ஒரு யூனிட்டுக்கு 20 காசு முதல் 55 காசு வரை மின் கட்டண உயர்வால் மக்களுக்கு சுமை!
மின்சாரக்கட்டணத்தை ஒழுங்குபடுத்தும் தமிழ்நாடு மின்சார ஒழுங்குமுறை ஆணையம் ஆண்டுதோறும் தமிழ்நாடு மின்பகிர்மானக்கழகம் கட்டணத்தை உயர்த்தவேண்டும், அந்த உயர்வும் 6 சதவீதம் அல்லது அந்த ஆண்டுக்கான நுகர்வோர் விலைகுறியீட்டு எண் இதில் எது குறைவோ அந்த அளவுக்கு கட்டணத்தை உயர்த்தவேண்டும் என்று ஆணையிட்டுள்ளது. ஆனால், இந்த ஆண்டு ஜூலை முதல் கட்டணம் உயர்த்தப்படவேண்டும் என்ற விதிகளின்படி, இப்போது நுகர்வோர் விலைகுறியீட்டு எண்ணின் அடிப்படையில் 4.83 சதவீதம் மின்கட்டணம் உயர்த்தப்பட்டுள்ளதாக தமிழ்நாடு மின்உற்பத்தி மற்றும் பகிர்மானக்கழகம் அறிவித்துள்ளது. இந்த உயர்வு முன்தேதியிட்டு ஜூலை 1-ந்தேதி முதல் அமலுக்கு வந்துள்ளது. இதன் மூலம் ஒரு யூனிட்டுக்கு 20 காசு முதல் 55 காசு வரை கட்டணம் உயர்த்தப்பட்டுள்ளது. ஆனால், தமிழ்நாட்டில் உள்ள 2.47 கோடி வீடுகள் மற்றும் குடிசைகளில் இலவசமாக வழங்கப்படும் 100 யூனிட்டுகளுக்கு குறைவாக பயன்படுத்துவதால் அவர்களுக்கு மின்கட்டண உயர்வால் பாதிப்பு எதுவும் இல்லை என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
அதிக மின்சாரம் பயன்படுத்தும்வீடுகளுக்கும்,வணிகநிறுவனங்களுக்கும், தொழிற்சாலைகளுக்கும் இந்த கட்டண உயர்வு வலிக்கத்தான் செய்யும். குறு, சிறு, நடுத்தரத் தொழிற்சாலைகளை பொறுத்தமட்டில், மொத்த உற்பத்திசெலவில் என்ஜினீயரிங் தொழிற்சாலைகளுக்கு 15 சதவீதமும், பவுண்டரிகளுக்கு 35 சதவீதமும் மின்சாரப்பயன்பாட்டு செலவுக்கே போய்விடும். ஒரு யூனிட்டுக்கு 55 காசு என்பது சிறியதாக தெரிந்தாலும் ஆயிரக்கணக்கான யூனிட்டுகள் மின்சாரத்தை பயன்படுத்தும்போது அதன் சுமை அழுத்தும். இதனை மக்கள் மீதுதான் அவர்கள் ஏற்றிவைப்பார்கள். அவர்கள் உற்பத்தி செய்யும் பொருட்களின் விலையும் உயரும். அதை மக்களிடம் விற்பனை செய்யும்போது விலை அதிகரிக்கும். இப்போது மின்சாரவாரியம் உயர்த்தியுள்ள மின்கட்டண உயர்வால் மக்களுக்குத்தான் இரட்டைச்சுமை. ஒன்று அவர்களுடைய வீடுகளுக்கான மின்கட்டணமும் உயருகிறது. அடுத்து அவர்கள் வாங்கும் பொருட்கள் மற்றும் சேவைக்கட்டணமும் உயரும்.
0
Leave a Reply