மாவட்டத்தில் 30 நாட்களுக்கும் மேலாக பள்ளிக்கு வராமல் உள்ள 6 முதல் 8 ஆம் வகுப்பு பயிலும் 534 இடைநிற்றல் மாணவர்களை கண்டறிந்து சிறப்பு கள ஆய்வு
விருதுநகர் மாவட்டத்தில் உள்ள அனைத்து ஊராட்சி ஒன்றியங்களிலும் மாணவர்கள் 100 சதவிகிதம் பள்ளி படிப்பை முடிப்பதற்கும், பள்ளி படிப்பு முடித்து உயர் கல்வி சேர்வதையும் உறுதி செய்யும் வகையில் பல்வேறு முன்னெடுப்புகள் மாவட்ட நிர்வாகம் மூலம் எடுக்கப்பட்டு, தொடர்ச்சியாக ஒவ்வொரு ஆண்டும் இடைநிற்றல் ஆன மாணவர்களை, மீண்டும் பள்ளியில் சேர்ப்பதற்கு பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு, அதற்கான பணிகள் நடைபெற்று வருகிறது.இந்த ஆண்டு 01.09.2024 வரையிலான புள்ளி விவரங்களின்படி, மாவட்டத்தில் 6 முதல் 8 ஆம் வகுப்பு வரை பயிலும் மாணவர்களில் அருப்புக்கோட்டை ஊராட்சி ஒன்றியத்தில் 30 மாணவர்களும், காரியாபட்டி ஊராட்சி ஒன்றியத்தில் 22 மாணவர்களும், நரிக்குடி ஊராட்சி ஒன்றியத்தில் 14 மாணவர்களும், இராஜபாளையம் ஊராட்சி ஒன்றியத்தில் 74 மாணவர்களும், சாத்தூர் ஊராட்சி ஒன்றியத்தில் 47 மாணவர்களும், சிவகாசி ஊராட்சி ஒன்றியத்தில் 130 மாணவர்களும், திருவில்லிபுத்தூர் ஊராட்சி ஒன்றியத்தில் 37 மாணவர்களும்,
திருச்சுழி ஊராட்சி ஒன்றியத்தில் 31 மாணவர்களும், வெம்பக்கோட்டை ஊராட்சி ஒன்றியத்தில் 68 மாணவர்களும், விருதுநகர் ஊராட்சி ஒன்றியத்தில் 63 மாணவர்களும், வத்திராயிருப்பு ஊராட்சி ஒன்றியத்தில் 18 மாணவர்களும் என மொத்தம் 534 மாணவர்கள் தொடர்ச்சியாக 30 நாட்களுக்கும் மேலாக இடைநிற்றல் மாணவர்களாக உள்ளனர்.இந்நிலையில், மாவட்ட ஆட்சியர், காவல் கண்காணிப்பாளர், மாவட்ட வருவாய் அலுவலர், திட்ட இயக்குநர் (மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை), துணை ஆட்சியர்கள், மாநகராட்சி மற்றும் நகராட்சி ஆணையாளர்கள், துணைக்காவல் கண்காணிப்பாளர், கோட்டாட்சியர்கள் மற்றும் வட்டாட்சியர்கள் உட்பட அலுவலர்களுக்கு ஒவ்வொரு அலுவலர்களுக்கும் தனித்தனியாக இடைநின்ற மாணவர்களின் விபரங்கள் கொடுக்கப்பட்டு, ஒவ்வொரு அலுவலர்களும் , மாணவர்களை நேரில் சென்று சந்தித்து, இடைநிற்றலுக்கான காரணங்கள், குறைகளை கேட்டறிந்து, மீண்டும் பள்ளியில் சேர நடவடிக்கை எடுக்கும் வகையில், நவம்பர்-2024 முதல் வாரத்திலிருந்து கள ஆய்வினை மேற்கொண்டு வருகின்றனர்.
மாணவர்கள் மற்றும் பெற்றோர்கள் சொல்கின்ற காரணங்களின் அடிப்படையில், அவர்களுக்கு உரிய வழிகாட்டுதல் மற்றும் அறிவுரைகள் வழங்கப்பட்டு, பள்ளியில் சேர்வதை உறுதி செய்யும் வகையில் தொடர்ந்து அலுவலர்கள் மூலம் கண்காணிக்கப்பட்டு, அவர்களுக்கு தேவையான மருத்துவ உதவி, நிதியுதவி, மாணவர்களுக்கும், பெற்றோர்களுக்கும் தேவையான ஆலோசனைகள் வழங்குதல், சிறப்பு வகுப்புகள் எடுத்தல், ஆர்வமின்மையை போக்கி மீண்டும் பள்ளியில் சேர்த்தல், புலம்பெயர்ந்தவர்களை கண்டறிந்து உரிய வழிகாட்டுதல், கல்வியின் அவசியம் குறித்து எடுத்துரைத்தல் உள்ளிட்ட பல்வேறு உதவிகள் வழங்கப்பட்டு இடைநிற்றல் மாணவர்களை பள்ளியில் சேர்ப்பதற்கு உரிய நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது என மாவட்ட ஆட்சித்தலைவர் முனைவர் வீ.ப.ஜெயசீலன்,I A S., அவர்கள் தெரிவித்துள்ளார்.
0
Leave a Reply