெகதீஸ்வரி அவர்கள் வழங்கினார்.இந்நிகழ்ச்சியில் மாவட்ட சமூக நல அலுவலர் திருமதி திலகம், மருத்துவர்கள், செவிலியர்கள், தாய்மார்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.
விருதுநகர் மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் (26.06.2026) சர்வதேச போதைப்பொருள் எதிர்ப்பு தினம் – 2026 முன்னிட்டு, தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தின் சார்பில் ஸ்டார்ட் ரன் ஸ்டாப் டிரக்ஸ்(Start Run, Stop Drugs) போதைப்பொருள் ஒழிப்பு விழிப்புணர்வு ஓட்டத்தினை மாவட்ட ஆட்சித்தலைவர் மரு.என்.ஓ.சுகபுத்ரா,I A S., அவர்கள் முன்னிலையில், சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை அமைச்சர் திருமதி கு.ஜெகதீஸ்வரி அவர்கள் தொடங்கி வைத்தார்.பின்னர், சமூகநீதி மற்றும் அதிகாரமளித்தல் துறை, குழந்தைகள் நலன் மற்றும் சிறப்புச் சேவைகள் துறை மற்றும் மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலகு இணைந்து நடத்திய விழிப்புணர்வு கையெழுத்து இயக்கத்தினையும், விழிப்புணர்வு வாகனத்தையும் சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை அமைச்சர் திருமதி கு.ஜெகதீஸ்வரி அவர்கள் தொடங்கி வைத்தார். தமிழ்நாடு முதலமைச்சர் திரு.ச.ஜோசப் விஜய் அவர்கள் தமிழக இளைஞர்களின் ஆற்றலினை மேன்படுத்திடவும், தீய மற்றும் விரும்பத்தகாத போதை போன்ற பழக்கவழக்கங்களுக்கு ஆட்படாமல் பாதுகாத்திடவும், போதைப்பொருட்களுக்கு அடிமையானவர்களை மீட்டெடுத்து நல்வழிப்படுத்திடவும், சிறந்த சமூகம் மற்றும் வளமான மனிதவளத்தினை உருவாக்கிடும் பொருட்டு பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளையும், திட்டங்களையும் ஏற்படுத்தி செயல்படுத்தி வருகிறார்கள். அதனடிப்படையில், போதையில்ல தமிழகம் என்ற நிலையினை எய்திடவும் இதுகுறித்த விழிப்புணர்வினை அனைத்து தரப்பு மக்களிடவும் ஏற்படுத்திடும் பொருட்டு விழிப்புணர்வு ஓட்டம் மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களின் ஆணைக்கிணங்க துவக்கிவைக்கப்பட்டுள்ளது.இந்த விழிப்புணர்வு ஓட்டத்தில் மாணவர்கள், இளைஞர்கள், அரசு அலுவலர்கள் மற்றும் பொதுமக்கள் என ஏராளமானோர் பங்கேற்றது மிகுந்த மகிழ்ச்சியை ஏற்படுத்துகிறது. போதைப்பொருள் பழக்கமானது சுய ஒழுக்கத்தினை பாதிப்பதோடு சமூகத்தின் வளர்ச்சியினையும், அமைதி மற்றும் பாதுகாப்பிற்கும் கேடு விளைவிக்கிறது. இதனை, கட்டுப்படுத்திடவும், தவிர்த்திடவும் நாம் அனைவரும் ஒருங்கிணைந்து செயல்படவேண்டும்.மேலும், சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை சார்பில் செயல்படுத்தப்படும் பெண்குழந்தைகளை காப்போம், பெண்குழந்தைகளுக்கு கற்பிப்போம் என்னும் திட்டத்தின் மூலம் கல்வி, பாதுகாப்பு, உயர்கல்வி ஆகியவற்றை மேம்படுத்திடவும் பாலின சமத்துவத்தினையும் உறுதி செய்ய செயல்படுத்தப்படுகிறது. குழந்தைத் திருமணம் இல்லா விருதுநகர் என்பதனை இலக்காக கொண்டு சிலம்பம் விளையாட்டுப்போட்டிகளில் சிறந்து விளங்கும் மாணவ, மாணவிகளுக்கென்று விழிப்புணர்வு சிலம்பாட்டம் நடத்தப்பட்டது.தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் குழந்தைகள், பெண்கள் மற்றும் இளைஞர்களை பாதுகாத்திட மேற்கொள்ளும் அனைத்து நடவடிக்கைகளுக்கும் நாம் அனைவரும் உறுதுணையாக இருந்திட வேண்டும் என தெரிவித்தார். இந்த விழிப்புணர்வு ஓட்டத்தில் கலந்து கொண்ட மாணவ மாணவியர்கள், இளைஞர்கள், விளையாட்டு வீரர்கள், பொதுமக்கள் 5 கி.மீட்டர் தூரம் ஓடிச்சென்று விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.இந்நிகழ்ச்சியில் முதன்மை மாவட்ட நீதிபதி திரு.கே.ஜெயக்குமார், விருதுநகர் சட்டமன்ற உறுப்பினர் திரு.பி.செல்வம், திருவில்லிபுத்தூர் சட்டமன்ற உறுப்பினர் திரு.அ.கார்த்திக், மாவட்ட விளையாட்டு அலுவலர் திரு.குமாரமணிமாறன், மாவட்ட சமூக நல அலுவலர் திருமதி திலகம் உட்பட பலர் கலந்து கொண்டனர்.
விருதுநகர் மாவட்டத்தில் உள்ள பசு, எருமை இனங்களை கோமாரி நோயிலிருந்து பாதுகாக்கும் வகையில் கால்நடை பராமரிப்புத்துறை சார்பில் 9-வது சுற்று கோமாரி நோய் தடுப்பூசி முகாம் 01.07.2026 முதல் 31.07.2026 வரை அனைத்து கிராமங்கள் /நகராட்சி / மாநகராட்சியில் செலுத்தப்பட உள்ளது.விருதுநகர் மாவட்டத்தில் உள்ள 1,40,435 பசுக்கள் 865 எருமைகள் என மொத்தம் 1,41,300 கால்நடைகளுக்கு வாய் மற்றும் கால் நோய் தடுப்பூசி (FMD) செலுத்த திட்டமிடப்பட்டுள்ளது. இந்த முகாம் தேசிய கால்நடை நோய் தடுப்பு திட்டம் மூலம் நடைபெற உள்ளது.இந்த நோய் தாக்கும் பட்சத்தில் கால்நடைகளுக்கு சரிவர உணவு உண்ண இயலாநிலை, அதீத காய்ச்சல் மற்றும் வாயில் உமிழ்நீர் வடிதல் போன்ற பாதிப்புகள் ஏற்படும். இதனால் கால்நடைகளில் பால் உற்பத்தி பாதிக்கப்படும். மேலும் இந்நோய் மிக விரைவாக பரவும் தன்மை கொண்டது.இதனை தடுப்பதற்கு விருதுநகர் மாவட்டத்தில் 82 கால்நடை மருந்தகங்கள் மற்றும் 6 கால்நடை மருத்துவமனைகளில் பணிபுரிவோரைக் கொண்டு ஒரு கால்நடை உதவி மருத்துவர், கால்நடை ஆய்வாளர் மற்றும் கால்நடை பராமரிப்பு உதவியாளர் கொண்ட குழு அமைக்கப்பட்டுள்ளது. இந்த தடுப்பூசி குழுவினரால் இலவசமாக FMD தடுப்பூசி இலவசமாக போடப்பட உள்ளது.மேலும், தடுப்பூசி பணி முடிவடைந்த உடன் கால்நடை வளர்ப்போர் தங்களது ஆதார் எண் மற்றும் பதிவு செய்த அலைபேசி எண்ணிற்கு வரும் OTP - யை தடுப்பூசி குழுவினருக்கு தெரிவித்து பாரத் பசுதான் இணையதளத்தில் பதிவேற்றம் செய்துகொள்ள வேண்டும். இதன் மூலம் அரசின் கால்நடை பராமரிப்புத்துறை நலத்திட்டங்களை பெறலாம் என மாவட்ட ஆட்சித்தலைவர் மரு.என்.ஓ.சுகபுத்ரா,I A S., அவர்கள் தெரிவித்துள்ளார்.