தொழிலக பாதுகாப்பு மற்றும் சுகாதார இயக்ககம் சார்பில் பட்டாசு உற்பத்தி தொழிற்சாலைகளில் நிகழும் விபத்துக்களை தடுப்பது குறித்த விழிப்புணர்வு கூட்டம்
விருதுநகர் மாவட்ட ஆட்சியர் அலுவலகக் கூட்டரங்கில் (10.10.2024) தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களின் வழிகாட்டுதலின்படி, தொழிலாளர் நலன் மற்றும் திறன் மேம்பாட்டுத்துறை அமைச்சர் அவர்கள் அறிவுறுத்தலின்படி, தொழிலக பாதுகாப்பு மற்றும் சுகாதார இயக்ககம் சார்பில் பட்டாசு உற்பத்தி தொழிற்சாலைகளில் நிகழும் விபத்துக்களை தடுப்பது குறித்த விழிப்புணர்வு கூட்டம் தொழிலக பாதுகாப்பு மற்றும் சுகாதார இயக்குநர் திரு.செ.ஆனந்த் அவர்கள் முன்னிலையில், மாவட்ட ஆட்சித்தலைவர் முனைவர் வீ.ப.ஜெயசீலன், I A S., அவர்கள் தலைமையில் நடைபெற்றது.
இந்நிகழ்ச்சியில், தொழிலக பாதுகாப்பு மற்றும் சுகாதார இயக்ககம் மூலம் தொழிற்சாலை பாதுகாப்பு வழிமுறைகள் குறித்த பாதுகாப்பு கையேட்டினை மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் வெளியிட்டார்.மாவட்டத்தில் 1000- த்திற்கும் மேற்பட்ட பட்டாசு தொழிற்சாலைகளும், 3000- த்திற்கும் மேற்பட்ட பட்டாசு விற்பனை நிலையங்களும் செயல்பட்டு வருகின்றன. இதில், விபத்துக்களை முற்றிலுமாக ஒழிப்பது குறித்து தொடர்ச்சியாக பயிற்சிகள் வழங்கப்பட்டு வருகின்றன. இந்த தொழிலில் இருக்கக்கூடிய பாதுகாப்பு வழிமுறைகளை அனைவரும் தெரிந்து கொள்வதற்காக தொடர்ச்சியாக இரண்டு மாதத்திற்கு ஒருமுறை பட்டாசு தொழிற்சாலை உரிமையாளர்கள் அடங்கிய கூட்டமைப்பு பிரதிநிதிகளுடனான கூட்டம் நடத்தப்பட்டு, பல்வேறு முடிவுகள், தீர்மானங்கள் எடுக்கப்பட்டு பட்டாசு தொழிற்சாலைகளில், பாதுகாப்பான உற்பத்திகள் செய்வதற்கு தொடர்ச்சியாக நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறோம்.
தற்பொழுது வரக்கூடிய தீபாவளி பண்டிகையை முன்னிட்டு, பாதுகாப்பு நடைமுறைகளை முழுமையாக பின்பற்றி, எந்தெந்த சூழ்நிலையில் விபத்துக்கள் ஏற்படுகின்றன என்பது குறித்து தெரிந்து கொண்டு, உற்பத்தி செய்ய வேண்டும் என்ற நோக்கில் இந்த கூட்டம் ஏற்பாடு செய்யப்பட்டிருக்கிறது. கடந்த ஆண்டில் ஏற்பட்ட விபத்துகளில் எந்தெந்த சூழலில் பெரும்பாலான விபத்துக்கள் ஏற்படுகின்றது என்பன குறித்தும் ஆய்வு செய்து பார்த்தால், அதில் பெரும்பாலும் மனித தவறுகளால் தான் விபத்துக்கள் ஏற்படுகின்றன. மிகவும் அபாயகரமான வேதிப்பொருட்களை எப்படி கையாள்வது, விபத்துக்களை எவ்வாறு முற்றிலுமாக தவிர்ப்பது என்பது குறித்த பயிற்சி வகுப்புகள் மிக மிக முக்கியம். எனவே, இந்த கூட்டத்தை நல்ல முறையில் பயன்படுத்தி கொண்டு, அரசின் மூலம் பட்டாசு விபத்தினை தடுப்பதற்கு எடுக்கப்படும் அனைத்து முயற்சிகளுக்கும், நடவடிக்கைகளுக்கும் பட்டாசு உற்பத்தியாளர்கள் மற்றும் பட்டாசு தொழிலாளர்கள், உறுதுணையாக இருந்து விபத்தில்லா மாவட்டத்தை உருவாக்குவதற்கு முழு ஒத்துழைப்பு நல்கவேண்டும் என மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் தெரிவித்தார்.
