தகிக்கும் தமிழ்நாடு
தமிழகத்தில் வழக்கமாக மார்ச் இறுதியில்தான் தொடங்கும். ஆனால் இந்த ஆண்டு பிப்ரவரி இறுதியிலேயே வெயில்தொடங்கிவிட்டது. மார்ச் முழுவதும் வெயில் கொழுந்துவிட்டு எரிந்த நிலையில், ஏப்ரல் தொடக்கத்தில் மேற்கு தொடர்ச்சி மலையை ஒட்டிய பகுதிகளில் மழை பெய்ய தொடங்கியது. கன்னியாகுமரி, நெல்லை, தேனி, திருநெல்வேலி உள்ளிட்ட பகுதிகளில் கடந்த சில நாட்களாக மழை பெய்து வருகிறது. இருப்பினும் வெயிலின் தாக்கம் தீவிரமாகதான் இருக்கிறது.
இந்நிலையில் நேற்று நாடு முழுவதும் பதிவான வெயிலின் அளவு குறித்து இந்திய வானிலை மையம் அறிவிப்பை வெளியிட்டிருந்தது. அதன்படி நாட்டில் அதிகபட்ச வெப்பநிலை பதிவான பகுதிகளில் சேலம் மூன்றாவது இடத்தை பிடித்திருக்கிறது. ஆந்திராவின் அனந்தப்பூர் 110.3 டிகிரி ஃபாரன்ஹீட் வெப்பத்துடன் முதல் இடத்திலும், ஒடிசாவின் பரலாகிமுண்டி 109.04 டிகிரி ஃபாரன்ஹீட் வெப்பத்துடன் இரண்டாவது இடத்திலும் உள்ளன. சேலத்தில் 108.14 டிகிரி ஃபாரன்ஹீட் வெப்பம் பதிவாகியுள்ளது. நேற்று முன்தினம் ஈரோட்டில் 109 டிகிரி வெயில் கொளுத்தியது. நாடு முழுவதும் நாளுக்கு நாள் வெப்ப அலை தீவிரமடைந்து வருவதால், வெயிலின் தாக்கம் உக்கிரமாக இருக்கும் என வானிலை ஆய்வு மையம் எச்சரித்து வருகிறது. எனவே மக்கள் முன்னெச்சரிக்கையாக இருக்க வேண்டும் என்றும் அதிக அளவில் தண்ணீர், நீர் சத்து கொண்ட பழங்களை எடுத்துக்கொள்ள வேண்டும் என்று மருத்துவர்கள் அறிவுறுத்தியுள்ளனர்.
தமிழ்நாட்டின் வானிலையை பொறுத்த அளவில், கடந்த 24 மணி நேரத்தில் சராசரியாக 2-4 டிகிரி செல்சியஸ் வெப்பம் உயர்ந்திருக்கிறது. அதே நேரத்தில் சேலம், ஈரோடு, திருப்பத்தூர், கரூர் பரமத்தி, வேலூர், தருமபுரி, மதுரை, நாமக்கல், திருச்சி உள்ளிட்ட பகுதிகளில் வெயிலின் அளவு இயல்பை விட 2-4 டிகிரி செல்சியஸ் உயர்ந்திருக்கிறது.இன்று தொடங்கி அடுத்த 6 நாட்களை பொறுத்த அளவில், வறண்ட வானிலையே நிலவும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருக்கிறது. இன்றும் நாளையும், தென் மற்றும் மேற்கு தொடர்ச்சி மலைகளை ஒட்டிய பகுதிகளில் ஒரு சில இடங்களில் லேசான மழை பெய்யும். ஏப்.26 தொடங்கி ஏப்.30 வரை தமிழகம் காரைக்காலில் வறண்ட வானிலையை நிலவும் என வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது. மட்டுமல்லாது இன்றும் நாளையும் வட உள் தமிழகத்தில் வெப்ப அலை வீசும் என்று வானிலை மையம் மஞ்சள் எச்சரிக்கையை கொடுத்திருக்கிறது.
0
Leave a Reply