தமிழ்நாட்டில் 1570 பட்டாசு தொழிற்சாலைகள் உள்ளன. அதில் விருதுநகர் மாவட்டத்தில் மட்டும் 1101 உரிமம் பெற்ற பட்டாசு தொழிற்சாலைகள் உள்ளன. மற்ற தொழிற்சாலைகளில் நிகழும் விபத்துக்களை விட பட்டாசு தொழிற்சாலைகளில் விபத்துக்கள் அதிகமாக ஏற்பட்டு, உயிரிழப்புகள் அதிகமாக உள்ளதால், பட்டாசு தொழிற்சாலைகளில் விபத்துக்களை தடுக்க, விரும்பும் உரிய மாற்றம் எப்பொழுதுமே நம்மிடம் இருந்து தான் தொடங்க வேண்டும். நாம் எந்த விதமான மாற்றங்கள் தொழிற்சாலையில் நடைபெற வேண்டும் என்றும், எது நடக்க கூடாது என்றும் நாம் செய்யும் செயல்களினால் தான் முடிவாகிறது.2023 ஆம் ஆண்டு பட்டாசு தொழிற்சாலை விபத்தில் தமிழ்நாட்டில்; 27 விபத்துக்களில் 79 தொழிலாளர்கள் இறந்துள்ளனர். அதில் விருதுநகர் மாவட்டத்தில் மட்டும் 15 விபத்துக்களில் 28 தொழிலாளர்கள் இறந்துள்ளனர். 2024 ஆம் ஆண்டில் தமிழ்நாட்டில் ஏற்பட்ட 17 விபத்துக்களில் 52 தொழிலாளர்கள் இறந்துள்ளனர். அதில் விருதுநகர் மாவட்டத்தில், 12 விபத்துகளில் 42 தொழிலாளர்கள் இறந்துள்ளனர்.
இதனை தடுப்பதற்கு முன்னெச்சரிக்கையாக அனைத்து பாதுகாப்பு வழிமுறைகளை கடைபிடித்து உற்பத்தியை மேற்கொள்வது ஒன்றே தீர்வாகும். 2023 - 2024 ஆம் ஆண்டில் நடந்த வெடி விபத்துக்களை பகுப்பாய்வு செய்து பார்த்த பொழுது, அனுமதிக்கப்பட்ட அளவுக்கு அதிகமாக இரசாயனங்களை பயன்படுத்துவதாலும், அதிகமான நபர்களை பணிக்கு அமர்த்துவதாலும் இரசாயனங்கள் நீர்த்து போவதாலும், இரசாயனங்களை கலவை செய்யும் பொழுதும், உராய்வு, அதிர்ச்சி, இரும்பால் ஆன பொருட்கள் மூலமாகவும் அதிக விபத்துகள் ஏற்பட்டுள்ளது.மேலும், இதில் 80 சதவிகிதம் விபத்துக்கள் மனித தவறுகளால் தான் ஏற்படுகிறது. எனவே, பட்டாசு தொழிற்சாலைகளில் விபத்துக்கள் இல்லாத சூழ்நிலையை உருவாக்கி அனைவரும் தங்களை பாதுகாத்து கொண்டு, பட்டாசு உற்பத்தியை மேற்கொள்ள வேண்டுமென தெரிவித்தார்.இந்த விழிப்புணர்வு கூட்டத்தில் பட்டாசு தொழிற்சாலைகளில் பாதுகாப்பு அம்சங்கள் - தொழிற்சாலைகள் சட்டம், வெடிபொருள் சட்டம், படைக்கலச் சட்டம், பட்டாசு உற்பத்தியில் நிர்வாகத்தின் பங்கு, தொழிலாளர் பங்கு, சட்ட விரோத பட்டாசு தயாரிப்பு உள்ளிட்டவை குறித்து விரிவாக எடுத்துரைக்கப்பட்டது.
0
Leave a Reply